PDA

View Full Version : ஒரு கல்யாணத் தூது .. .. ..



தாமரை
07-02-2006, 09:34 AM
அந்த
தந்தக் கால்களின் சொந்தக்காரி..
அவள்தான்
தழுவத் துடிக்கும்
என் இதயத்தின் சொந்தக்காரி

அந்த
தங்க வண்ண உயிரோவியம்
காதல்
ததும்பி நிற்கும்
பொன்னோவியம்

அவள்தான்
காமனவன் கணைகளினால்
என் இதயத்திலே
எழுதப்பட்ட
என்னோவியம்

மின்மினிப் பூச்சியாய்
இமைச் சிறகடிக்கும்
அந்த
இரு விழிகள்

புல்லாங் குழலிலே
புகுந்து புறப்பட்ட
அவளது
வார்த்தைச் சங்கீதம்

ஒரு
முத்துப் புதையலை
தன்னுள்
ஒளித்து வைத்திருக்கும்
அந்தப்
பவளக் கதவுகள்

அந்தக்
கோமள வள்ளிக்
கொடியிலே
கனிந்து நிற்கும்
கன்னக் கனிகள்

இவையெல்லாம் தான் நண்பா
என்னை அவள்பால்
ஈர்த்து விட்டன..

ஆம் நண்பா..
என் இதயத்தை
இரும்புக் கம்பிகளுக்குள்தான்
சிறை வைத்திருந்தேன்..

அந்த
மல்லிகைக் கொடியோ
அந்தக் கம்பிகளையே
கொம்புகளாய் மாற்றி
படர்ந்து விட்டது..
.......
......
............................................................. தொடரும்

மதி
07-02-2006, 09:43 AM
தொடக்கமே அருமை..
ம்ம்ம்..மேலும் தொடருங்கள்....

பென்ஸ்
07-02-2006, 10:31 AM
காதலையை பாடும் போதுதான் உலகின் உள்ள எல்லாவற்றையும் ஒவ்வொரு உவமையாய் வைத்து சித்தரிக்க தோன்றும்...


என் இதயத்தை
இரும்புக் கம்பிகளுக்குள்தான்
சிறை வைத்திருந்தேன்..

அந்த
மல்லிகைக் கொடியோ
அந்தக் கம்பிகளையே
கொம்புகளாய் மாற்றி
படர்ந்து விட்டது..


அருமை...
சூப்பரப்பு....

சந்தேகம்:
பெண்ணை கொடி என்பது, அவள் வளைந்து கொடுக்க வேண்டும் என்று நாம் நினைப்பதாலா???
இல்லை "துனையால்" தான் எழும்ப முடியும் என்பதாலா....???
அது அவள் "இடை" என்பதால் என்றால் நல்லது.. அல்லவா???

sarcharan
07-02-2006, 10:42 AM
பென்ஸூ,
எப்படியப்பு இது எல்லாம்.....?
ஆமா ஆனானப்பட்ட உங்களுக்கே சந்தேகமா?
லிப்ஸ்டிக், புடவை கட்டுதல் பத்தியெல்லாம் அன்னிக்கு பின்னி பெடலெடுத்தீங்க....:p

காதலையை பாடும் போதுதான் உலகின் உள்ள எல்லாவற்றையும் ஒவ்வொரு உவமையாய் வைத்து சித்தரிக்க தோன்றும்...
சந்தேகம்:
பெண்ணை கொடி என்பது, அவள் வளைந்து கொடுக்க வேண்டும் என்று நாம் நினைப்பதாலா???
இல்லை "துனையால்" தான் எழும்ப முடியும் என்பதாலா....???
அது அவள் "இடை" என்பதால் என்றால் நல்லது.. அல்லவா???

தாமரை
07-02-2006, 10:48 AM
காதலையை பாடும் போதுதான் உலகின் உள்ள எல்லாவற்றையும் ஒவ்வொரு உவமையாய் வைத்து சித்தரிக்க தோன்றும்...



அருமை...
சூப்பரப்பு....

சந்தேகம்:
பெண்ணை கொடி என்பது, அவள் வளைந்து கொடுக்க வேண்டும் என்று நாம் நினைப்பதாலா???
இல்லை "துனையால்" தான் எழும்ப முடியும் என்பதாலா....???
அது அவள் "இடை" என்பதால் என்றால் நல்லது.. அல்லவா???

பொதுவாய் பார்த்தால் வர்ணிப்பதும் புகழ்வதும் ஒரு வகை ஏமாற்றுதான்..

இங்கு கொடி என நான் சொன்னது .. எனது மனதுக்கு நான் இட்டு வைத்திருந்த கட்டுப்பாடுகளினால் அவள் கவரப் பட்டு.. அந்த கட்டுப்பாடுகளுக்காகவே என்னை நேசித்ததினால்..
கம்பிகளில் கொடி படர்வது போல கட்டுப்பாடுகளை விரும்பிய அவள் என்னை விரும்பினாள் என்ற அர்த்தத்தில்

தாமரை
07-02-2006, 12:55 PM
ஆம் நண்பா..
என் இதயத்தை
இரும்புக் கம்பிகளுக்குள்தான்
சிறை வைத்திருந்தேன்..

அந்த
மல்லிகைக் கொடியோ
அந்தக் கம்பிகளையே
கொம்புகளாய் மாற்றி
படர்ந்து விட்டது..

என்னக் கண்டாலே
பட்டாம் பூச்சியாய்
படபடவென
இமைச் சிறகடிக்கும்
அந்த இரு விழிகள்

என்னைப் பார்த்தாலே
விடியற்காலை
பனித்துளியாய்
அந்த ரோஜா முகத்திலே
வியர்வை முத்துக்கள்..

என் கண்ணைக் கண்டாலே
மண்ணை காணும் அந்த
விழிகள்

நான் அருகிருந்தால்
பட படக்கும்
அந்த இதயம்

அவள் கைகள்
சடையைப் பின்னலிட
அவள் கால்கள்
நடையில் பின்னலிடும்.

இதுவரை
அவள் பின்னழகை
நான் கண்டதில்லை
ஏனென்றால்
நான் பார்க்க
அவள்
சென்றதில்லை

இவையெல்லாம் தான் நண்பா..
என்னை அவள் பால்
ஈர்த்து விட்டன..

sarcharan
07-02-2006, 12:59 PM
செல்வன்,
கவிதைய படிச்சுட்டு கே. ஆரும் செந்திலும் இன்றிரவு (பயத்துல)தூங்க மாட்டாங்க.

தாமரை
08-02-2006, 05:11 AM
இவையெல்லாம் தான் நண்பா..
என்னை அவள் பால்
ஈர்த்து விட்டன..


நான் மட்டும் என்னவாம்..
சூரியனைத் தொடரும்
சூரியகாந்தியாய்
அவள் முகத்தை தொடரும்
என் கண்கள்..

அவள் மணம் வீசினால்
விட மறுக்கும் சுவாசம்..

அவள் பெயரை
உச்சரித்து உச்சரித்தே
இனித்து விட்ட
உதடுகள்..

அவள் காதல் நிறைந்த
கோதலுக்காகவே
காத்துக் கிடக்கும்
என்
தலை முடி

அவளைக் கண்ட போதெல்லாம்
சிலிர்த்தெழுந்து
சல்யூட் அடிக்கும் ரோமச் சிப்பாய்கள்

அந்த லட்சுமியின் பாதம் பட்டு
பூத்து நிற்கும்
என் இதயத் தாமரை

இப்படித்தான் நண்பா
மெல்ல மெல்ல
நான்
அவளின்றி
வாழ விரும்பாதவனாகிப் போனேன்..

பென்ஸ்
08-02-2006, 02:20 PM
அப்படியே 1942-ல நீங்க பன்னுன காதல் பளிச்சிடுது...:rolleyes: :rolleyes: :rolleyes: :D :D

பின்ன என்னவாம்....
கண்டு படபடக்கும் விழி
வியர்வை வித்துகள்...
சடையை பின்னும் கைகள்...
அப்படியே பிதுங்கும் நாணம்....

இவரு மட்டும் என்னவாம்..
கார்பன் டை ஆக்சைடை ஆக்சிஜனாய்...
பெயரை பெயராய் உச்சரித்து..... (அன்னியன் மாதிரி நன்டி என்று நந்தினியை அழைக்காமல்)
ரோமம் சிலிர்த்து...
இதயம் மலர்ந்து....

இம்ம்ம்.... ஒரு காவியம் எழுதுகிறிர்கள்.... சூப்பரப்பு.....

kavitha
10-02-2006, 09:46 AM
அவளைக் கண்ட போதெல்லாம்
சிலிர்த்தெழுந்து
சல்யூட் அடிக்கும் ரோமச் சிப்பாய்கள்
படித்து நகைத்தேன் செல்வன்.
காதலிக்கும்பெண்ணிடம் இதையெல்லாம் சொல்ல தைரியம் வராது.
தூதாக நண்பனிடம். நன்றாக இருக்கிறது. தொடருங்கள்

தாமரை
10-02-2006, 09:56 AM
படித்து நகைத்தேன் செல்வன்.
காதலிக்கும்பெண்ணிடம் இதையெல்லாம் சொல்ல தைரியம் வராது.
தூதாக நண்பனிடம். நன்றாக இருக்கிறது. தொடருங்கள்
காதலித்திருந்தால்(உண்மையில்) கண்டிப்பாக சொல்லி இருப்பேன். இங்கு கற்பனையில் மட்டுமே!!!

kavitha
10-02-2006, 09:57 AM
தைரியசாலி தான் என்கிறீர்கள். :) பாராட்டுகள்.

தாமரை
13-02-2006, 11:10 AM
இப்படித்தான் நண்பா
மெல்ல மெல்ல
நான்
அவளின்றி
வாழ விரும்பாதவனாகிப் போனேன்..


இந்தக் காந்தள் விரல்களைக்
கோர்த்துக் கொண்டுதான்
என்
வாழ்க்கைப் பயணத்தை
தொடர நினைக்கிறேன்

இந்த
அன்புக் கடலில்தான்
என் வாழ்க்கைப் படகை
செலுத்த நினைக்கிறேன்
என் காதலுக்குத் தூதாய்
காற்றினை விட்டேன்
நிலவினை விட்டேன்
மேகத்தை விட்டேன்
கிளியினை விட்டேன்

ஏன்

கவிதையை கூட விட்டேன்

ஆனால்
கல்யாணத் தூதாய்
நான் அனுப்பிய யாவும்
தோற்றே திரும்பின..

ஆம் நண்பா !!
காற்றுக்கும்
நிலவிற்கும்
மேகத்துக்கும்
கிளிக்கும் புரிந்த
காதலின் மொழி
என்
தந்தைக்கு மட்டும்
புரியவில்லை..
இவைகளுக்கும் தான்
என் தந்தையின் மொழி
புரியவில்லை.

அதனால் தான்
அவர் உள்ளத்திலே
ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய்
உன் வார்த்தைக் கற்களை
அடுக்கி
ஒரு மண்டபத்தைக்
கட்டு என்கிறேன்..

அதையே
"கல்" யாண மண்டபமாக்கி
என்
இதயத் தலைவியை
இல்லத் தலைவியாக்கிக்
கொள்கிறேன்.. .. ..

----------------------------------முற்றும் (பைத்தியம் இல்லை:D :D :D :D )

பென்ஸ்
13-02-2006, 11:26 AM
சபாஷ் செல்வன்....
அது என்னவோ தெரியவில்லை, காதல் என்பது பேற்றோருக்கு கடுக்காயாய்...
உலக பேற்றோர் வேறுக்கும் ஒரெ மொழி...

இந்த அன்பு கடலின் ஆழம் காண முடியாததுதான் செல்வன்....
ஆனால் என்றாவது ஒரு நாள் கரை காணலாம்....
அந்த கரையில் இழைப்பாறும் போதும் உங்களை சுற்றியும்
அந்த கடல் என்றும் அலையாய் ஒலித்து கொண்டிருக்கும்...

நல்ல கவி தந்த உங்களுக்கு நன்றி...

தாமரை
13-02-2006, 11:48 AM
சபாஷ் செல்வன்....
அது என்னவோ தெரியவில்லை, காதல் என்பது பேற்றோருக்கு கடுக்காயாய்...
உலக பேற்றோர் வேறுக்கும் ஒரெ மொழி...

இந்த அன்பு கடலின் ஆழம் காண முடியாததுதான் செல்வன்....
ஆனால் என்றாவது ஒரு நாள் கரை காணலாம்....
அந்த கரையில் இழைப்பாறும் போதும் உங்களை சுற்றியும்
அந்த கடல் என்றும் அலையாய் ஒலித்து கொண்டிருக்கும்...

நல்ல கவி தந்த உங்களுக்கு நன்றி...
முதலில் பிள்ளைத் தமிழ் இலக்கணப்படி
தமிழ் பிறந்து, வளர்ந்து, மணந்து மணத்துக் கொண்டிருக்கும் "தமிழுக்கு ஒரு தாலாட்டு.

இப்போது தூது இலக்கணப்படி, நண்பனுக்கு காதலியைக் காட்டி, காதல் வயப்பட்ட கதை சொல்லி, தூது செல்லவேன்டிய காரணம் சொல்லி, அவன் ஆற்ற வேண்டிய காரியம் சொல்லி, புதுக்கவிதையில் மரபிலக்கணத்தைக் கலந்து தந்து இருக்கிறேன்..

அடுத்து என்ன சிறிது வழிகாட்டுங்கள்.

பென்ஸ்
13-02-2006, 11:56 AM
செல்வன்...

நான் அதிகமாக இங்கு மக்கள் காதல் கவிதைகள் எழுதுவதைதான் பார்க்கிறேன்...

காதல் இனிமையானது...
கேட்க இனிக்கும்
வாசிக்க சுவைக்கும்...
அதனாலெ அவை அதிகம் வரவேற்க படுகின்றன...
அதனால் அவை அதிகம் எழுத படுகின்றன...

ஆனால்... சமுதாய ஊக்குவிப்பு கவிதைகள் குறைவே...
இங்கு பாரதிகள் குறைவோ என்று என்ன தோன்றும்... நீங்கள் ஏன் இந்த சமுதாயத்தில் உங்களை பாதித்த ஒரு விஷயத்தை பற்றி கவிதையாக எழுத கூடாது,,,,

மதி
13-02-2006, 02:05 PM
செல்வன்..
இந்த தூதினை படிக்கும் போது..மறந்த மறுத்த பல நினைவுகள்..மேலும் நேற்று வரும் வழியில் "மனமும் அறிவும்" பற்றி நாம் பேசியதும் நினைவுக்கு வருகிறது..

அடுத்து பென்ஸ் சொன்னது போல் சமுதாய விழிப்புணர்வு கவிதைகளை எழுதலாமே..?!

தாமரை
14-02-2006, 06:00 AM
செல்வன்..
இந்த தூதினை படிக்கும் போது..மறந்த மறுத்த பல நினைவுகள்..மேலும் நேற்று வரும் வழியில் "மனமும் அறிவும்" பற்றி நாம் பேசியதும் நினைவுக்கு வருகிறது..

அடுத்து பென்ஸ் சொன்னது போல் சமுதாய விழிப்புணர்வு கவிதைகளை எழுதலாமே..?!
சமூகத்தைப் பொருத்தவரை எனக்கும் ஒரு தனிப்பட்ட பார்வை உண்டு...

என் கோணம் சற்று மாறுபாடாய் உள்ள காரணத்தினால்.. நான் என் எண்ணங்களை சொல்லும் பொழுது எல்லாம் ஒரு முன்னோட்டம் தேவைப்படுகிறது..

முயற்சி செய்கிறேன்...

poo
14-02-2006, 09:32 AM
வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் செல்வன்..

காதல் கவிதை போதை.. சமூக கவிதை போதனை!!

முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்!!