PDA

View Full Version : அப்பாவும்,புருஷனும் ஒரே மாதிரி...........நிலா
25-04-2003, 11:28 PM
மஞ்சள் குளித்த நிலவு
புன்னகை பூத்த செவ்விதழ்
என் பத்து வயதில் பரலோகம்சென்றவள்!
பசை போட்டல்ல பாசம் போட்டு
ஒட்டிவிட்டவள் நெஞ்சினுள்!

விருந்தாளி வீட்டுக்கு வந்தால்
"வாங்க" ஒற்றைச் சொல்லோடு
சமையற்கட்டுக்குள் ஒளிந்து கொள்வாள்!
யோசித்ததில்லை அந்த வயசில்!

அப்பாவை நான் எதிர்த்து பேச
காலையில் அவள் கண்கள் வீங்கியிருக்கும்!
புரியமுயற்சித்ததில்லை அவளை!

பள்ளிப்போகையிலே கனிந்திருக்கும் முகம்
மாலையில் வீடு திரும்புகையில் கன்னியிருக்கும்!
காரணம் கேட்டதில்லை அவளை!

தீர்க்கமாய் ஒருபுன்னகை புரிந்து
அமைதியாய் அடிக்கடி ஒன்னு சொல்லுவாள்
"கையில வச்சு தாங்குற புருஷனானாலும்
சொந்த கால்ல நிக்கனும் நீ!"
புருஷன்னு கேட்டவுடனே போம்மான்னு
வெட்கிஓடியது நினைவிற்கு வந்துதொலைக்கிறது!

திடீரென ஒருநாள் தீக்கிரையாய்
அவள் ............

நினைக்க மறந்தாலும்
மறக்க நினைக்கவில்லை!

கனவில் அடிக்கடி வருவாள் முன்னெல்லாம்!
இருவரும் பேசியதில்லை!
தலை கோதுவாள்!
கன்னம் கிள்ளுவாள்!
அவள் சுதந்திரமாய் சுவாசிப்பதாய் எனக்குள் தோன்றும்!
வேகமாய் விழி திறந்தால் கண்ணீர்
நனைத்திருக்கும் தலையணையை
கல்யாணமானதிலிருந்து கொஞ்ச நாளாக் காணோம்
காத்திருக்கிறேன் இன்றாவது வருவாளானு
ஒன்னே ஒன்னு சொல்லனும்

அம்மா
அப்பாவும்,புருஷனும் ஒரே மாதிரின்னு........

gans5001
26-04-2003, 12:15 AM
அப்பாவும்,புருஷனும் ஒரே மாதிரின்னு........

கொஞ்சம் கனமான கவிதை. ஆனால் யோசித்துப்பார்த்தால் பெண்களே தங்கள் வசந்தங்களுக்கு தீ வைத்துக்கொள்கிறார்கள் என்றே குற்றம் சாட்டத் தோன்றுகிறது. கனவில் வந்தாவது கடந்தவை சொல்லியிருக்கலாம் தாய். நடந்தவை தெரிந்தாவது கற்றுத் தேர்ந்திருக்கலாம் மகள்.. கண்கெட்ட பின்பு சூரிய வணக்கம்.

குமரன்
26-04-2003, 04:00 AM
வேகமாய் விழி திறந்தால் கண்ணீர்
நனைத்திருக்கும் தலையணையை
மனதை வலிக்க செய்யும் வரிகள்..
வலியை கவிதையாய் வடித்த
தோழிக்கு பாராட்டு...

gankrish
26-04-2003, 07:14 AM
நிலா அருமையாக எழுதியுள்ளீர். ஆனால் நீங்கள் கூறுவது போல் எல்லா அப்பனும்.. புருஷனும் இருப்பதில்லை.

Nanban
26-04-2003, 07:34 AM
இது போல ஒரு தாயும் மகளின் கதையையும் நான் நேரில் பார்த்திருக்கிறேன் - தைரியமாக சில முடிவுகள் செய்யக் கோரிய பொழுது அவர்களின் தயக்கம், சுற்றியிருக்கும் சமூகத்தின் பேச்சுகள் - எப்படி இதை விட்டு விலகிப் போவது என்றறியாத கலக்கம் - நடக்கத் தான் செய்கிறது இவ்வுலகில்.

பாராட்டுகள், நிலாவிற்கு.

rambal
26-04-2003, 03:25 PM
புருஷனும் அப்பாவும்...
ஒரே மாதிரி என்று..
அழகாய் உள்ளத்து வலிகளை சொல்லியுள்ளீர்கள்..
வரவர உங்கள் கவிதைகளில் ஒரு
அனுபவம் தெரிகிறது..
வாழ்த்துக்கள் நிலா...

பாரதி
27-04-2003, 08:35 AM
அனுபவத்தில் வந்த கவிதை..
ஆச்சரியப்பட வைக்கிறது.
சோகம் வேண்டாம் தோழி.


பாரதி

poo
27-04-2003, 05:34 PM
அனுபவத்தால் அவள் அறிந்தவிதத்தை அருமையாய் சொல்லியிருக்கும் அழகு..

பாராட்டுக்கள் நிலா...

நிலா
28-04-2003, 04:21 AM
பெண்களே தங்கள் வசந்தங்களுக்கு தீ வைத்துக்கொள்கிறார்கள்


வெளியே பென்ணுரிமை பேசி உள்ளே அவர்களை கொடுமை செய்யும் அவலம் இங்கு நடக்கத்தானே செய்கிறது!


திருடனாய் பார்த்து திருந்தனும்! அம்மா வந்தலும் முடியாது,அக்கம் பக்கம் சொன்னாலும் முடியாது!


எல்லா அப்பனும்.. புருஷனும் இருப்பதில்லை.


நான் எல்லோரும் அப்படின்னு சொல்லவில்லையே?

மனிதன்
28-04-2003, 04:51 AM
நிலா
பெண்ணின் உணர்வுகளை அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.. நடைமுறையில் இது யதார்த்தமும் கூட...
ஆனால் இதற்கு விதி விலக்கான சில அப்பாக்களும், புருஷன்களும் இருப்பதையும் மறுப்பதற்கில்லை....

Hayath
29-04-2003, 01:59 PM
நிலா..... நீங்கள் எதார்த்தத்தை வாழ்க்கையில் உண்மையாக நிகழுபவைகளை கூறியுள்ளீர்கள்.ஆனால் உண்மை எப்போதும் சுடவே செய்யும்.அவர்களாக பார்த்து திருந்தினால் மட்டுமே இதை மாற்ற முடியும்.
ஒரு மகன் தன் தந்தை ....தன் தாயை கொடுமை செய்வதை பார்த்து இதுப் போல தன் மனைவியை நடத்த கூடாது என்று எப்போது நினைக்கிறானோ ...அப்போதுதான் இது சாத்தியம்.

பாராட்டுகள் நிலா

சாத்தியம் என்பது சொல் அல்ல செயல்- நன்றி :-லாவண்யா

நிலா
30-04-2003, 10:21 PM
பாராட்டிய உள்ளங்களுக்கு என் நன்றிகள்!

puppy
08-01-2004, 07:21 PM
அம்மா சொன்னபோது வெட்கம் வந்ததே தவிர
அம்மா சொன்னதை கேட்காமல் போனாளோ....
அம்மாவிடம் சொல்லி மறுபடியும் அவளை
ஏன் ?

சேரன்கயல்
09-01-2004, 08:33 AM
அப்பாவும் புருஷனும் ஒரே மாதிரி...
பல குடும்பங்களில் காணப்படும் இந்த நிலையை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறீர்கள்...அனுபவ பூர்வமான கவிதையா என்ற ஆராய்ச்சியில் இறங்குவதற்கு முன்...அந்த அப்பாவும், புருஷனும் கண்ணங்கள் சிவக்க வைத்த சம்பவங்களைத் தவிர வேறு நினைவுகளையே விதைக்கவில்லையா என்று கேட்க தோன்றுகிறது...கோபம், விரக்தி, பாசம் என உணர்ச்சிகளின் கூட்டனியில் சில நல்லவைகளும் இல்லாமலா இருந்திருக்கும்...

நிலா
09-01-2004, 08:04 PM
...அனுபவ பூர்வமான கவிதையா என்ற ஆராய்ச்சியில் இறங்குவதற்கு முன்.


அனுபவமில்லை சேரன்!நாட்டில் நடக்கின்ற அவலத்தை எழுத எண்ணியே இப்படி!
நல்லதைவிட கெட்டதுமேலோங்கித்தெரியும்போது என்ன செய்ய அதைத்தானே எழுதும் மனசு?

jawahar
01-02-2004, 12:18 PM
தோழி நிலாவின் கவிதை அருமை..மனம் கசிகிறது

samuthira
01-02-2004, 12:31 PM
அனுபவமில்லை சேரன்!நாட்டில் நடக்கின்ற அவலத்தை எழுத எண்ணியே இப்படி!
நல்லதைவிட கெட்டதுமேலோங்கித்தெரியும்போது என்ன செய்ய அதைத்தானே எழுதும் மனசு?

அழுத்தமான உண்மையை சொல்லியிருக்கிறீர்கள் தோழி நிலா அவ்ர்களே....

மனதை கனபடுத்தினாலும் உங்கள் வார்த்தை வெளிபாடுகள் அதற்கு அர்த்தம் ஊட்டியது..,
வாழ்த்துக்கள் தோழி

அலை...
03-02-2004, 10:51 PM
ம்ம்ம்...

நிலா
03-02-2004, 10:52 PM
நன்றி நண்பர்கள் ஜவஹர்,மற்றும் சமுத்திரா அவர்களுக்கு.
அலை என்ன ம்ம்ம்ம்ம்ம்!?உங்களுக்கு நன்றி சொ.மா

அலை...
03-02-2004, 11:06 PM
அருமையாக செதுக்கப்பட்டிருந்தது அந்த சிற்பம்..
சிற்பத்தின் கண்களில் வடியும் கண்ணீர் கூட நேர்த்தியாக..
அழகோ அழகு என்றார்கள்..
வியந்தவர்கள் வாய் மூடவில்லை..
ஆயிரம் ஆயிரம் சிற்பங்கள்..
வகை வகையாய் அழுதபடி..
நானும் தேடித் தேடி பார்த்தேன்..
ஒரு சிரித்த சிற்பம் கூட
மருந்துக்கும் இல்லை..

பழகிப்போன வலி..
அலுத்துத்தான் போய்விட்டது..

நிலா
03-02-2004, 11:11 PM
பார்வையாளனாய் பழகிப்போன வலி அலுத்துதான் போகும்
அனுபவிக்கும் மகளிருக்கு அது என்றும் தீராத வலி!

முத்து
03-02-2004, 11:14 PM
உங்களுக்கு நன்றி சொ.மா


நிலா ..
அது யாரு சொ.மா .. ?

நிலா
03-02-2004, 11:16 PM
முத்து "ம்ன்றத்தேர்தல்--ஜனவரி மாதம் போட்டியிடுபவர்கள்"பகுதியைக்காண்க!

முத்து
03-02-2004, 11:27 PM
நிலா ..
பதில் கேட்டா க்ளூ கொடுக்குறீங்க ..
இது விடுகதையா என்ன .. ? :wink: :D

அலை...
04-02-2004, 02:14 AM
பார்வையாளனாய் பழகிப்போன வலி அலுத்துதான் போகும்
அனுபவிக்கும் மகளிருக்கு அது என்றும் தீராத வலி!

வலி விவாதத் தலைப்பல்ல...அதனால் தான்... நான் முதலிலேயே சொன்னேன்..
ம்ம்ம்....