PDA

View Full Version : குறுந்தொகைEmperor
22-04-2003, 09:01 AM
குறுந்தொகையிலிருந்து சில பாடல்களைப் பார்ப்போம்

ஞமரை புரையும் காமர் சேவடி,
பவழத்து அன்ன மேனி, திகழ் ஔஞ்
குன்றி ஏய்க்கும் உடு க்கை குன்றின்
நெஞ்சு பசு எறிந்த அம் சுடர் நெடுவேல்,
சேவம் அம் கொடியோன் காப்ப,
ஏம வைகல் எய்தின்றால் உலகே.
-பாரதம் பாடிய பெருந்தேவனார்

(தாமரை போல சிவந்த அடிகள்
பவழ நிற மேனி
குன்றி மணி நிற உடைகள்
குன்றின் நெஞ்சைப் பிளந்து ஔஞ்ரும் நீண்டவேல்
சேவல் கொடி இவைகள் கொண்ட
முருகன் காக்க
உலகம் பத்திரமானது)

- திரு சுஜாதா அவர்களுக்கு நன்றி

இளசு
22-04-2003, 11:53 AM
அரும்பணிச் சிகரம் எம்பெரரே....
வணங்குகிறேன் உம் சேவைக்கு...
பயன் பெறுவோம் இந்தத் தொடரால்...
தொடருங்கள்.... நன்றி!

kaathalan
22-04-2003, 07:13 PM
தொடருங்கள் உங்கள் பணி பேரரசே. பயனுள்ள தெரிந்துகொள்ள வேண்டிய பகுதிகள். இனியாரும் குறும்தொகை தெரியுமா என்றால் இருக்கிறது இப்பாடல். தமிழ் மன்றம் வாழ்க.

Emperor
23-04-2003, 09:13 AM
இளசு மற்றும் காதலனுக்கு என் நன்றி
-----------------------------------------------------------

குறிஞ்சி 1

செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய் த்த
செங்கோல் அம்பின் செங்கோட்டு யானை
கழல் தொடி , சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே

-திப்புத் தோளார்

(முருகன் சிவப்பு
போர்க்களத்தில் ரத்தம் சிவப்பு
எதிரிகளைக் கொன்ற ஈட்டி முனைகள் சிவப்பு
எங்கள் குன்றத்து
காந்தள் மலரும் சிவப்பு)

karikaalan
23-04-2003, 12:54 PM
அழகான பாடல்கள்; அருமையான விளக்கங்கள். தொடரட்டும் தங்கள் பணி, எம்பரரே!

===கரிகாலன்

இளசு
23-04-2003, 03:44 PM
மீண்டும் நன்றி அய்யா, தொடருங்கள்..அரும்பணியை.

rambal
23-04-2003, 05:05 PM
சுஜாதாதாசனுக்கு என் பணிவான வணக்கம்.. அருமையான சங்க கால இலக்கியங்கள் தமிழ் மன்றத்தில் கரைபுரண்டு ஓடுகிறது தங்கள் தயவால்.. தொடரட்டும் உங்கள் சேவை.. என்னுடைய நீண்ட நாள் ஆசை இன்று ஓரளவு பூர்த்தியாயிருக்கிறது.. விரைவில் என் ஆசைகளை வெளியிடுகிறேன்.. உங்களை போன்றவர்களால்தான் அதை நிறைவேற்றமுடியும்.. வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள் பேரரசிற்கு..

poo
23-04-2003, 05:27 PM
உங்களைப் போன்றவர் சொன்னால்தான் இனி ...

அதுதான் பள்ளி,கல்லூரியை கடந்தாயிற்றே..

நன்றி அரசரே!!

Emperor
26-04-2003, 08:19 AM
நன்பர்கள் கரிகாலன், பூ, ராம்பால் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி !!
இது என் 100-வது போஸ்ட்
------------------------------------------------------------------
குறிஞ்சி 2

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே?

-இறையனார்

(மலர்களுக்கு தினம் தாவும் தும்பி
உள்ளதைச் சொல்
அழகான பற்களும் மயில் பார்வையும் கொண்ட
என் சினேகிதியின் கூந்தலை விட
அதிக மணமுள்ள பூ எதும் உனக்குத் தெரியுமா ?)

குறிஞ்சி 3

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

-தேவகுலத்தார்

(பூமியைவிடப் பெரியது
வானத்தை விட உயர்ந்தது
கடலை விட ஆழமானது
கரிய காம்புக் குறிஞ்சிப் பூக்களிலிருந்து
தேனீக்கள் நிறையத் தேன் எடுக்கும் நாடனோடு
என் காதல்)

இளசு
26-04-2003, 08:21 AM
எம்பரரே
உங்கள் செவ்விய பணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்......

தமிழ்குமரன்
26-04-2003, 01:55 PM
அன்பரே எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்

தமிழ்குமரன்
26-04-2003, 01:56 PM
அருமை அருமை வாழ்க உமது பணி

Emperor
27-04-2003, 06:45 AM
நன்றி நன்பர் இளவல்குமரன்
---------------------------------------------------------------------
குறிஞ்சி 18

வேரல் வேலி வேர்க் கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுதி
யார் அது அறிந்திசினோரே?சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் துங்கியாங்கு இவள்
உயிர் தவச்சிறிது காமம் பெரிதே!

-கபிலர்
(வேர்ப்பலாக்களுக்கு மூங்கில் வேலியிட்ட
மலை நாட்டின் தலைவனே
சிறிய கிளையில் தொங்கும்
பெரிய பலாப்பழம் போல
அவள் காதல் பெரிது
ஆனால் உயிர் மிகச் சிறியது
இதை அறிந்தவர் யார் ?)

இளசு
27-04-2003, 07:02 AM
அருமை அருமை...
கபிலரின் இந்த உவமைக் கவிதை
(இ)எக்காலக் கவிஞருக்கும் ஒரு சவால்...
இப்படியும் சொல்ல முடியுமா....
காதல் தூதில் இது ஒரு மைல்கல்!!!!

பேரரசின் பலாச்சுளைத் தேர்வு... தேன்போல் இனிக்கிறது!

Emperor
29-04-2003, 07:37 AM
வாழ்த்து கூறிய இளவல் சித்தப்பு அவர்களுக்கு என் நன்றி
----------------------------------------------------------------------------------
குறிஞ்சி 21
அகவன் மகளே அகவன் மகளே
மனவுக் கோப்பன்ன நல்நெடுங் கூந்தல்
அகவன்மகளே பாடுக பாட்டே
இன்னம் பாடுக பாட்டே
அவர்நல் நெடுங் குன்றம் பாடிய பாட்டே!
-ஓளவையார்

(அகவன் மகளே* அகவன் மகளே
வெண்சங்கால் ஆன மாலை போன்ற
நரைத்த கூந்தலுடைய அகவன் மகளே
பாடு, பாடு இன்னமும் பாடு.
அவருடைய நல்ல உயரமான குன்றைப் பாடினாயே
அந்தப் பாட்டை!)
அகவன்மகள் - குறி சொல்லும் பெண்

இளசு
29-04-2003, 07:39 AM
பேரரசருக்கே சித்தப்பா
ஒரு கித்தாய்ப்பா
வாழ்த்துகிறேன்... முத்தாய்ப்பா!:)

poo
29-04-2003, 12:56 PM
அரசரின் பணி மேலும் சிறக்கட்டும்.....

lavanya
30-04-2003, 12:15 AM
அருமை பேரரசர் அவர்களே அருமை... தொடரட்டும் உங்கள் சேவை

Hayath
30-04-2003, 04:57 AM
பள்ளி,கல்லூரிக் காலங்களில் படித்தது இப்போதுதான் நினைவிற்கு வருகிறது.பேரரசரின் பணி மகத்தானது மிக எளிமையான விளக்கங்கள் கொடுத்து அசத்துகிறார்.அவரது தமிழ் தொண்டு தொடரட்டும்.பாராட்டுகள்.

goki
30-04-2003, 07:42 AM
விளக்கத்துடன் பாடல்கள் கொடுத்து இருப்பது மிக அருமை. தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்,

பாரதி
01-05-2003, 05:41 PM
அருமை. அருமை.

நன்றி.

aren
01-05-2003, 05:54 PM
நான் இவைகளை பள்ளி நாட்களில் கூட தொட்டதில்லை. ஒரு முறை படித்தால் ஒன்றுமே புரியவில்லை. இரண்டாவது முறை படிக்கும்போது கொஞ்சம் புரிகிறது. அடுத்த தடவை படிக்கும்போது இன்னும் கொஞ்சம் நன்றாகப் புரியும் என்று தோன்றுகிறது.

தொடருங்கள் பேரரசே. எனக்குத் தெரியாத நிறைய விஷயங்களை இங்கே வந்து அறிந்து கொள்கிறேன்.

gans5001
04-05-2003, 02:14 AM
(முருகன் சிவப்பு
போர்க்களத்தில் ரத்தம் சிவப்பு
எதிரிகளைக் கொன்ற ஈட்டி முனைகள் சிவப்பு
எங்கள் குன்றத்து
காந்தள் மலரும் சிவப்பு)

இடம் சுட்டி பொருளும் சேர்த்தால் அதிகமாய் சென்றடையும். நான் ஆரம்பித்து வைக்கிறேன்.

தலைவிக்கு தலைவன் கையுறையாய் காந்தள் மலர்களை கொண்டு வருகிறான். அவன் தலைவிக்கு பொருத்தமற்றவன் என நினைக்கும் தோழி கேலியாய் சொல்கிறாள் 'உன் பரிசு பொருத்தமற்றது. இந்த செங்காந்தள் மலர்கள் எங்கள் மலை முழுதும் மண்டிக்கிடக்கின்றன" என்று

gans5001
04-05-2003, 02:17 AM
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது கண்டது மொழிமோ

இதற்கு விளக்கமே தேவையில்லை. நடிகர்திலகமும், நாகேஷம், ஏபி.நாகராஜனும் கண்முன்னே நடத்திக்காட்டினார்கள், திருவிளையாடலில்

gans5001
04-05-2003, 02:25 AM
கபிலரின் இந்த உவமைக் கவிதை
(இ)எக்காலக் கவிஞருக்கும் ஒரு சவால்...
இப்படியும் சொல்ல முடியுமா....

ஏன் முடியாது?
"எத்தனை பெண் படைத்தான்.. எல்லோர்க்கும் கண் படைத்தான்
அத்தனைக் கண்களிலும் ஆசை எனும் விஷம் கொடுத்தான்"

"நான் அனுப்புவது கடிதம் அல்ல.. உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்துமல்ல.. எண்ணம்"

புதிதாய் டி.ராஜேந்தர் கூட
"நிலனினை மேகம் வானில் மறைக்க..
அவளினை யாரோ வீட்டில் தடுக்க"

"செங்காந்தள் மலர்கள் அண்ணாந்து பார்க்கும்
உன் காந்த விழிகள்"

பல பாட்ல்களை, பல சூழல்களில் உதாரணம் காட்ட முடியும். நான் கொடுத்திருப்பது சட்டென நினைவுக்கு வந்தவை மட்டுமே

aren
04-05-2003, 09:41 AM
கன்ஸ் உங்களின் மேற்கோள்கள் அருமை. தொடரட்டும் உங்கள் தொண்டு.

முத்து
04-05-2003, 09:59 AM
அருமை ! அருமை !! எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சங்கப்பாடல்களை வலைத்தளத்தில் பார்க்கும் சுகமே தனிதான்.நன்றிகள் பலப்பல.வாழ்க நின் தொண்டு.

Emperor
05-05-2003, 01:44 PM
வாழ்த்தும் கருத்தும் கூறிய எல்லா நன்பர்களுக்கும் எனது நன்றி.

குறுந்தொகை தொடர்கிறது...

குறிஞ்சி 25
யாரும் இல்லை தானே கள்வன்
தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு யான மணந்த ஞான்றே

-கபிலர்

(யாருமே இல்லை அவன்மட்டும் இருந்தான்
அவன் பொய் சொன்னால் நான் என்ன செய்ய முடியும்
தினைத்தாள் போல ஒல்லியான காலில் நின்று கொண்டு
ஓடும நீரில் மீன் வருமா எனப் பார்ககும்
கொக்கு மட்டும் இருந்தது
நான் அவனைச் சேர்ந்த போது )

Emperor
07-05-2003, 08:32 AM
என்னாபா !! :shock: குறுந்தொகை சலித்துவிட்டதா?
ஒரு கருத்தையும் கானவில்லை???????????????????
சரி இத்தோடு நிறுத்திக்கொள்ளவா?
---------------------------------------------------------------------------------------
குறிஞ்சி 40
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

-செம்புலப் பெயல் நீரார்

(என் தாயும் உன் தாயும் யார் யாரோ
என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினரில்லை
நானும் நீயும் எப்படி பரிச்சயமானோம்?
செம் மண்ணில் மழைபோல
அன்பு நெஞ்சங்கள் கலந்து விட்டோமே)

rambal
07-05-2003, 04:15 PM
என்ன பேரரசே? சலித்துவிட்டீர்களா? விமர்சனம் வரும்.. அதுவரை பொறுங்கள்.. இப்படித்தான் பாரதியார் பாடலையும் சொன்னீர்கள்.. அதன் நிலையைக் கண்டீர்கள் அல்லவா? அதுபோல் இதுவும் வளரும்.. வாழ்த்துக்கள். தயவு செய்து நிறுத்திவிடாதீர்கள்..எனக்குப் பிடித்த ஒரு அருமையான சங்கப்பாடல்.. தொடருங்கள்.. உங்களின் இந்த ஒரு ரசிகனுக்காகவாவது நீங்கள் தொடரலாம். பாராட்டுக்கள்..

இளசு
07-05-2003, 06:20 PM
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ ( வாழ்க்கைப்படகு)
செம்மண்ணிலே தண்ணீரைப் போல் ஒன்றான பந்தம் இது (தர்ம யுத்தம்)

பல பல்லவிகள் தந்தன இந்த ஜீவித வரிகள்!
இங்கே தந்தனன் எங்கள் எம்பரர் வாழ்க!!

gans5001
09-05-2003, 12:48 AM
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யாரோ யார் அவர் யாரோ
ஊர் பேர் தான் தெரியாதோ? (இயல்பான கண்ணதாசனின் எடுத்தாள்கை- பாசமலரில்)

Emperor
10-05-2003, 10:52 AM
சலிக்கவில்லை ராம்பால் அவர்களே, சற்றே ஒரு வருத்தம், பரவயில்லை, நீங்கள் சொன்னதற்க்காக வேண்டியும் இங்கு இதனை படித்து மகிழும் மற்ற நன்பர்களுக்காகவும் இதனை என்னால் இயன்ற வரை தொடருவேன்.

Emperor
10-05-2003, 10:56 AM
குறுந்தொகை தொடர்கிறது...
------------------------------------------
குறிஞ்சி 82
கெளவை அஞ்சின் காமம் எய்க்கும்
என் அறவிடினே உன்னது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
தாருடை ஒசியல் அற்றே
கண்டிசின் தோழி அவர் உண்ட எம் நலனே

-ஆலத்துர் கிழார்

(வதந்திகளுக்கு அஞ்சினால் ஆசை குறைந்து விடும்
முழவதும் அதை விட்டுவிட்டால் நாணம் மட்டும் மிஞ்சும்
யானை இழுத்து இன்னமும்
முழுவதும் முறியாமல்
தொத்திக் கொண்டிருக்கும் மரக்கிளை போன்றது
அவர் அனுபவித்த என் நிலைமை
அறிந்துகொள் தோழி )

முத்து
10-05-2003, 12:36 PM
காமம் பற்றியும், தான் அனுபவித்த இன்பம் பற்றியும் எவ்வளவு நளினமாகச் சொல்கிறாள் தலைவி !!, இந்தப் பாடலின் விளக்கத்தைமட்டும் பல ஆண்டுகளுக்குமுன் கேட்ட ஞாபகம், ஆனால் மூலப்பாடலைக் கேட்டு அனுபவிக்கும் பாக்கியம் இன்றுதான் கிடைத்தது, அதுவும் தமிழ்நாட்டைவிட்டு ஆயிரக்கணக்கான மைல் தூரத்தில் இருக்கும்போது. அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த எம்பரர் -க்கு என் நன்றிகள்.

இளசு
10-05-2003, 12:45 PM
வதந்திகளுக்கு அஞ்சினால் ஆசை குறைந்து விடும்
முழவதும் அதை விட்டுவிட்டால் நாணம் மட்டும் மிஞ்சும்
யானை இழுத்து இன்னமும்
முழுவதும் முறியாமல்
தொத்திக் கொண்டிருக்கும் மரக்கிளை போன்றது
அவர் அனுபவித்த என் நிலைமை
அறிந்துகொள் தோழி

ஆகா.... என்ன நளினமாக நாசூக்காக
பொருத்தமான உவமையோடு
தன்னிலை சொல்கிறாள் இத்தலைவி.....

ஆயிரமாயிரம் ஆண்டுகள் போனபின்னும்
காதலின் இளமை மாறுவதே இல்லை....

தித்திக்கும் தேன்பலா...
தந்த எம்பரருக்கு நன்றி.....

karikaalan
10-05-2003, 01:20 PM
எம்பரரே!

தங்கள் பணி மகத்தானது. பாடல்களுக்கான பொழிப்புரை சற்றும் கலப்படமில்லாமல் தருகிறீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள். அள்ளி அள்ளிப் பருகக் காத்திருக்கிறோம்.

===கரிகாலன்

Emperor
11-05-2003, 09:03 AM
முத்து, சித்தப்பு இளவல் மற்றும் கரிகாலன் அவர்களுக்கு எனது நன்றி.
----------------------------------------------------
குறுந்தொகை தொடர்கிறது...
------------------------------------------
குறிஞ்சி 120

இல்லோன் இன்பம் காமுற்றா அங்கு
அரிது வேட்டனையால் நெஞ்சே-காதலி
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு
அரியள் ஆகுதல் அறியாதோயே

-பரணர்

(இல்லாதவன் இன்பத்தை விரும்பினது போல
கிடைத்தற்கரியதை விரும்புகிறாய் நெஞ்சே
உன் காதலி நல்லவள் என்பதை அறிந்திருப்பதைப் போல
அவள் கிடைக்க மாட்டாள் என்பதை அறியாமல் இருக்கிறாயே)

இளசு
11-05-2003, 01:05 PM
இல்லாதவன் இன்பத்தை விரும்பினது போல
கிடைத்தற்கரியதை விரும்புகிறாய் நெஞ்சே
உன் காதலி நல்லவள் என்பதை அறிந்திருப்பதைப் போல
அவள் கிடைக்க மாட்டாள் என்பதை அறியாமல் இருக்கிறாயே


ஆசை வெட்கமறியாதே....
முயல் வேட்டைக்கும் தகுதி அற்றவன்
யானை வேட்டைக்கு ஆசைப்பட்டதென்ன...
முன்னதில் வெற்றியைவிட
பின்னதில் தோல்வியே மேல்
என்ற வள்ளுவனின் வாக்கு கற்றவனோ....
எத்தனை நேர்த்தியாய் காதலிப்பவரின் " இருமன " நிலை
சொன்னாய் பரணரே!
இங்கே தந்து மகிழ்வித்தார் எங்கள் எம்பரரே!!!

rambal
11-05-2003, 03:38 PM
குறுந்தொகை வளர்கிறது.. தமிழால்.. பேரரசரால்..
இன்று முதல் நீங்கள் காவிய நாயகன் என்று அழைக்கப்படுவீர்கள்..
பாராட்டுக்கள் காவிய நாயகனே..

Emperor
12-05-2003, 11:47 AM
என்னருமை சித்தப்ய நன்றி.
எனக்கு "காவிய நாயகன்" (இதற்குபருக்கு என் உளமார்ந்த நன்றி.

முத்து
12-05-2003, 09:22 PM
பாராட்டுக்கள் , நன்றிகள் மீண்டும் தொடருங்கள் நண்பர் காவிய நாயகன் அவர்களே.....

poo
13-05-2003, 01:25 PM
நல்லபணியை செவ்வனே செய்யும் அன்பு நண்பர்களுக்கு நன்றிகள் பாராட்டுக்களுடன்!!!

Emperor
17-05-2003, 08:55 AM
குறிஞ்சி 142
களைப்பூக் குற்றத் தொடலை தைஇ
புனக்கிளி கடியும் பூங்கட் பேதை
தான் அறிந்தனளோ இவளே பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து என்
உள்ளம் பின்னும் தன் உழையதுவே

-கபிலர்

(பூத்தொடுத்துக் கொண்டே புனத்தில்
கிளிவிரட்டும் இந்த மலர்க்கண் பெண்ணுக்குத் தெரியுமா
நடுநிசியில் கட்டுண்ட யானையைப் போல
அவளுக்காக பெருமுச்சு விடும்
என்னை ?)

இளசு
18-05-2003, 10:48 AM
ஏக்கம் பெரிது....
அதால்தான் ஆனை அளவு பெருமூச்சு....
சேருமா சேதி...?
தீருமா அவன் வியாதி?

எம்பரருக்கு நன்றிகள் கோடி!

முத்து
18-05-2003, 12:33 PM
அனைவரும் விட்ட பெருமூச்சுதான் ஆனாலும் ... சிலரால் மட்டுமே கவிதையாய் ,அழகாய் வடிக்க முடிகிறது. நன்றிகளுடன்..பாராட்டுக்கள் .. ...நண்பர் எம்பரர் அவர்களே...

rambal
18-05-2003, 06:46 PM
அன்னமாய் இருந்து தமிழின் இலக்கியத்தை இங்கு கொடுத்து தலையாய சேவை செய்யும்
காவிய நாயகனின் இந்த தமிழ்த் தொண்டிற்கு..
நான் என்ன பெரிதாய் செய்ய முடியும் இந்தப் பகுதியை ஸ்டிக்கி ஆக்குவதைத்தவிர..

இளசு
18-05-2003, 10:35 PM
பெருவெற்றி பெற்ற பாரதியார் பாடல்கள் பதிவைத் தொடர்ந்து
இரண்டாவதாய் குறுந்தொகையும் "ஒட்டி" உயர்வு பெற்றமைக்கு
எம்பரர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்...
ராமுக்கு நன்றிகள்....

(பாரதி பாடல்களை புத்தகங்கள் பகுதிக்கு மாற்றிவிடலாமே..)

rambal
19-05-2003, 05:53 AM
அப்படியே ஆகட்டும்..
அண்ணன் சொல்லை தட்டியிருக்கிறேனா?

poo
19-05-2003, 07:43 AM
š ú š......

Emperor
20-05-2003, 12:15 PM
இப்பதிப்பை ஸ்டிக்கி ஆக்கிய எனதருமை தோழர் ராம்பால் அவர்களுக்கு என் முதற்க்கண் நண்றியை தெரிவித்து கொள்கிறேன்.

என்னை ஊக்குவித்த அருமை சித்தப்பு
(இப்படி கூப்பிடுவதால் என் மேல் ஆத்திரமில்லை என்று
நினைக்கிறேன் ) இளசு அவர்களுக்கும் மற்றும் அனைத்து
தோழர் தோழியருக்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

நன்றி, வணக்கம்

Emperor
20-05-2003, 12:23 PM
குறிஞ்சி 158

நெடுவரை மருங்கின் பாம்பு பட இடிக்கும்
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇக்
காலொடு வந்த கமஞ் சூல் மாமழை
ஆர் அளி இலையோ நீயே? பேர் இசை
இமயமும் துளக்கும் பண்பினை
துணை இலர் அளியர் பெண்டிர் இதெவனோ?

- ஔவையார்

(மலைச் சரிவில் பாம்புகள் பயப்பட
இடி இடித்து வேகமான காற்றோடு வரும்
ஈர கர்ப்பப் பெருமழையே
இமய மலையையே கலக்கும் உனக்கு
மென்மை இல்லையா
துணை இலாத பெண்களை பயப்படுத்துகிறாயே
இது நியாயமா?)

rambal
20-05-2003, 12:47 PM
உங்கள் பயணம் தொடர்ந்து இதேபோல் வெற்றியோடு நடைபோட வாழ்த்துக்கள்..

முத்து
20-05-2003, 04:44 PM
அருமை...தொடருங்கள்.. நண்பரே.. மேலும்.. உங்கள் அவதார் அழகாக உள்ளது..பாராட்டுக்கள்...

poo
20-05-2003, 07:20 PM
சளைக்காத பணி.. இளைக்காத பகுதி... ஆயிரம் படைப்புகள் இங்கே அரங்கேறட்டும்.. கைகொட்டுகிறேன்..

இளசு
20-05-2003, 11:05 PM
மலைச் சரிவில் பாம்புகள் பயப்பட
இடி இடித்து வேகமான காற்றோடு வரும்
ஈர கர்ப்பப் பெருமழையே
இமய மலையையே கலக்கும் உனக்கு
மென்மை இல்லையா
துணை இலாத பெண்களை பயப்படுத்துகிறாயே
இது நியாயமா?

என்ன ஒரு சொல்வளம்... என் பாட்டியிடம்....

காதலில் விழுந்து வலிமை இழந்து
கையறு நிலையில் கலங்கும் பெண்ணுக்கு
இயற்கையும் பகைதான்....
இனிப்பும் கசப்புதான்....

மழையை இழித்துப்பாடும் மங்கை துயர் துடைக்க
குடைபோன்ற அவள் கண்ணாளன் கடிதில் சேர்வானாக....

பேரரசருக்கு " சித்தப்பு"வின் வாழ்த்துகள்...

anushajasmin
21-05-2003, 12:54 AM
வளமான பகுதி...வலிமையான பாடல்கள்...தொடரட்டும் உங்கள் சேவை....
பாராட்டுக்கள்

chezhian
31-05-2003, 12:28 PM
பெரிய சேவை... அரும்பணி...
பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள் emperor ஸார் !
தொடருங்கள்....

Emperor
01-06-2003, 12:59 PM
ராம்பால்
முத்து
இளசு (சித்தப்பு)
பூ
அனுஷா ஜாஸ்மின் மற்றும்
செலியன்
அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துகொண்டு மீண்டும் தொடர்கிறேன்....

குறிஞ்சி 291

சுடு புன மருங்கில் கலித்த ஏனற்
படு கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே
இசையின் இசையா இன் பாணித்தே
கிளி அவன் விளி என விழல் ஓவாவே
அது புலந்து அழுத கண்ணே, சாரல்
குண்டு நீர்ப் பைஞ்சுனை பூத்த குவளை
வண்டு பயில் பல் இதழ் கலைஇ
தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றனவே

- கபிலர்

(வயல் ஓரத்தில்
கிளிகளை விரட்ட
மூங்கிலைச்சுழற்ற
அதன் இனிய நாத அழைப்பில்
கிளிகள் விழுந்து விடுவதை நினைத்து
அழும் அவள் கண்கள்
மழைத்துளிகள் கலைத்த
குவளை மலரின் இதழ்கள் போன்றன)

முத்து
01-06-2003, 09:31 PM
அருமை...பாராட்டுக்கள்..தங்கள் சேவை தொடர்வதில் மகிழ்ச்சி...

இளசு
01-06-2003, 11:42 PM
குறிஞ்சி 291
- கபிலர்

வயல் ஓரத்தில்
கிளிகளை விரட்ட
மூங்கிலைச்சுழற்ற
அதன் இனிய நாத அழைப்பில்
கிளிகள் விழுந்து விடுவதை நினைத்து
அழும் அவள் கண்கள்
மழைத்துளிகள் கலைத்த
குவளை மலரின் இதழ்கள் போன்றன

இந்த மென்மைதான்.....
விரட்டவேண்டிய கிளி மீதும்
இரக்கம் காட்டும் பெண்மைதான்....
பாலும் கண்ணீரும்
பிற உயிர்க்காய் சுரக்கும் தாய்மைதான்.....

வணங்கவும் வைக்கிறது....
தவறான கையில் சிக்கினால்
வாடவும் வைக்கிறது.......

கபிலரை வணங்குகிறேன்...
எம்பரரை வாழ்த்துகிறேன்....

poo
02-06-2003, 08:04 AM
உவமைகள் என்ன அருமையாய்..... குறுந்தொகையை இங்கே கொணர்ந்த அரசரின் பணி அருமை.. தொடருங்கள்.....தொடர்ந்துகொண்டே இருங்கள்...........

Nanban
02-06-2003, 10:55 AM
இன்றைய புதுக்கவிதை யாப்பிலக்கணத்தை மீறியது என்று மரபியலார் புலம்புகின்றனர்.....

ஆனால், குறுந்தொகை, அக நானூற்றுக் கவிதைகளிலும் அந்த இலக்கணங்கள் தேவையில்லை என்று கருதப் பட்டிருக்கின்றன. உதாரணம் - சீர்மோனை, அடியெதுகை இவைப் பற்றியெல்லாம் கவலைப்படாது கவி செய்திருக்கின்றனர். யாப்பு என்பது காலத்தையொட்டிய தேவை.

ஆம் - The history repeats itself - வரலாறு திரும்புகிறது....

Emperor
08-06-2003, 11:25 AM
குறிஞ்சி 315

எழுதரு மதியம் கடற் கண்டாங்கு
ஒழுகு வௌ அருவி ஓங்கு மலை நாடன்
ஞாயிறு அனையன் தோழி
நெருஞ்சி அனைய என் பெரும்பணைத் தோளே

- மதுரை வேனாதத்தன்

(அருவிகள் மலைகள் கொண்ட நாட்டின்
தலைவன் சூரியனைப் போன்றவன்
உதிக்கும் சந்திரனைக் கடல் பார்ப்பதுபோல
எப்போதும் அவைனயே பார்த்திருக்கும்
என் மூங்கில் போன்ற தோள்கள்
நெருஞ்சி மலரைப்போல)

இளசு
09-06-2003, 12:51 AM
தோள்களே முள்ளானால்....
தோழியும் கசப்பானால்....
காதல்..பசலை என்று பொருள்....
அந்த சூரியன் வந்தால்தான்
நீங்கும் இந்த இருள்...

பாராட்டும் நன்றியும் எம் பேரரசருக்கு

Emperor
14-06-2003, 12:16 PM
எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து வரும் எனதருமை சித்தப்பு இளசு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி
.......................................................................................................

குறிஞ்சி 371

கைவளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஓர்தலும்
மைபடு சிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின் விளைக்கும் நாடனொடு
மருவேன் தோழி அது காமமோ பெரிதே

- உறையூர் முது கூத்தன்

(கைவளை கழல்வதும்
உடம்பில் பசலை ஊர்வதும்
மலைச் சரிவில் விதைத்து
அருவி நீர்ப் பாசனத்தில்
நெல் விளையும்
நாட்டைச் சேர்ந்தவனை
தழுவாததன் விளைவு
அவன் மேல் என் காதல் பெரிது)

இளசு
14-06-2003, 12:26 PM
இடம் பார்த்து விதைத்தாயே..

மலையடியில் நெற்பயிரையும் - அவள்
மனதடியில் காதற்பயிரையும்.....

அருவிநீர் அங்கே பாய்ச்சி பசுமை கண்டாய்...
தழுவாமல் வெறுமையாக்கி இங்கே பசலை தந்தாய்...

வயலின் பசுமை உனக்கு பெருமை
அவளின் பசுமை உன் அன்பிற்கு சிறுமை...

வளையல் கழன்றவரை போதும்..
வஞ்சி உயிரும் கழலுமுன்னே வந்துவிடு...

(பேரரசரின் சேவைக்கு என் பதில் மரியாதை..)

lavanya
29-06-2003, 01:03 AM
பெருமரியாதைக்குரிய பேரரசர் பெருமகனுக்கும்... தொடரில் பங்கு கொண்டவர்க்கும்

உங்கள் தமிழ் தாகத்திற்கும் தேடலுக்கும் தமிழ்பால் உள்ள சேவைக்கும்
பாராட்டுக்கள்.....

இன்னமும் தொடர்ந்து தந்து சிறப்பாக்க வாழ்த்துக்கள்

suma
05-07-2003, 08:05 PM
நெய்தல் 97

யானே ஈண்டையேனே என் நலனே
ஆனா நோயொடு கானல் அதே
துறைவன் தம் ஊரானே
மறை அலர் ஆகி மன்றத்ததே
-வெண்பூதியா

(நான் இங்கே
என் பிரிவு நோயும் இங்கே
என் தலைவன் அவர் ஊரில்
எங்கள் ரகசியமோ
அம்பலமாகி விட்டது)

முத்து
05-07-2003, 10:27 PM
எம்பரர் மற்றும் சுமாவுக்கு பாராட்டுக்கள்.. மீண்டும் தொடருங்கள்....

Emperor
14-07-2003, 01:55 PM
நன்றி சுமா, மீண்டும் சிறிது நாட்களுக்கு பிறகு நானும் தொடர்கிறேன்

இளசு
14-07-2003, 03:36 PM
சுமாவுக்கு நன்றி..பாராட்டு
எம்ப்பரருக்கு உற்சாகம், வரவேற்பு..

Emperor
08-09-2003, 11:02 AM
தொடர்கிறது குறுந்தொகை
----------------------------------------------------------------------------
பாலை 7

வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார் கொல்? அளியர் தாமே ஆரியர்
கயிறு ஆடு பறையின் கால் பொரக் கலங்கி
வாகை வௌ நெற்று ஒலிக்கும்
வேல் பயில் இழுவம் முன்னியோரே

- பெரும்பதுமனார்

(வில் வைத்திருப்பவன் காலில் கழல்
வளையணிந்தவள் காலில் சிலம்பு
காற்றில் ஆடும் கயிற்றில்
ஆரியக் கூத்தாடும் இந்த நல்லவர்கள் யார்
உலர்ந்த வாகை விதைகள் பறக்கும்
மூங்கில் காட்டை நோக்கிப் போகிறார்களே?)

இளசு
09-09-2003, 10:50 PM
நிழற்படம் போல் அக்காலக் காட்சியொன்றைத்
தத்ரூபமாய்த் தருகிறது இப்பாடல்..

தந்த எம்ப்பரருக்கு நன்றி...

poo
10-09-2003, 06:56 PM
நன்றி அரசரே.. இடைவெளி இருந்தாலும் இன்பம்தரும் பதிப்பன்றோ!!

சேரன்கயல்
12-09-2003, 11:09 AM
பேரரசரின் அழகிய இந்த (குறுந்தொகை) பதிவுக்கு பாராட்டுக்கள்...
மன்ற நண்பர்களின் வரிசையில் என்னுடைய வாழ்த்துக்களும் அணிசேர்கின்றன...

Emperor
16-09-2003, 07:44 AM
வாழ்த்து கூறிய இளசு, பூ மற்றும் சேரன்கயல் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
--------------------------------------------------------------------
பாலை 20

அருளும் அன்பும் நீக்கி
பொருள் வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே

- கோப்பெருஞ்சோழன்

(அருளும் அன்பும் துறந்து
துணையைப் பிரிந்து
செல்வத் தேடிப்
பிரிபவர்கள்
கெட்டிக்காரர்கள் என்றால்
கெட்டிக்காரர்கள் கெட்டிக்காரர்களாக இருக்கட்டும்
நம்போன்ற பெண்கள் முட்டாள்களாக இருக்கட்டும்)

இளசு
17-09-2003, 07:24 PM
என்னருமை நண்பரே
இன்றைய சூழலுக்கும்
என்னமாய்ப் பொருந்துகிறது
அன்றைய குறுந்தொகை...

காலம் அழிப்பதில்லை
காவியப் படைப்புகளை!

நன்றி எம்ப்பரருக்கு!

முத்து
17-09-2003, 11:40 PM
நன்றி.. எம்பரர் அவர்களே ...அருமையான பாடல்... அனைவரும் நன்றாகச் சிந்திக்க வேண்டிய விஷயம்..

Emperor
20-09-2003, 06:00 AM
இளசு மற்றும் முத்து அவர்களுக்கு என் நன்றி.

Emperor
20-09-2003, 06:02 AM
பாலை 30

கேட்டிசின் வாழி தோழி
பொய் வலாளன் மெய்உற மரீஇய
வாய்த்தகை பொய்க் கனா மருட்ட ஏற்றுஎழுந்து
அமளி தைவந்ததனனே குவளை
வண்டு படு மலரின் சாஅய்த்
தமியென் மன்ற அளியென் யானே

- கச்சிப்பேட்டு நன்னாகையார்

(இதைக் கேள் தோழி
பொய் சொல்வதில் வல்லவன்
என்னை இறுக்கி அணைப்பதாக
கனவு கண்டு பயந்துபோய் எழுந்து
பக்கத்தில் தொட்டுப் பார்த்தால்
அவன் இல்லை
வண்டு வந்து விட்டுப் போன மலரைப்போல
தனியாக நான் )

poo
20-09-2003, 07:36 AM
அரசரின் பணி மீண்டும் நடைபோடக்கண்டு ஆனந்தம்!!

நன்றிகள்!!

சேரன்கயல்
22-09-2003, 04:04 PM
குறுந்தொகையின் இனிமையை தொடர்ந்து தந்துகொண்டிருக்கும் அரசருக்கு நன்றிகள்...
அழகான உவமைகள்....

இளசு
22-09-2003, 05:02 PM
பொய் சொல்வதில் வல்லவன்
வீண் சந்தேகம் விளைப்பவன்
இரக்கமின்றி பிரிபவன்...
என்றாலும் மறக்கமுடியவில்லை..
காதல் நோய்தான் எத்தனை கொடியது!

எம் உறவு எம்ப்பரருக்கு வாழ்த்து!

இக்பால்
23-09-2003, 12:08 PM
இங்கே என்ன சத்தம் இன்றி யுத்தம் ஒன்று நடக்கிறது.

நான் வந்த நேரம் .... கோன் இங்கு இல்லை. என்றாலும்

எல்லாவற்றையும் ஒரே நாளில் படித்து முடித்து விட்டேன்.

எம்பரரின் கடினமான பாதைக்கு மலர் தூவி வைக்கிறேன்.

வாழ்த்துக்கள்.-அன்புடன் அண்ணா.

Emperor
24-09-2003, 01:31 PM
வாழ்த்து கூறிய பூ, இளசு, சேரன்கயல் மற்றும் அண்ணா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி

Emperor
24-09-2003, 01:33 PM
பாலை 135

வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல்
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என
தமக்கு உரைத்தோரும் தாமே
அழாஅல் தோழி அழுங்குவர் செலவே

- பாலை பாடிய பெருங்கடுங்கோ

(ஆண்களுக்கு வேலைக்குப் போவதுதான் உயிர்
வீட்டில் உள்ள அழகான பெண்களுக்கு ஆண்கள்தான் உயிர்
என அவர்தானே உன்னிடம் சொன்னார்?
அழாதே, ஊருக்குப் போக மாட்டார்)

இக்பால்
24-09-2003, 01:48 PM
வேலை வெளியில் அமைவதுதான் வேடிக்கை.
அங்கேயும் எல்லாம் கிடைக்கும். ஆனால் பெட்டியில் எடுத்து வைக்கிறோம்.
ஆனால் கிடைக்காத அவளை மட்டும் விட்டு விட்டு செல்வது போல்
வாழ்க்கை அமைவது ஏனோ? -அன்புடன் அண்ணா.

முத்து
24-09-2003, 05:15 PM
நன்றி.. எம்பரர் அவர்களே...
இன்னும் தொடர்ந்து தாருங்கள்...

இளசு
24-09-2003, 06:04 PM
காலத்தை வென்ற குறுந்தொகைப் பாடல் தந்த எம் உறவுக்கும்
கச்சித கருத்து சொன்ன இக்பால் இளவலுக்கும் பாராட்டுகள்....

இக்பால்
25-09-2003, 02:07 PM
எங்கள் அண்ணாவுக்கோ...ஒரு.... :)

-அன்புடன் இளவல்.

Emperor
27-09-2003, 10:05 AM
அண்ணா இக்பால், நன்பர் முத்து, சித்தப்பு இளசு அவர்களுக்கு எனது நன்றி.
---------------------------------------------------------------------------------------------------------
பாலை 378

ஞாயிறு காயாது மரநிழற் பட்டு
மலைமுதல் சிறு நெறி மணல்மிகத் தாஅய்
தண் மழை தழையவாகுக நம் நீத்து
சுடர் வாய் நெடுவேற் காளையொடு
மடமா அரிவை போகிய சுரனே.

கயமனார்

(என்னைப் பிரிந்து
ஒரு நீண்ட வேல் காரனோடு
அந்தப் பெண் போகும் பாலை வழியில்
சூரியன் தெரியாமல் நிழல் பரவட்டும்
மலைப் பாதைகளில் மணல் இருக்கட்டும்
குளிர்ந்த மழை பெய்யட்டும்)

சேரன்கயல்
27-09-2003, 02:19 PM
அழகான் குறுந்தொகைப் பாடல்களை அருமையாக எளிமை படுத்தித் தந்து கொண்டிருக்கும் எம்பரருக்கு...நன்றிகள்..பாராட்டுக்கள்...
(பிரிவுத் துன்பம் இருக்கிறதே...ரொம்ப கொடுமையானது...)

முத்து
27-09-2003, 05:23 PM
அருமை எம்பரரே .. நன்றிகள் ...
இன்னும் தாருங்கள் ..

Emperor
30-09-2003, 07:46 AM
வாழ்த்தும் ஊக்கமும் அளித்த் சேரன்கயல் மற்றும் முத்துவுக்கும் எனது நன்றி
----------------------------------------------------------------------------------------------------
முல்லை 21

வண்டுபடத் ததைந்த கொடி இணர் இடையிடுபு
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புதுப்பூங் கொன்றைக்
கானம் கார் எனக் கூறினும்
யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே.

ஓதலாந்தையார்

(பொன்னணிகளை இடையிட்டுக் கட்டிய
பெண்ணின் தலைப் பின்னல் போல
புதிய கொன்றை மலர்களைக் கொண்டு காடு
மழை என அறிவித்தாலும் நம்ப மாட்டேன்
அவன் பொய் சொல்ல மாட்டான்
(மழைக்குள் வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறான்)

இளசு
01-10-2003, 06:51 AM
கயமனார் ......

என்னைப் பிரிந்து
ஒரு நீண்ட வேல்காரனோடு
அந்தப் பெண் போகும் பாலை வழியில்
சூரியன் தெரியாமல் நிழல் பரவட்டும்
மலைப் பாதைகளில் மணல் இருக்கட்டும்
குளிர்ந்த மழை பெய்யட்டும்

அந்த வேல்காரன் கையில் குடையும் இருக்கட்டும்
கயமனார் வாழ்விலும் " எங்கிருந்தாலும் வாழ்க" காட்சி! ஹம்...!!!பொன்னணிகளை இடையிட்டுக் கட்டிய
பெண்ணின் தலைப் பின்னல் போல
புதிய கொன்றை மலர்களைக் கொண்டு காடு
மழை என அறிவித்தாலும் நம்ப மாட்டேன்
அவன் பொய் சொல்ல மாட்டான்
மழைக்குள் வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறான்

கொன்றை மலர்களை பொன்னென்றது உவமையின் இன்பம்..
அவை மழை அறிவிப்பாளர்கள் என்றது பட்டறிவின் உச்சம்..
இயற்கை சொல்வதை மறுத்துப் பேசும் பேதை இவள்...
புரை தீர்ந்த நன்மை பயக்கும் பொய்யில் பட்டம் பெற்ற
ஆடவரை புரியாதவளா?
இல்லை, புரிந்தும் காதல் பித்தம் ஏறிக் கலங்கிய சித்தத்தால்
தடுமாறுகிறாளா?
என்ன சொல்லித் தேற்றப்போகிறோம் இவளை?

குன்றா உற்சாகத்தோடு குறுந்தொகை தரும்
எம்ப்பரருக்கு என் பாராட்டும் நன்றியும்.

Emperor
12-10-2003, 07:10 AM
பாராட்டிய இளசு சித்தப்பு அவர்களுக்கு என் நன்றி.
-----------------------------------------------------------------------
முல்லை 110

வாரார் ஆயினும் வரினும் அவர் நமக்கு
யார் ஆகியரோ தோழி நீர
நீலப் பைம்போது உளரிப் புதல
பீலி ஒண் பொறிக் கருவிளை ஆட்டி
நுண்முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த
வண்ணத் துய்ம் மலர் உதிரத் தண்ணென்று
இன்னாது எறிதரும் வாடையோடு
என் ஆயினள் கொல் என்னாதோரே

- கிள்ளிமண்கலண்கிழார்

(புதிய குவளை மலர்களை உதிர்த்து
மயிற்கண் போன்ற கருவிளை மலரை அசைத்து
சிறிய முள் கொண்ட ஈங்கை மலரின் அரும்புகளைச் சிதைத்து
வாடைக் காற்று வருத்தும் போது
"இந்தப் பெண் என்ன ஆனாளோ" என்று விசாரிக்காதவர்
வந்தால் என்ன வராவிட்டால் என்ன
அவர் நமக்கு யார் தோழி?)

இளசு
12-10-2003, 07:15 AM
வாடை - வில்லனா? கிரியா ஊக்கியா?
அவனைப்பற்றி ஏன் பேச என்று அவனைப்பற்றியே பேசவைத்த
வாடைக்கு நன்றி.
இங்கே தந்த எம் சொந்தம் எம்ப்பரருக்கும் நன்றி.

Emperor
23-11-2003, 07:56 AM
நீண்ட இடைவெளிக்கு பிறகு குறுந்தொகை தொடர்கிறது.
-------------------------------------------------------------------------------
முல்லை 126

இளமை பாரார் வளம் நசைஇச் சென்றார்
இவணும் வாரார் எவணரோ என
பெயல் புறந்தந்த பூங்கொடி முல்லைத்
தொகு முகை இலங்கு எயிறு ஆக
தகுமோ தோழி நறுந்தண் காரே.

- ஒக்கூர் மாசாத்தி

(இளமை பாராமல்
செல்வத்தை விரும்பிச் சென்றார்
இன்னும் வரவில்லை எங்கேதான் அவர் என்று
மழையில் பூத்த முல்லை மலர்கள்
பல்லைக்காட்டிச்
சிரிக்கின்றன தோழி)

இளசு
23-11-2003, 10:40 PM
அந்நாள் மட்டுமல்ல
இந்நாளும் தொடரும் கதையிது..

பல்லைக் காட்டிச் சிரிக்கும் முல்லை..
நம் தமிழின் அழகைச் சொல்ல வார்த்தை தமிழிலேயே இல்லை.

வாழ்த்தும் பாராட்டும் சொந்தமே.. தொடருங்கள்.

முத்து
23-11-2003, 11:09 PM
எம்பரர் அவர்களே ....
திரை கடலோடியும் திரவியம் தேடு ...
நல்ல தேர்வு ....
ஒன்றைப் பெற இன்னொன்றை இழக்கவேண்டியுள்ளது ...

அற்புதம் ...
இன்னும் தொடருங்கள் ...

Emperor
29-11-2003, 07:52 AM
நன்றி சித்தப்பு கண்டிப்பாக தொடருவேன் :)
நன்றி முத்து

Emperor
29-11-2003, 08:06 AM
முல்லை 162

கார்புறந் தந்த நீருடை வியன் புலத்து
அல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலை
முல்லை வாழியோ முல்லை நீ நின்
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை
நகுவை போலக் காட்டல்
தகுமோ மற்று இது தமியர் மாட்டே.

- கரவூர்ப் பவுத்திரன்

(முல்லை மலரே
மழை நீர் நிறைந்த வயல்களிலிருந்து
பசுக்கள் திரும்பும் மாலையில்
சிறிய வெண் பற்களைக் காட்டி
நீ என்னைப் பார்த்து சிரிப்பது போலத் தோன்றுகிறது
தனியாக இருப்பவளை கேலி செய்வது
உனக்குத் தகுமா)

மூர்த்தி
16-12-2003, 11:46 PM
ஆகா என் இளமை திரும்புகிறது.பள்ளிப்பருவம் என் கண்முன்னே தெரிகிறது.மூக்குப்பொடி தமிழாசிரியர் கோழிமுட்டை கண்ணாடியோடும் கையில் பிரம்போடும் எதிரே தமிழ்ப் பாடப் புத்தகத்தோடு தெரிகிறார்!!!தொடருங்கள் தோழரே..

இளசு
17-12-2003, 12:11 AM
நண்பர் மூர்த்தி அவர்களே

எம்ப்பரர் தற்சமயம் தற்காலிக விடுப்பில்..
வந்தவுடன் விட்டதைப் பிடித்துவிடுவார்.

rambal
15-05-2004, 02:13 PM
குறுந்தொகையில் அதிகம் இடம்பெற்றது குறிஞ்சி மட்டுமே..
குறிஞ்சியின் நாயகன் கபிலனை மீட்டுக் கொடுக்கும்
காவிய நாயகனின் பணி அளப்பரியது..
இந்தப் பதிப்பைத் தொடருமாரு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..

அமரன்
05-01-2008, 09:03 AM
எல்லாரும் பயனடைய எனது விருப்பம்.
படிப்பதும் விடுவதும் உங்கள் விருப்பம்.
முடிந்தவர்கள் தொடர எனது அன்பான, உரிமையான கட்டளை.

-அமரன்

இராஜேஷ்
08-05-2008, 08:48 AM
தங்களின் படைப்புக்களுக்கு மிக்க நன்றி, படைப்புக்கள் அணைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.