PDA

View Full Version : அந்த பிஞ்சு முகம்



AJeevan
07-12-2005, 12:16 AM
அந்த பிஞ்சு முகம்

http://www.sla.purdue.edu/WAAW/Whitaker/images/onesadlostsm-m.jpg (http://www.sla.purdue.edu/WAAW/Whitaker/images/onesadlostsm-m.jpg)

மனச் சோர்வோடு வைத்தயசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் வெளிப்பகுதியில் அமர்ந்து
அவசர சிகிச்சைப் பிரிவு வாயிலை நோக்கியவாறு அமர்ந்து இருக்கிறேன்.

உள்ளேயும் வெளியேயுமிருந்து டாக்டர்களும், தாதிகளும் ,பணியாளார்களும், நோயாளிகளை பார்க்க வருவோரும் என் முன்னால் நடந்து போவதும் வருவதுமாக இருக்கிறார்கள்.

என் பார்வை மட்டும் வாயிலை நோக்கியதாக இருக்கிறது.

இரு குழந்தைகளும் ஒரு பெண்ணும் என் அருகால் நடந்து செல்கின்றனர்.

முன்னே போனவர்கள் அவசர சிகிச்சை பிரிவு விசாரிப்பு பகுதியில் ஒரு கணம் நிற்கிறார்கள்.

சொற்ப நேரம்தான் அது

அவர்களை ஓரு டாக்டர் அழைத்துக் கொண்டு முன்னே போகிறார்.
முன்னே போய்க் கொண்டிருந்தவர்களில் சுமார் 5-6 வயது மதிக்கத் தக்க மூத்த பெண் குழந்தை திடீரென அவர்களை விட்டுப் பிரிந்து நிற்கிறாள்.

தாயும் 4 வயது மதிக்கத் தக்க ஆண் குழந்தையும் மட்டும் அம்மாவை கட்டிப் பிடித்துக் கொண்டு நடப்பது தெரிகிறது.

அவர்களிலிருந்து பிரிந்த பெண் குழந்தை நான் இருக்கும் திசை நோக்கி வருகிறாள்.

அவள் முதுகில் ஒரு பை இருக்கிறது.

அதை மெதுவாக இறக்கிக் கொண்டே " வணக்கம். இங்கே உட்காரலாமா?" என்று ஜெர்மன் மொழியில் என்னிடம் கேட்கிறாள்.
"வணக்கம். உட்கார்" என்கிறேன்.

உட்கார்ந்தவள் பையிலிருந்து 'சினெல்கோ' குளிர்பான போத்தலை வெளியே எடுத்து பார்த்து விட்டு மீண்டும் பைக்குள் திணிக்கிறாள்.

பக்கத்து தானியங்கி மெசினில் எடுத்த காப்பியை கையில் வைத்து உறிஞ்சிய வண்ணம் அவளைப் பார்க்கிறேன்.

அவள் தாயும் தம்பியும் சென்ற திக்கை நோக்கிப் பார்க்கிறாள்.
ஏதாவது அருந்துகிறாயா? என்கிறேன்.

வேண்டாம் இது என் தம்பியுடையது என்று பையிலிருந்து சினெல்கோ குளிர்பான போத்தலை வெளியே எடுத்து என்னிடம் காட்டுகிறாள்.

உனக்கு வேண்டுமானால் இந்த மெசினில் எடு என்கிறேன்.

என்னிடம் காசில்லை. அம்மா வரட்டும் என்கிறாள்.

பரவாயில்லை. நீ எடு என்கிறேன்.

இங்கே இலவசமா எனக் கேள்வி எழுப்புகிறாள்.

இல்லை. நான் வாங்கித் தருகிறேன் என்கிறேன்.

அம்மா வரட்டும் என்கிறாள்.

அம்மா எங்கே போகிறாள் எனக் கேட்கிறேன்.

அப்பா செத்துட்டார். பார்க்கப் போறாங்க.

என் இதயம் நின்று துடிக்கிறது.

அந்தக் குழந்தையின் முகத்தில் அந்த வார்த்தையின் அர்த்தம் புரியவில்லை என்பது என்னை சாகடிக்கிறது.

சாவு என்பதைக் எப்படியோ, எங்கேயோ கேட்டு அச்சமடைந்திருக்கிறாள் என்பது மட்டும் எனக்குள் உறுதியாகிறது.

அதனால்தான் தாயோடு போகாமல் நின்று விட்டாள் .

அதை உணர்கிறேன்...........

அதற்கு மேல் அந்த பச்சிளம் பாலகனிடம் என்ன கேட்பது?

உனக்கு என்ன அருந்த வேண்டும்?

கோலா என்கிறாள்.

அதில் எடு என்கிறேன்.

தானியங்கி மெசினிடம் போனவள் மனதை மாற்றிக் கொண்டவளாக ஐஸ்டீ என்கிறாள்.

எடு என்று 5 பிராங் சில்லறையை அவளிடம் நீட்டுகிறேன்.

அவள் வாங்கி மெசினுக்குள் போட்டு விட்டு ஐஸ்டீயை எடுக்கிறாள்.
மிகுதி பணம் திரும்பி வருகிறது.

அதை எடுத்து என்னிடம் தந்து விட்டு நன்றி என்று கூறி ஐஸ்டீயை பருகுகிறாள்.

என் மனம் வார்த்தைகளின்றித் தவிக்கிறது.

தாயும் தம்பியும் டாக்டரும் எங்களை நோக்கி வருகிறார்கள்.

இவள் ஓடிச் சென்று என்னைக் காட்டி ஐஸ்டீ வாங்கித் தந்ததாக சொல்கிறாள்.

அந்த வேதனையிலும்
நன்றி சொன்னாயா என்று குழந்தையிடம் தாய் கேட்கிறாள்.

ஓ......சொல்லிட்டேனே என்று என்னைப் பார்க்கிறாள்.

டாக்டர் குழந்தை முன் மண்டியிட்டு அமர்ந்து
"வந்து அப்பாவை ஒரு முறை பார்" என்று சொல்கிறார்.

சிறியவன் அப்பா செத்துட்டார். நான் பாத்துட்டேன் நீயும் வந்து பார் என்கிறான்.

இரு குழந்தைகளையும் அணைத்து அழைத்துக் கொண்டு டாக்டர் செல்கிறார்.

தாய் மட்டும் தூரத்தே நிலத்தில் அமர்ந்து மெளனமாக கண்ணீர் வடிக்கிறாள்.

நான் எழுந்து சென்று " நான் இருக்கும் இடத்தில் உட்காருங்களேன்." என்கிறேன்.

இல்லை தனியாக அழ வேண்டும் என்கிறாள்.

அதற்கு மேல் நான் என்ன சொல்வது?

நான் திரும்பி வந்து அமர்கிறேன்.

அவள் உட்கார்ந்து கொண்டு அழுத வண்ணம் தனியே ஏதோ புலம்புவது தெரிகிறது.

இறந்து போன தந்தையை பார்த்து விட்டு குழந்தைகள் திரும்பி அம்மாவிடம் ஓடி வருகின்றன.

டாக்டர் தூரத்தே நின்று பார்த்து விட்டு நடக்கிறார்.

நான் திரும்பி வீடு வர நினைத்து எழுந்து போய் அவள் கைகளை பற்றி "என் அனுதாபங்கள்" என்கிறேன்.

அவள் நன்றி என்கிறாள்.

ஏதாவது தேவையா? என்கிறேன்.

இல்லை.
உறவினர்கள் வரும் வரை நிற்கிறேன் என்கிறாள்.

நான் வருகிறேன் என்று சொல்லி விட்டு குழந்தைகளின் கைகளை பற்றி விடை பெற்று நடக்கிறேன்.

பெண் குழந்தை என்னை நோக்கி பின்னால் ஓடி வருகிறாள்.

நான் நின்று திரும்புகிறேன்.

கோலாவுக்கு நன்றி என்று சொல்லி
நின்று என்னை நோக்குகிறாள்.

வார்த்தைகள் வர மறுக்கின்றன.

"சுயிஸ்" (மீண்டும் சந்திப்போம்) என்று சுவிஸ் மொழியில் சொல்லி விட்டு தாயை நோக்கி நடக்கிறாள்.

பனி கொட்டும் இரவின் தாக்கமே புரியாமல் என் காரை நோக்கி நடந்து வந்து அமர்கிறேன்.

வீடு வரை மட்டுமென்ன
இப்போதும் கூட தந்தையின் பிரிவையோ அதன் தாக்கத்தையோ உணர முடியாத அந்த பிஞ்சு முகம் என்னை வாட்டி வதைக்கிறது...................

pradeepkt
07-12-2005, 04:41 AM
நீங்கள் அங்கே உணர்ந்த தாக்கத்தைத் துளி மாற்றமில்லாமல் படிக்கும்போது நான் உணர்ந்தேன்.
என் வாழ்விலேயே இப்படிப் பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்ததால் என்னால் இதை இன்னும் வலிமையாக உணர முடிகிறது.
சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை

இளசு
07-12-2005, 06:13 AM
கலங்கிவிட்டேன்.

அஜீவன் ... உணர்வுகளை எழுத்தில் படம் படித்துவிட்டீர்கள்.

gragavan
07-12-2005, 07:37 AM
இதயத்தைத் தொடும் பதிவு. ஒருவர் வலிக்கும் பொழுதும் வலியை உணராதாராக இருப்பின் அது நமக்குப் புது வலியைக் கொடுக்கும். இந்தக் கதைச் சம்பவமும் அப்படித்தான்.

பரஞ்சோதி
07-12-2005, 08:02 AM
அஜீவன் அண்ணா, படிக்கும் போதே கண் கலங்குகிறது.

என் தந்தையார் இறந்த போதும் எனக்கு ஒன்றும் தெரியாது. வீட்டின் முன்னால் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தது நினைவில் இருக்குது.

poo
07-12-2005, 08:25 AM
படிக்கும்போதே நெஞ்சுக்குழி வறண்டுபோகிறது....

என்னையுமறியாமல் கண்ணீர் எட்டிப் பார்க்கிறதய்யா..

மதி
07-12-2005, 10:55 AM
அஜீவன்,
மனதை பிசைய செய்யும் கதை...

பாரதி
07-12-2005, 12:44 PM
எவ்வளவு சிறிய சம்பவம்?
எவ்வளவு நேர்த்தி?
எவ்வளவு வலி?
குழந்தையின் மனமே எப்போதும் இருந்தால் எப்படி இருக்கும்? எல்லாம் புரிந்ததால் வரும் வேதனைகள் எதுவுமே இருக்காது அல்லவா..?
நன்றி அஜீவன்.

AJeevan
07-12-2005, 05:31 PM
ஒருவனது இன்னலை பகிர்ந்து கொள்ளும் போது
அவர்களோடு நாமும் இணைந்து விடுகிறோம்.

அதற்கு மேல் விபரம் சொல்ல வார்த்தைகள் வருவதில்லை.

மெளனம் எனும் மொழி சொல்லாததை சொல்கிறதா?

நேற்று இரவு வீட்டுக்கு வந்த போது இரவு மணி 11.00.
அதிகாலை 1.00 மணி வரை
எனக்கு தூக்கம் வர மறுத்தது.
இதயத்தை வருடிய அந்த நிகழ்வை எழுதினேன்.

இங்கு கற்பனை என்பது துளி கூட இல்லை.
பலரை வாட்டியிருக்கிறது.

ஒரு அதிர்வு விபத்தால்
என் இதயம் ஒவ்வொரு கணமாக நொந்த வேதனையை இந்நிகழ்வு அதிகரித்ததா குறைத்ததா?

என் மனம் இன்னும் குமுறுகிறது..............?

தேசங்கள் வேறுபட்டாலும் இதயத்தால் இணைந்து அழுகிறோம்.

இதுதான்
மனித நேயத்தின் அழு குரல்...................

Narathar
08-12-2005, 04:24 PM
உண்மையில் கண்களை குளமாக்கும் சாம்பவம்............
அதை வடித்த உங்கள் வரிகள் பாராட்டுக்குரியவை........
உங்களோடு துக்கத்தில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கிறோம்

aren
01-01-2006, 02:34 PM
இதை இன்றுதான் பார்த்தேன், படித்தேன். மனதில் துக்கம் தொண்டையை அடைக்கிறது.

அந்த இரண்டு பச்சிளம் பிள்ளைகளை நினைத்தால் மனதை என்னவோ செய்கிறது.

அந்த குடும்பத்திற்கு என்னுடைய இறங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Iniyan
04-01-2006, 08:52 PM
மேரா பாபா மர்கயா என்று நாயகனில் ஒரு காட்சி வருமே. அதை விட கனம் உங்கள் கதை.

அறிஞர்
05-01-2006, 10:25 PM
மனதை தாக்கிய பகுதி........

தங்களின் பதிப்புகள் ஒரு தாக்கத்தை கொண்டு வந்து சேர்க்கிறது.......

தீபன்
12-01-2006, 04:08 AM
எளுத்தின் தரத்தை விட நிஜத்தின் வலிகள் வலிமையானவை என்பதற்கு உங்கள் கதை நல்ல சான்று...

செல்வா
05-02-2008, 09:21 PM
நெஞ்சைக் அறுத்த கதை.... புதைந்து கிடந்த மன உணர்வுகளை..... மீண்டும் தட்டியெழுப்பி.... மனம் கனக்கவைத்த உண்மை நிகழ்வு

பூமகள்
06-02-2008, 10:52 AM
கண்ணு கலங்கி நிற்கிறது..!
அந்த பிஞ்சுக் குழந்தை இன்னேரம்.. சற்றேனும் பெரிதாக இருக்கக் கூடும்..!
அப்பா இல்லாத வெற்றிடமும், சாவின் வலியும் உணர்ந்திருக்கக் கூடும்..!

மனம் அழுகிறது அந்த முகம் தெரியாத மழலைக்காக..!

எழுத்தாளரை எந்த அளவு பாதித்திருக்கிறது என்று வரிகளில் புரிகிறது.
அதே அளவு வலி என்னுள்ளத்தில் வெடிக்கிறது.

பாராட்டுகள் ஜீவன்.

பூமகள்
06-02-2008, 10:54 AM
தேசங்கள் வேறுபட்டாலும் இதயத்தால் இணைந்து அழுகிறோம்.
இதுதான் மனித நேயத்தின் அழு குரல்...................
உண்மை அஜீவன் சகோதரரே..!
மனித நேயமிக்க எவராலும் தாங்க முடியா துயர் இது..! :frown:

யவனிகா
06-02-2008, 11:02 AM
மிகச் குறைந்த வார்த்தைகளில் மிக மிக உணர்வுப் பூர்வமான சம்பவத்தை கொடுத்திருக்கிறார் எழுத்தாளர்.அந்தப் பெண்ணின் மனதின் கனத்தை படிப்பவரும் சுமக்க நேரிடுகிறது.

சுகந்தப்ரீதன்
13-02-2008, 07:25 AM
வீடு வரை மட்டுமென்ன
இப்போதும் கூட தந்தையின் பிரிவையோ அதன் தாக்கத்தையோ உணர முடியாத அந்த பிஞ்சு முகம் என்னை வாட்டி வதைக்கிறது...................
உங்களின் நெகிழ்வை நன்றாக உணரமுடிகிறது...!!
அதை கொஞ்சமும் பிறழாமல் எழுத்தில் எங்கள் முன் கொண்டுவந்து நிறுத்தி நெஞ்சை கனக்க செய்துவிட்டீர்கள்...!!

மனோஜ்
17-03-2008, 04:51 PM
அடிமனதில் ஆழபதிந்துவிட்டது அந்த பிஞ்சு உல்லத்தின் பாசபிரிவகள்