PDA

View Full Version : பெரு விருட்சமாய்



ப்ரியன்
08-07-2006, 10:56 AM
என்
வாழ்வில் பெருவிருட்சமாய்
எழுந்து நிற்கிறாய் நீ;
தினம் தினம்
பூத்து பூத்து
கால் வேர்களைப்
பூஜித்தப்படி நான்!

*

உனை திட்டிவிடும்
கணங்களில் - உன்
விழியோரம் சேரும்
இரு துளிகளின்
வெப்பத்தில்
எரிந்துவிட துணிகிறேன் நான்!

*

எதையெதையோ
கவிதையாக்கும் எனக்கு
உன்னின் வெட்கத்தை
ஒரு எழுத்தாகக்கூட ஆக்கும்
அறிவு எட்டவில்லை இன்னமும்!

*

இப்போதுதான் அவிழ்ந்த மலராய்
எப்போதும் முகம் வைக்க
எப்படி இயலுகிறது உன்னால்?
முடிந்தால்
அந்த இரகசியத்தை கொஞ்சம்
என் வீட்டுத்தோட்ட மலர்களுக்கும்
சொல்லித் தாயேன்!

*

எனை பூவாக்கி சூடிக்கொள்ளேன்
புதுமலராய் பூத்திருப்பேன்
எப்போதும்!
உந்தன் வாசத்தில் - வசத்தில்!

*

கடற்கரையிலிருந்து நாம்
எழுந்து வந்துவிட்டாலும்
அங்கேயே அருகருகில் அமர்ந்து
பேசிக்கொண்டே இருக்கின்றன
மண்ணில் அமர்ந்துவிட்டு வந்த
நம் தடங்கள்!

- ப்ரியன்.

இளசு
08-07-2006, 10:42 PM
நிழல் மடி தந்து
கரியமிலம் வாங்கி
உயிர் மூச்சு வழங்கி
கத்திக்கீறல் பொறுத்து


பெண் என்னும் விருட்சம்..

எண்ணிச் சுகிக்கும் காதல் வரிகள்...


பாராட்டுகள் ப்ரியன்.

பென்ஸ்
13-07-2006, 11:04 PM
தாமதமான பதில்களுக்கு மன்னிக்கவும் விக்கி...


அறையின் மூலையில் முடங்கி
எங்கிருந்தோ வீசும் காற்றின்
ஸ்பரிசத்தை கூட அனுபவிக்க
மனமில்லாமல்...

யாருமில்லாத தேசத்தின் நடுவில்
யாருக்காகவோ காத்திருப்பது நிலையில்
யதாத்த கடிவாழத்தை களைந்து
காற்றில் சிறகடிக்கும் அந்த கணக்களில்..

இந்த கவிதைகளை அசைபோட்டு
பதில் குறிப்பை மனதில் எழுதிவைத்து
கிடைக்கும் நேரங்களில் கணினி முன் வந்தால்...

குறிப்பை மறந்தாலும்
மீண்டும் இந்த கவிதைகளை வாசித்த
மகிழ்ச்சியுடன்....


வாழ்த்துகள்.....