PDA

View Full Version : ஜெனீ.. சிறுகதை..



rambal
25-04-2003, 04:26 PM
ஜெனீ.. சிறுகதை..

"ஜெனீ டார்லிங்.. நான் ஊருக்குப் போறேன். தந்தி வந்திருக்கு. ரெண்டே நாள்ள திரும்பி வந்திடுவேன்."
".............."
"இந்த தடவை கண்டிப்பா அப்பா அம்மாகிட்ட பேசி சம்மதம் வாங்கிடுவேன்"
".................."
"டோண்ட் வொர்ரி.. அதுக்கு அப்புறம் நீ இங்கேயே வந்து என் கூட இருந்தா யார் என்ன கேக்கப் போறா?"
".................."
"ப்ச்" என்ற முத்தத்தோடு தொலைபேசி உரையாடலை முடித்தேன்.

ஜெனீயை பிரிந்து செல்வது கொஞ்சம் வேதனை அளித்தாலும் இந்த தடவை கண்டிப்பாக இந்த உண்மையை சொல்லி பெர்மிசன் வாங்கிடனும். என்ன அம்மா கொஞ்சம் அழுவா. அப்பா.. என்னோட முற்போக்கு சிந்தனை அவருக்குத் தெரியும். அதனால பக்குவமா குழப்பப் பார்ப்பார். ஆனால், கொஞ்சம் நியாயங்களை எடுத்துச் சொன்னால் சம்மதிப்பார். அம்மாவைத்தான் எப்படி சமாதானம் செய்வது என்று யோசிக்க வேண்டும். சரி, போகும் வழியில் யோசித்துக் கொள்ளாலாம். தந்தி வந்த காரணம் என்னவாக இருக்கும்? அது வேறு கொஞ்சம் குடைந்து கொண்டிருந்தது. இப்படி பல சிந்தனைகளுக்கிடையே துணியை அள்ளி பையில் திணித்து காரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

வாசுதேவ நல்லூருக்கும் சென்னைக்கும் ஏணிவைத்தாலும் எட்டாது. அது இயற்கை எழில் கொஞ்சும் விளையாட்டுமைதானம் என்றால் இது கட்டிட காடு. எதையோ பறிகொடுத்து, எதையோ தேடுகிற விலங்குகளாய் மனிதர்கள். அந்த வெள்ளந்திச் சிரிப்பும் கள்ளாங்கபடமில்லாத மனிதர்கள் என்ன? இங்கு அடுத்த வீட்டில் இருப்பவரின் பெயர் கூட தெரியாத கூட்டு வாழ்க்கை என்ன? இப்படி ஒப்பீட்டுப் பார்த்தாலும் இந்த நகர நரக வாழ்க்கை என்பது காலத்தின் கட்டாயம். எப்படியோ ஏதோ ஒன்றில் மனம் சிக்கிக் கொண்டு கை அகப்பட்ட குரங்காய் வாழ வேண்டியிருக்கிறது. வாசுதேவ நல்லூரில் இருக்கும் பெரிய காரை வீடு எங்களுடையது. என் தாத்தா பேர் போனவர். என் அப்பா என் தாத்தாவின் பெருமைகளை கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். அங்கு தோப்பென்ன? வாய்க்கால் வரப்பென்ன? ம்ம். மனசு ஒரு முறை பால்ய நினைவுகளுக்கு ஏங்கியது. சரி பழைய கதை எதுக்கு? இந்த தடவை கண்டிப்பா புரிய வைக்கனும். ஜெனீயை பிரிஞ்சு என்னாலோ என்னைப் பிரிஞ்சு ஜெனீயாலோ வாழ முடியாது. அவளுக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன். இப்படி பல யோசனைகளுக்கு இடையில் வாசுதேவனல்லூர் வந்திருந்தேன். கிட்டத்தட்ட காலை எட்டு மணியாயிருந்தது.

அந்த தேக்கு மர நிலை. வீட்டிற்கு முன் தென்னை. பெரிய வாராண்டா. தாயைக் கண்ட கன்னுக் குட்டியாய் ஆனது மனம். என்ன இருந்தாலும் சொந்த மண்ணில் கால் வைக்கும் போது ஏற்படும் பரவசத்திற்கு ஈடு இணை இந்த உலகில் வேறு எதுவும் கிடையாது. கார் சத்தம் கேட்டு வீட்டின் முன்புற கதவு திறந்தது. அப்பாதான்.

"வாடே. கிருஷ்ணா.. கார் ஒன்னும் மக்கர் பண்ணலையே. ஒரு டிரைவர் போட்டுக்கக்கூடாது?" அனுசரணையாக ஆரம்பித்தார்.
"என்ன தந்தி? திடீர்னு"
"ஓ..அதுவா. ஒன்னும் பெரிசா இல்லை. முதல்ல உள்ளே வா. பேசிக்கலாம்"
எங்கள் சம்பாசணை கேட்டு அம்மாவும் வந்துவிட்டாள்.
"யாரு கிருஷ்ணனா? எப்படேவந்தே?"
"யெம்மே.. இப்ப என்ன ஆச்சுன்னு இந்த தந்தி?"
"குளிச்சிட்டு வா. உனக்குப் பிடிச்ச கம்பந்தோசைக்கு மாவு அரைச்சு வைச்சிருக்கேன்.சுட்டுத் தற்றேன். சாப்பிட்டுட்டு சாவகாசமா பேசலாம்"
"சரி" என்று விட்டு மாடிக்கு சென்றேன். அப்பாடா! ஒருத்தருக்கும் ஒன்னும் இல்லை. மனது கொஞ்சம் அமைதியடைந்தது. காலைக்கடன்களை முடித்துவிட்டு கீழிறங்கி வந்தேன்.
"இப்ப யாருக்கு என்னாச்சுன்னு எனக்கு தந்தி அனுப்புனிங்க"
"ஓ அதுவா?'
"என்ன அதுவா"
"எல்லாம் நல்ல விஷயந்தான்"
"என்ன?"
"எல்லாம் உன் கல்யாணம் பத்தித்தான்"
"என்ன அம்மே.. நீ கூட என்னை புரிஞ்சுக்காம? இப்ப என்ன அவசரம்?"
"அந்த கற்பகம் மவனுக்கு கல்யாணம் ஆகி இப்ப ரெண்டு பிள்ளை. தெரியும்ல"
"அதுக்கு?"
"அவன் உன்னை விட மூனு வயசு சின்னவன். அதுவும் போக ஆழ்வார்குறிச்சியில இருந்து ஒரு நல்ல வரன் வந்திருக்கு. பொண்ணு டிகிரி வரைக்கும் படிச்சிருக்கா. நல்லா சமைப்பாளாம். நீ சரின்னு சொன்னா ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்திடலாம்"
அப்பா இடைமறித்து பேச்சை ஆரம்பித்தார்.
"ஏட்டி.. இங்க பாரு. எங்களுக்கும் வயசாயிடுச்சு. உனக்கு இப்பவே 29, இப்ப விட்டா அப்புறம் 31லதான் முடிக்க முடியும். ஏற்கனவே நீ நிறைய தடவை தள்ளிப் போட்டுட்ட. இப்பவிட்டா வேற எப்ப? அதான் தந்தி கொடுத்து வரவைச்சோம்"
"இங்க பாருங்கப்பா. இப்ப வேண்டாம்னா வேண்டாம்"
"இப்படி பிடிச்ச பிடி பிடிச்சா எப்படிடே? அதான் உனக்காக இவ்வளவு தள்ளிப் போட்டுட்டோம். ஏதாச்சும் ஒரு காரணம் சொல்லு?
இல்லை வேற யார் கூடவாவது சகவாசம் வைச்சிருக்கியால? சொல்லு."
"அப்படில்லாம் ஒன்னும் இல்லை."
"பின்ன என்ன?"
"சரி.. இவ்வளவு தூரம் கேட்கிறதால சொல்றேன். கல்யாணத்துக்கு நான் தயார். ஆனா ஒரு கண்டிசன்"
"என்ன?"
"நீங்க யார் கழுத்துல வேண்ணாலும் தாலி கட்டச் சொல்லுங்க... கட்டுறேன். ஆனா, ஜெனீன்னு ஒரு 6 வயசு பெண் குழந்தையை தத்தெடுத்திருக்கேன். அந்தக் குழந்தைக்கு எனக்கு மனைவியா வற்றவ அம்மாவா இருக்கணும்."

poo
25-04-2003, 04:46 PM
அட... இவ்வளவு அருமையா எழுதியிருக்கியே... கடைசி வரியை படிச்சதும் மனசு மொத்தமும்....

ராம் உன் திறமை என்னை பொறாமைப்பட வைக்கிறது..

lingam
25-04-2003, 05:43 PM
அருமையான கதை ராம்பால். கடைசி வரியில் ஜெனி பற்றிய வரிகள், நிச்சயமாக நான் எதிர்பார்க்காத திருப்பம்.

நிலா
25-04-2003, 06:42 PM
"டோண்ட் வொர்ரி.. அதுக்கு அப்புறம் நீ இங்கேயே வந்து என் கூட இருந்தா யார் என்ன கேக்கப் போறா?"


இதைப் படிக்கிறப்பவே எங்கேயோ இடிச்சது!
வலி கடைசிவரியில் மறைந்தது!

Emperor
26-04-2003, 07:16 AM
அருமையான கதை, வாழ்த்துக்கள் திரு.ராம்பால் அவர்களே.

aren
27-04-2003, 06:57 AM
அந்த கடைசி வரிகள் அருமை. நான் வேறு ஏதோ என்று நினைத்து படித்துக்கொண்டிருந்தேன், ஆனால் நான் எதிர்பார்த்தது வேறு. பாராட்டுக்கள்.

இளசு
27-04-2003, 01:36 PM
மூன்றாவது கதையும் முத்திரைக் கதையே.....
வாழ்த்துகள்... பாராட்டுகள் ராம்!

karikaalan
27-04-2003, 02:57 PM
ராம்பால்ஜி!

அருமையான கதைதான். சந்தேகமில்லாமல்.

சட்டத்தில் மணமாகாத இளம் வயது ஆண் தத்தெடுப்பதற்கு இடம் கிடையாது. அதுவும் பெண் குழந்தையை தனியொரு ஆண் தத்தெடுக்க அனுமதி மறுக்கப்படும். மணமான இளம்ஜோடியும் தத்தெடுக்க முடியாது -- ஒரு அ·பிடவிட் கொடுக்கவேண்டும் -- இருவருமே குழந்தைபெறுவதற்கு இயலாதவர்கள் என்று வாக்குமூலம் அளிக்கவேண்டும். அதன் பிறகே அனுமதி கிடைக்கும்.

===கரிகாலன்

rambal
27-04-2003, 03:21 PM
இல்லை கரிகாலன் அவர்களே. தத்தெடுக்க சட்டத்தில் இடம் உண்டு.
சில தொண்டு நிறுவனங்கள் மட்டுமே அவர்கள் பாலிசியில் இதை அனுமதிப்பதில்லை.
மற்றபடி காரணங்கள் சரியாய் இருக்கும் பட்சத்தில் மற்ற தொண்டு நிறுவனங்களில் கொடுக்கிறார்கள்.

anushajasmin
28-04-2003, 12:21 AM
அருமையான சிறுகதை தந்த ராம்பாலுக்கு பாராட்டுகள்.... ஒரு சிறுகதையின் வெற்றி அதன் முடிவிலும் இருக்கிறது .... உங்கள் கதை அருமை

karikaalan
28-04-2003, 11:54 AM
ராம்பால்ஜி!

தவறுக்கு வருந்துகிறேன். சட்டப்படி செல்லும். இன்று The Hindu Adoptions & Maintenance Act, 1956, புத்தகத்தை வாங்கிப் படித்தேன். தாங்கள் கூறுவது சரியே. மன்னிக்கவும்.

===கரிகாலன்

rambal
28-04-2003, 05:00 PM
ஒரு நல்ல விஷயம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு வேண்டுமென்றால் இது போன்று விவாதிக்கவேண்டும்.
ஜெனீ அனுபவப்பூர்வமாக என் வாழ்வில் நடந்தது. அதனால்தான் ஆணித்தரமாக கூறினேன். நீங்கள் அதை சட்டபூர்வமாக விளக்கிவிட்டீர்கள்.. நன்றி.. இன்றும் சில கிறித்தவ அமைப்புகள் மட்டுமே நீங்கள் சொல்லிய விபரங்களை கேட்கிறார்கள்.

madhuraikumaran
29-04-2003, 05:19 AM
முதல் பத்து வரிகளுக்குள் பாத்திரங்களின் அறிமுகம், பின்னர் ஒரு கட்டுமானம் (ப்யுள்டப்) கொடுத்து சற்றே நகர்த்திச் சென்று, சட்டென்று யாரும் எதிர்பார்க்க முடியாத ஒரு முடிவு.... என ஒரு சிறந்த சிறுகதைக்கென எல்லா அம்சங்களும் நிறைந்திருக்கின்றன. சிறுகதை உங்கள் புது முயற்சி என்றே நம்ப முடியவில்லை.... பாராட்டுக்கள்..!!! பின்னாளில் நீங்கள் பிரபலமாயிருக்கும் போது இவரை எங்களுக்குத் தெரியும் என்று நாங்களும் சொல்லிக் கொள்ளாலாம் !

மனிதன்
29-04-2003, 08:39 AM
ராம் உங்கள் ஜெனி என்னைப் பாதித்து விட்ட ஒரு பாத்திரம்... கடைசி வரியில் நீங்கள் கோடிட்ட அந்த எதிர் பாராத முடிவு தான் ஜெனியை வாசகன் மனதில் பதிய வைக்கிறது.... தங்கள் பணி தொடரட்டும் நண்பரே...

Dinesh
30-05-2003, 09:03 AM
பிரபலமான கதாசிரியர்களுக்கு சாவல் விடும்
அளவிற்கு எதிர்பாராத, நறுக்கென்று ஒரு சிறுகதை...
இந்த கதை உங்களின் மகுடத்தில் மற்றுமோர் மாணிக்கம்.
வாழ்த்துக்கள் ராம்பால் அவர்களே!

தினேஷ்.

indian_usa
31-05-2003, 02:20 AM
அருமையான கதை...எதிர்பாரது முடிவு...

rambal
13-04-2004, 04:51 PM
மன்றத்தில் நான் எழுதிய என்னுடைய மூன்றாவது கதையை மீண்டும் படிக்கையில் வாழ்க்கையின் பல சம்பவங்கள் மீண்டு எழுகின்றன..
எழுதும்போது இருபதை விட மற்ற சமயத்தில் படிக்கும் பொழுதும் ஒரு திருப்ததீருக்கிறது. (நன்றி நண்பன்) உண்மைதான்..

மன்மதன்
14-04-2004, 07:14 AM
கடைசி வரியில் நல்ல ஒரு திருப்பம்.. நல்ல கதை.பாராட்டுக்கள்

kavitha
15-04-2004, 03:18 AM
சிறுகதை என்ற சொல்லுக்கு மிகக்கச்சிதமாக பொருந்திய கதை!
இறுதிவரிக்கு முன் இருந்த கோபம் இறுதிவரியை படித்ததும் சுத்தமாக மறைந்தது.
கிட்டத்தட்ட 1 வருடம் கழித்து மேலெழும்பிய இக்கதையை இப்போது படிக்கத்தந்தமைக்கு நன்றி!

ஜோஸ்
15-04-2004, 02:02 PM
கதையென்றால் இதுதான் கதை... அற்புதமான முடிவு... வாழ்த்துக்கள் நண்பரே..