PDA

View Full Version : 2. லம்பயீ கரியோ லொவீயா - பாகம் ரெண்டு



gragavan
09-09-2006, 07:42 PM
தாமதத்துக்கு மன்னிக்கவும். என்ன பண்றது. அடுத்த பாகம் போட வேண்டிய பொழுதுதான் சென்னைய விட்டுக் கெளம்பி பெங்களூர் வர வேண்டியதாப் போச்சு. வந்த மொத வாரம் வேலை நெறைய. அதாங்க காரணம். ஆனாலும் போன வாட்டி போட்டிருக்க வேண்டிய படங்களை இந்த வாட்டி போட்டிருக்கேன்.
http://photos1.blogger.com/blogger/2224/1103/320/GroupPhoto-2.jpg


நவீன நாடகங்கள் எனக்குப் புரியாது என்று பெருமை பேசுகின்ற தமிழர் கூட்டத்தில் நாமும் ஒருவராக இருந்தாலும் அவ்வப்பொழுது ஆசை உந்த பார்த்து விடுவது உண்டு. பெங்களூரில் ஆங்கில கன்னட நாடகங்களைப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பு தமிழ் நாடகங்களைப் பார்க்கக் கிடைக்கவில்லை. மூன்று மாதங்கள் சென்னையில் இருக்க வேண்டும் என்ற நிலை வந்த பொழுது நாடகங்கள் பார்க்க வேண்டும் என்ற ஆசை அடிவயிற்றில் விழுங்கிய அத்தனை இட்டிலிகளுக்கு அடியிலும் ஒளிந்து கொண்டிருந்தது.

கூத்துப்பட்டறை பற்றி எல்லாரும் கொஞ்சமாவது கேள்விப்பட்டிருப்பீர்கள். நவீன நாடகங்களுக்குப் பெயர் போனவர்கள். பொன்னியின் செல்வனை மேடையேற்றியவர்கள். என்.முத்துசாமி அவர்களின் உழைப்பாலும் முயற்சியாலும் 1977ல் தொடங்கி தமிழ் நாடக உலகில் புதுமலர்ச்சியும் முயற்சியும் கொண்டு வந்தவர்கள். இன்னும் நிறைய சொல்லலாம். நாடகத்தையும் நடிப்பையும் கற்றுக் கொள்ளச் சிறந்த இடங்கள் என ஐந்து இடங்களை UNESCO தேர்ந்தெடுத்துள்ளது. அந்தப் பட்டியலில் கூத்துப்பட்டறையும் இருப்பது அதன் உழைப்பாலும் பங்களிப்பாலும். ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டிலிருந்து நடிகர்கள் வந்து மூன்று மாதங்கள் கூத்துப்பட்டறையில் தங்கி பயிற்சி பெறுவார்கள்.

பரமார்த்த குரு கதைகள் கேள்விப்பட்டிருப்பீர்கள். வீரமாமுனிவர் என்றழைக்கப்படும் Contenstine Jospeh Beski எழுதியதாகக் கருதப் படுவது. தேம்பாவணி என்னும் நூலும் இவர் எழுதியதாக் கருதப் படுவதே. இவர்தான் எழுதினார் என்றுதான் சிறுவயதில் பள்ளியில் படித்திருக்கிறேன். ஆனால் பல தமிழாராய்ச்சி நூல்களைப் புரட்டிய பொழுது இவரு எழுதாமல் இவருக்கு ஆசானாக இருந்த சுப்ரதீபக் கவிராயர் எழுதியிருப்பாரோ என்று பலர் கருதுகின்றனர். ஆனாலும் இவர் எழுதவில்லை என்று என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியாததால் அவரால் எழுதப்பட்டது என்று கருதப்படுவது என்று நான் இங்கு குறிப்பிடுகிறேன்.

கிருத்துவ மதப் பிரச்சாரத்திற்காக இத்தாலியிலிருந்து இந்தியா வந்தவர் இவர். ஒன்றை நம்பினால் இன்னொன்றை மறுப்பது என்பதுதானே பொதுவான உலக வழக்கு. அந்த வகையில் கிருத்துவத்தை நம்பிய அவர் அப்பொழுதைய தென்னிந்திய மக்களின் நம்பிக்கைகளைக் கிண்டல் செய்து எழுதியதாகக் கருதப்படுவதே பரமார்த்த குரு கதைகள். வைரத்தையும் தங்கத்தையும் நக்குவதைக் காட்டிலும் சிறந்த நகைச்சுவைக் கதைகள் அவை.

இந்த பரமார்த்த குரு கதையும் கூத்துப்பட்டரையும் இணைந்தால் என்ன கிடைக்கும்? மாலைப் பொழுதை நல்லவிதமாகப் பொழுது போக்கினோம் என்று மனநிறைவைத் தரும் நல்ல நாடகமும் அதனால் பல சுவையான நினைவுகளும் வலைப்பூக்களிலும் மன்றங்களிலும் சில பல பதிவுகளும் கிடைக்கும். அப்படிக் கிடைக்கும் பதிவுகளில் ஒன்றுதான் நான் தருவது. இப்பொழுது நீங்கள் படிப்பது.
இருட்டில்தான் எல்லாம் தொடங்குகிறது என்கிறார்கள் திருமணமானவர்கள். நாடகம் பார்க்கிறவர்களும் அப்படித்தான் சொல்கிறார்கள். டிஜிட்டல் கேமிராவை வைத்துக் கொண்டு நானும் தயாராக இருந்தேன்.

ஓ பகிரியா ஓ பகிரியா
லம்பயி கரியோ லொவீயா
க்வாக் க்வாக் க்வாக்
ஓ பகிரியா ஓ பகிரியா

பின்னாடியிருந்து சத்தம் வந்தது. டொண்ட்ட டக்க டொண்ட்ட டக்க என்று தாளவொலி. தலையில் வட்டக் கொண்டை. அதைச் சுற்றிலும் பூச்சரம். மழுமழு முகம்.நெற்றியில் வட்டமாய்க் கருப்புப் பொட்டு. இளஞ்சிவப்பு அரிதாரமுகமும் அடர் சிவப்பு வாயும். முழுக்கைச் சட்டை. முக்காப் பாவாடை. ஜிலுஜிலுவென பாடிக் கொண்டே இறங்கி வந்தாள் சோலை. இரண்டு பக்கமும் ரசிகர்களைப் பார்த்துப் பாடிக் கொண்டே வந்தவள்.....கருத்த மச்சானாக கட்டழகாக உட்கார்ந்திருந்த ஒருவர் பக்கத்தில் ஆசையோடு உட்கார்ந்து பாடுகிறாள். பார்வையால் அவனைப் பருகிக் கொண்டே மேடைக்குப் போகிறாள்.

தன்னைச் சோலை அறிமுகம் செய்து கொள்கிறாள். "நான் அவனா அவளான்னு பாக்குறீங்களா? அவன்ல இருக்குற ன்னோட நடுவுல இருக்குற சுழி போயி கோடு வந்து அவளாயிருச்சு." இருபொருள் பட அவளது பாலியல் மாற்றத்தை விளக்குகிறாள். கூஊஊஊஊஊச்! இதுதான் சோலைக்கு ரொம்பப் பிடித்தது. அதென்னது! அட! அதையெல்லாம் வெளிப்படையாச் சொல்வாளா என்ன? :-)
இந்தச் சோலைதான் பரமார்த்த குருவோட ஆசிரமத்துல குருவுக்கும் சீடர்களுக்கும் எடுபடியா உதவியா இருக்குறது. இவளோட பார்வையிலதான் நாடகம் தொடர்ந்து நடக்கப் போகுது!

கூஊஊஊஊஊச்! (நானில்லை. சோலை)

தொடரும்...

gragavan
09-09-2006, 07:47 PM
http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/CholaiInStage.jpg

paarthiban
10-09-2006, 12:59 PM
கூத்து பட்டறை நாடகங்கள் பற்றி நல்லா ஜாலியான விதத்தில் உங்களின் இந்த கட்டுரை நிஜாமாலும் அருமை சார். தொடருங்கள்.

இளசு
10-09-2006, 09:03 PM
பரமார்த்த குரு கதைகள் பின்னணியுடன் சுவையான அத்தியாயம்.
ஆர்வத்தை கிளப்பிவிட்டீர்கள் ராகவன்.
அடுத்த பாகத்துக்கு காத்திருக்கிறேன்.

யுனெஸ்கோ அங்கீகாரம் புதிய - மகிழ்வான செய்தி.
அறியத்தந்தமைக்கு நன்றி.

ஓவியா
11-09-2006, 02:09 PM
கூத்துப்பட்டரை.....
அழகான ஆரம்பம்....

மயிலாரை கூட்டிகின்னு போகலையா?

நானும் ஆவலுடன் அடுத்த பாகத்துக்கு காத்திருக்கிறேன்.
பாகத்தை தொடரவும்...


பின் குறிப்பு
ராகவன், நேரம் பற்றாக்குறையா.....:)
(எழுத்தில் ஒரு தேய்வு காணப்படுகின்றது)
உங்களுடைய படைப்புக்கள்
சும்மா கலக்கலா இருக்குமே........:D
அதான் மனசு தாங்காம கேட்டுபுட்டேன்

இனியவன்
11-09-2006, 02:27 PM
நல்ல தொடக்கம்.
கூத்துப் பட்டறையோட கூத்தை எதிர்பார்க்குறோம்.

gragavan
12-09-2006, 04:33 AM
படித்துப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

ஓவியா, உண்மைதான். சென்னையிலிருந்து பெங்களூருக்குக் கிளம்பிய வாரம் எழுதத் தொடங்கியது. வேலைகள் நிறைய. அதனால் அவசரமாக எழுதியது இது. கண்டுபிடித்து விட்டீர்களே!

pradeepkt
12-09-2006, 10:19 AM
அன்னைக்கு நானும் வந்து பாத்துருக்கலாமோ????

ஓவியா
12-09-2006, 04:21 PM
படித்துப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

ஓவியா, உண்மைதான். சென்னையிலிருந்து பெங்களூருக்குக் கிளம்பிய வாரம் எழுதத் தொடங்கியது. வேலைகள் நிறைய. அதனால் அவசரமாக எழுதியது இது. கண்டுபிடித்து விட்டீர்களே!


நமக்கும் கொஞ்சம் சிபிஐ மூளை இருக்கு......:D

கோவிக்காமா தொடர்ந்து எழுதவும்...



அன்பு வேண்டுகோள்
மயிலாரை செர்த்துகொள்ளவும்.......ரசனையா இருக்கும்.....:)
நமக்கு அவுக (மயிலாரு) மேலே ஒரு டாவு....;)