PDA

View Full Version : குறிஞ்சி பூ : முதல் தோழி



kavitha
25-11-2005, 07:01 AM
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்குமாம் குறிஞ்சி!
11ம் திங்களில் பிறந்தவளே!
என் முதல் தோழியே!
நீ பிறந்த இத்தினத்தினை
ஆண்டாண்டுக்கும் போற்றுவேன்.
ஊடலில் தாம் நாம் நட்பானோம்
ஞாபகம் இருக்கிறதா?
4ம் வகுப்பினிலே
கைக்குட்டைச் சண்டை போட்டோமே!

ஒன்று போல் சிந்தனை
ஒன்று போல் பேச்சு
ஒன்று போல் அன்பு
அதன் அடையாளம் தானோ என்னவோ
ஒன்று போல் இருந்தது
நம் கைக்குட்டையும்...

ஏதோ ஒன்று அதில் தொலைந்துபோக
பழியை நீயோ என்மீது வைத்தாய்
நானோ அன்பை உன்மீது வைத்தேன்.
இப்போது போலவே
அப்போதும் நான் அப்பாவி..
பிறர்க்கண் வருந்துவேனே அன்றி
என் துயர் கண்ணுறேன்!

உன் கைக்குட்டைக்காக
வீட்டில் அடிவாங்கி
கொண்டுவந்த உண்டியல் சேமிப்பை
என்ன செய்தாயோ தெரியாது..
அவ்வப்போது என் கைத்தீ வடுவை மட்டும்
நெருடி வருடிக்கொள்வேன்...
நம் நினைவுகளைப்போலவே...

தீப்புண் வாங்கியது நான்
தேம்பி தேம்பி அழுதது நீ
என்னை விட உயர்ந்தவள் நீ
உயரத்திலும் சரி...
வயதிலும் சரி...
ஆனால் நட்பிற்குப்பிறகு
என் அன்புக்கு மட்டுமே நீ
அடிபணிந்தாய்

நமக்குள்
கருப்பு, வெளுப்பு என்றோ
உயரம், குட்டை என்றோ
இந்து, கிறிஸ்துவம் என்றோ
இன்றுவரை பேதம் கிடையாது.

சண்டைக்குப் பிறகோ
நம் இருவர் வீட்டிலும்
எல்லைக்கோடுகள்.
அந்தக்கோடுகளை எல்லாம்
தாண்டியது - நமது
பாண்டி ஆடும் வயசு

நான் நகம் கடிக்கக்கூடாதென்று
நகப்பூச்சு பூசிவிடுவாய் நீ
நீ முடிவளர்க்கவேண்டும் என்று
தினம் பூ தருவேன் நான்

உன்னைப்பார்த்து நான்
நகம் வெட்ட ஆரம்பித்தேன்
என்னைப்பார்த்து நீ
முடி வளர்க்க ஆரம்பித்தாய்

நான்கு வருடங்களில்
நாம் செய்த சேட்டைகளும், சாதுர்யங்களும்
போட்டி போட்டன நமக்குள்...
ஆனால்
ஒரு நாளும் பொறாமை பட்டதில்லை
அது தான் அந்தக்காலத்திற்கு
பொறாமை வந்ததோ...

தந்தை இழப்பால் நான் சென்றேன் திருச்சி
இட மாற்றத்தால் நீ சென்றாய் மதுரை
வழி நெடுகக்கண்ணீரோடு
மீண்டும் ஒருநாள்
நிச்சயம் சந்திப்போம் என்ற
ஒரேஒரு நம்பிக்கைத் தேம்பலுடன்
பிரிந்தோம் நாம்

உடல் தான் பிரிந்தது!
உள்ளம் எங்கே பிரிந்தது?

வருடத்திற்கு ஒரு முறை
உன் கடிதம் மட்டும் எனக்கு
வந்து சேரும் முகவரி இன்றி...

ஓடியது..ஓடியது..
காலம் நம் வயதையும் சேர்த்துக்கொண்டு ஓடியது
நானோ புகுந்த வீட்டில்..
நீயோ பட்டதாரியாய்...
நீ எங்கே?
நான் எங்கே?
இருவரும் அறியோம்..

12 வருடங்களுக்குப்பிறகு
அந்த கால தேவதை
எனக்கு வரம் அருளியது

முன்னோட்டமாய் என் தங்கை ஓதினாள்
இந்த வாரத்தில் "உனக்கொரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது" என்று!
திடீரென உன் குரல்...
என் தொலைபேசியில்...
அதே குரல்... அதே வாஞ்சை
அவளே... அவளே தான்!

"இன்று உன்னைச் சந்திக்க வருகிறேன்" என்று
எப்படி இருப்பாளோ? என நானும்
இப்படி இருப்பாயோ? என நீயும்
ஆள் அதிகமில்லா
ரயில் நிலையத்தில் காத்துக் காத்து
கண்கள் தேடின...

.... (தொடரும்)

பென்ஸ்
25-11-2005, 07:09 AM
என்ன இப்படி இடையில் நிறுத்தி போட்டீர்கள்.... ???

சீக்கிரம் .... :-)

கவிதையை குறித்து சில கேள்விகள்... பதிக்க நினைத்தேன்... வேண்டாம் கவிதை முடியட்டும் என்று காத்திருக்கிறேன்...

மதி
25-11-2005, 10:40 AM
சின்ன வயசு சினேகிதிகள் சந்தித்தார்களா?
நடந்தது என்ன..?
சீக்கிரம் தொடருங்கள்....

நண்பன்,
மதி

ப்ரியன்
26-11-2005, 04:54 AM
ஒரு தொடர்வண்டி போல் குறைந்த வேகம் முதலில் மித வேகம் இடையில் முழுவேகம் முடிவில்...

/* ரயில் நிலையத்தில் காத்துக் காத்து
கண்கள் தேடின...*/

அடுத்தப் பதிவைப் பார்த்துப் பார்த்து எங்கள் கண்கள் ஏங்குகின்றன...

ப்ரியன்
26-11-2005, 05:08 AM
/* உன் இதயம் உடையாமல் காக்க முடிந்தால்
நான் வாழ்வது வீணல்ல.*/

அருமை :)

இளசு
26-11-2005, 10:09 PM
9 வயதில் ஊடல் விதை போட்டு
13 வயதில் பிரிவுக்கண்ணீர் விட்டு
12 வருடம் தொடர்பு உரம் சேர்த்து
25 வயதில் மலர்ந்த குறிஞ்சிப்பூ...


சொன்னவிதத்தின் நேர்மை, யதார்த்தம் தைக்கிறது இதமாக..
சொன்ன சேதிகள் - தந்தை இழப்பு - இளகவைக்கிறது சோகமாக..


எல்லா உணர்வுகளுக்கும் இதமான தாங்கி - நட்பு..

கவீ தொடரப்போகும் தொடர்வண்டி நிலைய சந்திப்புக்காக
ஏக்கமாய்....

அறிஞர்
28-11-2005, 11:25 AM
அருமை கவி.... மீண்டும் ஒரு மலரும் நினைவுகள்...

அடிக்கடி இந்த தோழியை பற்றி கவிதை தருகிறீர்கள்.. அந்த தோழியிடம் இந்த கவிதைகளை காட்டுங்கள்.. சந்தோசப்படுவார்.

தங்களின் சந்திப்பு பற்றி அடுத்த கவிதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்......

வாழ்த்துக்கள் கவி

அறிஞர்
28-11-2005, 11:25 AM
9 வயதில் ஊடல் விதை போட்டு
13 வயதில் பிரிவுக்கண்ணீர் விட்டு
12 வருடம் தொடர்பு உரம் சேர்த்து
25 வயதில் மலர்ந்த குறிஞ்சிப்பூ....

என்னது... வயதை எல்லாம் இப்படி வெளிப்படுத்துகிறீர்கள்..

kavitha
30-11-2005, 09:28 AM
என்ன இப்படி இடையில் நிறுத்தி போட்டீர்கள்.... ???

சீக்கிரம் .... :-)

கவிதையை குறித்து சில கேள்விகள்... பதிக்க நினைத்தேன்... வேண்டாம் கவிதை முடியட்டும் என்று காத்திருக்கிறேன்...

என்ன கேட்கவேண்டும் என்று நினைத்தீர்கள்?

kavitha
30-11-2005, 09:32 AM
சின்ன வயசு சினேகிதிகள் சந்தித்தார்களா?
நடந்தது என்ன..?
சீக்கிரம் தொடருங்கள்....

நண்பன்,
மதி
நன்றி மதி. அவளுடன் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து விட்டு அதே நினைவுகளுடன் 15 நிமிடத்தில் நேரடியாக தட்டச்சு செய்த கவிதை இது. (கவிதை தானா? என்பதெல்லாம் பிறகு யோசிக்கவேண்டிய விசயம். குறுங்கதை - நிகழ்ந்த கதை)
நேரம் முடிந்துபோக அத்துடன் முடித்துவைக்க... அது காத்துக் காத்து
என்று வாசிப்பவர்களையும் காத்திருக்கவைத்து விட்டது.
இப்போது மீண்டும் வாசிக்கையில் எனக்கே பிரமிப்பாக இருக்கிறது! இத்தனை வரிகளா? என்று...
மீதியைச் சுருங்கச் சொல்லிவிடுகிறேன். சற்று பொறுங்கள்.

kavitha
30-11-2005, 09:34 AM
ஒரு தொடர்வண்டி போல் குறைந்த வேகம் முதலில் மித வேகம் இடையில் முழுவேகம் முடிவில்...

/* ரயில் நிலையத்தில் காத்துக் காத்து
கண்கள் தேடின...*/

அடுத்தப் பதிவைப் பார்த்துப் பார்த்து எங்கள் கண்கள் ஏங்குகின்றன...
__________________
ப்ரியன்

எங்கே போரடித்து விடுமோ என்பதாலே சொந்தச் சரக்கையெல்லாம் நான் ரயிலில் ஏற்றுவதில்லை. :)
உங்களது வரிகள் ஊக்கம் அளிக்கிறது. நன்றி. விரைவில் அடுத்த பாகம் தந்துவிடுகிறேன். பொறுத்தருளுங்கள்.

kavitha
30-11-2005, 09:36 AM
* உன் இதயம் உடையாமல் காக்க முடிந்தால்
நான் வாழ்வது வீணல்ல.*/

அருமை :) __________________
ப்ரியன்

நன்றி ப்ரியன். இது சுமார் 6 வருடங்களுக்கு முன்பு சுஜாதா வின் நாவல் ஒன்றில் ஒரு பிரபலக் கவிஞரின் கவிதை வரியிலிருந்து எடுத்த வரிகள். கவிஞர் பெயர் நினைவில் இல்லை. வரிகள் மட்டும் இன்றும் மனதில் ஆணித்தரமாய் பதிந்துவிட்டன.

kavitha
30-11-2005, 09:40 AM
9 வயதில் ஊடல் விதை போட்டு
13 வயதில் பிரிவுக்கண்ணீர் விட்டு
12 வருடம் தொடர்பு உரம் சேர்த்து
25 வயதில் மலர்ந்த குறிஞ்சிப்பூ...


சொன்னவிதத்தின் நேர்மை, யதார்த்தம் தைக்கிறது இதமாக..
சொன்ன சேதிகள் - தந்தை இழப்பு - இளகவைக்கிறது சோகமாக..


எல்லா உணர்வுகளுக்கும் இதமான தாங்கி - நட்பு..

கவீ தொடரப்போகும் தொடர்வண்டி நிலைய சந்திப்புக்காக
ஏக்கமாய்....

நன்றி அண்ணா.
மருத்துவத்தில் மட்டுமல்ல. கணக்கிலும் தாங்கள் புலி தான் போலும். :) :)

உங்களுக்காக : அன்று அவளைச் சந்தித்தேன். மீதி அடுத்த பாகத்தில் ..

kavitha
30-11-2005, 09:48 AM
அருமை கவி.... மீண்டும் ஒரு மலரும் நினைவுகள்...

அடிக்கடி இந்த தோழியை பற்றி கவிதை தருகிறீர்கள்.. அந்த



இல்லை அறிஞரே! இவள் அவளல்ல! இவள் தான் என் முதல் தோழி! பால்யத்தில் கிடைத்து பருவத்தில் தொலைந்தவள். அவளோ பருவத்தில் கிடைத்தவள்; பக்குவமானாவள். அவர்கள் இருவருக்கும் தென், வட துருவ வித்தியாசங்கள் உண்டு.


தோழியிடம் இந்த கவிதைகளை காட்டுங்கள்.. சந்தோசப்படுவார்.
ம்ஹீம்.... இறைத்தால் குறைந்து விடுமோ என்ற அச்சம் எப்போதும் உண்டு... ஒருவரிடமும் அவர்கள்மேல் கொண்ட அன்பினை வெளிப்படையாக ஒப்புவித்தது கிடையாது. நான் எழுதியது இருவருக்குமே தெரியாது. தெரிவிக்கும் சூழலிலும் நான் கிடையாது.
ஆனால் ஒன்று மாத்திரம் நிச்சயம். எங்கள் அன்பில் யார் உயர்ந்தவர் என்று யாரேனும் எங்களிடம் கேட்டால்.... கண்டிப்பாக அவள் என்னைச் சொல்வாள். நான் அவளைச் சொல்வேன். :)




தங்களின் சந்திப்பு பற்றி அடுத்த கவிதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்......

வாழ்த்துக்கள் கவி

நன்றி அறிஞரே. தொடர்ந்து வாசித்து ஊக்குவிக்கும் உங்களுக்கு நன்றி! விரைவில் முடிக்கிறேன்.

kavitha
30-11-2005, 09:52 AM
என்னது... வயதை எல்லாம் இப்படி வெளிப்படுத்துகிறீர்கள்..
:mad: சரியாப்போச்சு! அவர் எடுத்து விட்டால் நீங்கள் விளக்(கு)கம் வேறு தருகிறீர்களே! ஐவர் அணிக்கு வாங்க.... சேம் சைட் கோல் தான்!:D

(அவளைப்பார்த்தது எந்த வருடம் என்று சொல்லமாட்டேனே! :cool: )

பென்ஸ்
21-12-2005, 06:37 AM
கவிதா, நேரம் கிடைத்தால் இதை தொடரலாமே !!!! :-)

gragavan
21-12-2005, 07:05 AM
ஆகா கவிதா! தொடரும் சொல்லீட்டீங்களே! காத்திருக்கின்றேன்.

அதென்ன கதை போல் கவிதை! உண்மையைச் சொல்லப் போனால் கவிதையும் கதைதான். அருமையாக வந்திருக்கின்றது. உள்ளத்திலிருந்து எழுதியிருப்பதால் பட்டென்று பிடிக்கின்றது.

kavitha
21-12-2005, 08:32 AM
பெஞ்சமின், ராகவன் இருவருக்கும் என் நன்றிகள். விரைவில் மீதிப்பாகத்தை எழுதிவிடுகிறேன். எல்லாம் சோம்பல்தான்! மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.