PDA

View Full Version : காயத்ரி.. சிறுகதை..



rambal
24-04-2003, 02:59 PM
"என்ன சார் பையனுக்கு எல்லா ரிக்கார்ட்ஸ¤ம் இருக்குல்ல." ஆபிஸ்பாய் கேட்டான்

"எல்லா ரிகார்ட்ஸ¤ம்னா?"

"முக்கியமா ஜாதி சர்ட்டிபிகேட் கொண்டு வந்துருக்கிறீங்களா?"

"ம்ம் இதுல எல்லா சர்ட்டிபிகேட்டோட ஜெராக்ஸ் காப்பியும் இருக்கு"

அதை வாங்கிக் கொண்டு ஒரு டோக்கன் கொடுத்தான்.

இன்னிக்குத் தேதிக்கு குழந்தையை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதென்றால் அது பார்லிமெண்ட்டில் சீட் கிடைக்கிற மாதிரி ஆயிடுத்து. எவ்வளவு பைசா இருந்தாலும் இதுதான் விதி. இதோ என் பையனை சேர்ப்பதற்கு நீண்ட வரிசையில் கடைசியாக. அங்கு இருந்தவர்கள் எல்லாம் தம்பதி சமேதரமாய். நான் மட்டும் ஒண்டிக்கட்டை. தனியா என் பையனை வைச்சுக்கிட்டு . அவள் இருந்தால் இவ்வளவு தூரத்திற்கு கஷ்டப்பட்டிருக்கவே மாட்டேன். என்ன செய்ய விதி.

"டேய் கண்ணா.. மழையில நனைஞ்சது போறும். வந்து தலை துவட்டிக்க." என காயத்ரியின் குரல் கீதமாய் காற்றில் வர தொப்பலாய் நனைந்திருந்த நான் கீழிறங்கிப் போய் தலை துவட்டினேன்.

"அப்படி என்னடா மழைப் பைத்தியம் உனக்கு. ஜன்னி வந்தா என்னாகும் தெரியுமா?"

"என்னாகும் எனக்குப் பக்கத்தில் உக்கார்ந்து காக்க காக்க கதிர்வேல் காக்கன்னு படிப்ப. ராத்திரி பூரா கண் முழிச்சிட்டிருப்ப."

"உனக்கு திமிருடா. நான் ஒருத்தி இருக்கேன்ல பைத்தியக்காரி. அம்மா இல்லைன்னு செல்லங்கொடுத்தா இப்படியா பண்றது. அப்பாவுக்குத் தெரிஞ்சா என்னை கொன்னே போட்டுடுவார் . சொன்னாக்கேளுடா. இன்னும் இரண்டு நாளைக்கு மழை இருக்காம். அதனால நனையாத சமத்தா இருக்கணும்."

இப்படி சொல்வதால் நான் ஒன்றும் குழந்தை இல்லை. எனக்கு வயது 15. அவளுக்கு 22. எனக்கு ஒரு எட்டு வயசு இருக்கும் போதே அம்மா தீர்க்க சுமங்கலியா போய்ட்டா. அப்போதிலிருந்து இவள்தான் எனக்கு அம்மா.. அக்கா.. எல்லாம்.

தலை துவட்டி விட்டு அடுக்களைக்கு வர அங்கு சூடா காபி தயாரித்துக் கொண்டிருந்தாள்.

"காய் ஒன்னு சொன்னா தப்பா நினைக்கமாட்டியே?"

"என்னடா.. பீடிகை பலமா இருக்கு?"

"இந்த ஜாதி சர்ட்டிபிகேட் பத்தி நீ என்ன நினைக்கிற?"

"டேய் பாவி அதை என்ன பண்ண சொல்லு?"

"ஒன்னும் இல்லை. எரிச்சிட்டேன்"

"எப்படா?"

"நேத்து" அதை சொல்லி முடிப்பதற்குள் என் கன்னத்தில் அவள் கை இறங்கி இருந்தது.

"என்ன பெரிய பாரதின்னு நினைப்பா? அப்பாவுக்கு தெரிஞ்சே கொலையே பண்ணிடுவார். சும்மாவே FCங்கிறதாலேயே லோலோன்னு அலையிறோம். இதுல OC ஆனா அவ்வளவுதான். உனக்கு எல்லாமே விளையாட்டாப் போச்சு. இப்ப டென்த் முடிச்சு ப்ளஸ் ஒன் போகும் போது கேப்பானே?" ஒரு படபடப்பு அவளிடம் தொற்றிக் கொண்டது.
டெலிபோனை எடுத்து அவள் பிரண்ட் சுஜாதாவிற்கு சுற்றி விளக்கம் சொல்லி அவள் அண்ணா மூலமாக மற்றொரு ஜாதி சான்றிதழுக்கு ஏற்பாடு செய்தாள்.

"என்ன ரொம்ப வலிக்குதா?'

"இல்லை இனிக்குது"

"பின்ன என்ன. நீ இன்னும் சின்னக் குழந்தையா? இதெல்லாம் சொல்லி புரிய வைக்கிறதுக்கு. கோச்சுக்காதடா.. ப்ளீஸ்.."

அந்த உருகலில் சமாதானம் அடையாவிட்டால் பின் எனக்கு வேண்டிய சலுகைகள் கிடைக்காது.


"என்ன சார் அவங்க வரலையா?" அருகில் இருந்த நபர் அனுசரணையாய் கேட்டார். அந்தக் குரலில் ஒரு கணம் நிலைக்கு வந்தேன்.

"இல்லை" இதை சொல்லும் போது நான் கொடுத்த அழுத்தத்தில் அவள் இந்த உலகிலேயே இல்லை என்பதை புரிந்து கொண்டிருப்பார்.

"போன வருசமா மிஸ்ஸாயிடுச்சு. இந்த வருசமாவது என் பையனை சேர்த்திடணும். இந்த சிட்டியிலேயே இது தான் பெரிய பள்ளிக் கூடம். அதான் இப்படி வந்து தவங்கிடக்க வேண்டியிருக்கிறது." அவர் சோகம் சொல்ல ஒரு புன்னகையை பதிலாகக் கொடுத்துவிட்டு சீனியை சரியாக என் மடியில் அமர்த்தினேன். அவன் சமத்தான பையன். என்னை மாதிரி கிடையாது. அவன் அம்மா மாதிரி.


"காய் காய்.."

"ஏண்டா ஏலம் விடுற?"

"அந்த ஜனனி பிசாசு இங்க ஏன் வற்றா?"

"அதுக்கு என்ன இப்ப?"

"எனக்குப் பிடிக்கலை. இனி அவ இங்க வரக்கூடாது"

"ஏண்டா? அவளுக்கு கணக்கில வீக், டியூசன் எடுக்க முடியுமான்னா? எனக்கும் பொழுது போகனும்னு சரின்னுட்டேன்"

"அவ இங்க வரக்கூடாதுன்னா. வரக்கூடாது."

"அவ என்னடா பண்ணினா உன்னை?"

"அதெல்லாம் உனக்குத் தேவையில்லை"

"ஓ அவ்வளவு பெரிய ஆளாயிட்டீங்களா?"

"காத்தால என் தூக்கம் கெடுது. எனக்கு நீ தற்ற காபி மிஸ்ஸாகுது."

"சரி அவ்வளவுதான. அவளை சாயங்காலமா வரச் சொல்றேன் போதுமா?"

சரி என்று ஒப்புதலுக்கு தலை ஆட்டிவிட்டு என் அறைக்கு சென்றேன்.


"இண்டர்வியூல என்ன கேப்பாங்க?" ஏதோ வேலைக்கான இண்டர்வியூவிற்கு போவது போல எனக்கு அடுத்து வந்து வரிசையில் அமர்ந்தவர்அக்கறையாய் கேட்டார். அவருக்கு ஒரு இருபத்தைந்திருக்கும். அவர் மனைவிக்கு ஒரு இருபத்தி மூனு இருக்கும். அந்த இடத்தைலேயே மிக இளமையா இருந்தது அந்த ஜோடிதான்.

"ஒன்னும் பெரிசா கேக்க மாட்டாங்க. இந்த ஸ்கூலுக்கு பீஸ் கட்டுற அளவுக்கு வசதி இருக்காங்கிற மாதிரிதான் கேப்பாங்க."

"வேற என்ன கேப்பாங்க?"

"அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்"

"இல்லை நாங்க லவ் மேரேஜ். கலப்புத் திருமணம். அதான். வேற எதாவது வில்லங்கமா கேட்டா"

"பயப்படாதீங்க. உள்ள இருக்கிறவங்களுக்கு பணம்தான் பிரதானம். மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்" இந்தப் பதிலில் கொஞ்சம் ஆசுவாசமடைந்தவராய் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டார். இங்கு இன்னும் கலப்புத் திருமணங்கள் சரியான முறையில் ஆதரிக்கப்படவில்லை. எத்தனை காலமானாலும் ஒரு பாதுகாப்பற்ற உணர்விலேயே காலம் தள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இது காலகாலமாய் நடந்து வரும் அயோக்கியத்தனம். உள்ளம் குமுறியது.

"டேய் சுவாமி"

என்னைக் கண்ணா என்று கூப்பிடாமல் சுவாமி என்று பெயர் சொல்லிக் கூப்பிடுகிறாள் என்றால் ஏதோ வில்லங்கம் என்று அர்த்தம்.

"என்ன காய்?"

"இதென்னடா?"

அவள் கையிலிருந்த ஒரு ரோஸ் கலர் கவரைக் கண்டதும் என் முகம் பேயறைந்தது போல் ஆனது. அதிலேயே அவள் புரிந்து கொண்டாள்.

"யாருடா அது மரியாதைக்குரிய மகாராட்சசி?"

முழுதும் படித்துவிட்டாள் போல் உள்ளது. சரி இன்று பொலி போடப் போவது உறுதி.

"சொன்னாக் கோச்சிக்கமாட்டியே?"

"சொன்னாலும் சொல்லைன்னாலும் கோச்சுக்குவேன். ஆனா, நீ சொல்லியே ஆகனும்."

"ஜ...ன...னி.." தந்தி அடித்துக் கொண்டே உச்சரிக்க..

"எனக்கு அப்பவே தெரியும்டா. இதுலதான் போய் முடியும்னு. ஊமைக் கொட்டானாட்டம் இருந்துக்கிட்டு இந்த வேலையெல்லாம் பன்றாளா? இன்னிக்கு வரட்டும். வைச்சுக்கிறேன்?"

"காய் அப்படில்லாம் பண்ணிடாத. அப்புறம் அவ பீல் பண்ணுவா"

"அப்ப நான் பீல் பன்றது பத்தி உனக்கு அக்கறை இல்லை"

"சரி சரி, கலாட்டா பண்ணாதே. நானே உன்னண்ட சொல்லனும்னு இருந்தேன். அதுக்குள்ள நீயே கண்டுபிடிச்சிட்ட."

"எப்ப சொல்லனாம்னு இருந்த. ஊரை விட்டு ஓடிப் போயி கல்யாணம் பண்ணதுக்கு அப்புறமா?"

"அப்படியெல்லாம் இல்லை. காலேஜ் முடிஞ்சதும் சொல்லணும்னு இருந்தேன். அதுக்குள்ள நீயே கண்டு பிடிச்சிட்ட"

"ஓ இது மூன்றாண்டுத் திட்டமா? சரி எப்ப ஆரம்பிச்சது?"

"அவ உங்கிட்ட டியூசன் படிக்க வந்தாளே. எதுக்குன்னு நினைக்கிற?"

"அப்படின்னா அப்பவேவா. வேற என்ன கர்மம்லாம் பண்ணித் தொலைச்ச?"

"ஐயோ நீ நினைக்கிற மாதிரி தப்பால்லாம் கிடையாது."

"டேய் கண்ணா, இது படிக்கிற வயசு. சொன்னாக் கேளு. முதல்ல படி. அப்புறம் பாத்துக்கலாம். யாருக்காவது தெரிஞ்சா அப்புறம் பிரச்சினையாகி அவளோட படிப்பும் நின்னு போகும். உண்மைக்குமே உனக்கு உன் காதல் மேல நம்பிக்கை இருந்தா அவளை காலேஜ் முடியிர வரைக்கும் பாக்கக்கூடாது. என்ன சொல்றது புரியுதா?"

"ம்ம்"

"எனக்கு சத்தியம் பண்ணிக் கொடு. நான் அவகிட்ட பேசிப் பாக்கிறேன். அவளும் ஒத்துக்குவா. என்ன நான் சொல்றது?'

"சரி. நீதான் முடிவு பண்ணிட்டியே. பின்ன நான் சொல்ல என்ன இருக்கு?" என்ற படி சத்தியம் செய்தேன்.


இன்னும் இருவர் தான், அதன்பின் என் முறை வந்துவிடும். பார்க்கலாம். எனக்குள்ளும் அந்த இண்டர்வியூ பயம் தொற்றிக்கொண்டது. பையனின் அம்மா எங்கே என்று கேட்டால்? பொய் சொல்லலாமா? வேண்டாம் உண்மையையே சொல்லிவிடுவோம். அதுதான் நல்லது. இப்படியாக மனதிற்குள் எண்ணங்கள் வந்து போக என் முறை வந்தே விட்டது.

உள்ளே ஒரு பெண் அமர்ந்திருந்தார். மிஸஸ் மேரி என்று பெயர்பலகை பொறிக்கப் பட்டிருந்தது.

"குட் மார்னிங்க் மேடம்"

"குட் மார்னிங்" என்று விட்டு

"இதுதான நீங்க கொடுத்த டீடெய்ல்ஸ்" என்று நான் கொடுத்த சர்ட்டிபிகெட்டோட பைலைக் காண்பித்தார்.

"யெஸ்"

"இதுதான் உங்க அடாப்டட் சன்னா?" என்று சீனிவாசன் பக்கம் கை காண்பித்தார்.

"ஆம்"

"என்னாச்சு இந்தப் பையனோட அம்மாவிற்கு?"

"பிரசவ நேரத்தில் பிட்ஸ் வந்து போய் சேர்ந்துட்டா?"

"அப்படின்னா இந்தப் பையனோட அம்மா உங்களுக்கு என்ன வேணும்?"

"இந்தப் பையனோட அம்மா எனக்கும் அம்மா. அவங்க பெயர் காயத்ரி"

இளசு
24-04-2003, 06:08 PM
ராம்
ஏனோ இந்தக் கதையை வரிவரியாப் பிரிச்சி அலசி விமர்சனம் எழுதத் தோணலே...(தெரியாம கதைமுடிவைச் சொல்லி, கதையைப் படிக்காம
சர்னு பிரௌசரை தள்றவங்க கண்ணுல இது பட்டுடக்கூடாதுன்னு கவலை வேற!!!!)
ஒட்டு மொத்தமா.... ஒரு நல்ல அனுபவமா இருக்கு இந்தக் கதையை படிச்சது..
முதல் கதைப்போலவே சங்கிலி கோர்ப்பு நடை...
தெளிவா கதை நகர இயல்பான உரையாடலில் சம்பவங்கள்...
கடைசி வரி.....ஓஹென்றி முத்திரை.... இயல்பாய் அம்சமாய் பொருந்திய நேர்த்திக்கு தனிப் பாராட்டு...

ஒரே சந்தேகம்... OC & FC .. ஒண்ணுதானே.... !
(சலுகை பெறுபவர்கள் மட்டும்தானே அதை இழக்கவும் முடியும்???)

கலப்பு மணம் புரிந்தவர்கள் கடைசி வரை ஒரு அநிச்சயச் சூழலில் வாழநேரும்
அவல உண்மையை நாசூக்காய் சுட்டியதுக்கு ஒரு ஷொட்டு!

மொத்தத்தில், சுவையான கதை தந்து.... மன்ற இணைய பக்கங்களை
தரமான இலக்கிய இதழ் தரத்துக்கு அழைத்துப் போகும் உன் பணிக்கு
வந்தனம்..நன்றி....
அண்ணன்.

rambal
24-04-2003, 08:38 PM
பாராட்டுக்களுக்கு நன்றி..
வரிவரியாக விமர்சணம் செய்து கலக்கியது போல் கலக்கவில்லை என்பதற்காக வருத்தப்படவில்லை. அதைவிட நீங்கள் சொல்லியிருக்கும் காரணம் மிக அருமையானது. கதை எழுத இன்ஸ்பிரேசனே சுஜாதாதான். அதில் கொஞ்சம் போல் பாலகுமாரன் பாணியில் தத்துவங்களை கலக்கிறேன். மற்றபடி என் அனுபவங்களில் நான் கண்ட இந்தியப் பிரச்சினைகளை கொஞ்சம் பூசுகிறேன். என்ன செய்ய? பாப்லோ நெருதாவும், செகுவெராவும் மறக்கக்கூடிய நபர்களா?
Oஹென்றி பற்றி நம் தளத்தில் சொன்னால் நலம்.
இரண்டும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருப்பவை. இருந்தாலும் FC க்கும் OC ஒரு சிறிய வேறுபாடு உள்ளது. ஆனால், இந்த்க் கதையில் அடுத்த ப்ளஸ் ஒன் போக சாதிச் சான்றிதழ் கேட்பார்கள் அல்லவாஅதனால் அதை மையப்படுத்திவிட்டேன்.

kathukutti
24-04-2003, 08:40 PM
ராம் நல்ல கதை படித்த திருப்தி. நமது தளம் எங்கோ போபோகிறது என்று எனக்கு பட்சி சொல்கிறது.

kaathalan
24-04-2003, 08:59 PM
நல்ல கதை தந்த அண்ணலுக்கு நன்றிகள், நல்லா இருந்தது. அதுவென்ன ஒஹொன்றி, பாப்லோ நெருதா மற்றும் செகுவெரா இவர்கள் நாவல் ஆசிரியர்களா. கொஞ்சம் இவர்களை அறிமுகப்படுத்துங்களேன் எங்களுக்கும்.

rambal
25-04-2003, 06:14 AM
பாப்லோ நெருதா புரட்சிக்கவிஞர்..
செகுவேரா - புரட்சியாளர். கியூபாவிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தவர்.
O ஹென்றி பற்றி அண்ணன்தான் சொல்லவேண்டும்..

இளசு
25-04-2003, 07:28 AM
O ஹென்றி பற்றி அண்ணன்தான் சொல்லவேண்டும்..

இங்கே சொல்லி இருக்கிறேன்....
http://www.tamilmantram.com/board/viewtopi...php?p=5841#5841 (http://www.tamilmantram.com/board/viewtopic.php?p=5841#5841)

karikaalan
25-04-2003, 12:53 PM
ராம்பால்ஜி!

அனுபவித்துப் படித்தேன். பல ஆண்டுகள் ஓடிவிட்டன இதுபோன்ற வரிசையில் நின்று. அப்போதும் இது போலத்தான் கேள்வி, பதில்கள்.

சோகம் இருப்பது துவக்கத்திலேயே தெரிந்தாலும், முடிவு கண்ணீரே.

வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

poo
25-04-2003, 03:59 PM
ஆழ்ந்து படிக்க வேண்டிய கதை..

அருமை. பாராட்டுக்கள் ராம்!!

lingam
25-04-2003, 05:52 PM
ராம்
FC, OC என்னவென்று நானறியேன் (நான் இலங்கைத் தமிழன் அதனால் இந்த விவகாரங்கள் ஒன்னும் தெரியாது) ஆனாலும் ஊகித்து அறிந்து கொண்டேன். நினைவும் நனவுமாக மாறி மாறி உங்கள் கதை போகும் போக்கு அபாரம்.

Emperor
26-04-2003, 07:33 AM
சொந்த கதைகள் கொடுக்கும் ராம்பாலுக்கு என் வந்தனம், வாழ்க நீர் பல்லாண்டு.

aren
27-04-2003, 07:07 AM
அழகான ஒரு கதை. அருமையான படைப்பு. உங்கள் தொண்டு தொடரட்டும். பாராட்டுக்கள்.

madhuraikumaran
29-04-2003, 05:38 AM
நிகழ்காலத்துக்கும் கடந்தகாலத்துக்கும் alt+tab போட்டு, பின்னிப்பின்னி அற்புதமாய் எழுதியிருக்கிறீர்கள்.... கிளைக்கதையாய் இடையே விடலைப் பருவத்துக் காதலும் !!!
தொடர்ந்து அசத்துங்கள் !!! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !!!

gankrish
29-04-2003, 07:29 AM
அருமையான கதை ராம். அழகாக எழுதியுள்ளீர்.

மனிதன்
29-04-2003, 08:09 AM
ராம் தங்களின் கதை அற்புதமான படைப்பு... சொந்தக் கதை எழுதி அசத்துகிறீர்கள்... ஒன்றி வாசித்தேன்...

Dinesh
01-06-2003, 07:10 AM
உங்களின் ஒவ்வொரு கதையிலும் கடைசி வரிதான்
கதையின் போக்கை அப்படியே மாற்றி,
வித்தியாசமான முடிவாக அமைந்துவிடுகின்றது..
வாழ்த்துக்கள் ராம்பால் அவர்களே!

தினேஷ்.

rambal
13-04-2004, 04:55 PM
நன் எழுதிய கதைகளில் சிறந்தவை என்று நினைபது இந்தக் கதைதான்.
இதன் வடிவம் என்னையறியாமல் நிகழ்ந்தது. திருப்பி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் வாசிக்கும் பொழுதுதான் அந்த வடிவத்தை அறிந்து கொண்டேன்.
அந்த வகையில் இந்தக் கதை என்னைப் பொறுத்த வரை சிறந்தது..

ஜோஸ்
20-05-2004, 01:44 PM
அற்புதமான கதை... வாழ்த்துக்கள் ராம்பாலுக்கு...

MURALINITHISH
18-08-2008, 09:43 AM
எத்தனையோ குழந்தைகள் தாயை இழந்து தவிக்க இவனுக்கொரு தாயாய் அவள் அவள் குழந்தைக்கு தாயுமானவனாக அவன்