PDA

View Full Version : ராஜீவ் காந்தி கொலை :புலிகள் வருத்தம்



இனியவன்
28-06-2006, 01:58 PM
1) ராஜீவ் காந்தி கொலை ஒரு வரலாற்று துயரம். அந்த சம்பவத்திற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம் என்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் விடுதலைப் புலிகள் பகிரங்கமாக ஒப்புதல் தெரிவித்திருப்பது இதுவே முதல் முறை.

சென்ற 1991ம் ஆண்டு மே 21ம் தேதி மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார். சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் அச்சம்பவம் நடந்தது. அதற்கு விடுதலைப் புலிகள்தான் காரணம் என இந்திய அரசின் சிறப்பு விசாரணைக் குழு உறுதி செய்தது. ஆனால் புலிகள் அமைப்பு அதை மறுத்து வந்தது.

இந் நிலையில் ராஜீவ் காந்தி கொலைக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் பொறுப்பேற்பதாக அந்த அமைப்பின் ஆலோசகர் ஆண்டன்
பாலசிங்கம் பகிரங்கமாக என்.டி.டி.விக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

இலங்கையில் இனக் கலவரம் வெடித்தபோது மக்களைப் பாதுகாக்க விடுதலைப் புலிகளுக்கு இந்தியா ஆயுதம் வழங்கியது.
ஆனால் தனித் தமிழ் ஈழம் பெற வேண்டும் என்ற நோக்கில் இந்தியா எங்களுக்கு உதவவில்லை. தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமே இந்தியாவிடம் இருந்தது என்று அவர் தெரிவித்தார்.

1983ம் ஆண்டு முதல் 1987 வரை இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு இருந்தது. இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான
தீர்வு காண வேண்டும் என இந்தியா விரும்பியது. அதன் பொருட்டே இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் தான்
சிக்கல் ஏற்பட்டது.

காரணம் தமிழர்களின் அரசியல் உணர்வுகளை திருப்திப்படுத்துவதாக அது அமையவில்லை. ஆதலால் அந்த ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்கவில்லை. இந்தியாவில் இருப்பது போன்ற பெடரல் முறை அதிகாரப் பகிர்வு ஆட்சியை இந்தியா சிபாரிசு செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் நாங்கள் சாதகமாக பதில் அளித்திருப்போம். ஆனால் அது மட்டுமே ராஜீவ் கொலைக்குக் காரணம் அல்ல என்றார்.

(ஒப்பந்தத்தை நாங்கள் நிராகரித்ததால் எங்களுக்குப் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. எங்களுக்கும், இந்தியாவுக்கும் இடையே பிளவுகள்
அதிகரித்து விட்டன. விடுதலைப் புலிகளை ஒடுக்க இந்தியஅரசு படைகளை அனுப்பியது. 2 ஆண்டு இந்திய படைகளுடன் நாங்கள்
கொரில்லா யுத்தத்தில் ஈடுபட்டோம்.

பின்னர் இந்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி படையை விலக்கிக் கொண்டது. அதன் பிறகுதான் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். அது ஒரு துயர சம்பவம்தான், வரலாற்றுத் துயரம். அதற்காக நாங்கள் வருந்துகிறோம், பொறுப்பேற்றுக் கொள்கிறோம்.

ஆனால், எந்த சந்தர்ப்பத்திலும், இந்திய அரசின் நலனுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என்று நாங்கள் உறுதியளித்திருக்கிறோம்.

ராஜீவ் கொலைக்குப் பின்னர் இலங்கை இனப் பிரச்சினையில் இந்தியா தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் விலகி விட்டது. இந்தப் பிரச்சினையில் இந்தியா தீவிர பங்கெடுக்க வேண்டும்.)

கடந்த 15ஆண்டுகளாக இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிடாமல் உளளது. இப்போது இலங்கையில் மீண்டும் ரத்தக் களறி ஏற்பட்டுள்ளது. இந்திய அரசுடன் புதிய உறவை ஏற்படுத்திக் கொள்ள நாங்கள் தயாராகி வருகிறோம். இதுதொடர்பாக முடிவெடுக்க

இந்தியா முன்வர வேண்டும். இந்திய நலனுக்கு எதிராக எக்காரணம் கொண்டும் எதுவும் செய்ய மாட்டோம். எனவே இனப் பிரச்சினையில்
இந்தியாவின் சாதகமான பதிலை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று பாலசிங்கம் விளக்கினார்.

( இலங்கையில் அமைதி நிலவுவதுதான் இந்தியாவுக்கும் நல்லது. உள்நாட்டுப் போர் ஏற்பட்டால் அது இந்தியாவிற்கு பல சங்கடங்களைக்
கொடுக்கும், தமிழக அரசியிலும் அது எதிரொலிக்கும். எனவே, இந்திய அரசு ராஜீவ் காந்தி கொலை என்ற வரலாற்றுத் துயரத்தை பின்தள்ளி விட்டு, கடந்ததை மறந்து விட்டு, பெருந்தன்மையுடன் நடந்து கொண்டு இலங்கை இனப் பிரச்சினையை புதிய பார்வையுடன் அணுக வேண்டும் என்று கூறியுள்ளார் பாலசிங்கம்.)

இதனிடையே பாலசிங்கத்தின் அந்தக் கோரிக்கையை இந்திய அரசு நிராகரித்தது. ராஜீவ் காந்தி கொலை மிகப் பெரும் சோகம். அதை
இந்தியா மறக்காது, மக்களும் மறக்க மாட்டார்கள் என்று இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் அனந்த் சர்மா கூறினார்.

இந் நிலையில் கொழும்பில் நிருபர்களிடம் பேசிய புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன்,

இலங்கையில் சிங்களப் படைகள் முன்பு போலவே குழந்தைகள், பெண்கள் என்று பாரபட்சமின்றி கொலைகளை நடத்துகிறது. ஆதலால்
தமிழ்நாடும் இலங்கை தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. தனிப்பட்ட முறையில் விடுதலைப் புலிகளுக்கும் திமுக அரசுக்கும் நெருக்கமான உறவில்லை. ஆனால் மக்கள் நலனுக்காக நாங்கள் நிச்சயமாக நட்புக்கரம் நீட்டுவோம் என்றார்.

2) இலங்கைக்கான இராணுவ உதவியை தடுக்கக் கோரி இந்திய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் அனுப்ப திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக அரசும், முதல்வரும் மத்திய அரசுக்கு இதனை வற்புறுத்த வேண்டும் என்றும்
அவர் கூறினார்.

இலங்கையில் தமிழர்கள் அமைதியாக வாழ அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்
தலைவர் நடிகர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கை இனப்பிரச்சனை குறித்து தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாட்டு தலைவர்கள் ஆலோசனை நடத்திவிட்டுத்தான் இந்திய அரசாங்கம் எந்த ஒரு நிலைப்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தினார்.

இலங்கைப் பிரச்சினையில் நியாயமான அரசியல் தீர்வு காண இந்தியா உதவ வேண்டும். அது அந்த நாட்டின் உள் விவகாரம் என்று இந்திய அரசு கருதினால் அந்தப் பிரச்சினையில் இருந்து இந்தியா ஒதுங்கிக்கொள்ள வேண்டும். அதை விடுத்துத் தமிழர்களுக்கு
எதிராக ராணுவ உதவி அனுப்பும் முடிவை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று அவர் கூறினார்.

3) மன்னார் கடற்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுடன் நடந்த மோதலில் கடற்படையினர் ஐவர் கொல்லப்பட்டனர். 55 நிமிடம்
நடந்த துப்பாக்கிச் சண்டையில் போராளி ஒருவரும் வீர மரணமடைந்தார். மேலும் இரண்டு போராளிகள் காயமடைந்தனர்.

இம் மாதத்தில் கடற்படையினர் தமிழீழ கடற்பரப்பில் போர் நிறுத்தத்தை பலவீனப்படுத்தும் மோதல்களை ஏற்படுத்துவது இது மூன்றாவது முறை. விடுதலைப் புலிகளின் கடற்கலங்கள் தங்களைச் சுற்றி வளைத்ததில் ஒரு கடற்கலம் சேதமடைந்தது, மூன்று வீரர்கள் காயமடைந்தனர் என்றும் கடற்படையின் பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்க தெரிவித்தார்.

4) கொழும்பிலுள்ள பாடசாலைகளில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக புதன்கிழமை காலை வதந்தி பரவியது. அதனால் பீதியடைந்த பெற்றோர் பாடசாலைகளுக்குச் சென்று தமது பிள்ளைகளை அழைத்து வரத் தொடங்கினர். கண்டியிலுள்ள பாடசாலைகளிலும் அத்தகைய
புரளி காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாடசாலைகளுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த விளக்கினார்.