PDA

View Full Version : 3. எதுவும் சொல்லனுமான்னு கேட்டேன்gragavan
04-08-2006, 06:01 AM
தேடினேன் வந்தது பாடலைச் சிறப்பாகப் பாடி முடித்ததுமே ஜானகி அவர்கள் எழுந்து வந்து பளார் என்று சுசீலாவின் கன்னத்தில் அறைந்தார்கள். சுசீலா மட்டுமல்ல மொத்த அரங்கமும் ஒரு நொடி அமைதியானது. உடனே மைக்கைப் பிடித்த ஜானகி, "படத்துல இந்தப் பாட்டு முடிஞ்சதும் சிவாஜி கே.ஆர்.விஜயாவை அறைவாரு. அதான் நானும் அது மாதிரி செஞ்சேன். இந்தப் பாட்டு என்னோட பையனுக்கு ரொம்பவும் பிடிச்ச பாட்டு"னு சொன்னாங்க. ஆகா! பொய்யடி அடிச்சிருக்காங்கன்னு புரிஞ்சதும் எல்லாருக்கும் மகிழ்ச்சி.

பி.சுசீலாவும் கிண்டலை விடவில்லை. "என்னடா அறைஞ்சிட்டாங்களே....வயசு காலத்துல தடுமாறி விழுந்துட்டேன்னா...இன்னும் நெறையா பாட்டு இருக்கே. யார் பாடுறதுன்னு பயந்துட்டேன்." என்று சொல்லிச் சிரித்தார்.
அரங்கமே ஒரு மெல்லிய நகைச்சுவையலையில் இருக்கும் பொழுது தொடர்ந்து சொன்னார். "ஜானகி அம்மா பையன் முரளி கிருஷ்ணா இந்தப் பாட்ட மொபைல்ல விரும்பிக் கேட்டார். அதான் பாடினேன்"னு உரிமையை உவப்போடு சொன்னார்.

சுசீலாம்மா என்னென்ன பாட்டுப் பாடுவாங்கன்னு கமலாவுக்குத் தெரிஞ்சிருந்தது. ஆனா இந்தப் பாட்டு அதுல இல்லையேன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தவங்களுக்கு இந்தப் பாட்டு உள்ளே நுழைந்த விவரம் புரிந்தது.

இந்தச் சிறிய விளையாட்டுகள் அடங்கியதும் அடுத்து ஒரு மிகக்கடினமான பாடலைப் பாடினார் சுசீலா. மெல்லிசை மன்னரின் இசையில் கனமான ராகத்தின் அடிப்படையில் எக்கச்சக்க சங்கதிகளோடு உள்ள ஒரு இனிய பாடல். கவியரசர் எழுதிய தீந்தமிழ்ப் பாடல். கர்ணன் என்ற படத்தில் இடம் பெற்ற "கண்கள் எங்கே? நெஞ்சமும் எங்கே? கண்ட போதே சென்றன அங்கே!" என்ற பாடல்தான் அது. பாடலைக் கேட்க இங்கே (http://psusheela.org/audio/ra/tamil/all/kangalenge_nenjamum.ram) சுட்டவும்.

இந்தப் பாடலில் வீணையொலி நிறைய வரும். மெல்லிசை மன்னரின் இசையில் இசைத்தட்டில் கேட்கும் பொழுது அது பிரம்மாண்டமாக இருக்கும். அந்த உணர்வை மேடையில் இசைக்கலைஞர்கள் கொண்டு வந்திருந்தார்கள். அவர்களுக்கு என்னுடைய பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதகப் பறவைகள் குழுவை நடத்தி வரும் சங்கர் அடுத்த பாடலை ஜானகியோடு பாடினார். என்ன பாடல் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். இளையராஜா இசை. வைரமுத்து பாடல். பாலு மகேந்திரா படம். அர்ச்சனா அந்தப் பாட்டில் நாயகி. இன்னும் எது சொன்னாலும் பட்டென்று சொல்லி விடுவீர்கள். ஆம். பானுச்சந்தர் கதாநாயகன். இப்பொழுது பாட்டு தெரிந்து விட்டதுதானே.

எஸ்.பி.பாலசுப்பிரமனியமும் எஸ்.ஜானகியும் பாடிய "ஓ! வசந்த ராஜா! தேன் சுமந்த ரோஜா!" என்ற பாடல்தான். பாடல் வரிகளும் மிகச் சிறப்பு.
"வெண் பஞ்சு மேகங்கள்
உன் பிஞ்சுப் பாதங்கள்
மண் தொட்டதால் இங்கே
செவ்வானம் போல் ஆச்சு
விண் சொர்க்கமே பொய் பொய்
என் சொர்க்கம் நீ கண்ணே!
சூடிய பூச்சரம் வானவில் தானோ"
நல்ல பாடல். ஜானகி பாடுவதைப் பற்றிச் சொல்ல வேண்டுமா. சங்கரும் முடிந்த அளவிற்குச் சிறப்பாக பாடினார். கூட்டத்தார் மிகவும் ரசித்தார்கள்.

ஒன்று சொல்ல வேண்டும். நிகழ்ச்சி தொடங்கி நெடு நேரம் ஆன பிறகும் நிறைய பேர் நேரம் கழித்து வந்து அங்கும் இங்கும் நகர்ந்து மறைத்து சத்தம் கொடுத்து தொந்தரவு கொடுத்தார்கள். இல்லாத இடத்திற்கு இந்தக் கடைசியிலிருந்து அந்தக் கடைசி தேடினார்கள். ஒரே தொந்தரவு. நடுநடுவில் செல்போனில் வேறு...."இது என்ன பாட்டு சொல்லு.....ஒனக்குப் பிடிக்குமே...ஹி ஹி ஹி" வேறு யார்? எனக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த ஒரு ஆள். மயிலாருக்குப் பயங்கர ஆத்திரம். திரும்பிக் கொத்தியிருப்பார். ஆனால் பாட்டைக் கேட்பது கெட்டு விடுமோ என்று அமைதியாக இருந்தார்.

"காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே" ஆம். அதுதான் ஜானகி பாடிய அடுத்த பாடல். இந்தப் பாட்டு ஜானகிக்காகவே. வேறு யார் பாடினாலும் சிறப்பாக இருக்காது என்பது என் கருத்து. அதை மீண்டும் நிரூபித்தார் ஜானகி.

இதற்குள் சிறப்பு விருந்தினர்கள் வரத் தொடங்கியிருந்தார்கள். பி.பீ.ஸ்ரீநிவாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், நடிகர் ஜெயராம், நடிகை அம்பிகா ஆகியோர் அந்த பொழுதில் வந்திருந்தார்கள். அவர்கள் மேடைக்கு முன்னால் அமர்த்தப்பட்டார்கள்.

இந்த அறிவுப்புகள் முடிந்ததும் பி.சுசீலா எழுந்து மைக் முன் நின்றார். எஸ்.ஜானகியும் எழுந்து சுசீலாவின் அருகில் வந்தார். "எதுவும் சொல்லனுமா?" என்று ஜானகியைப் பார்த்துக் கேட்டார். "இல்ல எதுவும் சொல்லனுமா? பாடுறதுக்கு முன்னாடின்னு கேட்டேன்" என்று இரண்டாம் முறையாக சுசீலா கேட்டார். "ஆமாம். கண்டிப்பாச் சொல்லனும்"னு என்று சுசீலாவிடம் சொன்னவர் கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார்......

தொடரும்.....

Mano.G.
04-08-2006, 06:46 AM
ஐயோ தம்பி ராகவன்,
சன் டீவி சீரியலை விட
படு சஸ்பன்ஸாக இருக்கே தம்பி
மேலும் கொண்டு செல்லுங்க
இதவச்சு நம்ம மன்றத்த பாப்புலரலாக்கலாம்.

மனோ.ஜி

மதி
04-08-2006, 06:52 AM
மறுபடியும் சஸ்பென்ஸா...!?
ஹ்ம்ம்..திங்கட்கிழமை அடுத்த பகுதி வரலேனா...
பெங்களூரில் இருந்து என்ன அனுப்பலாம்னு யோசிக்க வேண்டியிருக்கும்..!

pradeepkt
04-08-2006, 09:42 AM
தொடருங்கள் என்பதைத் தவிர வேறெதும் சொல்ல விரும்பவில்லை...
வேண்டுமானால் மரியாதையாகச் சீக்கிரம் தொடர்கிறீர்களா இல்லையா என்று தாழ்மையுடன் மிரட்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

gragavan
04-08-2006, 12:08 PM
ஐயோ தம்பி ராகவன்,
சன் டீவி சீரியலை விட
படு சஸ்பன்ஸாக இருக்கே தம்பி
மேலும் கொண்டு செல்லுங்க
இதவச்சு நம்ம மன்றத்த பாப்புலரலாக்கலாம்.

மனோ.ஜிஐயோ அண்ணா...சன் டீவியில் தொடர்கள் பார்ப்பதேயில்லை. ஒரு நாள் தப்பித் தவறி உட்கார்ந்தாலும் அடுத்து ஒருவனை எப்படிக் கெடுப்பது, சதி செய்வது எப்படி, பெண்ணை மட்டமாக்குவது எப்படி, ஆசிட் வீசுவது எப்படி என்று விதவிதமாகக் கற்றுத் தருகிறார்கள்.

gragavan
04-08-2006, 12:09 PM
மறுபடியும் சஸ்பென்ஸா...!?
ஹ்ம்ம்..திங்கட்கிழமை அடுத்த பகுதி வரலேனா...
பெங்களூரில் இருந்து என்ன அனுப்பலாம்னு யோசிக்க வேண்டியிருக்கும்..!திங்கக் கிழம அடுத்த பகுதி வர்ரது சந்தேகந்தான்னு இப்பத் தோணுது. அனேகமா செவ்வாக்கெழம வந்துரும்.

இனியவன்
04-08-2006, 04:37 PM
சுவைபடச் சொல்கிறீர்கள் ராகவன்.
தொடரங்கள் தொய்வின்றி.

இளசு
04-08-2006, 11:52 PM
இந்த விருந்துக்கு நடுவில்
செல்போன் பூச்சிகள் கிறீச்சிடலா?
அடப்பாவிகளா?


கண்கள் இங்கே....? என்ன ஒரு பாடல்..

குழலும் குழைந்து வருமே...


காற்றில் - ஜானகிக்காகவே ஒரு பாடல்... என் கருத்தும் அதுவே..


பின்னுறீங்க ராகவன். பாராட்டுகள்..

(சீரியல்கள் பற்றிய உங்கள் கருத்துடன் 110% ஒத்துப்போகிறேன்..)

பரஞ்சோதி
05-08-2006, 12:09 PM
ஆஹா!

அண்ணா, கலக்குங்க. இனிமேல் உங்க ராஜ்ஜியம் தான்.

பரஞ்சோதி
05-08-2006, 12:12 PM
ஐயோ அண்ணா...சன் டீவியில் தொடர்கள் பார்ப்பதேயில்லை. ஒரு நாள் தப்பித் தவறி உட்கார்ந்தாலும் அடுத்து ஒருவனை எப்படிக் கெடுப்பது, சதி செய்வது எப்படி, பெண்ணை மட்டமாக்குவது எப்படி, ஆசிட் வீசுவது எப்படி என்று விதவிதமாகக் கற்றுத் தருகிறார்கள்.

இன்னும் விட்டுவிட்டிங்களே, ஓருவேளை பார்க்கலையோ

கர்ப்பத்தை எப்படி கலைப்பது, அடுத்தவன் மனைவியை எப்படி தன்வசமாக்குவது, தூக்கத்தில் இருப்பவரை எப்படி கொல்வது, மருமகளை எப்படி வீட்டை விட்டு விரட்டுவது, போலிஸ்காரர்கள் எப்படி மக்களை துன்புறுத்துவது, இப்படி பல விசயம் இருக்குதே.

pradeepkt
05-08-2006, 05:50 PM
இன்னும் விட்டுவிட்டிங்களே, ஓருவேளை பார்க்கலையோ

கர்ப்பத்தை எப்படி கலைப்பது, அடுத்தவன் மனைவியை எப்படி தன்வசமாக்குவது, தூக்கத்தில் இருப்பவரை எப்படி கொல்வது, மருமகளை எப்படி வீட்டை விட்டு விரட்டுவது, போலிஸ்காரர்கள் எப்படி மக்களை துன்புறுத்துவது, இப்படி பல விசயம் இருக்குதே.
இது அத்தனையும் உங்களுக்கும் தெரிஞ்சுருக்குதே...
அண்ணா, எத்தனை தொடர்களைத் தொடர்கிறீர்கள்???? :angry: :angry: