PDA

View Full Version : பரிபூரண நம்பிக்கை



இணைய நண்பன்
18-06-2006, 10:56 AM
பரிபூரண நம்பிக்கை


ஓர் ஊரை ஒட்டினாற்போல ஆறு ஓடிக்கொண்டிருந்தது..அந்த ஆற்றுக்கு அக்கரையிலே ஒரு காடு. அந்தக் காட்டில் ஓர் ஆசிரமம். அந்த ஆசிரமத்தில் ஒரு குரு இருந்தார். அந்த கிராமத்திலே , பால் விற்பனை செய்துகொண்டிருந்த ஒரு வயதான மூதாட்டிதான் , அந்த ஆசிரமத்துக்கு தினமும் பால் கொண்டுவந்து கொடுப்பார்கள். காலையும் மாலையும் சரியான நேரத்தில் தினமும் பால் கொண்டு வந்துகொண்டிருக்கும்போது, ஒருநால், நல்ல மழை பெய்து, அந்த ஆற்றிலே வெள்ளம் அளவுக்கு அதிகமாக ஓடியது.அதனால் படகுப் போக்குவரத்து கொஞ்சம் பாதிக்கப்பட்டு, பால் கொண்டுவர தாமதம் ஆனது.தொடர்ந்து இரண்டு வேளையும் பால் வரத் தாமதம் ஆனதால், அந்த குருவுக்கு கோபம் வந்துவிட்டது. " வேளாவேளைக்குப் பால் கொண்டுவரவேண்டாமோ" என்று அந்தப் பெண்ணை குரு கோபித்தார்.அதற்கு அந்தப் பெண்மணி, " ஐயா, நான் என்ன செய்யமுடியும்.தினமும் நேரத்தோடு, பால் எடுத்துக்கொண்டு நான் கிளம்பினாலும், படகு வந்து சேர்வதற்காக ஆற்றங்கரையில் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதாகிறது." என்று பதில் கூறினாள்.
அதைக் கேட்டதும் அந்தக் குரு சிரித்தார்...".என்னம்மா நீ சொல்கிறாய்..பகவானின் பேரைச் சொல்லிக்கொண்டு பலபேர்கள் , இந்தப் பிறவிப் பெருங்கடலையே கடக்கும்போது, இந்த சிறிய ஆற்றைக் கடந்து வர உன்னால் இயலாதா முயற்சி செய்து பார்" என்றார்.

கள்ளங்கபடமில்லாத அந்தப் பெண்மணிக்கு , பெரியவரின் வாக்கு மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.ஆற்றைக் கடந்து வர சுலபமான வழி அவளுக்குத் தெரிந்துவிட்டது.அடுத்த நாள் முதல், பால் வேளாவேளைக்குத் தாமதமில்லாமல் வந்து சேர்ந்துகொண்டிருந்தது.இரண்டு நாட்கள் கழித்து, அந்தப் பெண்ணைப் பார்த்து " ஏம்மா? இப்போதெல்லாம் நேரத்துடன் பால் கொண்டுவந்துவிடுகிறாயே? ஆற்றில் வெள்ளம் இன்னும் வற்றவில்லையே?பின் எப்படி வருகிறாய்?" என்று குரு கேட்டார்.
" நீங்கதானே சாமி அதுக்கு வழி சொல்லிக் கொடுத்தீர்கள்.அதன்படி செய்கிறேன்" என்றாள்.
"நான் என்ன வழி சொன்னேன் உனக்கு"
"அதுவா சாமி, இப்போதெல்லாம் நான் ஓடக்காரனுக்காகக் காத்திருப்பதில்லை.பகவான் பெயரைச் சொல்லிக்கொண்டே ஆற்றில் தண்ணீரின் மேல் நடந்து வந்துவிடுகிறேன்"
பார்த்தார் குரு.அவர் வழி சொல்லிக்கொடுத்தாரே தவிர, இறைவன் பெயரைச் சொல்லிக்கொண்டு, தண்ணீரின்மேல் நடக்க இயலுமா? என்பதில் அவருக்குச் சந்தேகம் இருந்தது.
" அப்படியா பெண்ணே....கொஞ்சம் என்னையும் அழைத்துக்கொண்டுபோய், நீ எப்படி வந்தாய் என்பதை செய்து காட்டுகிறாயா" என்று கேட்டார்.
சரி என்று அவள் சொல்லி, குருவை ஆற்றுக்கு அழைத்துப் போனாள்.அங்கே போனதும் ஆண்டவனின் பெயரைச் சொல்லியபடியே, அந்தப் பெண்மணி, வேகமாக தண்ணீரின்மேல் நடக்க ஆரம்பித்தாள்.அவளால் சுலபமாக நடக்க முடிந்தது. கொஞ்ச தூரம் போனதும் திரும்பிப் பார்த்தாள்.குரு, இறைவனின் பெயரைச் சொல்லியபடியே, தண்ணீரில் காலை வைத்தால், கால் நீருக்குள் இறங்குகிறது. அதனால் மேற்கொண்டு செல்ல இயலாமல் தயங்கி ந்ன்றுகொண்டிருந்தார்...
"என்ன இது, நானும் உன்போலவே இறைவனின் பெயரைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனால் என்னால் நீரின்மேல் நடக்க இயலவில்லையே?" என்று அந்தப் பெண்ணிடம் கூறினார்....
அதற்கு அந்தப் பெண், " சுவாமி...என்ன இது...பகவான் பெயரை வாயால் சொல்லுகிறீர்கள். ஆனால் அதே நேரம், உங்கள் வேஷ்டி நனைந்துவிடுமோ என்று பயந்து, வேஷ்டியை கையில் சுருட்டிப் பிடித்திருக்கிறீர்கள்.அப்படியானால், உங்களுக்கு இறைவனிடத்தில் பரிபூரண நம்பிக்கை இல்லையா?." என்று கேட்டாள்.
அதற்கப்புறம்தான் அந்த பெண்மணியின் வார்த்தைகளுடைய தத்துவம் குருவிற்குப் புரிய ஆரம்பித்ததாம்...
தீவிரமான நம்பிக்கை..பரிபூரண சரணாகதி..இதுதான் அற்புதச் செயல்களுக்கு ஆதாரம்.இந்தக் கதையைச் சொன்னவர்,
" ராமகிருஷ்ன பரமஹம்சர்"
[B][இது நீதிக்கதைகள் பகுதியில் pgk53 அவர்கள் தந்த தகவலை யுனிகோடிற்கு மாற்றி உள்ளேன்/B]