PDA

View Full Version : 1. ரெட்டைக் குரல் துப்பாக்கிgragavan
02-08-2006, 08:03 AM
சென்னைக்கு மூன்று மாதங்கள் வேலை தொடர்பாக வந்ததுமே பாட்டுக்கச்சேரியும் நாடகமும் நிறைய பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அது இரண்டரை மாதங்கள் கழித்தே நிறைவேறியது. ஊரெல்லாம் போஸ்டர்கள். டீவியில் விளம்பரங்கள். நாளிதழ்களில் விளம்பரங்கள். அட! அதுதான் பி.சுசீலாவும் எஸ்.ஜானகியும் இணைந்து இசை நிகழ்ச்சியில் பாடுகிறார்கள் என்று. நேரு உள்விளையாட்டரங்கத்தில் கச்சேரியாம். அது எங்க இருக்கிறதென்றே தெரியாது...இந்த நிலையில் டிக்கெட் வாங்கி நிகழ்ச்சிக்குப் போய்...ம்ம்ம்....தமிழ்நாட்டுக்காரன் சிம்ரனுக்கு ஆசைப்பட்ட கதையாகப் போய்விடுமோ என்று முதலில் நினைத்தேன்.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி. அதாவது ஜூலை முப்பதாம் தேதி 2006. வெள்ளிக்கெழமை இரவு யாஹுவில் ஆன்லைனில் இருந்தப்போது ஒரு நண்பர் வந்து வணக்கம் சொன்னார். அவர் பெயர் கமலா. அவரிடம் நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்லி ஆசையச் சொன்னேன். பக்கத்து இலைக்குப் பாயசம் கேட்கிற மாதிரி அவங்க போகிறார்களா என்று கேட்டேன். முதலில் யோசித்தார்கள்....பிறகு சனிக்கிழமை எனக்கு விவரம் சொல்வதாகச் சொன்னார்கள். நானும் சரீயென்று இருந்து விட்டேன்.

சொன்னது போலவே சனிக்கிழமை என்னைக் கூப்பிட்டு நான்கு பாஸ்கள் இருக்கிறதென்று சொன்னார்கள். அந்த நான்கும் யார் கொடுத்ததென்று நினைக்கிறீர்கள்? நம்பித்தான் ஆக வேண்டும். இசையரசி பி.சுசீலா அவங்களே கொடுத்தது. பழம் நழுவிப் பாலில் விழுவது பழைய பழமொழி. செர்ரி நழுவி ஐஸ்கிரீமில் விழுந்து அது நழுவி வாயில விழுந்ததென்று சொல்லலாம். இல்லையென்றால் கொஞ்சம் கிக்கோடு வேண்டுமென்றால் பியர் நழுவி கோப்பையில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்த மாதிரியென்று சொல்லலாம். அட...அவ்வளவு மகிழ்ச்சி!

ஞாயிற்றுக் கிழமை மாலை நான்கு மணிக்கெல்லாம் கிளம்பி அவர்கள் வீட்டிற்குப் போய்விட்டேன். அங்கிருந்து ஐந்து மணிக்கு நேராக நேரு உள்விளையாட்டரங்கம். அங்கு இன்னொரு நண்பரைக் கமலா அறிமுகம் செய்து வைத்தார்கள். அவருடைய தந்தை அந்தக் காலத்தைய பெரிய பாடகர். அவருடைய மகன்களில் இரண்டு பேர் திரைப்படங்களில் பாடியிருக்கிறார்கள். ஆமாம். திருச்சி லோகநாதன் அவர்களைத்தான் சொல்றேன். அவருடைய இளைய மகன்தான் நான் சந்திச்சது. அவருடைய அண்ணன்களான டி.எல்.மகாராஜன், தீபன் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் சினிமாவில் பாடியிருக்கிறார்களே!

நன்றாக மேடை மறைக்காத இடமாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டோம். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கியது. நிகழ்ச்சியை ஃபோட்டோ பிடிக்க ஆசை. பதிவு போடும் பொழுது அதையும் போடலாமென்றுதான். ஆனால் டிக்கெட்டில் காமிரா கொண்டு வரக்கூடாதென்று தெளிவாகச் சொல்லியிருந்தார்கள். அதனால் எதற்கு வம்பு என்று கொண்டு செல்லவில்லை. வெளியே வைத்து விட்டு வரச் சொல்லி அனுப்பினால் எங்கு போவது?

ஆச்சி மசாலா, தினத்தந்தி விளம்பரங்கள் எல்லாம் அங்கு அமைக்கப்பட்டிருந்த இரண்டு திரைகளில் ஓடிக்கொண்டிருந்தன. நேரமும்தான். ஆறு மணி ஆகி பத்து நிமிடங்கள் ஆகியிருந்தது. அரங்கமும் நிறைந்திருந்தது. அப்பொழுது மேடையில வேண்டிய லைட்டப் போட்டு வெளிச்சமாக்கினார்கள். அப்பாடா! நிகழ்ச்சி தொடங்கப் போகிறதென்று ஒரு மகிழ்ச்சி. அவசர அவசரமாக உட்கார இடம் தேடினார்கள்.

சங்கரின் சாதகப் பறவைகள் குழுவினர்தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அதனால் அவர்கள் அணிப்பாடலாக "எந்த்தரோ மகானுபாவுலு அந்தரிகீ வந்தனம்" பாடினார்கள். ஆனால் பின்னணி இசையைப் புதுமையாச் செய்திருந்தார்கள். அலைபாயுதே படத்தில் அலைபாயுதே கண்ணா பாட்டுக்கு ரகுமான் செய்திருந்த மாதிரி. ஆனால் அலைபாயுதே வருவதற்கு முன்பே சாதகப் பறவைகள் இசைக்குழு இருக்கிறது.

தனது இசைக்குழுவை அறிமுகம் செய்து வைத்தார் சங்கர். பிறகு நிகழ்ச்சியைப் பற்றிச் சுருக்கமாக முன்னுரை கொடுத்துட்டு, பிரபல பாடகி ஸ்ரீலேகா பார்த்தசாரதியை அழைத்தார். எதற்கு? இரண்டு பெரிய பாடகிகளைப் பற்றி ஒரு பாடகி அறிமுகம் கொடுத்தால் எப்படி இருக்கும்! அதற்குத்தான்.

ஆனால் இவர்களுக்கு அறிமுகம் தேவையா? அந்தக் கேள்விதான் ஸ்ரீலேகா அவர்களும் கேட்டது. ஆகையால் சுருக்கமாக இருவரும் திரையுலகத்தில் நுழைந்ததைப் பற்றிச் சொன்னார். 1952ல் பெற்ற தாய் படத்தில் எதுக்கழைத்தாய் என்று தொடங்கும் பாடலைப் பாடி இசைப் பயணத்தைத் தொடங்கினாராம் பி.சுசீலா. எதுக்கழைத்தாயா? அவருடைய இனிய பாடல்கள் நமக்கெல்லாம் கிடைக்கத்தான். 1957ல் ஜானகி அவர்கள் இசைப்பயணத்தைத் தொடங்கினார்களாம். விதியின் விளையாட்டு என்ற படத்திற்காக. ஆமாம். விதியின் விளையாட்டுதான். ஜானகி அவர்கள் 57ல் அறிமுகமானாலும் இளையராஜாவின் வருகைக்குப் பிறகே பிரபலமானார்கள். அதுவரை இசைச் சிம்மாசனம் பி.சுசீலா அவர்களிடமே இருந்தது. அதுதான் விதியின் விளையாட்டு.

அறிமுகம் முடிந்ததும் இசைக்குயில்கள் இருவரும் இசையாரவாரத்தோடும் அதையமுக்கும் ரசிகர்களின் ஆரவாரத்தோடும் மேடையேறினார்கள். முதன் முதலாக மேடையில் பி.சுசீலா அவர்களைப் பார்க்கும் பரவசம் எனக்கு. என்னைப் போலவே பலருக்கு. அதே போல எஸ்.ஜானகி அவர்கள் ரசிகர்களும் பரவசமடைந்தார்கள்.
இருவரும் பணிவாக ரசிகர்களை வணங்கினார்கள். முதலில் எஸ்.ஜானகி அவர்கள் பி.சுசீலா அவர்களை மகாகுயில் என விளித்து அந்த மகாகுயிலோடு பாட வந்திருப்பது பெருமகிழ்ச்சி என்றார்கள். உடனே பி.சுசீலா தடுத்து இரண்டு மகாகுயில்கள் என்று திருத்தினார்கள். ஆனால் அதை ஏற்க மறுத்த எஸ்.ஜானகி, பி.சுசீலாதான் இசையரசி. அவருக்கு இணை என்று யாருமில்லை என்று ஆணித்தரமாக எடுத்துச் சொன்னார்.

அப்பொழுது எனக்கு "இசையரசி எந்நாளும் நானே" என்ற பாடல் நினைவிற்கு வந்தது. இளையராஜா இசையில் தாய் மூகாம்பிகை படத்தில் நடக்கும் பாட்டுப் போட்டி. தெய்வமே வந்து பாடும். "இசையரசி எந்நாளும் நானே" என்று. அதை மறுத்துப் பாடுவார் ஒருத்தி. ஆனால் பாட்டில் வெற்றி பெற பாலில் மருந்து கொடுத்து தெய்வத்தை ஊமையாக்கி விட்டதாக நினைப்பார். ஆனால் தெய்வத்தின் அருளால் ஊமை பாடி "இசையரசி எந்நாளும் நீயே! உனக்கொரு இணையாராம்மா? எல்லோரும் இசைப்பது இசையாகுமா?" என்று போட்டி முடியும். இந்தப் பாட்டில் தெய்வத்திற்குப் பி.சுசீலாவும் தெய்வ அருளால் குரல் பெற்ற பெண்ணிற்கு எஸ்.ஜானகியும் பாடியிருந்தார்கள். இன்றல்ல அன்றே பி.சுசீலாவை இசையரசி என்று எஸ்.ஜானகி புகழ்ந்திருக்கிறார்.

அடுத்து பேசினார் பி.சுசீலா. "ஜானகி பேசீட்டாங்க. நான் என்ன பேசுறது? நேரா பாட்டுக்கே போயிர்ரேன்" என்று தனது முதல் பாடலைத் துவங்கினார். அரங்கம் அமைதியானது. அந்த முதற் பாடல்?

தொடரும்....

மயூ
02-08-2006, 08:10 AM
கச்சேரி கூடத்திற்கே அழைத்துப் போய் நடுவில் கழட்டி வி்ட்டிட்டீங்களே!
மற்றய பகுதியை ஆவலுடன் எதிர் பார்க்கின்றென்.....
ஜானகி.... சுசிலா.....
இருவரில் யார் பெரியவர் சொல்வது கடினம்தான்....
சுசிலாவின் "காகித ஓடம் கடல் அலை மேலே போவது போலே நாங்களும் போவோம்" என்னால் மறக்க முடியாக பாடல்....

gragavan
02-08-2006, 09:29 AM
கச்சேரி கூடத்திற்கே அழைத்துப் போய் நடுவில் கழட்டி வி்ட்டிட்டீங்களே!
மற்றய பகுதியை ஆவலுடன் எதிர் பார்க்கின்றென்.....
ஜானகி.... சுசிலா.....
இருவரில் யார் பெரியவர் சொல்வது கடினம்தான்....
சுசிலாவின் "காகித ஓடம் கடல் அலை மேலே போவது போலே நாங்களும் போவோம்" என்னால் மறக்க முடியாக பாடல்....உண்மைதான் மயூரேசன். எனக்கு வாணி ஜெயராமின் தொலைக்காட்சிப் பேட்டி நினைவிற்கு வருகிறது. பேட்டியாளர் மெல்லிசை மன்னரா? இசைஞானியா? என்று கேள்வி கேட்கிறார். அதற்கு வாணிஜெயராம் அவர்கள் "அப்படியெல்லாம் ஒப்பிட முடியாது. சரியாகவும் இருக்காது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். ஆனால் நிறைய பாடல்களைப் பாடியது மெல்லிசை மன்னரிடம்தான். I was happy working with him." என்று குறிப்பிட்டார்.

அதே நிலைதான் இங்கும். ஆனாலும் கட்டுரை என்னுடைய பார்வையில் எழுதப்பட்டது என்பதையும் கொள்ள வேண்டும். பி.சுசீலா ரசிகன் கச்சேரிக்குப் போனால் எப்படி எழுதுவான்? இப்படித்தான் எழுதுவான்.

pradeepkt
02-08-2006, 09:38 AM
அருமை அருமை...
சுசீலாவின் ரசிகரின் பார்வையில் இந்தக் கட்டுரை அருமையோ அருமை.
தொடருங்கள்....

மதி
02-08-2006, 10:15 AM
ராகவன்...
அற்புதம்..சீக்கிரம் நடந்தவற்றை எழுதுங்கள்..!
காத்திருக்கிறோம்..

rajeshkrv
02-08-2006, 09:15 PM
ராகவன்
வர்ணனை அருமை..
நான் சென்னையில் இருந்திருந்தால் முதல் ஆளாக வந்திருப்பேன்
என்ன செய்வது...
ஆனால் சுசீலா அம்மாவிடம் (அவர்கள் இந்தியா திரும்புவதற்கு 3 நாட்கள் முன் பேசினேன் இந்த நிகழ்ச்சி குறித்தும் பேசினோம்)
இரண்டு குயில்களும் கான மழை பொழிந்தால் இசை ரசிகர்களுக்கு தீபாவளி தானே..

இளசு
02-08-2006, 11:12 PM
ராகவன்...

இனிய பொறாமையுடன் படித்தேன்.

இதுவரை இந்த மகாகுயில்களின் கானமழையில் நேரில் நனைந்ததில்லை.

கொடுப்பினை நம் குரு ராஜேஷுக்கு அதிகம். சுசீலாம்மாவை நேரில் பலமுறை பார்த்து, பழகி, இணையதளம் அம்மாவுக்கு அமைத்து...

எனக்கு பல மகிழ்ச்சிகள்.... சுசீலாம்மா காலகட்டத்தில் வாழ்ந்து, அவர் பாடல்களை ரசிக்கும் வரம் அமைந்தமைக்கு...

குரு, நீங்கள், செல்வன் போன்ற மகா ரசிகர்களை அறிந்து, ருசிக்க மன்றம் வழி தந்தமைக்கு..


மூகாம்பிகை பாட்டை அழகாய் பயன்படுத்திய பாணி அருமை..

அடுத்த பாகத்துக்கு காக்க வைத்துவிட்டீர்கள்..


கச்சேரி தொடரட்டும்..

gragavan
03-08-2006, 05:49 AM
ராகவன்
வர்ணனை அருமை..
நான் சென்னையில் இருந்திருந்தால் முதல் ஆளாக வந்திருப்பேன்
என்ன செய்வது...
ஆனால் சுசீலா அம்மாவிடம் (அவர்கள் இந்தியா திரும்புவதற்கு 3 நாட்கள் முன் பேசினேன் இந்த நிகழ்ச்சி குறித்தும் பேசினோம்)
இரண்டு குயில்களும் கான மழை பொழிந்தால் இசை ரசிகர்களுக்கு தீபாவளி தானே..வாங்க ராஜேஷ். என்னை தமிழ்மன்றத்தில் சேர்த்து விட்டதே நீங்கள்தான். நீங்களும் நானும் இப்பொழுது ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறோம். நீங்கள் சென்னையில் இருந்திருந்தால் சேர்ந்து சென்றிருக்கலாம்.

சுசீலா அவர்களை நேரில் சந்திக்க அழைத்துச் செல்வதாக கமலா உறுதி சொல்லியிருக்கிறார்கள். இந்த வாரயிறுதியில் பெங்களூர் செல்கிறேன். அடுத்த வாரம் கண்டிப்பாகச் சந்திக்க வேண்டும்.

gragavan
03-08-2006, 05:58 AM
ராகவன்...

இனிய பொறாமையுடன் படித்தேன்.

இதுவரை இந்த மகாகுயில்களின் கானமழையில் நேரில் நனைந்ததில்லை.

கொடுப்பினை நம் குரு ராஜேஷுக்கு அதிகம். சுசீலாம்மாவை நேரில் பலமுறை பார்த்து, பழகி, இணையதளம் அம்மாவுக்கு அமைத்து...

எனக்கு பல மகிழ்ச்சிகள்.... சுசீலாம்மா காலகட்டத்தில் வாழ்ந்து, அவர் பாடல்களை ரசிக்கும் வரம் அமைந்தமைக்கு...

குரு, நீங்கள், செல்வன் போன்ற மகா ரசிகர்களை அறிந்து, ருசிக்க மன்றம் வழி தந்தமைக்கு..


மூகாம்பிகை பாட்டை அழகாய் பயன்படுத்திய பாணி அருமை..

அடுத்த பாகத்துக்கு காக்க வைத்துவிட்டீர்கள்..


கச்சேரி தொடரட்டும்..நன்றி இளசு. கச்சேரி இன்று மீண்டும் தொடரும். :)

அறிஞர்
03-08-2006, 02:35 PM
கலக்கலான தொடர் இராகவன்...

தாங்கள் விரும்பிய படி... நல்ல கச்சேரியை ரசித்துள்ளீர்கள்...

இன்னும் சில மாதங்களில் இசைக்குயில் சுசீலாவுடன் சந்திப்பு... என்ற தொடரை கொடுப்பீர்கள் என நம்புகிறேன்....