PDA

View Full Version : நுண்ணுயிர் நோக்கியவர் ( அ. மை .- 23)



இளசு
31-07-2006, 09:09 PM
நுண்ணியிர் நோக்கியவர்


அறிவியல் மைல்கற்கள் - 23

ஆண்ட்டனி வான் லியூவன்ஹக்
Antoni van Leeuwenhoeck
(1632-1723)
----------------------------------------------------
22ம் பாகம் காற்றழுத்தம் - இங்கே
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=154034#post154034

----------------------------------------------------------------------
தாய்மொழி மட்டுமே அறிந்தவரால் தம் நாடு தாண்டி தம் அறிவாற்றலை நிலைநாட்டுவது
கடினம்.

வேறுமொழி அதுவும் விஞ்ஞான ஆட்சிமொழியாம் லத்தீன் கோலோச்சும் அந்நாட்களில்
லத்தீனும் அறியாமல், ஆங்கிலம் , பிரெஞ்சு போன்ற வல்லரசு மொழிகளும் அறியாமல்
தாய்மொழியாம் டச்சு மட்டுமே அறிந்த ஒருவர் விடாமல் போராடி
தம் கண்டுபிடிப்புகளை அனைவருக்கும் பறைசாற்றினார்.

அவர் லியூவன்ஹக்.

லென்ஸ்கள் மூலம் அதுவரை அறியப்பட்டவற்றில் சிறப்பானவை இரண்டு:
1) கார்க் மூடிகளை ஆராய்ந்த ராபர்ட் ஹுக் கண்டு சொன்ன - 'செல்கள்'
2) குருதி ஓட்டம் ஆராய்ந்த மால்பிஜி கண்டு சொன்ன - 'கேபில்லரிகள்'

இந்த கண்டுபிடிப்பு கட்டுரைகளை வாசிக்க லத்தீன் தெரியாத லியூவன்ஹக்
அவற்றில் உள்ள சித்திரங்களை மட்டும் வைத்தே கொஞ்சம் கொஞ்சம் புரிந்துகொண்டார்.
(ஒரு ஆங்கிலேயர் நம் அம்புலிமாமா புத்தகத்தில் படம் பார்ப்பதைப்போல்..)

லென்ஸ்கள் மேல் ஆர்வமும் அவற்றைச் செய்வதில் அதீத திறமையும் உள்ள இவர்
தம் கையாலேயே கடைந்து உருவாக்கிய லென்ஸ்கள் 400-க்கும் மேலே.
அவை ஒரு பொருளை 250 மடங்கு பெரிதாக்கிக்காட்ட வல்லவை.

இந்த லென்ஸ்களை வைத்து லியூவன்ஹக் கண்டு சொன்ன உண்மைகள்
அசத்தலானவை. மிக முக்கியமானவை.
1) 'சுத்தமான' நீரில் லட்சக்கணக்கில் நீந்தும் புரோட்டோசோவா ( ஒரு செல் உயிரிகள்)
2) ஆண் விந்தில் நீந்தும் ஸ்பெர்மட்டசோவாக்கள்
3) கேபில்லரிகளில் நுழைந்து செல்லும் ரத்தம்
4) அந்த ரத்தத்தில் படகுகளாய் பயணிக்கும் சிவப்பு, வெள்ளை அணுக்கள்
5)தசை, நரம்பு, கேசம், எலும்புகளின் அடிப்படை கட்டமைப்புகள்
6) தாவர செல்கள்

இப்படி ஒரு ஆடி லென்ஸ்களை வைத்து இவர் சாதித்தவை பிரமிக்கத்தக்கவை.
உயிர்கள் ' தாமே' உருவாவதில்லை. ஆண் அணு + பெண் முட்டை சேர்க்கையால்
உருவாகுபவை என்ற உண்மையை நிரூபித்தவர் இவரே.
அழுகும் பொருளில் புழுக்கள் தாமே ' சுயம்பு'வாய் வருவதில்லை.
அதை மொய்த்துப்போன ஈக்கள் இட்ட நுண்ணிய முட்டைகள் பொரித்து வந்தவை
என்று லென்ஸ் மூலம் கண்டு சொன்னார். ஆண் விந்துவில் ஸ்பெர்மட்டசொவாதான்
போர் வீரன். அவனே பெண் முட்டையைத் துளைத்து கரு உருவாக்குபவன்.
விந்துவில் மிஞ்சி நிற்கும் நீர் ஸ்பெர்மட்டசோவாவின் ' நீர் ஆகாரம்' மட்டுமே
என்று லென்ஸ் உதவியால் நிச்சயம் செய்தவரும் இவர்தான்.

இவரின் கண்டுபிடிப்புகளின் உச்சம் : தமது வாயில் தாமே கண்டு சொன்ன
'பாக்டீரியாக்கள்'.
(1683-ல் இவர் முதலில் கண்டு சொன்ன பாக்டீரியாக்களை பிற அறிவுலகம்
பெரிதாய் மதித்து ஆராய்ச்சிகளைத் தொடர இதற்குப்பின் ஒரு நூற்றாண்டு ஆனது.)

ஆனால் டச்சு மொழியில் இவர் அனுப்பிய கட்டுரைகளை லண்டன்,பாரீஸில் உள்ள
மேல்வர்க்க ஆராய்ச்சி அமைப்புகள் புரிந்தேற்க தாமதம் ஆனது.
அசரவில்லை லியூவன்ஹக்.
ஒரு மனிதனின் மனத்திண்மையை ஒரே செயலை அவன் மூன்றாம், நான்காம் முறையும்
விடாது முயற்சி செய்யும்போது அளக்கலாம் எனச் சொல்வார்கள்.

ஆனால் லியூவன்ஹக் முயன்றது 400 முறைக்கும் மேல். லண்டன் ராயல் சொசைட்டிக்கும்
பிரஞ்சு அறிவியல் அகாடமிக்கும் இத்தனை முறை ஓயாது அவர் எழுதிப்போட்டார்.
தாம் கண்ட 'நுண் காட்சிகளை' அந்த மேல் வர்க்கமும் காண 26 லென்ஸ்களையும்
அனுப்பினார்.
மெல்ல அவர் கண்ட ஆணித்தரமான உண்மைகள் எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அறிவியல் சபைகள் மட்டுமல்ல.. அரசவைகளும் அவரை மதித்து அழைத்து கௌரவித்தன.

மொழி அகழியைத் தாண்டி, முதலை மேல்வர்க்கங்களையும் வென்று
அமைத்த அற்புத லென்ஸ் கொண்டு, உழைத்துக் கண்ட உண்மைகளை
ஓயா முயற்சி மூலம் அனைவரின் ஒப்புதலுக்கு அர்ப்பணித்து
ஒரு புதிய நுண்பார்வையை அறிவுலகத்துக்கு அளித்த நாயகரை
நாமும் போற்றுவோம்.

பாரதி
02-08-2006, 04:02 PM
தனது முயற்சியில் சற்றும் தளராமல் 400 முறைக்கு மேலே முயன்ற அந்த ஒரு முயற்சியே போதும் லியூவன்ஹக்-கைப் பாராட்ட..! மண்ணுயிர்களுக்கு நுண்ணுயிர்கள் குறித்து அறியத்தந்த மேதையை எங்களுக்கு அறிமுகம் செய்த அண்ணனுக்கு நன்றிகள் பல.

அறிஞர்
02-08-2006, 04:19 PM
லியூவன்ஹக் சாதனைவீரர் தான்... மனம் தளராமல்.... முயன்று சாதித்துள்ளார்.

350 ஆண்டுகள் கழித்து... இவரது கண்டுபிடிப்புகளை.... என் ஆராய்ச்சியில் உபயோகித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். (முட்டை, விந்தனு சேர்க்கையில் லென்ஸ் மூலம் கண்டுள்ளேன்....).

ஆராய்ச்சி செய்ய எடுத்துக்கொள்ளும் காலத்தை விட... அங்கீகாரம் கிடைக்க எடுத்துக்கொள்ளும் காலம் அதிகம் என்பது வருத்தமே.

பென்ஸ்
02-08-2006, 04:44 PM
அருமையான இன்னொரு மைல்கல்...

இளசு... இந்த வகை பதிவுகள் ராசித்து வாசிக்கும் படி எழுத்த பட்டது மட்டும் அல்லாமல், அவர்களின் விடா முயற்ச்சியையும்... அதன் பலனையும் பறை சாற்றுவதால்...இளசுவின் வழக்கமான குளுக்கோஸ் பதிவுகளுக்கு மத்தியில் இவை இன்னும் சிறப்பானவையாக....

நன்றி இளசு....

vckannan
03-08-2006, 06:59 AM
ஆராய்ச்சி செய்ய எடுத்துக்கொள்ளும் காலத்தை விட... அங்கீகாரம் கிடைக்க எடுத்துக்கொள்ளும் காலம் அதிகம் என்பது வருத்தமே.

இது விட்டமின் தகவல் தான். இளசுக்கு எனது பாரட்டுக்கள்.

அனுபவ வார்தைகள்.. உங்களது அறிஞரே அதுதான் உண்மையும் கூட.
பல முறை அங்கீகாரம் கிடைக்காமல் அற்புதங்கள் நிகழாமல் வெறும் கனவுகளகவே முடிகின்றன.

இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கையையும் அந்த நம்பிக்கையைக்கு உறுதி தரும் இது போன்ற தகவல்களும் நிறைய வ(ள)ரட்டும்..


நீங்கள் பயோடெக்கனலஜியா நானோவா ?

paarthiban
06-08-2006, 07:46 AM
உபயோகமான கட்டுரை தொடர். இளசுக்கு பாராட்டுக்கள்.

பரஞ்சோதி
07-08-2006, 04:18 AM
மற்றொரு அருமையான அறிவியல் தகவல்.

லியூவன்ஹக் அவர்களின் விடாமுயற்சியும், போராட்ட குணமும் நமக்கு நல்ல பாடம், அன்னாரை பின்பற்றி நம் தாய் மொழியிலியே நம்முடைய திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.

இனியவன்
07-08-2006, 06:27 AM
பயனுள்ள தகவல்களைத் தாராளமாய்ப் பதியும் அண்ணன் இளசுவுக்கு மனம் நிறைந்த நன்றியும் பாராட்டும்.

இளசு
23-08-2006, 11:17 PM
கருத்து, ஊக்கமளித்த சொந்தங்களுக்கு நன்றி.

விரைவில் 24 வது மைல்கல்!

வெள்ளிவிழா ( 25 வது பதிவு) நாயகன் யார்? ஊகிக்க முடிகிறதா?

பாரதி
25-08-2006, 06:52 AM
விரைவில் 24 வது மைல்கல்!

வெள்ளிவிழா ( 25 வது பதிவு) நாயகன் யார்? ஊகிக்க முடிகிறதா?

அண்ணா...
அதுக்கெல்லாம் நியூட்டன், ஐன்ஸ்டீன், எடிசன் போன்றவர்களாலதான் முடியும். நம்மால முடியாது.

soma255
25-08-2006, 05:18 PM
அன்பரெ இளசு நீர் இளசு அல்ல பெருசு.

ஓவியா
27-08-2006, 10:45 PM
இளசு
அறிவியல் மைல்கற்கள் ஒவ்வோன்றும் மிக அருமையான பதிவுகள்...

(மன்னிக்கவும், நான் ஒரு சில பாகங்களை வாசிக்கவில்லை)
இருப்பினும் அடுத்து தொடரும் பாகங்களை வாசிக்க ஆவலாய் உள்ளேன்

24காம் பாகத்தை தொடரவும்

வாழ்த்துக்கள்

நன்றி...........:)

ஆதவா
06-02-2008, 02:13 AM
ஆனால் லியூவன்ஹக் முயன்றது 400 முறைக்கும் மேல்
அடப்பாவமே! லண்டண் ஆராய்ச்சி அமைப்புக்கு அன்று இருந்த கர்வம் பார்த்தீர்களா? ஒரு மனிதன் தனது கட்டுரையை அனுப்பினால் கூட படிக்கமாட்டார்கள் போல இருக்கே!!

லியூவன்ஹக் கண்டுபிடித்தவை நம் தொடக்க வாழ்வின் ஆதாரங்கள்... அவரை நாம் போற்றவேண்டும்....

நினைவுறுத்தியமைக்கு நன்றி அண்ணா..

Narathar
13-10-2008, 12:57 PM
அறிவியல் மைல் கற்களில், குறிப்பிட்டுச்சொல்லகூடிய ஒரு அறிவியலாளராக நான் லியூவன்ஹக் அவர்களை காண்கின்றேன்....

அவரது விடா முயற்சியும், அதற்கு அவருக்கு பிந்தியாவது கிடைத்த அங்கீகாரமும் அவரை ஒரு ஹீரோ லெவலுக்கு என் மனதில் உயர்த்திவிட்டது.

இத்தனை சாதனைகள் படைத்த மனிதரைப்பற்றி இப்போதுதான் உங்கள் ஆக்கத்தின் மூலம் அறிகின்றேன் என்பதில் வெட்கப்படும் அதேவேளை இப்போதாவது அவரைப்பற்றி அறியக்கிடைத்ததே என்று சந்தோஷப்படுகின்றேன்

நன்றி இளசு அவர்களே