PDA

View Full Version : தொடர்-2 : எம்.எஸ். பவர்பாயின்ட் (Powerpoint)..



மஸாகி
24-07-2006, 10:12 AM
(இந்த தொடரினை அச்சிட விரும்புபவர்கள் - கிடையான (Horizontal) நிலத் தோற்றத்தில் (Landscape) அச்சிட்டால் அனைத்து தகவல்களையும் முழுமையாகப் பெறலாம்.)

கடவுளின் நாமம் போற்றி..

எம். எஸ். பவர் பாயின்ட் Xp - ஓர் புதிய ஆரம்பம்.. என்ற இத் தொடரானது, பவர் பாயின்ட் - பயன்பாட்டு மென்பொருளினை (Application Software) உபயோகித்து எவ்வாறு ஒரு அழகிய நிகழ்த்து வரைகலை (Presentation Graphics) யினை இலகுவாக உருவாக்க முடியும் என்பதை - புதிய பவர் பாயின்ட் பாவனையாளர்களுக்கு எளிய முறையில் விளக்குவதனை கருத்திற் கொண்டே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் எழுதப்படும் விடயங்கள் யாவும், என்னுடைய சொந்த அபிப்பிராயங்களுக்கேற்ப எனக்கென்று உள்ள தனிப்பட்ட கற்பித்தல் பாணியில் எழுதப்பட இருப்பதனால், என் வசதிக்கேற்ப விடயங்களை வகைப்படுத்தியும், குறிப்புக்களாக்கியும் தரவுள்ளேன் என்பதை வாசகர்கள் கருத்தில் கொள்ளவும்.

மேலும், பவர் பாயின்ட் என்ற இந்த பயன்பாட்டு மென்பொருளினை உபயோகிப்பதில் தேர்ச்சி பெற விரும்பும் - அன்பு நண்பர்கள், இங்கே விளக்கப்படும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, அதிகளவான பயிற்சிகளை தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

தமிழாக்கப் பிழைகளையும் - தகவல் பிழைகளையும் - உங்கள் கருத்துக்களையும் - உடனுக்குடன் சந்தேகங்களையும், அவ்வப்போது அறியத் தாருங்கள்..

என்றும் நட்புடன்
மஸாகி
24.07.2006


ஆரம்பிக்கலாமா..?

( இந்த தொடரை - வாசிக்கின்றவர்களுக்கு, சோதனை காலம் ஆரம்பிக்குதுடோய்.. )

பவர் பாயின்ட் ஆனது - ஏதாவது ஒரு தலைப்பு அல்லது விடயம் பற்றி, நாம் சொல்ல விரும்புகின்ற கருத்துக்களை மக்கள் மத்தியில் மிக லாவகமாக, எழிலுடன் எடுத்துரைக்க பயன்படும் ஒரு அழகான, கவர்ச்சிகரமான எளிய மென்பொருளாகும்.

ஆதலால், இந்த மென்பொருளினை பயன்படுத்தி செய்யப்படுகின்ற விளம்பர மற்றும் கருத்து பிரதிபளிப்பு திட்டங்களுக்கு - தொழில் நிறுவனங்கள், பாடசாலைகள், கணினி விரிவுரைகூடங்கள், ஆய்வு நிறுவனங்கள்...... என ஏகப்பட்ட இடங்களிலும் அமோக செல்வாக்கு உண்டு.

உதாரணமாக, பாடசாலை மாணவர்களுக்கு - அவர்களின் பாடங்களை எளிய முறையில் மனதில் பதியுமாறு நிகழ்த்து வரைகலை ஒன்றை உருவாக்கியோ, அல்லது நிறுவன ஊழியர்களுக்கு அவர்களது வேலை தொடர்பான வழிகாட்டல் பயிற்சிகளை திட்டமாக உருவாக்கியோ திரையில் வீழ்த்தி கருவி (Projector) மூலம் அழகிய முறையில் தெளிவுபடுத்த, இந்த பவர் பாயின்ட் மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாக இருப்பதனால்தான், இவருக்கு போகுமிடமெல்லாம் ஒரே - வாங்கோ.. வாங்கோ.. தான்.

சில வியாபார நிறுவனங்களில், அல்லது கண்காட்சிகளில் (நுழைவுக் காப்பாளருக்கு அல்வா கொடுத்துவிட்டு - இலவச அனுமதியில் பிரவேசித்தாலும் கூட) எதிர்தாற்போலுள்ள கணினியில் உட்கார்ந்து கொண்டு , உங்களை அன்புடன் வரவேற்கின்றோம் என மிக வாஞ்சையுடன் அழைக்கும் பாசக்கார பயல்தான் இந்த பவர் பாயின்ட்.

( என்ன..? அறிமுகத்த பார்த்திட்டே பாதிப் பேரு - ஓடிப் போயிருப்பாங்கனு நினைக்கிறேன். மீதியுள்ளவங்களையும் ஓட வைக்க வேண்டாமா..? இதோ ஆரம்பிச்சுட்டோமுள்ள..)


இனி..
பாடத்துக்கு செல்லலாமா..?


பவர் பாயின்ட் - பயன்பாட்டு மென்பொருளினை (Application Software) உபயோகித்து, ஒரு நிகழ்த்து வரைகலை (Presentation Graphics) யினை வடிவமைக்கும் போது, பின்வரும் 5 பிரதான விடயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

� திட்டமிடல் ( Planning )
� வடிவமைத்தல் ( Designing )
� இணைப்பு கொடுத்தல் ( Linking )
� இயக்கப்பாட்டு வேலைகள் ( Animation Works )
� நேர ஒத்திகை ( Rehearse Timing )


திட்டமிடல் ( Planning )

திட்டமிடல் எனும்போது, எமது பவர்பாயின்ட் நிகழ்த்து வரைகலை (Presentation Graphics) யானது,

� என்ன நோக்கத்தை மையப்படுத்தி - தயாரிக்கப்படுகின்றது..?
� எவர்களுக்கு பயனளிக்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றது..?
� எவர்களை மையப்படுத்தி தயாரிக்கின்றோமோ - அவர்களை இலகுவாக கவரும் யுக்திகள் என்ன..?
� எப்படி இரத்தினச் சுருக்கமாக கருத்துக்களை முன்வைக்கலாம்..?
� எவ்வாறான அழகுறு மற்றும் இயக்கப்பாட்டு வேலைகளை செய்யலாம்..?
� எத்தனை சறுக்குகள் (Slides) மொத்தமாக அமைய வேண்டும்..?
� எந்த சறுக்கில் (Slide) இருந்து எந்த சறுக்கிற்கு (Slide) இணைப்பு கொடுக்க வேண்டும்..?

போன்ற விடயங்களை கருத்திற் கொண்டு, ஒரு தாளில் - தேவையான குறிப்புக்களை எழுதிக் கொள்வதையும், நாம் அமைக்கவிருக்கும் நிகழ்த்து வரைகலை (Presentation Graphics) யின் கற்பனை மாதிரியை பருமட்டாக கொண்டு , தொடர் வரைபடம் (Flowchart) ஒன்றை வரைந்து கொள்வதை யுமே திட்டமிடல் எனலாம்.

ஆனாலும், ஒரு சில சறுக்குகளை மாத்திரம் கொண்ட சிறிய நிகழ்த்து வரைகலையினைப் பொறுத்தவரை இவ்வாறான திட்டமிடல் பெரும்பாலும் அவசியமில்லை.

மேலும், பவர் பாயின்ட் யின் நுணுக்கங்களுடன் மிகவும் பரிச்சயமான - சில கணினி வல்லுனர்களைப் பொறுத்தவரை (ஹி.. ஹி.. என்னைப் போல) இத்தகைய திட்டமிடல்களை, தாளில் வரைந்து கொள்ளாமல் மனசுக்ளேயே - கூட்டிக் கழித்து, பெருக்கி வகுத்து நிகழ்த்து வரைகலையினை அட்டகாசப் படுத்திடுவாங்க..

அடுத்த விடயத்திற்கு தாவலாமா..?


வடிவமைத்தல் ( Designing )

எமது சறுக்குகளை - அழகுற வடிவமைத்துக் கொள்வதற்கான யுக்திகளை அறிவதற்கு முன்னர், பவர் பாயின்ட் டின் முகப்புத் தோற்றத்திலுள்ள சில பிரதான விடயங்களை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

கீழே உள்ள படத்தில் அவைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

http://www.geocities.com/mazaagy/Home.jpg

1. பட்டியல் பட்டை ( Menu Bar )
2. கருவிகள் பட்டை ( Tools Bar )
3. சறுக்குகள் ( Slides )
4. தற்போது தெரிவாகியுள்ள சறுக்கு ( Currently Selected Slide )
5. சறுக்கை காண்பி ( Slide Show )
6. சொல் கலை ( Word Art )
7. பிடிப்பு கலை ( Clip Art )
8. மூல வாக்கியம் ( Text )
9. தன் வடிவம் ( Auto Shape )
10. இட்ட வேலை ஜன்னல் ( Task Pane )

( சரி.. சரி.. என் அருமை மாணவர்களே, தூங்கியது போதும், முகத்தை அலம்பிக்கிட்டு அடுத்த பாடத்திற்கு தயாராகுங்க..)

மீண்டும் தொல்லைகளுடன் சந்திக்கலாமா..?

என்றும் நட்புடன்
மஸாகி
24.07.2006

.

pradeepkt
24-07-2006, 11:58 AM
ஆகா
மஸாகி, வாழ்க உம் பணி.

இனியவன்
24-07-2006, 01:19 PM
மஸாகி வெளுத்து வாங்குறீங்க.
எங்கள் அறியாமைக் கறை விலகட்டும் உங்களின் போதனையில்.

malarvili
24-07-2006, 06:09 PM
Good jobb

இளசு
24-07-2006, 09:33 PM
ஆஹா அற்புதம் மஸாகி. நான் எதிர்பார்த்திருந்த கல்விப்பாடம்.
அழகாய் சொல்லித்தரும் உங்களுக்கு இந்த மாணவனின் நன்றி.
தொடருங்கள். தமிழாக்கச் சொற்கள் அருமை.

மஸாகி
25-07-2006, 03:51 AM
என்னை
உற்சாகப் படுத்திக் கொண்டிருக்கும்
என் நட்பிற்கு
இனியவனுக்கும்
மற்றும் இனியவர்களுக்கும்
நன்றிகள்..

கடவுளின் அருள்..!
உங்களின் வரவேற்பு..!
இதைவிட வேறென்ன வேண்டும்..

என் பயணங்கள் தொடரட்டும்
உங்கள் எதிர்பார்ப்புகளை
நிறைவு செய்யும் வரை..

என்றும் நட்புடன்
மஸாகி
25.07.2006

ஓவியா
25-07-2006, 02:01 PM
விவரமான விளக்கம்..
நன்று

உங்கள் பணி தொடரவும்

arul5318
25-07-2006, 06:43 PM
நண்பர் அவர்களுக்கு நன்றி நான் நண்பர்களிடம் கேட்டிருதேன் இப்போது இந்த நண்பர் பவர்பொயின்ரைப்பற்றி விளக்கியிருகப்பது மிக பிரயோசனமாக இருக்கிறது மேலும் இதனைத்தொடர்ந்து இதைப்பற்றிய அனைத்து விடயங்களையும் விளக்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன். நன்றி நண்பரே

arul5318
25-07-2006, 06:52 PM
அடுத்த பகுதியைத் தொடருங்கள் நண்பரே நான் மிகவும் பயனடைந்துள்ளேன் என்பதை நண்பருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

மஸாகி
26-07-2006, 03:47 AM
ஆஹா அற்புதம் மஸாகி. நான் எதிர்பார்த்திருந்த கல்விப்பாடம்.
அழகாய் சொல்லித்தரும் உங்களுக்கு இந்த மாணவனின் நன்றி.
தொடருங்கள். தமிழாக்கச் சொற்கள் அருமை.

தமிழில் எழுதுவது
எத்தனை சுவாரஸியமான
அனுபவம் - என்று
எழுதத் தொடங்கியபோதுதான்
புரிந்தது..

உங்கள்
உற்சாகத்திற்கு நன்றி..

என்றும் நட்புடன்
மஸாகி
26.07.2006

மஸாகி
26-07-2006, 03:55 AM
அடுத்த பகுதியைத் தொடருங்கள் நண்பரே நான் மிகவும் பயனடைந்துள்ளேன் என்பதை நண்பருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

காத்திருங்கள் நண்பரே..
வெகு விரைவிலேயே
உங்கள் அனைவரையும் - இத் தொடரின்
3 ஆவது பகுதியுடன் சந்திக்கின்றேன்..

நட்புக்கு - மஸாகி
26.07.2006

உதயா
29-07-2006, 10:18 AM
சுவராச்சியமாகவும் கற்றுக்கொள்ள ஆவளாகவும் உள்ளது.

aren
29-07-2006, 08:37 PM
நன்றாக புரியும்படி ஆரம்பித்திருக்கிறீர்கள். தொடருங்கள்.

நான் எங்கள் கம்பெனியின் Newsletterஐ பவர்பாயிண்ட் மூலம் செய்துவருகிறேன், நன்றாகவே வருகிறது. ஆனால் இன்னும் இதைப் பற்றி நன்றாக தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆசை உங்கள் மூலம் நிறைவேறும் என்று நினைக்கிறேன்.

MURALINITHISH
06-05-2008, 07:55 AM
எவ்வளவு அழகான விளக்கம்
முடிந்தவரை தமிழ் சொற்கள் படிக்க படிக்க ஆச்சரியமாக இருக்கிறது
ஆனால் இதுவரை நிறை சொற்கள் ஆங்கிலத்தில் படித்து பழகி விட்டாதால் புரிய சிறிது நேரம் ஆகிறது
இதை சொல்ல வருத்துமாகதான் இருக்கிறது
இருந்தாலும் உண்மை சொல்லிதானே ஆக வேண்டும்
அதனால் இதை படிப்பது சுலபமாக எனக்கு இல்லை