PDA

View Full Version : திருச்செந்தூரின் கடலோரத்தில்gragavan
02-12-2005, 04:40 AM
திருச்செந்தூரின் கடலோரத்தில்

இரவு மணி பத்தைத் தாண்டியிருந்தது. கடற்கரைக் காற்று குளுகுளுவென வீசியது. உப்புக் காற்றாய் இருந்தாலும் சுகமாக இருந்தது. தொலைவில் ஒரு வட்ட நிலா கடலைத் தொட்ட நிலாவாகக் கரைந்து கொண்டிருந்தது. திருச்செந்தூர் கோயிலுக்கு எதிரே உள்ள கடற்கரையில் ஆங்காங்கே ஆட்கள். சிலர் கடலில் காலை நனைத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் படுத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் உட்கார்ந்து கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஊடாக நாய்கள் சில ஓடிக் கொண்டிருந்தன. சில படுத்துக் கொண்டிருந்தன.

சுக்குத்தண்ணி விற்றுக் கொண்டிருந்தான் ஒருவன். கருப்பட்டி போட்ட சுக்குத்தண்ணி. தம்ளர் மூன்று ரூபாய். ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொண்டு அதில் கண்ணாடித் தம்ளர்களை ஊறப் போட்டிருந்தான். பிளாஸ்டிக் தம்ளர்களும் அவனிடம் இருந்தன. ஆளைப் பார்த்து தம்ளரைத் தேர்ந்தெடுப்பான் போல. குளிர்காற்றிற்கும் கடற்கரை மணலிற்கும் அந்தச் சுக்குக் தண்ணி சிலருக்குத் தொண்டையில் இதமாக இறங்கியது. வாயைத் திறந்து பாராட்ட விரும்பாமல் தலையை ஆட்டி தங்களுக்குள் சுக்குத்தண்ணியை பாராட்டினார்கள். அவர்கள் குடிப்பதையே ஒரு நாய் பார்த்துக் கொண்டிருந்தது. நக்கிக் குடிக்காமல் எக்கிக் குடிக்கிறானே என்ற நினைத்த நாயின் பார்வையில் ஏளனம்.

நாழிக்கிணற்றிற்குப் போகும் பாதை மலைப் பாம்பு போல இருட்டில் தெரிந்தது. அதன் ஓரத்திலேயே சில சிமிண்ட் பெஞ்சுகள். கடற்கரை மணலில் உட்காரச் சங்கோசப் பட்ட சிலர் அதில் உட்கார்ந்திருந்தார்கள். பனங்கிழங்கைப் பிய்த்து மென்று கொண்டிருந்தார்கள். இந்த வேளையிலா?

கோயிலுக்கும் கடற்கரைக்கும் நடுவில் ஒரு போலீஸ் காவல் வைக்கப்பட்டிருந்தது. சுனாமி வந்ததிலிருந்து இப்படித்தான். அருகில் பளிச்சென்று மூன்று சோடியம் வேப்பர் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. செயற்கைப் பகலாக இருந்தது கடற்கரை.

கடற்கரையிலிருந்து கோயிலைப் பார்த்தேன். நிலவொளியைப் பூசிக் கொண்டு மினுமினுப்பாகத் தெரிந்தது. வலப்பக்கத்தில் தருமபுரி ஆதீன மண்டபம் கடலை ஒட்டி இருந்தது. பெரிய மண்டபம். இடப்பக்கம் கடைகள் வரிசையாக இருந்தன. நான் இடப்பக்கம் திரும்பினேன். மூடப்பட்டிருந்த கடைகளின் ஓரமாக நடந்து சென்றேன். ஒரு வளைவில் திரும்பினால் கோயில் யானைக் கொட்டாரம். அதனுள் இருந்தது வள்ளி. பெண்யானை. என்னைப் பார்த்ததும் தும்பிக்கையைத் தூக்கி லேசாகப் பிளிறியது.

அப்படியே திரும்பி கோயிலின் முன்பக்கத்திற்கு வந்தேன். அதே சுக்குத்தண்ணி விற்பவன். அவன் முகத்தில் கவலை தெரிந்தது. சரியாக விற்கவில்லை. அவனிடம் சுக்குத்தண்ணி வாங்கிக் குடிக்க முடிவு செய்தேன். "சுக்குத்தண்ணி குடுங்க." என்னைப் பார்த்தான். வாளியிலிருந்து தம்ளர் எடுக்காமல் பிளாஸ்டிக் தம்ளரில் சுக்குத்தண்ணியை ஊற்றிக் கொடுத்தான்.

வெறும் வியாபாரமாக இல்லாமல் இரண்டொரு வார்த்தை பேசினேன். "கருப்பட்டி போட்டிருக்கீங்க போல! வாட ஜம்முன்னு இருக்கு!"

"ஆமாங்க. நயங்கருப்பட்டி. வெல வேற கூடிப்போச்சு. இருந்தாலும் மொத்தமா வாங்குனா கொஞ்சம் கொறைக்காங்க."

நான் வாங்கிக் குடிக்கத் தொடங்கியதும் சிலர் வந்தார்கள். கார் டிரைவர்கள். ஒவ்வொரு ஊரிலிருந்து வந்தவர்கள். அங்கே வந்து பேச்சுத் துணைக்குப் பழகிக் கொள்வது. ஒரு ஐந்து நிமிடத்தில் பத்து பேர் வந்து சுக்குத்தண்ணி குடித்தார்கள். விற்பவன் முகத்தில் மலர்ச்சி வந்தது. நான் மூன்று ரூபாய் சில்லரையை அவன் கையில் கொடுத்து விட்டு நடந்தேன்.

கோயிலைச் சுற்றி சின்னப்பாத் தேவர் கட்டிய மண்டபம். அந்தப் பிரகாரத்தில் நடந்தேன். அது கோயிலைச் சுற்றி வரும். மறுபடியும் கடல் கண்ணில் பட்டது. பிரகாரத்திலேயே மேலும் நடக்க தருமபுரி ஆதீன மண்டபம் மறுபடியும் கண்ணில் பட்டது. மண்டபம் மட்டுமா! அங்கு நடந்ததும் கூடத்தான். வெளியூராள் அங்கே படுத்துக் கொண்டிருக்க, போலீஸ் அவனை அங்கிருந்து நகட்டுவதிலேயே குறியாக இருந்தது.

"ஏய்! எந்தி! இங்க படுக்கக் கூடாதுல்லா. நகருவேய்." லத்திக் கம்பை மண்டபத் தரையில் தட்டினார் போலீஸ். படுத்திருந்தவனுக்கு அது கவுரவக் குறைச்சலாகப் பட்டிருக்க வேண்டும். முணுமுணுத்துக் கொண்டே எழுந்தான். அவன் எழுந்து நடந்ததும் போலீஸ் வேறு பக்கம் ரோந்து நடக்கத் தொடங்கியது.

கோபத்தில் குமைந்து கொண்டிருந்தான் எழுப்பப் பட்ட ஆள். "எய்யா முருகா! பாத்தியால அக்குரமம். இவனுகள என்னங்க! இதெல்லாம் கேக்காம இருக்குயே. செவுட்டுல விழலையா. அப்படியே கடலு பொங்கி மொத்தத்தையும் கொண்டு போயிரய்யா. அப்பத்தான் இவனுக அட்டூழியம் ஒழியும். எம்முருகன் கோயில்ல படுக்க விட மாட்டேங்குதானுகளே. கேப்பாரில்லாமப் போச்சு. எல்லாத்தையும் பாத்துக்கிட்டு சும்மாருக்கியே. நா என்ன ஓட்டல்லயா தங்க? ஒங்கோயிலுக்கு வந்தேன். இங்கன தங்க விடமாட்டேங்கானுகளே. அக்குரமம் பிடிச்சவனுக"

சத்தமாகவே பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தான். எனக்கு லேசாக சிரிப்பு வந்தது. அந்த ஆள் "முருகா முருகா" என்று புலம்பிக் கொண்டிருந்தான். நான் அருகில் போய்க் கேட்டேன். "என்னாச்சு?"

"இங்க கெடந்து தூங்க விடமாட்டேங்குதானுக. குச்சியக் கொண்டு தட்டி எழுப்புதானுக. கோயிலுக்கு எதுக்கு வர்ரோம். சாமியப் பாக்கத்தான. பாக்க விடாம இவனுக தடுக்கானுக. ரெண்டு அப்பு அப்பீருப்பேன். முருகங் கோயிலாச்சேன்னு விட்டேன். ஓட்டல்லயா நாம் படுத்துத் தங்க. அங்கன ரெண்டு நாயி படுத்துக் கெடக்கு. அதப் பத்த மாட்டேங்கானுக. எம்மேல பாயுதானுக."

அவருக்கு விளக்கம் சொன்னேன். "அவங்க அங்க படுக்கக் கூடாதுன்னு ஏன் சொல்றாங்க தெரியுமா? எல்லாம் பாதுகாப்புக்காகத்தான். இருட்டு வேளை. கடலோரம் வேற. அதுனாலதான். சுனாமி வந்ததுன்னு சொல்றாங்களே. அதுனாலதான் இந்தப் பாதுகாப்பு."

"இப்படி வெளக்கமாச் சொன்னாத்தானே தம்பி. லொட்டு லொட்டுன்னு தட்டுதானுகளே. எந்தி எந்தீன்னு பத்துதானுகளே. முருகங் கோயில்ல இப்படி நடக்கானுகளேன்னு எனக்கு வருத்தம். அவ்வளவுதான் தம்பி. ஏந்தம்பி, சுனாமியா! இது திருச்செந்தூரு. இங்க கடலு உள்ள வந்துருமா? என்ன தம்பி பேசுறீங்க! அத்தன ஊருல வெள்ளம் அடிச்சப்ப இங்க மட்டும் கடலு உள்ள போச்சு. தெரியுமுல்ல. பேப்பருல எல்லாம் போட்டுருந்துச்சுல்லா!"

அவருடைய நம்பிக்கை எனக்கு வியப்பளிக்கவில்லை. நம்பினால்தானே கடவுள்.

அவருடைய புலம்பல் தொடர்ந்தது. "இங்க படுக்கவிடாம தடுத்துட்டானுக. எங்க போய்ப் படுக்க? ஓட்டலுக்குக் குடுக்கக் கொட்டியா கெடக்கு? நானே கைக்காசு சேத்து உவரீல இருந்து வந்துருக்கேன். புள்ளக நல்லாப் படிக்கனுமுன்னு வேண்டிக்கிட்டுப் போக வந்தேன். எல்லாரும் வரச் செலவுக்கு ஆத்த மாட்டமத்தான் நா மட்டும் வந்தேன்."

"ஒங்க நம்பிக்க வீண் போகாது. ஒங்க பிள்ளைங்க நல்லா படிச்சு முன்னுக்கு வந்து ஒங்களக் காப்பாதுவாங்க. நீங்க நம்புற முருகன் கைவிட மாட்டான்."

"ரொம்ப நல்லது தம்பி. படிச்சவக சொல்றீங்க. எல்லாம் பலிக்கட்டும். நமக்கென்ன. பிள்ளைக நல்லாருந்தாச் சரிதான். கடைசி பஸ்சுக்கு வந்தேன். காலைல கும்புட்டுட்டு அப்படியே பொறப்பட்டு போலாமுன்னு பாத்தேன். இந்தப் பயலுக தூங்க விடல. இப்ப ராத்திரி முழுக்க இப்பிடியே நடக்கவா?"

"தேவையில்ல. கொஞ்சம் முன்னாடி போனீங்கன்னா ஆறுமுக ஆசாரி கலையரங்கம் வரும். அங்க படுத்துக்கலாம். பாதுகாப்பா இருக்கும். அங்க யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. காலைல சீக்கிரமா எந்திரிச்சு சாமியப் பாத்துருங்க. அப்புறம் கூட்டம் வந்துரும்."

"ஆகட்டும் தம்பி. இப்படித் தெளிவாச் சொன்னாதான தெரியுது எங்களுக்கு. இதுக்குதான் படிக்கனுங்கறது. இனிமே நமக்கு எங்க? ஆமா. ஒங்க பேரு என்ன தம்பி?"

"எம்பேரு முருகன்."

பேருக்கும் ஊருக்கும் இருக்கும் தொடர்பை உணர்ந்து சொன்னார். "சந்தோசம் தம்பி. சாமி பேரு. அதான் இம்புட்டுப் பேசுறீக. அந்த முருகன் ஒங்கள நல்லா வெச்சிக்கிறட்டும். வர்ரேன் தம்பி!" சொல்லி விட்டு அந்த ஆள் கலையரங்கத்தில் துண்டை விரித்துப் படுத்துக் கொண்டார். உடனே தூங்கியும் விட்டார். கள்ளமில்லாத மனது.

திரும்பி நடந்தேன். காலையில் சீக்கிரமாக இவரை எழுப்பி விட வேண்டும். பின்னே. மெனக்கெட்டு என்னைப் பார்ப்பதற்கு உவரியிலிருந்து வந்திருக்கின்றாரே. கூட்டம் வருவதற்கு முன்னால் என்னைப் பார்த்து விட்டால் அவன் என்னிடம் கூடக் கொஞ்சம் பேசுவான் அல்லவா!

அன்புடன்,
கோ.இராகவன்

pradeepkt
02-12-2005, 06:45 AM
அது சரி,
அந்தக் கடைசி பாரா மட்டும் இல்லைன்னா....
கலக்கல்யா

mukilan
02-12-2005, 06:47 AM
சின்ன வயசு ஞாபகத்தை வரவழைக்கிறது!ஆமாம் நாளிக்கிணறு என்பது சரியா? நாழிக்கிணறு என்று தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்! நாளியா நாழியா ( அளக்கும் கருவிதானே!)எனக்குத் தெரியாது. சொல்லுங்களேன்.

pradeepkt
02-12-2005, 06:52 AM
எனக்கும் அந்த ஐயம் உண்டு.
அங்கும் நாழிக்கிணறு என்றுதான் போட்டிருந்ததாக நினைவு.

gragavan
02-12-2005, 07:02 AM
நாழிக்கிணறுதான். எழுத்துப்பிழையாகி விட்டது. மன்னிக்க.

pradeepkt
02-12-2005, 07:12 AM
அதெல்லாம் மன்னிக்க முடியாது...
அன்னைத் தமிழை அவமதித்து விட்டீர்கள்.
அதனால் அன்னைத் தமிழின் புதல்வனான எனக்கு சுஃபியில் ஒரு அரேபிய விருந்து கொடுத்தால்தான் இந்தப் பாவக்கறை உங்களை விட்டு அகலும் :D

mukilan
02-12-2005, 07:15 AM
அப்போ முதன் முதலில் கண்டு சொல்லிய எனக்கு என்ன கொடுப்பீங்களாம்.நல்லா இருங்கையா!!

gragavan
02-12-2005, 08:24 AM
சரி. ரெண்டு பேரும் பெங்களூருக்கு வாங்க. நல்ல சாப்பாடு வாங்கித்தர்ரேன்.

பரஞ்சோதி
03-12-2005, 08:22 AM
அருமையான பதிவு, பாராட்டுகள் அண்ணா.

எங்க ஊரின் தலைப்பை பார்த்ததுமே கொண்டாட்டம் தான்.

poo
03-12-2005, 08:29 AM
பாராட்டுக்கள் இராகவன்.

இறைவனும் எளிமையானவனே என புரியவைக்கிறது!
கடைசி பாரா தவிர்த்து நன்றாகவே ரசிக்க முடிகிறது.. இதற்கு நாத்திகனென அர்த்தமல்ல..

மதி
03-12-2005, 08:37 AM
சரி. ரெண்டு பேரும் பெங்களூருக்கு வாங்க. நல்ல சாப்பாடு வாங்கித்தர்ரேன்.
பெங்களூரில் நல்ல சாப்பாடா?
ரொட்டி எல்லாம் சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு...
நல்ல சாப்பாடு எங்கே கிடைக்கும் இராகவன்?:mad: :confused: :confused:

ilanthirayan
04-12-2005, 06:09 PM
எனக்கு ஒரு சந்தேகம் ...அப்பூ

நாழி என்பது நேரம் அளக்கும் ஒரு அலகு..

அத்த்தை.. வைச்சு எப்டீப்பூ கெணத்து ஆழம்லாம்....

தலை சுத்தூதப்பூ..

pradeepkt
05-12-2005, 04:52 AM
இது ஒரு நல்ல கேள்வி...
(இதை பழைய காலத்து டி டி எதிரொலி மாமா மாதிரி படிக்கவும்)
அடுத்த கேள்விக்குப் போலாமா...

gragavan
05-12-2005, 04:58 AM
எனக்கு ஒரு சந்தேகம் ...அப்பூ

நாழி என்பது நேரம் அளக்கும் ஒரு அலகு..

அத்த்தை.. வைச்சு எப்டீப்பூ கெணத்து ஆழம்லாம்....

தலை சுத்தூதப்பூ..இளந்திரையன்...அது நாழி. உண்பது நாழியில் வரும் நாழி. எழுத்துப்பிழையோ எழுத்துப்பிழை.

gragavan
05-12-2005, 05:10 AM
இது ஒரு நல்ல கேள்வி...
(இதை பழைய காலத்து டி டி எதிரொலி மாமா மாதிரி படிக்கவும்)
அடுத்த கேள்விக்குப் போலாமா...என்ன கேள்வி...பெரிய கேள்வி.....நேரக்கணக்குக்கு நாழி இல்லை. நாழிகை....அத நீங்களா சுருக்கிக் கிட்டு கேள்விய வேற கேக்குறதா?

இளசு
06-12-2005, 07:37 AM
எளியவருக்கு உதவ எதிரில் வருவான் இறைவன்..

எண்ண சுகமளிக்கும் நம்பிக்கை...

உங்கள் நடையில் இரவுக் கடற்காற்றில் முருகனுடன் உலா சென்று வந்த
உணர்வைத் தருகிற புத்துணர்வு ஓசோன் கதை.

பாராட்டுகள் ராகவன்..

பாரதி
07-12-2005, 01:49 PM
ரசிக்க வைத்த கதை இராகவன். சிறப்பான யுக்தி. திருச்செந்தூர் போய்விட்டு வந்த அனுபவங்கள் பலவிதங்களிலும் வெளிப்படுவது நன்றாகவே இருக்கிறது. பாராட்டுக்கள்.

Narathar
12-12-2005, 12:39 AM
வித்தியாசமான அணுகு முறை!!!
வாழ்த்துக்கள்.
கதையின் அழகே அந்த கடைசிப்பந்தியில்தான்..........
கதையை கதையாக பார்த்தால் ரசிக்கலாம்!! ...................நாராயணா!!!
நாத்திகமாவது ஆத்திகமாவது!!!!

gragavan
12-12-2005, 05:03 AM
பாராட்டிய இளசு அண்ணா, பாரதியண்ணா மற்றும் நாரதருக்கு நன்றி பல. உங்கள் பாராட்டுகள் எனக்குப் பெருமகிழ்ச்சியைத் தருகின்றது.

RRaja
19-12-2005, 06:23 AM
நிறைய தேவர் பிலிம்ஸ் பார்ப்பீங்களோ! கதை நன்றாகவே இருந்தது.

gragavan
19-12-2005, 06:30 AM
நிறைய தேவர் பிலிம்ஸ் பார்ப்பீங்களோ! கதை நன்றாகவே இருந்தது.இல்லை ராஜ். அப்படியெல்லாம் இல்லை. ஏதோ தோணியதை எழுதினேன்.

தாமரை
23-03-2006, 02:17 PM
ஆமாம்.. நாளை நிஜமாகவே திருச்செந்தூர் போறீரே!.. இந்த வர்ணனையெல்லாம் சரிதானா என்று பார்த்து வந்து சொல்லும்.

gragavan
27-03-2006, 05:26 AM
சென்றேன். பார்த்தேன். நான் எழுதிய வருணனைகள் அப்படியே இருந்தன. கூடுதலாகப் பார்த்த இடம். மொட்டை போடும் இடம்.

pradeepkt
27-03-2006, 05:51 AM
என்னய்யா எப்படி இருந்தது உங்க பயணம்?
திருச்செந்தூரின் கடலோரத்தில் ஒரு வழியாக உங்கள் மனம் மற்றும் சிரத்தில் இருந்த பாரங்களை இறக்கி வைத்தாயிற்றா...
இப்ப உங்கள் புகைப்படத்தை நாங்கள் பார்க்கணுமே..

gragavan
27-03-2006, 06:02 AM
ஆமாமய்யா...அனைத்தும் முருகனருளால் நல்ல படியாக நடந்தது. கண்டிப்பாக புகைப்படங்களைக் காணலாம். இந்தப் பயணம் பற்றி ஒரு கட்டுரையாகவே எழுத இருப்பதால்...கொஞ்சம் பொறுத்தருள வேண்டும். சொல்வதற்கு நிறைய இருக்கிறது.

pradeepkt
27-03-2006, 09:10 AM
காத்திருக்கிறோம்.
சொல்லுங்கள்.

தாமரை
29-03-2006, 05:17 AM
சென்றேன். பார்த்தேன். நான் எழுதிய வருணனைகள் அப்படியே இருந்தன. கூடுதலாகப் பார்த்த இடம். மொட்டை போடும் இடம்.
ஐவரணியின் அட்டகாசங்களைத் தானே சொன்னீர்????:confused: :confused: :confused: :confused: :confused:

rajasi13
01-10-2006, 11:57 AM
நிஜமாகவே மெய் சிலிர்க்க வைத்த கதை. திருச்செந்தூரை இரவில் பார்த்து ரசித்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் அழகு. கடலின் இரைச்சலுடன் சோடியம் விளக்கின் வெளிச்சத்தில் கோவிலைப்பார்ப்பதே கண்கொள்ளா காட்சி. அதும் குளிரில் கடலில் ஆடி விட்டு நாழிக்கிணறின் வெதுவெதுப்பான நீர் உடலில் படும்போது கிடைக்கும் சுகத்திற்கு மீண்டும் திருச்செந்தூர் தான் போக வேண்டும். மறுபடியும் அந்த நிகழ்வுகளை கண்முன் கொண்டு வந்த மீண்டும் வாய்ப்பு கிடைக்காதா என ஏங்க வைத்த கதை. கடந்த மாதம் குளித்த போது சுனாமி பயம் இல்லாமல் கடலில் குளித்ததை பற்றியும் சொல்லத்தான் வேண்டும்.

gragavan
01-10-2006, 05:29 PM
நிஜமாகவே மெய் சிலிர்க்க வைத்த கதை. திருச்செந்தூரை இரவில் பார்த்து ரசித்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் அழகு. கடலின் இரைச்சலுடன் சோடியம் விளக்கின் வெளிச்சத்தில் கோவிலைப்பார்ப்பதே கண்கொள்ளா காட்சி. அதும் குளிரில் கடலில் ஆடி விட்டு நாழிக்கிணறின் வெதுவெதுப்பான நீர் உடலில் படும்போது கிடைக்கும் சுகத்திற்கு மீண்டும் திருச்செந்தூர் தான் போக வேண்டும். மறுபடியும் அந்த நிகழ்வுகளை கண்முன் கொண்டு வந்த மீண்டும் வாய்ப்பு கிடைக்காதா என ஏங்க வைத்த கதை. கடந்த மாதம் குளித்த போது சுனாமி பயம் இல்லாமல் கடலில் குளித்ததை பற்றியும் சொல்லத்தான் வேண்டும்.நன்றி ராஜாசி. திருச்செந்தூர் எனக்கும் மிகவும் பிடித்தமான ஊர். இரவில் கோயிலைச் சுற்றி நடந்து வந்து கடலைப் பார்ப்பது ஒரு வித ஆனந்த அமானுஷ்யம்.

ஓவியா
29-04-2007, 02:29 AM
அதெல்லாம் மன்னிக்க முடியாது...
அன்னைத் தமிழை அவமதித்து விட்டீர்கள்.
அதனால் அன்னைத் தமிழின் புதல்வனான எனக்கு சுஃபியில் ஒரு அரேபிய விருந்து கொடுத்தால்தான் இந்தப் பாவக்கறை உங்களை விட்டு அகலும் :D


ஹி ஹி ஹி மெய்யாலுமா?????
ஓஓஓஓஒ நீங்கதான் அந்த அன்னைத் தமிழின் புதல்வனான!!!!!!!!!!! :sport-smiley-002: :sport-smiley-002:


அனைவரின் அக்குரும்பையும் ரசித்தேன்.

ஓவியா
29-04-2007, 02:35 AM
திருச்செந்தூர் முருகனுக்கு வந்தனம்.

கதை எழுதிய ராகவனுக்கு வணக்கம்.

கதையை படித்து மெய்சிலிர்த்தேன். மிகவும் உணர்ந்து எழுதியது போல் உள்ளது. உங்கள் பக்தி பெருக வாழ்த்துகிறேன்.

அந்த சுக்கு தண்ணீர் கடையில் ஜனம் கூடும் பொழுதே அறிந்து விட்டேன் இது நம்ப அழகன் முருகு பையன் என்று.. ஹி ஹி ஹி

முதல் எண்ணமே அந்த திருச்செந்தூர் முருகனை காண வேண்டும் என்ற அவாதான். அவன் புகழ் பாட வேண்டும்.

எண்ணத்தில் விதைத்து விட்டேன், அவனுடன் சென்றுதான் திருச்செந்தூர் முருகனை காண வேண்டும் என்று.
'யாமிருக்க பயம் ஏன்' என்று அழ்மனதில் உரைக்கிறான் என் முருகன்.

அருமையான கதை. பாராட்டுக்கள்
ராகவன் ஒரு கேள்வி.
பெண்கள் மொட்டை போடலாமா???

pradeepkt
01-05-2007, 07:35 AM
ஹி ஹி ஹி மெய்யாலுமா?????
ஓஓஓஓஒ நீங்கதான் அந்த அன்னைத் தமிழின் புதல்வனான!!!!!!!!!!! :sport-smiley-002: :sport-smiley-002:


அனைவரின் அக்குரும்பையும் ரசித்தேன்.
இல்லையா பின்ன... அதுல உங்களுக்கு என்னா சந்தேகம்... :sport009:

pradeepkt
01-05-2007, 07:36 AM
ராகவன் ஒரு கேள்வி.
பெண்கள் மொட்டை போடலாமா???
இதுக்கு பதில் நான் சொல்றேன்...
பெண்கள் மட்டுமில்லை... யாரு வேணாலும் அவங்களுக்கே மொட்டை போட்டுக்கலாம்...

மத்தவங்களுக்குத்தான் மொட்டை போடக்கூடாது :icon_tongue: :icon_tongue: :icon_tongue: :icon_tongue:

அன்புரசிகன்
01-05-2007, 11:50 AM
ஓவியாக்காவின் கிளறலில் ராகவன் அண்ணாவின் கதை படித்தேன். நன்றாக இருந்தது.

சுக்குக்காப்பி விற்றவனின் முகத்தில் தோன்றிய மலர்வு இங்கு யாருக்கோ தோன்றியது போல எனக்குத்தோன்றுகிறது.

ஓவியாக்காவிற்கு மொட்டை போட்டால்.... சூப்பர்லே... :D

lolluvathiyar
01-05-2007, 12:29 PM
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா.
கோவிலையும் கடச்கரையும் அழகாக விள்க்கியதோடு
இல்லாமல் முருகனின் கருனையையும் கூறி விட்டாய்.
நீயல்லவோ அந்த சூரனை வென்ற முருகன்

திருச்செந்தூர் முருகன் சிலைக்கு ஒரு விசேசம் உண்டு.
முஸ்லீம் மண்ணன் ஒருவன் திருச்செந்தூர் கோவிலை தகர்த்து
சிலை உடைக்க படையுடன் வந்த செய்தி அந்த கோவில் பூஜாரிக்கு
தெரிந்து அந்த சிலையை தோனியில் எடுத்து போய்
கடலில் போட்டு விட்டார். பிறகு பல வருடம் கழித்து
(பிரிட்டிஸ் ஆட்சி காலம் என்று கேள்வி பட்டேன்)
அதை கடலில் தேடி எடுத்து வைத்த சிலை தான் இன்று நாம் வழிபடுவது

இந்த கதை அந்த கோவிலில் சித்திரமாக வரைந்திருப்பார்கள்
இது பற்றி முழுமையாக தெரிந்தவர்கள் விளக்கவும்

பரஞ்சோதி
01-05-2007, 12:31 PM
பழைய பதிவு என்றாலும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் ரசனையான பதிவு.

பரஞ்சோதி
01-05-2007, 12:34 PM
ஒரு கேள்வி.
பெண்கள் மொட்டை போடலாமா???

பெண்கள் மொட்டை போடுவதை அடுத்தவங்களுக்கு மொட்டை அடிப்பதை சிறப்பாக செய்வாங்க :)

அய்யோ சகோதரி அடிக்க வராதீங்க, தாராளமாக மொட்டை போடலாம், ஆனால் எத்தனை பேர் அப்படி செய்ய வருவாங்கன்னு தெரியலை.

ஓவியா
02-05-2007, 12:06 AM
இதுக்கு பதில் நான் சொல்றேன்...
பெண்கள் மட்டுமில்லை... யாரு வேணாலும் அவங்களுக்கே மொட்டை போட்டுக்கலாம்...

மத்தவங்களுக்குத்தான் மொட்டை போடக்கூடாது :icon_tongue: :icon_tongue: :icon_tongue: :icon_tongue:

தகவலுக்கு நன்றி குருவே!!!
இது வரை மத்தவங்களுக்குத்தான் மொட்டை போடனும்னு தோணலே, இனி யோசனை வரலாம்.ஓவியாக்காவின் கிளறலில் ராகவன் அண்ணாவின் கதை படித்தேன். நன்றாக இருந்தது.

சுக்குக்காப்பி விற்றவனின் முகத்தில் தோன்றிய மலர்வு இங்கு யாருக்கோ தோன்றியது போல எனக்குத்தோன்றுகிறது.

ஓவியாக்காவிற்கு மொட்டை போட்டால்.... சூப்பர்லே... :D
நான் எற்கனவே முருகனுக்கு மொட்டை போட்டுளேன்.
அட்ராசக்க அட்ராசக்க :musik010:

ஓவியன்
02-05-2007, 04:51 AM
அருமையான ஒரு பதிவு!
திருச்செந்தூருக்கே கொண்டு சென்ற ராகவன் அண்ணாவின் திறமை வாழ்க!.

முருகன் சுக்கு தண்ணீர் எல்லாம் குடிப்பாரா என்ன?

இனிக் கொஞ்சம் கவனமாகத் தானிருக்க வேண்டும்.

ஓவியா
05-05-2007, 03:56 AM
பெண்கள் மொட்டை போடுவதை அடுத்தவங்களுக்கு மொட்டை அடிப்பதை சிறப்பாக செய்வாங்க :) :icon_good: :icon_good: :party009: :party009:


அய்யோ சகோதரி அடிக்க வராதீங்க, தாராளமாக மொட்டை போடலாம், ஆனால் எத்தனை பேர் அப்படி செய்ய வருவாங்கன்னு தெரியலை.
பெரும்பாலும் மலேசியாவில் பெண்கள் அதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க. அழக தானம் கொடுப்பேனு வந்துட்டா......ம்ம் ஒன்னும் வாசிக்க முடியாதே!!!! பக்தினா பக்திதான்.

ஓவியா
05-05-2007, 04:04 AM
அருமையான ஒரு பதிவு!
திருச்செந்தூருக்கே கொண்டு சென்ற ராகவன் அண்ணாவின் திறமை வாழ்க!.

முருகன் சுக்கு தண்ணீர் எல்லாம் குடிப்பாரா என்ன?

இனிக் கொஞ்சம் கவனமாகத் தானிருக்க வேண்டும்.

எலே, இன்னா தைரியம்லே உமக்கு, முருகனையே கேள்வி கேக்குறே நைனா!!!

அப்பாலே உனக்கு வள்ளி மாதிரி நல்ல பொண்ணு கிடைக்காதுலே,

பேசாமா திருச்செந்தூர் முருகனுக்கு ஒரூ மொட்ட போட்டு மன்னிப்பு கேளுலே.....

ஆர பார்த்து இன்னா கேகுறே.....

இன்னேரம் உமாக்கு மயிலுலே ஆட்டோ அனுப்பி வச்சுரூப்பாருலே......


ஒவியான்
இது சமயலுக்கு போடும் சுக்கு தண்ணீ.

எப்பப்பாரு சுப்புமாமி பாடிய 'பாருக்குல்லே நல்ல நாட்டை'யே நினைச்சுகுறீகளே' :1: :1: :1:

ஆதவா
05-05-2007, 04:24 AM
அருமையான கதை ராகவஞ்சாமி... சிறுகதை என்றாலும் ம்மிக அழகாக இருக்கிறது. உட்கார்ந்து யோசிப்பீர்களோ?
கடைசி பாராவில் தானே கதையின் சுபம் இருக்கிறது.. எல்லாவற்றையும் ரசிக்கமுடிகிறது.. முன்பொருமுறை நீங்கள் கொடுத்த சிவாஜி கனவு கதைக்குண்டான இணைப்பு மறந்துவிட்டது... அதிலும் இப்படித்தான்.. கடைசியில் புதிரை அவிழ்க்கும்படி இருக்கும்.. மீண்டுமிருந்தால் கொடுங்கள்..

உங்களுக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டமோ?

ஓவியன்
05-05-2007, 05:15 AM
எலே, இன்னா தைரியம்லே உமக்கு, முருகனையே கேள்வி கேக்குறே நைனா!!!

அப்பாலே உனக்கு வள்ளி மாதிரி நல்ல பொண்ணு கிடைக்காதுலே,

பேசாமா திருச்செந்தூர் முருகனுக்கு ஒரூ மொட்ட போட்டு மன்னிப்பு கேளுலே.....


அக்கோய்!

ஏன் இப்படிப் பயமுறுத்துறீங்க?
உங்க பேச்சை நான் கேட்கப் போய்(மொட்டை அடிச்சால்) வரப் போற பெண்ணும்(???) வந்திடாம ஓடிடப் போவுது.:medium-smiley-100:

அன்புரசிகன்
05-05-2007, 11:32 AM
எலே, இன்னா தைரியம்லே உமக்கு, முருகனையே கேள்வி கேக்குறே நைனா!!!

அப்பாலே உனக்கு வள்ளி மாதிரி நல்ல பொண்ணு கிடைக்காதுலே,அக்கோய்!

ஏன் இப்படிப் பயமுறுத்துறீங்க?
உங்க பேச்சை நான் கேட்கப் போய்(மொட்டை அடிச்சால்) வரப் போற பெண்ணும்(???) வந்திடாம ஓடிடப் போவுது.:medium-smiley-100:

ஏற்க்கனவே ஒன்று வர்ணத்துடன் ஓடிவிட்டது. இதுல ஏனக்கா இந்த சாபம் உந்தாளுக்கு. அவர் கிட்டத்தட்ட செத்த பாம்பு.
ரொம்ப வெருட்டாதீங்க ஓவியர.

gragavan
10-05-2007, 07:59 PM
ஆகா...இங்கே இவ்வளவு பின்னூட்டக் கூத்து நடந்திருக்கிறதா! பின்னூட்ட மழைக்கு நன்றி நண்பர்களே. உட்கார்ந்து யோசித்தேனா என்று நினைவில்லை. ஆனால் யோசித்திருப்பேன். இன்னும் சொல்லப் போனால் ஏதாவது யோசனை வந்தால்தான் எழுதுவது.

ஓவியா
10-05-2007, 08:04 PM
உங்களுடைய மற்ற திரியிலும் செம்ம லூட்டி அடிச்சு இருக்கோம், தூசு தட்டி பாருங்கோ சார்.

ஆதவா
10-05-2007, 08:04 PM
ராகவஞ்சாமி... ஏதாவது எழுத வேண்டும்... சீக்கிரமே.

தாமரை
10-05-2007, 08:08 PM
அவரு நெதர்லாண்ட்ஸ் ல மொட்டை அடிக்கப்பட்ட கதையை அடுத்ததாக எழுதுவார்

gragavan
10-05-2007, 08:10 PM
ராகவஞ்சாமி... ஏதாவது எழுத வேண்டும்... சீக்கிரமே.
நான் வைத்துக் கொண்டு வஞ்சனை செய்கிறேனா ஆதவா? தோன்ற வேண்டுமல்லவா...காத்திருக்கிறேன்.

ஓவியா
10-05-2007, 08:10 PM
அப்ப கதையின் தலைப்பு நெதர்லாண்ட்ஸில் மீண்டும் ஒரு மொட்டையா, நல்ல இருக்கே

:spezial: :spezial: :love-smiley-073:

gragavan
10-05-2007, 08:11 PM
அவரு நெதர்லாண்ட்ஸ் ல மொட்டை அடிக்கப்பட்ட கதையை அடுத்ததாக எழுதுவார்
ஆச்சு...தொடங்கீட்டீங்களா? நெதர்லாந்து பத்தி எழுதனுமாக்கும். என்ன தெரியும் எனக்கு? ஆனா எழுதுவேன். கொஞ்ச நாள் போகட்டும்.

ஆதவா
10-05-2007, 08:15 PM
ஆச்சு...தொடங்கீட்டீங்களா? நெதர்லாந்து பத்தி எழுதனுமாக்கும். என்ன தெரியும் எனக்கு? ஆனா எழுதுவேன். கொஞ்ச நாள் போகட்டும்.

மொட்டையா? எஞ்சாமி!!! முருகனுக்கா? என்றால் எனக்கு பிரசாதம் அனுப்பிவைக்கவும்,. இல்லையென்றால் மொட்டையடிப்பதை விரும்ப லண்டனில் ஆட்கள் இருக்கிறார்கள்.... :D :D