PDA

View Full Version : ங்-ஏ!!!!!!!!!!!!!!!



தாமரை
13-06-2006, 01:35 PM
யூனிகோடில் ங், ங தவிர ங கர வரிசையில்மற்ற உயிர்மெய் எழுத்துக்கள் தட்டச்சு செய்ய முடியவில்லை. ஏன் என்று யோசித்தபோது ங கர வரிசையில் மற்ற எழுத்துக்கள் உப்யோகிக்கப்பட்டுள்ள வார்த்தைகள் உள்ளனவா என்ற கேள்வி எழுந்தது..

ராஜேந்திரகுமாரின் ங்-ஏ தவிர மற்ற எதுவுமே மனதில் தோன்றாமல் ங்-ஏ
என விழிக்கிறேன்.

தமிழ் மன்ற மக்களின் வார்த்தை கருவூலம் மிகப்பெரிதன்றோ? யாராவது என் தேடலுக்கு விடை தாருங்களேன்....

ங்-ஏ

அறிஞர்
13-06-2006, 01:47 PM
இது வரை நானும் அது ங்எ ங்இ... போன்ற வார்த்தைகளை உபயோகித்தது இல்லை...

நாம் அதிகம் பயன்படுத்ததால்.... யுனிகோடில் சேர்க்காமல் விட்டு விட்டார்களோ என்னவோ..

ஆனால் பழைய TCSII முறையில் எல்லாம் வருகிறது --- ஙி ஙே

பரஞ்சோதி
13-06-2006, 01:51 PM
ஆஹா ஆஹா! செல்வன் கிளம்பிட்டாரய்யா.

ஆமாம், எனக்கும் வரமாட்டேங்குது, ஒட்டி வைக்கவும் முடியலையே?

தாமரை
13-06-2006, 02:02 PM
ஆஹா ஆஹா! செல்வன் கிளம்பிட்டாரய்யா.

ஆமாம், எனக்கும் வரமாட்டேங்குது, ஒட்டி வைக்கவும் முடியலையே?
அட எழுத்து வரலைன்னா விடுங்க..

சிங்ங்-ஏரி அப்படின்னு தட்டச்சு செய்யலாம்...

ஆனால் கேள்வி ங கர வரிசையில் ங் - தவிர மற்ற எழுத்துக்கள் உபயோகிக்கப்பட்ட வார்த்தைகள் வேண்டும்...

அகராதி பிடித்தவர்கள்... மன்னிக்கவும் படித்தவர்கள் கண்டுபிடிக்கவும்... பகிர்ந்துகொள்ளவும் வேண்டுகிறேன்...

தாமரை
14-06-2006, 04:31 AM
சரி சரி.. ங கர வரிசை மட்டும் தான் இப்படியா?
உயிரெழுத்துக்கள் 12ம், ஆய்த எழுத்தும் உபயோகத்தில் உள்ளன.. ஆத்திச்சூடியும், அம்மா இங்கே வா வா வும் பயின்ற அனைவரும் அறிவர்.

க கர வரிசையில், க, கா,(காகம்) கி(கிளி), கீ(கீழே), கு(குரங்கு), கூ(கூட்டம்), கெ(கெட்டி), கே(கேள்), கை, கொ(கொடு), கோ(கோடு), கௌ(கௌதாரி), க் (தக்கை)
ச கர வரிசையில் ச்(மிச்சம்), ச(சட்டை), சா(சாட்டை), சி(சித்து), சீ(சீவல்), சு(சுக்கு), சூ(சூழ்நிலை), செ(செம்பு), சே(சேவல்), சை(ஆசை), சொ(சொடுக்கு) சோ(சோகம்) சௌ(சௌபாக்கியம்)
ஞ கர வரிசையில் ஞ் (பஞ்சு), ஞ (கலைஞர்), ஞா(ஞாயிறு), ஞி(??)ஞீ()
ஞு(??) .......
ட கர வரிசை ட் (சட்டம்), ட(சட்டம்), டா(பாட்டாளி), டி(பட்டி), டீ(திடீர்) டு (பட்டு) டூ((குண்டூர்), டெ(டெல்லி), டே(விடேல்), டை(சட்டை)
டொ(பட்டொளி), டோ(படாடோபம்) டௌ(டௌரி, ..)
ண கர வரிசை
ண்(பண்), ண(பணம்), ணா(ஓணான்), ணி(கண்ணில்),ணீ(தண்ணீர்), ணு(மண்ணும்), ணூ(தொண்ணூறு), ணெ(எண்ணெய்), ணே(கண்ணேறு) ணை(பண்ணை) ணொ(பெண்ணொன்று),ணோ(கண்ணோடு) ணௌ(??)

ஒவ்வொரு வரிசையா பார்ப்போமே.. இதுவரை ங கர வரிசை, ஞகர வரிசை ணௌ மட்டும் பிரச்சனை...

தாமரை
14-06-2006, 05:32 AM
த்(சத்தம்), த(சதம்), தா(தாகம்),தி(திருட்டு), தீ, தெ(தென்றல்) தே(தேவதை), தை(தையல்), தொ(தொல்காப்பியம்), தோ(தோற்றம்),தௌ (????)

தாமரை
14-06-2006, 05:35 AM
ந்(சந்தம்) நா(நாதம்) நி(நிதானம்) நீ நு(நுரை) நூ(நூறு) நெ(நெருக்கம்) நே(நேர்) நை (நைருதி, நையப்புடை), நொ(நொண்டியாட்டம்), நோ(நோக்கம்) நௌ (????)

தாமரை
14-06-2006, 05:37 AM
ப்(கப்பல்), ப(கப்பல்), பா(பாடம்), பி(பிறகு), பீ(பீடம்), பு(அந்தப்புரம்), பூ, பெ(பெரியது), பே(பேருந்து), பை, பொ(பொன்), போ, பௌ(பௌதீகம்)

தாமரை
14-06-2006, 06:35 AM
ம்,ம(சம்மதம்), மா(மாதம்), மி(மின்னல்), மீ(மீன்), மு(முன்), மூ(மூன்று), மெ(மென்மை), மே,மை(மேன்மை), மொ(மொட்டு), மோ(மோதல்), மௌ(மௌனம்)

தாமரை
14-06-2006, 06:53 AM
ய்(நெய்),ய,யா(நியாயம்),யி(மயில்), யீ(அன்புடையீர்), யு(யுகம்) யூ(கையூட்டு), யெ(இருபத்தியெட்டு) யே(இருபத்தியேழு), யை(கையை), யொ(கையொப்பம்)யோ(கையோடு) யௌ(யௌவனம்)

pradeepkt
14-06-2006, 07:11 AM
தெரியலையேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ....
என்னான்னு சொல்லுவேன் எங்க போயி சொல்லுவேன்

தாமரை
14-06-2006, 07:18 AM
ர்(சொர்க்கம்), ர(நரகம்), ரா(ராகம்), ரி(சரி), ரீ(ரீல், ரீங்காரம்), ரு(கருப்பு),ரூ(ரூபாய்), ரெ(அவரெல்லாம்), ரே(கன்னங்கரேல்),ரை(கரை), ரொ(ரொக்கம்), ரோ(ரோஜா, பரோட்டா), ரௌ(ரௌத்திரம்)

தாமரை
14-06-2006, 07:22 AM
ல்(பல்லி), ல(பலம்), லி(ஒல்லி), லீ(குண்டலீகம்), லு(கல்லுடன்), லூ(நெல்லூர்), லெ(கல்லெடுத்து), லே(லேசாக), லை(கலை), லொ(லொட்டு, லொடுக்கு), லோ(தோலோடு), லௌ(லௌகீகம்)

தாமரை
14-06-2006, 07:37 AM
வ்(பவ்யம்), வ(வருது), வி(விலகு), வீ(வீரம்), வு(வந்தவுடன்), வூ(தஞ்சாவூர்), வெ(வெண்ணை), வே(வேட்டையாடு), வை, வொ(ஒவ்வொரு), வோ(திருவோடு), வௌ(வௌவால்)


ழ்(தமிழ்), ழ(பழம்), ழா(தமிழா), ழி(குமிழி), ழீ(தமிழீழம்), ழு(புகழுடன்) ழூ(ஏழூர்), ழெ(தமிழென்னும்) ழே(தமிழே), ழை(வாழை), ழொ(தமிழொன்று போதும்), ழோ(தமிழோடு), ழௌ(????)

ள்(கள்), ள(களவு), ளா(களாக்காய்), ளி(பள்ளி), ளீ(கபளீகரம்), ளு(அவளுடன்), ளூ(கள்ளூறிய), ளெ(வெள்ளெலி), ளே(அவளேதான்), ளை(களை), ளொ(அவளொத்த), ளோ(அவளோடு), ளௌ(???)

ற்(பற்று), ற(பற), றா(புறா), றி(கறி), றீ(தோன்றீசர்), று(பொறு) றூ(நூறு), றெ(என்றென்னை), றே(அவ்வாறே), றை(கறை), றொ(கொன்றொழித்தான்), றொ(காற்றோடு) றௌ(????)

ன்(என்), ன(என) னா(வினா), னி(பனி) னீ(வென்னீர்), னு(என்னுடன்) னூ(பின்னூட்டம்), னெ(பதினெட்டு), னே(பதினேழு), னை(கனைத்தல்),னொ(அவனொத்த), னோ(அவனோடு) னௌ(???)

தாமரை
14-06-2006, 07:39 AM
அனைத்து எழுத்துக்களையும் பார்க்கும் பொழுது,

ங கர வரிசை மிக மிக அரிதாக இருக்கிறது. ஞ கர வரிசையை ஆராயலாம்.

ஔகார உயிர்மெய் எழுத்துக்கள் மிகக் குறைவாக உபயொகப்படுத்தப் படுகிறது.

அறிஞர்
14-06-2006, 01:32 PM
நியாபகம் வருதே..
நியாபகம்.. வருதே...
இதைப்பார்த்தால்...
ஒன்றாம் வகுப்பு...
நியாபகம் வருதே....

தாமரை
14-06-2006, 01:37 PM
நியாபகம் வருதே..
நியாபகம்.. வருதே...
இதைப்பார்த்தால்...
ஒன்றாம் வகுப்பு...
நியாபகம் வருதே....

ஒன்றாம் வகுப்பு
ஒன்றிய வகுப்பு..

அறிஞரே! முடிந்த அளவு
ங கர வரிசையிலும், ஞகர வரிசையிலும்
அள்ளி விடுங்கள்...

mukilan
14-06-2006, 04:17 PM
ஞ்- இஞ்சி, ஞ-அறிஞர், ஞா-ஞானம்

இப்போதைக்கு இம்புட்டுத்தேன்

ஓவியா
14-06-2006, 11:00 PM
ஓ இங்கே தமிழ் வகுப்பு நடக்குதா......

தாமரை செல்வன் சார்
உங்களுக்கு மெய்யாலுமே தமிழ் ஞானம் ரொம்பதான்.

வாழ்க தமிழ் வளர்க உங்கள் தொண்டு
நன்றி

ஆமா நேற்று ஆபிசுலே ஒரு வேலையும் செய்யலையா :D :D

mukilan
14-06-2006, 11:19 PM
தங்கம் - "ங"கரத்தின் உச்சரிப்பு "ஞ"கரத்தினாலேயே கூறப்படுவதால் ங கரத்தின் பயன் பாடு மிகுதியாக இல்லையோ. எங்கய்யா போனார் நம்ம ராகவனார். சீக்கிரம் வாங்க. செல்வன் வாத்தியார் கேட்ட கேள்விகளுக்குப் பிள்ளைகள் எல்லாம் பதில் தெரியாம அலையுறோம்.

தாமரை
15-06-2006, 03:55 AM
தங்கம் - "ங"கரத்தின் உச்சரிப்பு "ஞ"கரத்தினாலேயே கூறப்படுவதால் ங கரத்தின் பயன் பாடு மிகுதியாக இல்லையோ. எங்கய்யா போனார் நம்ம ராகவனார். சீக்கிரம் வாங்க. செல்வன் வாத்தியார் கேட்ட கேள்விகளுக்குப் பிள்ளைகள் எல்லாம் பதில் தெரியாம அலையுறோம்.
"ஙப் போல் வளை"
யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா???
ஞாபகம், ஞாலம் ஞானம் விஞ்ஞானம் ஞா வில் சரி,,,
ஞு எல்லாம் கேரளா சென்றுவிட்டது என நினைக்கிறேன். என்ன பென்ஸூ சரியா?

gragavan
15-06-2006, 03:56 AM
ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ

இது சரியா வருது.

ஙகரத்துல மட்டுந்தான் பிரச்சனை.

தாமரை
15-06-2006, 04:03 AM
ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ

இது சரியா வருது.

ஙகரத்துல மட்டுந்தான் பிரச்சனை.
ஆக்ஞை - உத்தரவு - ஆணை
வார்த்தைகளை கொடுங்க ராகவன்

gragavan
15-06-2006, 04:11 AM
எங்ஙனம் என்ற சொல்லை இன்றைக்கு எங்கனம் என்று எழுதுகிறார்கள். இன்னமும் தூத்துக்குடிப் பக்கம் ஏலே...எங்ஙன போறன்னு கேப்பாங்க.

நம்முடைய உச்சரிப்பு மாற்றங்களால் எழுத்துப் பயன்பாடு குறைந்து கொண்டு வருகிறது. ஞமலி என்றால் நாய். அஞ்சு பஞ்சு என்று சொல்லும் பொழுது இடையே வருகிறது ஞகரம். பழைய தமிழில் ஞகர ஙகரப் பயன்பாடு நிறையவே உண்டு.

gragavan
15-06-2006, 04:12 AM
ஆக்ஞை - உத்தரவு - ஆணை
வார்த்தைகளை கொடுங்க ராகவன்சொற்கள் சட்டுன்னு நினைவுக்கு வரலை. யோசிக்கனும்.

அல்லிராணி
15-06-2006, 04:25 AM
ஆக்ஞை - உத்தரவு - ஆணை
வார்த்தைகளை கொடுங்க ராகவன்
வார்த்தைகளை கொடுக்கற சாக்குல ஆணை யிட்டு ராகவனை மிரட்டாதீர்கள்...:rolleyes: :rolleyes: :rolleyes:

ஆக்ஞை! உத்தரவு!! ஆணை!!! வார்த்தைகளை கொடுங்க ராகவன்

தாமரை
15-06-2006, 05:29 AM
இங்ஙனம் ஏற்கனெவே தந்திருக்கிறேன்..
ஞிமிலி என்று ஒரு வார்த்தை கேள்விப்பட்ட ஞாபகம் உண்டு,

ஊணு கழிஞ்ஞு என்று மலையாளத்தில் சொல்வார்களே!...

மலையாளம் அறிந்தவர்கள் ங கர ஞ கர் உபயோகங்கள் அங்கே இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதை விளக்கலாம்..

ஞான் அறியாம்.. வேறெங் ங்இ லும் நோக்கும்.

ஓவியா
15-06-2006, 11:32 AM
இங்ஙனம் ஏற்கனெவே தந்திருக்கிறேன்..
ஞிமிலி என்று ஒரு வார்த்தை கேள்விப்பட்ட ஞாபகம் உண்டு,

ஊணு கழிஞ்ஞு என்று மலையாளத்தில் சொல்வார்களே!...

மலையாளம் அறிந்தவர்கள் ங கர ஞ கர் உபயோகங்கள் அங்கே இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதை விளக்கலாம்..

ஞான் அறியாம்.. வேறெங் ங்இ லும் நோக்கும்.

ஓ இப்ப மலையாள வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டதா

ஃசேட்டா....ஃசேட்டா
ஆ.....இச்.ஃசேட்டா...... எவட போயி...

மதி
15-06-2006, 11:38 AM
கலக்குறீங்க செல்வன்...
ஹ்ம்ம்..எனக்கும் உங்கள போல சொல் ஆராய்ச்சி செய்யணும்னு தான் ஆசை...ஹ்ம்ம்ம்..எங்க முடியுது??

அல்லிராணி
15-06-2006, 11:44 AM
ஓ இப்ப மலையாள வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டதா

ஃசேட்டா....ஃசேட்டா
ஆ.....இச்.ஃசேட்டா...... எவட போயி...
மலையாளம் என்பதே கொடுந்தமிழ் (கடுந்தமிழ்) என்று தமிழறிஞர்களால் அறியப்படுவது தானே...

அதில் பல தமிழ் வார்த்தைகள் வடிவு மாறாமல் இருக்கின்றன...

ஞகரம் மற்றும் ஙகரங்கல் மலையாளத்தில் அதிகம் உபயோகப்படுகின்றன.

நாம் அவற்றை சகர ககரங்களாக மாற்றிக்கொண்டோம்..

தாமரை
15-06-2006, 12:46 PM
நன்றி : வேர்வைக் கசகசப்பில் ஒரு பயணக் கட்டுரை - ராகவன்

நிங்ஙள் எவிடே போகுன்னு..

என்ன ராகவன் இதை தட்டச்சு செய்யும்பொழுது உங்களுக்கு ஙகர சந்தேகம் வரவில்லையா?

இனியவன்
15-06-2006, 01:27 PM
ஞகரம் மற்றும் ஙகரங்கல் மலையாளத்தில் அதிகம் உபயோகப்படுகின்றன.

நாம் அவற்றை சகர ககரங்களாக மாற்றிக்கொண்டோம்..[/QUOTE]

அல்லி ராணியின் கூற்றில் வல்லிய உண்மை உண்டு.

றெனிநிமல்
15-06-2006, 05:18 PM
அட்டா! நல்லதோர் ஆய்வு தான். நீங்கள் எல்லோரும் சொற்களைத் தேடுகின்றீர்கள் நான் எழுத்துக்களையே மறந்து போய் இப்போது தான் ஞாபகபடுத்திப் பார்க்கின்றேன்.

தாமரை
18-06-2007, 03:42 PM
யூனிகோடில் ங், ங தவிர ங கர வரிசையில்மற்ற உயிர்மெய் எழுத்துக்கள் தட்டச்சு செய்ய முடியவில்லை. ஏன் என்று யோசித்தபோது ங கர வரிசையில் மற்ற எழுத்துக்கள் உப்யோகிக்கப்பட்டுள்ள வார்த்தைகள் உள்ளனவா என்ற கேள்வி எழுந்தது..

ராஜேந்திரகுமாரின் ங்-ஏ தவிர மற்ற எதுவுமே மனதில் தோன்றாமல் ங்-ஏ
என விழிக்கிறேன்.

தமிழ் மன்ற மக்களின் வார்த்தை கருவூலம் மிகப்பெரிதன்றோ? யாராவது என் தேடலுக்கு விடை தாருங்களேன்....

ங்-ஏ


இங்கே ங் ங* ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ எல்லாம் அடஇக்க* முடிகிற*து. த*மிழ் த*ட்ட*ச்சு வாழ்க*!

அமரன்
18-06-2007, 03:48 PM
த்(சத்தம்), த(சதம்), தா(தாகம்),தி(திருட்டு), தீ, தெ(தென்றல்) தே(தேவதை), தை(தையல்), தொ(தொல்காப்பியம்), தோ(தோற்றம்),தௌ (????)

தௌவல்−கெடுதல்
தௌகித்திரன்−மகளின்மகன்
என தமிழகராதியில் இருக்கே செல்வரே.
ங்−ஏ!!!!!!!!!!!!!!!

தாமரை
18-06-2007, 04:06 PM
நான் அகராதி இதுவரை தொட்டதில்லை அமரரே!

அமரன்
18-06-2007, 04:09 PM
எங்கோ படித்தபோது கிடைத்த சொற்கள் அதனால் தேடினேன். பொருள் கிடைத்தது.

அக்னி
18-06-2007, 05:01 PM
தமிழ் எனக்குத் தெரியும் என்றல்லாவா இறுமாந்திருந்தேன்...
அதைப் பொய்யாக்கி விட்டதே இத்திரி...

தாமரை அவர்களே...
நீங்கள் கண்ட,
இப்படியான அரிய திரிகளை மேலெழுப்புங்கள்.
புதியவர்களான நாமும்,
பிரகாசம் பட்டு நாமும் சிறிதேனும் வெளித்தெரிவோம்.
நன்றி!

ஆதவா
18-06-2007, 05:18 PM
தமிழகராதி புத்தகம் விற்கிறார்களா? இருந்தால் சொல்லவும்,..

அமரன்
18-06-2007, 05:49 PM
தமிழகராதி புத்தகம் விற்கிறார்களா? இருந்தால் சொல்லவும்,..

இணையத்தில் சில இருக்கின்றனவே ஆதவா..

ஓவியன்
18-06-2007, 06:16 PM
இங்கே ங் ங* ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ எல்லாம் அடஇக்க* முடிகிற*து. த*மிழ் த*ட்ட*ச்சு வாழ்க*!

அட ஆமா!

அத அடிச்சு என்ன செய்யுறது எண்டுதான் தெரியலை:natur008:

அக்னி
18-06-2007, 10:15 PM
இணையத்தில் சில இருக்கின்றனவே ஆதவா..

இணைய முகவரிகளைத் தாருங்களேன்...
உதவியாக இருக்கும்...

விகடன்
19-06-2007, 03:20 AM
தலையே சுத்துது.
இதெல்லாம் பொறுமையாக படித்து சிந்திக்க வேண்டிய விடயங்கள். ஆதலால் பின்னர் வருகிறேன்.

மலர்
04-12-2007, 02:12 PM
சொல்வேந்தரே....
படித்தேன் வியந்தேன்.....!!!!

மலர்
04-12-2007, 02:13 PM
தலையே சுத்துது.
ஆகா... முதுவை பார்த்தவர் ஓருத்தர் இங்கேயும் இருக்கார்

அறிஞர்
04-12-2007, 02:33 PM
சொல்வேந்தரே....
படித்தேன் வியந்தேன்.....!!!!

வியந்தா மாத்திரம் பத்தாது.. நீங்க கொஞ்சம் சொல்லுங்க...

ஜெயாஸ்தா
04-12-2007, 02:55 PM
அதே போல எனக்கு 'ஃ' (ஆயதஎழுத்து) எதற்காக என்ற ஒரு சந்தேகமும் உண்டு. தெரிந்தவர்கள் சற்று விளக்குங்கள்....?

ஓவியன்
04-03-2008, 01:08 AM
அதே போல எனக்கு 'ஃ' (ஆயதஎழுத்து) எதற்காக என்ற ஒரு சந்தேகமும் உண்டு. தெரிந்தவர்கள் சற்று விளக்குங்கள்....?

அஃதே...
எஃகு
அஃது
அஃறிணை (இடை எழுத்தாகவும் பாவிக்கலாமாம்..!!)



http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/aytham-usage.jpg

மனோஜ்
04-03-2008, 07:03 AM
அருமை விளக்கம் ஓவியன்