PDA

View Full Version : கண்ணீராகி..



rambal
01-04-2003, 03:02 PM
தொப்புள் கொடி
அறுந்த பொழுது
முதன் முதலாக...

வயிற்றில் சுரந்த அமிலம்
பசி என்று பேசத்தெரியாத பொழுது
கதறலாக...

தாயின் கதகதப்பை விட்டு
பள்ளிக்குச் சென்ற பொழுது
விம்மலாக...

விளையாட்டில் தோற்று
முதல் தோல்வி ஏற்படுத்திய
அதிர்ச்சியை செரிக்க முடியாமல்..

அடுத்த ஆண்டு அதே தோல்வியை
வெற்றியாக்கிய வைராக்கிய தருணத்தில்
சந்தோஷமாக...

கல்லூரியின் கடைசி நாளில்
கையொப்பமிட்டுக் கொண்டே..
பிரிவு தந்த வேதனையின் வெளிப்பாடாய்..

நம்பிக்கை துரோகம் கண்டு
தொழிலுக்கு மூடு விழாவாகி...
தனிமையில் மொட்டைமாடியில்...

அதே தொழிலை மீண்டும் தொடங்கி
சாதித்து பொழுது..
கர்வமாய்...

காதலியைப் பிரிகையில்
மௌனமாய்..
நட்பைப் பிரிகையில்
வருத்தமாய்...
நாட்டைப் பிரிகையில்..
கையறு நிலையாய்..

எல்லாவற்றையும் விட்டு விட்டு
வெளிநாடு கிளம்பிய பொழுது...
கெட்ட கனவாய் மறக்க முடியாமல்...

விடுமுறையில் அதே
மண்ணை மிதித்த வேளையில்..
தாயின் கதகதப்பாக உணர்ந்து...

எல்லாம் கண்ணீராகி..
கசிந்துருகி..

இளசு
01-04-2003, 07:06 PM
அடிவயிற்றைப் பிசைகிறது இந்தக் கவிதை.
ராமின் கைவண்ணம் தீட்டும் நிஜங்களின் ஊர்வலக் காட்சி.....!

rambal
03-04-2003, 05:44 PM
வாழ்த்திய அண்ணனுக்குப் பாராட்டுக்கள்

Narathar
04-04-2003, 02:42 AM
வாழ்வின் ஒவ்வொறு படியிலும் கண்ணீர்"துளி" க்கு வேலை வைத்திருக்கின்றீர்கள்! பலே பலே
எனக்கு இந்தப்பாட்டு ஞாபகத்துக்கு வருகிறது.............
"பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்"

Tamil_Selvi
19-07-2003, 08:39 PM
எண்ணற்ற ஜீவன்கள் அறியும் உம் வார்த்தைகளின் உண்மையை.

இனிமையான ஓர் கவிதை.

கடந்தகாலங்களை நினைவில் மீட்டி செல்லும் உங்கள் கவி.

- தமிழ் செல்வி

Nanban
10-01-2004, 12:54 PM
தாயிடமிருந்து
பிரிந்து
தரை இறங்கிய பின்
வந்த சொந்தமது
மண்ணின் மீது -
அதுவே இறுதி இருப்பிடமாகவும்......

kavitha
11-01-2004, 04:13 AM
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்"

படி நிலைகளாய் கவிதை. நன்று!