PDA

View Full Version : பட்டினி ஃபேஷனும் பித்தக்கல்லும்!



தாமரை
05-07-2006, 03:01 PM
பட்டினி ஃபேஷனும் பித்தக்கல்லும்!
எம்.கஸ்தூரி, சென்னை 17
மங்கையர் மலர், ஜூலை-2006


இளம் பெண்களுக்காக....

இப்ப எல்லாம் யாரைப் பார்த்தாலும் பித்தப் பையிலே கல் இருக்கு, டாக்டர் ஆபரேஷன் பண்ணணும்னு சொல்றாரு என்று என்னவோ, எங்க வீட்டு பீரோ லாக்கரிலே நிறைய ரத்தினக் கற்கள் இருக்குன்னு பெருமையா சொல்ற மாதிரி பேசறது அதிகமாயிடுச்சு! பித்தக் கற்கள் பற்றி சொல்லுங்க டாக்டர்! என்று சென்னை, ஜி.என்.சாலையில் உள்ள லேஸர் அண்ட் லேபரோஸ்கோப் மருத்துவமனையின் மருத்துவர் எஸ்.அஷோக்கை கேட்டபோது.....

பித்தக் கற்கள் பற்றித் தெரிந்து கொள்ளும் முன், பித்த நீர், பித்தப் பையைப் பற்றியும் தெரிந்து கொள்வது நலம் என்று ஆரம்பித்தார்.

இரைப்பையில் கூட்டித் தள்ளப்படும் உணவுக்கூழ் முதலில் முன் சிறு குடலுக்குள் நுழைந்து, தலையைக் காட்டுகிறது. இங்கேதான் செரிமானமும் செரிக்கப்பட்ட உணவிலிருந்து சத்துப் பொருட்கள் உறிஞ்சப்படுவதும் நிகழ்கின்றன.

இந்த செரிமான நிகழ்ச்சிக்காக என்றே, சில சிறப்புச் செரிமான நீர்கள், குடலுக்குள் சுரக்கின்றன. ஆனால் மேலும் மேலும் கடினமான, கொழுப்புமிக்க பொருள்கள் ஒரேயடியாக வந்து விழும்போது, செரிமான நீர்கள், ஸாரி, எங்களால் முடியாது என்று காலை வாரி விட்டுவிடுகின்றன.

உடனே பித்த நீரை அனுப்பி வைக்கவும் என்று ஈமெயில் ஒன்று கல்லீரலுக்கு அனுப்பப்படுகிறது. சிறுகுடலின் நரம்பு வழியாக இந்தச் செய்தி கிடைத்ததும், கல்லீரல் உடனே பித்தநீரை அனுப்பி வைக்கிறது. இந்த பித்த நீர் சிறு குடலுக்குப் போய், அங்கே கொழுப்பை ஜீரணம் செய்து முடித்துவிட்டு, இரத்தக் குழாய் வழியாக மீண்டும் கல்லீரலுக்கே வந்துவிடும்.

பித்த நீர் இல்லை என்றால் என்னாகும்? கொழுப்பு அதிகமாகச் சேர்ந்து உடலியக்கம் பாதிக்கப்படும்!

பித்தநீரின் குணாதிசயம் இது தான்! ஆனால் பித்தப்பை?
தேவையே இல்லை! பித்தப் பை, ஓர் எக்ஸ்ட்ரா உறுப்புதான்!
உணவு செரிமானத்துக்கு, கல்லீரல் அனுப்பும் பித்தநீர் நேராகக் குடலுக்குச் சென்றாலே போதும்தான். பித்தப்பை, ஒரு சேமிப்புப் பைதான்! நாம் சாப்பிடும் உணவில் கொழுப்புப் பொருள்கள் அதிகரிக்கும் போது, பல சமயங்களில் கற்களாக உருமாறி, பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன.

சில சமயம் ஸ்ட்ரெப்டோகாக்கை என்ற பாக்டீரியா, டைஃபாய்டு கிருமி போன்றவை, பித்தப் பையைத் தாக்கி பித்தக் கற்களை உண்டாக்கிவிடும். பித்த நீர் முறையாக வெளியேற முடியாதபடி, அடைப்பு ஏற்பட்டாலும் பித்த நீர் தேக்கம் ஏற்பட்டு கற்கள் உண்டாகும்.

பித்தக் கற்கள்: பித்தக் கற்களின் பெரும்பகுதி மிக்ஸட். ஸ்டோன்ஸ்களால் ஆனவைதான். கொலஸ்ட்ரால், கால்ஷியம் கார்பனேட், கால்ஷியம் பிலிரூபனேட் போன்ற கற்களின் கலவையாகத்தான் இருக்கின்றன.

பித்தக் கற்கள் யாருக்கு, ஏன் ஏற்படுகின்றன?

* பரம்பரை காரணமாக
* உடல் பருமன் உள்ளவர்களுக்கு
* கருத்தடை மாத்திரைகளை அதிகமாகச் சாப்பிடும் பெண்களுக்கு
* செக்ஸ் ஹார்மோன் மாற்றங்களால்
* இரத்த சோகை நோய் உள்ளவர்களுக்கு
* சிறுகுடல் பாதையில் ஏற்படும் வியாதிகள் காரணமாக
* விரதம் இருப்பதால்

என்னது? விரதம் இருப்பது நல்லது தானே? பித்தக்கற்கள் தோன்றும் என்கிறீர்களே? என்று நீங்கள் கேட்கலாம்.

வேளாவேளைக்குப் போதுமான உணவு கிடைக்காத போது, பித்தநீர் அளவுக்கு அதிகமாகச் சுரந்து கற்களாக உறைந்துவிடும் அபாயமிருக்கிறது. தீவிர டயட் செய்யும் இளம்பெண்களுக்குப் பித்தப்பையில் கற்கள் உண்டாவதன் காரணமே பட்டினி ஃபேஷன்தான்!

பித்தக் கற்களின் அறிகுறி என்ன?

விதவிதமான வலிகள் ஏற்படும். மாரடைப்பு வலியோ என்று கூட பயம் ஏற்படும். மார்பு எலும்புக்கும் தொப்புளுக்கும் இடையே வலிக்கும் முதுகிலும் தோள் பட்டையிலும் கடுப்பெடுக்கும் வாந்தியும் குமட்டலும் அவஸ்தை தரும்.

ஒரு சிலருக்கு எள்ளின் முனையளவு கூட வலி இருக்காது. ஆனால் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

இதற்கு ஆபரேஷன் மட்டும்தான் தீர்வா?

இல்லை... பித்தப்பை கற்களைக் கரைப்பதற்கென்றே மருந்துகள் உள்ளன. சில சமயம், பித்தநீர் பைக்குள் அதிர்வலைகளைப் பாய்ச்சி, கற்களைப் பொடியாக்கி, மலத்துடன் வெளியேற்றிவிடலாம். இம்முறையில் கணையத்தில் வீக்கம், பித்தப்பையில் அழற்சி உள்ளவர்களுக்கும் கருவுற்ற பெண்களுக்கும் ஏற்றதல்ல!
லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை முறையில் பித்தக் கற்களை, வலியின்றி மிகச் சுலபமாக நீக்கிவிடலாம். சில சமயம், குடல் ஒட்டுதல், அதிகம் இருந்தாலோ, பொது பித்த நாளத்தில் கட்டிகள் இருந்தாலோ, ஓப்பன் சர்ஜரி தேவைப்படலாம். பித்தப் பையைக் கற்களுடன் நீக்காவிட்டால், மஞ்சள்காமாலை நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

பித்தக் கற்கள் வராமலிருக்க என்ன செய்யணும்?
ரொம்ப ஸிம்பிள்! கொழுப்புக் கூடுதலாக உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். பட்டினி, விரதம் என வயிற்றைக் காயப் போடாமல், வேளா வேளைக்கு மிதமான நார்ச்சத்துள்ள உணவைச் சாப்பிட்டு, மிதமான உடற்பயிற்சி செய்து வந்தாலே கற்களுக்கு கல்தா கொடுக்கலாம்!

ஓவியா
05-07-2006, 03:18 PM
அருமையான பதிவு
நன்றி செல்வன் சார்


இன்றுடன் விரததிர்க்கு அல்வாதான்.....;) ;)

இனியவன்
05-07-2006, 03:28 PM
அது ஏதோ காதுல மாட்டுற கம்மலுக்குரிய கல்லு நினைச்சிருப்பாங்க நம்ம கண்மணிங்க. பரவாயில்லை இனிமேலாவது கவனமா இருப்பாங்க....

தகவலுக்கு நன்றி செல்வா,,,

இளசு
05-07-2006, 10:22 PM
நன்றி செல்வன்

இரவு முழுக்க பித்தப்பையில் சேரும் பித்தநீர் காலை உணவால் குடலுக்கு வருகிறது. அதனால் பெரியவர்கள் காலை உணவை முக்கியமாய் வலியுறுத்துகிறார்கள்.

இது தெரிந்தும் பல ஆண்டுகளாய் நான் காலையில் எதுவும் சாப்பிடுவதில்லை.

பிறருக்கு சொல்வது ஒன்று - தாம் செய்வது வேறொன்று என்ற வழியில் நானும்....

தாமரை
06-07-2006, 04:27 AM
நன்றி செல்வன்

இரவு முழுக்க பித்தப்பையில் சேரும் பித்தநீர் காலை உணவால் குடலுக்கு வருகிறது. அதனால் பெரியவர்கள் காலை உணவை முக்கியமாய் வலியுறுத்துகிறார்கள்.

இது தெரிந்தும் பல ஆண்டுகளாய் நான் காலையில் எதுவும் சாப்பிடுவதில்லை.

பிறருக்கு சொல்வது ஒன்று - தாம் செய்வது வேறொன்று என்ற வழியில் நானும்....

பித்தம் தெளியுமா?:D :D :D :D