PDA

View Full Version : தாயா தாரமாgragavan
10-08-2006, 06:48 AM
தாயா தாரமா என்ற கேள்வி எழாத நாளுமில்லை. நாடுமில்லை. தாய்க்குப் பின் தாரம் என்பார்கள் சிலர். தாரத்தால் தாயாக முடியும். ஆனால் தாயால் தாரமாக முடியுமா என்று கேட்பர் சிலர். இரண்டுமே தவறு. தாய் வேறு. தாரம் வேறு. தாய் தாரமாவது மட்டும் கொடுமையன்று. தாரம் தாயாவதும் கொடுமைதான்.

ஆம். அப்படி ஒரு நிகழ்ச்சி என் வாழ்விலும் நிகழ்ந்தது. அதனால்தான் அடித்துச் சொல்கின்றேன். தாரம் தாயாகவே முடியாது. ஆகவும் கூடாது. அவரவர் பொறுப்பு அவரவர்க்கு. இப்பொழுது இது உங்களுக்குப் புரியாமல் போகலாம். ஆனால் என்னுடைய கதையைக் கேட்டால் கண்டிப்பாகப் புரியலாம்.

நானும் மணமானவள்தான். மனைவியாக மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தியவள்தான். இனிய இல்லறம் எனக்கும் தெரியும். கூட்டிப் பெருக்கவும் ஆக்கிப் போடவும் இரவில் படுக்கையைத் தட்டிப் போடவும் தெரிந்தவள்தான். நல்ல வளமான குடும்பமும் கூட. வியாபாரக் குடும்பம். வெளிநாடு போனார் ஒரு முறை. பொருள் சேர்க்க எங்கள் குடும்பத்தில் ஆண்கள் செல்லும் பயணம்தான். எனது தந்தையார் சென்றிருக்கின்றார். அண்ணன் சென்றிருக்கின்றார். என்னுடைய மாமனாரும் சென்றிருக்கின்றார். அந்த வழியில் எனது கணவரும் பல முறை திரைகடலோடியவர்தான்.

ஒவ்வொரு முறையும் திரும்ப வந்து என்னைக் கண்டவர், கைகளில் அள்ளிக் கொண்டவர் ஒரு முறை காணாமல் போனார். வாடிப் போனேன். வதங்கிப் போனேன். நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி மாதங்களும் ஆண்டுகளாயின. கண்ணீர் ஒன்றுதான் விதியென்று ஆனேன். அந்த விதியைக் காணச் சகிக்காத சுற்றத்தார்களும் நாடு நாடாகப் போய்த் தேடினர்.

கிழக்குக் கடலையும் மேற்குக் கடலையும் கடைந்து தேடினாலும் ஒரு துப்பும் கிடைக்கவில்லை. ஆனாலும் தேடுதல் நிற்கவில்லை. என்றாவது ஒரு நாள் வருவார் என்று காத்திருந்த எனக்கு அந்த நல்ல செய்தியும் வந்தது. ஆம். வெளிநாடுகளிலெல்லாம் தேடியவர்கள் பக்கத்தில் தேடாமல் விட்டார்கள்.

மதுரையிலே அவர் இருக்கின்றார் என்று நம்பகமான செய்தி வந்தது. வேறு தகவல் எதுவுமில்லை. வீட்டில் எல்லாரும் கிளம்பிச் சென்றோம். அவர் என்ன நிலையில் இருக்கின்றாரோ என்று வருந்திதான். ஏதேனும் குற்றங் குறை வந்து மனமும் குணமும் வாடிக் கிடந்தால் என்ன செய்வது? என்ன குழப்பத்தில் எங்கு மாட்டிக்கொண்டிருக்கிறாரோ? எல்லாரும் சென்றால்தான் அவரைப் பாதுகாப்பாக அழைத்து வரமுடியுமென்று முடிவு கட்டிச் சென்றோம்.

சென்ற பிறகுதான் ஏன் சென்றோம் என்று தோன்றியது. ஆம். ஊருக்குள் நுழைந்ததும் கிடைத்த செய்தி அப்படி. மதுரையம்பதியிலே அவர் ஒரு பெண்ணின் பதியென இருந்தார். கைக்குழந்தையோடு கதியென்று இருந்தார். ஆனால் விதி செய்த சதியென்று நானிருக்க முடியுமா? சத்திரத்தில் தங்கிக்கொண்டு அவரை வரவழைத்தோம். வந்தார். மனைவி மக்களோடு. அந்தக் காட்சியைக் கண்ட பொழுதே உலகத்தின் மீதிருந்த பாதிப்பற்று போய் விட்டது.

வந்தவர் என்னைப் பார்த்ததும் இரண்டு கைகளையும் வணங்கிக் கும்பிட்டார். அவர் மட்டுமல்ல...நான் சுமந்த தாலியைச் சுமந்து....நான் மகிழ்ந்த மேனியை மகிழ்ந்து....நான் சுமக்க வேண்டிய குழந்தையைச் சுமந்த அந்தப் பெண்ணும் அவள் பெற்ற குழந்தையும் என்னை வணங்கினார்கள். பேச்சின்றி எல்லாரும் வியந்த பொழுது பேசியும் வியப்பூட்டினார் அவர். என்னைப் பார்த்துச் சொன்னார். "அம்மா" என்று.

அது கணவனின் குரலாகக் கேட்கவில்லை. அந்த அழைப்பில் குழந்தையின் பாசத்தை மட்டுமே கண்டேன். பெண்கள் கணவனை ஐயா என்று அழைப்பதற்கும் ஆண்கள் மனைவியை அம்மா என்று அழைப்பதற்கும் வேறுபாடு உண்டு. கணவன் அப்பாவாக முடியாது. ஆகையால்தான் ஐயா என்று அழைப்பார்கள். ஆனால் மனைவி என்பவள் அம்மாவாக முடியாது என்பதை அறியாமல் எதற்கெடுத்தாலும் அம்மா அம்மா என்று அழைத்து அம்மா என்ற சொல்லுக்கே புதுப் பொருளை வழங்கி விட்டார்கள்.

ஆனால் இன்றைக்கு அவர் அம்மா என்று அழைத்த பொழுது அந்தத் தூய சொல்லுக்கான உண்மையான பொருளைத்தான் நானும் கண்டேன். என்னோடு வந்தவர்களும் கண்டார்கள். அந்த அதிர்ச்சியில்தான் வந்தவர்கள் அவரை அதட்டிக் காரணம் கேட்டார்கள். அவரும் சொன்னார்.

"அன்றொரு நாள் பகலுணவிற்காக நான் இரண்டு மாங்கனிகள் கொடுத்தனுப்பினேன். ஆனால் புனிதவதியாரோ நான் உணவுக்கு வருமுன்னமே ஒரு கனியைச் சிவனடியாருக்குப் படைத்து விட்டார். களைப்பில் உணவிற்கு வந்த எனக்குக் கிட்டியது ஒரு மாம்பழம். நானும் அதை உண்டு ருசித்து மற்றொன்றையும் கேட்ட பொழுது என்னுடைய மனம் மகிழ இறைவனை வேண்டி இன்னொரு கனியைக் கொண்டு தந்தார் புனிதவதியார். அது சுவையிலும் மணத்திலும் குணத்திலும் மேலோங்கி இருக்கக் கண்டு......வியந்த பொழுது...கனி கிடைத்த கதை சொன்னார் புனிதவதியார். பொய்யோ மெய்யோ எனச் சோதிக்க இன்னொன்றையும் அப்படி வேண்டிக் கொண்டு வா பார்க்கலாம் என்று சொன்னேன். உடனே வேண்டினார். கனியும் கிடைத்தது. பார்க்கலாம் என்று கேட்டதாலேயே பார்க்க மட்டும் கிடைத்தது. பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே கண் முன்னே மறைந்தது. அப்பொழுதுதான் அந்தப் பெரிய உண்மையைப் புரிந்து கொண்டேன். ஆண்டவனை எப்பொழுதும் அருகில் இருக்கக் கொள்ளும் ஞானப் பெருமகளே புனிதவதி என்றுணர்ந்தேன் நான்.

அந்தப் பெருமகளை என் குலமகளாக் கொண்டு இல்லறம் செய்வது எங்ஙனம்? இறைவன் கனி கொடுத்த கைகளுக்குப் பணி கொடுப்பேனா! இறைவனை அழைத்த இதழ்களோடு என்னிதழ்களை இழைப்பேனா! உள்ளமெல்லாம் பாசமும் உடலெல்லாம் நேசமும் அந்தச் சடையன் மீது கொண்ட தூயவராம் புனிதவதியை இந்த மடையன் அணைப்பேனா! இல்லறம் சிறப்பது கட்டிலில் தானே. அங்கே தாயைக் காண நாயாக முடியுமா என்னால்? பண்பெல்லாம் கற்றவனாயிற்றே நான். ஆகையால்தான் அன்னையை நீங்கினேன். மதுரையம்பதிக்கு வந்தேன். வணிகம் செய்தேன். திருமணமும் செய்து குழந்தையும் கொண்டு இறைப்பணியையும் சிறப்பித்து வருகிறேன். இப்பொழுது சொல்லுங்கள். நான் செய்தது தவறா? பிழையா?"

இப்படி எல்லாம் அவர் சொன்னது எல்லாருக்கும்...ஏன்...என்னுடைய பெற்றோருக்கும் சரியெனவே பட்டது. ஆனால் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. ஆண்டவர்களின் அடியவர்களாக இருக்கும் ஆண்களுக்குப் பெண்கள் மனைவியானதில்லையா? அப்படியிருக்க பெண்ணிடத்தில் மட்டும் என்ன ஓரவஞ்சனை? ம்ம்ம்...பயந்து போனவரை நினைத்துப் பயன் என்ன? அதனால்தான் சொல்கிறேன். தாய் வேறு. தாரம் வேறு. இரண்டும் ஒன்றாகவே முடியாது. தாயைப் பாசத்தில் நினைக்கத்தான் முடியும். ஆனால் தாரத்தை நேசத்தில் அணைக்கவும் முடியும். ம்ம்ம்...எப்படியோ இல்வாழ்க்கை இல்லாத வாழ்க்கையாகப் போயிற்று. போகட்டும். கணவன் வாயில் கனமாகக் கேட்ட பிறகு உடல் பற்றுப் போயிற்று. போகட்டும். அகப்பற்றும் புறப்பற்றும் போயிற்று. போகட்டும். எல்லாம் இறையருள். நான் தாயாகவும் இல்லை. இப்பொழுது தாரமும் இல்லை. ஆனால் உறவுகளுக்கும் பந்தங்களுக்கும் எனக்கு வெகுதூரம். தாயாகவும் இல்லாமல் தாரமாகவும் இல்லாமல் மண்ணுக்குப் பாரமாக இருக்கவா!

ஆனால் ஒன்று. என்னைத் தாயென்றவரை மகனாக ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை. எப்படி ஒப்பும்? பிறந்த மேனியாய்த் தொட்டிலில் கண்டவரை மகன் எனலாம். கட்டிலில் கண்டவரை? கட்டிக் கொண்டவரை? அவராலும் நான் இன்னும் தாயாகவில்லை. என்னிடத்தில் தாயை உருவாக்க வேண்டியவரோ பாயை மடித்து வைத்து விட்டார். பிறப்பால் மகளானேன். பெற்றோரை மகிழ வைத்தேன். திருமணத்தால் மனைவியானேன். கணவனை மகிழ வைத்தேன். ஆனால் இப்பொழுது தாயென்று பெயர் மட்டும் உண்டு. ஆனால் அந்தப் பதவி?

ஆலவாயண்ணலைத் தொழுது உலகம் சுற்றினேன். அழகெலாம் துறந்து வற்றினேன். ஆயினும் தீந்தமிழைச் சிவன் காலடியில் ஊற்றினேன். துன்பம் என்று வந்தவர்களை எல்லாம் தேற்றினேன். நடந்தேன். நடந்தேன். நடந்து கொண்டேயிருந்தேன். நோக்குமிடமிங்கும் நீக்கமின்றி நிறைந்தவனை வணங்கிக் கயிலையைச் சேர்ந்தேன். அந்த மலையே சிவலிங்கமாக நின்றது. இதில் எப்படி காலால் ஏறுவது என்று தலையால் ஏறினேன்.

வற்றிப் போய் உடலெல்லாம் நாறிய என்னை.....உடையெல்லாம் விழுந்து உடலெல்லாம் தெரிந்தாலும் கால் படாது தலையாலே கயிலையை ஏறிய என்னை....அம்மையே என்று அழைத்தார் செஞ்சடையர். அன்று மதுரையில் கேட்ட சொல்லல்ல இது. தாந்தோன்றியே அம்மையே என்று அழைத்த சொல்லல்லவா! தன்னைத்தான் தோன்றி, அதிலிருந்து உலகம் தோன்றி, உலகத்தில் உயிர் தோன்றி, அந்த உயிர்களுக்கெல்லாம் அருள் தோன்றிய அற்புதக் கனியானது என்னை அம்மையே என்று அழைத்த அழைப்பில் நான் யார் என்று தெரிந்து போனது. ஆம். நான் தாய். நான் தாய்தான். தாயேதான்.

அம்மையே அப்பா என்று உலகம் அழைக்கும் பெருந்தேவனின் தாயன்பு எனக்குத் தாய் அன்பை உணர்த்திய அந்தப் பொழுதினிலேயே எல்லாம் மறந்தும் போனது. மறைந்தும் போனது. தான் போய் ஊன் போய் நான் போய் என்னிலிருந்து ஒவ்வொன்றாகப் போய் பிறப்பும் இறப்பும் போய் எல்லாம் ஓங்காரச் சிவவொலியாகி எங்கும் நிறைந்து பரவசமானது. சிவ! சிவ! சிவ!

அன்புடன்,
கோ.இராகவன்

vckannan
10-08-2006, 11:08 AM
காரைக்கால் அம்மயாரோட கதைய சொல்லறிங்க.

தன்னோட அழகு வேற யாருக்கும் சலனம் வராத மாதிரி பேயுரு பெற்றாங்க அந்த அம்மை அதுக்கு பின்னாடி

ஈசனே அம்மயேனு அழைச்ச பெரும் ஞானி. பக்தியில் ஞானம் சித்திப்பதும் இறைவழிஅடையவும் காலமுண்டு.

பல ஞானியார் வாழ்கையில்ல ஞானம் வரு முன் பெரும்பாலும் இல்வாழ்க்கையில கழ்டப்பட்டுத்தான் இருக்காங்க

என்றைக்கு ஒரு கனியை வரவழைச்சங்களோ அன்றே அவங்க மேனிலையை அடைஞ்சுட்டங்க. அப்பறம் எப்படி அந்த கணவனால கணவனா வாழ முடியும். சகியோட வாழலாம் சக்தியோட வாழ முடியுமா சாமன்யனால?
உலக கடமைக்காக (கர்மா) கொஞ்ச நாள் அந்த வேடம் வேற என்ன?

அது சரி
"பேய் ஆனாலும் தாய்" இந்த மொழிக்கு புது அர்த்தமும் கிடச்சுது இன்னைக்கு. (நன்றி உங்களுக்கு)
பேயும் தாயும் காரைக்கால் அம்மையே.

இளசு
10-08-2006, 10:42 PM
ராகவன்

உங்கள் பணி இணையற்றது.

அம்மையின் கதையை அவரே சொல்லும்விதம் அழகான வாக்கியங்களால் ஒரு மாலையாய்த் தொடுத்த கைகளுக்கு பரிசு தரவேண்டும்.

அம்மையாய்க் காண்பவளை மட்டுமல்ல
அழகில், அறிவில், ஆற்றலில் - எதிலும் தன்னை விட உயர்ந்த நிலையில் உள்ள பெண்ணிடமும் இந்த ' காம்ப்ளக்ஸ்'
ஆண்களுக்கு எளிதில் வந்துவிடுகிறது.

(சூரிய காந்தி)

உயரம், வயது, படிப்பு எல்லாவற்றிலும் குறைந்தவளாகவே
ஜோடி தேடும் பண்பாடு - ஆண்களின் தனிச்சொத்து.

ஒரு தாட்சர் மட்டுமே அங்கொன்றும் - இங்கொன்றுமாய்..

ஆனால் ஆயிரமாயிரம் செல்லம்மா, கமலம்மாக்கள்..

தாமரை
11-08-2006, 02:59 AM

ஆம். அப்படி ஒரு நிகழ்ச்சி என் வாழ்விலும் நிகழ்ந்தது. ,,,

இதைப்படிச்சதும் திகீர்னு ஆயிடுச்சு... ராகவனுக்கா? கல்யாணமா இந்த ஜன்மத்திலான்னு..? மேல படிச்ச பின்னாலதான் இது காரைக்கால் அம்மையார்னு தெரிஞ்சு நிம்மதி ஆச்சு...

இந்தக் கதையை இப்ப இன்றைய சூழ்நிலைக்கு திருப்புவோம்..

கணவன் கேட்க.. மனைவி அப்பா வீட்டிலிருந்து வாங்கித் தருகிறாள்...:D :D

கணவன் தங்கம் ன்னு சொன்னாலும் தங்குமான்னு பெண் மனசு டவுட்டாத்தான் பார்க்கும்..

அப்பா செம்பு ன்னு சொன்னாலும், செம்பூ - செழுமையான் சிவந்த பூன்னு எடுத்துகிட்டு கொண்டாடும்.

கணவன் தாயேன்னு சொன்னப்ப வராத சந்தோஷம் அப்பன் அம்மையேன்னு சொன்னப்ப வந்தது. (நம்ம ஓவியாவை அம்மையேன்னு அழைச்சுப் பாருங்க தெரியும்..:rolleyes: :rolleyes: :rolleyes: )

கதையைக் கேட்டு விட்டு அனிருத் கேட்ட சந்தேகம்..

அப்பா அம்மையார் ஏன் தலையால் நடக்கணும்.. கயிலையில் கால்படக் கூடாது அவ்வளவுதானே!.. பேய்க்குத்தான் கால்கிடையாதே :D :D அப்புறம் அவங்க ஏன் கவலைப் படணும்:confused: :confused: :confused:

பதில் சொல்ல பரம்ஸ் வரணுமா, நீங்களே சொல்லிடறீங்களா?

gragavan
11-08-2006, 04:54 AM
ஆம். அப்படி ஒரு நிகழ்ச்சி என் வாழ்விலும் நிகழ்ந்தது. ,,,

இதைப்படிச்சதும் திகீர்னு ஆயிடுச்சு... ராகவனுக்கா? கல்யாணமா இந்த ஜன்மத்திலான்னு..?
முடிவே செஞ்சிட்டீங்களா! :D :D :D :D

gragavan
11-08-2006, 05:04 AM
காரைக்கால் அம்மயாரோட கதைய சொல்லறிங்க.

தன்னோட அழகு வேற யாருக்கும் சலனம் வராத மாதிரி பேயுரு பெற்றாங்க அந்த அம்மை அதுக்கு பின்னாடி

ஈசனே அம்மயேனு அழைச்ச பெரும் ஞானி. பக்தியில் ஞானம் சித்திப்பதும் இறைவழிஅடையவும் காலமுண்டு.

பல ஞானியார் வாழ்கையில்ல ஞானம் வரு முன் பெரும்பாலும் இல்வாழ்க்கையில கழ்டப்பட்டுத்தான் இருக்காங்க

என்றைக்கு ஒரு கனியை வரவழைச்சங்களோ அன்றே அவங்க மேனிலையை அடைஞ்சுட்டங்க. அப்பறம் எப்படி அந்த கணவனால கணவனா வாழ முடியும். சகியோட வாழலாம் சக்தியோட வாழ முடியுமா சாமன்யனால?
உலக கடமைக்காக (கர்மா) கொஞ்ச நாள் அந்த வேடம் வேற என்ன?

ஏன் முடியாது கண்ணன். திருஞானசம்பந்தர் செய்யாத அற்புதமா? எத்தனையோ குழந்தைகள் அழுகை கொண்ட போதெல்லாம் வராமல் இந்தக் குழந்தையின் அழுகையைத் தொழுகை என்று கொண்டு வரவில்லையா உலகமாதேவி. அந்தச் சம்பந்தரையும் ஒரு பெண் அஞ்சாமல் மணந்து கொள்ளத்தானே செய்தாள்.அது சரி
"பேய் ஆனாலும் தாய்" இந்த மொழிக்கு புது அர்த்தமும் கிடச்சுது இன்னைக்கு. (நன்றி உங்களுக்கு)
பேயும் தாயும் காரைக்கால் அம்மையே. அப்படிப் போடுங்க.

தாமரை
12-08-2006, 03:16 AM
அட இந்தக் கதையை இன்றைய தேதிக்கு மாத்துவோம்.. புனித வதியாரைப் போன்ற மனைவி இருந்தால் கணவன் ஓடிப்போவானா இல்லை மாம்பழ மண்டி ஆரம்பிப்பானா???:confused: :confused: :confused:

கணவன் மனைவியிடம் பணம் கொடுக்க கை துறுதுறுத்த அவள் சுடிதாரோ பட்டுப்புடைவையோ வாங்கி பணம் குறைந்துவிட...

கணவன் கேட்கும்போது அவளது தந்தையிடம் சென்று வாங்கி வந்தால்???:confused: :confused: :confused:

கணவர் இரண்டாவது கனி கேட்டபோது புனிதவதியார் ஏன் தான் சிவனடியார்க்கு கொடுத்ததாக சொல்லவில்லை? அது என்ன மறைக்கப்பட வேண்டிய விஷயமா? பசி என்றதும் கொடுக்க அவ்வீட்டில் கொடுக்க அவ்விரு மாங்கனிகளைத் தவிர வேறு ஒன்றுமில்லையா? புனிதவதியாரின் குடும்பம் நன்னிலையில் இருந்த வியாபாரக் குடும்பமாயிற்றே!!! கதைகேட்டால் சந்தேகம் கேட்கக் கூடாது என்பது இல்லையே..

மாம்பழத்தின் ருசி மாற்றம் அறிந்தவன் மாதுளம்பழத்தின்(மாது+உள்ளம்+பழம்) பசி மாற்றம்(பக்திமார்க்கம்) அறிந்தான்.. உள்ளமிளகாயோ(உள்ளம் இளகாயோ) என்று கேட்டு வாழக்காய்ந்தவளை உடல்காய (மிளகாயை வற்றலாக்கி) மனம்மலர வைத்தான்..

பார்க்கலாம் என்று கேட்டதாலேயே பார்க்க மட்டும் கிடைத்தது

செல்வனும் ஈசனும் ஒன்று போலத்தான் போல.. சொன்னதை செய்கிறாரே:D :D :D (புதிரோ புதிரில் நாற்காலி நடந்த ரகசியம் பிரதீப்பும் ராகவனும் மறந்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.. தமிழ் வல்லார்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் போலிருக்கிறது..)

gragavan
12-08-2006, 05:05 AM
தாமரை நல்ல கேள்விகள். ஏன் வந்தவருக்கு மாம்பழத்தைக் குடுக்க வேண்டும்? ஒன்றுமில்லாத வீடில்லையே அது. அதுதானே உங்கள் ஐயம்.

வேலையாள் வந்து தந்து சென்ற மாம்பழக்கூடை கையில் இருக்கையில் பசியென்று வந்தார் ஒருவர். படக்கென்று ஒன்றைத் தந்தார். அதாவது பசி என்று வந்தால் எதையாவது போட்டு அனுப்பக் கூடாது. பசி உடனே அணைக்க வேண்டிய பிணி என்று புனிதவதியார் கருதியதுதானே காரணம். அதுவுமின்றி அது இறைவன் சித்தம். பழத்தைத் தர வைத்து அதன் வழியாகத்தானே திருவிளையாடல் நடக்க வேண்டும்.

இரண்டாவது கேள்வி. புனிதவதியார் ஏன் கணவனிடம் மறைக்க வேண்டும்? மறைக்க வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு இல்லை. இருந்திருந்தாலும் இரண்டாவது பழத்தைச் சுவையாக இருக்கிறதே என்று சொன்னதும் "நீங்க தந்ததுதாங்க அது" என்று சொல்லியிருக்கலாமே. கணவன் கேட்கிறாரே..இப்பொழுது அந்த இன்னொரு கனியும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்த பொழுதிலேயே ஈசன் கனிவோடு கனி கொடுத்தார். அந்தக் கருணையில் ஆழ்ந்த மனத்தில் வேறு உணர்வு இருந்திருக்குமா? பேரின்பத்தில் இருந்த அவருக்கு கேட்டால் கேட்டதைச் சொன்னார். அவ்வளவுதான்.

gragavan
12-08-2006, 05:09 AM
அட இந்தக் கதையை இன்றைய தேதிக்கு மாத்துவோம்.. புனித வதியாரைப் போன்ற மனைவி இருந்தால் கணவன் ஓடிப்போவானா இல்லை மாம்பழ மண்டி ஆரம்பிப்பானா???:confused: :confused: :confused:

கணவன் மனைவியிடம் பணம் கொடுக்க கை துறுதுறுத்த அவள் சுடிதாரோ பட்டுப்புடைவையோ வாங்கி பணம் குறைந்துவிட...

கணவன் கேட்கும்போது அவளது தந்தையிடம் சென்று வாங்கி வந்தால்???:confused: :confused: :confused:அன்றைக்கும் அதுதான் நடந்திருக்கிறது தாமரை. ஈசன் அம்மையப்பன் அல்லவா. அதனால்தான் மண்ணப்பனை விட்டு விண்ணப்பனை விண்ணப்பம் வேண்டி புனிதவதியார் கனி கொண்டு வந்தார். காலம் மாறினாலும் கதை மாறவில்லை. அவ்வளவுதான்.மாம்பழத்தின் ருசி மாற்றம் அறிந்தவன் மாதுளம்பழத்தின்(மாது+உள்ளம்+பழம்) பசி மாற்றம்(பக்திமார்க்கம்) அறிந்தான்.. உள்ளமிளகாயோ என்று கேட்டு வாழக்காய்ந்தவளை உடல்காய மனம்மலர வைத்தான்..
நல்ல விளக்கம்.பார்க்கலாம் என்று கேட்டதாலேயே பார்க்க மட்டும் கிடைத்தது

செல்வனும் ஈசனும் ஒன்று போலத்தான் போல.. சொன்னதை செய்கிறாரே:D :D :D (புதிரோ புதிரில் நாற்காலி நடந்த ரகசியம் பிரதீப்பும் ராகவனும் மறந்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.. தமிழ் வல்லார்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் போலிருக்கிறது..)தமிழ் வல்லார் யார்? வல்லாளர் யார்? வல்லாழர்? சொல்லாளர் யார்? சொல்லாழர் யார்? விளக்குவீராயின் அனைவரும் தெரிவர்.

தாமரை
12-08-2006, 05:32 AM
தாமரை நல்ல கேள்விகள். ஏன் வந்தவருக்கு மாம்பழத்தைக் குடுக்க வேண்டும்? ஒன்றுமில்லாத வீடில்லையே அது. அதுதானே உங்கள் ஐயம்.

வேலையாள் வந்து தந்து சென்ற மாம்பழக்கூடை கையில் இருக்கையில் பசியென்று வந்தார் ஒருவர். படக்கென்று ஒன்றைத் தந்தார். அதாவது பசி என்று வந்தால் எதையாவது போட்டு அனுப்பக் கூடாது. பசி உடனே அணைக்க வேண்டிய பிணி என்று புனிதவதியார் கருதியதுதானே காரணம். அதுவுமின்றி அது இறைவன் சித்தம். பழத்தைத் தர வைத்து அதன் வழியாகத்தானே திருவிளையாடல் நடக்க வேண்டும்.

இரண்டாவது கேள்வி. புனிதவதியார் ஏன் கணவனிடம் மறைக்க வேண்டும்? மறைக்க வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு இல்லை. இருந்திருந்தாலும் இரண்டாவது பழத்தைச் சுவையாக இருக்கிறதே என்று சொன்னதும் "நீங்க தந்ததுதாங்க அது" என்று சொல்லியிருக்கலாமே. கணவன் கேட்கிறாரே..இப்பொழுது அந்த இன்னொரு கனியும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்த பொழுதிலேயே ஈசன் கனிவோடு கனி கொடுத்தார். அந்தக் கருணையில் ஆழ்ந்த மனத்தில் வேறு உணர்வு இருந்திருக்குமா? பேரின்பத்தில் இருந்த அவருக்கு கேட்டால் கேட்டதைச் சொன்னார். அவ்வளவுதான்.

அய்யா அவர் சிவனடியார்க்கு மாம்பழம் கொடுத்தது எனக்குப் புரிகிறது.. ஆனால்

கணவர் இரண்டாம் மாம்பழம் கேட்டபொழுது இரண்டாம் மாம்பழத்தை சிவனடியார்க்கு கொடுத்து விட்டேன் என சொல்லி இருக்கலாமே!..(அதுதான் இதுன்னு செந்தில் பாணியில் சொல்லாமல்) அவரின் கணவர் ஒன்றும் நாத்திகரோ, சிவனை வெறுப்பவரோ அல்லவே.. அவர் கணவரிடம் சொல்லத் தயங்கி இறைவனிடம் பிரார்த்தித்ததைக் கண்டால்.. கனவரிடம் அச்சம் இருந்ததைக் காட்டுகிறதே..

உண்மை சொல்ல தயங்கி அப்பனைத் தொந்திரவு செய்வதை பெண்கள் அன்றிலிருந்து இன்றுவரை கடைபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது உண்மைதானே!!!!:D :D

gragavan
14-08-2006, 09:04 AM
கனவரிடம் அச்சம் இருந்ததைக் காட்டுகிறதே..

உண்மை சொல்ல தயங்கி அப்பனைத் தொந்திரவு செய்வதை பெண்கள் அன்றிலிருந்து இன்றுவரை கடைபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது உண்மைதானே!!!!:D :Dஅந்த அளவிற்கு கணவர்கள் தங்கள் மனைவியரிடமிருந்து தள்ளியிருக்கிறார்கள் என்பது காரணமோ! :D :D :D

sarcharan
14-08-2006, 11:34 AM
தாய்க்குப்பின் தாரம்

ஆம் தாயை பின் மாதிரி குத்திக்கொண்டிருப்பது தாரம் தானே....

ஓவியா
16-08-2006, 07:59 PM
புனிதவதி அம்மையாரின் கதையை நான் படித்ததுண்டு..
பலமுறை சினிமாவில் பார்ததும் உண்டு....
அருமையான உண்மைக்கதை

இப்பொழுது இங்கே நமக்காக மீண்டும் ஒரு முறை
பெண்ணின் பெருமையை பாடிய பக்திமான் ராகவனுக்கு
நன்றிகள்...

இலைமறைக்காய்போல் அழகான வாக்கியங்கள்,
முக்கியமாக யோசிக்கவேண்டிய நல்ல கருத்துக்கள்.
எழுத்தின் கோர்வை, ..............வர்ண்ணனை, ....
அனைத்தும் பதிப்பில் சிறப்பகவே உள்ளது.......

சபாஷ் ராகவன்.....:D

ஓவியா
16-08-2006, 08:34 PM
கணவன் தாயேன்னு சொன்னப்ப வராத சந்தோஷம் அப்பன் அம்மையேன்னு சொன்னப்ப வந்தது.
(நம்ம ஓவியாவை அம்மையேன்னு அழைச்சுப் பாருங்க தெரியும்..:rolleyes: :rolleyes: :rolleyes: )

முதலில் அண்ணனுக்கு எனது நன்றிகள்..
(உரிமையுடன் நம்ம ஓவியானு எழுதியதர்க்கு.....:D :D )

எங்கள் வீட்டில் 65வயதிர்க்கு மேல் ஆனவர்களைதான் அம்மை, அம்மையே, அம்மையார்,
அப்படினு ஓவர் மரியாதையா அழைப்போம்...
(எனக்கு அதில் பாதிகூட இல்லை...:eek: :eek:
அதற்க்குள் அம்மையேன்னு ஆக்கியாச்சா......:D :D :D )

சரி
ஆசையா இருந்தா
ஆசைபடுபவர்கள் எல்லாம் கூப்பிட்டு கொள்ளலாம்......:)

gragavan
17-08-2006, 06:57 AM
தாய்க்குப்பின் தாரம்

ஆம் தாயை பின் மாதிரி குத்திக்கொண்டிருப்பது தாரம் தானே....அந்தப் பின்னே கண்வந்தான்னு கூட்டத்துல யாரோ சொல்றாங்க...

gragavan
17-08-2006, 07:01 AM
புனிதவதி அம்மையாரின் கதையை நான் படித்ததுண்டு..
பலமுறை சினிமாவில் பார்ததும் உண்டு....
அருமையான உண்மைக்கதை

இப்பொழுது இங்கே நமக்காக மீண்டும் ஒரு முறை
பெண்ணின் பெருமையை பாடிய பக்திமான் ராகவனுக்கு
நன்றிகள்...

இலைமறைக்காய்போல் அழகான வாக்கியங்கள்,
முக்கியமாக யோசிக்கவேண்டிய நல்ல கருத்துக்கள்.
எழுத்தின் கோர்வை, ..............வர்ண்ணனை, ....
அனைத்தும் பதிப்பில் சிறப்பகவே உள்ளது.......

சபாஷ் ராகவன்.....:Dபடித்துப் பாராட்டிய ஓவியாவிற்கு நன்றி பல.

gragavan
17-08-2006, 07:02 AM
முதலில் அண்ணனுக்கு எனது நன்றிகள்..
(உரிமையுடன் நம்ம ஓவியானு எழுதியதர்க்கு.....:D :D )

எங்கள் வீட்டில் 65வயதிர்க்கு மேல் ஆனவர்களைதான் அம்மை, அம்மையே, அம்மையார்,
அப்படினு ஓவர் மரியாதையா அழைப்போம்...
(எனக்கு அதில் பாதிகூட இல்லை...:eek: :eek:
அதற்க்குள் அம்மையேன்னு ஆக்கியாச்சா......:D :D :D )

சரி
ஆசையா இருந்தா
ஆசைபடுபவர்கள் எல்லாம் கூப்பிட்டு கொள்ளலாம்......:) தாமரைய எங்க? எங்க? எங்க?

தாமரை
09-09-2009, 02:10 PM
இன்றைய கதாசிரிய இளவல்களுக்காக!!!