PDA

View Full Version : உடற்கூறியல் (அ.மை.15)



இளசு
13-12-2005, 12:24 AM
உடற்கூறியல்

ஆண்ட்ரியஸ் வெஸாலியஸ் (1514 -64)


அறிவியல் மைல்கற்கள் -15

14-ம் பாகம் - திருத்தி எழுதியவர் இங்கே:

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=135650#post135650


-------------------------------------------------------------

உள்ளம் என்பது இதயம்,
எண்ணங்கள் உதயமாகும் இடம் இதயம்,
மூளை என்பது தேவையில்லாத சதைப்பிண்டம்,
அதில் பட்டாணி போல் இருக்கும் பினியல் சுரப்பியே ஆத்மாவின் இருப்பிடம்...

இவையெல்லாம் முன்னோர்கள் சொல்லிவைத்த பாடங்கள்.
பகுத்தறியாமல், 'மனதில், பட்டதைச் சொல்லி-
சொல்லியவர்கள் சமூகத்தில் மரியாதைக்குரியவர்கள் என்பதாலேயே
அந்தக் கருத்துகளை மற்றவர் வழிபட்டு -
புரையோடிப்போன பொய்யான பழங்கதைகள்....


மறுமலர்ச்சி காலம் இவ்வகைப் பொய்வேர்களை 'ஏன் எதற்கு எப்படி?'
என்ற களைவெட்டி, கடப்பாரைக் கேள்விகளால் புரட்டிப்போட்ட காலம்.
அறிவுத்தேடலால் ஆன்மீகப்போர்வை மூடநம்பிக்கைப் பொய்த்தகவல்களை
இனம்பிரித்த பொற்காலம்.


இதில் உடற்கூறியலில் மிகப்பெரிய சாதனை படைத்தவர் வெஸாலியஸ்.
ப்ரஸ்ல்ஸில் பிறந்தார். அரை நூற்றாண்டே வாழ்ந்தார்.
ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும் அறிவுக்கொடை தந்தார்.


பெல்ஜியத்திலும், பின்னர் பாரீசிலும் மருத்துவம் பயின்ற வெஸாலியஸ்,
இத்தாலியின் படுவா பல்கலையில் 23ம் வயதில் பட்டம் பெற்றார்.
பட்டம் பெற்ற பல்கலையிலேயே உடற்கூறியல் (அனாடமி) பேராசிரியராக
பணியேற்றார்.


சீக்கிரம் மடிந்துவிடுவோம் என்றுதானோ என்னவோ சில அறிவுச்சுடர்கள்
இளமையிலேயே எத்தனை சுடராய் ஒளிர்ந்து தீர்ந்துவிடுகின்றன..
நம் ராமானுஜம், பாரதி, பட்டுக்கோட்டை போல.

மனித உடல்களை அறுத்துப் பயிற்றுவிக்கும் 'வேலையை' கையால் தொடாமல்
கடைநிலை ஊழியர்வசம் விடுவதே அக்காலத்தின் ஆசிரியர் வழக்கம்.
ஆனால், புரட்சி மருத்துவர் வெஸாலியஸ் பதவி 'கௌரவத்தை' கைகழுவி
தாமே செய்து படிப்பித்து தம் கைகளை அழுக்காக்கினார்.
மாணவர்கள் அறிவு வெளிச்சமானது.


அவருக்கு 25 வயதாகும்போது இத்தாலி எங்கும் அவர் புகழ் பரவி நின்றது.
மரணதண்டனையில் மரித்தவர்களின் உடல்களை அரசாங்கம் அவர்
கல்விப்பணிக்காக அளித்து உதவியது.


30 வயதுக்குள் தம் ஊக்க உழைப்பால் கற்றவற்றைத் தொகுத்து
ஏழு தொகுதிகள் அடங்கிய அறிவுப்புதையலை,
'மனித உடலின் அமைப்பைப் பற்றி' என்ற மகாநூலாக வெளியிட்டார்.
முன்னோர்கள் கேலன் போன்றார் சொன்ன சில பிழைச்செய்திகளை
சரிப்படுத்தியவர் வெஸாலியஸ். - எடுத்துக்காட்டாக -

தாடை எலும்பு இரண்டல்ல - லாடம் போல வளைந்த ஒரு எலும்புதான்.
பித்தநாளம் திறப்பது இரைப்பையில் அல்ல, அதைத்தாண்டிய சிறுகுடலின் துவக்கத்தில்.


தவறுகளை களைந்ததால் மட்டும் அவர் சாதனையாளர் அல்லர்-
தத்துவம், மெய்ஞான நம்பிக்கைகள் வேறு -
ஏன் எப்படி என்று கேட்டு அறிந்து தெளிதல் வேறு.
இரண்டையும் போட்டுக் குழப்பும் போலிகளை அடையாளம் காணுங்கள்
என அறிவியலாருக்கு புதிய பாதை காட்டிய புரட்சிச் சிந்தனையாளர் அவர்.

மூத்த மருத்துவர்கள் கைப்பட பணிசெய்து கற்பிக்கவேண்டும்.
அதைக் கண்டு மாணவர்கள் பின்னர் கைப்பட செய்துபார்த்து பழகவேண்டும்
என்ற கல்விக்கொள்கையைக் கடைப்பிடித்து பரப்பிய அறிஞர் அவர்.


தசை, நரம்பு, நாளம் என அச்சு அசலாக படம் வரைந்து பாடப்புத்தகம் தந்த
அவருக்கு புதுவை ஜிப்மரில் சிலையுடன் சதுக்கம் உண்டு.
நம் மன்றத்தில் அவருக்காய் இந்த மைல்கல் உண்டு.

gragavan
13-12-2005, 05:38 AM
இன்றைக்கு உடம்புக்குள் இருக்கின்றவைகளைப் பார்க்க நூறு கருவிகள் உண்டு. அன்றைய காலகட்டத்தில் இதையெல்லாம் கண்டுபிடிக்க எத்தனை பாடுபட்டிருப்பர் என்பதை நினைக்கையில் பிரமிப்பாக இருக்கின்றது.

நம்மூரிலும் உடலியலைத் தெரிந்து கொள்ள வைத்தியர்கள் யாருக்கும் தெரியாமல் இடுகாடு சென்று ஆராய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்.

பென்ஸ்
13-12-2005, 03:15 PM
சீக்கிரம் மடிந்துவிடுவோம் என்றுதானோ என்னவோ சில அறிவுச்சுடர்கள்
இளமையிலேயே எத்தனை சுடராய் ஒளிர்ந்து தீர்ந்துவிடுகின்றன..
நம் ராமானுஜம், பாரதி, பட்டுக்கோட்டை போல.


"எவரும் விளக்கை ஏற்றி மரைக்காலுக்குள் வைப்பதில்லை;
மாறக விளக்குதன்டின் மீதே வைப்பர்.
அப்போதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்".
மத்தேயு 5:15

மரைக்காலில் வைக்கபட்ட விளக்கு பாதுகாப்பானது...
காற்றினால் அனைக்க படுவதில்லை.. நெடும்காலம் ஒளி வீசும்,
அடுத்தவற்க்கு ஒளி வீசும் விளக்கு இருப்பது சிறிது காலமாக
இருந்தாலும், பலன்மிக்கது அல்லவா??




மூத்த மருத்துவர்கள் கைப்பட பணிசெய்து கற்பிக்கவேண்டும்.
அதைக் கண்டு மாணவர்கள் பின்னர் கைப்பட செய்துபார்த்து பழகவேண்டும்
என்ற கல்விக்கொள்கையைக் கடைப்பிடித்து பரப்பிய அறிஞர் அவர்.


இளசு அவர்களே... மருத்துவர்களுக்கு மட்டும் அல்ல இது எல்லா
துறையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்...
"சித்திரமும் கைப்பழக்கம்"....

பாரதி
15-12-2005, 01:01 PM
உடற்கூறியல் பற்றி கூறி ஆண்ட்ரியஸ் வெஸாலியஸ் குறித்து அறிவித்ததற்கு நன்றி அண்ணா. நமக்கு வரும் ஆச்சரியம் என்னவென்றால் இப்போது இருக்கும் நுண்ணிய கருவிகள் இன்றியே அவர்களால் எவ்விதம் துல்லியமாக கூற இயன்றது என்பதுதான். குறைந்த பட்சம் அப்படிப்பட்டவர்களின் பெயர்களை தெரிந்துகொண்டோம் என்ற திருப்தியாவது வருகிறது. நன்றி அண்ணா.

poo
16-12-2005, 06:15 AM
நன்றிகள் அண்ணா..

ஒவ்வொரு துறையிலும், ஏதேனும் தகவல்கள் தெரியவரும்போது, நெஞ்சம் கொஞ்சம் நிமிரச் செய்கிறது!!


ஜிப்மரில் சிலையை சிலையாய் பார்த்திருக்கிறேன்.. இனி மேதையாய் பார்க்கப் போகிறேன்!! (சிலைகளின் கீழே சிலை திறப்போரின் வரலாறினை மட்டும் எழுதும் செயல் என்று மாறும்??!)

அனாடமி மருத்துவர்கள் பெரும்பாலும் இறுக்கமானவர்களாக இருப்பது இயல்பா அண்ணா?!!

அண்ணா, இந்த பகுதியை இன்றுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.. நீங்கள் முன்னோடிகளைப்பற்றி எழுதியதை பின்னோக்கிப் படிக்கப் போகிறேன்!!

aren
16-12-2005, 08:54 AM
உடற்கூறியல்

ஆண்ட்ரியஸ் வெஸாலியஸ் (1514 -64)


அறிவியல் மைல்கற்கள் -15

14-ம் பாகம் - திருத்தி எழுதியவர் இங்கே:

தசை, நரம்பு, நாளம் என அச்சு அசலாக படம் வரைந்து பாடப்புத்தகம் தந்த
அவருக்கு புதுவை ஜிப்மரில் சிலையுடன் சதுக்கம் உண்டு.
நம் மன்றத்தில் அவருக்காய் இந்த மைல்கல் உண்டு.

இளசு அவர்களின் இன்னொரு மாணிக்கப்பதிப்பு. உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மன்றத்தின் மைல்கல்கள். ஒரு சிறந்த சாதனையாளரைப்பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பளித்த இளசு அவர்களுக்கு நன்றி.

நம் முன்னோர்கள் பல விஷயங்களை நமக்களித்து நன்மை செய்திருக்கிறார்கள். நாமும் ஏதாவது நமக்கு பின்னால் வரும் சந்ததியர்களுக்கு செய்யவேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உண்டாகிறது (ரொம்ப காலம் கழித்து வந்திருக்கிறதோ?).

தொடருங்கள் இளசு அவர்களே.

நன்றி வணக்கம்
ஆரென்

kavitha
19-12-2005, 08:53 AM
30 வயதிற்குள் 7 தொகுதி புத்தகத்தைத் தந்த செயல் முறை வீரர், உடற்கூறியலின் தந்தை வெஸாலியஸ் பற்றி இந்த மைல் கல்லில் தெரிந்துகொண்டோம். நன்றி அண்ணா.


நாமும் ஏதாவது நமக்கு பின்னால் வரும் சந்ததியர்களுக்கு செய்யவேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உண்டாகிறது (ரொம்ப காலம் கழித்து வந்திருக்கிறதோ?).


ஆரென் லேட்டா வந்தா கஷ்டம் இல்லை. லேட் ஆகப்போறப்ப வந்தாதான் கஷ்டம். நீங்களும் தாராளமாக வியாபாரம் பற்றி எங்களுக்கு ஒரு தொடர் தரலாம் அண்ணா. :)