PDA

View Full Version : குருதிச் சுழல் ( அ.மை -21)



இளசு
04-07-2006, 09:46 PM
குருதிச் சுழல்


அறிவியல் மைல்கற்கள் -21

வில்லியம் ஹார்வே
( Willam Harvey 1578 - 1657)

--------------------------------------
20 ம் பாகம் - லாகரிதம் இங்கே -
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6594



------------------------------------------------


அரிஸ்டாட்டிலும் கேலனும் சில ஆழமான ஆனால் தவறான
நம்பிக்கைகளைப் பதியன் போட்டிருந்தார்கள்.

அவை:
1) இரத்தத்தில் ' உயிர் ஆவி' இருக்கிறது. அதுவே உடல் எங்கும் ஊடுருவி
உயிரோட்டம் தருகிறது. இந்த ஆவி என்பது ஆக்சிஜன் சம்பந்தப்பட்ட கணிப்பு அல்ல.
ஆன்மா, ஜீவன் வகையைச் சார்ந்த நம்பிக்கை.
(அரிஸ்ட்டாட்டில் - http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5815 )

2) இரத்தம் நிரம்பிய வாய்க்கால்கள் உடலெங்கும் உள்ளன. அவற்றில் இரத்தம்
நிரம்பித் தேங்கி நிரந்தரமாய் நிற்கிறது. இதயத்துடிப்பின் அதிர்வலைகள் இந்த
வாய்க்கால்களிலும் அதிர்வாய் - நாடியாய் - பரவுகிறது.
(கேலன் - http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5855 )


இங்கிலாந்தில் மருத்துவராய் பணியாற்றிய ஹார்வேக்கு
நோயாளிகளுக்கான சிகிச்சையைவிட ஆராய்ச்சியே அதிகம் இனித்தது.
குறிப்பாய் இதயம், நாளங்கள், இரத்தம்.

கேலனையும் அரிஸ்ட்டாட்டிலையும் படித்தவர் ஹார்வே.
அவர்களை அதிகம் மதித்தவர் ஹார்வே.
மரியாதை வேறு. கருத்தை மறுதலித்து நிஜத்தை தேடல் என்பது வேறு.

புதிய கண்டுபிடிப்புகளுக்குத் தடை அறியாமை அன்று.
இதுதான் நிஜம், இதுதான் இறுதி என்று ஒரு தவறைக் கொண்டாடுவதுதான்....

அறியவில்லை என்றால் அதைத் தேடுவோம்.
அதான் அவங்களே சொல்லிட்டாங்களே.. அதான் சரி - எனக் கண்மூடிப் போவதுதான்
புதிய பார்வைகள் புலப்படாமலே போகக் காரணம்..


முந்தைய அறிஞர்களை மதித்தாலும் அவர்கள் ' நம்பியதை' மீறி
உண்மை வெளிச்சக்கீற்று தெரிகிறதா என விழிகளைத் திறந்தே வைத்திருந்தார் ஹார்வே.
அப்படி ' திறந்த மனதுடன்' அவருக்குப் பிடித்த குருதி ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.

இதயத்துக்கும் தமனிக்கும் ஈரலுக்கும் சிரைகளுக்கும் உள்ள தொடர்பை கண்டபின் இன்னும் சிந்திக்கலானார்.

அதுவரை அவருக்குக் கற்பிக்கப்பட்டது - தமனி தனி, சிரை தனி... இரண்டுக்கும்
தொடர்பில்லை என்பதே..

நுரையீரலிலும் இரத்தம் புகுந்து புறப்படுகிறதே..

காலில் உள்ள சிரைகளில் ஒரு வழிப் பயணமாய் இரத்தம்
மேல் நோக்கிச் செல்ல வசதியாய் வால்வுகள் இருக்கிறதே....

ஹார்வே இன்னும் சிந்தித்தார்.

பல மிருகங்களை ( பலியிட்டு) ஆராய்ந்து சொன்னார்:
இதயம் ஒரு தசையாலான பம்ப்.
ஒருவழியாக மட்டும் இரத்தம் அனுப்ப அதில் வால்வுகள் உள்ளன.
வெறும் அதிர்வல்ல.. இரத்தம் இதயத்தால் பம்ப் செய்யப்பட்டு
தமனிகளில் அனுப்பப்படுகிறது.

ஆனால் மொத்த இரத்தமும் இதய பம்ப்பின் சில மணித்துளி வேலைக்கே
காலியாகி விடுமே... எப்படி தொடர்ந்து ?
பம்ப் செய்யப்பட்ட இரத்தம் எங்கே போகிறது? என்ன ஆகிறது?
இடைவிடாமல் இரத்த வரத்து இதயத்துக்கு எப்படி நடக்கிறது?

குழம்பினார். விடை தேடிப் போராடினார்.

ரீ-சைக்ளிங்? மறு சுழற்சி? போன இரத்தமே ஒரு வட்டம் சுற்றி
மீண்டும் இதயம் வருகிறதா?

இந்தக் கேள்வியை சுலபமான ஆனால் நேர்த்தியான சோதனைகளால்
நிரூபண விடையாக்கினார்.
ஆம், சர்க்குலேஷன் என்ற மிக ஆதார உடலியல் கூற்றை
ஆணித்தரமாய் முதலில் நிறுவினார் ஹார்வே.

வெறும் 72 பக்கங்கள் மட்டுமே கொண்ட
'' On the Motion of the Heart and Blood''
என்ற சின்ன நூலின் மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

தமனியில் நுழைந்த இரத்தம் சிந்தல், சேதாரம் அதிகமின்றி
சிரையில் நுழைவது எப்படி என்று சொல்ல ஹார்வேயால் இயலவில்லை.

சிறிய ஒராடி நுண்ணோக்கியை ( Single-lens microscope) வைத்து
தவளையின் நுரையீரலைப் பார்த்த மால்பிஜி என்ற விஞ்ஞானிக்கு
வெறும் கண்ணுக்கு புலப்படாத ஒன்று தெரிந்தது.
அது - கேபில்லரிகள்.

இதயம் - தமனி & அதன் கிளைகள் - கேபில்லரிகள் - சிரைகள் - இதயம்.

இரத்தம் செல்லும் வட்டப்பாதை முழுமையாகிவிட்டது.

தாமரை
05-07-2006, 04:33 AM
ஒவ்வொரு கண்டுபிடிப்பும் மிகப்பெரிய முயற்சிகளின் விளைவுகள்.. இவைற்றை மனித குலத்தின் சொத்தாக்கிய கண்டுபிடிப்பாளர்கள் மாமனிதர்கள்...

இன்று ஒரு வரியில் நாம் படிக்கும் செய்திக்கு பின் எவ்வளவு உழைப்பு...

விஞ்ஞானிகளை பைத்தியங்களாக கருதிய கூட்டங்களுக்கிடையில் அவர்கள் சாதித்து இருக்கிறார்கள்.. இரப்பர் வல்கனைசிங் பற்றி கண்டுபிடித்த குட் இயர் கதையைப் குமுதம் இணையத்தில் படித்தேன்..
தற்போது அது அங்கு இல்லை.. எனவே வழங்க இயலவில்லை.

மனித குலத்திற்காக பலபேர் வாழ்க்கையையே அர்பணித்திருக்கிறார்கள்... அந்த அர்ப்பணிப்பு வீணாகக் கூடாதென்றால் மனிதர்கள் போட்டிப் பொறாமைகளை விட்டொழித்து இன்னும் நிறைய சாதிக்க வேண்டும்...

இளசு
05-07-2006, 10:29 PM
நல்ல கருத்து. நன்றி செல்வன்.

பாரதி
08-07-2006, 11:24 PM
குருதிச்சுழல் பற்றியும் ஹார்வே பற்றியும் அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா. மனச்சுழலுக்கு மைல்கற்கள் உண்டா...?

இளசு
08-07-2006, 11:34 PM
குருதிச்சுழல் பற்றியும் ஹார்வே பற்றியும் அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா. மனச்சுழலுக்கு மைல்கற்கள் உண்டா...?

பேரிதயத் தம்பியின் பெரிய கேள்வி - சிறுவரியில்..

காலம் பதில் சொல்லுமா?

-உன் அண்ணன்...

ஓவியா
08-07-2006, 11:35 PM
அட பதிவை நான் பார்க்கவே இல்லையே....

அருமையான பதிவு,
நன்றி இளசு சார்

இளசு
08-07-2006, 11:37 PM
நன்றி ஓவியா

உங்கள் ஆர்வமான கருத்துகள் உற்சாகம் அளிக்கின்றன. நன்றி..

ஆதவா
06-02-2008, 02:40 AM
அடேயப்பா.. இவர்களுக்குத்தான் என்ன கண்கள்!!!! என்ன அறிவு!!!!

முன்னோர்கள் சொன்னதை நம்பாமல் ஆராய்தல் என்பது நல்லதே!!!

அதைவிட இதயம் பம்ப் ஆகும் அதிசயமே அதிசயம்தான்...... மனிதனைப் படைத்தது எந்த சக்தியாக இருந்தாலும் அதற்கு வணக்கம்...

பாரதி அண்ணாவின் கேள்வியப் படித்து அதிர்ந்தேன்.... மனச்சுழல்....

நன்றி இருவருக்கும்..