PDA

View Full Version : தூத்துக்குடியில் ஒரு நாள்



gragavan
13-12-2005, 07:55 AM
தூத்துக்குடியில் ஒரு நாள்

"என்னடா பாட்டு நினைவிருக்கா? ஒருவாட்டி பாடிப் பாத்துக்க!" அக்கறையோடு அத்தை சொன்னார்கள். வாய் விட்டு ஒருமுறை பாடிப் பார்த்துக் கொண்டேன். மேடையில் மறந்து போனால்?

தூத்துக்குடியை நன்றாக அறிந்தவர்கள் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேநிலைப்பள்ளியை அறிவார்கள். அதில் ஆண்டு விழா நடக்கும். ஆண்டு தோறுந்தான். அந்த ஆண்டு விழாவில் புதுக்கிராமத்தில் இருக்கும் மகளிர் சங்கத்தவரும் பங்கு கொள்வார்கள். நான் சொல்வது கிட்டத்தட்ட இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னால்.

இப்பொழுது சொல்லும் விஷயங்கள் தூத்துக்குடியை நன்றாக அறிந்தவர்களுக்குப் புரியும். புதுக்கிராமத்தில் இருக்கும் பழைய பெரிய வீடுகள் மூன்று. ஒன்று பல் டாக்டர் ஸ்டீபன் அவர்களின் வீடு. இப்பொழுது அவரில்லை. தந்தையின் இடத்தில் குறைவின்றி மகன் செய்து வருகிறார். இருவருமே மிகக் கனிவானவர்கள். இன்னொன்று அக்சார் வீடு என்பார்கள். அக்சார் பெயிண்ட் வியாபாரம் செய்தவர்கள் என்று கேள்விப்பட்டதைத் தவிர எனக்கு வேறொன்றும் தெரியாது. மற்றொரு வீடு மிகப் பெரியது. தமயந்தி அம்மா வீடு என்பார்கள். எங்களுக்கெல்லாம் அது சங்கத்தம்மா வீடு.

அவர்கள் வீடே ஒரு சிறிய கோட்டை போல இருக்கும். காம்பவுண்டுக்குள் பலமுறை சென்றிருக்கின்றேன். மிகப் பெரிய கூண்டில் முயல்களும் ஆமைகளும் இருக்கும். வாட்ச் மேனிடம் உத்தரவு வாங்கி கூண்டுக்குள் சென்று முயல்களோடும் ஆமைகளோடும் விளையாடியிருக்கிறோம். இந்த மூன்று வீடுகளுக்கும் அருகில் இருந்த சிறிய வீடுகளில் ஒன்று நாங்கள் இருந்த வீடு. என்னுடைய இரண்டாம் கருவறை என்றே சொல்வேன். எங்கள் வீட்டுக்கு நேரெதிராக ஒரு சாலை செல்லும். அந்தச் சாலையில்தான் ஏ.எஸ்.கே.ஆர் திருமண மண்டபம் இருக்கிறது. அங்கு எனக்கு விவரம் தெரியாத வயதில் சீர்காழி கோவிந்தராஜன், நாட்டியத் தாரகை சொர்ணமுகி ஆகியோர்கள் நிகழ்ச்சி நடத்தியிருக்கின்றார்கள்.

தமயந்தியம்மாவின் சங்கம் அந்தப் பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கு வகிக்கும். என்னுடைய அத்தையும் சனிக்கிழமை தோறும் கூடிடும் சங்கத்தில் ஒரு உறுப்பினர். அதனால் எனக்கும் அந்தப் பள்ளி ஆண்டு விழாவில் பாட வாய்ப்பு. அதற்குதான் பாடல் ஒத்திகை. எனது பக்கத்து வீட்டு நண்பன் தேன்ராஜ். அவனும் சொல்வதற்கு ஒரு பொன்மொழியைப் பயிற்சி செய்தான். ராமகிருஷ்ணரின் பொன்மொழி என்று நினைக்கிறேன். இதையெல்லாம் சொன்னால் சின்னதாகப் பரிசு கொடுப்பார்கள். அதிலொரு சந்தோஷம்.

சரி. நமது கதைக்கு வரலாம். பாடலை மனதுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டு இருந்தேன். ஆண்டு விழா தொடங்கியது. முதலில் யார் யாரோ பேசினார்கள். நாங்கள் எல்லாரும் பவுடர் பூசிக் கொண்டும், லிப்ஸ்டிக் பூசிக் கொண்டும் மேடைக்குப் பக்கத்திலிருந்த அறையில் இருந்தோம். பலரும் பலவித அலங்காரத்தில். மான் போல. மயில் போல. போலீஸ் போல. சாமியார் போல. நாடகத்திற்கும் ஆட்டத்திற்கும்.

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நடுவில் உண்டாகும் இடைவெளியில் நாங்கள் ஒவ்வொருவராக சென்று எங்கள் நிகழ்ச்சியை அரங்கேற்ற வேண்டும். அதை ஒரு டீச்சர் நிரல் படுத்திக் கொண்டிருந்தார். ஒரு சில நிகச்சிகளுக்குப் பின்னால் தேன்ராஜை அழைத்தார் அந்த டீச்சர். மேடையின் நடுவின் நின்றான். மைக் அவனது உயரத்திற்கு இறக்கப்பட்டது. சொல்ல வந்த பொன்மொழியைச் சொன்னான். எல்லாரும் கை தட்டினார்கள். நானும்தான்.

அடுத்து சில நிகழ்ச்சிகள். எனக்கான இடைவெளி வந்தது. டீச்சர் என்னை அழைத்தார். மேடையில் திரை போட்டிருந்தது. நான் போனதும் திறப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் டீச்சர் என்னை மேடையின் ஓரத்திலேயே நிறுத்தினார். அங்கு ஒரு மைக் இருந்தது. அதன் வழியாகத்தான் டீச்சர் நாடகத்திற்கு நடுவில் வசனங்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த மைக்கில் நிற்க வைத்தார்கள். "பாடு ராகவன்" என்றார்கள்.

"என்ன பாட வேண்டுமா? மேடைக்கு நான் போக வேண்டாமா? ஏன் இங்கே பாட வேண்டும்? திரையைத் திறக்க மாட்டார்களா?" உள்ளம் தவித்தது. சட்டென்று ஒரு அவமான உணர்ச்சி வந்து பிஞ்சு மனதில் நஞ்சு போல விழுந்தது. எப்படி அழாமல் இருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனாலும் டீச்சரிடம் என்ன சொல்வது? மைக்கில் பாடினேன்.

"ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு
மண்டலத்தைக் காட்டிய பின் ஓய்வெடுத்துத் தூங்குகிறான் தாலேலோ"

ஆயர்பாடியில் ஆனந்தமாகத் துயிலப் பாடும் பாடலில் எனது சோகந்தான் தெரிந்தது. கடனுக்குப் பாடினேன். கொஞ்சப் பட வேண்டியது மிஞ்சப் பட்டதால் தஞ்சப் படத் தவித்தது நெஞ்சப் படம். ஆயிரம் கேள்விகள் அந்த வயதில். சீவிச் சிங்காரித்து மூக்கறுத்த நிலை என்பார்கள். அந்த வயதில் அது ரொம்ப வலித்தது. நிகழ்ச்சி முடிந்து கொடுத்த சிறிய எவர்சில்வர் கோப்பையை விட உள்ளக் கோப்பை கனமாக இருந்தது.

அந்த டீச்சர் ஏனப்படிச் செய்தார்கள் என்று எனக்கு சத்தியமாகத் தெரியாது. ஆனால் அந்த நிகழ்வு ஆழ்மனதில் வடுவாக நிலைத்து இன்று பதிவு போடுகின்ற வரைக்கும் வந்திருக்கிறது. இன்னும் எவ்வளவு வருமோ! சத்தியமாகச் சொல்கிறேன். அதற்குப் பிறகு நான் அந்தப் பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கு பெற்றதே இல்லை. என்னுடைய அத்தையும் என்னை பங்கு பெறச் சொல்லிக் கேட்டதுமில்லை.

அன்புடன்,
கோ.இராகவன்

pradeepkt
13-12-2005, 08:09 AM
அடடா...
எப்படி ஒரு வடு இருந்தால் நீங்கள் அதை இத்தனை நாள் மனதில் வைத்திருந்திருப்பீர்கள்?
எனக்கும் சிலப் பல நிகழ்வுகள் இன்றும் கோடாக மனதில் நிற்கின்றன. இந்தப் பதிவு போடுறதுக்குத்தான் அது நடந்திருக்குன்னு நெனைச்சிக்கிருங்க

gragavan
13-12-2005, 08:21 AM
உண்மைதான் பிரதீப். இந்த நிகழ்வுகள் ஒரு எழுத்தனாக என்னைப் புடம் போடுகின்றன என்றால் மிகையில்லை. பட்டதை எழுத்தில் காட்டும் வித்தையைக் கற்றுக் கொடுக்கின்ற பள்ளியாகத்தான் இந்த மாதிரி நிகழ்வுகளைப் பார்க்கின்றேன் நான்.

mukilan
14-12-2005, 05:12 AM
எனக்கு எதுவுமே படிக்க முடியவில்லை. பிரதீப் மற்றும் ராகவன் உங்களின் விமர்சனங்கள் தவிர. எனக்கு மட்டும் இப்பிரச்னையா இல்லை அனைவருக்கும் இப்படித்தானா???

பென்ஸ்
14-12-2005, 05:41 AM
சீவிச் சிங்காரித்து மூக்கறுத்த நிலை என்பார்கள்.

வலிகளை அப்படியே உணரவைக்கும் ஒரு அருமையான பதிவு....

ம்ம்ம்ம்.. எனக்கும் தூத்துகுடியில் என்னை நானே நினைத்து வெட்கபட்டு சிரிக்கும் நினைவுகள் அதிகம்...:mad: :mad: :mad:

gragavan
14-12-2005, 05:47 AM
இப்பொழுது தெரிகின்றதா முகிலன்?

gragavan
14-12-2005, 05:47 AM
வலிகளை அப்படியே உணரவைக்கும் ஒரு அருமையான பதிவு....

ம்ம்ம்ம்.. எனக்கும் தூத்துகுடியில் என்னை நானே நினைத்து வெட்கபட்டு சிரிக்கும் நினைவுகள் அதிகம்...:mad: :mad: :mad:அட அதெல்லாம் போடுறது......நாங்களும் படிச்சிக்கிருவம்ல........

pradeepkt
14-12-2005, 05:51 AM
அவருதான் வெக்கப் படுவம்கிறாருல்லா..
பென்ஸு,
தனிமடல்ல தட்டி விடுங்கப்பு உங்களுக்கு வெக்கமாயிருந்தா... நானே உங்க சார்பா இங்க பதிக்கிறேன். :D

gragavan
14-12-2005, 05:53 AM
அவருதான் வெக்கப் படுவம்கிறாருல்லா..
பென்ஸு,
தனிமடல்ல தட்டி விடுங்கப்பு உங்களுக்கு வெக்கமாயிருந்தா... நானே உங்க சார்பா இங்க பதிக்கிறேன். :Dசரி...சரி....அப்ப தனிமடல்...தனிமடல்....

இளசு
14-12-2005, 06:27 AM
அன்பு ராகவன்...

முதலில் கவர்ந்தது எழுத்து..

நெஞ்சம், கொஞ்சல், விஞ்சலைவிட,
வீட்டை இரண்டாம் கருவறை என அழைத்த விதம்..
சட்டென நிமிரவைத்தது.. அட.....என!


பின்னர் கவர்ந்தது - எழுத்தின் நேர்மை... அதில் தோய்ந்து இப்போது வெளிப்பட்ட வலி..


உதட்டுச்சாயம் அன்றே கரைந்து...
மனக்காயம் இன்றும் உறைந்து..

காலமருத்துவன் கைவண்ணத்தால்
எல்லாக்காயங்களும் பின்னர் தழும்பு..


---------------------------

பாரதி,பரம்ஸ்,ராகவன் என பழைய அனுபவங்களை நேர்த்தியாய் வடிக்கும் வித்தகர்கள் வரிசை....

இந்த மன்றத்தில் ஓடிவரும் - தமிழ்த்
தென்றலில் திளைக்கின்றேன்...

நண்பர்களுக்கு நன்றியுடன்..

mukilan
14-12-2005, 07:03 AM
இப்பொழுது தெரிகின்றதா முகிலன்?
நன்றாகத் தெரிகிறது. நீங்கள் சிறு வயதில் பட்ட வேதனையையும் உணர முடிகிறது. அதனால் என்ன? "ஞாயிற்றைக் கை மறைப்பார் இல்" என்பதற்கேற்ப இன்று உலகம் முழுக்கத் தமிழ் மன்றத்தில் சொல்லச் சொல்ல இனிக்க எழுதுகிறீர்களே!

gragavan
14-12-2005, 09:43 AM
அன்பு ராகவன்...

முதலில் கவர்ந்தது எழுத்து..

நெஞ்சம், கொஞ்சல், விஞ்சலைவிட,
வீட்டை இரண்டாம் கருவறை என அழைத்த விதம்..
சட்டென நிமிரவைத்தது.. அட.....என!


பின்னர் கவர்ந்தது - எழுத்தின் நேர்மை... அதில் தோய்ந்து இப்போது வெளிப்பட்ட வலி..


உதட்டுச்சாயம் அன்றே கரைந்து...
மனக்காயம் இன்றும் உறைந்து..

காலமருத்துவன் கைவண்ணத்தால்
எல்லாக்காயங்களும் பின்னர் தழும்பு..


---------------------------

பாரதி,பரம்ஸ்,ராகவன் என பழைய அனுபவங்களை நேர்த்தியாய் வடிக்கும் வித்தகர்கள் வரிசை....

இந்த மன்றத்தில் ஓடிவரும் - தமிழ்த்
தென்றலில் திளைக்கின்றேன்...

நண்பர்களுக்கு நன்றியுடன்..நன்றி இளசு அண்ணா....அந்த வீட்டு நினைவுகள் எப்பொழுதும் என்னோடு நிற்கும். நானும் பல வீடுகளில் வசித்திருக்கின்றேன். ஆனால் எனக்கு நினைவு தெரிந்த முதல் வீடு அதுதான். அந்த வீட்டின் ஒவ்வொரு முக்கும் ஒரு கதையை முக்கும். இன்றைக்கு அந்த வீடு நிறைய மாறியிருக்கின்றது. வேறு யாரோ இருக்கின்றார்கள். வாசலைக் கூட இடப்பக்கம் இருந்ததை மாற்றி வலப்பக்கம் வைத்திருக்கின்றார்கள். ஆனாலும் அதைக் கடக்கையில் ஒரு பாசம் பட்டென்று பூக்கும்.

உங்கள் பாராட்டும் ஊக்கங்களும் எங்களை மென்மேலும் எழுத வைக்கின்றன. நான் இன்னும் நிறையவே எழுதலாம். ஆனால் எழுதப் போவதில்லை. ஏனென்றால் ஒரு கற்பனை நாவல் எழுதப் போகின்றேன். என்னுடைய கதை அல்ல. ஆனால் ஒரு கற்பனைச் சிறுவன் கதை. அந்தக் கதைக்கான நிகழ்ச்சிகளின் கோர்வைக்கு என்னுடைய அனுபவங்களை இட்டு நிரப்ப வேண்டும். ஆகையால் மிகவும் தேர்ந்தெடுத்தே எழுதுகின்றேன்.

gragavan
14-12-2005, 09:44 AM
நன்றாகத் தெரிகிறது. நீங்கள் சிறு வயதில் பட்ட வேதனையையும் உணர முடிகிறது. அதனால் என்ன? "ஞாயிற்றைக் கை மறைப்பார் இல்" என்பதற்கேற்ப இன்று உலகம் முழுக்கத் தமிழ் மன்றத்தில் சொல்லச் சொல்ல இனிக்க எழுதுகிறீர்களே!நன்றி முகிலன். ஞாயிறெல்லாம்....ஹி ஹி கேக்க சந்தோசமாத்தான் இருக்கு. ஊர்க்காரங்க விட்டுத் தருவீங்களாக்கும்!

இளசு
15-12-2005, 06:51 AM
நான் இன்னும் நிறையவே எழுதலாம். ஆனால் எழுதப் போவதில்லை. ஏனென்றால் ஒரு கற்பனை நாவல் எழுதப் போகின்றேன். என்னுடைய கதை அல்ல. ஆனால் ஒரு கற்பனைச் சிறுவன் கதை. அந்தக் கதைக்கான நிகழ்ச்சிகளின் கோர்வைக்கு என்னுடைய அனுபவங்களை இட்டு நிரப்ப வேண்டும். ஆகையால் மிகவும் தேர்ந்தெடுத்தே எழுதுகின்றேன்.

என் பூரித்த முன்வாழ்த்துகள் அன்பு ராகவன்....

பாரதி
15-12-2005, 02:08 PM
வலிக்கிறது இராகவன்.

xathish
03-06-2006, 12:17 PM
நீங்கள் தூத்துக்குடியைச் சேர்ந்தவரா?

ஓவியா
03-06-2006, 04:37 PM
வலிகளை அப்படியே உணரவைக்கும் ஒரு அருமையான பதிவு

அந்த பிஞ்சு மனதை நினக்கும் பொழுது...மனம் கனக்கிறது

mukilan
04-06-2006, 03:22 AM
நீங்கள் தூத்துக்குடியைச் சேர்ந்தவரா?
அவரு ஆயிரம் ஊர் கண்ட அபூர்வ ராகமணி! நீங்க அந்த ஊராப்பூ?, நானும் அங்கனக்குள்ளதான்.:D

gragavan
04-06-2006, 05:55 PM
நீங்கள் தூத்துக்குடியைச் சேர்ந்தவரா?ஆமா சதீஷ். நான் பொறந்து கொஞ்ச நாள் வளந்தது தூத்துக்குடியிலதான். முகிலனும் அங்கனக்குள்ளதான். நீங்க எந்தூரு?

ஓவியா
04-06-2006, 08:16 PM
அவரு ஆயிரம் ஊர் கண்ட அபூர்வ ராகமணி! .:D


:D :D :D :D

மயூ
05-06-2006, 04:58 AM
அருமை இராகவன், மெல்ல எனது இளமைக் கால நினைவுகளை மீட்டு விட்டீர்கள். நானும் சரியான வெட்கப்படும் போர்வழி... எதற்கும் முன்னுக்கும் போவதில்லை.... அருனை அதைவிட என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஏதோ எனக்கும் இதயத்தில் பாரமாக உள்ளது. வாழ்க....

தாமரை
05-06-2006, 05:13 AM
எனது முதல் மேடை அனுபவம் நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது... எங்கள் பள்ளியில் மாணவர் மன்றம் உண்டு. அதன் சார்பாக மாதம் ஒரு முறை பேச்சுப்போட்டி நடைபெறும். நான் சேலம் வந்த புதிது. இப்பள்ளிக்கும் புதிது. எனது ஆசிரியை என்னை நான் சென்ற சுற்றுலா என்ற தலைப்பில் பேச தேர்ந்தெடுத்து விட்டார். 4 ஆம் வகுப்புகளில் 8 பிரிவுகள்.. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொருவர் பேசுவர். 5 நிமிடம் தான் நேரம். வெளியுலகத்தை அறியா நான் என் மூத்த அண்ணனிடம் கேட்க ஏற்காடு பற்றி எழுதிக் கொடுத்தார்.. பேசப் பயமென்றாலும்.. கண்ணை மூடவில்லை.. யாரையும் பார்க்கவில்லை. எதிரே இருந்த என் அண்ணனை (என் சக வகுப்பில் படிப்பவன்) மட்டுமே பார்த்து (வீட்டில் நாடகங்கள் நடித்த அனுபவம் கை கொடுக்க)
வசன மழை பொழிய இரண்டாமிடம் கிடைத்தது..

பின் அதே வருடம் 20 அம்ச திட்டத்தை விளக்கி ஒரு நாடகம் எழுதிய என் ஆசிரியை அதில் எனக்கு ஜோடியுடன் கதாநாயகன் ரோல் கொடுக்க....
.....

என்ன யோசிக்கிறீர்கள்??

என்னைத் தெரியுமல்லவா?


....

ஆம் நீங்கள் எதிர்பார்த்ததுதான்...

..

...
...
...

....
...
...
...
...
...

இந்திராகாந்தி தேர்தலில் தோற்றுப் போனார்...