PDA

View Full Version : 2. சுசீலாவை ஜானகி ஏன் அறைந்தார்?



gragavan
03-08-2006, 09:04 AM
பிரபல திரையிசைப் பாடகி பி.சுசீலா பாடத் தொடங்குகிறார் என்ற பரபரப்பில் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் யாரென்று கவனிக்கவில்லை. பாப்கார்னும் கட்லெட்டும் மணமணக்கத் திரும்பிப் பார்த்தால் நமது மயிலார். என்னைக் கண்டு கொள்ளவேயில்லை. நிகழ்ச்சியில் மூழ்கியிருந்தார். நானும் கவனத்தை மேடையின் பக்கம் திருப்பினேன்.

நிகழ்ச்சியைத் துவக்கும் பாடல் அல்லவா. பிரம்மலோகத்துக் கலைவாணியை வாழ்த்திச் சென்னைக் கலைவாணி தேன் தமிழ்ச் சொல்லெடுத்துப் பாடிய பாடல். "மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி! தேன் தமிழ்ச் சொல்லெடுத்துப் பாட வந்தேன் அம்மா! பாட வந்தேன்! அம்மா பாட வந்தேன்!"

இந்தப் பாடல் திரைப்பாடல் அல்ல. பக்தியிசைப் பாடல். சோமு-காஜா என்ற இரட்டை இசையமைப்பாளர்கள் இசையில் வெளிவந்த இனிய பாடல்களின் தொகுப்பிலுள்ள பாடல். எல்லாப் பாடல்களுமே இனியவை.

(பக்திப் பாடல் என்பதால் மயிலார் கொஞ்சம் ஓவர் உணர்ச்சிவசப்பட்டிருந்தார். பாப்கார்ன்களை நான் எடுத்ததைக் கூட அவர் கவனிக்கவில்லை.)

எழுபது வயதைக் கடந்த சுசீலா அவர்களின் குரலில் சற்று அயர்வு இருந்தது உண்மைதான். ஆனால் இனிமையும் திறமையும் வளமையும் சிறிதும் குறையவில்லை. பாடலில் வரும் வீணையொலி இனிதா! சுசீலா அவர்களின் குரலொலி இனிதா! ஒன்றுக்கொன்று சரியான இணை.
முதல் பாடலை முடித்ததும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த கூட்டம் கைதட்டி ஆரவாரித்தது. (மயிலார் தோகை விரித்தாடினார்.)

அடுத்த பாடலை ஜானகி அவர்கள் பாடுவார்கள் என நினைத்தேன். ஆனால் அடுத்த பாடலும் சுசீலா அவர்களே பாடினார்கள்.
தமிழில் புதுக்கவிதையைக் கொண்டு வந்தவர் பாரதி என்றால், அவருக்குப் பிறகு மெருகேற்றிச் சிறப்பித்தவர் பாரதிதாசன். அவருடைய கவிதை ஒன்றைத்தான் அடுத்து பாடினார். "தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! உயிருக்கு நேர்!"

மெல்லிசை மன்னரின் இனிய இசையில் வந்த சுவை மிகுந்த பாடல். தன்னுடைய தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழும் தெலுங்கும் தனது இரு கண்கள் என்று கூறிய பாடகி அல்லவா.....ஆகையால் உணர்வு ததும்பப் பாடினார்கள். "தமிழ் எங்கள் அசதிக்கு" என்று பாடுகையில் குரலில் உண்மையிலேயே அசதி தெரிந்தது. அது வயதினாலா? இல்லை பாவத்தினாலா? ஆனால் "அசதிக்குச் சுடர் தந்த தேன்" என்று பாடுகையில் அந்த அசதியெல்லாம் போய் சுடர் எழுந்து அதை உணர்த்த அவருடைய கையும் எழுந்தது. பாடுகின்றவருக்குப் பாட்டு புரிந்தால்தானே இதெல்லாம் நடக்கும்!

பழைய பாடலானாலும் மக்கள் ரசித்து ருசித்தனர் என்பது அவர்களின் கைதட்டலொலியிலிருந்தே தெரிந்தது. இரண்டு இனிய பாடல்களை சுசீலா அவர்கள் பாடி முடித்ததும் பாட வந்தார் ஜானகி அவர்கள். அவரது முதல் பாடல் என்னவாக இருக்கும் என்பது எல்லாருடைய ஆவல். எனக்கும்தான். சிங்கார வேலனே தேவா பாடல் அவருக்குப் பெயரும் புகழும் பெற்றுத்தந்த பாடல். அந்தப் பாடலையோ அல்லது அதுபோன்ற வேறு பாடலையோ பாடுவார் என நினைத்தேன்.

பாடல் துவங்கியது. முதலில் இசைக்கருவிகள் இசைந்தன. கேட்டதுமே இளையராஜா இசை என்று தெரிந்து விட்டது. தெரிந்த பாடல் போல இருந்தது. "மாமனுக்குப் பரமக்குடி" பாட்டு மாதிரி இருந்தது. இதையா பாடப் போகிறார் என்று நினைக்கும் பொழுதே பாட்டு தெரிந்து போனது. ஜானகி அவர்களின் குரலும் எழுந்தது. "நான் வணங்குகிறேன்! இசையிலே தமிழிலே! நான் பாடும் பாடல் தேனானது! ரசிகனை அறிவேன்!" குரு படத்தில் இருந்து இந்தப் பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். பாடலை நானும் ரசித்தேன். (மயிலார் காலை மாற்றி மாற்றி வைத்து ஆடிக் கொண்டிருந்தார். அவர் மறைக்கிறார் என்று ஒருவர் கூட குற்றம் சொல்லவில்லை.)

அடுத்து ஒரு இனிய பாடல். மிகவும் இனிய பாடல். பாட்டு தொடங்கும் பொழுதே எல்லாருக்கும் பாட்டு தெரிந்து ஒரு துள்ளலும் மகிழ்ச்சியும் எல்லாரையும் பற்றிக் கொண்டது. ஜானகியின் குரல் தொடங்கியதுமே பாட்டுக்குள் எல்லாரும் மூழ்கி விட்டார்கள். ஆமாம். "சின்னச் சின்ன வண்ணக் குயில்...கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா" என்று ஜானகி அவர்கள் குரலால் கொஞ்சும் பொழுது யார்தான் மயங்காமல் இருக்க முடியும்! பின்னணி இசையும் மிகச் சிறப்பாக இசைக்குழுவினர் செய்தார்கள்.

அடுத்து பி.சுசீலா வந்தார். ஜானகி உருவாக்கி வைத்திருந்த உணர்விலிருந்து மக்களை தன்னுடைய குரலுக்கு இழுக்க வேண்டும். என்ன பாட்டை தேர்ந்தெடுப்பார் என்று நினைக்கிறீர்கள்? அது ஒரு அழகிய இனிய பாடல். தூங்குகிறவர்களைக் கூட தென்றலாக வருடி எழுப்பும் பாடல். இசைஞானியின் இசையில் வெளிவந்த அதியற்புதமான பாடல். "காலைத் தென்றல் பாடி வரும் ராகம் புது ராகம்" சுசீலாவின் குரலில் வெளி வந்தது. வைரமுத்து எழுதிய ஒரு அழகிய கவிதை. உயர்ந்த உள்ளம் என்ற படத்தில் இடம் பெற்ற பாடல். கூட்டம் சொக்கிப் போனது.

இப்படி எல்லாரையும் தென்றலாய் வருடிய பாடல் முடிந்ததும்...அடுத்த பாட்டு....சற்றுத் துள்ளலாக. இந்தப் பாட்டு இசை தொடங்கும் போதும் உடனே எல்லாருக்கும் தெரிந்து விட்டது. மெல்லிசை மன்னரின் இசையில் கவியரசர் இயற்றிய மிகப் பிரபலமான பாடல். "பார்த்த ஞாபகம் இல்லையோ! பருவ நாடகம் தொல்லையோ!" தென்றலைக் காட்டிய குரலில் இப்பொழுது உற்சாகமும் மகிழ்ச்சியும் கொப்பளித்தன. எப்படித்தான் அடுத்தடுத்து வெவ்வேறு பாவத்தை படக்கென்று கொண்டு வந்துவிடுகிறார்களோ! அதுவும் இவ்வளவு திறமையுள்ள பாடகிகளுக்கு சொல்லித் தரவா வேண்டும்?

(நல்லவேளையாக மயிலார் என்னைத் தொந்தரவு செய்யவேயில்லை. வழக்கமாக வெளியில் போனால் அது இது என்று தொந்தரவு செய்வார். ஆனால் இன்று ஒன்றும் கண்டுகொள்ளவேயில்லை)

அடுத்தது ஜானகியின் வரிசை. பாடி முடித்து விட்டு சிரமப் பரிகாரம் செய்வதற்காக உள்ளே சென்றார் பி.சுசீலா. படியில் ஏறுகையிலும் இறங்குகையிலும் சற்றுப் பிடிமானம் அவருக்குத் தேவைப்பட்டது. ஆனால் பாடுவதற்கு அவருக்கு எந்தப் பிடிமானமும் தேவையிருக்கவில்லை.

அலைகள் ஓய்வதில்லை படத்தில் "புத்தம் புதுக்காலை" என்ற பாடல். படத்தில் இல்லை. ஆனால் இசைத்தட்டுகளில் உண்டு. அந்தப் பாட்டைத்தான் அடுத்து பாடினார் ஜானகி. அதனைத் தொடர்ந்து நீங்கள் கேட்டவை படத்தில் வரும் "கண்ணன் வந்து பாடுகிறான்" என்ற பாடல். இரண்டும் மெல்லிசையில் மனதைக் கவர்ந்தனர்.

ஆளுக்கு இரண்டு பாடல்களாகப் பாடி வருகையில் சுசீலா அவர்களின் வரிசையில் அடுத்த பாடல் "தேடினேன் வந்தது!" மீண்டும் அரங்கத்தில் ஒரு துள்ளல். இந்தப் பாடலை சுசீலா பாடி முடித்ததும் ஜானகி எழுந்து வந்து சுசீலா அவர்களின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். ஏன்?

தொடரும்....

மயூ
03-08-2006, 09:34 AM
ஆகா!
இப்பிடி கவிட்டிட்டீங்களெ?????? ;-)

பரஞ்சோதி
03-08-2006, 10:16 AM
தொடரும் போட்டதற்கு உங்க தலையில் குட்டணும் போலிருக்குது.

சரி, ரொம்ப நல்லாவே இருக்குது, கொடுத்து வைத்த மகாராசன்.

pradeepkt
03-08-2006, 10:42 AM
யோவ் என்னதான் எங்க பொறாமையைத் தூண்டுற மாதிரி எழுதினாலும் இப்படியா சஸ்பென்ஸ் வைப்பாங்க...
அடுத்த பதிவு நாளைக்குள்ள வரலைன்னா வீட்டுக்கு ஆட்டோதான்... நினைவு வச்சிக்குங்க...

மதி
03-08-2006, 10:50 AM
அடடா..நல்ல சஸ்பென்ஸ்ல முடிச்சுட்டீங்களே..!
அது சரி..ஆட்டோன்னாலே இப்ப ஆந்திரா ஞாபகம் தான் வருது...!

pradeepkt
03-08-2006, 10:53 AM
அடடா..நல்ல சஸ்பென்ஸ்ல முடிச்சுட்டீங்களே..!
அது சரி..ஆட்டோன்னாலே இப்ப ஆந்திரா ஞாபகம் தான் வருது...!
ஏன் அடிக்கடி ஆட்டோலயே ஆந்திரா வந்துட்டுப் போறியா???

மதி
03-08-2006, 11:11 AM
நீங்க அனுப்பறதா இருந்தா வந்திட்டு போக ரெடி..
(பத்திரமா திருப்பி அனுப்பிடனும்..!)

இனியவன்
03-08-2006, 01:23 PM
நல்ல பதிவு ராகவன்.
தொடருங்கள்.

அறிஞர்
03-08-2006, 01:38 PM
தொடர்ச்சி வெகு அருமை....

ஆனால் நம்மூர் வார இதழ்கள் பாணியில் கொண்டு வந்து நிறுத்தி.. தொடரும் எனப்போட்டு விட்டீர்கள்... சீக்கிரம் தொடருங்கள்

ஓவியா
03-08-2006, 03:39 PM
ஆ...:D தாங்க முடியவில்லையே :D

ராகவன்,
ரொம்ப அழகாக வர்ண்ணித்து எழுதியுல்லீர்....ஆனால்
சஸ்பென்ஸ்ல முடிச்சுட்டீங்களே..!

நாளை லன்டனில் இருந்து ஆட்டோ வருவதர்க்குள் தொடரவும்.....;)

gragavan
03-08-2006, 05:36 PM
என்னது இது.....ஆந்திராவுல இருந்து லண்டன்ல இருந்தெல்லாம் ஆட்டோ அனுப்பப் பாக்குறீங்களா...சரி நாளைக்கு போடுறேன். ஆனா அதையும் சஸ்பென்சுலதான் முடிப்பேன். ஹி ஹி...அதுக்கு அடுத்த பதிவு திங்கள் ராத்திரிதான்.

மயூ
04-08-2006, 08:31 AM
என்னது இது.....ஆந்திராவுல இருந்து லண்டன்ல இருந்தெல்லாம் ஆட்டோ அனுப்பப் பாக்குறீங்களா...சரி நாளைக்கு போடுறேன். ஆனா அதையும் சஸ்பென்சுலதான் முடிப்பேன். ஹி ஹி...அதுக்கு அடுத்த பதிவு திங்கள் ராத்திரிதான்.

அதுக்கும் சிலவேளை ஆட்டோ அனுப்புவாங்க கவனம் :D :D :D :D

pradeepkt
04-08-2006, 08:53 AM
அதுக்கும் சிலவேளை ஆட்டோ அனுப்புவாங்க கவனம் :D :D :D :D
இலங்கையில இருந்து கடல்தாண்டி எல்லாம் ஆட்டோ அனுப்புறீங்களா??? :D

vckannan
04-08-2006, 11:27 AM
நல்லத்தொடர் சஸ்பென்ஸ் வேற .....ஸ்ஸ்......:mad: அனுபவிச்சி எழுதரிங்க போல ....ஸ்
ஹூம் ....ஸ்ஸ்
புகை நாத்தம் அடிச்சா கொஞ்சம் மூக்கை பொத்தி கொள்ளுங்க இங்க என்னோட வயதுலருந்து ம்ம்ம்ம்... ஸ்ஸ்ஸ்... :mad: :mad: இன்னும் நிறைய பேரு வயதுலயும் இருந்தும் புகை வருது...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
...என்ன பண்ண புகை இல்லாம வயரு எரியாது இல்லயா ..... :mad: :mad: ...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... :mad: :mad::mad: :mad::mad: :mad:

யாருப்பா பக்கத்துல கொஞ்சம் தண்ணி குடுப்பா ஜக்குல
...களுக் ...களுக் ..புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....ஸ்ஸ்...ஸ்ஸ.......;) (ஹப்பா இப்ப கொஞ்சம் பரவாயில்ல ...கொஞ்ச நாளைக்கு இந்த திரி பக்கம் வர வேணாம்:eek: :eek: )

Raaga
04-08-2006, 03:19 PM
அந்த பாடல் ஊட்டி வரை உரவு என்ற படத்தில் வரும்...

அந்த பாட்டின் முடிவில் நம்ம சிவாஜி கணேசன் கே ஆர் விஜயாவை இப்படித்தான் கன்னத்தில் பளீர் என்று போட்டு தள்ளுவார்...

அதைத்தான் மேடையில இவங்க டிராமா பண்ணினாங்களோ என்னவோ, இப்படியும் இருக்கலாமே...

இளசு
04-08-2006, 10:39 PM
மிக லயமாக ஒவ்வொரு பாடலுக்கும் அழகான அளவான ஆலாபனை கொடுத்து உங்கள் பாணியில் ( மயிலாரின் துணையுடன்) சொல்லும் பாங்கு இதம்..பதம்..சுகம்... ராகவன்..

கண்ணனின் புகை அணியில் நானும்..