PDA

View Full Version : ஜுலை 07



இனியவன்
07-07-2006, 02:24 PM
1) தமிழர்கள் மீது அரச படைகளின் அத்துமீறலை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட
அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் கேட்டுக் கொண்டார். மாவட்ட போர்நிறுத்த கண்காணிப்புக்குழுத் தலைவர் ஊவே ஜான்சனைச்
சந்தித்தபோது அவர் அந்தக் கோரிக்கையை முன் வைத்தார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அவர்களின் சந்திப்பு நடந்தது.

இடம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் நிவாரணப் பொருட்களை பெறுவதில் கடும் சிரமங்கள் உள்ளன. அதற்கு அரசுப் படையினரின்
கெடுபிடி தான் காரணம் என்று எழிலன் சுட்டிக் காட்டினார். அது பற்றி உரியவர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்டும் என்று ஊவே
ஜான்சன் உறுதியளித்தார்.

2) அம்பாறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை நோக்கி சிறிலங்காப் படையினர் சரமாரியான எறிகணை வீச்சுத்
தாக்குதலை நடத்தினர்.

தாண்டியடி சிறப்பு அதிரடிப்படை முகாமிலிருந்து துணை இராணுவக் குழுவினர் முன்நகர்ந்து சூனியப்பிரதேசத்தில் தாக்குதலுக்கு தயாராக
நின்றனர்.

விடுதலைப் புலிகள் எவ்விதத் தாக்குதலும் நடத்தவில்லை. இருப்பினும் காஞ்சிரங்குடா சிறப்பு அதிரடிப்படை முகாமிலிருந்து பாவட்டாப்
பிரதேசம் நோக்கியும் தாண்டியடிப்படை முகாமிலிருந்து தங்கவேலாயுதபுரம் குடியிருப்புக்களை நோக்கியும் படையினர் எறிகணைத்
தாக்குல் நடத்தினர்.

இதனிடையே அம்பாறை மாவட்ட அரசியல்துறையினரை இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு சந்தித்துப் பேசியது. படையினரின்
அத்துமீறல் பற்றி அப்போது அவர்களிடம் எடுத்துக் கூறப்பட்டது.

3) இலங்கை புலனாய்வு அமைப்புகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய தலைவர் எல்லாவெல மேதானந்த
தேரர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்ட நீட்டிப்பின் மீது விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய அவர், விடுதலைப் புலிகளின் புலனாய்வு அமைப்பு பொட்டு அம்மானின் கீழ் ஒரே பிரிவாக செயற்படுகிறது. அதைப்போல் அரசாங்கத்தின் அனைத்துப் புலனாய்வுப் பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றார். இலங்கையில் தமிழர்களுக்குத் தாயகம் இல்லை. அது தொடர்பான விவாதத்துக்கு தாம் தயார் என்றும் அவர் கூறினார்.

தமிழர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டால் பதிலடியாக இராணுவத்தினர் கொல்லப்படுவது தவிர்க்கமுடியாதது என்று தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ம.க.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். நாடாளுமன்ற விவாதத்தின் போது அவர் அவ்வாறு
கூறினார்.

அரசாங்கத்துக்கு உண்மையிலேயே சமாதானத்தின் மீது ஆர்வமிருந்தால் கூலிப்படைகளின் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும். அதன்
பிறகே படையினரைக் கொல்ல வேண்டாம் என்று புலிகளிடம் நாங்கள் கோர முடியும் என்று சிவாஜிலிங்கம் எடுத்துரைத்தார்.

ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க, தமிழீழம் உருவானால் கொழும்பில் உள்ள தமிழர்கள் அங்கு சென்றுவிட வேண்டும் என்று
கூறியிருந்தார். அதற்குப் பதிலளித்த சிவாஜிலிங்கம், சுதந்திர தமிழீழம் உருவானால் அங்குள்ள சிங்கள மக்கள் சம உரிமையுடன் வாழ
வழி செய்யப்படும் என்றார்.

4) இலங்கையின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக கோட்டபாய ராஜபக்ச நியமிக்கப்படக் கூடும் என்று தெரிகிறது. அவர் அதிபர் மகிந்த
ராஜபக்சவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் தேர்தலுக்குப் பிறகு இதுவரை பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்படவில்லை. எனவே தற்போது பாதுகாப்பு அமைச்சின்
செயலராக உள்ள கோட்டபாய ராஜபக்சவை அந்தப் பொறுப்புக்கு நியமிக்க மகிந்த முடிவு செய்துள்ளதாக அவருடைய அலுவலக
வட்டாரங்கள் தெரிவித்தன.

முப்படைகளின் தளபதியான டொனால்ட் பெரேராவை பாதுகாப்பு அமைச்சின் செயலராக நியமிக்கும் சாத்தியங்கள் குறித்தும் மகிந்த
ராஜபக்ச ஆராய்வதாகத் தெரிகிறது. அப்படி ஏதேனும் மாற்றம் வரும் பட்சத்தில் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட முப்படைத்
தளபதியாக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.