PDA

View Full Version : கொண்டாடிய 'குழந்தைகள் தினம்'kavitha
29-03-2006, 07:22 AM
கொண்டாடிய 'குழந்தைகள் தினம்'


அப்போ எனக்கு 12 வயசிருக்கும். ஆறாவது படிச்சிட்டு இருந்தேன். என்கூட ஜீடி, ஷீலா, வசந்தவல்லி, பத்மாவதி, புனிதா, ரஜினி, பிரியதர்ஷினி இவங்களோட சேர்த்து மொத்தம் 60 பேர் எங்கள் க்ளாஸ்ல.
நானும் ஜீடியும் எலிமென்ட்ரி ஸ்கூல்லேயே பிரண்ட்ஸ். மத்தவங்கள்லாம் ஹைஸ்கூல் வந்தபிறகு தான் கிடைச்சாங்க. அதுவரைக்கும் தரையில் அமர்ந்து படிச்சிட்டுருந்த எங்களுக்கு ஹைஸ்கூல் வந்தபிறகு தான்
இரண்டாவது மாடியில் அதுவும் ஸ்டீல் பெஞ்ச், டெஸ்க் கோட க்ளாஸ் தந்தாங்க. டீச்சர் ங்களும் ஒவ்வொரு பாடத்திற்கு ஒருத்தரா வந்தாங்க.

வருசா வருசம் எங்க ஸ்கூல்ல இரண்டுமுறை கலை நிகழ்ச்சிகள் நடக்கும். ஒன்று வருடம் ஆரம்பிச்சதும் நான்காம் மாதம் நடக்கிற ஸ்போர்ட்ஸ் டே, இன்னொன்று ஆண்டு இறுதியில் நடக்கும் ஆண்டுவிழா. இரண்டுமே ரொம்ப பெரியவிழாவா நடக்கும். ஸ்போர்ட்ஸ் டேனா ஈவண்ட்ஸ் எல்லாம் காலையில் 7 மணியிலிருந்தே ஆரம்பிச்சுடுவாங்க. ஒவ்வொரு விளையாட்டுப்போட்டியா வச்சு, சாயங்காலம் வரை நடத்தின அத்தனைக்கும் சேர்த்து மாவட்ட கலெக்டர் கலை நிகழ்ச்சியில் வந்து பரிசு கொடுப்பார்.
ஆண்டுவிழாவில் ஆண்டுமுழுக்க பள்ளிக்கு ரெகுலரா வந்தவங்க, பாடத்தில் முதலிடம் வந்தவங்க, எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ் அப்புறம் டிஸ்ட்ரிக் அவார்ட், ஸ்டேட் அவார்ட் வாங்கினவங்களுக்கெல்லாம் பெரிய பிரமுகரையா பள்ளிக்கு அழைத்துவந்து பெற்றோர்களுக்கும் சேர்த்து பரிசுகள் தருவாங்க.

ஒவ்வொரு திங்கள்கிழமையும் எங்களோட ஹெட்மிஸ்ட்ரஸ் அசெம்பிளி ப்ரேயர் முடிந்ததும் நேரடியா பேசுவாங்க. நாங்களும் எங்களோட க்ளாஸ் லீடரிமோ, ஸ்கூல் ரெப்ரசண்டேட்டிவ் கிட்டேயோ எங்களோட தேவைகள், குறைகள் இருந்தா சொல்லி ஹெச்.எம் கிட்ட சொல்ல சொல்லுவோம். இமீடியட் கான்பரஸ் இருந்தா வகுப்பிலேயே இணைக்கப்பட்ட ஒலிப்பெருக்கி மூலமா திடீர் அசெம்பிளிக்கும் அவங்க அறையில் இருந்தபடியே ஏற்பாடு செய்திருந்தாங்க. இதனால தலைவர்கள் இறந்த செய்தி, திடீர் கடை அடைப்பு, டெலிகேட்ஸ் வருகை இப்படி எந்த செய்தினாலும் பள்ளியில் இருக்கிற எல்லாக்குழந்தைகளுக்கும் உடனே தெரிஞ்சிடும்.

அப்படி ஒரு சமயம், நவம்பர் மாதத்தின் முதல் வாரத் திங்கள்கிழமை ஹெச்.எம் எங்களுக்கொரு சர்ப்ரைஸ் அனொன்ஸ்மென்ட் தந்தாங்க. அதாவது புதிதாக எங்கள் மாவட்டத்திற்கு பதவிப்பொறுப்பேற்றிருக்கும் கலெக்டர் எங்கள் பள்ளிக்கு குழந்தைகள் தினத்தன்று வருவதாகவும் அன்று முழுவதும் பள்ளியை சுத்தப்படுத்துவது, அலங்கரிப்பது, ஓவியம், பாட்டு, மாற்றுடை, ஆடல், ஜிம்னாஸ்டிக்,திருக்குறள் இப்படி எல்லாவிதமான போட்டிகளையும் நடத்தி அதில் முதலிடம் வருபவர்களுக்கு மாவட்ட ஆட்சியாளர் பரிசு வழங்கப்போவதாகவும் தெரிவித்தார்கள்.

போட்டியை இரண்டுபாகமாக பிரித்திருந்தார்கள். முதல் பாகம் குழுஒற்றுமை(யுனிட்டிடெவலப்மென்ட்), இரண்டாவது பாகம் தனிநபர்திறமை(இண்டிஜுவாலிட்டி எக்ஸ்புளோஸர்). அதாவது காலையிலிருந்து மதியம் வரை ஒவ்வொரு வகுப்பும் அவர்களது வகுப்பை சுத்தம் செய்து ஒரு மையக்கருத்தோடு அலங்கரிக்கவேண்டும். மதியம் முதல் மாலை வரை தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தவேண்டும். இதற்கு ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு உதவக்கூடாது என்றும், இதை ஆங்காங்கே நடத்தப்படும் மையத்தில் பதிவெண் கொண்டு ஆசிரியர் குழுக்கள் மதிப்பீடு செய்வார்கள் என்றும் உத்தரவிட்டிருந்தார்கள்.

எங்களுக்கு உற்சாகம் ஒருபக்கம்; என்ன செய்வதென்று மண்டை உடைப்பு ஒருபக்கம். இதில் பள்ளி இடைத்தேர்வுகளும் எங்களை விட்டபாடில்லை. எங்கள் வகுப்பாசிரியரிடம் ஆலோசனை கேட்டபோது போட்டி விதிப்படி அவர் எங்களுக்கு எந்த ஆலோசனையும் வழங்கமுடியாது என்று நழுவிவிட்டார்.

எங்களுக்கோ நாட்கள் நகர நகர குழப்பம் தலைக்கேறியது. ஏனெனில் இதுவரை இப்படி ஒரு போட்டியே நடந்ததில்லை. விழா நடப்பதற்கு முதல் நாள் மாலை, பள்ளி முடிந்தபிறகு க்ளாஸ் லீடர் வசந்தவல்லி, நான், ஜீடி, புனிதா, மஞ்சு என்கிற பத்மாவதி, ஷீலா, ரஜினி 7 பேரும் கொடிமரத்தடியில் அமர்ந்து பேசினோம்.

வசந்தவல்லி, "நான் காலையிலேயே நம்ம க்ளாஸில் இருக்கும் அத்தனைபேரிடமும் அவங்க வீட்டில் இருக்கிற பொம்மைகள், புத்தகங்களை எடுத்துவரச்சொல்லிட்டேன்"

ரஜினி, "எங்க ஸ்டோரில் டெக்கரேட்டிவ் கலர் பேப்பர்ஸ், ஜமிக்கி, கண்ணாடி விளக்குகள் எல்லாம் இருக்கு... நாளை கொண்டு வருகிறேன்"

நானும் ஜீடியும் "ஓகே. அப்ப நாங்க ரெண்டு பேரும் ப்ளவர் பொக்கே, எம்ராய்டரி ஸேரிஸ் க்கு ஏற்பாடு செய்திடறோம்"

மஞ்சு, "ஏய் நான் என்ன பண்றது? எனக்கேதாச்சும் சொல்லுங்கப்பா"

நான், "மஞ்சு, உங்க வீட்டுப்பக்கம் தானே ஏரி இருக்கு, நீ நாளைக்கு வரும்போது ஒரு பெரிய பாக்கெட் நிறைய களிமண்ணும், ஒரு பெரிய பிள்ளையார் பொம்மையும் எடுத்துட்டு வா"

ஷீலா, "நானும் எங்கவீட்டில் இருக்கிற பொம்மையெல்லாம் எடுத்தாறேன்.... களிமண்ணை வச்சு என்ன செய்யப்போறே?"

ஜீடி, "கவி, மலை போல செய்து அதில் கோயில் கட்டி ஸ்டெப் எல்லாம் வைத்து விளக்கு ஏற்றி வைப்போமா?"
புனிதா, " அப்போ நான் எங்கள் வீட்டில் இருக்கிற அகல்விளக்குகளைக் கொண்டுவருகிறேன்"

"டேம் போல செய்து தண்ணீர் நிற்கவைத்து குட்டி குட்டி மரங்கள் போல செடிகளை ஓரத்தில் நட்டுவைக்கலாம். ரஜினி ஸ்டோரில் பிளாஸ்டிக் மீன்கள் இருக்கு. அதைவைத்து அழகாக டெக்கரேட் பண்ணிடலாம்."

வசந்தவல்லி, "இதுமட்டும் போதாது. சுவரெல்லாம் சாட் வரைஞ்சு ஒட்டணும். ஆளுக்கொரு சப்ஜெக்ட். ஓகே வா?"

நான்," ம். சரி... நான் ரைம்ஸ்- ல் இருக்கும் 'பேக்பைப்பர்' ஸ்டோரி வரைஞ்சிட்டு வரேன்"

ஜீடி "நான் மைட்டோகாண்ட்ரியா வும், செல் வால்ஸ் ம்"

ஷீலா "அல்ஜீப்ரா ஈகுவேசன்ஸ்... அதான் ஈஸி... வரையத்தேவையில்ல..எழுதினா போதும்"

வசந்தவல்லி, "சரி சரி... சுவர் புல்லா ஒட்டுறாமாதிரி எல்லோரும் ஆளுக்கொன்னு கொண்டு வந்திருங்க"

வீட்டுக்குப்போனதும் ஒவ்வொன்றாக தயார்செய்து, படம் வரைந்து இரவு தூங்கப்போவதற்கு நள்ளிரவு ஆனது.
மறுநாள் யோசனையில் மீதி இரவும் கழிந்தது.

நேருஜி பிறந்த நவம்பர் 14 - குழந்தைகள் தினம்...
காலையில் பள்ளி எப்போதைய நாளை விடவும் களை கட்டியது.

வகுப்பறையில் அலமாரி முழுவதும் பொம்மைகளாக நிறைந்திருந்தன. ரெட், புளூ, பிங்க், கிரீன், யெள்ளோ ஹவுஸ் குழுக்களின் அடிப்படையில் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு வேலையாக பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதலில் வகுப்பறையிலுள்ள டெஸ்க், பெஞ்ச் அனைத்தும் ஒரு குழு அப்புறப்படுத்தியது. இன்னொரு குழு நீரூற்றி வகுப்பறையை சுத்தம் செய்தது.
அலங்கரிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டது. கொண்டுவந்த பொம்மைகள், வகுப்பறை ஆவணங்கள், கோப்புகளை பாதுகாக்கவும், வேறு வகுப்புப் பிள்ளைகள் எங்கள் வகுப்பில் நடப்பதை அறியாவண்ணம் பாதுகாக்கவும் இன்னொரு குழு நியமிக்கப்பட்டது.

கரும்பலகையில் கலைமகளின் ஓவியத்தை ஒருத்தி வரைய, ரோஜா இதழ்களால் வாசலில் நேருவின் உருவப்படத்தை இன்னொருவர் வரைய பெஞ்ச் மீது பெஞ்ச் போட்டு சாட், கலர் பேப்பர் ஒட்ட என்று ஆளுக்கொருவராக வேலைகளை எங்கள் குழுவில் ஆரம்பித்தோம்.
வகுப்பிலுள்ள அனைவரது பொம்மைகளுமாக சேர்ந்து ஒரு சிறிய குன்று போல பொம்மைகள் இருந்தன. யாருடைய பொம்மைகள் யாருடையவை என்பதைக் கண்காணிப்புக்குழுக்கள் பெயர், எண்ணிக்கையுடன் ஒரு பட்டியல் தயார் செய்து வைத்திருந்தனர். இதனால் எங்களுக்கு அவைகளைப் பிரிப்பதும் மீண்டும் அவர்களுக்கு திருப்பிக்கொடுக்கவும் வசதியாக இருந்தது.

கொண்டுவரப்பட்ட பொம்மைகளில் ஒரே ரகமாக இருந்த பொம்மைகளை எல்லாம் தனித்தனியாக நான் பிரித்தெடுத்தேன். அதாவது, வாகன பொம்மைகளை எல்லாம் தனியாக, கடவுள் உருவ பொம்மைகள் தனியாக, விலங்குகள், செடிகள், மீன்கள் போன்ற பொம்மைகள் தனியாக என்று வகைப்படுத்தினேன். மீதி பொம்மைகள் பெஞ்ச், டெஸ்க்குகளை அடுக்கிவைத்து நவராத்திரி கொழு போல பொம்மைகள் வரிசையாக படிகளில் அடுக்கிவைக்கப்பட்டன.

மஞ்சு, சொன்னபடி களிமண்ணும், பிள்ளையார் பொம்மையும் கொண்டுவந்திருந்தாள்; அதை மலையாக்கி மலையில் பிள்ளையாரை அமர வைத்து படிகள் செய்து அடிவாரத்தில் ஆறு அமைத்து ஆர்க்கிடெக்சர் பொம்மைகளால் அணை செய்து சுற்றிலும் செடிகள் வைத்து நிரப்பினோம். மயில், மான், புறா ஆங்காங்கே நிற்பது போல, பறவைகள் பறப்பது போல அவற்றில் அழகாக பொருத்தி வைத்தோம்.

அணையின் அடியில் தண்ணீர் நிரப்பி களிமண்ணால் கரைகள் கட்டி பல வண்ண பிளாஸ்டிக் மீன்களை அதில் விட்டு கரையில் ஒரு மீனவ பொம்மையைக் கையில் தூண்டிலோடு அமரவைத்தோம். சின்ன சின்ன பூக்களால் ஒட்டவைத்து பச்சைவண்ணத்தாளை மெல்லியதாக நறுக்கி புல்வெளி அமைத்து அவற்றில் நிஜக் கொடிகளைப் படரவிட்டோம்.

அதனருகே வரிசையாக செல்லும் ரயில்பெட்டிகளை அடுக்கி கீ கொடுத்தால் ஓடும் தண்டவாளத்தின் மீது அமைத்து ரயில் நிலையமும், பஸ் பொம்மைகளைக்கொண்டு பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டது. அட்டைப்பெட்டிகளாலும் செங்கற்கல்லாலும் அடுக்கிவைத்து காவல் நிலையத்தின் முன்புறத்தை மட்டும் உருவாக்கி இருந்தோம். சாக்பீஸால் வட்டம் போட்டு அதனுள் விமான பொம்மைகளை நிற்கவைத்து விமான நிலையமும் தயார் ஆனது.

மற்றொரு புறம் ஸ்கூட்டர், கார், லாரி பொம்மைகளை வரிசையாக அடுக்கி ஒரு சிலவற்றை மட்டும் ரோடில் செல்வதுபோல சாக்பீஸால் ஆன ரோட்டில் நிறுத்தினோம். ஆங்காங்கே டிராபிக் சிக்னல் ஸ்டேண்டுகளையும் ஸ்கேலின் உதவியால் நிற்கவிட்டோம்.
மலைப்படிகள் காய்ந்ததும் புனிதா அவளது அகல் விளக்குகளை ஏற்றிவைத்தாள். மற்ற கடவுள் சிலைகளைக்கும் ஆங்காங்கே தெர்மோகோலில் செய்த கோபுரத்தின் வாசலில் கோலங்கள் இட்டாள். ஊதிபத்தியும், மலர் மாலைகளும் கொண்டு ஷீலா அலங்கரித்தாள்.
பெண்கள், குழந்தைகள் போன்ற ஆளுருவ பொம்மைகளையும் கோயில் பிரகாரத்தில் ஆங்காங்கே ஜீடி நிற்க வைத்தாள்.

அலமாரியில் புத்தகங்கள் ஒருபுறம் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டு திடீர் நூலகமாக மாறியது. பிளாஸ்டிக் காய்கறிகள், பழங்களை ஒரு கூடையில் அடுக்கி வைத்து இன்னொருபுறம் 'திடீர் சந்தை' முளைத்தது. சுவரின் ஒருபுறத்தில் தேசியத் தலைவர்கள் படமும், மற்றொரு புறம் பாடநூல், உலக வரைபடங்கள், இன்னொரு புறம் நாங்கள் வரைந்துவந்த படங்களையெல்லாம் வரிசையாக மாட்டினோம். அங்கங்கு தெரிந்த மீதி சுவர் பாகங்களையும் கலர் ஜரிகைத்தாள்களால் அலங்கரித்தோம். வகுப்பின் நடுவில் கண்ணாடிவிளக்கு மாட்டப்பட்டது. நுழைவு வாயில் சுவர்கள் பூங்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாசலிலும் மலர்க்கோலங்கள், கலர்ப்பொடிகளால் ரெங்கோலி போடப்பட்டது.

இந்திய வரைபடத்தை நடுவில் வரைந்து தேசிய ஒற்றுமையைக் குறிக்கும்வண்ணம் ஒவ்வொரு மாநிலத்தின் நடுவிலும் அந்தந்த கலாச்சார முறைப்படி ஆடையணிந்த மாணவிகளை நிற்கவைத்தோம். கொழுப்படியின் அடியில் டேப் ரிக்கார்டர் மங்கல இசைத்தட்டோடு தயாராக வைக்கப்பட்டிருந்தது. இவையனைத்தும் மற்ற வகுப்புகளுக்கு துளியும் சென்று சேராவண்ணம் மிக கவனமான பாதுகாப்புடன் திரையிட்டு நடந்தேறியது. அவர்களும் அவரவர் வகுப்புகளை அலங்கரிப்பதில் மும்முரமாக இருந்தனர். இடையில் வரும் சில ஒற்றர்களை எங்களது கண்காணிப்புக்குழுவினர் எச்சரித்து உள்ளேவிடாமல் திருப்பி அனுப்பிவைத்தனர்.

பிற்பகலின் முதல்மணியில் தேர்வுக்குழுவினர் எங்களது வகுப்பை மதிப்பீடு செய்ய வந்தார்கள். இந்தக்குழு அவரவர் வகுப்பாசிரியரைத்தவிர மற்ற 5 நபர்களால் அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு வகுப்பையும் பார்வையிட்டு ம்திப்பெண்கள் வழங்கவேண்டும். இவ்வாறாக 10 குழுக்கள் பார்வையிட்டு மதிப்பிட்டு பள்ளித்தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பித்தார்கள்.
பிறகு தலைமை ஆசிரியரும், சிறப்பு விருந்தினரும் பார்வையாளருமான மாவட்ட ஆட்சித்தலைவரும் ஒவ்வொரு வகுப்பாக பார்வையிட்டனர்.

எங்கள் வகுப்பு முதல் தளத்தில் முதல் வகுப்பாக இருந்தது. எனவே மாணவிகள் சீருடையில் கீழ்த்தளத்திலிருந்து வரிசையாக நின்று வரவேற்பளித்தனர். சாரணியர் முறைப்படி அவருக்கு சல்யூட் அடித்து எங்கள் லீடர் வகுப்பிற்குள் அவர்களை வரவேற்றாள். நறுமணப்புகை, மங்கல இசை, விளக்கொளி என்று எங்கள் வகுப்பே எங்களுக்கு அன்று புதுமையாகக் காட்சி அளித்தது. தலைமை ஆசிரியர் எங்களது அலங்காரங்களை மிகவும் வியந்து பாராட்டினார். ஒவ்வொன்றாக தொட்டுப்பார்த்து ரசித்தார். நிஜப்பூக்களை பிளாஸ்டிக் பூக்களா என்றும், பிளாஸ்டிக் புற்களைப்பார்த்து "இந்தப்புற்களையெல்லாம் எங்கே பறித்து வந்தீர்கள்?" என்றும் கேட்டு எங்களை பரவசப்படுத்தினார். மாவட்ட ஆட்சியாளர் 'மாதிரி நகரம்' உருவாக்கியதையும், கொடுக்கப்பட்ட குறுகிய நேரத்தில் இத்தனைச் சிறப்பாக செய்த எங்களது குழு ஒற்றுமையையும் பாராட்டிவிட்டு அடுத்த வகுப்பிற்குச் சென்றார்கள்.

எங்கள் வகுப்பிற்கு என்ன மதிப்பெண் வழங்கியிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் வேளை வராததாலும், எங்களது தனி நபர்த் திறமையை வெளிப்படுத்தும் போட்டிக்கு செல்லவேண்டியிருந்ததாலும் நாங்கள் வகுப்பறையை பூட்டி விட்டு மைதானத்திற்குச் சென்றோம்.
ஜீடி மாலை நடக்கவிருக்கும் பரதநாட்டிய வரவேற்பின் ஒத்திகைக்குக்கிளம்பினாள். புனிதா ஓட்டப்பந்தயந்திற்கும், ஷீலா கயிறுதாண்டுதலில் கலந்துகொண்டாள். நான் ஓவியப்போட்டிக்கும், திருக்குறள் போட்டிக்கும் பெயர்க்கொடுத்திருந்தேன். மாலை அரேபிக்&வெஸ்ட்டர்ன் டேன்ஸிலும் கலந்திருந்தேன். இவ்வாறாக நாங்கள் தனித்தனியாக கலைந்தாலும் மீண்டும் மாலை 6 மணிக்கு ஆடிட்டோரியத்தில் ஒன்று கூடினோம். தனிநபர் போட்டி முடிவுகள் போட்டி முடிந்தவுடனேயே அறிவிக்கப்பட்டு பரிசுக்குரியவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. எனவே தனிநபர் போட்டியில் யார் யார் பரிசு பெற்றவர்கள் என்பது நாங்கள் சந்தித்துக்கொண்ட போதே தெரிந்துவிட்டது. எங்களுக்கோ அனைத்து வகுப்புகளுக்குமான போட்டியின் வின்னர் யார் என்பதை அறிந்துக்கொள்ளும் ஆவலே மேலிட்டது. கலைநிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக முடிந்தபின் பரிசு அறிவிப்பு.

எங்களது பி.இ.டி ஆசிரியை தனது வெண்கலக்(பித்தளை?) குரலில் முடிவை அறிவித்தார். "தி ப்ர்ஸ்ட் ப்ரைஸ் ஆப் குரூப் யுனிட்டி கோஸ் டூ.... எங்களுக்கு திக், திக்.... "தி ப்ர்ஸ்ட் ப்ரைஸ் ஆப் குரூப் யுனிட்டி கோஸ் டூ.... சிக்ஸ்த் ஸ்டேன்டர்ட் ஏ செக்ஷன்.. சிஸ்டர் திரேசா ப்ளீஸ் கம்" என்று எங்களது வகுப்பாசிரியை அழைத்த போது ஆரவாரமும், கைத்தட்டலுமாய் சந்தோசத்தில் குதித்தோம். பள்ளி முழுவதும் கரகோஷம் ததும்ப மாவட்ட ஆட்சியாளரிடமிருந்து 'மெமோரல் ஸ்டேண்ட்' -ஐ எங்கள் வகுப்பாசிரியை வாங்கிய தருணம் அற்புதமானது. மைக்கிலேயே அவர் "தேங்க்யூ மை டியர் ஸ்டூடன்ஸ்" என்று சொல்லிவிட்டு பரிசைத் தலைமை ஆசிரியரிடம் அளித்தார். நான் பள்ளியை விட்டு வரும்வரை அந்த மெமோரியல் ஸ்டேண்ட் தலைமை ஆசிரியரின் அலுவலகத்தை அலங்கரித்தது.

விழா முடிந்ததும் எங்கள் ஆசிரியை பிறகு மேடையிலிருந்து இறங்கி வந்து எங்களிடம் அளவளாவினார். மற்ற ஆசிரியைகளும் எங்கள் வகுப்பிற்கே முதல் மதிப்பெண் அளித்திருந்ததாகவும், அனைவரின் ஏக மன பாராட்டினை வழங்கித்தந்தமை தனக்கு மறக்க முடியாத அனுபவம் என்றும் கூறினார். நாங்கள் ரஜினிக்கு எங்களது பாராட்டினைக் கைகுலுக்கித் தெரிவித்துக்கொண்டோம். ஏனைனில் கண்ணாடி விளக்குகள், ஜரிகை அலங்காரப்பொருட்கள், வண்ண மீன்கள்.... என்று பல விலையுயர்ந்த பொருட்களைத் தனது ஸ்டோரிலிருந்து ரிஸ்க் எடுத்து கொண்டுவந்தவளாயிற்றே! அவளோ எங்களிடம் "நீங்கள் தானடி காரணம். இந்தப்பொருட்களெல்லாம் எங்கள் கடையில் சும்மா இருந்த போது இல்லாத அழகு... இங்கே நீங்கள் வரிசையாக அடுக்கி பொருத்தமாக அலங்கரித்தபோது தானே வந்தது" என்றாள்.

அன்றைய 'குழந்தைகள் தினம்' எங்கள் ஒவ்வொருவர் வாழ்நாளிலும் மீண்டும் வர இயலாத பாலக தினம்.

mythili
29-03-2006, 11:18 AM
அருமை கவி. ஒவ்வொரு வரியையும் படிக்கும் போது, என் பள்ளி நாட்களில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தியது.

ஒவ்வொரு வரியிலும்..என் வாழ்க்கையில் நடந்தது போல...முடிவு வரும் வரை பரபரப்பாக இருந்தது.

பள்ளிப் பருவத்திற்கே அழைத்து சென்றது.

பாராட்டுக்கள் கவி.

அன்புடன்,
மைத்து

பென்ஸ்
31-03-2006, 06:14 AM
அட பாவி மக்கா... 12 வயசிலயே இத்தனை லீடர்சிப் மற்றும் டீம் பில்டிங்கா...
கலக்கலா இருக்கு கவிதா...
அதிலையும்... அங்கு நடந்ததை எல்லாம் அப்படியே நேற்று நடந்தது போல் சொல்லியது...

நானும் எனக்க 12 வயசில் என்ன பன்னுனேன் என்று யோசித்து பாக்கிறேன்...
ஆனா இங்க பதிக்கிற மாதிரி எதுவும் நியாபகத்துக்கு வரலை :rolleyes: :rolleyes: :D :D :D

pradeepkt
31-03-2006, 06:58 AM
அட பாவி மக்கா... 12 வயசிலயே இத்தனை லீடர்சிப் மற்றும் டீம் பில்டிங்கா...
கலக்கலா இருக்கு கவிதா...
அதிலையும்... அங்கு நடந்ததை எல்லாம் அப்படியே நேற்று நடந்தது போல் சொல்லியது...

நானும் எனக்க 12 வயசில் என்ன பன்னுனேன் என்று யோசித்து பாக்கிறேன்...
ஆனா இங்க பதிக்கிற மாதிரி எதுவும் நியாபகத்துக்கு வரலை :rolleyes: :rolleyes: :D :D :D
அதான் தெரியுமே... சரி சரி, நேரா பண்பட்டவர் பகுதியில போயி பதிச்சிருங்க...
சகோதரி கவிதா, கலக்கிப் போட்டீங்க...

தாமரை
31-03-2006, 07:12 AM
சேலம் நகரில் குழந்தைகள் தினவிழா அனைத்துப் பள்ளிகளும் கலந்து கொள்ள காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறும்..

1 மாதத்திற்கு முன்பே பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு விடும்... சீர்நடை, இசையுடன் கூடிய உடற்பயிற்சிகள் என பொறுக்கி எடுக்கப்பட்ட மாணவர்கள் தினம் பயிற்சி எடுப்பர். அனைவருக்கும் பளீர் சீருடைகள் தயார் செய்யப்பட்டு மின்னுவார்கள்...

நவம்பர் 14 காலை ஸ்டேடியத்தில் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் கூட அனைத்து பள்ளிகளும் அணிவகுத்து இசையுடன் கூடிய உடற்பயிற்சியினால் மனம் மகிழ மாவட்ட ஆட்சித்தலைவர், காவல் துறைத் தலைவர் போன்றோர் உரையாற்றி ... சிறந்த பள்ளிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டுவார்கள்...

ம்ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம்...

பென்ஸ்
31-03-2006, 07:29 AM
ம்ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம்...

ஏன் அது எல்லாம் இப்ப நடக்கலையாக்கும்... :rolleyes: :rolleyes: :rolleyes:

நீரு அதிலை என்ன செஞ்சீரு என்று கவிதா சொன்னது போல் எடுத்துவிடும்...:p :p

kavitha
12-04-2006, 12:14 PM
மைத்து... எப்படிடிம்மா இருக்கே...?
உன் பள்ளி வாழ்க்கையையும் சொல்லு...

பென்ஸ், பிரதீப், தாமரை அனைவருக்கும் நன்றிகள். நீங்களும் உங்கள் பள்ளியில் நடந்த/ நடத்திய சிறப்பான நிகழ்வுகளைப்பதிக்கலாமே!

மதி
12-04-2006, 11:07 PM
அருமையாய் விவரித்துள்ளீர் கவிதா..

நானும் நினைத்து பார்க்கிறேன். ஆறாம் வகுப்பில் நடந்தது ஒன்றும் நினைவில்லை..

gragavan
13-04-2006, 04:28 PM
படிக்கும் பொழுதே ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி தோன்றுகிறது. உண்மையான குழந்தைகள் தினமாகக் கொண்டாடியிருக்கின்றீர்கள். மிகவும் அருமையாகவும் அதை எடுத்துச் சொல்லியிருக்கின்றீர்கள்.

aren
13-04-2006, 04:41 PM
அருமை கவிதா!!!!!

நேற்று உங்கள் வகுப்பில் நடந்ததுபோல் அவ்வளவு தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

உங்கள் பரிசு இன்றும் தலைமை ஆசிரியரின் அறையில்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஓவியா
29-04-2007, 01:06 AM
கவி கலக்கலான பதிவு. அசத்திடீங்க தோழி.

அழகான எழுத்து நடை. சுவாரஸ்யமாக படித்தேன். பின் ரசித்தேன்.

மிகவும் திறமையான பெண் நீங்கள். பாராட்டுகிறேன்.

ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று எண்ணம் வந்தால் முதலில் என் 12 வயது சாதனைகளைதான் எழுதுவேன்.