PDA

View Full Version : திருப்பாவை நோன்பு



gragavan
15-12-2005, 04:50 AM
திருப்பாவை நோன்பு

மார்கழி மாதம் நாளை தொடங்கப் போகின்றது. இந்த மார்கழியில் ஆண்டாள் எழுதிய திருப்பாவைக்கு விளக்கம் சொல்ல முடிவு செய்துள்ளேன். வழக்கம் போல உங்கள் ஆதரவைத் தேடித் தொடங்குகின்றேன்.


கடவுள் வாழ்த்து

அன்னவயற் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம்
இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை
பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
சூடிக் கொடுத்த சுடர் கொடியே
பாடி அருளவல்ல பல்வளையாய்
நாடி நீ வேங்கடவற்கு நம்மை விதி ஒன்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு

திருப்பாவைக்கு அறிமுகமே தேவையில்லை. அத்துணை புகழ் பெற்ற நூல். தென்பாண்டி நாட்டில் தோன்றிய அமுதநூல். ஆண்டாள் என்று அன்போடு அழைக்கப்படும் கோதை நாச்சியார் அருளிய அருள் நூல். பெருமை மிகு நூல். மார்கழித் திங்கள் தோறும் பாவையர் பாடி வாழ்த்தும் நூல்.

கண்ணனையே தனது மன்னனாக எண்ணி இன்புற்று அந்த இன்பம் தமிழோடு கலந்து பொங்கிப் பெருகி வழிந்த திருப்பாக்களே திருப்பாவை என்று புகழப்படுகின்றன. ஒரு பெண்ணின் நிலையில் எழுந்த உயர்ந்த அகத்திணை பக்தி நூல்.

கோதையார் தென்பாண்டி நாட்டார். திருவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர். ஆகையால் அவருடைய பாக்களில் தென்னாட்டுத் தமிழ்ச் சொற்கள் கலந்து மேலும் சுவைக்கும்.

மொத்தம் முப்பது பாக்கள். நாளுக்கு ஒரு பா என்று மார்கழியின் முப்பது நாட்களுக்கும் முப்பது பாக்கள். ஒவ்வொன்றும் கண்ணனைப் புகழ்ந்து சிறக்கும். காதலும் பக்தியும் கலந்த சிறந்த இந்த நூலிற்கும் ஒரு தொடக்கம் உண்டு. ஆம். திருப்பாவையைத் தொகுத்த உய்யக்கொண்டான் வேங்கடவனோடு ஒன்றிய நிலை மாறாதிருக்கப் பாடுகிறார் ஒரு கடவுள் வாழ்த்து.

அன்னவயற் புதுவை ஆண்டாள் - நெல் விளையும் வயல்வெளிகளைக் கொண்ட புதுமை பல நிறைந்த திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஆண்டாள்
அரங்கற்குப் பன்னு திருப்பாவை - அரங்கனைப் புகழ்ந்து பாடும் இந்த திருப்பாவை
பல்பதியம் இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் - பதியம் என்றால் ஒன்றிருந்து ஒன்று உண்டாக்குவது. அப்படி ஒவ்வொரு செய்யுளாக உண்டாகப் பட்ட இந்தப் பல பாக்களைப் பாடிக் கொடுத்தாள்.

திருப்பாவையை ஆண்டாள் எப்படிக் கொடுத்தாராம்? ஏட்டில் எழுதியா? கல்லில் செதுக்கியா? இல்லை. சொல்லில் இழைத்துப் பாட்டாகக் கொடுத்தாராம். இறைவனை வழிபடச் சிறந்த வழிகளில் ஒன்று இறைவன் புகழைப் பாடுவது. ஆகையால்தான் ஆண்டாள் திருப்பாவையைப் பாட்டில் பாடினார்.

பூமாலைச் சூடிக் கொடுத்தாளைச் சொல்லு - அப்படி திருப்பாவையைப் படிக்கும் பொழுது ஒவ்வொரு நாளும் பூமாலையைக் கட்டிக் கட்டி தனது தோளிலிட்டு அழகு பார்த்து விட்டு பிறகு மாதவனுக்குச் சூடிய ஆண்டாளை நினைத்துக் கொள்ளுங்கள். இறைவன் பெயரைச் சொல்லும் பொழுதெல்லாம் அதனோடு சேர்த்து ஆண்டாளையும் சொல்வதிலொரு இன்பம்.

சூடிக் கொடுத்த சுடர் கொடியே - கேசவனுக்குப் பூமாலை சூடிக் கொடுத்த சுடர் கொடியே
பாடி அருளவல்ல பல்வளையாய் - அருமையாக பாட வல்லவளும் பலவித வளையல்களை கைகளில் அணிந்து கொண்டவளுமாகிய ஆண்டாளே
நாடி நீ வேங்கடவற்கு எம்மை விதி ஒன்ற இம்மாற்றம் நாங்கடவா வண்ணமே நல்கு - பாடியும் நாடியும் வேங்கடவனோடு ஒன்று பட்ட விதியை என்றும் மாறாமல் இருக்கச் செய்வாய்.

பாடியும் நாடியும் வேங்கடவனை நாடியாயிற்று. உணர்வும் உயிரும் அவனோடு கலந்து ஒன்றாயிற்று. இந்த இன்ப நிலை மாறாமல் இருக்க வேண்டியது ஒன்றே இனி தன்னுடைய கடமை என்று நினைவுறுத்தித் துவக்குகிறார் திருப்பாவையை.

அன்புடன்,
கோ.இராகவன்

பி.கு : இந்த மார்கழி மாதம் முடியும் வரையில் இலக்கியத்தில் இறைவா....தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் படுகின்றது.

pradeepkt
15-12-2005, 06:30 AM
அருமை அருமை..
ஆனா திருப்பாவை முழுதாகச் சொல்லப் போகிறீர்களா, அல்லது ஏதேனும் சில பதிகங்களை மட்டும் எடுத்துக் கொள்ளப் போகிறீர்களா?
எப்படியும் எம் ஆதரவு உங்களுக்குண்டு...

இளசு
15-12-2005, 06:31 AM
அன்பு ராகவன்..

சூடிக்கொடுத்தாள் பாவை படித்தாள்
சுடராக எந்நாளும் தமிழ்வானில் ஜொலித்தாள்
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்
கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்
கன்னித்தமிழ்த்தேவி - மைக்
கண்ணன் அவள் ஆவி - தான்
காதல் மலர் தூவி மாலையிட்டாள்..



கவியரசு வரிகளில் ஆண்டாள்...


உங்கள் வரிகளிலான பின்னூட்ட்ங்களோடு வரும் முப்பது நாட்களும்
ஆண்டாளை அறிய நான் ஆவலுடன்..


உங்களின் இத்தமிழ் முயற்சியும் இனிதே முழுமை பெறும்.

வாழ்த்துகள்..

gragavan
15-12-2005, 07:16 AM
அருமை அருமை..
ஆனா திருப்பாவை முழுதாகச் சொல்லப் போகிறீர்களா, அல்லது ஏதேனும் சில பதிகங்களை மட்டும் எடுத்துக் கொள்ளப் போகிறீர்களா?
எப்படியும் எம் ஆதரவு உங்களுக்குண்டு...திருப்பாவை முழுவதும் பிரதீப். முப்பது பாடல்களும். நாளையிலிருந்து நாளுக்கு ஒன்றாக. சனி ஞாயிறு விடுமுறையாக இருப்பதால் வெள்ளிக்கிழமைகளில் மூன்று பாடல்கள்.

உங்கள் ஆதரவிற்கு நன்றி பல.

gragavan
15-12-2005, 07:25 AM
அன்பு ராகவன்..

சூடிக்கொடுத்தாள் பாவை படித்தாள்
சுடராக எந்நாளும் தமிழ்வானில் ஜொலித்தாள்
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்
கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்
கன்னித்தமிழ்த்தேவி - மைக்
கண்ணன் அவள் ஆவி - தான்
காதல் மலர் தூவி மாலையிட்டாள்..



கவியரசு வரிகளில் ஆண்டாள்...


உங்கள் வரிகளிலான பின்னூட்ட்ங்களோடு வரும் முப்பது நாட்களும்
ஆண்டாளை அறிய நான் ஆவலுடன்..


உங்களின் இத்தமிழ் முயற்சியும் இனிதே முழுமை பெறும்.

வாழ்த்துகள்..இளசு அண்ணா! எனக்கும் இந்த வரிகள் மிகவும் பிடிக்கும். அற்புதமான கவியரசர் வரிகள் இவை. உங்கள் வாழ்த்துகளோடு இன்னும் சிறப்பாகச் செய்வேன் என்ற நம்பிக்கையோடு எனது இந்தப் பயணத்தைத் தொடர்கின்றேன். நன்றி.

gragavan
16-12-2005, 04:37 AM
பாவை - ஒன்று

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

(தமிழில் ஒரு வழக்கு உண்டு. "தாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்." அது மிகவும் நல்ல பண்பு. தென்பாண்டி நாட்டாள் கோதை ஆண்டாள் அந்தப் பண்பிலே சிறந்தவர். தானுறும் இன்பம் தன்னைப் போன்றோரும் உற வேண்டும் என்பதற்காகப் பாடியது திருப்பாவை. ஆகையால்தான் கண்ணனைப் பாடும் முன்னே தோழியரை அழைக்கிறார். தன்னோடு சேர்ந்து நோன்பு நோற்று இன்பம் உற்று மகிழ அழைக்கிறார். "நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ண பெருமானே" என்று பாரதி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பாடியதை முன்பே பாடியிருக்கிறார் ஆண்டாள்.)

மார்கழித் திங்கள் உங்களைக் காக்க வந்ததே! சீர் மிகுந்து செழிக்கும் திருவாய்ப்பாடியைச் சேர்ந்த செல்வச் சிறுமிகளே! அழகு மிகுந்த அணிகலன்களைப் பூட்டிக் கொண்டுள்ள தோழிகளே! விடிகிற பொழுதும் நிலவொளி மிகுந்து குளிரும் மார்கழி மாதத்து நல்ல நாட்களின் காலையில் எழுந்து நீராட வேண்டும். அப்படி நீராடி நமது பாவை நோன்பைத் துவக்கலாமா!

நந்தகோபனை நீங்கள் அறிவீர்கள். ஆயர் தலைவன் அவன். கூரிய வேலைக் கையில் கொண்டு பாலூறிய பசுக்களைத் துன்புறுத்துவோரைத் துன்புறுத்துகின்ற அந்த நந்தகோபனின் இளங்குமரனே கண்ணன். மலர் நீள்விழி யசோதை இருக்கிறாளே, அவளுடைய இளைய மைந்தனே சிங்கம் போன்று வீறு கொண்ட மைவிழி வண்ணன். கருத்த மேனியந்தான். சிவந்த கண்ணுடையவந்தான். ஆனாலும் குளிர்ந்து ஒளிர்ந்து மிளிர்ந்திடும் நிலவு முகமுடையான். அவனே நாரணன். அவனே பரந்தாமன். நமக்கு நன்மை தர வல்லான் அவனே. அவனைத் தொழுது கொண்டு விடியற்காலைப் பொழுது கண்டு நீராடிடுவோம்.

(வள்ளுவர் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார். "புறத்தூய்மை நீரால் அமையும்." ஆகையால் காலை எழுந்து நீராடி அழுக்கு நீக்க வேண்டும். விடியலில் நீராடுவது மிகவும் நன்று. அது உடலுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். சரி. இன்னொரு விதத்தில் பார்ப்போம். எந்தப் பொருளையும் தூய்மைப் படுத்த வேண்டுமென்றால் அதை நீரில் இடுகிறோம். அகம் தூய்மையாகத்தான் சைவர்கள் நீறாடுகிறார்கள். வைணவர்கள் திருமண்ணாடுகிறார்கள்.)

இரவில் மனம் தன்வசமில்லாத பொழுது பல இடங்களுக்குச் செல்லும். அந்த நினைவுகள் காலை எழுகையில் இருந்தாலும் ஆண்டவனைத் தொழுகையில் இருக்கலாமா? அதனால்தான் விடியற்காலை நீராடல். தண்ணீர் தலை பட்டு மேல் திரண்டுக் கால் சேரும் பொழுது உடலும் உள்ளமும் உயிரும் குளிர்ந்து விழிப்படைகிறது. அப்படி நமது உயிரினை விழித்துக் கொண்டு தோழியரை விளித்துக் கொண்டு ஊரார் எல்லாம் நம்மைப் பெருமித்துப் புகழும் படியாகக் கண்ணனைப் படிந்து பாவை நோன்பைத் துவக்குவாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

pradeepkt
16-12-2005, 04:50 AM
அருமை அருமை,
எனக்கு உங்களைப் பாராட்டியே போரடிக்குது.
நாங்க திட்டுற மாதிரி ஏதாச்சும் எழுதுங்களேன் :D

gragavan
16-12-2005, 07:43 AM
அருமை அருமை,
எனக்கு உங்களைப் பாராட்டியே போரடிக்குது.
நாங்க திட்டுற மாதிரி ஏதாச்சும் எழுதுங்களேன் :Dஅதையும் எழுதியிருக்கேன். அது எதுக்கு இப்போ! :D :D :D

aren
16-12-2005, 08:56 AM
அருமை அருமை,
எனக்கு உங்களைப் பாராட்டியே போரடிக்குது.
நாங்க திட்டுற மாதிரி ஏதாச்சும் எழுதுங்களேன் :D

ஏன் எங்களை திட்டியது போதாதா?

aren
16-12-2005, 08:57 AM
ராகவன் அவர்களே அருமையான தொடரை ஆரம்பித்திருக்கிறீர்கள். தமிழ் சரியாகத்தெரியாத என்னைப் போன்றவர்களும் தெரிந்துகொள்ளும் வகையில் அழகான தமிழில் எழுதியிருக்கிறீர்கள். அனைவரும் படித்து பயன் பெறலாம்.

gragavan
16-12-2005, 10:17 AM
நன்றி ஆரென். தமிழ் நூல்கள் நமது மக்களைச் சென்று சேர வேண்டும் என்பதே என் அவா. அதற்காகவே இத்தனை பாடு.

gragavan
16-12-2005, 10:19 AM
நண்பர்களே நாளையும் நாளை மறுநாளும் விடுமுறைகளாக இருப்பதால் அன்றைக்கு உரிய பாடல்களை இன்றைக்கே தந்து விடுகின்றேன்.

பாவை - இரண்டு

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்

ஆய்ப்பாடித் தோழிகளே! வாழ்வாங்கு இந்த உலகத்தில் வாழப் போகும் சிறுமிகளே! மார்கழியில் காலையில் எழுந்தோம். கண்ணனை நினைத்தோம். உடலை நனைத்தோம். புத்துணர்வோடு நோன்பைத் துவக்கினோம்.

அப்படித் துவக்கிய இந்தத் தூய நோன்பில் நாம் செய்ய வேண்டியன தெரியுமா? சொல்கிறேன் கேளுங்கள். ஆண்டவனை நாடித் தொழுவதும் பாடித் தொழுவதும் உண்டு. பாற்கடலில் மெல்லத் துயில் கொண்ட அந்தப் பரமன் அடியைப் பாடுவோம். (பைய என்பது தெற்கத்தித் தமிழ். இன்றும் பையப் போ என்பார்கள். பைய என்பது மெதுவாக என்று பொருள்படும்.)

இந்த நோன்பிலே நமக்குச் சில கட்டுப்பாடுகள் உண்டு. நெய்யுண்ணோம். பாலுண்ணோம். விடியலில் நீராடுவோம். கயலொத்த கண்களிலே மையல் தூண்டும் படியாக மையிட்டு எழுதோம். ஒரு மலராயினும் அது நறுமலராயின் அதில் சுகம் பெறுமலராகக் கருதிச் சூடோம். சொன்னால் தீமையொன்றை மட்டுமே பயக்கும் குறளி சொல்ல மாட்டோம். (தீக்குறளைச் சென்றோதோம் என்பதைப் பலர் திருக்குறள் என்று தவறாகப் பொருள் கொள்கின்றனர். அது தவறு. குறளி சொல்வது என்று தெற்கு வழக்கு. இன்றைக்குள்ள வழக்கில் அது கோள் சொல்வது. கோள் மூட்டுவது மிகக் கொடிய பாவம். அதை என்றைக்கும் செய்யக்கூடாது. ஆண்டாளின் பாடல்களைப் படித்துப் பொருள் கொள்ளும் பொழுது தென்பாண்டி வட்டார வழக்கு தெரியாமல் படித்துப் பொருள் கொள்வது முறையாகாது. தெரியாதவிடத்து தெரிந்தவர்களிடம் கேட்டுப் பொருள் பெற வேண்டும்.)

ஏன் நெய்யுண்ணோம்? நெய் சூடு. உடல் சூடானால் உள்ளமும் சூடாகும். மேலும் குளிர்காலத்தில் கொழுப்புப் பதார்த்தங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அது உடலுக்கு நன்று. ஏன் பாலுண்ணோம்? பாலினும் சுவையான தமிழ்ப் பாவினைப் பாடுகையில் பால் சுவையாகுமா? இல்லை சுவைக்கத்தான் ஆகுமா?

கண்களுக்கு அஞ்சனம் தீட்டோம். ஏன் தெரியுமா? அந்த அஞ்சனத் திரட்டுகள் இளைஞர்களின் உள்ளங்களைத் திரட்டுங்கள் என்று எங்கள் உள்ளம் நினையாமல் இருக்கத்தான் அப்படி. மலரிட்டும் முடியோம். வாடைக் காலத்தில் தூது செலுத்த வாடைப் பூவையா சூட்டுவோம்!

அத்தோடு முடிந்தனவா நமது கிரிசைகள்? இல்லை. கையேந்தி வருவோர்க்கும் வேண்டி வருவோர்க்கும் முற்றும் துறந்தவர்க்கும் சேவைகள் செய்வோம். ஏன் தெரியுமா? நமது குறளில் "துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றையவர்கள் தவம்" என்று சொல்லியிருக்கின்றது. சுய கட்டுப்பாடுகள் மட்டுமல்ல, சேவையும் நமது கிரிசையே. இப்படியெல்லாம் செய்து பரகதியை உய்ய இன்புற்று இந்தக் கிரிசைகள் செய்து மார்கழி நோன்பைத் தொடர்வாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
16-12-2005, 10:24 AM
பாவை - மூன்று

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாமும் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

தோழியரே! தமிழ்ப் பெண்களே! பாவை நோன்பைச் சொன்னேன். பாவை நோன்பிற்கான கிரிசைகள் சொன்னேன். ஓங்கி வளர்ந்தானே! உலகம் அளந்தானே! அந்த உத்தமனுக்கு எத்தனை பெயர்கள்! அத்தனை பெயர்களையும் பாடிப் பாவை நோன்பு நோற்றால் நடப்பதென்ன தெரியுமா? நோன்பின் சிறப்புகள் என்ன தெரியுமா? சொல்கின்றேன் கேளுங்கள்.

(ஒரு செயலைச் செய்யும் பொழுது அந்தச் செயலினால் விளையும் நன்மைகளை அடுக்குவது மற்றவர்களையும் அந்தச் செயலைச் செய்யத் தூண்டும். ஆகையால்தான் பெருநோன்பு துவக்குகையில் மற்ற தோழிகளையும் ஊக்குவிப்பதற்காக பாவை நோன்பு நோற்பதன் பயன்களைப் பட்டியலிடுகிறார் ஆண்டாள்.)

மூவடியில் முழுவுலகும் அளந்த அனந்தனின் புகழைப் பாடி நோன்பு நோற்றால் நாடெங்கும் ஒவ்வொரு திங்களும் பெய்ய வேண்டிய மும்மாரி தீங்கின்றி பொழியும். அப்படி தவறா மழை பொழியும் பொழுது வயல்வெளிகளெங்கும் செந்நெல் விளைந்திருந்து கதிர் முற்றும்முன் பால் பிடிக்கும் பருவத்தில் அழகிய கயல் மீன்கள் பயிர்களுக்குள் புகுந்து ஊடாடும்.

(நல்லவர்கள் ஒரு செயலைச் செய்யும் பொழுது அதன் பலன் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்க்க மாட்டார்கள். அனைவருக்கும் அது சேர வேண்டும் என்றே விரும்புவார்கள். நக்கீரரை எடுத்துக் கொள்ளுங்கள். திருமுருகாற்றுப்படையை எப்படித் துவக்குகிறார் தெரியுமா? "உலகம் உவப்ப". உலகமெலாம் மிகிழும் படியாக என்று துவக்கிறார். கச்சியப்பரும் அப்படித்தான் சிவபெருமானின் அம்சமாக முருகப் பெருமான் எழுந்த பொழுது "உலகம் உய்ய ஒரு திரு முருகன் தோன்றினான்" என்கிறார். தமிழருக்கு மட்டுமா? இந்தியருக்கு மட்டுமா? உலகம் முழுவதும் உய்ய வேண்டும் என்பதே அவா. ஏனென்றால் "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!" என்பதே தமிழ் மரபு அல்லவா. அந்தத் மரபில் வந்த கோதையும் உலகம் முழுவதும் உய்ய வேண்டும் என்று நோன்பு கொள்வதில் வியப்பென்ன இருக்க முடியும்! நாடெல்லாம் மழை பெய்து நிலவளம் செழிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தை வியக்க வேண்டாம். தாயுள்ளம் அப்படித்தான் நினைக்கும்.)

வண்ணப் பொறியெனப் பறக்கும் அழகிய வண்டுகள் பூத்திருக்கின்ற குவளை மலர்களின் மத்தியில் மெத்தையில் படுத்துக்கொண்டு அளவிளாத தேன் பருகிக் கண் செருகிக் கிடக்கும். அந்த இனிமையான பொழுதுகளில் ஆயர்கள் தொழுது மடியில் கை வைத்து சீர் மிகுந்து பருத்த முலைகளைப் பற்றிப் பீய்ச்சவும், அசையாது நின்றிருந்து வைத்த குடம் நிறைக்க நிறைக்கக் கொடுக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் என்னும் நீங்காத செல்வம் நிறைந்து மகிழ்வாய் எம்பாவாய்!

(பசுக்கள் யாரையும் மடி தொட விடாது. தேர்ந்த நல்ல ஆயரே பசுவிடம் பால் பெற முடியும். அப்படிப் பால் கறக்கையில் பசுக்கள் வெருவிப் பதறினால் ஆயர் துணுக்குறுவர். அதனால் விரைவாகக் கறந்து செல்ல முயல்வர். அதனால் முழுமையான பலனைப் பெற முடியாது. ஆகையால்தான் பசுக்கள் தேங்காதே புக்கிருந்து (அசையாதே நின்றிருந்து) ஆயர் முழுமையாகப் பயன் பெறும் வகையில் பால் கொடுக்குமாம். அதனால்தான் அவைகளை வள்ளல் என்று புகழ்கிறார் ஆண்டாள். தமிழில் மாடு என்றால் செல்வம். பசு மாடுதானே. ஆகையால்தான் நீங்காத செல்வம் என்றும் புகழ்கிறார்.)

அன்புடன்,
கோ.இராகவன்

இளசு
18-12-2005, 07:52 PM
அன்பு ராகவன்,

மேலாண்மையில் Do's and Dont's என்று பட்டியல் தருவார்கள்.

தோழியரை வழிநடத்தும் ஆண்டாள் அத்தலைமைப்பண்புடன் அளிக்கும் பட்டியல் அருமை.

உலகநலம் என்றும் விழையும் பெருமை படைத்த இனம் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டுகள் தந்தீர்கள்.


குளிரும் மனதுக்கு இதமாய் இனிக்கும் பாக்களை அன்று நல்கிய ஆண்டாளுக்கும், மன்றத்தில் மறுபரிமாறும் உங்களுக்கும்

சுவைத்த மனதின் நன்றிகள்....

aren
18-12-2005, 10:48 PM
என்னிடம் திருப்பாவை பாடல்களில் வரும் 30 பாடல்களும் MP3 வடிவத்தில் பழைய கணிணியில் இருந்தது. அதை வட்டில் சேமித்து வைத்ததாக ஞாபகம். எங்கேயிருக்கிறது என்று தெரியவில்லை. தெரிந்தால் நானும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடலாக இங்கே ஏற்றலாம் என்று நினைத்தேன்.

மறுபடியும் தேடிப்பார்க்கிறேன்.

gragavan
19-12-2005, 04:55 AM
பாவை - நான்கு

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழி உள்புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்துப்
பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிந்தேலோர் எம்பாவாய்

நோன்பைச் சொல்லி அதன் பெருமையைச் சொல்லி அதன் முறைமைகளைச் சொல்லி அதன் பலன்களையும் சொல்லியாகி விட்டது. இப்பொழுது நோன்பைத் துவக்கலாம். அப்படி நோன்பைத் துவக்கவும் தொடரவும் இறைவன் அருள் வேண்டும். அதை வேண்டுவோம் முதலில்.

கண்ணனே! கடலுக்கும் மழைக்கும் மன்னனே! நீ எங்களை எதற்கும் கை விடாதே. நாங்கள் நோன்பு துவக்குகிறோம். உன்னருளின்றி ஒன்றும் ஆகாது. துவங்கும் நோன்பும் தூய்மையாகத் துவங்க வேண்டும். உள்ளத்தைத் தூய்மைப் படுத்துவதும் நீர். உடலைத் தூய்மைப் படுத்துவதும் நீர். எங்களைக் காக்க நீரே வரவேண்டும் நீராகவும் வரவேண்டும்.

எப்படித் தெரியுமா? ஆழமான ஆழியில் நிறைந்து ததும்பும் உப்புதல் கொண்ட நீரை முகந்து உப்புதல் கொண்டு இடியிடித்துக் கொண்டு விண்ணில் ஏறிடும் மேகங்கள். ஊழி முதல்வனான உந்தன் மேனி போலவே கருத்து விண்ணை மறைத்து நிற்கும் அந்த மேகங்கள். விரிந்த (பாழியம்) தோள்களை உடைய பற்பனாபன் கையில் இருக்கும் சக்கரத்தினைப் போல மின்னிடும் அந்த மேகங்கள். ஓவென்று மங்கலமாய் ஒலிக்கும் உனது கைச் சங்கைப் போல அதிர்ந்திடும் அந்த மேகங்கள்.

(கண்ணனின் கரிய மேனியைப் பாடாத தமிழ்ப் புலவன் யார்? சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் பாடுகிறார். "கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே!" சைவ மரபில் பிறந்த அவரும் கரியவனைப் பாடியிருக்கிறார். வைணவ மரபில் வந்த பகழிக்கூத்தர் முருகனைப் பாடியது போல. சமய மயக்கம் கூடாது என்பதே இதன் பொருள்.)

மின்னியும் அதிர்ந்தும் நின்று விடாமலும் காலம் தாழ்த்தாமலும் உனது கையிலிருக்கும் சார்ங்கம் என்ற வில்லிலிருந்து பொழியப்படும் இடைவிடாத அம்புகளைப் போல சரஞ்சரமாய் மழை பெய்து இந்த உலகத்தில் நாங்கள் அனைவரும் வாழ்ந்திடும் வகை செய்வாய். அப்பொழுதான் நீர்வளம் பெருகி இந்த மார்கழி மாதத்தில் நாங்கள் நீராடித் தூய்மையாவாய் எம்பாவாய்!

(இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பும் உண்டு. நோக்குமிடமெங்கும் இறைவனைக் கண்டவள் கேட்கும் ஒலியெல்லாம் இறைவனைக் கேட்டாள். இறைவன் புலன்களுக்கு எட்டான் என எப்படிச் சொல்வது? பார்க்கும் பார்வை. கேட்கும் ஒலி. நுகரும் நாற்றம். உணரும் தீண்டல். பேசும் மொழி என்று ஐந்து புலன்களின் வழியாகவும் நாம் உணர்ந்து கொண்டிருப்பது இறைவன் கருணையல்லவா. ஆகையால்தான் மழை மேகங்களைப் பார்த்ததும் இடியிடித்து மின்னியதும் கண்ணன் நினைவில் ஆழ்கின்றார். அதனால்தான் வைணவ அடியவர்களை ஆழ்வார் என்பர். கரிய மேகத்தைப் பார்த்தால் கண்ணனின் கரிய மேனி நினைவில் வருகிறது. இடிக்கும் ஒலியில் கண்ணனின் கைச்சங்கின் ஒலி எழுகிறது. மின்னுகின்ற மின்னல் திருமால் கைச் சக்கரம் போலத் தெரிகிறது. பொழியும் சர மழையில் சார்ங்க வில்லின் அம்பு மழை தெரிகின்றது. அதுதான் அன்பு மழைபெயனப் பெய்கிறது ஆண்டாளுக்கு.)

அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
20-12-2005, 03:59 AM
பாவை - ஐந்து

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துணைவனை
ஆயர் குலத்தில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய் பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

ஆயவன் அருளால் நாடெங்கும் நல்ல மழை பெய்து நீர் வளம் சிறக்க, நாம் மார்கழி காலையில் எழுந்து அவன் பேர்பாடி நீராடினோம். அப்படித் துவக்கிய மார்கழி மாதத்துப் பாவை நோன்பில் அடுத்து என்ன செய்வது! சொல்கிறேன் கேளுங்கள்.

(ஆயவன் என்று ஏன் சொல்கிறோம்? மாயைக்குத் தலைவன் மாயவன். ஆயர்களுக்குத் தலைவன் ஆயவன். இந்தச் சொல்லை எனக்குத் தெரிந்து தமிழில் முதலில் பயன்படுத்தியது இளங்கோவடிகளே. மதுரைக் காண்டத்தில் ஆய்ச்சியர் குரவையில் பயன்படுத்தியிருக்கிறார். "மாயவன் என்றாள்.......ஆயவன் என்றாள்...." என்று செல்லும் அந்தப் பாடல்.)

மாயவனை வடமதுரை மைந்தனைத் தூய்மையான நீர் என்றும் பெருக்கெடுக்கும் யமுனை ஆற்றங்கரையின் துணைவனை ஆயர் குலத்தில் சிறந்துதித்த அணிவிளக்கைத் தேவகிக்கு தாய்மைப் பதவி தந்த தாமோதரனை விடிகாலையில் நீராடி நினைத்து தூய மலர்களைத் தூவித் தொழல் வேண்டும். அவனது பெருமைகளை வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்துக் கொளல் வேண்டும்.

(இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பு உண்டு. கூர்ந்து கவனிக்க வேண்டும். ஆண்டாள் பாண்டி நாட்டாள். மதுரையே பாண்டி நாட்டின் தலைநகரம். சிலர் தென்மதுரை என்பார்கள். அப்படிச் சொல்கையில் வடமதுரைதான் மதுரை என்றாகி விடுகிறது. அதாவது கோலிவுட், பாலிவுட் எனும்பொழுது ஹாலிவுட்டுதான் முதன்மை அல்லவா. அது போலத் தென்மதுரை என்ற சொல்லைப் பயன்படுத்தும் பொழுது வடமதுரைதான் மதுரை என்ற முதன்மை பெறுகிறது. தனது நாட்டை விட்டுக்கொடுக்கவில்லை ஆண்டாள். வடமதுரை என்று சொல்லி பாண்டி நாட்டு மதுரைதான் முதன்மையான மதுரை என்று அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். இத்தனைக்கும் போற்றிப் புகழும் கண்ணன் பிறந்த ஊர். இருந்தாலும் அது வடமதுரைதான்.

இன்னொரு விஷயத்தையும் இங்கு கவனிக்க வேண்டும். "தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன்" என்ற சொற்றொடரை கவனிக்க வேண்டும். ஒரு பிள்ளையைப் பெற்றதும் தாயின் கடமை முடிந்து விடுகிறதா? இல்லையே. பெற்றெடுப்பது ஒரு கடினம் என்றால் வளர்ப்பதும் இன்னொரு கடினம். ஆனால் கண்ணனைப் பெற்றவள் தேவகிதான் என்றாலும் பாலூட்டிச் சீராட்டி வளர்த்தவள் யசோதை. அதனால்தான் முதல் பாடலில் நந்தகோபனையும் யசோதையுமே தாய்தந்தையராகச் சொல்கிறார். ஆகையால் தேவகியைச் சொல்லும் பொழுது தாயைக் குடல் விளக்கம் செய்ததோடு நிறுத்தி விடுகிறார். பெரியவர்கள் ஒன்றைச் சொல்லும் பொழுது ஏன் அப்படிச் சொல்லியிருப்பார்கள் என்று சிந்தித்தே பொருள் கொள்ள வேண்டும். அவசரம் கூடாது.)

அப்படி அவனுடைய திருநாமங்களை வாயாலும் மனதாலும் சிந்திக்க வந்திக்க முன்பு செய்த பிழைகளும் நம்மையறியாமல் இனிமேல் செய்யப் போகும் பிழைகளும் நெருப்பில் வீழ்ந்த தூசு போலப் பட்டுப் போகும். ஆகையால் தூயவனை மாயவனை பல பேர் கொண்டு செப்பாய் எம்பாவாய்.

(இந்த இடத்தில் ஒரு இலக்கிய ஒப்பு நோக்கல் செய்ய விரும்புகிறேன். கச்சியப்பரைத்தான் துணைக்கு அழைக்கிறேன். கந்தபுராணத்தில் இப்படிச் சொல்கிறார். "தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால் தூயவராகி மேலைத் தொல்கதி அடைவர்". பொதுப்பண்பு என்ன? இறைவனைச் சரணடைந்தால் பாவங்கள் போகும் என்பதே. அப்படியானால் என்ன பாவம் செய்து விட்டும் இறைவனைச் சரணடையலாமா? உண்மையான உள்ளத்தோடு இறைவனைச் சரணடைகின்றவர்களை இறைவன் கண்டு கொள்வார். ஏமாற்ற நினைப்பவர்கள் ஏமாந்துதான் போவர்.)

அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
21-12-2005, 04:24 AM
பாவை - ஆறு

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

காலைப் பொழுதை வரவேற்க புள்ளினங்கள் குரல் கொடுக்கின்றதைக் கேட்டாயோ! பறவை மேல் அமர்ந்த அரயன் கோயிலில் வெண்ணிறச் சங்கமானது அனைவரையும் வாவென்று அழைக்கும் பேரொலியைக் கேட்டாயோ! எழுந்திராய் பிள்ளாய்!

(விடியலில் முதலில் எழும் ஒலியே பறவைகளின் ஒலிதான். என்றைக்காவது பறவைகள் காலந்தாழ்ந்து எழுந்ததுண்டா? விடியலைக்கூட சேவல் கூவித்தானே அறிகிறோம். ஆகையால்தான் தமிழன் சேவலை தனது கடவுளின் கொடியில் கண்டான்.

இன்னொரு செய்தி. வெறும் சங்கம் என்று சொல்லாமல் விளி சங்கின் பேரரவம் என்று கூறியிருக்கிறார். ஏன்? எல்லா ஒலிகளும் நம்மை அழைப்பதில்லை. சில ஒலிகளைக் கேட்டாலே நாம் அந்த இடத்தை விட்டு நகர விரும்புவோம். ஆனால் புள்ளரையன் கோயில் சங்கொலி நம்மை வரவேற்கும் விதமாக இருந்ததாம். இறையொலி எப்பொழுதும் நம்மை அழைக்கத்தானே செய்யும்.)

பறவையொலி கேட்டாய். கண்ணன் கோயில் சங்கம் ஊதி அழைக்கக் கேட்டாய். எழுந்திருப்பாய் தோழி. பூதனையில் நஞ்சு தடவிய முலையில் பாலுண்டு பூதனைக்கே நஞ்சான பிஞ்சே கண்ணன். கள்ளச் சக்கரமாக உருண்டு வந்த அரக்கனை தோள்கள் திரண்டு அழித்த சிறுவனே மாதவன்.

(விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள். கண்ணனும் அப்படித்தான் குழந்தையாக இருந்த பொழுதே கண்ணனின் தெய்வத் தன்மைகள் வெளிப்பட்டன. குழந்தையாக இருந்த பொழுதே ஏசுபிரானும் தீர்க்கதரிசி என அழைக்கப்பட்டதாகச் சொல்வார்கள். குழந்தையாக இருந்த பொழுதே நல்ல பழக்கங்களை விதைக்க வேண்டும் என்று இதனால்தான் சொன்னார்கள்.)

பாற்கடலில் பாம்பணை மேல் பள்ளி கொண்ட உயிர்களுக்கெல்லாம் உயிரான அந்த உயர்ந்தவனை உள்ளத்தில் நினைத்துக் கொண்டு பெரும் முனிவர்களும் தவயோகிகளும் விடியலையிலேயே மெள்ள எழுந்து அரி என்ற பெயரை பாசத்தோடு உச்சரிக்கும் பேரானந்த ஒலியால் உனது உள்ளத்தில் உண்டான மகிழ்ச்சியில் குளிர்வாய் எம்பாவாய்.

(இறைவனை எப்படியெல்லாம் உணர்வது? சுவையை நாவில் உணரலாம். ஒலியைக் காதில் உணரலாம். ஒளியைக் கண்ணில் உணரலாம். நாற்றத்தை நாசியில் உணரலாம். தென்றலை மேனியில் உணரலாம். அதுபோல இறைவனையும் உணர முடிந்தால் சிறப்பாக இருக்கும் அல்லவா. புலன்களுக்கெல்லாம் எட்டாத இறைவன் புலன்களுக்கு எட்டுவானா என்றால் நிச்சயமாக எட்டுவான். எட்ட மாட்டான் என்றால் எட்டான். அப்படிச் செவி வழி இறைவனை உணர்வது எங்ஙனம்?

கண்ணா என்ற பெயரும் கந்தா என்ற பெயரும் அனைவருக்கும் பக்தியை ஊட்டுமா என்றால் இல்லை என்பதே விடை. அப்பொழுது எல்லாரும் உணர முடிகின்ற ஒலிகளில் இறைவனை உணர வேண்டும். காலை எழுந்ததும் காதில் விழுகிறவை பறவைகளின் ஒலிகளே. காலை எழுந்ததிற்கே இறைவனிடம் நன்றி சொல்லி விட்டு பறவையொலிகளில் இறைவனைக் காண வேண்டும். பிறகு கோயில் சங்கின் ஒலி. பிறகுதான் கண்ணனின் திருநாமங்கள். இதுதான் வரிசைக்கிரமம். அதனால்தான் சைவர்களும் ஓங்கார ஒலியை சேவலின் குரலில் கண்டார்கள். இந்த அளவிற்கு இயற்கையோடு இணைந்த தமிழ் வழிபாட்டு முறைகளே சிறப்பு.)

அன்புடன்,
கோ.இராகவன்

pradeepkt
21-12-2005, 04:36 AM
அருமை அருமை.
உங்கள் இறைப்பணி வாழ்க.

gragavan
22-12-2005, 05:42 AM
பாவை - ஏழு

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் முர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்ட கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்

(காலை விடிந்தது. கடவுளை நினைத்து நீராடி முடிந்தது. நோன்பு துவங்கி அதன் பழக்கங்களை முடிவு செய்தாகி விட்டது. தோழியரையும் அழைத்தாகி விட்டது. சொன்னதுமே வந்தனர் சிலர். அழைத்ததும் வந்தனர் சிலர். இன்னும் சிலர் வரவில்லை. என்ன செய்வது? நன்கு தெரிந்த தோழியர்தானே. வீட்டிற்குச் சென்று கதவைத் தட்ட வேண்டியதுதானே. அதைத்தான் செய்கிறார் ஆண்டாள்.)

தோழி! விடிந்தது பொழுது. ஆனைச்சாத்தான் பறவைகள் கூட விழித்துக் கலந்து கீச்சுகீச்சென்று பேச்சு கொள்வது கேட்கலையோ! பேய்ப்பெண்ணே! இன்னமுமா கிடப்பது!

(ஆனைச்சாத்தான் என்ற பறவை மற்ற பறவைகளை விடச் சோம்பல் மிகுந்ததாம். இன்றைக்கு அந்தப் பறவையின் பெயர் நாம் அறியோம். நேரம் கழித்து எழும் பறவைகள் கூட எழுந்து கத்துகின்ற பொழுதும் தூங்குகின்றனரே சில தோழிமார் என்ற வருத்தத்தில்தான் பேய்ப் பெண்ணே என்று சொல்வது. தோழியரை உரிமையோடு கடிதல் அது.)

நம்மூர் ஆய்ச்சிகளை நீ அறிவாய். அந்த வாச நறுங்குழல் ஆய்ச்சியர்கள் தயிரினைப் பெரிய பானைகளில் ஊற்றி, அந்தப் பானைகளில் மரத்தாலான பெரிய மத்துகளை ஆழ்த்திக் கயிற்றை பிடித்துக் கொண்டு முன்னும் பின்னும் இழுத்துச் சளசளவென்று கடையும் பொழுது அவர்கள் கையணியும் காசுகளைக் கோர்த்த கழுத்தணியும் கலகலவென ஓசைப் படுத்துகின்றனவே! அதுகூட உன் காதுகளில் விழவில்லையா?

(ஆய்ச்சியர்கள் எப்பொழுதும் பாலோடும் தயிரோடும் மோரோடும் வெண்ணெய்யோடும் நெய்யோடும் புழங்குகின்றவர்கள். அந்த வாடை மிகுந்த கையை அடிக்கடி தலையில் தடவிக் கொள்வதால் அவர்கள் குழல் நறுமணம் கொண்டதாம். இதே கருத்தை வேறொரு இலக்கியத்தில் ஆயர்களுக்குப் படித்த நினைவு இருக்கிறது. பள்ளியில் படித்தது. எந்த இலக்கியம் என்று நினைவில் இல்லை.)

அடி தோழி! நாராயண மூர்த்தியாம் கேசவனை நாங்கள் எல்லாம் உன் வீட்டு வாசலில் வந்து நின்று அன்போடு பாடும் பொழுதும் நீ படுக்கையில் கிடக்கலாமா? அது முறையாமோ! எழில் மிகுந்தவளே! விரைந்து எழுவாய். கதவைத் திறவாய் எம்பாவாய்.

அன்புடன்,
கோ.இராகவன்

இளசு
22-12-2005, 06:15 AM
அன்பு ராகவன்,

உங்களின் இப்பணிக்கு எத்தனை பாராட்டினாலும் போதாது...

Chirping - என்ற சொல்லுக்கு ஈடாக.. சிலம்பின...
என்ன ஒரு நேர்த்தியான வர்ணனை..


காலக்கிரமப்படி எழும் ஒலிகளைக் காட்சிகளாய் வடித்தபடி
எடுத்த குறிதப்பாமல் பணிமுடிக்க பாத்தொடுக்கும் ஆண்டாள்..

புள்ளொலி, சங்கொலி, பக்த முழங்கொலி,
பின்னர் எழும் சோம்பல் பறவையொலி..
பணி செய்யும் ஆயப்பெண்களொலி...

ஒலி சொல்லி ஒளிஓவியம் தீட்டும் ஆண்டாள்
தமிழ்வானில் ஜொலிக்கும் காரணம் புரிகிறது..



பாராட்டும், நன்றியும் பலமாய் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்...

நன்றி ராகவன்..

gragavan
23-12-2005, 04:32 AM
பாவை - எட்டு

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

(மார்கழி மாதத்தில் காலையின் தன்னோடு நோன்பு நோற்கத் தோழிகளை அழைத்தாயிற்று. சிலர் இன்னும் தூங்குகின்றனர். அவர்கள் வீட்டு வாயிலில் நின்று கதவைத் தட்டியாகி விட்டது. தட்டியும் சிலருக்கு உறக்கம். அவர்களையும் எழுப்ப வேண்டுமே! அதுதான் இந்தப் பாடல்.)

கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து அதுவும் மறையும் வண்ணம் விடியல் வெளுத்தது பாங்கி. கருத்த எருமைகள் கூட சற்று முன்னர் எழுந்தன. அத்தோடு பரந்து திரிந்து மேயத் தொடங்கின பாங்கி. இதையெல்லாம் எழுத்து பார் நீ!

(மாடுகளில் பொறுமையில் அருமையானது கருமையான எருமை. பசுக்கள் விடியலில் எழுந்து பால் தந்ததால் அவற்றை மூன்றாவது பாடலிலேயே புகழ்ந்தாகி விட்டது. அதற்குப் பிறகு புள்ளினங்களைச் சொல்லியாகி விட்டது. பிறகு பறவைகளிலேயே காலந்தாழ்ந்து எழும் ஆனைச்சாத்தானையும் குறிப்பிட்டாகி விட்டது. இன்னும் தூக்கமா? எருமைகள் கூட எழுந்தனவே. அத்தோடு முடிந்ததா? எழுந்த எருமைகள் மெள்ள ஆடியசைந்து திரிந்து மேயவும் தொடங்கின. இன்னும் தூங்கலாமா என்று தோழியைக் கேட்கிறார்.)

பாவை நோன்பில் ஈடுபாடு கொண்ட நமது தோழியரை தடுத்தி நிறுத்தியிருக்கிறோம். எதற்கென்று தெரியுமா? உன்னுடைய வீட்டிற்கு வந்து உன்னையும் எங்களோடு அழைத்துச் செல்லத்தான். வந்து சும்மா நிற்கவில்லை. எங்கள் தோழியாகிய உன்னை விட்டுப் போகாமல் எங்களோடு அழைத்துச் செல்லக் கூவுகின்றோம். எப்பொழுதும் குதூகலம் உடையவளே எழுந்திருவாய்!

(தோழியை விட்டுச் செல்ல முடியவில்லை ஆண்டாளால். தான் மட்டும் எழுப்பினால் போதாதென்று மற்ற தோழியரையும் அழைத்துச் சென்று எழுப்புகின்றாள். தான் மட்டும் எப்படி நல்லதை அனுபவிப்பது என்ற தவிப்பு கோதைக்கு.)

குதிரை வடிவம் கொண்டு வந்தான் ஒரு கொடியன். அவனைப் பிளந்தெறிந்தவன் நமது மாயவன். இளம் பருவத்திலேயே மல்லரைப் பொருது அவர்களைக் கைப்பிடியில் மாட்டி ஓட்டியவன் நமது தூயவன். தேவாதி தேவனே இந்தத் தேவகி மைந்தன். அவனை நினைத்துப் பாடிப் புகழ்ந்து அவன் திருக்கோயிலுக்குச் சென்று சேவித்தால், நம்முடைய தேவைகளை ஆராய்ந்து சிறந்த முறையில் அருள்வான். இதை நீ அறிவாய் எம்பாவாய்!

(கேட்டதெல்லாம் கொடுப்பவனா இறைவன்? நாம் கேட்பதில் நமக்குச் சிறந்தது எதுவென்று அவன் அறிவான். அதை எப்பொழுது தரவேண்டும் என்றும் அவன் அறிவான். இறைவனை நம்புங்கள். நமக்கு அதனால் நன்மையன்றி ஒன்றில்லை.)

அன்புடன்,
கோ.இராகவன்

இளசு
23-12-2005, 06:15 AM
தமிழழகு கொஞ்ச..

கூட்டு மனப்பான்மை, தூண்டுதல், விடாமுயற்சி, எருமையைக்காட்டி எழுப்பும் சாதுர்யம் என மேலாண்மைப்பண்புகள் விஞ்ச..

ஆண்டாளின் கொடி பட்டொளி வீசிப்பறக்கிறது...

மன்றத்தில் பறக்கவிடும் அன்பு ராகவனுக்கு தொடர் பாராட்டுகள்...

gragavan
23-12-2005, 08:56 AM
நன்றி இளசு அண்ணா. ஒவ்வொரு பாவை நான் போட மறந்தாலும் அதற்கான பின்னூட்டத்தை நீங்கள் போட மறவீர். உங்கள் தொடர் பாராட்டு எனக்கு மிகவும் ஊக்கமளிக்கின்றது. நன்றி.

gragavan
23-12-2005, 10:03 AM
நண்பர்களே. நாளையிலுருந்து அடுத்த வியாழன் வரை ஆறு நாட்கள் நான் அலுவலகம் வாராமையால் ஆறு நாட்களுக்கும் ஆன திருப்பாவையை இன்றைக்கே பதித்து விடுகின்றேன். அவசரத்திற்கு மன்னிக்கவும்.

gragavan
23-12-2005, 10:07 AM
பாவை - ஒன்பது

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணை மேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாழ் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாயவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்

(வீடுவீடாகப் போய் அழைத்தும் சில தோழியர் இன்னும் தூங்கினர். அவர்களையும் எழுப்பித்தான் ஆக வேண்டும். தான் எழுப்பியது போதாதென்று அந்தத் தோழியரின் தாயாரையும் அழைத்து எழுப்பச் சொல்கின்றார் இந்தப் பாடலில்.)

மாமன் மகளே அடி தோழி! தூய மணிகள் தொங்கி அழகூட்டும் நல்ல மாடத்தில் இன்னும் விளக்கெல்லாம் எரிந்து கரிந்து புகையெழும் போதும் சொகுசான மெத்தையில் மேல் கிடக்கும் தோழியே! நீ தூங்கிக் கிடக்கும் அறையின் மணிக்கதவம் திறந்து வாராய்!

(கோதை நாச்சியாரை நான் வியக்காத பொழுதில்லை. கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் முன்னர் புரட்சிப் பெண்கவியாக திழந்திருக்கின்றார். அத்தோடு அவருடைய நூல்களில் அவர் பதிவு செய்தவை ஏராளம். ஏராளம். தென்பாண்டி நாட்டு வட்டார வழக்கில் ஒரு நூலை எழுதிய பெருமை. இவருக்கு முன்னர் இந்தப் பெருமைக்கு உரியவர் இளங்கோ. சிலப்பதிகாரத்தின் மூன்று காண்டங்களையும் படித்தால் ஒவ்வொரு காண்டத்திலும் அந்தந்த நாட்டு வழக்குகள் பயின்று வரும்.

இரண்டாவது அன்றைய பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் போகின்ற போக்கில் அழகாக ஆனால் மறைவாகச் சொல்வது. மின்சாரம் இல்லாத அந்தக் காலத்தில் night lamp ஏது? இரவில் எழுந்தால் தட்டுத் தடுமாற வேண்டியதுதானா? இல்லை. அதற்குத்தான் மாடக்குழிகளை வீடுகளில் வைத்திருப்பார்கள். இன்றைக்கும் பழைய வீடுகளில் மாடக்குழிகளைக் காணலாம். அந்த மாடக்குழிகளில் விளக்கு வைத்துக் கெட்டியான விளக்கெண்ணெய் அல்லது இலுப்பையெண்ணெய் ஊற்றி விளக்கேற்றுவார்கள். அதுவும் மெல்லிதாக எரியும்படி திரியை எண்ணெய்க்குள் வைப்பார்கள். இரவெல்லாம் எரிந்து காலையில் எண்ணெய் தீர்ந்து விடும். அந்த பொழுதில் எழுகின்றவர்கள் விளக்கை அணைத்து விடுவார்கள். அப்படி அணைக்காவிட்டால் திரியும் எரிந்து கருகி புகை எழும். அதுவரைக்கும் தூங்குகின்ற தோழியரைக் குறிக்கும் பொழுது இதை அழகாக மறைபொருளாகச் சொல்லியிருக்கின்றார்.

சிலர் தூபம் கமழ என்றதும் தூபம் காட்டுவதாக எடுத்துக் கொள்வார்கள். அது தவறு. "சுற்றும் விளக்கெரியத் தூபம் கமழ" என்று பகுக்க வேண்டும். அப்பொழுது சரியான பொருள் கிடைக்கும்.)

மாமி, அவள் இன்னமும் தூங்குகிறாள். அவளை எழுப்புங்கள். ஏன் இப்படித் தூங்குகிறாள்? எழுப்பினாலும் எழுந்திருப்பதில்லை? என்னவாயிற்று? ஊமையாகப் போனாளோ? செவிடாகப் போனாளோ? இல்லை சோம்பல் (அனந்தல்) மிகுந்து போனாளோ? அதுவும் இல்லையென்றால் மந்திரத்தில் கட்டுண்டு மயங்கி ஏமப் பெருந்துயிலில் விழுந்தாளோ?

(ஏமப் பெருந்துயில் என்றால் coma. பெருந்துயில் நீண்ட தூக்கம். ஏமம் என்றால் இன்பம். ஏமப் பெருந்துயில் மீளக்கூடியதுதான். ஆகையால்தான் அந்தப் பெயர்.)

மாமாயனென்றும் மாயவனென்றும் வைகுந்தனென்றும் அவனுடைய திருப்பெயர்கள் பல. இன்னும் பல. அந்தத் திருப்பெயர்களைக் காலையில் எழுந்து சொல்லிச் சொல்லி இன்பம் பயில்வாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
23-12-2005, 10:17 AM
பாவை - பத்து

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்

நோன்பு நோற்றபதன் பலன் இன்பம். இன்ப நிலை எய்தினால், நாம் இருக்குமிடமே சொர்க்கம். அப்படி நோன்பு நோற்று சொர்க்கம் புகப் போகும் தோழியே! உனது வீட்டு வாயில் நின்று உன்னை அழைத்தும் கதவைத்தான் திறக்கவில்லை. மறுமொழியாவது தரக்கூடாதா? என்னோடு நமது தோழியர்களும் உனக்காகக் காத்திருக்கின்றார்களே!

(கோதையார் தோழிகளோடு சென்றழைத்த பொழுது சிலர் எழுந்தனர். சிலர் தங்கள் தாயார் எழுப்பவும் எழுந்தனர். சிலர் கதவையே திறக்கவில்லை. கதவைத் திறக்காமல் மறுமொழியும் கொடுக்காமல் உறங்கும் அவர்களை நோக்கி வியப்பில் பாடுகிறார் ஆண்டாள்.)

நறுமணம் கமழும் துளசியைச் சூடிக் கொண்டவனே நாராயணன். அவனுடைய புகழை நாம் பாடிடப் பாடிட மகிழ்வான். அந்த மகிழ்ச்சியில் நமக்குத் தக்கதெல்லாம் தருவான் அவன். அந்தப் புண்ணியனால் முன்னொரு காலத்தில் மடிந்து பட்ட கும்பகருணனை அனைவரும் அறிவார்கள். தூக்கத்தில் பெரியவன் அவன். அந்தக் கும்பகருணன் தன்னுடைய பெருந்தூக்கத்தை எல்லாம் உனக்கே தந்தானோ! இப்படிச் சோம்பல் உடையவளாய்ப் போனாயே!

(சொத்து ஒருவரிடமிருந்து ஒருவருக்குக் கை மாறுவதுண்டே அப்படி முன்பு கும்பகருணன் அனுபவித்த சொத்து இன்று இவளுக்கு உரிமையானதோ என்று கிண்டலாகக் கேட்கிறார். ஏன்? அளவிற்கு மிஞ்சிய தூக்கம் நன்றன்று. அது வியாதிக்கு அடையாளம். ஆகையால்தான் அவர்களை எப்பாடுபட்டாவது எழுப்பிட முயல்கிறார் கோதை.)

துடைத்து வைத்த தங்கப் பாத்திரம் போல வனப்புடைய பாங்கியே! எழுவாய் முன்னிலை. இல்லை பயனிலை. எழுந்து நிலையாக வந்து கதவினைத் திறந்திடுவாய் எம்பாவாய்!

(எழுந்ததும் முதலிலேயே முழுவுணர்ச்சி திரும்பாது. ஒவ்வொரு உணர்வாக விழித்துதான் கடைசியில் மொத்த விழிப்பு ஏற்படும். அப்படி மொத்த விழிப்பு ஏற்படும் முன்னால் நாம் எழுந்து நடக்க முற்பட்டால் தட்டுத் தடுமாற வேண்டியதுதான். தூக்கத்தில் யாரேனும் கதவைத் தட்டினால் பதறி எழுந்து விழுந்து எழுந்து இடித்துக் கொண்டு செல்வோம் அல்லவா. அப்படியெல்லாம் தட்டுத் தடுமாறி வராமல் முழு விழிப்புடன் வரவேண்டும் என்பதைத்தான் தமிழில் சுருக்கமாக தேற்றமாய் வந்து என்று சொல்லியிருக்கின்றார். அருமையான தமிழ்ச்சொல் தேற்றம் என்பது.)

அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
23-12-2005, 10:21 AM
பாவை - பதினொன்று

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்

நிறைந்த மந்தையில் கன்றுகளை ஈன்ற பல இளமையான பசுக்களைக் கறந்தவர்கள் ஆயர்கள். அமைதியான பசுக்களோடு பழகும் ஆயர்களே, எதிர்த்து வருகின்றவர்களின் திறமையெல்லாம் அழியும் வகையில் போர் புரிந்திடும் குற்றமற்ற வீரர்கள். அந்தக் கோவலர்தம் பொற்கொடியே எங்கள் தோழி! நான் சொல்வதைக் கொஞ்சம் கேளாய்!

(பசுக்களோடு பழகுகின்ற கோனார்கள் மிகவும் அமைதியானவர்கள். கோவலர் என்றால் கோ+வலர். பசுக்களைப் பெருக்குவதிலும் பராமரிப்பதில் சிறந்தவர்கள். அவர்கள் அமைதியாக வாழ்க்கையை அமைத்திருந்த பொழுதும், நாட்டிற்கு ஆபத்து என்று வருகையில் பால் சுமந்த கையில் வேல் சுமந்து எதிரிகள் தங்கள் ஆற்றலை முழுதும் இழக்கும் விதமாகப் போரிடும் திறம் கொண்டவர்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்களே!)

புற்றில் வாழ் அரவு அறிவாயா? நெளிநெளியென்று வளைந்து நெளிந்து செல்லும் அந்தப் பாம்பை ஒத்த இடையுடையவளே! விண்ணிலே மேகம் வந்த விடத்து மோகம் கொண்டுத் தோகை விரித்தாடும் மயிலின் வனப்பைக் கொண்ட அழகுடையவளே! தொடரும் உறக்கம் விட்டு எழுந்திருந்து வெளியே வா!

(பாம்புக்கு எதிரி மயில். விடத்துப் பாம்பைக் கண்ட விடத்துக் கொத்தித் தின்பது மயில். இந்த இரண்டிலும் உள்ள நல்ல பண்புகளை ஒன்றாகக் கொண்டவளே என்று தோழியைப் பாராட்டுகிறார். எதிரெதிர்த் துருவங்களாக இருந்தாலும் நல்லது எங்கிருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கொள்க.)

நானும் நமது தோழிமார் எல்லாரும் வந்து உனது வீட்டின் முற்றத்தில் இப்பொழுது நிற்கின்றோம். வந்ததோடு இல்லாமல் கருமுகில்களின் அழகிய அடர்வண்ணனின் புகழ் பாடுகிறோம். அப்படி நாங்கள் அன்போடு பாடுவது உன் காதுகளில் விழவில்லையா? செல்வப் பெண்ணே! விடிந்த பிறகும் ஆடாமல் அசையாமல் பேசாமல் எதற்காக இந்த உறக்கம் கொள்வாய் எம்பாவாய்!

(வாசலில் இருந்து அழைத்தாயிற்று. வரவில்லை. கதவையும் தட்டியாகி விட்டது. தோழியின் தாயிரிடத்தில் சொல்லி அழைத்தாயிற்று. இருந்தும் ஒரு பயனில்லை. இப்பொழுது வீட்டிற்குள்ளேயே புகுந்தாயிற்று. இன்னமும் உறங்குகிறாள். கார்மேக வண்ணன் புகழை இவ்வளவு பாடியும் நாடியும் இருக்கும் பொழுது அசைவேயில்லாம் என்னத்திற்காக இப்படித் தூங்குகிறாள் தோழி என்று ஆண்டாள் வியந்து பாடுகிறார்.)

அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
23-12-2005, 11:13 AM
பாவை - பன்னிரண்டு

கனைத்து இளம் கற்றெருமைக் கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்

தோழி! உனது வீட்டைப் பற்றி நீ அறிவாயா? செல்வம் மிகுந்த உன் அண்ணனிடத்தில் மாடுகள் ஏராளமாக உண்டு. பசுக்கள் மட்டுமன்று எருமைகளுந்தான். அந்த எருமைகளின் பால்வளம் அறிவாயோ! தன்னுடைய கன்றிற்கு இரங்கி தானகவே மடியிலிருக்கும் பாலினைத் தரையினில் பொழிந்திரும் எருமைகள். அப்படிப் பொழிந்த பாலானது தரையை நனைத்துச் சேறாகக் குழம்பியிருக்கும் வீட்டினை உடைய நற்செல்வனின் தங்கையே எழுந்திராய்!

(எருமைகள் பால் நிறைந்து மடி கனந்து நிற்கும். தொழுவத்தில் எருமைகள் கட்டப்பட்டிருந்தாலும் அவற்றின் கன்றுகள் அவிழ்த்து விடப்பட்டு திரிந்து கொண்டிருக்கும். அப்படித் திரியும் கன்றுகள் பசியெடுக்கும் வேளைகளையில் "அம்மா" என்று கனைத்துக் குரலெழுப்பும். அந்தக் குரலைக் காதில் கேட்ட மாத்திரத்திலேயே பாசம் மிகுந்து மடியிலிருக்கும் பாலைப் பொழிந்திடும் அந்த எருமைகள்.

வழக்கமாக மாட்டுத் தொழுவங்களில் மூத்திரச் சேறாக இருக்கும். அப்படியில்லாமல் பால் பொழிந்த சேறாக இருக்கும் அளவிற்குச் செல்வச் சீமாட்டியாக இருந்திருக்கின்றனர்கள் அந்தக் காலத்து ஆயர்கள்.)

தோழி! இது மார்கழி மாதம். விடியற் பொழுது. உனக்காக உனது வீட்டின் வாசற்கடையில் வந்து நிற்கும் எங்கள் தலைகளில் பனி விழுகிறது. இந்தக் குளிரையும் பொருட்படுத்தாது உனது வீட்டு வாயிலில் நின்று தென்னிலங்கை மன்னனை அழித்த மாயவனாம் எங்கள் மனதிற்கு இனியவனைப் பாடுகின்றோமே! நீயும் எங்களோடு சேர்ந்து வாய் திறந்து பாடாயோ!

(மார்கழி என்பது பனிக்காலம். பனியில் நனைந்து கொண்டேனும் நோன்பு நோற்க வேண்டும் என்ற கடமையுணர்ச்சி ஆண்டாளுக்கு. இறைவனை வாயால் பாடக் கூடாது. மனத்தால் பாட வேண்டும். அப்படிப் பாடுவதற்கு அந்த இறைவன் மனதுக்கினியவன் என்று அறிய வேண்டும். மனதுக்கு இனியதைத்தான் உணர்ந்து பாட வேண்டும். எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அவைகள் மனதிற்கு இனியனவாகவா இருக்கின்றன? அப்படி இல்லாதவைகளைப் பாடினால் அது இனிமையாக இருக்காது.

ஒரு தவறைக் காண்கிறோம். அது மனதிற்குத் துன்பமாக இருக்கிறது. அந்தத் தவறைப் பாடலில் பாடினால் சோகமாகவோ அல்லது ஆவேசமாகவோ அமையும். இறைவனை வணங்கும் பொழுது மனது அமைதியாகி இன்புறும். அதனால்தான் மனதுக்கினியான் என்று இறைவனுக்குப் பெயர் சூட்டுகிறார் சூடிக் கொடுத்த சுடர்கொடி.)

தோழி! இத்தனை அழைக்கின்றோமே! இனியாவது எழுந்திருப்பாயா? இதென்ன பேருறக்கம். இப்படி நீ தூங்கிக் கொண்டேயிருந்தால் மற்ற இல்லத்தாரும் உனது தூக்கத்தின் பெருமையை அறியக் கொள்வாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
23-12-2005, 11:15 AM
பாவை - பதிமூன்று

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நந்நாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்

கொக்கின் உருவிலே ஒரு அரக்கன் வந்தான். வந்தவனும் நொந்தான். ஏன் தெரியுமா? அந்தக் கொக்கின் பெரிய நீண்ட அலகுகளைப் பற்றி அதன் வாயைப் பிழந்து எறிந்தான் கண்ணன். அத்தோடு சமருக்கு வந்த பொல்லாதவர்கள் தலைகளைக் கிள்ளிக் களைந்தான்.

(பொல்லாதவர் தலையைக் கிள்ளிக் களைந்தான் என்பதற்கு வேறுவிதமாகவும் பொருள் கொள்ளலாம். பொல்லாத்தன்மை தலையில் விளைவதுதானே. இறைவன் அந்தத் தலைக்கனத்தைக் கிள்ளிக் களைந்தான் என்றும் கொள்ளலாம். நமக்கு நல்லறிவு தரவேண்டிய கடமை இறைவனுக்கு உள்ளது அல்லவா!)

இப்படி நமது பொல்லாத்தனங்களை நீக்கும் பேரிறைவனின் புகழினைப் பாடுவதில் இன்பம் கொண்டு நமது தோழியர் எல்லாம் பாவை நோன்புக் களத்தில் புகுந்தனர். அவர்கள் நிச்சயமாக அந்தக் களத்தில் வெல்வர்.

(நோன்பு என்பதும் போர்க்களமே. முன்பே ஆண்டாள் சொன்னது போல நோன்பு என்பது இறைவனைத் தொழுவது மட்டுமல்ல. நல்ல செயல்களைச் செய்வதும்தான். அப்படி இருப்பது ஒரு சோதனைக் களந்தானே. அதில் வென்றால் பக்குவம் கிட்டும்.)

பின்னிரவில் ஒளிரும் வியாழன் ஒளி மங்கியது. ஏனென்றால் விடியலில் முளைக்கும் வெள்ளி ஒளியால்தான். இந்த விடிகாலையில் பறவைகளும் எழுந்து தமது கடமையைச் செய்ய ஒலியெழுப்பிக் கொண்டு பறக்கின்றன. இதை இப்பொழுதுதாவது உனது மலர்வண்டுக் கண்களைத் திறந்து பார்ப்பாய்!

(போதரி என்பதைப் போது+அரி என்று பிரிக்க வேண்டும். அரி என்றால் வண்டு. போது என்றால் மலரின் பருவம். காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலையில் மலரும் மலர் என்ற வழக்கும் உண்டல்லவா. அரும்பு முழுதும் மூடியிருப்பது. மலர் முழுதும் விரிந்திருப்பது. போது என்பது பாதி மூடியும் திறந்தும் இருப்பது. அத்தகைய அழகிய கண்களை உடைய தோழியைப் பாடி அழைக்கின்றார் ஆண்டாள்.)

காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் மூழ்கியெழுந்து குளித்துப் புத்துணர்வு பெறாமல் இன்னமும் படுக்கையில் கிடக்கின்றாயே! இந்த நந்நாட்களிலாவது இயல்பான சோம்பலையும் கள்ளத்தனங்களையும் விடுத்து நல்லெண்ணம் கொள்வாய் எம்பாவாய்!

(பொதுவாகவே மதரீதியான நோன்புகளின் பலன் உடலையும் மனத்தையும் கட்டுப் படுத்தும் பக்குவம் பெறுவதே. ஆகையால்தான் தீய எண்ணங்களை விடுத்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒன்றையே கொண்டு நோன்பு நோற்க வேண்டும். அதுதான் முழுப்பலனைத் தரும்.)

அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
23-12-2005, 11:25 AM
பாவை - பதினான்கு

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணனைப் பாடேலோர் எம்பாவாய்

அன்புடையவளே! உனது வீட்டின் புழக்கடைத் தோட்டத்திற்குச் செல். அங்கிருக்கும் நீர் நிறைந்த கிணற்றைப் பார். காலையில் மலரும் செங்கழுநீர் மலர்கள் வாய் நெகிழ்ந்து விரிந்திருக்கின்றன. இரவில் மலரும் ஆம்பல் மலரோ வாய் கூம்பி காலையின் வரவைச் சொல்கின்றது.

(வாவி என்ற தமிழ்ச் சொல்லிற்குக் கிணறு என்று பொருள். இன்றைக்குத் தமிழில் வாவி என்ற சொற்புழக்கம் இல்லையென்றாலும் இந்த வாவி என்ற சொல் பாவி என்று மருவி கன்னடத்திலும் தெலுங்கிலும் புழங்குகின்றது.

நீர் நிரம்பிய கிணறுகளில் மலர்கள் பூத்திருக்கும். அப்படி செங்கழுநீர் மலர்ந்தும் ஆம்பல் வாய் கூம்பியும் உள்ளன. வந்து பார்த்தாவது விடிந்தது என்று தெரிந்து கொள்ளும் படி தோழியரிடம் கூறுகின்றார் நாச்சியார்.)

சாம்பல் நிறைத்திலும் செங்கொற்பொடி நிறத்திலும் ஆடையணிந்து கொண்ட தவத்தவர்கள் காலையில் நீராடி திருக்கோயிலுக்குச் சென்று மங்கலச் சங்கொலி முழங்கும் பேரின்ப ஒலியைக் கேளாய்!

ஏதோ எங்களுக்கு முன்னமே நீயெழுந்து கிளம்பி எங்களை எழுப்புவாய் என்று வீண்பேச்சு பேசிய தோழியே எழுந்திராய்! உனக்கு வெட்கமில்லாமலா போய் விட்டது!

(இந்தத் தோழி வாய்ச் சொல்லில் வீரம் மிகுந்தவள் போலிருக்கின்றது. ஆகையால் எல்லாரையும் தான் வந்து எழுப்புவேன் என்று சொல்லி விட்டுக் கடைசியில் தான் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கின்றாள். அந்த வெட்கமில்லாத வீண்பேச்சுக்காரியையும் விடாமல் எழுப்பி நோன்பில் சேர்க்கிறார்.)

வெண்ணிறச் சங்கும் மின்னிடும் சக்கரமும் இரண்டு கைகளிலும் ஏத்துகின்றானே நாராயணன்! தாமரை மலர்களை ஒத்த அழகிய விழியன்! அவனைப் பாடுவாய் எம்பாவாய்!

(இறைவன் புகழை நாத்தழும்பேற பாட வேண்டும். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் சிறப்பாகச் சொல்லியிருக்கின்றார்.
பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே
பாண்டவர்களுக்குத் தூதாக நடந்தானைப் பாடிப் புகழாத நாவென்ன நாவே! நாராயணா என்ற பெயரைச் சொல்லாத நாவென்ன நாவே!)

அன்புடன்,
கோ.இராகவன்

இளசு
28-12-2005, 01:03 AM
பாவை - ஒன்பது


தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணை மேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாழ் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாயவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்



சொல்லழகு அபாரம்..


தூமணி மாடம்
மணிக்கதவே தாழ்திறவாய்
ஏமப்பெருந்துயில்..


ஆண்டாளின் நாவில் தமிழ்மகள் வாசம்..


மணக்கும் பாட்டிது... நன்றி ராகவன்..

இளசு
28-12-2005, 01:10 AM
பாவை - பத்து

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்


கும்பகர்ணன் சொத்து கைமாற்றம்
உறக்கம் முழுதாய்த் தெளிந்த தேற்றம்..


நக்கலும் குறிக்கோளுமாய் ஆண்டாளின் ஆட்சி தொடர்கிறது..

அரும்பணி ஆற்றும் ராகவனுக்கு நன்றி..

இளசு
28-12-2005, 01:12 AM
பாவை - பதினொன்று

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்



கோவலர் பெருமை சொன்ன ஆண்டாளையும்
அரவம் இடை என்ற உங்கள் இடக்கரடக்கலையும்

ஒருங்கே ரசித்தேன்... பாராட்டுகள் ராகவன்..

இளசு
28-12-2005, 01:16 AM
பாவை - பன்னிரண்டு

கனைத்து இளம் கற்றெருமைக் கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்



கன்றுக்கு ஒதுக்கிவைக்கும் கரவறியா எருமை..
இதன் வாரிகளுக்கு இதனால் மரணம் அதிகம்..


பனிக்கொட்டும் மார்கழி ..
நினைவூட்டி அனுதாப அலை எழுப்பும் தலைவி..

ஆண்டாளின் ஆளுமை சிலிர்க்கவைக்கிறது..


நன்றி ராகவன்..

இளசு
28-12-2005, 01:21 AM
பாவை - பதிமூன்று

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நந்நாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்



கதை நிகழும் களத்தில் காணக்கிடைக்கும் காட்சிகளை
அழகாய்ப் பயன்படுத்தும் இயக்குநர் சிகரமா ஆண்டாள்?


வெள்ளி எழுந்ததையும் புள்ளினங்கள் சிலம்பினதையும்
சொல்லி கொள்கை நிறைவேற்றப் புறப்பட்டுவிட்டாள்..


ராகவனின் இத்தமிழ் விருந்து -- காலத்தை வெல்லும் பதிவு.


பாராட்டும் நன்றியும்..

gragavan
29-12-2005, 07:24 AM
நன்றி இளசு அண்ணா. நான் இல்லாத ஒவ்வொரு நாளுக்கும் பாவினை எடுத்து அதற்குப் பின்னூட்டத்தைத் தொடுத்த உங்கள் பணி மிகவும் மகிழ்வூட்டுகின்றது. மிக்க நன்றி அண்ணா.

pradeepkt
29-12-2005, 09:05 AM
ஐயா விடுமுறை நாளிலும் தவறாது பாடல் விளக்கம் போட்ட உங்களுக்கும் வாழ்த்தும் சாக்கில் இன்னும் சில விளக்கங்கள் அளித்த அண்ணாவுக்கும் பாராட்டுகள்.

gragavan
30-12-2005, 04:08 AM
பாவை - பதினைந்து

எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையாய்
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயானைப் பாடேலோர் எம்பாவாய்

(இந்தப் பாடல் ஆண்டாளுக்கும் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு தோழிக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையாக இருக்கிறது.)

ஆண்டாள் : எல்லே! இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ! இன்னமும் நீ கிடந்துறங்க என்ன காரணம் இருக்க முடியுமென்று எனக்குத் தோன்றவில்லையே!
(எல்லே என்பது பாண்டி நாட்டு வழக்கு. தூத்துக்குடி திருநெல்வேலிப் பக்கங்களில் இன்னும் ஏலே என்று அழைப்பதைக் கேட்கலாம். எல்லே என்பது மருவி ஏலே என்றாயிற்று. வா போ என்பதற்குக் கூட வாலே போலே என்று சொல்வார்கள். தென்பாண்டி ஆண்டாள் தேன்பாண்டி வழக்கைப் பயன்படுத்தியதும் சிறப்பு.)

தோழி : தோழியர்களே சிலுசிலுவென்று எரிச்சலூட்டும் விதமாக என்னை அழைக்காதீர்கள். இதோ இன்னும் சிறிது நேரத்திலேயே நான் வந்து விடுகின்றேன்.

ஆண்டாள் : அடி தோழி! நயமானவளே! உனது கதைகளை உன் வாயால் சொல்லியே நாங்கள் அறிவோம். ஒழுங்காக எழுந்து வருவாய்!

தோழி : சரி. நீங்களே சிறந்தவர்கள் ஒத்துக்கொள்கின்றேன். நீங்களே சென்று நோன்பு நூற்று நன்றாக இருங்கள். நானே நோன்பு நோற்காமல் இழந்தவளாகப் போகின்றேன். நீங்கள் இன்புற்று வாழுங்கள்.

ஆண்டாள் : ஆகா! வேறு வேலைகள் உடையவளே! விரைவாக (ஒல்லை) எழுந்து வா! யாரெல்லாம் வரவேண்டுமோ அவர்கள் எல்லாரும் வந்தாகி விட்டது. நீயும் வந்து எங்களோடு சேர்ந்து கொள்வாய்.

(தோழியர் ஒன்று கூடி அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டும் என்று எண்ணிய நோன்பு. ஆகையால் அனைவரையும் ஒரு வழியாக எழுப்புகிறார் கோதையார். நடுவில் தூக்கக் கலக்கத்தில் கோவித்துக் கொண்ட தோழியைக் கூட சமாளித்து எழுப்பி விட்டார். ஒல்லை என்ற சொல்லிற்கு விரைந்து என்று பொருள். இதே சொல்லை சண்முகக் கவசத்தில் பாம்பன் சுவாமிகள் பயன்படுத்தியுள்ளார். "ஒல்லையில் தாரகாரி ஓம் காக்க" அதாவது ஓங்காரமாய் விளங்கும் வேலவன் விரைந்து வந்து காக்க!)

தோழியர்களே! கண்ணன் திருவாய்ப்பாடியை விட்டு வடமதுரைக்குச் சென்ற பொழுது அவனுடைய மாமன் ஆனையை ஏவும் ஆணையை ஏவினான். அந்தோ! அந்த ஆனையும் கோவிந்தன் மீது பாய்ந்தது. அத்தோடு அதன் உயிர் ஓய்ந்தது. அப்படி ஆனையைக் கொன்றானை, தீயவர்களைப் போரில் அழிக்க வல்லானை மாயானைப் பாடிப் புகழ்வாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
31-12-2005, 12:44 PM
பாவை - பதினாறு

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்

(பாவை நோன்பில் கலந்து கொள்ள வேண்டிய அனைவரும் எழுந்து குளிர்ந்த நீரில் தூயமாய் நீராடியாகி விட்டது. மாயவனை ஆயவனைப் புகழ்ந்து பாடியாகி விட்டது. அடுத்து செய்ய வேண்டியது என்ன? அண்ணலுடைய திருக்கோயிலுக்குச் சென்று அவனையும் எழுப்ப வேண்டியதுதான்.)

திருவில்லிபுத்தூரில் ஓங்கி வளர்ந்தது இந்த ரங்க மன்னார் திருக்கோயில். அந்தக் கோயிலில் வாயிலில் பாதுகாப்பாக நிற்கும் பாதுகாவலனே! அழகிய கொடிகளைத் தொங்கவிட்டுள்ள தோரணவாயிலைக் காக்கின்றவனே! திருக்கோயிலின் மணிக்கதவம் தாள் திறவாய்!

(இறைவனைக் காணச் செல்கின்றோம். கதவம் தாளிட்டிருந்தால் நமக்கு எவ்வளவு துன்பமாக இருக்கிறது. அப்படியிருக்கையில் விடியலிலேயே எழுந்து சென்ற பொழுதும் கோயில் கதவம் தாளிட்டிருக்கக் கண்டால் ஆண்டாளால் தாங்க முடியுமா? அதான் வாயில் காப்போனிடம் கெஞ்சுகின்றார்.

இதே நிலை அப்பருக்கும் ஏற்பட்டது. திருமறைக்காட்டு விரிசடையான் கோயில் பூட்டப்பட்டுள்ளது. துடித்துப் போய் விடுகிறார். உடனே ஒரு பதிகம் எழுகின்றது.
பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ!
மண்ணினார் வலஞ் செய் மறைக்காடரோ!
கண்ணினால் உமைக்காணக் கதவினைத்
திண்ணமாய் திறந்தருள் செய்மினீரே!" என்று கதறுகிறார். கண்ணீர் பெருக்குகின்றார். விளைவு? இறையருளால் திருக்கதவம் திறக்கிறது.)

வாயில் காப்பானே! திருக்கோயில் கதவம் திறவாய்! இன்றல்ல! மாயன் மணிவண்ணன் என்றைக்கோ அறைந்து பாட பறைகளைத் தந்து ஆயர் சிறுமியராகிய எங்களுக்கு வாய் நேர்ந்து வாக்குறுதி தந்தான். அப்படியிருக்க கதவு மூடியிருக்கலாமோ!

விடியலில் எழுந்தோம். தூய்மையுடன் நீராடினோன். நோன்பிற்கான கிரிசைகள் செய்தோம். இப்பொழுது அந்த நந்தனுடைய துயில் எழுப்பப் பாட வேண்டும். அதற்கு முன்னர் செய்யப்பட வேண்டியது என்ன தெரியுமா? எந்தக் காரணமும் சொல்லாமல் தாமதிக்காமல் நேயநிலைக் கதவின் தாளினை நீக்குவாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
01-01-2006, 06:24 AM
பாவை - பதினேழு

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உலகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்

(மார்கழி மாதத்து நோன்பு சிறப்பாகவே துவங்கி விட்டது. பேசி வைத்தபடி தோழியர் எல்லாரும் எழுந்து நோன்பில் கலந்தனர். அப்படியே மன்னாரின் திருக்கோயிலுக்கு வந்தால் கதவு மூடியிருக்கிறது. வாயிற்காப்பானிடம் கெஞ்சிக் கூத்தாடி அதையும் திறந்தாகி விட்டது. உள்ளே கண்ணன் உறங்குகின்றான். அவனுக்குத்தான் இப்பொழுது திருப்பள்ளியெழுச்சி பாட வேண்டும்.)

உணவு (சோறே), உடை (அம்பரமே), தண்ணீர் ஆகியனவும் அவைகளுக்கு மேலானவும் தந்து அறம் செய்து இவ்வுலக மக்களை எப்பொழுதும் காக்கும் எம்பெருமானே! நந்தகோபாலே! உறங்கியது போதும். எழுந்திடுவாய்!

(இந்த உலகத்தில் எல்லாம் ஆண்டவன் தந்தது. அந்த நன்றி மறவாமை வேண்டும். உணவு, உடை, உறைவிடம், உயிர் என்று எத்தனை பெரிய பட்டியல் இட்டாலும் அது இறையவன் செய்த அறமே. இது போன்ற உயிர்த்தேவைகள் மட்டுமல்ல, அறிவும் கூட ஆண்டவன் தந்ததென்று அநுபூதியில் அருணகிரியும் சொல்லியிருக்கின்றார். "யாமோதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்".)

நந்தகோபாலனைப் பெற்றவளே! ஆயர் குலப் பெண்களுக்கெல்லாம் தலைவியாகிய அறிவுக் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெருமாட்டியே! யசோதையே! நீயாவது கொஞ்சம் அறிவுற்று எழுந்திருக்க மாட்டாயா! அப்படி எழுந்து உனது மைந்தன் கோவிந்தனையும் எழுப்புவாயாக!

வானத்தைக் கிழித்துக் கொண்டு ஓங்கி உயர்ந்து வளர்ந்து உலகை அளந்த தேவர் தலைவனே! உறங்கிக் கிடக்காமல் எழுந்திராய்!

(நாரணன் உலகளந்த பெருமையைப் பாடத கவிஞர் இல்லையென்றே தோன்றுகின்றது. சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் இப்படிச் சொல்லியிருக்கின்றார் இளங்கோ.
மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத்
தாவிய சேவடி!
அதாவது மூன்று உலகங்களும் இரண்டு அடிகளுக்கே பத்தாத வகைக்குத் தாவிய சேவடியாம். )

செம்பொன்னாலான கழல்களைக் காலில் அணிந்த பலராமா, நீ உனது தம்பியோடு உறங்குவாயோ எம்பாவாய்!

(அன்னைக்கு அடுத்த பொறுப்பு அண்ணனுக்குத்தானே. ஆகையால்தான் யசோதையை முதலில் கேட்டவர்கள் அது நடக்காமல் அடுத்து பலராமனைக் கேட்கின்றார்கள்.)

அன்புடன்,
கோ.இராகவன்

aren
02-01-2006, 03:05 AM
திருப்பாவை பாடல்களை இங்கே MP3யில் கொடுத்திருக்கிறேன். வேண்டியவர்கள் இந்த இணைப்பை கிளிக் செய்து பாடல்களை இறக்குமதி செய்துகொள்ளலாம்.

http://www.megaupload.com/?d=ME4T2NTN

நன்றி வணக்கம்
ஆரென்

gragavan
02-01-2006, 04:44 AM
பாவை - பதினெட்டு

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

(இத்தனை பேரிடம் சொல்லியும் யாரும் கண்ணனை எழுப்பவில்லையே. சரி. நப்பின்னையிடம் சொல்லிப் பார்க்கலாம் என்று முனைகிறார் கோதையார். நப்பின்னை கண்ணனின் மனைவி. காளையை அடங்கிக் கைப்பிடித்த கன்னிகை. நப்பின்னையைப் பற்றித் தமிழ் நூல்கள் நிறையவே சொல்கின்றன. ஆனால் இன்றைய வைணவத்தில் நப்பின்னையைக் காணவில்லை என்பது வியப்பே. விவரம் தெரிந்த வைணவர்கள் விளக்கலாம்.)

கண்ணன் காதலியே நப்பின்னை! நீ யார் தெரியுமா? உனது புகுந்த வீட்டுப் புகழ் தெரியுமா? மதங் கொண்டு நிலை மறந்து ஓடிவரும் ஆனையைக் கண்ட விடத்தும் ஓடாது நின்று வென்றே திரும்பும் தோள்வலியை உடைய நந்தகோபன் உனது மாமன். அப்பேர்ப்பட்ட பேராயனின் மருமகளே! நறுமணம் கமழும் அழகுமிகும் நீண்ட கருங்கூந்தலைக் கொண்டவளே! உன் மாமியிடம் சொன்னோம். உன் மைத்துனரிடம் சொன்னோம். அவர்கள் வந்து உனது படுக்கையறையைத் தட்டித் திறந்து தொந்தரவு செய்யத் தயங்குகின்றார்கள். ஆகையால் உன்னைக் கேட்கின்றோம். நீயாவது வந்து கதவைத் திறப்பாயா!

பள்ளியறையை விட்டு வெளியே வந்து பார்! கோழியினங்கள் கூவிப் பொழுது விடிந்து பலகாலமாயிற்று. அந்தக் கோழிக் கூட்டங்கள் தத்தமது குஞ்சுகளோடு கூடிக் கொத்தித் தின்ன இரை மேய்கின்றன. மாதவிக் கொடி என்று அழைக்கப்படும் குருக்கத்திக் கொடிகளில் அமர்ந்து குயிலினங்கள் இன்னிசை கூவுகின்றன. அதையும் வந்து பார்!

இப்படியெல்லாம் உலகம் மகிழ்வுற்று தனது இயக்கத்தைத் துவங்கிய வேளையில் நீ மட்டும் கண்ணைப் பள்ளியறையிலேயே தள்ளி வைக்கலாமா? கைவிரல்களில் பந்தினைப் பற்றிக் கொண்டு விளையாடும் சிறுமியர்தான் நாங்கள். மறுக்கவில்லை. நாங்கள் கூட கோபாலன் மீது அன்பு கொண்டு பாட்டுப் பாடி மகிழ்ந்திட விரும்புகிறோம். நீ விரைந்து வந்து உனது செந்தாமரைக் கையில் அணிந்துள்ள வளையல்கள் அசைந்து இசைந்து ஒலியெழுப்பும் வண்ணம் கதவினைத் திறவாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
03-01-2006, 04:25 AM
பாவை - பத்தொன்பது

குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்

(நப்பின்னையிடமும் சொல்லியாகி விட்டது. அவளும் கண்ணனைக் கைப்பிடிக் கைதிலிருந்து விடுவிக்கும் வழியைக் காணோம். இனிக் கண்ணனையே கேட்க வெண்டியதுதான்.)

கண்ணனே! உலக உயிர்களுக்கெல்லாம் திண்ணனே! எங்கள் புலம்பலையும் கொஞ்சம் கேட்பாய். உனது பள்ளியறையில் குத்துவிளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு சிறப்பாக ஒளிர்கின்றன. காடுகளில் வாழும் பெரிய ஆண்யானைகளின் பெரிய மிளிரும் தந்தத்தைக் கால்களாகக் கட்டிச் செய்யப்பட்ட கட்டில் மேல் ஏறி மெத்தென்ற இலவம் பஞ்சு மெத்தையில் படுத்துக் கொண்டிருக்கின்றாய்.

கொத்துக் கொத்தாக வாசநறுமலர்களைச் சூடிக் கொண்டுள்ள நீண்ட கருங்கூந்தலை உடையவள் நப்பின்னை. உனது மனையாளாகிய அவளது மார்பில் நீ தலையை வைத்துச் சாய்ந்து கொண்டு இளந்தூக்கத்தில் சுகிக்கின்றாய். மலர்களை ஒன்றோடு ஒன்று நெருக்கிக் கட்டி முனையில் முடிச்சிடாத தார்மாலை அணிந்து கொண்ட மலர் மார்பனே! கொஞ்சமாவது வாய் திறந்து எங்களுக்கு ஒரு வழி சொல்ல மாட்டாயா?

(கண்களுக்கு மை செய்வதில் பழந்தமிழகத்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பசுநெய்யை விளக்கில் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு எரித்து அந்தப் புகையை மெல்லிய வட்டிலில் பிடித்துப் பயன்படுத்துவார்கள். இன்னொன்று அரிசியைக் கருக்கி அரைப்பது. அப்படிக் கிடைத்த கருமையை கண்களில் தீட்டிக் கொள்ளும் வழக்கம் அன்றே இருந்திருக்கின்றது. எகிப்தியர்களுக்கும் இந்தப் பழக்கம் உண்டென்று நாம் அறிவோம். )

கரிய அரிய மையைக் கண்களின் தடமாக இழுத்துக் கொண்ட அழகிய கண்களை உடைய நப்பின்னையே! நீ உன்னுடைய மணவாளனை எப்பொழுதும் துயிலெழ விடாமல் உன்னுடனே வைத்துக் கொள்ள நினைக்கின்றாய்.

(இன்னும் நப்பின்னை கண்ணனை வெளியே விடவில்லை. ஆகையால் சற்றுக் கடுமையாகவே சொற்களை அடுக்குகின்றார் ஆண்டாள். கடவுள் அனைவருக்கும் உரிமையானவர். நப்பின்னை ஒருத்தி மட்டும் அவரை அடைத்து வைக்க நினைக்கலாமா என்று பொருமுகின்றார்.)

இதோ பார் நப்பின்னை. நீ சற்றும் அவனைப் பிரிந்திருக்க விரும்பாமல் உனது கட்டுக்குள்ளேயே வைத்திருக்க விரும்புகின்றாய். இந்த எண்ணம் எந்த வகையிலும் சிறந்தது அன்று என அறிவாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
04-01-2006, 04:10 AM
பாவை - இருபது

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்பொழுதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

அமரர்கள் முப்பத்து முக்கோடியர். அவர்களுக்கெல்லாம் தலைவன் அரங்கன். அமரர்க்கு அச்சம் அண்டினால் அதை அருகிருந்து அழிப்பவன் அரங்கன். அரங்கா! அச்சுதா! துயில் எழுவாய்!

எங்கள் இறைவனே! உன்னை ஆண்மகன் என்ற வடிவில் நாங்கள் கண்டால், நீ ஆண்களில் செப்பம் உடையவன். அதாவது சிறந்தவன். ஆண்மைக்குறிய அத்தனை இலக்கணங்களும் சீரிய முறையில் அமையப் பெற்ற அருமையன்.

(இறைவனைப் பலரும் பலவிதமாகக் கண்டுணர்ந்து மகிழ்ந்துள்ளனர். அப்பருக்குத் தலைவன். சம்பந்தருக்குப் பெற்றோர். சுந்தரருக்குத் தோழன். மாணிக்கவாசகருக்கு ஆசான். பாரதியாரும் அப்படித்தான். கண்ணனை ஒவ்வொரு வடிவிலும் கண்டார். காதலனாகவும் காதலியாகவும் தாயாகவும் தந்தையாகவும் குழந்தையாகவும் வேலைக்காரனாகவும் பலரிடமும் கண்டார். அந்த மாயன் ஒவ்வொரு பாத்திரத்திலும் சிறப்பாக நடிக்கின்றவன். அதனால்தான் பாரதியால் அத்தனை பாடல்களைக் கண்ணன் மேல் பாட முடிந்தது. அப்படி ஆண் வடிவில் கண்ட ஆண்டாளுக்குக் கண்ணனே சிறந்த ஆண்மகனாகத் தெரிந்ததில் வியப்பென்ன! நல்ல நடிகர் ஒருவர் தாம் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திலேயே ஒன்றிச் சிறப்பிப்பது போலத்தான் இதுவும்.)

அனைத்துத் திறமைகளும் உடையவனே! துன்பம் தருகின்றவர்களைத் தீய்க்கும் வெப்பமே! விமலனே! துயில் எழுவாய்!

(அனைத்துத் திறமைகளும் உடையவன் என்ற சொற்றொடர் இங்கு மிகவும் சிறப்பானது. இறைவன் அனைத்தையும் நடத்த வல்லான். முத்தொழிலும் எத்தொழிலும் செய்தொழிலாகக் கொள்ளும் திறமை பெற்றவன். எதையும் செய்யத் தக்கானை வேறு எப்படிப் புகழ்வது. அப்படி அனைத்தையும் நடத்த வல்லான் எப்படி இருக்க வேண்டும்? தூய்மையான உளத்தவனாக இருக்க வேண்டுமல்லவா? திறமையுள்ளவன் தீயவனாக இருந்து விட்டால் தீமைகளே விளையும். ஆனால் இறைவன் தூயவன் என்பதைச் சொல்லவே திறமையைச் சொல்லிய உடனேயே விமலா என்று சொல்லித் தூய்மையைப் பெருமைப் படுத்துகிறார்.)

சிறப்பான வடிவான மென்முலைகளை உடையவள் நப்பின்னை. அவளது செப்பிதழ்கள் பவழம் போன்ற செவ்விதழ்கள். சிறுத்த குறுக்குடைய நப்பின்னை நாயகியே துயில் எழுவாய்! அப்படியே உனது மணவாளன் கண்ணனுக்கு விசிறிடுவாய். அந்தக் குளிர் காற்று தீண்டவும் அவன் எழுவான். அப்படி எழுகையில் அவன் முகம் காட்டக் கண்ணாடியைத் தருவாய். அவன் இப்பொழுதே எழுந்தால்தான் பாவை நீராடி அருள் பெறுவாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

இளசு
04-01-2006, 10:55 PM
பாவை - பதினான்கு

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணனைப் பாடேலோர் எம்பாவாய்



'ங்க' என்னும் எதுகை கொஞ்ச
தங்கத்தமிழில் ஆண்டாளின் ஆளுமை.

அருமை... அருமையோ அருமை.


நன்றி இராகவன்..

இளசு
04-01-2006, 11:00 PM
பாவை - பதினைந்து


எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையாய்
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயானைப் பாடேலோர் எம்பாவாய்



சட்டென சண்முகக்கவசத்தைக் குறிப்பிட்டு ஒல்லை என்ற சொல்லை
அழகாய் மனதில் பதியவைத்த வல்லமை..

நல்லாசிரியருக்கான சிறப்புத்தகுதி அது..

நன்றிகள் இராகவன்..

இளசு
04-01-2006, 11:06 PM
பாவை - பதினாறு


நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்


இங்கே ஆண்டாளும் அங்கே நாவரசரும்
மூடிய கதவம் கண்டு கலங்கிய காட்சிகள்
கண்முன்னே வர கண்கள் கலங்கின.


வேண்டிச்சென்றது கிடைக்காமல் தடைவரும்போது
அரற்றல் , ஆற்றாமை வருவது இயல்புதானே..


ஓவியக்காட்சிப்பா வரைந்த ஆண்டாளுக்கும்
ஒப்பிலக்கியம் சுட்டி விளக்கும் இராகவனுக்கும்..

நன்றிகள்..

இளசு
04-01-2006, 11:14 PM
பாவை - பதினேழு


அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உலகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்


நன்றி இராகவன்.

எதுகைக்கோ எதுக்கோ - உடையை உணவுக்கு முன்வைத்தது ரசிக்க வைத்தது.

அன்னை, அண்ணன் என கிரமப்படி சிபாரிசுக்குப் போகும் யதார்த்தம் அருமை.

ஓங்கி உலகளந்த - தமிழுலகில் மிகப்பிரபலமான கவிவரிகளில் ஒன்று.

aren
05-01-2006, 02:37 AM
நான் திருப்பாவை பாடல்களின் லிங்க் அனுப்பினேன். யாராவது இறக்கிக்கொண்டீர்களா?

gragavan
05-01-2006, 04:59 AM
பாவை - இருபத்தொன்று

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமாப் போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

கறக்கக் கறக்க ஏமாற்றாது பால் தந்து பெரிய கலங்களும் நிறைந்து வழிந்து தத்தளிக்கும் வகையில் சுரந்து கருணை காட்டுகின்ற வள்ளல் தன்மை மிகுந்த பெரும் பசுக்களின் மந்தையினை எக்கச்சக்கமாக கொண்ட நந்தகோபனுடைய கோபாலா! கொஞ்சம் சிந்திந்துப் பார்த்து தெளிவுறுவாய்!

அளப்பரிய ஆற்றலும் சக்தியும் உடையவனே! அனைத்திற்கும் பெரியவனே! உலகினில் பேரொளியாகக் கண்ணில் தோன்றும் பெருஞ் சுடரே துயில் எழுவாய்!

(இறைவனைக் கண்களால் காண முடியுமா என்ற சர்ச்சை இன்னும் நீடிக்கின்றது. நம்பினால்தான் இறைவனே என்றாகும் பொழுது காண முடியும் என்று நம்பினால்தானே காணமுடியும். இப்பொழுது மருந்தையே நம்பியுண்டால்தான் முழுப்பலன் கிடைக்கும் என்று மருத்துவர் சொல்லக் கேட்கின்றோம்.

வாடிய பயிரினைக் கண்ட பொழுதெல்லாம் வாடினார் வள்ளலார். அது கருணை. அந்தக் கருணை கண்களில் இருந்ததால்தான் வாடிய பயிர்கள் மீதும் பாசம் வந்தது. அதுபோல கண்களில் அன்பிருந்தால்தான் ஏழையின் சிரிப்பில் கூட இறைவனைக் காண முடியும். இந்த இடத்தில் ஏழை என்பது பணத்தால் மட்டும் என்று குறிப்பதல்ல. மனத்தாலும் வேறுபல வகைகளாலும் ஏழையானாலும், நீண்ட நாள் தேடியது கிடைத்து மகிழ்ந்து சிரிக்கையில் தெரிக்கும் இன்பத்தில் கடவுள் இருக்கின்றார் அல்லவா. "கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்" என்ற கவியரசர் கண்ணதாசன் வரிகளை இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

சரி. இந்தப் பாடலுக்கு வருவோம். "உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்" என்ற வரிகளுக்கு வருவோம். இறைவன் அனைத்திலும் அடங்கியிருக்கின்றானா? மின்சாரம் விசிறியில் இருந்தால்தான் விசிறி சுற்றுகின்றது. மின்சாரம் இல்லையென்றால் விசிறி ஓடுவதில்லை. அப்படி விசிறியைக் கட்டுப் படுத்தும் மின்சாரம் விசிறியோடு இருப்பது போல உலகினையே கட்டுப் படுத்தும் இறைவன் உலகோடே இருக்கின்றார். அப்படி உலகோடு இருப்பவர் உலகப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருக்கின்றார். அதை உணர்ந்தவர் ஆண்டாள். ஆகையால்தான் காலை விடியும் சூரியனின் பெருஞ்சுடரில் இறைவனைக் காண்கின்றார். ஒரு ஆற்றல் அளியாக இருந்து உலகு காப்பது பகலவனே! ஆகையால்தான் இளங்கோவும் ஞாயிறு போற்றுதும் என்று சிலப்பதிகாரத்தைத் துவக்குகின்றார்.)

உன்னை எதிர்க்கின்றவர்கள் எல்லாம் தங்கள் வலிமையை இழந்ததோடு மட்டுமில்லாமல் உன்னுடைய திருவடியையே சரணடைந்து பணிவது போல உன்னைப் போற்றியே புகழ்ந்தே வரக்காண்பாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
06-01-2006, 04:13 AM
பாவை - இருபத்திரண்டு

அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாயோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்

கண்ணா! மணிவண்ணா! நீயாளும் இந்த உலகம் மிகவும் பெரியது. மிகவும் அழகானது. இந்த உலகத்து அரசர்கள் எல்லாம் தங்கள் பெருமைகள் குறைந்து விடும் வகையில் உனது பள்ளியறைக் கட்டிலருகே வந்து கூடிச் சங்கம் போல் பணிந்து நிற்பர். அப்படித்தான் இன்று ஆய்ப்பாடிச் சிறுமியர்களாகிய நாங்களும் வந்து நிற்கின்றோம்.

(ஒரு நுட்பமான கருத்து இங்கே இருக்கிறது. ஊன்றிக் கவனிக்க வேண்டும். இறைவனடியைச் சேர்ந்தால் பெருமை என்றுதான் எல்லா நூல்களும் கூறுகின்றன. ஆனால் இங்கே ஆண்டாள் "அபிமான பங்கமாய்" அரசர்கள் வந்து நிற்பர் என்று சொல்லியிருக்கின்றாரே! அதாவது பெருமை குன்ற என்று! அது எப்படி?

முத்தும் பவழமும் பளபளப்பானவைதான். ஆனால் ஒரு வைரக்கல்லின் அருகில் ஜொலிக்க முடியுமா? வைரவொளியானது முத்தையும் பவழத்தையும் அமுக்கி விடுகின்றது அல்லவா. அது போல அரசர்கள் என்று தங்களை எண்ணிக் கொண்டிருக்கின்றவர்கள் அரசர்க்கு அரசர் முன் நிற்கும் பொழுது தாங்கள் ஒன்றுமில்லை என்பதை உணர்வதைத்தான் அபிமான பங்கம் என்கிறார் ஆண்டாள்.)

முகுந்தா! உனது திருவாய் மொழியே இனிய இசை. அப்படி இசையொலிக்கும் வகைக்கு உனது தாமரைப் பூவாயைத் திறந்து நல்மொழி கூறாய்!

கேசவா! செவ்வரியோடிய உனது அழகு விழிகள் துயிலெழும் பொழுது சிறுகச் சிறுக விழிக்கும் பொழுது எங்களை நோக்குவாய்!

புவிக்கு ஒளி கொடுக்கும் நிலவும் கதிரும் உன்னிரு விழிகளைப் போல. எப்படித் தெரியுமா? தீயவைகளைச் சுடும் நெருப்பாகவும் இருந்து, எங்களைக் காக்கும் கருணைக்குளிர் ஒளியாகவும் இருப்பதால் அப்படி. அப்பேர்ப்பட்ட விழிகளால் நீ எங்களை நோக்கும் பொழுது எங்கள் குறைகள் அனைத்தும் இழிந்து நிறைகள் அனைத்தும் பெருகக் காண்பாய் எம்பாவாய்!

(ஒளியைக் கொடுக்கின்ற பகலவன் குளிரைக் கொடுப்பதில்லை. குளிரும் மதியோ பேரொளியைக் கொடுப்பதில்லை. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வேலை. ஆனால் கண்ணன் மலர்விழிகளோ சுடும் பொழுது சூரியனாகவும் குளிரும் பொழுது மதியமாகவும் இருந்து சிறப்பிக்கிறது என்பதே இங்கு உட்பொருள். இறைவனால் அனைத்தும் ஆகும் என்பதைச் சொல்லப் புகுவதே இது.)

அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
07-01-2006, 04:01 AM
பாவை - இருபத்து மூன்று

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலே நீ பூவைப் பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

மாதவா! உன்னை நாடி உன்னைத் தேடி உன்னைப் பாடி வந்துள்ளோம். இது மார்கழி மாதம். பாவை நோன்பு செய்கின்றோம். எங்களுக்கு வேண்டியதெல்லாம் உன் அருள். அதைத் தருவாயா! இத்தனை பொழுது நீ உறங்கிக் கொண்டிருந்தாய். அல்லது உறங்குவது போல நடித்துக் கொண்டிருந்தாய். இப்பொழுது விழித்து எழுத்துள்ளாய்! வெளியே வந்து அருள் காட்டுவாய்!

நீர் தெளித்துக் குளிர்விக்கும் மழைக்காலங்களில் மலைகளின் குகைகளில் துஞ்சியிருக்கும் ஆண் சிங்கமானது கடமையை உணர்ந்து வெளியே வரும். அப்பொழுது அதன் கண்கள் தனலெனச் சொலிக்கும். பொன்னிறத்துப் பிடரி மயிர்கள் பொங்கிப் பெருகும் வகையில் கழுத்தை உதறிக் கொள்ளும். இத்தனைகாலம் உடனிருந்த சோம்பலைச் சாம்பலாக்க பலபக்கமும் நெளித்து வளைத்து சோம்பல் முரித்துக் கொண்டு புறப்பட்டு வெளியே வரும்.

(தமிழில் சிங்கத்தை ஏறு என்பார்கள். அடலேறு என்றால் ஆண்சிங்கம். மனிதஏறு என்றால் நரசிங்கம். அதற்கு ஏன் ஏறு என்று பெயரென்றால் அதன் ஆணை காட்டில் எங்கும் ஏறும் என்பதால். பொதுவாகவே பெண்சிங்கங்கள் வேட்டையாடும். ஆனால் மழைக்காலங்களில் அனைத்தும் சோம்பிக் கிடக்கும் பொழுது பெண்சிங்கத்திற்கு இரை கிடைப்பது அரிதாகும். அந்த பொழுதுகளில் ஆண்சிங்கம் வெளியே வந்து காடே அதிரும்படி உறுமும். அந்த உறுமலுக்குப் பயந்து விலங்குகள் ஓடும். அந்த சமயத்தைப் பயன்படுத்திப் பெண்சிங்கங்கள் வேட்டையாடும்.)

நரசிங்கமே! நீயும் வீறு கொண்டு எழுந்து வருக! கருநாவல் பூக்களின் நிறத்தை உடையவனே மைவண்ணா! உன்னுடைய திருக்கோயிலில் நாங்கள் நிற்கின்றோம். அந்தத் திருக்கோயிலில் உனக்காகவே பொன்னாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட மிகச் சீரிய சிங்காதனம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்தச் சிங்காதனத்தில் அமர்ந்து கொள்! உலகிற்கெல்லாம் அரசன் என்று உணர்த்தும் வகையில் இருக்கை கொள்! அந்த அரசுரிமையில் உனது திருவடி தேடி வந்த எங்கள் காரியங்கள் எல்லாம் ஆராய்ந்து அருள் செய்வாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

இளசு
07-01-2006, 11:02 PM
பாவை - பதினெட்டு


உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்



கந்தம் கமழும் குழலி... என்ன ஒரு சொல்வளம்..


மாதவிக்கொடிப்பூவின் மணியாரமே
மயக்கும் மதுச்சாரமே ----

என கவியரசு வரிகளில் கேட்டதற்கு...
இன்று இராகவன் மூலம் குருக்கத்திக் கொடி என அர்த்தம் தெரிந்தது.

நன்றி இராகவன்..

gragavan
08-01-2006, 02:38 PM
பாவை - இருபத்து நான்கு

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

வாமனா! அன்று குள்ளனாக இருந்தும் இந்த உலகத்தை ஈரடியால் அளந்தாய்! ஈரடியிலேயே மூவுலகமும் அடங்கி விட மூன்றாவது அடிக்கு இடம் கேட்டு மாபலியிடம் நின்றாய்! அப்படி மாபலி தனது தலையில் தாங்கிக் கொண்டு பெருமை கொண்ட உனது திருவடி போற்றி!

(மூன்றாவது அடி தனது தலையில் தாங்கப்பெற்ற மாபலி பாதாள லோகம் சென்றான். அங்கிருந்து ஆட்சி புரிகின்றான். அவன் ஆண்டொரு நாள் வெளி வந்து நாடு செழித்திருக்கின்றதா என்று காண வரும் நாளாக கேரளத்தில் ஓணம் கொண்டாடப் படுகின்றது.)

தேவா! தென்னிலங்கைக்கே சென்று வென்று அதன் புகழைக் குறைத்த உனது திறமை போற்றி! பொற்சக்கரமாக வந்த சகடாசுரனை எட்டி உதைத்து உடைத்துப் புடைத்த உனது புகழ் போற்றி!

நீ நந்தகோபன் வீட்டில் வளர்கையில் கன்று வடிவில் வந்தான் ஒரு அசுரன். அவனை ஒரு கம்பை எத்துவது போல எத்தி மரமாக நின்ற மற்றொரு அசுரன் மீது மோதச் செய்த திருவடிகள் போற்றி!

(கன்று - பசுவின் கன்று. குணில் என்றால் மரக்கொம்பு. ஆ என்றால் ஆச்சாமரம். தன்னை எதிர்க்க வந்த கன்றை ஒரு குச்சியை எத்துவது போல மரத்தில் எறிந்து கொன்றான் கண்ணன்.

ஆண்டாளுக்குக் கண்டிப்பாகச் சிலப்பதிகாரப் பழக்கம் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் இதே வரிகளை இளங்கோவும் பயன்படுத்தியிருக்கின்றார்.
"கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்" என்று ஆய்ச்சியர் குறவையில் வருகின்றது.

குழந்தைகள் மரத்தில் இருந்து கனிகளை உதிர்க்க கொப்பை எறிந்து வீழ்த்துவார்கள். அப்படிக் கண்ணனும் கனியுதிர்த்தானாம். மரமாக நின்ற அசுரனின் மீது கன்றாக வந்த அசுரனை எத்திக் கனியுதிர்த்தானாம். என்ன அழகான சொல்நயம்!)

பெருமழை பொழிந்தான் இந்திரன். பாவம்! மாயத் தந்திரன் உன்னை அறியாதவன். அப்பொழுது கோவர்த்தனகிரியைத் தூக்கி கோகுலத்தைக் காத்த உனது திருக்குணம் போற்றி!

எந்தப் பகையும் வென்றெடுக்கும் உனது கைவேல் போற்றி! எப்பொழுதும் உனது சேவகமே போற்றிக் கொண்டு இன்று உன்னை நாடி நாங்களெல்லாம் வந்துள்ளோம்! இரங்குவாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
08-01-2006, 02:41 PM
கந்தம் கமழும் குழலி... என்ன ஒரு சொல்வளம்..


மாதவிக்கொடிப்பூவின் மணியாரமே
மயக்கும் மதுச்சாரமே ----

என கவியரசு வரிகளில் கேட்டதற்கு...
இன்று இராகவன் மூலம் குருக்கத்திக் கொடி என அர்த்தம் தெரிந்தது.

நன்றி இராகவன்..மிகச் சரியாகப் பிடித்தீர்கள் இளசு அண்ணா. நீங்கள் குறிப்பிடும் பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும்.

gragavan
09-01-2006, 01:27 PM
பாவை - இருபத்தைந்து

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தம் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

நெடுமாலே! நீ ஒருத்தி மகனாய்ச் சிறையில் பிறந்தாய். தேவகியானவள் சிறையில் உன்னை ஈன்றாள். ஆனால் அவளது அண்ணன் கஞ்சன் உன்னைக் கொல்ல எண்ணியிருந்தான். நீ தப்பிச் செல்ல தங்கள் மனம் ஒப்பி இன்னொருத்தி மகனாக வளர யசோதையின் மடியில் இட்டார்கள்.

கோகுலத்தில் ஒளிந்து வளர்ந்தாய். அதே நேரத்தில் ஒளிர்ந்தும் வளர்ந்தாய். தறிகெட்டுப் போய் உனக்குத் தீங்கு நினைத்த கஞ்சன் கருத்தில் பிழையென்று நிரூபிக்க அவன் வயிற்றில் நெருப்பாகப் பற்றி அவனை மாய்த்த பரந்தாமா!

(தனது பிள்ளையை இழப்பது பெருங்கொடுமை. அப்படி முழுவதும் இழப்பதைக் காட்டிலும் தாற்காலிகமாகவது இழக்கத் துணிந்தனர் தேவகியும் வசுதேவரும். இறையருளால் இரவொடு இரவாக நந்தகோபன் வீட்டில் விட்டு வந்தனர். தனது பிள்ளையின் ஒவ்வொரு வளர்ச்சியையும் காண முடியாது ஒவ்வொரு நொடியும் வருந்தினர். அதே நேரத்தில் கண்ணனைக் கண்ணாக வளர்த்தாள் யசோதை. அப்படி வளர்ந்த கண்ணைக் கொல்ல நினைத்தான் மாமனாம் கஞ்சன். வஞ்சம் நிறைந்தவனாய்க் கண்ணனை அழைத்தான். ஆனால் அந்த அழைப்பே அவனை முடித்து விட்டது.)

முகுந்தா! உன்னுடைய பெயர்களைச் சொல்லிச் சொல்லிப் புகழ்ந்து வந்தோம். எங்களுக்கு உன்னருள் கிட்டுமாயின் எங்கள் வருத்தமெல்லாம் நீர்ந்து தீர்ந்து போகும். துன்பம் நீங்கிய இன்பம் பெருகி உன்னுடைய திருமகளுக்குக்குச் சரியான பொருத்தத்தையும், எங்களுக்கு நீ செய்யும் அன்புச் சேவகத்தையும் பாடிப் பாடி மகிழக் காண்பாய் எம்பாவாய்!

(திருத்தக்க செல்வமும் சேவகமும் என்ற அடியைப் பொருள் கொள்ளும் பொழுது தடுமாறிப் போனேன் என்றால் மிகையாகாது. பெரியவர்கள் செய்து வைத்திருக்கும் அருமையான விளக்கங்களையும் எடுத்துப் பார்க்க மனம் ஒப்பவில்லை. சரி. நாமே பொருள் காண்போம் என நினைத்து கண்ட பொருள்தான் மேலே உள்ளது.

திருத்தக்க என்பதைத் திரு என்றும் தக்க என்றும் பிரித்தேன். திரு என்றாள் திருமகள். அலைமகள். செல்வத்திற்கு நிலைமகள். அவளுக்குத் தக்க செல்வம் பரந்தாமனிடத்தில் இருக்கிறது என்று பொருள் கொள்ளலாம். அது என்ன அந்தச் செல்வம் என மனம் குடைந்தது. பிறகு தெளிந்தது. வைரத்தைத் தங்கத்தில் வைத்தால் ஜொலிக்கும். தகரத்தில் வைத்தால் இளிக்கும். திருவாக அமைந்தவளுக்குத் தக்க பொருத்தம் எல்லா வகையிலும் சிறந்தவன் என்று வைகுந்தனைச் சொல்வதாகத் தெளிந்தேன் நான். இது சரியாக இருக்குமென்றே மனம் எண்ணுகின்றது.)

அன்புடன்,
கோ.இராகவன்

இளசு
10-01-2006, 12:10 AM
பாவை - பத்தொன்பது

குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்




குத்து விளக்கெரிய
கூடமெங்கும் பூமணக்க
மெத்தை விரித்திருக்க
மெல்லியலாள் காத்திருக்க....


பச்சை விளக்கு படத்தில் கவியரசு..
இலக்கிய வரிகளை எத்தனை சாதுர்யமாய்க் கையாண்ட மகாக்கவி அவன்..


வெள்ளைப்பற்களும், விழிப்படலமும்
கரிய இமை,புருவங்களும்.....
காண எத்தனை அழகு...
திராவிட அழகு அது...

கண்மை அலங்காரம் முந்தைய தலைமுறை வரை
புகைச்சட்டி, அரிசிக்கருக்கல் என இருந்த தகவலை எண்ணிப்பார்க்க வைத்த குறிப்பு சுகம்..

அசரவைக்கும் இராகவனுக்கு ஜே!!!!

gragavan
10-01-2006, 05:04 AM
பாவை - இருபத்தாறு

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்

மாலே! மணிவண்ணா! நீ கருணை கொண்டு எங்களுக்கு வேண்டிவன யாவையென்று கேட்பாயானால் அரிய பெரியர்களுக்குத் தக்க இந்த மார்கழித் திங்களின் பாவை நோன்பைச் சிறப்பாகச் செய்ய அருள்வாய் என்றே கேட்போம்!

(பிறவாமை வேண்டுமென்று கேட்டுவிட்டு மீண்டும் பிறந்தால் இறைவனை மறவாமை வேண்டுமெனக் கேட்கும் சைவத்தைப் போலதான் இதுவும். இறைவன் வரம் தரப் போகின்றான் என்றால் காடு வேண்டும் மாடு வேண்டும் தங்க ஒரு கூடு வேண்டும் என்று கேளாமல் இறைவனை நினைத்துப் பாடும் நோன்பு சிறக்க வேண்டும் என்று ஆண்டாள் கேட்பது அன்பின் உச்சமே!)

அத்தோடு தூய வெண்ணிறத்துப் பாஞ்ச சன்னியம் இருக்கின்றதே! உரத்த ஒலியெழுப்பினால் உலகம் முழுவதும் அதிர்ந்து நடுங்கும் தன்மையுடைய அந்தப் பாஞ்ச சன்னியம் போன்ற அருமையான சங்குகள் எங்களுக்கு வேண்டும். அப்பொழுதுதான் அவைகளை ஊதிக் கொண்டு உன்னைப் பாட முடியும்.

(ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன என்ற வரியைப் பொருள் கொள்ளும் பொழுது சங்கொலி கேட்டு உலகம் நடுங்கும் என்று பொருள் கொள்ளக் கூடாதென்று தோன்றுகின்றது. ஒலியின் அதிர்வுகள் கூடினால் எந்தப் பொருளும் நடுங்குமல்லவா! உலகத்தையே பெருத்த ஒலியால் அதிர வைக்கும் பாஞ்ச சன்னியம் என்று பொருள் கொள்ள வேண்டும்.)

அத்தோடு வட்ட வடிவமான பெரிய பறைகளைத் தட்டிக் கொண்டு பெரியாழ்வார் பாடிய பல்லாண்டு பாடியும் மகிழ வேண்டும்!

(திருப்பாவை, சிலப்பதிகாரம், இன்னும் பிற நூல்களைப் படிக்கும் பொழுது திருக்கோயில்களில் பயன்பட்ட இசைக்கருவிகளில் பறையும், சங்கமும், கொம்பும், எக்காளமும், செண்டையும் பயன்படுத்தப் பட்டிருப்பது தெரிய வரும். பறை என்பதை இன்றைய மிருதங்கம் என்று கொள்ளவும் முடியாது. காரணம் பறைகளின் வகைகளும் அமைப்பும் நூல்களில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்றைக்குத் தமிழகக் கோயில்களில் இவையனைத்துமே பயன்படுத்தப் படுவதில்லை என்றே தெரிகின்றது. இந்த இசைக்கருவிகளை மீண்டும் மீட்டெடுத்துப் பயன்படுத்தினால் கோதை மனம் குளிர்வார் என்பதில் ஐயமில்லை.)

கோல விளக்கே! உயர்ந்து பட்டொளி வீசிப் பறக்கும் கொடியே! நெடிய கோபுரமே! ஆலின் இலை மேலே துயில் கொண்ட சிறுவனே! எங்களுக்கும் அருள்வாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
10-01-2006, 05:07 AM
குத்து விளக்கெரிய
கூடமெங்கும் பூமணக்க
மெத்தை விரித்திருக்க
மெல்லியலாள் காத்திருக்க....


பச்சை விளக்கு படத்தில் கவியரசு..
இலக்கிய வரிகளை எத்தனை சாதுர்யமாய்க் கையாண்ட மகாக்கவி அவன்..


வெள்ளைப்பற்களும், விழிப்படலமும்
கரிய இமை,புருவங்களும்.....
காண எத்தனை அழகு...
திராவிட அழகு அது...

கண்மை அலங்காரம் முந்தைய தலைமுறை வரை
புகைச்சட்டி, அரிசிக்கருக்கல் என இருந்த தகவலை எண்ணிப்பார்க்க வைத்த குறிப்பு சுகம்..

அசரவைக்கும் இராகவனுக்கு ஜே!!!!நன்றி அண்ணா.

நீங்கள் சொல்வது மிகச்சரி. கண்ணதாசப் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்தப் பாவையைக் கேட்டதும் "குத்துவிளக்கெரிய" திரைப்படப் பாடல் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலாது.

அதே நேரத்தில் இலக்கியத்தையும் திரைப்படப் பாடல்களில் காட்ட முடியும் என்பதற்கு அவரே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

மெல்லியலாள் என்ற சொல்லே இலக்கியத்தன்மையானது. அதை எத்தனை கவிஞர்கள் தொட்டுப் பயன்படுத்தத் துணிவார்கள்? கவியரசர் ஒருவரே துணிவார். அறிவார்.

இளசு
10-01-2006, 06:58 AM
பாவை - இருபது


முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்பொழுதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்



திறல் உடைய விமலன்..

இறைவனுக்கும் ஆட்சியாளருக்கும் இருக்கவேண்டியவை இவை..


கர்மவீரர் ஏனோ நினைவுக்கு வருகிறார்.

தாள்தோள் தடக்கை ஆண்மைத் தோற்றம் அவருக்கும்தான்..


---------------------

தட்டொளி = முகம்பார்க்கும் ஆடி.

சொல்வளம் பெருக இராகவன் வாயால் திருப்பாவை கேளுங்கள் நண்பர்களே..


நன்றிகள் இராகவன்..

kavitha
10-01-2006, 08:14 AM
அருமையான இப்பதிவை சேமித்து வைத்துப்படிக்கிறேன். நேரமின்மை அண்ணா. எனது பதில் பின்னர் வரும். நன்றி

gragavan
10-01-2006, 08:40 AM
அருமையான இப்பதிவை சேமித்து வைத்துப்படிக்கிறேன். நேரமின்மை அண்ணா. எனது பதில் பின்னர் வரும். நன்றிநல்லது கவிதா. நேரம் கிடைக்கும் பொழுது பின்னூட்டமிடுங்கள்.

இளசு
11-01-2006, 12:17 AM
பாவை - இருபத்தொன்று


ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமாப் போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்



ஏழையின் சிரிப்பில் இறைவன்
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
ஞாயிறு போற்றுதும்


அண்ணா+ கவியரசு+இளங்கோ..

காலகட்டங்களைக் கடந்து மேற்கோள்கள் எடுத்தாண்டு
உச்சச்சுவை வரியை விளக்கும் வித்தகர் நம் இராகவன்..

வந்தனங்கள் உங்கள் தமிழுக்கு..

gragavan
11-01-2006, 04:33 AM
பாவை - இருபத்தேழு

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தனைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
முட நெய் பெய்த் முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!

கோவிந்தா! உன்னைக் கூடாரின் அன்பினையும் வெல்லும் முகுந்தா! நாங்கள் பெற விரும்பும் பரிசு எதென்று கேட்டால் என்ன சொல்வோம் தெரியுமா? ஊராரும் உலகோரும் அறிய உன்னுடைய பெயர்களைப் புகழ்ந்து பாடிப் பறை தட்டுவதே!

(கூடாரை வெல்லும் என்ற சொற்றொடருக்குச் சிலர் எதிரிகளைக் கொல்லும் என்றும் பொருள் கொள்வார்கள். அது சரியன்று என்று எனக்குத் தோன்றுகின்றது. இறைவனோடு கூடாரை, இறைவன் பெயரைச் சொல்லிப் பாடாரை, இறைவன் திருவடிகளை நாடாரை வேண்டிய பொழுதில் அன்பினால் வெல்லும் திறம் ஆண்டவனுக்கு உண்டு. அதைத்தான் இங்கே ஆண்டாள் குறிப்பிடுகின்றார் என்று தோன்றுகின்றது.)

மாதவா! உன்னருளாலே செல்வம் பல பெற்று அதனால் நல்ல அணிமணிகளான கைவளை (சூடகம்), தோள்வளை, தோடு, செவிப்பூ (காது மாட்டல்), கால் கொலுசு (பாடகம்) மற்றும் பல அரிய நகை வகைகளை அணிந்து கொள்வோம்! நல்ல ஆடைகளை உடுப்போம்!

(சைவத்தில் இகம்பரம் என்பார்கள். திகம்பரம் என்பது தவத்தார்க்கே. மற்றவர்களுக்கெல்லாம் இகம்பரமே! இந்த உலகத்தில் உள்ள இன்பங்கள் இகசுகம். அந்த உலகத்தில் கிடைப்பது பரசுகம். இகத்தை மறுத்து பரத்தை மட்டுமே (பரத்தையரை அல்ல) நினைப்பது துறந்தோர் உள்ளம். இறையருள் பரசுகம் மட்டுமல்ல இகசுகமும் வழங்கும். அதைத்தான் சுருக்கமாக வள்ளுவர் "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லாகி யாங்கு" என்றார். அந்த கருத்தை ஒட்டியே ஆண்டாளும் இறையருளால் இகசுகமும் பெறுவோம் என்கின்றார். நல்ல அணிமணிகளும் அணிந்து இன்புறுவதைக் குறிப்பிடுகின்றவர் அடுத்த வரியில் உணவையும் குறிப்பிடுகின்றார்.)

நன்றாக உடுத்திக் கொண்டு நகைகளை மேலில் அடுக்கிக் கொண்டு பாலோடு சோற்றை வேக வைத்துக் குழைத்து அதனோடு இனிப்பும் நெய்யும் சேர்த்து பாயாசமாக்கி கைவழி வழியும் வகைக்குக் குழந்தை போலச் சுவைத்து உண்போம். அதுவும் நாங்கள் தனியாக உண்ணாமல் கூடியிருந்து உண்டு வயிறு குளிரக் காண்பாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
11-01-2006, 04:36 AM
ஏழையின் சிரிப்பில் இறைவன்
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
ஞாயிறு போற்றுதும்


அண்ணா+ கவியரசு+இளங்கோ..

காலகட்டங்களைக் கடந்து மேற்கோள்கள் எடுத்தாண்டு
உச்சச்சுவை வரியை விளக்கும் வித்தகர் நம் இராகவன்..

வந்தனங்கள் உங்கள் தமிழுக்கு..நமது தமிழுக்கு என்று சொல்லுங்கள் அண்ணா...இதெல்லாம் நானா கொடுப்பது.....தமிழ் கொடுப்பதை எடுத்துச் சொல்வது மட்டுமே எனது பணி.

gragavan
12-01-2006, 04:44 AM
பாவை - இருபத்தெட்டு

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவு ஒன்றுமில்லாத ஆய்க் குலத்து உந்தனைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றுமில்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

(இறைவனே உலகைக் கட்டி மேய்க்கின்றவன். நாமெல்லாம் பசுக்கள். அதனால்தான் அவனை ஆயன் என்கிறார்கள். தம்மையும் ஆயர் கூட்டத்தாராகக் கருதிக் கண்ணனை வேண்டும் பாடல் இது.)

எங்கள் தலைவனே! நாங்கள் ஆய்க்குலத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு என்ன தெரியும்? ஆடு மாடுகளை மேய்க்கத் தெரியும். அவைகளைப் புல்வெளிகளிலும் கானகங்களிலும் திரிய விட்டு வளர்க்கத் தெரியும். அப்படி மேய்க்கையில் அவைகளுக்கு வேண்டிய கொப்புகளையும் குழைகளையும் இழுத்துப் போடுவதற்கு அவைகள் பின்னாலேயே செல்வோம். அப்படிப் போகையில் எங்களுக்குப் பசிக்கையில் கூட வந்த ஆயர்களோடு கூடி உண்போம். (அவனுக்கு என்ன தெரியும்? திங்கத்தான தெரியும் என்று சொல்வார்கள் அல்லவா. அது போலத்தான் இதுவும்.)

இதைத் தவிர வேறு என்ன அறிவு எங்களுக்கு இருக்கின்றது? அப்படிப் பட்ட இடையர் குலத்தைக் கடையர் குலமாக்காமல் உடையர் எனக்கருதிப் பிறந்தாயே! வாசுதேவா! என்ன புண்ணியம் நாங்கள் செய்திருக்க வேண்டுமோ!

குறை என்ற ஒன்று இல்லாததே உன்னுடைய குறை! அப்படி அப்பழுக்கற்ற கோவிந்தா! உன்னுடைய உறவில்லாமல் நாங்கள் பிழைப்பது எப்படி? எப்பொழுதும் எங்களோடு இருந்து கலந்து நலம் தருவாய்!

அறியாத பிள்ளைகள் நாங்கள். எங்களோடு நீ கூடிக் குலவுகையில் பாடிப் பரவுகையில் மிதமிஞ்சிய அன்பினால் மாதவா, கேசவா, பரந்தாமா, வைகுந்தா, தேவதேவா என்று உன்னைப் பேர் சொல்லி அழைத்து விடுகின்றோம். ஆண்டவன் நீ! உன்னைப் பேரைச் சொல்லிக் கூப்பிடுகிறோம் என்று சீற்றம் கொள்ளாதே!

இறைவா! இத்தனை நெருங்கியவனாக நீ எங்களுக்கு உன்னுடைய திருவருளைத் தருவாய் எம்பாவாய்!

(இறைவனுடைய கருணை நம்மேல் விழ நாம் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும். அந்த வியப்பில்தான் ஆண்டாள் இப்படிப் பாடுகின்றார். இந்த நிலை சைவத்திலும் உண்டு. அருணகிரிக்கும் இதே வியப்பு. அதைத்தான் "ஆதாளியை ஒன்றறியேனை அறத் தீதாளியை ஆண்டது செப்புமதோ?" என்கிறார். வீண்பேச்சு பேசிக் கொண்டு திரிந்த என்னையும் ஒன்றும் அறியாத என்னையும் நன்மைகளை அறியாத என்னையும் ஆட்கொண்ட உன்னுடைய அன்பைச் சொல்ல முடியுமா என்று கேட்கிறார்.)

அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
13-01-2006, 05:41 AM
பாவை - இருபத்தொன்பது

சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

(பாவை நோன்பு மிகச் சிறப்பாக நடக்கின்றது. தோழியருடன் கூடிக் கிளம்பிக் கண்ணன் கோயிலுக்குச் சென்று அவனைத் துயிலெழுப்பியாகி விட்டது. கண்ணனும் தன்னோடும் நப்பின்னையோடும் பலதேவனோடும் பெற்றோருடனும் துயிலெழுந்து அருள் புரிகின்றான். ஆண்டாளும் கூட்டாளிகளும் கார்முகில் வண்ணனைப் புகழ்ந்து பாடுகின்றார்கள். வேண்டுவன கேட்கின்றார்கள்.)

முகில்வண்ணா! விடியற்காலையில் வெள்ளியோடு எழுந்து குளிரக் குளிரக் குளித்து விட்டு கூட்டத்தாரோடு கூடி வந்து உன்னைச் சேவித்து உனது பொற்றாமரை அடிகளைப் போற்றிப் பாடுகின்றோமே! அப்படிப் போற்றி நாங்கள் கேட்பது என்னவென்று செவி மடுப்பாய்.

ஆடு மாடுகளாகிய கால்நடைகளை மேய்த்து அந்த வருவாயில் உண்டு சிறக்கும் ஆயர் குலத்தில் எங்களை உய்விப்பதற்காகவே பிறந்தவன் நீ! அப்படியிருக்க எங்கள் வேண்டுகோள்களைக் கவனியாமல் செல்லலாகாது.

கோவிந்தா! ஏதோ இன்றைக்கு ஒருநாள் மட்டும் உன்னைத் தேடி வந்து உன்னருளை விரும்புகிறோம் என்று கொள்ளாதே! இந்த மார்கழி மாதத்தில் நோன்பு நூற்பதால் மார்கழியோடு போவதா நம் உறவு? என்றும் தொடர வேண்டியதே! என்றுமென்றால் இப்பிறவி மட்டுமல்ல. ஏழு பிறப்புகளிலும் உன்னோடு ஒன்றி அமைதி பெறவே விரும்புகிறோம். உனக்கே நாங்கள் ஆளாவோம். அதை விட எங்களுக்கு என்ன வேண்டும். அப்படி எதுவும் ஆசைகள் துளிர்த்தாலும் அவைகளையும் உன் மீதுள்ள அன்பாக மாற்றுவாய் எம்பாவாய்!

(இறையருள் என்றும் வேண்டும். இதே கருத்தைத்தான் காரைக்கால் அம்மையார் அதியற்புதமாகச் சொல்லியிருக்கின்றார். எல்லோரும் இறைவனையும் இறைவியையும் அப்பனே அம்மையே என்றால், இவரைத்தான் இறைவனே அம்மை என்றார். அப்படிப் பெருமை கொண்ட அம்மை வாயிலிருந்து வருகின்ற சொற்களைக் கவனியுங்கள்.
பிறவாமை வேண்டும் - மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் (உம்மை என்று கூட இல்லை. உன்னை என்கிறார். அம்மா அல்லவா! அப்படி அழைக்க உரிமை உண்டுதானே.)
இந்தக் கருத்துதான் நமது பாண்டி நாட்டாளது திருவுளத்திலிருந்தும் எழுகின்றது.)


அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
13-01-2006, 05:48 AM
பாவை - முப்பது

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

பாற்கடலைக் கடையக் காரணமாகித் திருமகளை அடைந்த மாதவா! கேசவா! வைகுந்தா! வாசுதேவா! பரந்தாமா! முழுநிலவினைப் போன்ற ஒளி வீசும் திருமுகம் கொண்ட ஆயர் குலப் பெண்களாய் நாங்கள் கூடி உன்னைத் தேடிப் புகழ்ந்து வந்தோம்!

(வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே - என்கிறார் இளங்கோவடிகள். மேருமை மத்தாக்கி வாசுகிப் பாம்பை நாணாக்கிக் கடையும் பொழுது கடலில் ஆழ்ந்தது மலை. அப்பொழுது ஆமையாய் வந்து தாங்கினாராம் வைகுந்தவாசன்.)

இறையருட் பறை கொண்ட வகையான அழகுமிகும் திருவில்லிபுத்தூரின் பெரியாழ்வாரின் செல்வப் புதவியான கோதை நாச்சியார் உண்மையான உளத்தோடு இறைவனை நாடிப் பாடியது இந்தத் திருப்பாவை. எப்பொழுதும் மலர்ந்திருக்கும் குளிர்ச்சி பொருந்திய தாமரை மலர்களைக் கோர்த்துக் கட்டியது போன்ற அற்புதமானவை இந்தச் சங்கத் தமிழ் மாலையிலுள்ள முப்பது பாக்கள்.

(பை என்றால் எப்பொழுதும் மலர்ச்சியுடன் இருக்கும் என்று பொருள். பைங்கமலம் என்றால் விளங்கக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் பைந்தமிழ் என்றதுமே பை என்ற சொல்லின் பொருள் விளங்கி விடுகின்றது அல்லவா.)

ஆண்டாளின் திருப்பாவையின் முப்பது பாக்களையும் உளமும் உருகிப் பாடுவார்களுக்கு கண்ணன் அருள் உறுதியாக உண்டு. மலையளவு உயர்ந்த இரண்டு தோள்களை உடையவரும் செம்மை பொருந்திய திருவிழிகள் திகழும் முகத்தை உடையவரும் அலைமகளை அணைமகளாகக் கொண்டவருமாகிய திருமாலின் திருவருளால் எங்கும் எப்பொழுதும் திருவருள் பெற்று இன்புறுவாய் எம்பாவாய்!

(திருப்பாவையின் முப்பது பாடல்களும் முடிந்தன. இந்தப் பாடல்களை உணர்வு கூடிப் பாடிப் பரவசமடைகின்றவர்களுக்கு மாலின் அருள் நிச்சயம் உண்டு என்று உறுதி செய்து, எல்லாரையும் பாவை நோன்பு என்னும் புனித வேள்வியில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறார் ஆண்டாள்.)

அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
13-01-2006, 05:52 AM
வாழி திருநாமம்

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்
நீதியால் நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும் புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு ஞூற்று நாற்பத்து முன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணியு கந்தருளிதாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!

இதுவரையில் திருப்பாவைப் பாடல்களுக்கு விளக்கம் சொல்லும் இந்தச் சீரிய பணியில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து உதவிய நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றி.

அன்புடன்,
கோ.இராகவன்

pradeepkt
13-01-2006, 02:18 PM
உங்கள் திருப்பணி என்றென்றும் நிலைக்கட்டும்
வாழ்த்துகள்

இளசு
16-01-2006, 07:05 PM
பாவை - இருபத்திரண்டு


அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாயோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்




கிங்கிணி வாய் செய்த தாமரைப்பூ...

என்ன சந்த இன்பம்..

(செங்கனி வாய் திறந்து செப்பிடுவாய் என்ற பழைய பாடல் சீர்காழி குரலில் கேட்டது நினைவாடலில்..)

ஒரு கண்ணில் அமுதம் , ஒரு கண்ணில் அமிலம்
வலது கண்ணாலே வன்முறை, இடது கண்ணாலே அஹிம்சை

என்ற இக்காலப் பாட்டுகளின் முன்னோடியாய்
ஆண்டாளின் அக்கால 'கண்ணனின் கண்கள்' வர்ணனை.


நன்றிகள் இராகவன்..

kavitha
19-01-2006, 10:14 AM
சீரிய முறையில் தவறாமல் தந்தமைக்கு மிக்க நன்றி!

இனி இலக்கியத்தில் இறைவா... தொடருமல்லவா?

gragavan
19-01-2006, 11:48 AM
சீரிய முறையில் தவறாமல் தந்தமைக்கு மிக்க நன்றி!

இனி இலக்கியத்தில் இறைவா... தொடருமல்லவா?நிச்சயமாக. அடுத்த வாரத்திலிருந்து தொடரும். ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் தானே.

இளசு
29-01-2006, 10:52 PM
பாவை - இருபத்து மூன்று


மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலே நீ பூவைப் பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்




நரசிம்மம் ஆனவனை
சிங்காதனம் ஆக்கிரமிப்பவனை..

சிங்கம் என ஆண்டாள் வர்ணித்தது எத்தனைப் பொருத்தம்...


சிங்கத்துக்கு சோம்பல் உண்டு..
ஆனால் சோம்பித்திரிவதெல்லாம் சிங்கம் அன்று...


(அடுத்த மார்கழிக்குள்ளாவது முப்பது பாக்களையும் முழுதாய்ப் படித்துவிட எண்ணம்..)


வாழ்த்துகள் இராகவன்..

aren
30-01-2006, 02:24 AM
இருபத்துமூன்று வந்திட்டீங்களே. இன்னும் ஒரு எத்து எத்தினா 30ஐயும் முடிச்சிடமால்லே?

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்று நீங்கதானே சொன்னீங்க.

இளசு அவர்களை வம்புக்கு இழுக்கும்
ஆரென்

aren
30-01-2006, 02:25 AM
உங்கள் திருப்பணி என்றென்றும் நிலைக்கட்டும்
வாழ்த்துகள்

ரொம்ப சத்தமா சொல்லாதீங்க பிரதீப்.

ஏற்கனவே மயிலாருடன் சுற்றுகிறார். அப்புறம் கோயிலிலேயே போய் உட்கார்ந்துக்கப் போகிறார். அப்புறம் அண்ணிக்கு யார் பதில் சொல்றது.

gragavan
30-01-2006, 05:33 AM
ரொம்ப சத்தமா சொல்லாதீங்க பிரதீப்.

ஏற்கனவே மயிலாருடன் சுற்றுகிறார். அப்புறம் கோயிலிலேயே போய் உட்கார்ந்துக்கப் போகிறார். அப்புறம் அண்ணிக்கு யார் பதில் சொல்றது.உள்ளக் கோயிலிலே கந்தன் அமர்ந்திருக்கையில் மற்ற கோயில்கள் எல்லாம் கள்ளக் கோயில்களே. ஹி ஹி. அண்ணியா.....யாரது? இதெல்லாம் மொதல்லயே சொல்றதில்லையா?

இளசு
03-02-2006, 05:43 AM
பாவை - இருபத்து நான்கு


அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்



கெடுப்பது என்பது கெட்டது பொதுவாய்
ஆமால் கெட்ட பகையை கெடுப்பது....
நல்லது.. தேவையானது..

கெட்டவை-
Tolerating them = Propogating them.

இதிகாசக்கதைகளின் ஆதாரமே கெட்டவை என அக்காலத்தில்
அறியப்பட்டவை அழிக்கப்படும், நிலைக்காது என்பதுதான்..


கொப்பை வீசி கனியுதிர்த்த கவிநயம் கண்டு
கல்வீசி கனி திருடிய காலங்கள் நினைவாடலில்..

ஆச்சா மரம் என்றால் என்ன?


அருந்தமிழ்ப்பணிக்கு நெகிழ்வான நன்றிகள் இராகவன்..

gragavan
03-02-2006, 05:52 AM
இளசு அண்ணா, ஆச்சா மரம் எப்படி இருக்கும் என்று நான் பார்த்ததில்லை. பலகைகள் செய்யப் பயன்படுத்துவார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

இளசு
24-02-2006, 06:24 AM
பாவை - இருபத்தைந்து


ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தம் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்




மீண்டும் கவியரசு இங்கிருந்து எடுத்துக்கையாண்ட பிரபல பல்லவி என் நினைவாடலில்....


திருத்தக்க - தக்க விளக்கம் இராகவன். அருமை.
ஸ்ரீ+நிவாஸ் - லட்சுமியின் விலாசம் அவன். திருத்தங்கியவன்.. திருத்தக்கவன்..


பாராட்டும் நன்றியும்..

இளசு
02-12-2006, 08:44 PM
பாவை - இருபத்தாறு


மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்


.

( உலகத்தையே பெருத்த ஒலியால் அதிர வைக்கும் பாஞ்ச சன்னியம் என்று பொருள் கொள்ள வேண்டும்.)

திருக்கோயில்களில் பயன்பட்ட இசைக்கருவிகளில் பறையும், சங்கமும், கொம்பும், எக்காளமும், செண்டையும் பயன்படுத்தப் பட்டிருப்பது தெரிய வரும். ஆனால் இன்றைக்குத் தமிழகக் கோயில்களில் இவையனைத்துமே பயன்படுத்தப் படுவதில்லை என்றே தெரிகின்றது. )



அன்புடன்,
கோ.இராகவன்


கார்த்திகை தீபம் வரும்போதுதான் அடுத்த மார்கழி வரப்போவது உறைக்கிறது ராகவன்..

ஆண்டாள் வேண்டியவை எவை என எண்ணும்போது -
பலர் பக்தி வெறும் பொருள் வேண்டி மட்டும்
என எண்ணி மருக வைக்கிறது..


அதிர்வுகள்.. வைப்ரேஷன் - இன்றைய முக்கியச் சொல்...

கோயில்களில் பயன்படுத்த எலக்ட்ரானிக் மேளங்கள் பார்த்தேன்
சென்னை ஸ்ருதி இசைக்கடையில்...

நிஜ...வாத்தியமில்லாமல் .. நேரில் வாசிப்பவருமில்லாமல்...
சுவிட்ச் போட்டால் அதுபாட்டுக்கு சப்தம் தந்துகொண்டே..

அடுத்து என்ன - ? ஹோலோகிராமில் தரிசனம்? விர்ச்சுவல் பூஜை?

எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?

இளசு
03-12-2006, 12:25 PM
பாவை - இருபத்தேழு


கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தனைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
முட நெய் பெய்த் முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்


இகசுகம் இருக்கட்டும்...
இதை வாய்விட்டு வாசிக்க வரும்
மொழி சுகம் இருக்கே..
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே


ஆஹா...காவியங்கள் வாசித்த பின்னரே
கவிதை எழுத வர வேண்டும் எனத் தோணுது ராகவன்..

நாவினிக்க வைக்கும் ஆண்டாளுக்கு இனிப்பான நன்றி..

pradeepkt
04-12-2006, 04:32 AM
ஆமாய்யா ராகவா!
அடுத்த மார்கழி வரப் போவுது. உங்க சீஸன் ஸ்பெஷல் என்ன?

இளசு
04-12-2006, 09:36 PM
பாவை - இருபத்தெட்டு


கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவு ஒன்றுமில்லாத ஆய்க் குலத்து உந்தனைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றுமில்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

அன்புடன்,
கோ.இராகவன்

சரணாகதியின் ஆரம்பம் - தன் அறியாமையை ஒப்புவதுதான்..


குறையில்லாததையே
குறையாய்க் கொண்டவனிடம்
குறையை ஒப்புக்கொள்வதில்
குறையொன்றுமில்லை!

இளசு
05-12-2006, 11:15 PM
பாவை - இருபத்தொன்பது

சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

அப்படி எதுவும் ஆசைகள் துளிர்த்தாலும் அவைகளையும் உன் மீதுள்ள அன்பாக மாற்றுவாய் ...

அன்புடன்,
கோ.இராகவன்


பலவீனங்கள் நிறைந்த மனித மனம்
நல்ல நிலையில் இருக்கும்போதே
எதிர்காலத்துக்கு உயில் எழுதி உரிய இடத்தில்
ஒப்படைக்கும் செயல் இது...

நிதானம் தவற வாய்ப்பிருக்கும்போது
நிவர்த்தி செய்யும் வழியை
நிதானம் இருக்கும்போதே ஊர்ஜிதப்படுத்தும்
உஷார் செயல் இது..

அருமை ..ஆண்டாளின் எண்ணவோட்டம்..

நன்றி ராகவன்..

இளசு
06-12-2006, 08:46 PM
பாவை - முப்பது


வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்



அன்புடன்,
கோ.இராகவன்

பாற்கடல் = வங்கக்கடல்?

பைங்கமலத்தின் பொருளை பைந்தமிழில் விளக்கிய பாங்குக்கு
பாராட்டுகள் ராகவன்!

இளசு
09-12-2006, 10:14 PM
வாழி திருநாமம்


கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்
நீதியால் நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும் புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு ஞூற்று நாற்பத்து முன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணியு கந்தருளிதாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!

இதுவரையில் திருப்பாவைப் பாடல்களுக்கு விளக்கம் சொல்லும் இந்தச் சீரிய பணியில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து உதவிய நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றி.

அன்புடன்,
கோ.இராகவன்


அன்பு ராகவன்

எடுத்த பணியை செவ்வனே நிறைவு செய்த உங்கள் ஆற்றலுக்கு வந்தனங்கள்.

காலம் தாழ்த்தியாவது என் கடமையை ஆற்றியதில் எனக்கும் திருப்தி.

உங்கள் எழுத்துகள் தொடரட்டும்.. படிக்கும் எங்கள் மனம் மலரட்டும்..
இன்னும்..இன்னும்..... வாழ்த்துகள்..நன்றி!

gragavan
10-12-2006, 08:25 AM
இளசு அண்ணா, பிரதீப், உங்கள் ஆவல் புரிகிறது. இந்த மார்கழியில் சிறப்பாக ஒன்றும் எழுதவில்லை. வேலைப்பளுவும் ஒரு காரணம். விரைவில் ஏதெனும் எழுத வேண்டும். முருகனருள் இருந்தால் அனைத்தும் நடக்கும்.

தேவிப்ரியா
19-08-2007, 11:19 AM
நான் இங்கே குறிப்பிட்ட தொடுப்பினைச் சொடுக்குவதன் மூலம் நீங்கள் MP-3 வடிவிலுள்ள திருப்பாவையைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://forumhub.mayyam.com/tp

தேவப்பிரியா.

ஓவியன்
20-08-2007, 02:14 AM
தேவப்பிரியா இங்கே தமிழிலேயே தட்டச்சு செய்ய வேண்டும் இதனை நான் உங்களுக்கு இரண்டு முறை கூறி இருக்கின்றேன்.......

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11578&page=4

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10292&page=2

தொடர்ந்து ஆக்கிலத்திலேயே பதிக்கிறீர்கள்....

மீண்டும் சொல்கிறேன், தேவப்பிரியா நான் மேற்கூறிய திரிகளில் கொடுத்துள்ள தொடுப்புக்கள் மூலம் தமிழில் தட்டச்சு செய்வதை அறிந்து தமிழிலேயே தட்டச்சு செய்யுங்கள்!.

ஓவியா
02-09-2007, 09:19 PM
என்றோ ஒரு நாள் நான் மிகவும் ரசித்து படித்த பதிவு இது.

(தாமத பின்னூட்டத்திற்க்கு மன்னிக்கவும்)

விரிவுரைகள் பிரமாதம் மக்களே.

நன்றி ராகவன்.
நன்றி இளசு.