PDA

View Full Version : தமிழுக்கு ஒரு தாலாட்டு!!!



தாமரை
29-12-2005, 06:26 AM
தமிழுக்கு ஒரு தாலாட்டு!!!


உள்ளத்தில் உருவாகி உயிர் மூச்சில் கருவாகி
உலகத்தில் பிறந்தாயடி - நீ
பள்ளத்தில் பாய்ந்து வரும் பைம்புனல் போலிந்த
பக்தனை கவர்ந்தாயடி
அள்ளக் குறையாத அறிவென்னும் செல்வத்தை
அடிமைக்குத் தந்தாயடி - என்
உள்ளத்தில் கோயில்கட்டி உள்ளே எழுந்தருளி
உட்கார்ந்து கொன்டாயடி


எண்ணத்தில் உனைக்கொன்டு ஏட்டில் எழுதிவைத்து
எம்புலவர் வளர்த்தாரடி - பல
வண்ணத்தில் உனைப்பாடி வனப்பூட்டும் அணியாக்கி
வஞ்சியுனக் களித்தாரடி
மண்ணுக்கு எட்டாத மாண்புகழ் அமுதுக்கு
மணம்செய்து தந்தாரடி - எந்தன்
கண்ணுக்கு கண்ணான காரிகை உன்காலில்
காவலர் பணிந்தாரடி


காவிரி நதிதந்த கர்னாடக நாட்டினது
கன்னடத்தை யீன்றாயடி - உயர்
மாவரைகள் சூழ்ந்திட்ட மண்ணும்புகழ் கேரளத்து
மலையாளம் யீன்றாயடி
தேவரெல்லாம் போற்றுகின்ற தென்னகத்து ஆந்திரத்து
தெலுங்கை நீதந்தாயடி - இசைத்
தூவானம் போலிருக்கும் துளுவத்தை தந்திங்கு
திராவிடம் படைத்தாயடி


விருந்தோம்பி வாழ்வதிலே வித்தகியே உனக்கிணையாய்
வேறொருவர் கிடையாதடி - பாரில்
உருதோன்றி நிலையாகி உயர்ந்தநிலை எய்தியவர்
உனையன்றி வேறாரடி
அருள்தோன்றும் முகமாகி ஆனந்த மயமாகி
ஆளவந்தாய் நீதானடி - வீசி
வருந்தென்றல் காற்றினைப்போல் வானத்துச் சூரியன்போல்
வையத்தில் வாழ்வாயடி.

தாமரை
05-01-2006, 05:19 AM
தமிழைக் குழந்தையாக்கித் தாலாட்டினால் 15 பேர்தான் பார்த்தார்களா? அநியாயம்!!! அநியாயம்!!!

இதைக் கேட்பதற்கு ஆளில்லையா?

pradeepkt
05-01-2006, 06:29 AM
எல்லாரும் பாத்தாங்க செல்வன்.
ஆனாப் பாருங்க தாலாட்டில மயங்கித் தூங்கிப் போயிட்டாங்க... மலையாளம் தெலுங்கு எல்லாத்தையும் ஈன்று கொமரியாகிட்ட தமிழுக்கு எதுக்குய்யா தாலாட்டு?
ஆனா கடைசியில ஒரு வாழ்த்து போட்டிருக்கீங்களே, அது நிறைவேறட்டும்.

தாமரை
05-01-2006, 07:08 AM
எல்லாரும் பாத்தாங்க செல்வன்.
ஆனாப் பாருங்க தாலாட்டில மயங்கித் தூங்கிப் போயிட்டாங்க... மலையாளம் தெலுங்கு எல்லாத்தையும் ஈன்று கொமரியாகிட்ட தமிழுக்கு எதுக்குய்யா தாலாட்டு?
ஆனா கடைசியில ஒரு வாழ்த்து போட்டிருக்கீங்களே, அது நிறைவேறட்டும்.

இது "தாய்க்கு ஒரு தாலாட்டு" பா

gragavan
05-01-2006, 08:25 AM
தாய்க்கு ஒரு தாலாட்டா? தமிழுக்கு ஒரு தாலாட்ட?

பேசாம தாய்த் தமிழுக்கு ஒரு தாலாட்டுன்னு சொல்லீருங்க. அதுதான் பெஸ்ட்.

நல்ல தாலாட்டு. ஆனா தமிழ் தூங்க வேண்டியதில்லை. அதுனால தமிழ் உலா, அம்மானை, காப்புன்னு எழுதுங்க. அதையும் ரசிச்சுப் படிக்கிறோம்.

pradeepkt
05-01-2006, 11:54 AM
ஏன் பிள்ளைத்தமிழை விட்டுட்டீங்க...
நேத்திக்கு ஆழ்வார்கள் - ஒரு எளிய அறிமுகம் படிச்சிட்டு இருந்தேன். நா.தி.பி.ல பெரியாழ்வார் என்னமா பிள்ளைத்தமிழ் எழுதியிருக்கார்???

தாமரை
05-01-2006, 12:00 PM
ஏன் பிள்ளைத்தமிழை விட்டுட்டீங்க...
நேத்திக்கு ஆழ்வார்கள் - ஒரு எளிய அறிமுகம் படிச்சிட்டு இருந்தேன். நா.தி.பி.ல பெரியாழ்வார் என்னமா பிள்ளைத்தமிழ் எழுதியிருக்கார்???

பிள்ளைத்தமிழ்... அறிமுகம் செய்யுங்களேன்.. இதன் அடக்கம் என்ன

aren
05-01-2006, 02:22 PM
தேவரெல்லாம் போற்றுகின்ற தென்னகத்து ஆந்திரத்து
தெலுங்கை நீதந்தாயடி

இது சரியா? தெலுங்கும் தமிழ் போன்று தொன்மை மொழியென்றும் இது தமிழிலிருந்து வந்த்ததல்ல என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

கன்னடம்கூட சமஸ்கிரதம், மராட்டி ஆகிய மொழிகளின் வழிவந்தது என்று கேள்வி, ஆனால் கன்னடத்தில் சம்ஸ்கிரதம், மராட்டி அளவு தமிழும் கலந்துள்ளது என்று மற்றவர்கள் பேசுவதிலிருந்து தெரிகிறது.

மலையாளம் - நிச்சயம் தமிழிலிருந்து வந்ததுதான்.

சிங்களம் எப்படி. அதில் தமிழின் சாயல் இருக்கிறதா?

தாமரை
06-01-2006, 04:08 AM
வார்த்தைகளை விடுங்கள்.. இலக்கண அடிப்படியை எடுத்துக்கொள்ளுங்கள். உயர்திணை அஃறிணை வட இந்திய மொழிகளில் கிடையாது... தென்னிந்திய மொழிகளில் உண்டு..
வாக்கிய அமைப்பும் தென்னிந்திய மொழிகளில் ஒன்றுதான்..

தமிழை தோற்றுவித்தவர் அகத்தியர் என்பார் வட நாட்டார். ஆனால் அகத்தியர் தமிழ் இலக்கணத்தை தொகுத்தவர். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் தமிழ்தாய் வாழ்த்தை அடிப்படையாய் கொன்டு இதை எழுதி உள்ளேன்.

தென்னிந்திய மொழிகள் ஒன்றாய் தோன்றி இருக்கலாம்.. அல்லது ஒரே மொழி பல மொழிகளாக மருவி இருக்கலாம். எது முதலில் என்பது ஆராய வேன்ட்டிய ஒன்று.

ஆனால் வடவிந்திய மொழிகளின் இலக்கணத்தையும், தென்னிந்திய மொழிகளின் இலக்கணத்தையும் ஆராய்ந்தால் அவை வேறு இவை வேறு என்று தெரியும். ஒன்றிற்கொன்று அருகருகே இருப்பதால் வார்த்தைகள் ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு கலப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

தமிழ், கன்னடம், மலயாளம் மற்றும் தெலுங்கின் அடிப்படைகளையும், மராட்டி, இந்தி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி, பெங்காளி போன்ற மொழிகளை பற்றி அறிந்ததினால் சொல்கிறேன்.

pradeepkt
06-01-2006, 04:33 AM
எனக்குத் தெரிந்தவரை மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளின் எழுத்து வகைகள் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தன.
ஆனால் சொற்கள் தென்னிந்திய மொழிகளுக்குத் தமிழும் சமஸ்கிருதமும் சமமாகவே வழங்கியுள்ளன. மலையாளத்துக்கும் கன்னடத்துக்கும் கொஞ்சம் அதிகமாகத் தமிழ் கொடுத்திருக்கிறது.
தமிழைத் தவிர மற்ற மொழிகள் எழுத்து வடிவம் பெற்ற காலத்தில் வேதம் படித்தவர்களே அதிகமாக எழுத்தறிவு பெற்றதன் காரணமாகவே சமஸ்கிருதம் போன்று எழுத்து வகைகள் அமைந்திருக்கலாம் என்று கருதுகிறேன்.

இந்தக் கூத்தில் அன்னைத் தமிழில் வந்து பல பிறமொழிச் சொற்கள் கலந்ததையும் வருத்தத்தோடு நினைவு கூர்கிறேன். தமிழனின் "வந்தாரை வாழ வைக்கும் பண்பு" இதிலும் தொடர்ந்தது வேதனை!

தாமரை
06-01-2006, 07:23 AM
எழுத்துகள் ஒரு பக்கம் இருக்கட்டும்.. தன்மை மற்றும் முன்னிலை வாக்கிய அமைப்புகளை கவனிக்கவும்.

நான் வருகிறேன்.. நானு பர்த்தினி.. நேனு ஒஸ்தானு.. ஞான் வரும்..நீ வருகிறய்.. நீனு பர்தியா.. நுவ்வு ஒஸ்தாவு..

இது ஆண்கள் சொன்னாலும் ஒன்றுதான்.. பெண்கள் சொன்னாலும் ஒன்றுதன்..ஆனால் வடமொழிகளில் ஆன் சொன்னால் ஒருவிதம் பெண் சொன்னால் ஒருவிதம்..

மே ஆத்தாஹ¥ம் ... மே ஆத்தீஹ¥ம்
தமிழிலும் ஹ, ஜ, ஷ, ஸ, க்ஷ, போன்ற எழுத்துகள் ஊடுருவியதன் நோக்கம் அனைத்து மொழி வாசகங்களையும் தமிழில் எழுதவென இருக்கலாம்.

அல்லது எழுத்துகள் உருவாகும் முன்னரே இம்மொழிகள் பிரிந்து இருக்கலாம்.

இளசு
07-01-2006, 11:27 PM
தாய்த்தமிழை வாழ்த்திய செல்வனுக்கு வாழ்த்துகள்..

தமிழ்மன்றக் கவிப்பக்கத்தில் நிலையாய் இருக்க ..

இக்கவிதையை ' ஒட்டி' வைப்போம்

aren
08-01-2006, 04:39 AM
இக்கவிதையை ' ஒட்டி' வைப்போம்

நிச்சயம் ஒட்டப்படவேண்டிய கவிதை. பாராட்டுக்கள் செல்வம் அவர்களே.

நன்றி வணக்கம்
ஆரென்

தாமரை
09-01-2006, 04:09 AM
இந்தக் கூத்தில் அன்னைத் தமிழில் வந்து பல பிறமொழிச் சொற்கள் கலந்ததையும் வருத்தத்தோடு நினைவு கூர்கிறேன். தமிழனின் "வந்தாரை வாழ வைக்கும் பண்பு" இதிலும் தொடர்ந்தது வேதனை!

விருந்தோம்பி வாழ்வதிலே வித்தகியே உனக்கிணையாய்
வேறொருவர் கிடையாதடி

உங்கள் ஏக்கம்.. எனது வரிகளில் ஏற்கெனவே பதிந்து விட்டது நண்பரே!!!

gans5001
09-01-2006, 10:23 AM
வருந்தென்றல் காற்றினைப்போல் வானத்துச் சூரியன்போல்.
இந்த கவிதைக்காக உங்களையும் அப்படியே வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்
கன்ஸ்

அறிஞர்
06-02-2006, 09:32 PM
தமிழை வாழ்த்திய கவிதை அருமை...

பிற்காலங்களில் பல பாடல்களை எழுதி... பல துறைகளில் வெற்றிக்காண வாழ்த்துக்கள்....

இந்த பதிப்பை ஒட்டிய இளசுவுக்கு நன்றி

சுபன்
06-02-2006, 10:37 PM
சிங்களம் எப்படி. அதில் தமிழின் சாயல் இருக்கிறதா?
ஆம் நண்பரே சிங்களத்தில் தமிழ் சாயல் சில இடங்களில் உண்டு.

உதாரணம்:- சிங்களவர் இரவை 'ராத்திரி' என்றே அழைப்பர்

thirukanaga
23-03-2006, 03:57 PM
தமிழைத் தாலாட்டி தூங்க வைத்தால்
நாங்கள் எப்படிக் கதைப்பது?
பதில் அவசியம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

தாமரை
24-03-2006, 04:10 AM
தமிழைத் தாலாட்டி தூங்க வைத்தால்
நாங்கள் எப்படிக் கதைப்பது?
பதில் அவசியம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

உள்ளத்தில் உருவாகி
உயிர் மூச்சில் கருவாகி பிறப்பது தமிழ்...
நாம் ஒவ்வொரு முறை சுவாசிக்கும் போதும் தமிழ் பிறக்கிறது..

தமிழின் இளமை ரகசியம் புரிந்ததா?

அந்தத் தமிழை தூங்க வைக்க ஒரு வழி, அமைதித் தியானம்


பேச்சைக் குறைங்கம்மா!!!!


உடலுக்கு உறுதி தருவது மூச்சிப் பயிற்சி
மனதுக்கு வலிமை தருவது தமிழ்ப் பயிற்சி

இராசகுமாரன்
31-03-2006, 03:50 AM
தாலாட்டுக்கள் கோடி தந்த தமிழுக்கே ஒரு தாலாட்டா?
பலே.. பலே... அபாரம் உங்கள் கருத்தும் கற்பனையும்.
தமிழுக்கு ஒரு ஆபரணம், மேலும் பல ஆபரணம் படைக்க வாழ்த்துக்கள்.

நண்பரே, நான் தற்போது சில மென்பொருட்களை தமிழுக்கு மாற்றம் செய்து வருகிறேன். அதில் இந்த கவிதையை மாதிரி பதிப்புகளில் சேர்க்க விரும்புகிறேன். அனுமதி உண்டா?

தாமரை
31-03-2006, 04:24 AM
தாலாட்டுக்கள் கோடி தந்த தமிழுக்கே ஒரு தாலாட்டா?
பலே.. பலே... அபாரம் உங்கள் கருத்தும் கற்பனையும்.
தமிழுக்கு ஒரு ஆபரணம், மேலும் பல ஆபரணம் படைக்க வாழ்த்துக்கள்.

நண்பரே, நான் தற்போது சில மென்பொருட்களை தமிழுக்கு மாற்றம் செய்து வருகிறேன். அதில் இந்த கவிதையை மாதிரி பதிப்புகளில் சேர்க்க விரும்புகிறேன். அனுமதி உண்டா?

அனுமதி எப்போதும் உண்டு....

ஓவியா
22-01-2007, 01:21 AM
அருமையான கவிதை

லட்சம் கவிகள் பிறந்தாளும்,
ஆயிரம் கவிதைகள் வரைந்தாலும் - தமிழ்த்தாயை
வாழ்த்தி ஒருக்கவி படைத்தால் போதுமடா
பூவில் பிறந்த பயனைக் காண....

பாராட்டுக்கள் அண்ணா

மனோஜ்
08-05-2007, 02:44 PM
அருமையான தமிழ் வாழ்த்துப்பா
நன்றி அண்ணா மேலும படைக்க

அமரன்
26-07-2007, 05:31 PM
அருமை அருமை. செல்வரின் முத்தொன்று கண்டேன். உண்டேன்.
தூவானம் போலிருக்கும் துளுவத்தை தந்திங்கு
திராவிடம் படைத்தாயடி

இது புரியவில்லையே...

விகடன்
28-07-2007, 04:39 PM
தமிழன்னைக்கு தாலாட்டு.
அற்புதம். பாராட்டுக்கள் தாமரை அண்ணா

தாமரை
09-04-2008, 01:56 AM
அருமை அருமை. செல்வரின் முத்தொன்று கண்டேன். உண்டேன்.
தூவானம் போலிருக்கும் துளுவத்தை தந்திங்கு
திராவிடம் படைத்தாயடி

இது புரியவில்லையே...



- இசைத்
தூவானம் போலிருக்கும் துளுவத்தை தந்திங்கு
திராவிடம் படைத்தாயடி

துளு என்பது மங்களூர் பகுதியில் பேசப்படும் ஒரு மொழி. அதுவும் திராவிட மொழிகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. துளு மொழி கன்னடம் கொங்கணி கலந்த ஒரு இனிமையான மொழி.. காதுக்கு இசைத் தூறல் போல இருக்கும். (என் உடன் பணிபுரிவோர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்) அதான் இசைத்தூவானம்.. தெலுகு, கன்னடம், மலையாளம், துளுவம் என மக்களை ஈன்று திராவிட நாட்டுக்கே தாயானவள் தமிழ்..

முதல் விருத்தத்தில் தமிழ் குழந்தையாய்,
இரண்டாம் விருத்தத்தில் தமிழ் கன்னியாய்,
மூன்றாம் விருத்தத்தில் தமிழ் தாயாய்,
நான்காம் விருத்தத்தில் தமிழ் ஒரு பேரரசியாய்..

kavitha
11-04-2008, 11:19 AM
தமிழைக் குழந்தையாக்கி பாடிய சந்த லாலி அருமை தாமரை. சிறந்த தமிழ் உணர்வு உங்களிடம் குடி கொண்டிருக்கிறது. விசாலப்பார்வையில் இன்னும் பல கவிதைகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.(றோம்)

சாலைஜெயராமன்
11-04-2008, 11:20 AM
மறைபொருளாய் நின்ற மாதவத்து மாதரசி தன்
மனமொப்ப நிற்பவர்க்கு முழுயவனம் காட்டுவாள்
தாழ்மையோடு அவள் முகத்தைக்
காட்டுமாறு கேட்டுனின்றால்
அங்கத்தின் ஒரு பகுதி அவர்தம்
தரம் அறிந்து அன்னையவள்
தன்னழகை அளவோடு வெளியிடுவாள்
ஒருவர்க்கு திருப்பாதமும் உரத்து
அழுவோர்க்கு உதவிடும் திருக்கரமும்
முப்பாலாம் தமிழ்ப்பால் வேண்டி
தாகத்தோடு இருப்போர்க்கு தன் அங்கம்
முழுவதும் அன்புடனே அன்னைஅவள்
அமுதசுரபியாய் அள்ளி வழங்குவாள்

இதைத்தான் தங்களுக்குச் செய்திருக்கிறாள் திரு தாமரை. தன் அங்கத்தின் அனைத்துத் திரு அழகையும் உங்களுக்கு அள்ளி வழங்கியிருக்கிறாள். என்ன நடை. எப்பேற்பட்ட வார்த்தைப் பிரயோகம். அசத்தியிருக்கிறீர்கள் திரு தாமரை, வாழ்த்துக்கள்,

இன்றுதான் தங்கள் தாலாட்டினைக் கண்டேன். அன்னை அவள் அருட் கொங்கை பொழிந்த தமிழ்ப்பாலை மூச்சு முட்டக் குடித்த ஆரோக்கியம் தங்கள் கவிதையில் கண்டேன்.

என் பெண்ணைக் கொண்டு முழு விருத்தமாக பண்ணோடு இசைக்க வைத்தேன். அன்னைக்கே தாலாட்டுப்பாடிய அன்பு மகனை அவள் னினைத்து னினைத்து பெருமையுறுவாள், சர்வ அலங்காரங்களுடன் வலம் வரும் உற்சவ அன்னையின் திருஉருவை தங்கள் கவிதைவரிகள் தந்தது.

மிகத் தாமதமாக சுவைத்தது ஒரு குறைதான்,

தாமரை
11-04-2008, 12:59 PM
என் பெண்ணைக் கொண்டு முழு விருத்தமாக பண்ணோடு இசைக்க வைத்தேன். ,

இசை அறிவு எனக்குக் கிடையாது சாலை அவர்களே.. இப்பாடலை எழுதிய நாள் முதலே இது என்ன ராகம் என்று தெரிந்து கொள்ள அடிமனதில் ஒரு ஆசை உண்டு!

தெரிந்தால் சொல்லுங்களேன்!

சாலைஜெயராமன்
11-04-2008, 04:48 PM
முதல் விருத்தத்தை நீலாம்பரியிலும்
இரண்டாவது விருத்தத்தை ஆனந்தபைரவியிலும்
மூன்றாவதை சிந்துபைரவியிலும்
நான்காவதை மத்யமாவதியும்

பாடி முழு இசை வடிவம் தந்தாயிற்று. முடிந்தால் MP3 வடிவத்தில் அனுப்பி வைக்கிறேன். நன்கு அமைப்பான விருத்தம் பாடக்கூடிய சந்த நடைதான் இக் கவியின் சிறப்பே.

தாமரை
11-04-2008, 05:19 PM
இந்த ராகங்களுக்கும் நான் கூறிய பருவங்களுக்கும் எதாவது தொடர்புகள் உண்டா?

நீலாம்பரி ராகம் தாலாட்டுதானே - குழந்தைக்கு...
ஆனந்த பைரவி - வளரும் பெண் + மணம்
சிந்து பைரவிக்கும் தாய்மைக்கும் சம்பந்தம் உண்டா?
கம்பீரமான ராகம் எது?

முதல் விருத்தத்தில் தமிழ் குழந்தையாய்,
இரண்டாம் விருத்தத்தில் தமிழ் கன்னியாய்,
மூன்றாம் விருத்தத்தில் தமிழ் தாயாய்,
நான்காம் விருத்தத்தில் தமிழ் ஒரு பேரரசியாய்..

இந்த ராகங்களையும் பருவங்களையும் பொருந்துமாறு செய்தால் எவ்வளவு அழகாய் இருக்கும்?

அமரன்
11-04-2008, 06:32 PM
நீலாம்பரி.. பிடித்தால் விடாத இராகம்.. (படையப்பா நீலாம்பரி கேரக்டர் மாதிரி)
ஆனந்த பைரவி, சிந்து பைரவி மனதை கொள்ளை கொள்ளும்..பொருத்தமானது..
கம்பீரம் என்றால் தர்ப்பார் இராகம் தாங்க.. மத்தியமாவதி பாட இலகுவான இராகம்.. புதியவர்களை கவரும் இராகம்.. அதனாலதான் சங்கீத ஆரம்ப அப்பியாசங்கள் அந்த இராகத்தில் அமைந்துள்ளன..

சாலை அய்யா.. எப்போ கிடைக்கும் இசை வடிவம்..

ஆதி
11-04-2008, 06:40 PM
என் திருத்தவப் பயன் என் அமையே அப்பா..

அந்த காலத்து சூப்பர் ஸ்டார் தியாகராஜா பாகவதர் பாடல் தர்பார் ராகம் என்று நினைக்கிறேன் சரியா அமரன், ஜெய்ராம் ஐயா..

அமரன்
11-04-2008, 06:45 PM
சரியாக இருக்கவேண்டும்.. வட இலங்கை சங்கீத சபையின் பாடவிதானத்தில், இப்பாடலைக் கண்டதாக நினைவு.. பயன்படுத்தியதாகவும்...

ஆதி
11-04-2008, 06:50 PM
சரியாக இருக்கவேண்டும்.. வட இலங்கை சங்கீத சபையின் பாடவிதானத்தில், இப்பாடலைக் கண்டதாக நினைவு.. பயன்படுத்தியதாகவும்...

எனக்கு கர்ணாட்டிக் அவ்வளவா தெரியாத அமரன் ஆனால் வெஸ்டன் கொஞ்சம் தெரியும்..

சாலைஜெயராமன்
11-04-2008, 07:14 PM
அமரன் கம்பீரத்திற்கு காம்போதிதான். மிகைப்படுத்தாத யார் கையாண்டாலும் அவர்களை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும் அற்புத இராகம்.

தர்பாரிகானடா வேண்டுமானால் சற்று கம்பீரமாக இருக்கும்.

சாலைஜெயராமன்
11-04-2008, 07:25 PM
ஆஹா நமக்கு ஒரு செட்டு சேர்ந்தாச்சு. எதையும் விடறதுல்லே. இல்லே ஆதி. தியாகராஜபாகவதர் பாட்டு ஞாபகத்துக்கு வரல. நம்ம சிந்து பைரவியில் தர்பார் பாடுவாரே "ரோசனா" அது தர்பார் ராகம்தான், ரொம்ப அதிகமாக நம் இசையமைப்பாளர்கள் கையாளாத ராகம். பழைய பாடல்களில் "வீணைக் கொடியுடைய வேந்தனே" இராக ஆலாபனையை திரு சிதம்பரம் ஜெயராமன் பாடுவார்கள்

ஆதி
11-04-2008, 08:13 PM
ஐயா, "யோச்சனா கமல லோச்சனா" அந்தப் பாடலைத்தானே சொல்றீங்க..

Keelai Naadaan
12-04-2008, 03:40 AM
தமிழுக்கு உங்கள் வாழ்த்து பாடல் அருமை.
நன்றிகள். பாராட்டுகள்.
இது தாலாட்டு போல் இல்லை. தற்போது தமிழுக்கு தாலாட்டு அவசியமும் இல்லை. ஏற்கனவே எல்லா அலுவலகங்களிலும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு எழுதிக்கொண்டு தமிழுக்கு ஓய்வு கொடுத்திருக்கிறோம்.
தாலாட்டு வேறு வேண்டுமா? திருப்பள்ளி எழுச்சி தான் இப்போது வேண்டும்....நன்றிகள்.
........................................................................................................

தாலாட்டு பாடல் சேகரிக்கும் என் முயற்சிக்கு ஆதரவு தாருங்கள். இதோ திரி. தாலாட்டு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15186)

ஆதி
12-04-2008, 06:57 AM
தாலாட்டு வேறு வேண்டுமா? திருப்பள்ளி எழுச்சி தான் இப்போது வேண்டும்....நன்றிகள்.
........................................................................................................

[/URL]

கீழை நாடன் அவர்களே http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15253 இந்த திரியைப் பாருங்கள் நாகாரா ஐயாவின் திருப்பள்ளி எழுச்சி..

Keelai Naadaan
12-04-2008, 03:28 PM
மிக்க நன்றி ஆதி அவர்களே.

அனுராகவன்
25-04-2008, 03:55 AM
தமிழுக்கு ஒரு அற்புத தாளாட்டு....
தந்த தாமரைக்கு என் வாழ்த்துக்கள்..
தமிழ் ஆற்றலுக்கும்,ஆர்வத்திற்க்கும் என் பாராட்டுக்கள்..

தாமரை
08-10-2010, 05:29 AM
சாலை ஜெயராமன் ஐயா இதற்கு இசையமைத்துப் பாடியது இங்கே

http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=518

ஆன்டனி ஜானி
04-12-2010, 02:39 PM
தமிழ் என்னும் மொழியில் இருக்கும்
அன்பினால்
தமிழ் என்னும் எழுத்தை வைத்து
தமிழுக்கே தாலாட்டு கவிதை தொடுத்து
அதை அலங்கரித்து விட்டீர்கள்


வாழ்த்துக்கள் .......

Dr.சுந்தரராஜ் தயாளன்
21-02-2012, 09:44 AM
தமிழுக்குத் தாலாட்டை தாமரையே தந்தீர்
அமிழ்தி னுமருமை அஃது

jayanth
21-02-2012, 11:45 AM
தமிழுக்குத் தாலாட்டை தாமரையே தந்தீர்
அமிழ்தி னுமருமை அஃது


இந்த தாலாட்டுக்களால்தான் தமிழ் இன்னும் உறங்காமல் இருக்கின்றது.

Hega
21-02-2012, 12:34 PM
அடேங்கப்பா!!!

தமிழுக்கு தாலாட்டு என கவிதை எழுதி கிட்டதட்ட எட்டு வருடங்களாகிவிட்டது.
எழுதப்பட்ட காலத்தில் கவிதை கண்டு கொள்ளபடவில்லையென்பது தாமரை அவர்களின் முதல் பின்னூட்டத்திலிருந்து தெரிகிறது. அதன் பின் பலவிதங்களில் ஆராய்ச்சிக்குரியதாகி 2008, 2010 ஆண்டுகளில் ஒரிருவரின் பின்னூட்டதோடு இதோ இன்று டாக்டர்.சுந்தராராஜ் தயாளன் அவர்களின் பாராட்டுதலால் மேலெழுந்து நிற்கும் தாமரையின் தாலாட்டு மிக மிக அருமை.


வணங்குகிறேன் ஐயா.

Dr.சுந்தரராஜ் தயாளன்
06-03-2012, 12:33 AM
அடேங்கப்பா!!!

தமிழுக்கு தாலாட்டு என கவிதை எழுதி கிட்டதட்ட எட்டு வருடங்களாகிவிட்டது.
எழுதப்பட்ட காலத்தில் கவிதை கண்டு கொள்ளபடவில்லையென்பது தாமரை அவர்களின் முதல் பின்னூட்டத்திலிருந்து தெரிகிறது. அதன் பின் பலவிதங்களில் ஆராய்ச்சிக்குரியதாகி 2008, 2010 ஆண்டுகளில் ஒரிருவரின் பின்னூட்டதோடு இதோ இன்று டாக்டர்.சுந்தராராஜ் தயாளன் அவர்களின் பாராட்டுதலால் மேலெழுந்து நிற்கும் தாமரையின் தாலாட்டு மிக மிக அருமை.
வணங்குகிறேன் ஐயா.
நன்றி ஹெகா அவர்களே...நான் சரியாகக் கவனிக்கவில்லை. இன்றுதான் இந்தப் பின்னுட்டத்தில் என்னையும் குறித்து நீங்கள் எழுதியுள்ளதைக் கவனித்தேன்.