PDA

View Full Version : வேட்டையாடு விளையாடு - வெள்ளெலி



பரஞ்சோதி
13-06-2006, 11:02 AM
நான் மொதல்ல புட்டான் புடிக்கிறதையும், அப்புறம் கருந்தேள் பிடிக்கிறதையும் சொல்லிட்டேன், அடுத்தது வெள்ளை எலி வேட்டை தான்.

வெள்ளை எலி வேட்டையில நான் அதிகம் போனதில்லை, மத்த எல்லா வேட்டையும் பகல்லன்னா, வெள்ளலி வேட்டை ராத்திரியில தான் நடக்கும், அதிலும் அமாவாசை அன்னைக்கு தான் போவாங்க. எங்க அம்மா மாலை 6 மணிக்கு மேலே வெளியே போக அனுமதி கொடுக்க மாட்டாங்க, அதனால அடிக்கடி போகும் வாய்ப்பு கிடைக்கல, ஒரே ஒரு தடவை தான் போனேன், அதுவும் மாயாண்டி சுவாமி கோவில்கொடை அப்போதான், ஆனால் எங்க கூட்டாளிங்க அவங்க எலி புடிச்சதை கதையா சொல்லுவாங்களா, அதையும் சேர்த்து சொல்லுறேன்.

எங்க கிராமத்திலே அங்கே அங்கே வயலும், நிலக்கடலையும், வாழையும், தென்னந்தோப்புமா இருக்கும். ஒவ்வொருத்தர் வீட்டுக்கு பின்னாலேயும் கொறஞ்சது 10 தென்னமரமாவது இருக்கும்.

அப்படி அருமையான கிராமம், தோட்டத்தில வேலியோரமா பெரிய பெரிய பொந்துங்க இருக்கும். நாங்க கிரிக்கெட் ஆடும் போது செல சமயம் பந்து பொந்துக்குள்ள போயிடும், அப்போ நான் கையை விட்டு எடுக்க பயப்படுவேன், ஏலே! பாம்பு கீம்பு இருக்கும்லே என்பேன்.

அப்போ என் நண்பர்கள் சொல்லுவாங்க, ஏலே! அது பாம்பு பொந்துல்ல அது வெள்ளலி பொந்து, பாம்பா இருந்தா அதன் தடம் தெரியுமுல்ல என்பாங்க. இருந்தாலும் நான் அந்த பக்கம் போகமாட்டேன்.

தைரியமான பசங்க போயி எடுத்துட்டு வருவாங்க, நான் அவங்க கிட்ட ஆமா எப்படி இதை வெள்ளெலி பொந்துன்னு சொன்னேன்னு கேட்டா, அதுவா! வெள்ளெலி கூட்டமா தான் இருக்கும், அதுவும் ஒரு பொந்து வழியா மட்டும் போகாது, சுத்தி சுத்தி பொந்தடிச்சி இருக்கும், ஒவ்வொரு 10 மீட்டர் தூரத்திலும் பொந்து இருக்கும், எல்லாம் பொந்தும் இணைஞ்சி இருக்கும், ஆபத்துன்னா பல பொந்து வழியாக எல்லா எலிகளும் தப்பிச்சி ஓடுமுன்னு எங்க கூட்டாளிங்க சொன்னாங்க.

நானும் அப்படியான்னு கேட்டுட்டு விட்டுட்டேன். ஒரு நாள் மாலையில் கிரிக்கெட் ஆடிட்டு வரும் போது, எங்க கூட்டாளிங்க, குசுகுசுன்னு பேசிட்டாங்க, என்னான்னு கேட்டதுக்கு, இன்னைக்கு அமாவாசை ராத்திரி, வெள்ளெலி புடிக்க போடுறோம், வெற்றிவேல் அஞ்சாறு இரும்பு கம்பி தயார் செய்துட்டான், சுதாகர் அண்ணா 5 கட்டை டார்ச் லைட் கொண்டு வருவாங்க, முருகன் மசாலா, உப்பு எல்லாம் கொண்டு வருவான், நீயும் வாரியா?

ஆறு மணிக்கு மேலே வீட்டட விட்டு வெளியே போகவோ, வெளியிலிருந்து பிந்தி வருவோ அம்மா அனுமதிப்பதே கிடையாது, இந்நிலையில் எப்படி போவது, என்னால் முடியாதுப்பான்னுட்டேன். முருகனும் ஆமாம், அவன் வரவேண்டாம், அவங்க அம்மா அவனை மட்டுமல்ல, நம்ம தோலை கூட உரிச்சிப்புடுவாங்கன்னு பயம் காட்டினான்.

வீட்டுக்கு வந்து என்னால எலி புடிக்க போகமுடியலைன்ன வருத்தமாக இருந்தது, ஆனாலும் அம்மாவின் ஆணையை மீற முடியதே. ஏதாவது பொய்யை சொல்லிட்டு போகலாமான்னு யோசித்தேன், ஒன்றுமே புலப்படலை, புலம்பிக்கொண்டே படுத்துட்டேன்.

அடுத்த நாள் விடியற்காலையிலேயே வழக்கம் போல் ஊற வச்ச பச்சை கடலையை துன்னுட்டு ஓட்டம் ஓடி, உடற்பயிற்சி செய்ய கிளம்பி போனேன், அங்கே போனால் முருகன், முத்து, வெற்றி எல்லாம் அங்கே படுத்துகிடந்தாங்க. நான் எழுப்பி, என்ன வீட்டுக்கு போகலையான்னு கேட்டதற்கு செகண்ட் ஷோ சினிமா பார்த்து, அதன் பின்னர் ராத்திரி முழுவதும், வெள்ளெலி புடிச்சும், திருட்டுத்தனமாக எளநீ களவாடியும் வர நேரம் ஆயிட்டுதாம், அதான் இங்கேயே படுத்துட்டோம்

அடப்பாவிங்களா! ராத்திரி பூரா வீட்டுக்க்கு போலையா, நல்லவேளை நான் இவன்க கூட போகலை, இல்லேன்னா அம்மா ராத்திரி பூரா என்னை காணம எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க, காலையில் வீட்டுக்கு போனால் தோலை உரிச்சிருப்பாங்க. சித்தப்பாகிட்ட சொல்லி இருப்பாங்க, அவங்க வேறு கன்னாபின்னான்னு திட்டியிருப்பாங்க, முருகா என்னை காப்பாதிட்டன்னு திருச்செந்தூர் முருகனை வேண்டிக்கிட்டேன்.

வெற்றி சொன்னான், உன் பங்கை எடுத்து வைச்சிருக்கோம், எடுத்துக்கோன்னு சொன்னான். எனக்கு சாப்பிட மனசு இல்லை, எலியை போய் சாப்பிடுவதா என்று மூஞ்சியை சுளித்தேன்.

உடனே முத்து சொன்னான் அண்ணே! வீட்டிலே கோழி கண்டதையும் தின்னுது, அதையே சாப்பிடுறீங்க, வெள்ளெலி கண்டதையும் சாப்பிடாது, நெல்லு, பயிரு, கடலை தான் சாப்பிடும்.

நான் எப்போவும் கொஞ்ச பந்தா, ஈகோ, வித்தியாசமானவன்னு காட்டிக்குவேன், கடைசி வரை நான் எலி வறுவலை சாப்பிடவில்லை. ஆனாலும் வெள்ளெலி பிடிக்கும் மொறையை பார்க்க ஆசை இருந்தது.

ஒருவழியா மாயாண்டி சுவாமி கோவிலில் கொடை வந்தது. வில்லுப்பாட்டுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும், கதை சொல்லுவாங்க தானே, ஆனா எங்க கேங்குக்கு பிடிக்காது. அன்னைக்கு ராத்திரி வில்லுப்பாட்டு, போன வருசம் வந்தவரையே புக் பண்ணியிருந்தாங்க, அவரும் போன வருசம் சொன்ன கதையையே சொல்லத் தொடங்கினார், எல்லோரும் கொட்டாவி விட்டோம், உடனே பசங்க அவங்களுக்குள்ள குசுகுசுன்னு பேசினாங்க, சுதாகர் அண்ணாவை போய் பார்த்தாங்க, எங்க பாஸ் அவரும் கிளம்பிட்டார், எல்லோரும் வெள்ளெலி புடிக்க கிளம்பிட்டாங்க. நானும் என் அம்மாகிட்ட ராத்திரி பூரா வில்லுப்பாட்டு கேட்டு தான் வருவேன், லேட்டாச்சின்னா கோயிலேயே படுத்துக்கிறேன்னு மொத தடவையா அனுமதி வாங்கிட்டேன்.

எனக்கு பயங்கரமான ஆர்வம், திரில், சொல்ல முடியாத சந்தோசம். போகிற வழியில் நான் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக முருகன் பதில் சொன்னான்.

எலி எப்படி பிடிப்பீங்க ?

நம்ம கையில் பெரிய கம்பி, முனை கூறாக இருக்குதே அதை வைத்து குத்தி பிடிப்போம். இல்லாட்டி சாக்கு வைச்சி பிடிப்போம்.

கம்பியை குத்துவதுக்குள்ள எலி ஓடாதா?

எலி ஓடாது, அதுக்கு தான், எலியை பார்த்ததும், டார்ச் லைட்டை அதன் கண்ணில் அடிக்கணும், எலி ஆடாம அசையாம நின்னுடும், உடனே ஒரே குத்து, குத்தி தூக்கிடுணும்.

ஒருவேளை எலி பொந்துக்குள்ள இருந்தா?

அதுக்கு தான் மம்முட்டி இருக்கே, அதை வெச்சி வெட்டி பிடிக்கணும்.

நீ தானே சொன்னே, எலி பல பொந்து வழியா ஓடுமுன்னு, அப்போ என்ன செய்வே?

அதுக்கு தான் பொந்துகிட்ட இருக்கணும் கையில் சாக்கு பை இருக்குதுல்ல, அதை வைச்சி போத்தி பிடிக்கனும்.

பாம்பு கீம்பு பொந்துல்ல இருந்தா?

முருகன் கடுப்புல ஏலே சும்மா வாரியா, பாம்பு இருந்தா நீயே பிடி, அதான் பாக்க போறேல்ல

அதுக்கு மேலே பேசினா, கம்பியால என்னை குத்திப்புடுவான்னு விட்டுட்டேன். நேரா எங்க பாட்டி வீட்டு தோட்ட வேலிபக்கம் போனாங்க, அங்கே நெறைய ஒட மரம் இருந்தது, முள் கால்ல ஏறினா, மூணு நாளுக்கு வலிக்கும், அதே பயத்தில் கவனமாக போனோம்.

நைசா பூனை மாதிரி நடந்தோம், அவங்க சொன்ன மாதிரியே வெள்ளெலி நடமாட்டம் இருந்துச்சு, ஆனா நேருக்கு நேரா டார்ச் அடிக்கும் நிலையில் ஒன்னும் வரலை, வந்த ஒரு எலியையும் ஒருத்தன் தும்மல் போட்டு விரட்டிட்டான்.

அப்புறம் பொறுமை இல்லாம எல்லோரும் எலிகளை வெரட்டிக்கிட்டு போனோம், ஒவ்வொன்னும் ஒவ்வொரு தெசையில ஓடி, பொந்துல போயிட்டுது. அப்புறம் என்ன முருகன், முத்து எல்லாம் ஆளுக்கு ஒரு பொந்தை தோண்டினாங்க, நாங்க ஆளுக்கு ஒரு பொந்துகிட்ட சாக்குபையை பிடிச்சிக்கிட்டு இருந்தோம், ஒன்னும் வருகிறபாடு இல்லை.

அப்புறம் வெறுத்து போய், சரி வேற பக்கம் போகலாமுன்னு போனோம், அங்கேயும் எங்க சத்தம் கேட்டு எலிகள் ஓட்டுது, உடனே பாஸ் சொன்னார் எலி புடிக்க கூட்டம் சேர்க்ககூடாது, மூணு பேருக்கு மேல போன இப்படி ஆகும்

நான் மட்டுமல்ல, ஊருக்கு கோவில்கொடைக்கு வந்த பட்டினத்து பசங்க வேற வர, ஒரே திருவிழா கோஷ்டி மாதிரி தான் எலி புடிக்க போனோம்.

அப்புறம் முருகன் ஒரு பொந்தை தோண்ட நாங்க ஆவலோடு பார்த்துட்டு இருந்தோமா, சடார்ன்னு உள்ளே இருந்து ஒரு பாம்பு எங்களுக்கு பயந்து எங்க காலுக்குள்ள ஓட, நாங்க அதுக்கு பயந்து அலறி அடிச்சிட்டு ஓட, கோஷ்டி கும்பல் எல்லாமே எலிகளை விட அதிக திசைகளில் ஓடிட்டாங்க, நானும் பயந்து முள் செடி எல்லாம் தாண்டி ஒரே ஓட்டமாக ஓடி, ரோட்டுக்கு வந்துட்டேன், கை, கால், முட்டி, எல்லாம் முள் கிழித்து ரத்தம் வந்தது, நல்லவேளை பாம்பு கடிக்கலைன்னு மனசை தேத்திக்கிட்டு கோயிலுக்கு வந்தேன். அங்கே எனக்கு முன்னாடியே பல பயலுக்கு வந்துட்டாங்க. எங்க பாஸ், சுதாகர் அண்ணா, முருகன் மூணு பேர் மட்டும் வரலை.

கொஞ்ச நேரத்தில மூணு பேரும் வந்தாங்க, எலே! கோயிலுக்கு பின்னாடி வாங்கலே! எளநீ வெட்டி வந்திருக்கோம், சாப்பிடலாமுன்னு கூட்டிட்டு போனாங்க. நாங்க ஓடி வந்த பின்னாடி அவங்க ஒரு தோப்புல நொழஞ்சி எளநீ வெட்டிட்டு வந்துட்டாங்க, நாங்களும் ஜாலியா சாப்பிட்டோம்.

வெள்ளெலி வேட்டை இத்தனை கஷ்டமான்னு நினைச்சா, செல மக்க செலவே இல்லாமல் எலி புடிச்சாங்க அது எப்படின்னு அடுத்த வாட்டி சொல்லுறேன்.

இனியவன்
13-06-2006, 11:56 AM
அண்ணாச்சி பரம்ஸ் இப்படிக் கதை கதையா அவுத்து விட்டா எப்படி? வெளிநாட்டுல உக்கார்ந்துக்குற என்னால பழசையெல்லாம் நினைச்சு ஒரு பெரிய உஷ் ,,,,, அவ்வளவுதான். அது ஒரு அழகிய கனாக்காலம்..
நினைவுகள் தினம் தினம் உலாப் போகும் னு இப்போதைக்கு பாட மட்டும் தான் முடியும். அனுபவிச்சத எழுத்துல கொண்டு வர்ரது கொஞ்சம் கஷ்டம். உங்களுக்கு அது இலகுவாக வருகிறது,,, தொடருங்கள்,,,,

தாமரை
13-06-2006, 02:00 PM
நம்முடைய வேட்டை கொஞ்சம் சிம்பிள்தான்..

ஒருநா எங்க ஸ்கூல்ல கைவேலை பீரியட்ல களிமண் பொம்மைகள் செய்யறதைப் பத்தி சொல்லிக் கொடுத்து, களிமண்ணால் பொம்மை செஞ்சு சுட்டு எடுத்து வரச் சொல்லியிருந்தாங்க...

களிமண் நிறைய தலையில் இருந்தாலும்... அது எதுக்கும் உபயோகமில்லையே.. அதனால் எங்க தெரு முனையில் இருந்த பஞ்சந்தாங்கி ஏரிக்கு களிமண் எடுக்கச் சென்றோம்...(இப்ப இந்த ஏரியே இல்லை.. சுமார் 400 வீடுகள் 4 கோயில்கள் இருக்கு...)

களிமண் சேர்த்து இரும்புச்சட்டியில் அள்ளி வைத்தபோது லேசா இருட்ட ஆரம்பித்தது..

அடுத்த வீட்டு ஓபுளி, அவன் அண்ணன் சன்ன அப்பைய(சின்ன பையன்)
அவ்னோட நண்பர்கள் விடுவிடுவென முள்செடிகளை முறிச்சு கையில எடுத்துகிட்டு ரெடியானாங்க...

என்ன என்னன்னு கேட்டாக்க வவ்வால் புடிக்கப் போறோனு சொன்னாக..
நாமளும்தான் அடிப்பமேன்னு ஒரு வேலா முள் செடியை முறிச்சு கையில புடிச்சுகிட்டு ரெடியானேன்...


முள் மரங்க பக்கத்திலிருந்து வவ்வால்கள் பரந்து வர கொஞ்ச கொஞ்ச கேப்பில நின்ன மக்கள் செடிங்கள் வேகமா கீழிருந்து மேலே சுத்த (தோனி மாதிரி).. பல வவ்வால்கள் சர்ருன்னு மேல எகிற ஒண்ணு ரண்டு முள் பட்டு இற்க்கை கிழிந்து தொபுக்னு கீழே விழுந்துட்டுது..

ஒரு பத்து பதினைஞ்சு நிமிடம் தான்..

அப்புறம் பார்த்தா கீழே ஏழெட்டு வவ்வால்.. அங்கயே காய்ஞ்ச முள்ளுங்களை சேத்து னெருப்பு வச்சு வேட்டையாட யூஸ் பண்ணின முள்ளு தண்டுலய வவ்வாலை குத்தி சுட்டாங்க...

நல்லா கருக வெந்தப்புறம் பிச்சு சாப்பிடும்போது எச்சிலூற நிண்ணுகிட்டிருந்த எனக்கும் ஒரு கால் வவ்வால் பங்கு கிடைச்சது...

முயல், ஆமை, மான், மயில், வான்கோழி, காட்டுக்கோழி, கொக்கு, காடை, கௌதாரி, புறா, கோழி, மீன், நத்தை, ஆக்டோபஸ், சிப்பி, இறால் வகைகள், ஆடு, மாடு, பன்றி என எத்தனையோ மாமிசங்களை ருசி பார்த்திருந்தாலும் (உடும்பு, பாம்பு, தவளை எல்லாம் இன்னும் சாப்பிடலை...) அந்த கருகிய வவ்வாலின் ருசி மனசில அப்படியே இருக்கு... ஏன்னா அது மட்டும்தான் நான் வேட்டையாடி பிடிச்சு சுட்டு தின்னது.....

pradeepkt
14-06-2006, 06:56 AM
செல்வன்,
நீங்களுமா? ஓடுறதில சவுத் செண்ட்ரல் ரெயிலையும் பறக்குறதுல ஏ 380ஐயும் நீந்துறதுல விக்ராந்தையும் தவிர அத்தனையையும் சொல்லிட்டீங்க...
அண்ணா, கடைசியில நீங்க எலி பிடிக்கலை.!!! மலை கெல்லி எலி பிடிக்கிறதுன்னு கேள்விதான் பட்டிருக்கேன். நீங்க அடிச்ச கூத்து அதுக்கு ஈடு இணையே கிடையாது.

நம்ம வீட்டுல வெட்டின கோழியைச் சமைக்கிறதுக்கே படாத பாடு படுவாங்க :) இதில நானே கருப்பண்ண சாமி மாதிரி வேட்டைக்குப் போறேன்னு சொல்லிருந்தா அன்னைக்கே என்னை உரிச்சு உப்புக் கண்டம் போட்டிருப்பாங்க... :D

தாமரை
14-06-2006, 07:03 AM
செல்வன்,
நீங்களுமா? ஓடுறதில சவுத் செண்ட்ரல் ரெயிலையும் பறக்குறதுல ஏ 380ஐயும் நீந்துறதுல விக்ராந்தையும் தவிர அத்தனையையும் சொல்லிட்டீங்க...
அண்ணா, கடைசியில நீங்க எலி பிடிக்கலை.!!! மலை கெல்லி எலி பிடிக்கிறதுன்னு கேள்விதான் பட்டிருக்கேன். நீங்க அடிச்ச கூத்து அதுக்கு ஈடு இணையே கிடையாது.

நம்ம வீட்டுல வெட்டின கோழியைச் சமைக்கிறதுக்கே படாத பாடு படுவாங்க :) இதில நானே கருப்பண்ண சாமி மாதிரி வேட்டைக்குப் போறேன்னு சொல்லிருந்தா அன்னைக்கே என்னை உரிச்சு உப்புக் கண்டம் போட்டிருப்பாங்க... :D
நான் எலி சாப்பிட்டதில்லை.. பெருச்சாளி மட்டும் டேஸ்ட் பண்ணி இருக்கேன்.. ஹி ஹி,.

எங்க வீட்டில எங்க அப்பாவுக்குப் பிறகு கோழி அடிச்சு சுத்தம் செய்யறது, புறா அடிச்சு சுத்தம் செய்யறது, மீனை சுத்தம் செஞ்சு கழுவி வெட்டித் தர்றதுன்னு அம்மாவுக்கு துணையாய் இருந்திருக்கேன்..

ஒருமுறை கதவிடுக்கில் கோழிக்குஞ்சு இருக்க, தெரியாமல் கதவைத் திறந்துவிட்டேன். கோழிக்குஞ்சு நசுங்கி இறந்துவிட்டது.. என் அம்மா அதை சுத்தம் செய்து எனக்கு வறுத்துக் கொடுக்க அன்று முழுவதும் அழுது கொண்டே இருந்தேன்.. (கொன்றால் பாவம் தின்றால் போச்சுன்னு சொல்வாங்களே)

ஏன் பெங்களூர் மக்களெல்லாம் சேர்ந்து ஒரு முறை வேட்டைக்கு போலாமில்ல...

pradeepkt
14-06-2006, 07:14 AM
ஏன் பெங்களூர் மக்களெல்லாம் சேர்ந்து ஒரு முறை வேட்டைக்கு போலாமில்ல...

ஆமாய்யா பென்ஸூம் நீங்களும் வேட்டையாடுங்க... நாங்க வெளையாடுறோம்

kavitha
14-06-2006, 08:58 AM
எலி புடிச்ச கதை நகைச்சுவையாக இருந்தது அண்ணா.
தாமரை செல்வன் வீட்டில் எலி, பல்லி தொல்லைகள் இருக்காதுன்னு நினைக்கிறேன்.

ஏன் பெங்களூர் மக்களெல்லாம் சேர்ந்து ஒரு முறை வேட்டைக்கு போலாமில்ல...
பெங்களூர் இன்னும் சுத்தமாகிடும். :)


இதில நானே கருப்பண்ண சாமி மாதிரி வேட்டைக்குப் போறேன்னு சொல்லிருந்தா இதுல பாதி உண்மை. ஹஹ்ஹ்ஹா

pradeepkt
14-06-2006, 09:46 AM
இதுல பாதி உண்மை. ஹஹ்ஹ்ஹா
இதில எந்த பாதிங்க பொய்யி?
அப்படியே வீரப்பா மாதிரி ஒரு சிரிப்பு வேற... :mad: :eek:

பரஞ்சோதி
14-06-2006, 09:53 AM
செல்வன்,

என்னையும் உங்க வேட்டையாட போகும் கோஷ்டியில் சேர்த்துக்குவீங்களா?

தாமரை
14-06-2006, 10:11 AM
செல்வன்,

என்னையும் உங்க வேட்டையாட போகும் கோஷ்டியில் சேர்த்துக்குவீங்களா?

உங்களுக்குத்தான் நிறைய அனுபவங்கள் இருக்கு,. பென்ஸூம் நீங்களும்தான் எங்களை வழிநடத்தனும்.

தாமரை
14-06-2006, 10:18 AM
எலி புடிச்ச கதை நகைச்சுவையாக இருந்தது அண்ணா.
தாமரை செல்வன் வீட்டில் எலி, பல்லி தொல்லைகள் இருக்காதுன்னு நினைக்கிறேன்.

பெங்களூர் இன்னும் சுத்தமாகிடும். :)

எலி பிடிச்சது பரம்ஸ்.. பழி என்மேல.. இது அடுக்குமா? இல்லை பரம்ஸ் எங்க வீட்டுக்கு வரப்போறாரா? ஆஹா... இதுவும் நல்லா இருக்கே..

பெங்களூர் சுத்தமாவது பென்ஸூ கையில தான் இருக்கு.

Mano.G.
14-06-2006, 10:54 AM
இதெல்லாம் சின்ன வயசுல நீங்க பண்ண லூட்டி
குறும்பு கேட்கும் போதே நானும் உங்களோட
சேர்ந்து வால் பண்ணினது போல இருக்குது.

மனசும் ரொம்ப சந்தோசமாகவும் இருக்கு.

ஆனா நான் சின்ன வயசுல இதுமாதிரி
பண்ணல பண்ணவும் முடியல
எங்கப்பா நாங்க ( நானும் எனது தம்பியும்)
ஏதும் சேட்டைகள் பண்றோமான்னு
கவனிச்சுகிட்டே இருப்பாரு அதோட
அவருக்கு ஸ்பை (spy) வேற நிறையா.


மனோ.ஜி

பரஞ்சோதி
14-06-2006, 01:40 PM
மனோ அண்ணா,

மலேசியாவில் மலை ஏறிய அனுபவங்கள் சொல்லுவீங்கன்னு பார்த்தால், இப்படி சொல்லிட்டீங்க. அங்கே வேட்டைக்கு நிறைய காடுகள் இருக்குது தானே. இப்போ கூட வேட்டைக்கு போக முடியாதா?

kavitha
15-06-2006, 06:19 AM
இப்போ கூட வேட்டைக்கு போக முடியாதா?

இன்னும் கூட உங்களுக்கு அந்த ஆசையெல்லாம் விடலையா? வன இலாகா/ ப்ளூ க்ராஸ் க்கு தெரிஞ்சா நீங்க அம்புட்டுத்தேன்..

தாமரை
15-06-2006, 06:27 AM
ஏங்க இந்த புளூ கிராஸ் வாயில்லா பிராணிகளை பாதுகாக்கணும்னு சொல்றாங்களே!! அப்ப இந்த பாக்டீரியா வைரஸ்களை அழிக்கிற மருந்து கண்டு பிடிக்கற மருந்து கம்பெனிங்க முன்னால போராட்டம் நடத்துவாங்களா????

இனியவன்
15-06-2006, 07:30 AM
ஏங்க இந்த புளூ கிராஸ் வாயில்லா பிராணிகளை பாதுகாக்கணும்னு சொல்றாங்களே!! அப்ப இந்த பாக்டீரியா வைரஸ்களை அழிக்கிற மருந்து கண்டு பிடிக்கற மருந்து கம்பெனிங்க முன்னால போராட்டம் நடத்துவாங்களா????

நக்கலு ம் ம்,,,,,,:rolleyes:

மயூ
16-06-2006, 08:26 AM
ஏங்க இந்த புளூ கிராஸ் வாயில்லா பிராணிகளை பாதுகாக்கணும்னு சொல்றாங்களே!! அப்ப இந்த பாக்டீரியா வைரஸ்களை அழிக்கிற மருந்து கண்டு பிடிக்கற மருந்து கம்பெனிங்க முன்னால போராட்டம் நடத்துவாங்களா????
ஆமா நடத்தலாம் ஆனால் கொஞ்ச காலத்தால மனிசங்க ஆர்ப்பாட்டம் செய்த இடமேல்லாம் பக்டீரியாதான் திரியும். :mad: :mad:
மனுசங்க எல்லாருக்கும் அல்வாதான். :eek:

தாமரை
16-06-2006, 12:48 PM
ஆமா நடத்தலாம் ஆனால் கொஞ்ச காலத்தால மனிசங்க ஆர்ப்பாட்டம் செய்த இடமேல்லாம் பக்டீரியாதான் திரியும். :mad: :mad:
மனுசங்க எல்லாருக்கும் அல்வாதான். :eek:
அதாவது மனிதனுக்கு ஆபத்து விளைவிக்கும் அப்படின்னு தோணினா போட்டுத் தள்ளிடணும்.. அம்புட்டுதானே!!! சரி அதை விட்டுருவோம்.. அப்பாவி கரப்பான் பூச்சி.. அதை நிம்மதியா வாழ விடறாங்களா இந்த பாம்புக்கும் பல்லிக்கும் பறிந்து பேசுகிறவர்கள்...

கொசுவால எந்த வியாதியும் உண்டாவதில்லை.. அப்பாவி கொசுக்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற பயங்கரவாதிகளால் கெட்ட பெயர் வாங்கிக் கொண்டு கொசு வர்த்திப் புகையிலும், மற்றும் வேதிப் பொருட்களாலும் கொன்று குவிக்கப்படுகின்றனவே அதையாவது காப்பாற்றுவீர்களா.. (அவை உங்களின் ரத்தத்தின் ரத்தங்களாயிற்றே)

இளசு
02-07-2006, 10:22 PM
அன்பு பரம்ஸ்,

நண்பர்கள் சொல்லுவதுபோல் நினைவுகளை அப்படியே அழகாய் எழுத்தில் கொண்டு வரும் திறமை அசத்துகிறது.

பாரதியின் குறிப்புகள் போல் இத்தொடரும் ஒரு உயர்ந்த வகைக் காலப்பதிவுகள்.


இணையத்தால் விளைந்த நன்மை இது.


பாம்பும் எலி பிடிக்க வந்ததால் அந்த வேட்டை பாதியில் முடிந்த கதை

அருமை.


செல்வனின் வவ்வால் உள்ளிட்ட பதிவுகளும் அதையொட்டிய கவிதா, இனியன் சலம்பல்களும் சுவை. பாராட்டுகள்.

ஓவியன்
15-07-2008, 02:45 PM
பரம்ஸ் அண்ணாவின் எலி வேட்டையும்
செல்வன் அண்ணாவின் வெளவால் வேட்டையும்
பழைய ஞாபகங்களை கிளறி விட்டன....!! :)

நான், ஏதோ வேட்டைக்குப் போனேன், என்று நினைக்காதேங்கோ...
வேட்டை ஆடிக் கொண்டு, கொன்று வந்தவற்றைச் சாப்பிட்டு இருக்கன்..!! :D