PDA

View Full Version : மழை



தாமரை
04-01-2006, 12:52 PM
கானாங் குருவியெல்லாம் காச்சுமூச்சு சத்தமிட்டு
கூட்டுக்குள்ள ஒளியுதடி ; அடி
மானங் கருத்துகிட்டு மையிருட்டு ஆகுதடி
மழை கொட்ட போகுதடி

தாவார முத்தத்தில நெல்லுகொட்டி காயுதடி
தண்ணி பட போகுதடி ; இப்போ
நாவாரேன் வெரசாக நீயும் கொஞ்சம் பதுசாக
நெல்லக் கொஞ்சம் அள்ளிவைய்யடி.

பட்டணத்தில் வாங்கிவந்த எட்டுமுழ வேட்டிதுணி
பாலியெஸ்டெர் சட்டையடி ; உனக்கு
சிட்டுபணம் சேத்துவச்சு சிங்காரமா வாங்கியாந்த
செவத்த பட்டுச் சேலையடி

பொட்டுத்தண்ணி படாம சட்டுண்ணு எடுத்துவச்சி
பொட்டியை மூடிவைய்யடி ; அங்கே
கட்டுகட்டா கொட்டிவச்ச கருவேல விறகையெல்லாம்
கவனமாத்தான் போத்தி வைய்யடி

சலசலன்னு பெய்யும்மழை சாரல்வந்து நனையாம
சன்னல்கதவு சாத்தி வைய்யடி ; கொஞ்சம்
மளமளன்னு பொருளையெல்லாம் மழைத்தண்ணி ஒழுகாத
மூலையில எடுத்து வைய்யடி

ஆடிமழை அடிக்குதடி அடிவயிறு கலங்குதடி
இந்த வீடு பழையதடி ; இப்போ
சூறைக் காத்தடிச்சி கூரை பறக்குதடி
சுவரெல்லாம் விரிசலடி

மழைவந்தா வீடுகஷ்டம் மழையில்லா பாடுகஷ்டம்
மனுஷங் கஷ்டம் முடியாதடி ; இந்த
ஏழைக் குடும்பத்துல எதுதான் கஷ்டமில்ல
எல்லாம் அவன்விட்ட வழிதானடி

அறிஞர்
04-01-2006, 10:40 PM
கிராமத்து மண வீசும் பாடல் அருமை அன்பரே....


மழைவந்தா வீடுகஷ்டம் மழையில்லா பாடுகஷ்டம்
மனுஷங் கஷ்டம் முடியாதடி ; இந்த
ஏழைக் குடும்பத்துல எதுதான் கஷ்டமில்ல
எல்லாம் அவன்விட்ட வழிதானடிஒரு ஏழையின் ஆதங்கம் புரிகிறது. இதை போல் எத்தனை ஆயிரங்கள் நம்மூரில்......

மழை வந்தாலும் கஷ்டம், மழை வராவிட்டாலும் கஷ்டம்... சமீபத்தில் ஏற்பட்ட நல்ல பாடம்.

வாழ்த்துக்கள்

அமரன்
13-06-2007, 06:14 PM
இதுவரை நான் படித்த செல்வரின் கவிதைகளில் வித்தியாசமானது. என்ன செயவது மழை வராதுவிட்டால் வானம் பார்த்த பூமிகள் கருக்கட்ட முடியாது. மழை வந்துவிட்டால் ஏழைகள் படும்பாடு.


என்னுடைய கவிதைகளில் பலவற்றைக் கண்டால்
நான் சுற்றிப் பார்ப்பவன் என்று புரியும்..
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
செல்வர் கவிதை எழுதுவது எப்படி என்ற திரியில் சொன்னது. இங்கேயும் அதை உணர்ந்தேன்.

mgandhi
13-06-2007, 06:21 PM
மழை இல்லா விட்டால் மண் ஏது, மனிதன் ஏது ?

பென்ஸ்
14-06-2007, 01:53 AM
தாமரை...

(உங்களை பாராட்டுவதை நிறுத்திய காரணத்தினால் , கட்டயமாக இந்த வரி விடப்படுகிறது)

வழக்கமா இந்த வகை பாடல் எழுதும் போது அப்படியே ராகமும் சேர்த்து போடுவிங்களே.. இதற்கு உண்டா???

ஆதவா
14-06-2007, 02:13 AM
மிக எளிமையான வார்த்தைப் பிரயோகங்கள், சாதரணமாக செல்லும் நடை, அழகிய கருத்து, கணவன் மனைவி உரையாடலாய் தித்திக்கும் வரிகள்...

கூடவே ஏழ்மையை நினைவுறுத்தும் வரிகள்..
வீட்டுப் பிரச்சனைகள் ஏராளம்,, இங்கே வீடே பிரச்சனை,
மழை வந்தால் சிலருக்கு கொண்டாட்டம் ஆனால்
அதில் சிலருக்கு ஏக திண்டாட்டம்.

விரிசல் இட்ட சுவர்கள்போல மழையின் எண்ணத்தில் இருந்திருக்கவேண்டும்.. அப்பொழுது யோசிக்கத் தோணலாம்.

பென்ஸ் சொல்வது போல ராகம் இருக்கும் என்று நினைக்கிறேன். நேரில் சந்திக்கும்போது கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டியதுதான்..

அருமையான கவிதை சொல்வேந்தரே! அனைவரையும் சொல்லாலேயே இழுக்கும் சொல் காந்தரே!

தாமரை
14-06-2007, 02:41 AM
ஒரு மழை வரும் அறிகுறியிலிருந்து மழை ஆரம்பித்து வலுக்கும் வரையிலான பொழுதில் ஒரு ஏழையின் எண்ண ஓட்டங்களை எழுத முயற்சி இருந்திருக்கிறென் இப்பாடலில்..

மழை வரப்போகுது என்றவுடன் தொற்றிக்கொள்ளும் சந்தோஷமிக்க பரபரப்பு ...

உடனே நெல்லுதான் நினைவிற்கு வருகிறது.. சின்ன மழையென்றாலும் அடித்துக் கொண்டு போய்விடுமே.. அதை பாதுகாக்க எண்ணும் பொழுது.. நாளை அணியும் உடையின் நினைப்பு, அடுத்து விறகு.. அதில்லாவிட்டாள் நாளைய கஞ்சி ??

இதையெல்லாம் செய்யச் செய்ய மழை வலுக்க சாரல் சன்னல் வழியாய் வருகிறது.. வீடு ஈரமாகி விட்டால் எங்கே உறங்குவது சன்னலைச் சாத்த கூரையில் ஊறிய மழைநீர் ஓட்டைகளின் வழியே வழியத் தொடங்குகிறது..

இப்போதுதான் ஜிவ்வென்று பயம் அடிமனத்தில் தோன்றி மனதைப் பிசைகிறது.. வீடு தாங்குமா? விழுந்து விடுமா? கூரை பறக்குதே! சுவரில் தண்ணீர் ஓதம் கொடுக்கிறதே என்று மனம் திக் திக் அடித்துக் கொள்கிறது.. குழந்தைகள் அழ, மனைவி அவற்றை தன் முந்தானையின் கீழ் அரவணைத்துக் கொள்ள அவர்களின் பயம் கண்டு இவன் தைரியப் படுத்திக் கொள்கிறான்...

மனைவிக்கு ஆறுதல் சொல்கிறான்...

என்ன பாட்டை விட உரை நல்லா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா? யாராவது எழுதுவாங்கன்னு நினைச்சேன்.. ம்ம்..

ஆதவா
14-06-2007, 02:51 AM
ஆமாம்... நீங்கள் எழுதும் எழுத்துக்கள் அனைத்துமே அருமைதானே

சுட்டிபையன்
14-06-2007, 03:34 AM
அழகான மழை பாடல், வறுமையையும் அழகாக சொல்லி இருக்கின்றது. வாழ்த்துக்கள் அண்ணா

சிவா.ஜி
14-06-2007, 04:36 AM
அடுக்கடுக்கான அடுத்தடுத்த சிந்தனைகளை அழகாய்க்கோர்த்து அருமையாய் கவி வடித்து சொற்களால் சொக்கட்டான் விளையாடியிருக்கிறார் தாமரை.அவருக்கு இது கைவந்த கலை அவரிடம் தப்புமா இந்த மழை?

ஓவியன்
14-06-2007, 09:21 AM
கிராமத்துச் சூழலுக்கேப் போய் நின்று அவர்களின் பேச்சு வழக்கில் ஒரு மழை என்ற கருவியை வைத்துக் கொண்டு அந்த மக்களின் ஆசைகள், ஆற்றாமைகள், ஆதங்கங்கள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புக்கள் என்று எல்லாவற்றையும் வெளிப்படுத்தியமை கவிக்கும் அதனைத் தந்த சொல்லின் செல்வருக்கும் அழகு சேர்கிறது.

பிச்சி
15-06-2007, 05:57 AM
மழை வந்தாலும் கஷ்டமா? நீங்க வித்தியாசமா சிந்திக்கிறீங்க அண்ணா,

lolluvathiyar
15-06-2007, 09:14 AM
அருமயான வார்த்தைகள், மழைகாக ஏங்கி கொண்டு இருக்கும் விவசாயிகள் நாங்கள்
எங்கள் தோட்டத்தில் வேலை செய்யும் கூரை வீட்டு தொழிலாளிகளின் நிலைமையை அட்டகாசமாக விவரித்து விட்டீர்கள்
இது இயற்கையா அல்லது செயர்கையா

அக்னி
15-06-2007, 09:36 AM
கிராமத்து மெட்டுப் போட்டு பாட்டு ஒலிக்கிறது செவிகளிலே..,
மனம் துள்ளிக் குதிக்குது அந்த இசையினிலே...
அனுபவிக்க வைக்கிறீர்கள்
தாமரை அவர்களே...