PDA

View Full Version : பித்தன்



இனியவன்
01-07-2006, 06:25 AM
புத்தகம்

பித்தன் மழைக்காகப் பள்ளிகூடத்தில் ஒதுங்கினான்

குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து

புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான்

அவன் மேலும் சொன்னான்...

குழந்தைகளே பாடப் புத்தகங்களாக இருக்கிறார்கள்
அவர்கள் கையில் ஏன் காகிதக் குப்பைகளைத் தருகிறீர்கள்?

உங்கள் புத்தகங்கள் கண்களைத் திறப்பதில்லை
ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன

காகித ஓடங்களை நம்பி இருப்பவர்களே!
நீங்கள் எப்படி அக்கரை போய்ச் சேர்வீர்கள்?

இதோ! இரவு பகல் என்ற ஏடுகள்
உங்களுக்காகவே புரளுகின்றன
நீங்களோ அவற்றைப் படிப்பதில்லை

இதோ உண்மையான உயிர் மெய் எழுத்துக்கள்
உங்கள் முன் நடமாடுகின்றன
நீங்களோ அவற்றைக் கற்றுக் கொள்வதில்லை

ஒவ்வொரு பூவும் பாடப் புத்தகமாக இருப்பதை
நீங்கள் அறிவதில்லை.

நீங்கள் நட்சத்திரங்களைப் படிக்க கற்றிருந்தால்
உச்சரிக்க முடியாத எழுத்துக்களில்
அதிகமான அர்த்தம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்

நீங்கள் மின்னலின் வாக்கியங்களை
வாசிக்க முடிந்திருந்தால்
ஒளியின் ரகசியத்தை அறிந்திருப்பீர்கள்,

உங்களுக்குக் கண்ணீர்த் துளிகளைப்
படிக்கத் தெரிந்திருந்தால்
நீங்கள் மனிதனின் சாரத்தை அறிந்திருப்பீர்கள்.

எழுத்துக்களால் அல்ல
காயங்களால் கற்பதே கல்வி
என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

கவிக்கோ அப்துல் ரகுமான்

இளசு
01-07-2006, 11:09 PM
புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான்

இந்த வரிகளை கவிக்கோவே மேற்கோளிட்டிருக்கிறார் - இது பூக்களின் நேரம் கட்டுரை ஒன்றில்.

தீவிர ஏட்டுச்சுமையில் பிஞ்சுகள் அமுங்கும் இக்காலத்துக்கு ஏற்ற கருத்து.

நன்றி இனியன்.

அறிஞர்
02-07-2006, 03:17 AM
புத்தகம்

எழுத்துக்களால் அல்ல
காயங்களால் கற்பதே கல்வி
என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

கவிக்கோ அப்துல் ரகுமான்
அருமையான கவிதை.... நன்றி அன்பரே......

இனியவன்
02-07-2006, 06:42 AM
[QUOTE=ilasu]
இந்த வரிகளை [COLOR=navy]கவிக்கோவே மேற்கோளிட்டிருக்கிறார் - இது பூக்களின் நேரம் கட்டுரை ஒன்றில்.

தீவிர ஏட்டுச்சுமையில் பிஞ்சுகள் அமுங்கும் இக்காலத்துக்கு ஏற்ற கருத்து.

இது சிறகுகளின் நேரம்.

இளசு
02-07-2006, 09:48 PM
நன்றி இனியவன்..

இன்று சிறகுகளின் நேரம் எனத் திருத்த வந்தால் நீங்கள் ஏற்கனவே செய்து விட்டீர்கள். நன்றி..

ஓவியா
03-07-2006, 01:30 PM
எழுத்துக்களால் அல்ல
காயங்களால் கற்பதே கல்வி
என்பதை அறிந்து கொள்ளுங்கள்.....:) :)

அழகான வரிகள்
அருமையான கவிதை

நன்றி
கவிக்கோ அப்துல் ரகுமான்
இனியவன்

தாமரை
03-07-2006, 01:42 PM
குழந்தைகள் கையில் "Introduction to computer" புத்தகம் கண்டிருப்பான்.

வண்ணங்களால் நிறைந்திருக்க வேண்டிய காகிதங்கள்.. வார்த்தைக் குப்பைகளால் அல்லவா நிறைந்திருக்கின்றன..

இனியவன்
03-07-2006, 01:51 PM
என் நண்பர் தன் 5 வயதுப் பையனை பள்ளியில் சேர்த்திருக்கிறார்.
அகரம் சொல்லித் தரும் முன்பே கட்டுரை எழுதச் சொல்லி இருக்கிறார்கள் என்றார்.
இன்னொரு நண்பர் சொன்னார். 5 ஆண்டுகளில் இரண்டு இளங்கலைப் பட்டங்கள் வாங்கிவிடலாம். அதை உன் பையனுக்கு வாங்கித் தராதது உன் குற்றம்.
பக்கத்திலிருந்த நான் அவர்கள் வேற்றுக் கிரக மொழியில் சம்பாஷிக்கிறார்களோ என்று பயந்தேன். சரியா?

தாமரை
03-07-2006, 02:04 PM
என் நண்பர் தன் 5 வயதுப் பையனை பள்ளியில் சேர்த்திருக்கிறார்.
அகரம் சொல்லித் தரும் முன்பே கட்டுரை எழுதச் சொல்லி இருக்கிறார்கள் என்றார்.
இன்னொரு நண்பர் சொன்னார். 5 ஆண்டுகளில் இரண்டு இளங்கலைப் பட்டங்கள் வாங்கிவிடலாம். அதை உன் பையனுக்கு வாங்கித் தராதது உன் குற்றம்.
பக்கத்திலிருந்த நான் அவர்கள் வேற்றுக் கிரக மொழியில் சம்பாஷிக்கிறார்களோ என்று பயந்தேன். சரியா?

என் மகன் இப்பொழுது முதல் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு ஆங்கிலம், ஹிந்தி, கணக்கு, சமூக அறிவியல், கம்பியூட்டர் அறிமுகம், ஆங்கில இலக்கணம், வாழ்வியல் மதிப்பு, அறிவியல் என எக்கச்சக்கமாய் புத்தகங்கள்.. (ஆம் என் மகன் தமிழை பள்ளியில் படிக்கவில்லை, மூன்றாவது மொழி கன்னடம்..)

இங்கு சில பள்ளிகளில் 4ம் வகுப்பில் குறிப்பிட்ட சதவிகித மதிப்பெண்கள் எடுக்காத குழந்தைகளை பள்ளியில் இருந்து விலக்கி விடுகிறார்கள்.. இதை விட மூர்க்கத்தனம் வேறு உண்டா.. மயூரேசா, பென்ஸூ பெங்களூர் கல்வி நிலையங்கள் இன்று போகும் போக்கைப் பார்த்தால் உங்கள் இளமைக் காலம் வெறும் கனவு இல்லை இல்லை கதைகள்தான்.

இனியவன்
04-07-2006, 08:21 AM
போற போக்கைப் பார்த்தா புள்ளைங்க தலைக்குள்ள ஒரு சிப்பைப் பொறுத்தி நீங்களா பொழைச்சுப் போங்கன்னு விட்டுருவாங்க போல,,,,
கால மாற்றத்தைப் பொறுத்திருந்து பார்ப்போம்,,,,,

ஓவியன்
26-02-2007, 12:15 PM
அழகான வரிகள்!