PDA

View Full Version : குறிஞ்சிப்பூ - 2ம் பாகம்



kavitha
22-12-2005, 03:19 AM
( முதல் பாகம்: http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5920 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5920) )

ரயில் நிலையத்தில்...
நீ வருவதாய்ச்சொன்ன
7.30 ரயிலுக்காக
ஏழு மணிகெல்லாம் வந்தாச்சு!
என்னை எப்படி அடையாளம் காண்பாள்?
அந்தச் சிறிய நிலையத்தில்
என்னைத்தவிர அப்போது பெண்கள் யாருமில்லை.
அவளுக்கு முன் நாம் பார்த்துவிடவேண்டும்.
ஆள் அதிகமில்லா அந்த புதிய நிலையத்தின்
உலோக மாடிப்பாதையின் உச்சிப்படியில்
அமர்ந்துக்கொண்டேன்.

தூரத்தில் ரயில் வரும் ஓசை...
இருப்பு கொள்ளவில்லை
இறங்குபவர்கள் இறங்க...
ஏறுபவர்கள் சிலர் ஏற
நடைமேடை சில நொடியில் காலியானது.
இந்த ரயிலில் வரவில்லை.

மணி 7.30. மீண்டும் ரயில் ஊதியது.
நடைமேடைக்கு இறங்கி வந்துவிட்டேன்.
அவளைப்போலவே எல்லோரும் தோன்ற
எல்லோரும் அவளாய் இல்லை.

இனி அடுத்த ரயில் 8 மணிக்கு
மீண்டும் அரை மணிநேரத்திற்கு
மாடிப்படியை குத்தகை எடுத்தாயிற்று.
அடுத்த ரயில்....
தண்டவாளத்தின் தடக் தடக் சத்தம்
என் இதயத்தில்..

கம்பார்ட்மெண்டின்
ஒவ்வொரு கதவையும்
ஒரே சமயத்தில் காண
எனக்கிப்போது பல விழிகள் தேவைப்பட்டன!

முதல் கம்பார்ட்மெண்டிலிருந்து
ஆறு அடிக்கும் குறையாத உயரத்தில்
முதலில் அவள் இறங்கினாள்
அவளது பாதுகாவலருடன்.

ஆள்தான் வளர்ந்திருந்தாளே தவிர
முகம்! அதே பிள்ளை முகம்!
எனக்கு யோசிக்க தவணைகள் தேவைப்படவில்லை
அவளது பெயர் சொல்லி அழைத்தவாறே
அருகே செல்ல
அதிர்ச்சி கலந்த சந்தோசத்தில்
அவள் உறைந்தாள்.
உறைந்த அதிர்ச்சி கண்ணீராய்க் கரைய
இருவரும் கட்டிக்கொண்டோம்.
நடைமேடை எங்களையே பார்ப்பதாய்
உணர்ந்தபோது அழுகை மாறி சிரிப்பு வந்துவிட்டது

ஒன்றா இரண்டா? பன்னிரு ஆண்டுகள்!
எனக்கு வார்த்தை ஒன்றுமே சிக்கவில்லை!
அவளுக்கு வார்த்தைகளே போதவில்லை!
இறங்கிய கணம் முதல்
பேசினாள் பேசினாள் பேசிக்கொண்டே இருந்தாள்!

வழக்கமான விசாரிப்புகள், காலை உணவு
என்று முடிந்த கையோடு
வந்தவர் பத்திரமாய் இவளை
என்னிடம் சேர்ப்பித்து விட்டதாக
அவள் வீட்டிற்குத் தொலைபேசியில் தெரிவித்துவிட்டுக்
கிளம்பினார்.

"நீ என்ன சாப்பிடுகிறாய்?"
"நான் வந்தது சாப்பிட இல்லை கவி..
உன்னைப்பார்க்கணும்
உன் கிட்ட நிறைய பேசணும்"
என்றவள் திடீரென தேம்பித் தேம்பி
அழ ஆரம்பித்தாள்.

"ஏண்டி அழறே? என்ன ஆச்சு?
எதுவா இருந்தாலும் சரி பண்ணிடலாம்! "
"உன்னால் எப்படி தாங்கிக்க முடிஞ்சது?
உன் பத்திரிகை பார்த்தேன்"
"அதுவா... அடச்சீ! இதுக்கா டா அழுதே!
முடிவானது முடிஞ்சது.
அதனால் தாங்கிக்க முடிஞ்சது...
இந்தா ஜீஸ் குடி"

"நீ இப்போ எப்படி இருக்கே?"
புன்னகைத்தவாறே..."உன்னைப்பற்றிச் சொல்லு..
இத்தனை வருசமா என்னென்ன பண்ணின?"

"மதுரை ·பாத்திமாவில் ஹயர் செகண்டரி
அங்கேயே யூஜி
அப்புறம் ஊட்டியில் பிஜி
தியாகராஜாவில் லெக்சுரரா கொஞ்ச நாள் போனேன்
அப்புறம் அத்தை, அப்பா சொத்துப் பிரச்சனையால்
மதுரை வீட்டை அத்தைக்கே விட்டுட்டு
சென்னை வந்தாச்சு..
நீ என்னென்ன பண்ணின?"
"சாதனைனு ஒன்னும் சொல்லிக்கிறாப்ல ஏதும் இல்லடி.
வாழ்வதே சாதனை தானே!
நார்மலா லை·ப் நல்லபடியா போய்ட்டிருக்கு"

"அம்மா தங்கையெல்லாம் போய் பார்ப்பீங்களா?"
"ம். வருடாந்தர லீவில்...
அண்ணா, தங்கை என்ன பண்றாங்க?"
"அண்ணா யூ.எஸ் போயிட்டான்..
தங்கைய லயோல்லாவில் சேர்த்திருக்கோம்.
இங்கே பார்த்தியா?
என்னோட பாப் கட் இப்போ எப்படி ஆகிடுச்சுனு!"

"அட! சூப்பரா முடிவளர்த்திட்டியே!
அதுசரி இதுஎன்ன கையில் நகம் இவ்ளோ நீட்டம்?
என்னை திட்டுவியே! ஞாபகம் இருக்கா?"
"காலேஜ்! ·பாஷன் ஷோனு நிறைய
மாறவேண்டியாதாயிருச்சு கவி..
கொஞ்ச நாள் மாடலிங்
கம்பெனியில கூட வேலை பார்த்தேன்.
நீ அப்படியே இருக்கியே!"

"அப்படியா?!.....!
·பாதர் அகஸ்டின், சிஸ்டர் தெரசா
இவங்களையெல்லாம் பார்த்தியா?"
"·பாதர் அகஸ்டின் 90ல் இறந்து போய்ட்டார்.
சிஸ்டர் எங்களுக்கு பாடம் சொல்லும்போதெல்லாம்
உன்னை பத்தி பேசாம இருக்கமாட்டாங்க.
அமலா, தீபா, ஷீலா, வசந்தவல்லி, பிரியதர்ஷினி,
பரமேஸ்வரி, சுபாஷினி, மாடி வீட்டு சுபா
இவங்களாம் கூட நாங்க ஊரை விட்டு வரும்போது
கவிதாவ பார்த்தா கண்டிப்பா கேட்டதா சொல்லச்சொன்னாங்க"
சிரித்தேன்.

"பர்ஸ்ட் ரேங்க்குக்கு போட்டி போட்ட வசந்தவல்லி
டிராமானா பந்தல் போடறா ஷீலா வீட்டு மாடி
அமலாவோட நதியா டேன்ஸ்
தீபாவோட போட்ட டீச்சர் சண்டை
குரூப் ஸ்டடி படித்த பரமேஸ்வரி, சுபா, பிரியா
ச்சில்ட்ரன்ஸ் டே க்கு க்ளாஸ்பிரைஸ் வாங்கித் தந்த ரஜினி
இவங்களை எல்லாம் மறக்க முடியுமா?"
"கவி! நம்ம பத்மாவதி சூசைட் பண்ணிட்டா தெரியுமா?
லவ் ·பெயிலராம்"
ஒரே பெண் என்று பார்த்துப் பார்த்து
வளர்க்கப்பட்ட அவளா? மனசு கனத்தது!
கோவில் பிரகாரங்களில் சுற்றிவந்த பத்மா
கண்ணில் தோன்றி மறைந்தாள்.

"கீதா அம்மா... அவங்க
வீட்டு தோட்டத்தில் விளையாடுவோமே
ஐஸ் ·பேக்டரி கூட வச்சிருந்தாங்களே...
ஞாபகம் இருக்கா?
அவங்களும் முத்து சாரும்
உங்க அப்பா பத்தி அடிக்கடி சொல்லுவாங்க"

அப்பாவோட க்ளோஸ் ·ப்ரண்ட் முத்துசார்.
அங்கே விளையாடப்போகும்போதெல்லாம்
எங்களுக்கு குச்சி ஐஸ், கப் ஐஸ் என்று
விதவிதமாக சாப்பிடத் தருவார்கள்.
எதுவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்
நோ தடா!
கண்ணாமூச்சி ஆடுவதென்றால்
அடுக்கிவைத்திருக்கும் ஐஸ் பெட்டிகளுக்கிடையே
ஒளிந்துகொண்டு 'ஐஸ்பாய்' விளையாடுவோம்.

"கீதாஅத்தை நல்லா இருக்காங்களா?
மரியம் ஆண்டி?"

"உங்கப்பாவுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தவங்கதானே!
உங்கப்பா இறந்தபோது அருகிலே இருந்தவங்களாச்சே!
இத்தனை சீக்கிரம் இறந்திருக்கவேணாம்னு சொல்லிஅழுவாங்க கவி!"
"என்ன செய்ய?! யாருக்கு எப்போது
என்று அவன்தானே விதிக்கிறான்" பெருமூச்செறிந்தேன்.

இரண்டு பகல்கள், இரண்டு இரவுகள்
எங்களோடே இருந்தாள்.
ஓயாமல் பேசினாள்.
கூடவே எனக்கும் வேலைகளில் ஒத்தாசை செய்தாள்.
"வீட்டுவேலையெல்லாம் செய்றியே! பரவாயில்லையே" என்றேன்.
"நீ வேற.. அம்மா இப்பவும் திட்டிட்டு இருப்பாங்க..
சுடுதண்ணீ கூட வைக்கத்தெரியலனு....
வரன் பார்த்திட்டு இருக்காங்க கவீ"

"ம். எப்போ கல்யாணம்?"
"எனக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஆசையே இல்ல
இங்கே பார். இதெல்லாம் வந்திருக்கிற ·போட்டோஸ்
அப்பா என்னையே செலக்ட் பண்ணச் சொல்லிட்டார்
எனக்கு யாரை செலக்ட் பண்றதுன்னே தெரியல.....
இந்தா பிடி.... என்னப்பத்தி உனக்கு தான் நல்லா தெரியும்
நீயே செலக்ட் பண்ணு!"

"அம்மாடியோவ்..... இந்தவிளையாட்டுக்கு நான் வரலை!
உனக்கு யாரைப்பிடிச்சுருக்குனு பட்டுனு சொல்லிடு"
"அப்படி எதுவும் தோணல டா.
எல்லா வரனும் அப்ராட்ஸ்...
எனக்கு அப்பா, அம்மா விட்டுட்டுப் போக பிடிக்கல..
எனக்கு முடிச்சாதான் தங்கைக்குப்பண்ண முடியும்னு
அப்பா 'இனியும் டிலே' பண்ணாதே ங்றார்...
'எங்க விருப்பம்னு இல்ல...
நீ யாரையாச்சும் விரும்பினாலும்
எங்களுக்கு ஓகே தான்..னு சொல்றார்'
வர்றவன் என்னையும் என் பேரண்ட்ஸ் யும் நல்லா புரிஞ்சிக்கணும்.
அப்ராட் போயிட்டா அடிக்கடி வந்து பார்க்கமுடியாது."

"சரி. அப்ப இங்கேயே பார்க்க சொல்லு..
நீ யாரையாச்சும் விரும்பறியா?"

"...."

"இல்ல... உன்னை யாராச்சும் விரும்பறாங்களா?"

"...."

"என்னடி பேசமாட்டேங்கற! என்கிட்ட சொல்ல என்ன தயக்கம்?"

"கல்யாணம் பண்ணிக்காமலே வாழமுடியாதா?"

எனக்கு தூக்கிவாரிப்போட்டது!
இந்தக் கேள்வியை பதிலாய்
அவளிடம் எதிர்பார்க்கவில்லை.

(தொடரும்)

மதி
22-12-2005, 03:48 AM
கவிதா,
அருமையான கவிதை...
தொடரும் போட்டு எங்களை காக்க வைத்துவிட்டீர்களே...!
தோழியை காணும் ஏக்கமும் தேடலும்..பிரமாதமாய் எழுதியுள்ளீர்கள்..
கடைசியில் திடுமென்ற ஒரு கேள்வியில் நிறுத்தி...
அடுத்த பாகத்திற்கு ஏங்க வைத்துவிட்டீர்கள்..

சீக்கிரம் அடுத்த பாகம் வரட்டும்...!

பென்ஸ்
22-12-2005, 04:18 AM
சபாஷ் கவிதா....
ஒரு கதையை... உரையாடல்களை இவ்வாறு கொடுக்க முடியுமா???
முடியும் என்கிறது இந்த பதிவு...

கவிதையல்ல.. கதையும் அல்ல..
கவிதை வடிவில் ஒரு கதையோ????
இதே மாதிரி எப்படி எழுதுறதுன்னு கொஞ்சம் சொல்லி தாங்களேன்...

உங்கள் கவிதை முடியட்டும்... என் விமர்சனம் வரும். நிறைய எழுத வேன்டி இருக்கிறது...
சில பாராட்டுகள்.. சில கருத்து வேறு பாடுகள்...

pradeepkt
22-12-2005, 04:41 AM
என்ன விறுவிறுப்பு...
அப்படியே உங்க உணர்ச்சிகளைக் கொட்டியிருக்கிறீர்கள் கவிதா.
சகோதரி, என்னையும் ஒரு பெண் அந்தக் கடைசிக் கேள்வியைக் கேட்டிருக்காங்க. பதில் சொல்லத் தெரியாமல் விழித்திருக்கிறேன்.
உங்க அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.

பென்ஸ்
22-12-2005, 04:51 AM
என்னையும் ஒருவர் கேட்டிருக்கிறார்...
பதிலை அவர் வாயாலையே சொல்ல வைத்திருக்கிறேன்...

மதி
22-12-2005, 04:54 AM
என்னையும் ஒருவர் கேட்டிருக்கிறார்...
பதிலை அவர் வாயாலையே சொல்ல வைத்திருக்கிறேன்...
என்னன்னு..?:confused: :confused:

இளசு
22-12-2005, 06:41 AM
பன்னிரண்டு வருடத்தவிப்பை அழுத்தி
ஒரு மணி நேரத்துக்குள் புகுத்தி..

உங்கள் பரபரப்பு எங்களையும் தொற்றி...


உலோகப்படிகளே உருகியிருக்குமே கவீ...



-------------------------------------

ஆறடிக் குழந்தை உங்கள் தோழி...

பழங்கணக்கு பேசுவது பசியாற்ற..

புதுக்கணக்கை எப்படி தொடங்குவது என்ற
இந்த கட்டத்தில் உங்களைப்போலவே
நாங்களும் படபடப்பாய்....

-------------------------------------------


இந்த வகைக் கவிதைகளின் அழகு - உண்மை..
அது அதீதமாய் உங்களின் இப்படைப்பில்..

வாழ்த்துகள் கவீ...


-----------------------------------

இறைத்தால் குறைந்துவிடாது கவீ...

நேரம் பார்த்து பாய்ச்ச வேண்டிய
இப்பாசவெள்ளம்

இறைத்தால் குறைந்துவிடாது கவீ..

இன்னும் பெருகித்தான் வரும்..


உங்கள் மனசு
செயற்கைத்தேக்கமல்ல..

இயற்கையில் அமைந்த ஊற்று..


_________________________________________________________

kavitha
23-12-2005, 02:49 AM
கவிதா,
அருமையான கவிதை...
தொடரும் போட்டு எங்களை காக்க வைத்துவிட்டீர்களே...!
தோழியை காணும் ஏக்கமும் தேடலும்..பிரமாதமாய் எழுதியுள்ளீர்கள்..
கடைசியில் திடுமென்ற ஒரு கேள்வியில் நிறுத்தி...
அடுத்த பாகத்திற்கு ஏங்க வைத்துவிட்டீர்கள்..

சீக்கிரம் அடுத்த பாகம் வரட்டும்...!

நன்றி ராஜேஷ்.

kavitha
23-12-2005, 02:53 AM
உங்கள் கவிதை முடியட்டும்... என் விமர்சனம் வரும். நிறைய எழுத வேன்டி இருக்கிறது...
சில பாராட்டுகள்.. சில கருத்து வேறு பாடுகள்... நிச்சயம் எழுதுங்கள் பெஞ்சமின். நன்றி.

kavitha
23-12-2005, 02:55 AM
சகோதரி, என்னையும் ஒரு பெண் அந்தக் கடைசிக் கேள்வியைக் கேட்டிருக்காங்க. பதில் சொல்லத் தெரியாமல் விழித்திருக்கிறேன்.
அவள் கேட்டதும் என் நிலையும் அதுவாகத்தான் இருந்தது. மீதி அடுத்த பாகத்தில். நன்றி பிரதீப்.

kavitha
23-12-2005, 02:55 AM
என்னையும் ஒருவர் கேட்டிருக்கிறார்...
பதிலை அவர் வாயாலையே சொல்ல வைத்திருக்கிறேன்...
சபாஷ்! என்னவென்று சொன்னார்?

kavitha
23-12-2005, 02:57 AM
பன்னிரண்டு வருடத்தவிப்பை அழுத்தி
ஒரு மணி நேரத்துக்குள் புகுத்தி..

உங்கள் பரபரப்பு எங்களையும் தொற்றி...


உலோகப்படிகளே உருகியிருக்குமே கவீ...



-------------------------------------

ஆறடிக் குழந்தை உங்கள் தோழி...

பழங்கணக்கு பேசுவது பசியாற்ற..

புதுக்கணக்கை எப்படி தொடங்குவது என்ற
இந்த கட்டத்தில் உங்களைப்போலவே
நாங்களும் படபடப்பாய்....

-------------------------------------------


இந்த வகைக் கவிதைகளின் அழகு - உண்மை..
அது அதீதமாய் உங்களின் இப்படைப்பில்..

வாழ்த்துகள் கவீ...


-----------------------------------

இறைத்தால் குறைந்துவிடாது கவீ...

நேரம் பார்த்து பாய்ச்ச வேண்டிய
இப்பாசவெள்ளம்

இறைத்தால் குறைந்துவிடாது கவீ..

இன்னும் பெருகித்தான் வரும்..


உங்கள் மனசு
செயற்கைத்தேக்கமல்ல..

இயற்கையில் அமைந்த ஊற்று..


_________________________________________________________

புது உலோகப்படி ஆதலால் தாங்கிக்கொண்டது அண்ணா. :))

உங்கள் பதிலுக்கு செவிசாய்த்தபடியே... நன்றிகள் அண்ணா.

பென்ஸ்
23-12-2005, 11:03 AM
சபாஷ்! என்னவென்று சொன்னார்?

அவர் சொன்ன பதிலை சொல்லி நான் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சிந்தனைகளை காயபடுத்த வேன்டாமே...
நான் செய்தது எல்லாம் அவர் மனதில் ஒளிந்து கொண்டிருந்த அவர் விடையை வேளியே கொண்டு வந்ததுதான்....
நம் மனதில் உதிக்கும் ஒவ்வோரு கேள்விக்கும் காரணமே நம் மனதில் எங்கோ ஒளிந்து கொண்டு உறுத்தி கொண்டிருக்கும் பதில்களே.. என்பது என் கருத்து...
இந்த பதிலை தேடி நாம் பயணம் தொடங்கும் போது சில நம்மால் புரிந்து கொள்ள முடியும்.. சில .. முடியவே முடியாது...

புரிந்த வெற்றி கூட சில நாம் பல முறை உறுதி செய்ய விரும்புவோம்... மிக நெருங்கிய நண்பர்களிடம் கேட்போம்... சில நேரம் கனவுகளே விடை தரும்...

*/உலோகப்படிகளே உருகியிருக்குமே கவீ../* .. இது இந்த மர மண்டைக்கு புரியலையப்ப... என்னான்னு சொல்லுக்களேன்....

kavitha
24-12-2005, 03:05 AM
அவர் சொன்ன பதிலை சொல்லி நான் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சிந்தனைகளை காயபடுத்த வேன்டாமே...
இதனால் யாரும் காயப்பட்டுவிடமாட்டார்கள். கருத்துச்சுதந்திரம் யாவர்க்கும் உண்டு.



நான் செய்தது எல்லாம் அவர் மனதில் ஒளிந்து கொண்டிருந்த அவர் விடையை வேளியே கொண்டு வந்ததுதான்....
ஆம். சரியாகச் சொன்னீர்கள். வேரை அறியாமல் நீர் ஊற்ற முடியாது.


உலோகப்படிகளே உருகியிருக்குமே கவீ../* .. இது இந்த மர மண்டைக்கு புரியலையப்ப... என்னான்னு சொல்லுக்களேன்....

அடடா... ரெயில்வே ஸ்டேஷனில் இருக்கும் இரும்புப்படிகளை நீங்கள் பார்த்ததே இல்லையா? :(

பென்ஸ்
26-12-2005, 10:21 AM
இதனால் யாரும் காயப்பட்டுவிடமாட்டார்கள். கருத்துச்சுதந்திரம் யாவர்க்கும் உண்டு.ஆம். சரியாகச் சொன்னீர்கள். வேரை அறியாமல் நீர் ஊற்ற முடியாது.

அவருக்கு திருமணம் நிச்சயம் ஆகியுள்ளது... அவர் விருப்பத்துடன்
தான்... :) :)

இவ்வாறன கேள்வி பலருளும் இருக்கிறத்து, இந்த கேள்வி அவருக்கு
வர காரணம் அவருடைய thinking process, முளுநேர cognitive
Behaviour therapy அவருக்கு தேவைப்பட்டது. அவருடைய சிறு வயது
பாதிப்புகளும் குடும்ப சிக்கல்கள், குடும்ப வாழ்க்கை மற்றும் குழந்தை
பேறு பற்றிய தவறான சிந்தனைகள் இதற்க்கு காரணமாக இருந்தது.
இவர் நன்றாக படித்தவர் என்பதால் இவரது thinking process-ஐ மாற்ற
அதிகம் சிரமம் எடுக்கவில்லை.

நீங்கள் சொன்னது போல் அந்த வேர் கண்டுபிடிக்கபட்டதால் அந்த
விஷசெடி வேரோடு பிடுங்கப்பட்டது. அதாவது அவரது மனதில்
இருந்த அவரது பதிலை உறுதிபடுத்தியது... (இது எல்லோருக்கும்
சரியாக இருக்க வேண்டாம்.. :D )

இது மனோததுவம் சம்பத்தபட்டது என்பதால், இந்த விளக்கத்தை நான்
ஒரு பொது இடத்தில் வைக்க சிரமப்பட்டேன், இதை தவறாக யாரும்
எடுக்கக்கூடாது என்பது என் எண்ணாமாக இருதது,
உதாரணமாக: மேலே சொன்னது போல் சிறு சிறு சந்தேகங்கள் நம்மில்
இருக்கும், இவர்களில் பலர் இதுபோன்ற பொது கருத்துகளையோ
இல்லை தனக்கு பொருந்தாத வேறு கத்துகளையோ தனக்கு நிகராய்
பொருத்தி வருந்திகொள்வர்.... இது வேறும் thinking process என்றும்,
இதை சரி செய்தால் நமது behaviour மாறும் என்பதும் மட்டும்
உனர்ந்தால் போதும்....



அடடா... ரெயில்வே ஸ்டேஷனில் இருக்கும் இரும்புப்படிகளை நீங்கள் பார்த்ததே இல்லையா?
அடட... இதுதானா???? (சிலர் சிரிப்பது எனக்கு புரியுது ;) )

பென்ஸ்
04-01-2006, 09:26 AM
கவிதா... மூன்றாம் பாகம் சூப்பராக தயாராகிவிட்டதாக என் உள்ளுனர்வு சொல்லுகிறது... :D :D
நான் சொல்லுவது சரிதானே???:rolleyes: :rolleyes:

கவிதையை நேற்றே எதிர் பார்த்தோம்...:D :D