PDA

View Full Version : ப்ரியனின் கவிதைகள்



ப்ரியன்
24-11-2005, 07:58 AM
* சில காதல் கவிதைகள் *

இலையுதிர்கால இலைகளாய்
மனத்தரையெங்கும்
விரிந்து கிடக்கின்றன
உன் நினைவுகள்!

******************************

இலைகள் உதிர்த்து
போர்வை ஒன்றை
பூமிக்கு போர்த்திருக்கின்றன
இலையுதிர்கால மரங்கள்!
வா,
கைகோர்த்து;
இலைகளின்
மனம் சாந்தியடைய
ஒரு சரக்சரக்
நடை பயிலலாம்!

******************************

அவளுக்கான காத்திருப்பில்
இலையுதிர்க்கும் மரமொன்றைத்
திட்டித்தீர்ப்பேன்!
மண்முத்தமிடும் இலையின்
இரைச்சலில்
அவள் கொலுசு
நாதம் கெடுமென!

******************************

நீ வர நேரமாகும்
நாட்களில்
என் மடி தங்கி
என்னைக் கொஞ்சிக்
கொண்டிருக்கும்
என்னால் உன் பெயர்
சூட்டப்பட்ட
இலை ஒன்று.

******************************

நேரமானதற்காக
கோபித்துக் கொள்கிறாய்!
அக்கணத்தில்
மறந்தும் போகிறாய்
நீ சாய்ந்திருந்த
மரத்தின் தண்டாய்
நான் உன்னை
தாங்கியிருந்தை!

******************************

என் வீட்டில் ஒரு புத்தம் புது
பூ பூக்கிறது!
நீயே வந்து
பறித்துக் கொண்டால்
நீ நண்பி!
நான் பறித்துத்
தரும்வரை காத்திருந்தால்
நீ காதலி!

******************************

- ப்ரியன்

பென்ஸ்
24-11-2005, 08:39 AM
இலையுதிர்கால இலைகளாய்
மனத்தரையெங்கும்
விரிந்து கிடக்கின்றன
உன் நினைவுகள்!

அங்கும் இங்குமாய் சிதறிய நினைவுகள்... தென்றல் பார்வைகளால் அலைக்களிக்க படுகின்றனவா???


இலைகள் உதிர்த்து
போர்வை ஒன்றை
பூமிக்கு போர்த்திருக்கின்றன
இலையுதிர்கால மரங்கள்!
வா,
கைகோர்த்து;
இலைகளின்
மனம் சாந்தியடைய
ஒரு சரக்சரக்
நடை பயிலலாம்!

மரணிக்கும் இலைகளின் சாந்திகாக "சரக் சரக்" என ஒரு அமைதி ஊர்வலம் !!!! அற்புதம் :-)


அவளுக்கான காத்திருப்பில்
இலையுதிர்க்கும் மரமொன்றைத்
திட்டித்தீர்ப்பேன்!
மண்முத்தமிடும் இலையின்
இரைச்சலில்
அவள் கொலுசு
நாதம் கெடுமென!

அவள் கொலுசு பாதம் நோகாமல் இருக்கதானே நான் இலை உதிர்க்கிறேன்...????



நீ வர நேரமாகும்
நாட்களில்
என் மடி தங்கி
என்னைக் கொஞ்சிக்
கொண்டிருக்கும்
என்னால் உன் பெயர்
சூட்டப்பட்ட
இலை ஒன்று.
]

காதலிக்கு இயற்கையான போறாமையை கொடுக்கிறிர்... அருமை....



நேரமானதற்காக
கோபித்துக் கொள்கிறாய்!
அக்கணத்தில்
மறந்தும் போகிறாய்
நீ சாய்ந்திருந்த
மரத்தின் தண்டாய்
நான் உன்னை
தாங்கியிருந்தை!

நீ தாங்கியதின் வலி அவள் அறிந்ததால் தானே, இந்த பொய் கோபம் ????


என் வீட்டில் ஒரு புத்தம் புது
பூ பூக்கிறது!
நீயே வந்து
பறித்துக் கொண்டால்
நீ நண்பி!
நான் பறித்துத்
தரும்வரை காத்திருந்தால்
நீ காதலி!

சூடும் போது???? மனைவியா???

அருமையான கவிதைகள் அன்பரே...

இலையுதிர் காலம் சோகமானதுதான், ஆனால் நீர் அருமையாக்கியிருக்கிறீர்... அருமையாக இருக்கிறது, ஒரு வசந்த காலத்தின் துவக்கம் தானே இது????

ப்ரியன்
24-11-2005, 09:21 AM
விரிவானதொரு பதிலுரைக்கு நன்றி பெஞ்ஜமின்.

இளசு
25-11-2005, 05:15 AM
அன்புள்ள ப்ரியன்,

உங்கள் வலைப்பூ மிக அருமை.

கல்கி இதழ்க் கட்டுரைக்கு என் வாழ்த்துகள்..


மன்றத்தில் உங்களுக்கு மிகச்சிறந்த ரசிகர் குழு உருவாகப்போகிறது பாருங்கள்..


இதோ அன்பு பெஞ்சமினுக்கு அடுத்து என் முறை ---



-------------------------------------

இலைகள் -

ஸ்வரம் கெடுக்கும் எதிரி
மடிதங்கும் இடுபெயர்க் காதலி
நடைதாங்கும் கம்பளம்

மரத்தண்டு
பூ

என எல்லாமே காதல் உப(ய)கரணங்களாய்
உருவகப்படுத்தியது --


இரசிக்கவைக்கிறது.. லயிக்க வைக்கிறது.


உங்கள் மன்றவரவு -மனமகிழ்வு..

பாராட்டுகள் ப்ரியன்..

பென்ஸ்
25-11-2005, 05:30 AM
இளசு, ப்ரியனுக்கு அவருக்கு நான் எப்போதோ ரசிகன் ஆகிவிட்டேன்...

ப்ரியன்... வலை பதிவில் உள்ள கவிதைகளை மன்றத்தில் பதிக்கலாமே.. இஙு நல்ல விமர்சகர்கள் இருக்கிறர்கள் (என்னை சொல்லவில்லை), ஒரு நல்ல விமர்சனம் (பாராட்டு மட்டும் அல்ல) கேட்பது ஒரு பாக்கெட் குளுக்கோசை ஒரேஅடியில் சாப்பிடுவது மாதிரி...

தொடருங்கள்... காத்திருக்கிறோம்...

இளசு
25-11-2005, 05:34 AM
அன்பு பெஞ்சமின்

ப்ரியன் ரசிகர்மன்றத் தலைவர் நீங்கதான்..
எனக்கு செயலாளர் பதவி கிடைக்குமா??????!!!!!!!

பென்ஸ்
25-11-2005, 06:00 AM
அலையாத்கிங்க இளசு.. அவரு என்ன அரசியல் கட்சியா துவங்க போறர்....????:rolleyes: :rolleyes: :D :D :D

போறமையா இருக்குபா... :rolleyes: :rolleyes: எனக்கு ஏனோ இந்த காதல் கவிதை மட்டும் எழுத வரமாட்டேன்க்குது (உனக்கு என்ன எழுத வரும்முன்னு கேக்குறது எனக்கு புரியுது..) :eek: :eek:

ம் ம் நானும் தான் நாலு ஐந்து பேரை காதலிச்சு பாத்திட்டேன்.. வெறும் காத்து தான் வருது....:confused: :confused: :D :D

ப்ரியன்
26-11-2005, 03:56 AM
நன்றி இளசு

கவிதைகளுக்கான விமர்சனத்திற்கும் வலைப்பூவில் வந்தமர்ந்து சென்றதற்கும் ;)

உங்கள் மனமகிழ்வு - என் மனநிறைவு

ப்ரியன்
26-11-2005, 04:02 AM
/* வலை பதிவில் உள்ள கவிதைகளை மன்றத்தில் பதிக்கலாமே.. */

இந்த சில காதல் கவிதைகளே அங்கிருந்து எடுத்து இடப்பட்டதுதான் பெஞ்சமின் (உங்க "பிச்சைகாரியாய்" கவிதை நல்லா இருந்துச்சு படிச்சேன் அப்போ விமர்சனம் போடமுடியலே)

/* இஙு நல்ல விமர்சகர்கள் இருக்கிறர்கள் (பாராட்டு மட்டும் அல்ல) */

வெறும் பாராட்டு மட்டும் எதிர்ப்பார்க்கவில்லை பெஞ்சமின் (+ மன்ற நண்பர்களே) நல்ல விமர்சனங்களே என்னைச் செதுக்கும்.விமர்சனங்கள் வேண்டும் சில சமயங்களில் அது விடமானாலும் அதுவே தாய்ப்பால் ஒவ்வொரு கலைஞனுக்கும்.

ப்ரியன்
26-11-2005, 04:03 AM
/* ப்ரியன் ரசிகர்மன்றத் தலைவர் நீங்கதான்..*/
/* எனக்கு செயலாளர் பதவி கிடைக்குமா??????!!!!!!! */

ஆகா கிளம்பிட்டாங்க மாப்பு

ப்ரியன்
26-11-2005, 04:06 AM
/* நானும் தான் நாலு ஐந்து பேரை காதலிச்சு பாத்திட்டேன்.. வெறும் காத்து தான் வருது....*/

காற்றை கொஞ்சம் உற்றுப் பாருங்கள் அதில்தான் உங்கள் காதலியின் மூச்சும் ஓளிந்திருக்கும்...

ப்ரியன்
26-11-2005, 04:20 AM
சில காதல் கவிதைகள் - 2
***********************************

கொஞ்சம் சீக்கிரம்
வா!
சொர்க்கக் கடலில்
படகு வலிக்க
பெரிய துடுப்புடன்
காத்திருக்கிறான்
காதல் கடவுள்!

***************

என் கூந்தலின் நீளம்
உன் விரல்கள்
உள் புகுந்து
அளக்க;
அறிகிறேன் நான்!

***************

காதலியின்
கொலுசு சிணுங்களிலும்
கண்ணாடி வளையல்களின்
உடைபடும் சப்தங்களிலும்
நெஞ்சு முட்டும்
வெப்ப மூச்சிலும்
மெதுவாக நெய்யப்படுகிறது
இரவு!

***************

வருவாய் என
எண்ணினேன்!
வரவில்லை நீ!
வரமாட்டேன் என
நினைக்கிறேன்!
கண்டிப்பாக வருவாய் தானே!

***************

அவளுக்காக ஒரு
செடி நட்டு வளர்த்து வந்தேன்!
பூத்ததும்
பூ கிள்ளி தலையில் சூடி
செடியை தனியே
தவிக்கவிட்டுப் போகிறாள்!

***************

அவன் வருவதாய் சொல்லி
வராத நாட்களில்
அழுது அழுது
வெளிறி நீலம்
கரைகிறது வானம்!

***************

உன் கண்களின்
ஆழத்தின் தொலைந்த
என்னை!
அதன் இமை மேடுகளில்
தேடிக் கொண்டிருக்கிறேன்!

***************

காலை எழுந்து
சோம்பல் முறித்து
கூந்தலில் கட்டி முடிக்கிறாய்!
நம்முடன் விழித்தே
பயணித்த இரவையும்!
கூந்தலில் சிக்கி தொலைந்த
என்னையும்!

***************

நான் அமர்ந்திருந்த
மரத்தின்
கார்கால தளிர்கள்
பழுப்பாகி உதிர்கின்றன
இன்னுமா வரவில்லை
நீ!

***************

பழைய என் பாலிய
கதைகளில்
ஏழுகடல் ஏழுமலை தாண்டி
பாதுகாக்கப்படும் உயிர்!
என்னுடையதை எங்கே
ஒளித்துவைத்திருக்கிறாய்!

***************

காற்றை வெட்டி
ரணமாக்குகின்றன
கூரான மூங்கில் இலைகள்!
என் மனதை
உன் நினைவுகள்!

***************

சந்திரகிரகணத்து அன்று
மட்டுமல்ல!
ஒவ்வொரு முறை
இரவில் நீ
வெளி வரும்போதெல்லாம்
விழுங்கப்படுகிறது
நிலவு!

***************

கடற்கரையில் காத்திருந்தேன்
வாராத உனக்காக
விட்ட பெருமூச்சில்
ஆவியாகிப் போனது
கடல்!

***************

நீ வர நேரமாகும்
நாட்களில் தெரிகிறது!
மரம் விட்டு
மடி விழும்
இலைகளின் நேசம்!

***************

உன் மடியில்
குழந்தையாக தவழ ஆசை
இன்று உள்புகுத்தி
நாளைப் பிள்ளையாய்ப்
பெற்றுக் கொள்ளேன்
என்னை!

***************

இரவில்
நீ மொட்டைமாடியிலிருந்து
எட்டிப் பார்த்தால்தான்
மொட்டு வெடிப்பேன் என
அடம் பிடிக்கிறது
என் வீட்டு மல்லிகை!

***************

எல்லா நதிகளும்
மலைக்கிடையில் தொடங்குகின்றன!
என் உயிர் நதி மட்டும்
ஏனோ,
உன் மார்புக்கிடையில்
தொடங்குகிறது!

***************

நேரமாகி அவன் வந்ததும்
சொல்லாமல் கொள்ளாமல்
ஓடிப் போகின்றன
அதுவரை துணையாயிருந்த
கண்ணீர் துளிகள்!

- ப்ரியன்.

ப்ரியன்
29-11-2005, 09:34 AM
என்னப்பா ஒரு மறுமடலும் காணோம் :( சரி அடுத்ததும் இடுகிறேன்

பென்ஸ்
29-11-2005, 09:38 AM
ப்ரியன்... அவ்வளவத்தையும் படிச்சு பதில் போட... ம்ம்ம்..
எல்லோரையும் போல "சூப்பர்" என்று மட்டும் எழுதி செல்ல மனம் வரவில்லை...ஏன்னா சுப்பரோ சூப்பர்
விரைவில்.. கமென்ட்ஸ்

ப்ரியன்
29-11-2005, 09:41 AM
சில காதல் கவிதைகள் - 3
***************************

கொஞ்சம்
என்னைத் தனிமையில்
செல்ல விடு நிலவே
எனக்காக அவன்
கரையில்
காத்திருப்பான்!

***************************

ரோசா மொழி
அறிவாயா நீ?
அறிந்தால்
ஒரு நாள் கவனித்துப் பார்
உன் கூந்தல் தங்கும்
ரோசாவின்
கர்வ பேச்சுக்களை!

***************************

அவன் என் வீட்டு
கதவு தட்டினான்!
ஆசையாய் ஓடித் திறந்தேன்!
கண்வழி உயிர் புகுந்தது
சூரிய கதிர்!
அடச்சே!

***************************

கண்மூடி நடக்கிறேன்
விழித்தால்
அவன் வந்த
கனவு கலையுமென!

***************************

அதோ!
தட்டுகிறான்!
மேலேற்ற முயற்சிக்கிறான்!
ஊசி வைத்து குத்தவும்
தயாராகிவிட்டான்!
என்ன செய்தாலும்
இமை திறந்து
விடுதலை அறிவிப்பதாய் இல்லை!
கனவில் புகுந்து தூக்கம் தின்ற
அவனை!

***************************

டேய் குண்டாய்ட்டே!
உன் நண்பர்களின்
கிண்டல் மொழி
பின் தின்பதெல்லாம்
என் உயிரல்லவா?

***************************

நீ கோலம் போடுவதை
தூரமிருந்து ரசித்தவன்
முடித்தாய் என வெளியே வந்தேன்
எழுந்து ஓடிப் போனாய்!
பாவம் அந்த
கடைசிப் புள்ளி
என்ன பாவம் செய்தது?

***************************

என்னைக் கண்டால்
விலகும் மாராப்பைத்
திட்டித்தீர்க்கிறாய்!
திட்டவேண்டியது மாராப்பையல்ல
என்னைக் கண்டால் விம்மும்
உன் மார்பைத் தான்!

***************************

காய்ந்த துணிகளை
எடுக்க வந்தாய்
எல்லாத் துணிகளும்
ஓடிவந்து உன் தோள் ஏறின!
அழகு பவனி!

***************************

உன் அப்பாவிற்கு
சலூனில் பேப்பர்
தேடி எடுத்துத் தந்தேன்!
அம்மாவிற்காக காய்கறிகாரனிடம்
சண்டைப் போட்டேன்!
தம்பியை கிரிக்கெட்
அணி தலைவனாக்கினேன்!
காரணத்தை அவர்கள்
அறியுமுன்!
நீ யோசித்து தெரிந்து கொள்!

***************************

முதலில் பேச ஆரம்பித்தது
அந்த கடிகாரம் தான்!
அப்புறம்!
புத்தகம்
தலையணை
பேனா
நீ என்னறை வந்து போனதும்
எல்லாமே பேச ஆரம்பித்து விட்டன!
கூச்சல் தாளவில்லை எனக்கு!
கொஞ்சம் வந்து
அதட்டிவிட்டுப் போனால் சுகம்!

***************************

என் குறிப்பேடு படித்து
ஆ! கவிதை என்றாய்!
பேனா கத்தியது!
"அவள் பேச்சு - ஆஹா கவிதை!
நீயும்தான் எழுதுறியே
சகிக்கலே!"

***************************

வாசித்து கவிதை
என்றாய்!
காண்பாயோ!
அது என் உயிரில்
விழுந்த உன்
கண் விதை!

***************************

உன்னைக் காணாத
நாட்களும் சாதாரணமாகவே
கழிகின்றன!
ஆனால்,
கடிகார முட்கள்
மட்டும் ஒடிக்கப்படுகின்றன!

***************************

கடல்நீரை குடிநீராக்க
என்னென்னவோ செய்கிறது
அரசாங்கம்!
வா,உன் பங்குக்கு
கால் நனைத்துவிட்டுப் போ
அலையில்!

***************************

சிக்கிமுக்கி கல்
உரசினால் தீ!
கண்ணும் கண்ணும் உரசினால்
காதல்!

***************************

கோவில்,
எனை கண்டதும்
தலை குனிந்து
வெட்கத்துடன்
ஓடிப் போனாய்!
முறைத்துத் தொலைக்கிறான்
கடவுள்!

***************************

வளையல்களை
உடைத்தெறிய வேணும்!
புரண்டும் படுக்கும்போது
எழும் ஒலியில்
உசாராகி ஓடி ஒளிகிறான்!

***************************

அந்த சபையில்
ஆரபாட்டமாய் ஆரம்பிக்கிறான்
பேச்சை
எந்தன் இதயம்!
முன் வரிசையில்
உந்தன் இதயம்
வந்தமர
பேச்சு முட்டி நிற்கிறான் அவனே!

***************************

என்னைப் பெருமைக்
கிடைத்துவிடக் கூடும்
என் கவிதைகளுக்கு
உன் பாதங்களுக்கு ஒரு
பூப்பாதை
ஆவதைவிட!

***************************

உந்தன் கூந்தல்
உதிர் பூவொன்றை
டைரியில் சேகரித்தேன்!
பல நாள் கழித்து
இன்று திறந்துப் பார்த்தேன்
உன் வாசம்
என் வாசம்
அதன் வாசம் கொஞ்சம்
கலந்து அருமையான
கவிதை ஒன்று
எழுதிப்பார்த்திருந்தது அது!

***************************

எல்லா காதலர்களும்
கவிஞர்கல்ல!
ஆனால்,
எல்லா கவிஞர்களும்
காதலர்கள்!

***************************

நீ
வாராததால் ஏமாந்து
அழும் காதலை
கொஞ்சம் தொட்டிலில்
இட்டு ஆட்டிவிட்டுப் போ!

***************************

உன் வீட்டுன் வாசலில்
தொடங்கும்
என் உயிருக்கான
வாசல்!

***************************

என்னச் சொல்லி
தேற்றுவது
நீ வராததால்
ஏமாந்து அழும்
என் காதலை!

***************************

என்னைக் காதலிப்பதால்
உனக்கு என்ன மிச்சம்
என என்னை கேள்வி கேட்பவளே!
காதலே மிச்சம்தானே அடி
எனக்கு!

***************************

காதலி!

இல்லையென்றால்,
உந்தன் உயிரும்
எந்தன் உயிரும்
எவ்விடத்தில்
முடிச்சிடப்பட்டிருக்கிறதென
பார்த்து பிரி!

***************************

என் இதயத்தையும்
உன் இதயத்தையும்
விளையாடவிட்டு
அமர்ந்து
வேடிக்கைப் பார்க்கிறாள்
அம்மா காதல்!

***************************

வாராதே என்கிறாய்
தள்ளிப் போ என்கிறாய்
நீ எவ்வளவுதான்
உன்னை விட்டு என்னை விலகச் சொன்னாலும்
உன்னையே கட்டிக் கொண்டு அழுகிறது
பாழாய்ப் போன
என் காதல் மனசு!

***************************

தூக்கிப் போடு!
உதைத்துப் பார்!
உனக்கான பந்துதான்
என் இதயம்!
ஆனால்,
கொஞ்சம் மெதுவாக
அது ஒன்றும்
பூப்பந்து அல்ல
கண்ணாடிப் பந்து!

- ப்ரியன்.

இளசு
29-11-2005, 11:12 PM
ஒரு குவளைத் தேனை அப்படியே குடிக்கச்சொன்னால்?
துளித்துளியாய் சொட்டி இன்னும் காத்திருக்கவைத்தால்?

இரண்டுமே இன்பவேதனைதான்..

காதல் போல -


மேடைப்பேச்சினை தடுமாற வைத்தவள்
மனசையும் கூந்தலையும் காலையில் முடித்தவள்
காத்திருக்க வைத்தவள், காத்திருந்து வான்நீலம் கரைத்தவள்


எத்தனை எத்தனை ஒளிவீச்சுகள்... இருள்வலிகள்..
முத்தம் மட்டுமா ஈரம்?
கண்ணீரும்தான்..

கடல் பற்றி இரு இல்பொருளணி கற்பனைகளும் அருமை..



உங்கள் வரிகளில் புத்துணர்ச்சி..வீச்சு...அனுபவித்த உரிமை எல்லாம் தெரிகிறது...


ப்ரியனின் தீவிர ரசிகன் நான்...

மத்தவங்களும் வாங்க..


(பெஞ்சமினின் துளித்துளி விமர்சனங்களுக்கும் நான் ரசிகன்..)

பென்ஸ்
01-12-2005, 11:48 AM
*/மன்னிக்க இது மொத்தமும் என்னோட சிந்தனைகளும் , கருத்துகளும் தான்.. இவை இலக்கனப்படி சரியா தவறா என்று கூட எனக்கு தெரியாது... /*

ப்ரியன்,

கவிதைகள் ஒவ்வொன்றையும் குறித்து கமென்ட் தருவதற்க்கு முன் உங்கள் கவிதைகள் மொத்ததையும் குறித்து என் விமர்சனம் கொடுக்க வேன்டும் என்று நினைதேன்...

தாங்கள் இங்கு பதித்த கவிதைகள் அனைத்தும் கைகூ கவிதைகள்... நான் பொதுவாக கைகூ கவிதைகளை பின்வரும் வகையாக பாக்கிறேன்...

1, கேள்விகளாக கேட்ட்கபடும் கவிதைகள்
2, நம் கேள்விகளுக்கு விடையாக சொல்லபடும் கவிதைகள்
3, statements

*/கொஞ்சம் சீக்கிரம்
வா!
சொர்க்கக் கடலில்
படகு வலிக்க
பெரிய துடுப்புடன்
காத்திருக்கிறான்
காதல் கடவுள்!
/*
இந்த கவிதை அற்ப்புதமான ஒரு statement இல்லையா... இதற்க்கு பதில் இல்லை.. இதை குறித்து நானும் இதர்க்கு முன் யோசித்தது இல்லை... இதை என் மன நிகழ்வுகளில் புகுத்து நான் மகிழ்ந்து கொண்டேன்... இவ்வாறு உள்ள கவிதைகள் உணர்வுகளால் அனுபவிக்கபடுகின்றன... இதற்க்கு சிங்கி அடிக்கலாம்.. எதிர் பாட்டு பாடுவது கடினம்...

உங்கள் கவிதைகள் அதிகம் இந்தவகை தான்...


*/வருவாய் என
எண்ணினேன்!
வரவில்லை நீ!
வரமாட்டேன் என
நினைக்கிறேன்!
கண்டிப்பாக வருவாய் தானே!
/*
இதுல பாத்திங்கனா, ஒரு கேள்வியாக கவிதையை கேட்டு இருக்கிறிர்கள்... சாதரனமாக "open questions" மற்றும் "closed questions".. இது ஒரு ஆம் இல்லை என்று பதில் தரகூடிய "closed questions" கவிதை.. இதன் முடிவை "என்ன செய்ய போகிறாய்?" என்பதை கேட்டு இருந்தால் அது பல பதில் தரக்குடிய கேள்வி கவிதையாய் ஆகி இருக்கும்.. உதாரனமா...

*/என்னச் சொல்லி
தேற்றுவது
நீ வராததால்
ஏமாந்து அழும்
என் காதலை!
/*
அப்போது எதிர்பாட்டு அதிகமாக கிடைக்கும்.... இல்லைனா ஆம் இல்லை தான்...
கடைசியா... மனதில் உள்ள கேள்விகளின் பதிலாக சொல்லபடும் கவிதைகள்... திலையும் open மற்றும் closed என்று நான் சொல்லுவேன்... அதாவது...

*/காற்றை வெட்டி
ரணமாக்குகின்றன
கூரான மூங்கில் இலைகள்!
என் மனதை
உன் நினைவுகள்!
/*
இந்தகவிதையில் தாங்கள் தங்கள் காயத்திற்க்கான காரணம் அவள் நினைவுகள் என்று கூறுகிறிர்கள், இதற்க்கு மேல் அதை பற்றி எதுவும் சொல்லமுடியாது (கடினம்)... அதாவது closed answer.

இந்தமாதிரி எல்லா வகையான கவிதையும் இந்த அடுக்கில் இருக்குப்பா...

ஒவ்வொரு கவிதையும் காதலை நூலாய் வைத்து காதலனையும் காதலியையும் தைத்திருக்கிறது, அதனால் தன் சிறு சிறு காயங்கள்...

மீண்டும் வருகிறேன்....

ப்ரியன்
13-12-2005, 06:14 AM
சில காதல் கவிதைகள் - 4
**************************************

உன்னை ஒருமுறையாவது
தொட்டுப் பார்க்க முடியவில்லையே
என்ற சோகத்திலேயே
கருப்பாகிப் போனது
உன் நிழல்!

******************

ஒவ்வொரு முறை
நான் கோவில் செல்லும்போதும்
உந்தன் கூந்தல் உதிர்ப் பூவொன்றை
சூடக் கேட்டு
நச்சரிக்கிறான் கடவுள்!

******************

உன்னைப் பூவென
மயங்கி சுற்றித் திரியும்
வண்டுகளுக்கு சொல்லிவிட்டாயா
உன் இதழ் தேன்
நான் உண்ண மட்டுமென?

******************

கோவில் விட்டு
நீ வெளிவரும்போது
பூக்கடை கிழவி கத்துகிறாள்
அய்யோ!சிலை ஒண்ணு
கோவில்விட்டு போகுதுன்னு!

******************

உன்னைப் பற்றி
எழுத எழுதவே
அழகாகிறது என் தமிழ்!

******************

வெட்கத்தோடு என்னை தழுவுகிறாய்!
அதை கண்ட வெட்கத்தில்
வாசல்கண்ணை படாரென
சாத்துகிறது காற்று!

******************

தரையில் நீ பதித்திருந்த
தடத்தை கோலமென
சுற்றி புள்ளி வைக்கிறது
மழை!

******************

அழகுக்கு விளக்கம் கேட்ட
குழந்தைக்கு
உன்னைக் காட்டினேன்!
வெட்கத்தோது மாரில் முகம் புதைத்தாய்
அடடா!பேரழகு!

******************

ரோஜா பறிக்கையில்
உன் விரல் காயப்படுத்தியதற்காக
வெட்டப் போனேன்!
தொட்டுவிடும் ஆசையில்
குத்திவிட்டதாய்
அழுது தொலைத்தது செடி!

******************

நம் இருவர் புகைப்படமெடுத்து
கருப்பு வெள்ளை மையில்
வயதான நம்மை வரைந்திருந்தாய்
கவனித்தாயா?
எல்லாம் மாறியிருந்தது
நம் காதலை தவிர!

******************

கோபம் மறந்த
அக்கணத்தில் கண்மூடி
புன்னகைத்தாய்!
ஒரு பட்டாம்பூச்சியின்
சிறகசைப்போடு என்னை வந்து
கட்டிக் கொண்டது காதல்!

******************

நேரம் கிடைக்கையில்
கொஞ்சம் கற்றுக்கொடு
உன்னைப் போல்
சிணுங்க
உன் கொலுசுகளுக்கு!

******************

என்னை அதிகமாய்
கனவு காண செய்தவர்களுக்கு
என் தண்டனை

தமிழுக்கு - என் கவிதை

உனக்கு - என் காதல்!

******************

நீ கண்மேய்ந்த இடத்திலிருந்த
என் எழுத்துக்கள்
பிரசவமாயிருந்தன
கவிதைகளாய்!

******************

குழந்தைகளுடன் குழந்தையாய்
கப்பல் விட்டுக் கொண்டிருந்தாய்!
உன்னைத் தொட்டு அவ்வப்போது
சிலிர்த்துக் கொண்டது
மழை!

******************

தலைகுளித்து வெளிவந்தாய்
தொலைவானத்து நட்சத்திரங்களாய்
கூந்தல் ஏறி அமர்ந்திருந்தன
நீர் துளிகள்!

******************

நீ கண்மூடிச்
சொல்லும்
"அர்சுனா ! அர்சுனா !"
அழகிற்காகவே
அடிக்கடி சாட்டைச் சுழற்றுகிறானாம்
கிருஷ்ணன்!

- ப்ரியன்.

இளசு
13-12-2005, 06:23 AM
காதல் பயணத்தில் எத்தனை துணைவர்கள்...!

கடவுள், கிழவி, குழந்தை, மழை, காற்று, கொலுசு, ரோஜாச்செடி,
தமிழ், கவிதை, புகைப்படம்...

'நரையால்' மாறாத காதலாய் நிலைத்திருக்கும் காதல் அல்லவா?

வாழ்த்துகள் ப்ரியன்..

தபுசங்கரின் ரசிகன் நான்.. இப்போது உங்களுக்கும்...

பென்ஸ்
13-12-2005, 09:02 AM
ம்ம்ம்ம்.. எப்பிடியா.. எப்பிடி.. எது எல்லாம்... இருந்து யோசிப்பிங்களோ???:confused: :confused: :confused:

உங்களை போல் ஒரு காதல் கவிதை எழுத இன்னும் ஒரு முறை காதலிக்க வேண்டும் என்றோ இல்லை ஓராயிரம் முறை காதலில் தோல்வியுற வேண்டும் என்று சொன்னாலும் நான் அதற்க்கு தயார்...:mad: :mad: :mad:

இல்லையென்றால்

.. உங்களுக்கு பிடிக்காத உங்கள் கவிதைகளில் ஒன்றை எனக்கு கொடுங்களேன்... நானும் ஒரு சிறப்பான காதல் கவிதை எழுதிவிட்டதாய் மார் தட்டி கொள்கிறேன்...:rolleyes: :rolleyes: :rolleyes: :D :D

ப்ரியன்
13-12-2005, 11:13 AM
கடிதம் கை சேரும் கணம்
************************************
ஊனமான நெஞ்சம் மெல்ல
தத்தித் தத்தி
தாவும்!

இயலாமையில் தீக்கிரையாக்கிய
என் கவிதைகள்
கொஞ்சம் சிறகு
முளைத்துப் பறக்கும்!

அறுப்பட்ட வீணை மனதில்
மெல்லிய கீதம்
இசைக்கப் படும்!

எரித்துத் தொலைக்கும்
என் வீட்டு நிலவு
குளிர் பரப்பும்!

என் காதல் வால்
முளைத்துத்
தாவித் திரியும்!

இத்தனையும் நடக்கும்!
ஊடல் உருகி
கூடலாகும் போது
அனுப்புவாயே
ஒரு கடிதம்!
அது வந்துச் சேரும் கணம்!

- ப்ரியன்.

ப்ரியன்
13-12-2005, 11:17 AM
தாங்கள் இங்கு பதித்த கவிதைகள் அனைத்தும் கைகூ கவிதைகள்... நான் பொதுவாக கைகூ கவிதைகளை பின்வரும் வகையாக பாக்கிறேன்...

1, கேள்விகளாக கேட்ட்கபடும் கவிதைகள்
2, நம் கேள்விகளுக்கு விடையாக சொல்லபடும் கவிதைகள்
3, statements

நீங்கள் சொன்ன எல்லா விடய்ங்களையும் ஏற்றுக்கொண்டேன் பெஞ்சமின்...என்னுடையதை ஹைக்கூ வகை என்றுச் சொன்னால் ஹைக்கூ உலகம் மன்னிக்காது...ஹைக்கூ அருமையான கவிதை நடை அதற்கும் இதற்கும் ரொம்ப தூரம்...என்னதை உரைநடை வடிவம் என்றுச் சொல்லுங்கள் சரியாக இருக்கும்

பென்ஸ்
13-12-2005, 02:30 PM
நீங்கள் சொன்ன எல்லா விடய்ங்களையும் ஏற்றுக்கொண்டேன் பெஞ்சமின்...என்னுடையதை ஹைக்கூ வகை என்றுச் சொன்னால் ஹைக்கூ உலகம் மன்னிக்காது...ஹைக்கூ அருமையான கவிதை நடை அதற்கும் இதற்கும் ரொம்ப தூரம்...என்னதை உரைநடை வடிவம் என்றுச் சொல்லுங்கள் சரியாக இருக்கும்


ப்ரியன்... அவையடக்கம் என்பது இதுதானா??? :rolleyes: :rolleyes:

ஹைக்கூ என்பதே இதுதானோ????:) :)

மனுஷா... அப்பப்ப வந்து இது போல மன்றத்தை
கவிதை மழையில் நீராட்டிவிட்டு போங்கள்... :) :) :)

இந்த பிரியன் என்று புனை பெயர் வைத்தாலே
கவிதை பொத்துக்கிட்டு வருமோ???:rolleyes: :rolleyes: :D :D

ப்ரியன்
19-12-2005, 05:52 AM
என் இனிய ஹைக்கூவே .... - மரவண்டு கணேஷ்

http://maravantu.blogspot.com/

தமிழில் எனக்கு மிகவும் பிடித்த மூன்று ஹைக்கூ கவிதைகள் என இந்த மூன்று கவிதைகளைச் சொல்வேன் .

சிரிக்கும் புத்தர் சிலை
உதட்டின் மேலே
புணரும் ஈக்கள்

- அமுதபாரதி.

அவசரக்காற்று
முதல் மழை
புளியம் பூக்கள்

- அறிவுமதி

இரவுக்கவிதை
நகரும் முற்றுப் புள்ளி
நிலா

- ஆர்.சி.முத்துக்கண்ணு

ஹைக்கூ கவிதைகள் என்றால் எனக்கு உயிர். தேடித் தேடிப் படிப்பேன் . படித்த கவிதைகளை நண்பர்களிடம் கூறி மகிழ்வேன். இதனால் நண்பர்கள் சிலர் என்னை ஹைக்கூ- கணேஷ் என்றழைக்கத் தொடங்கினார்கள் . சென்னையில் வேலை கிடைத்தவுடன் , இணையத்திலும் ஹைக்கூவைப் பற்றி எழுத ஆரம்பித்தேன் . நண்பர் சோகம் சஃபீக்கின் துணையுடன் "தமிழ் ஹைக்கூ" என்றொரு மின்-குழுமத்தை நடத்தி வந்தேன். பிறகு நண்பர் கணேஷ் சந்திரா அவர்கள் நடத்தி வரும் தழிழ் ஓவியம் இணைய தளத்தில் ஹைக்கூவைப் பற்றித் தொடர் கட்டுரை ஒன்று எழுதினேன். சமீபகாலமாக ஹைக்கூ கவிதைகள் படிப்பது குறைந்து விட்டது என்றே நினைக்கிறேன் . கடந்த மாதம் கவிஞர் மணிமேகலை நாகலிங்கம் அவர்கள் ஹைக்கூ குறும்படம் ஒன்றைத் தயாரித்து அதைச் சென்னையில் திரையிட்டிருக்கிறார். நிகழ்ச்சிக்கு அழைப்பு அனுப்பியிருந்தார்கள் . ஆனால் என்னால் செல்ல முடியவில்லை.

0


நான் இதுவரை ஹைக்கூ கவிதையைப் பற்றி பல்வேறு இடங்களில் எழுதியவற்றை இங்கே தொகுத்தளிக்கிறேன். பிழை இருப்பின் தெரியப்படுத்தவும்.


1. ஹைக்கூவின் தோற்றம்


ஹைக்கூ என்ற மூன்று வரிக் குறுங்கவிதை கருக்கொண்டது ஜப்பானிய மண்ணில் தான். சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழிகள் இரண்டு அதில் ஒன்று நமது தமிழ், மற்றொன்று ப்ரெஞ்ச். தமிழ் இலக்கிய வரலாற்றை சங்கத்தின் அடிப்படையில் முதல் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் எனப் பிரிக்கிறார்கள். ஆனால் ஜப்பானிய இலக்கிய வரலாற்றை அதன் தலைநகர் மாற்றத்தின் அடிப்படையில் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள்.

பிரிவு 1 : நாராக் காலம் (கி.பி 700 முதல் 794 வரை)

இக்காலத்தில் சோக்கா என்ற கவிதை வடிவம் வழக்கத்தில் இருந்தது. அடுத்தடுத்த அடிகள் 5,7 என்ற அசை அமைப்பிலும், கடைசி இரண்டு அடிகள் 7,7 என்ற அசை அமைப்பிலும் இருந்தது சோக்கா கவிதை. சோக்கா கவிதைக்கு வரி வரம்பு எதுவும் கிடையாது. மக்கள் இந்தக் கவிதையை விரும்பி ரசிக்கவில்லை.

பிரிவு 2 : ஹூயன் காலம் (கி.பி 794 முதல் 1192 வரை)

இக்காலத்தில் சோக்கா என்ற நீண்ட கவிதை தன்கா என்ற 5 வரிப் பாடலாகசுருங்கியுள்ளது. 5,7,57,7 என்ற அசை அமைப்பில் அமைந்த ஐந்து வரிப் பாடலே தன்கா கவிதை.

பிரிவு 3 : காமெக்கூரா காலம் (கி.பி 1192 முதல் 1332 வரை)

இக்காலத்தில் ஜாக்கின்சூ என்ற செய்யுள் தொகை வடிவம் பிறந்திருக்கிறது கடுமையான இலக்கணங்கள். இந்தக் கவிதையும் மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை.

பிரிவு 4 : நான்போக்குச்சாக் காலம் (கி.பி 1332 முதல் 1603 வரை)

இக்காலத்தில் "நோஹ்" என்ற இசை நாடக சமய சமுதாயக் கவிதைகள்வெளிவந்தன.

பிரிவு 5 : எடோ காலம் (கி.பி 1603 முதல் 1863 வரை)

இக்காலத்தில்தான் சீன ஜப்பான் மொழிக் கலவையாக ஹைக்கூ கவிதை தோன்றியது. மூன்றே மூன்று அடிகள் 5,7,5 என்ற அசை அமைப்பில் அமைந்தது.

பிரிவு 6 : டோக்கியோ காலம் (கி.பி 1863 க்கு அடுத்தது)

ஹைக்கூ கவிதை பரவலாக அறியப்பட்டு ப்ரெஞ்ச், ஆங்கிலம் என கொடிகட்டிப் பறந்து தமிழுக்கும் வந்துவிட்டது.


2. ஹைக்கூ பெயர்க் காரணம்

ஆரம்ப காலத்தில் ஹைக்கூ கவிதை ஹொக்கூ என்றே அழைக்கப்பட்டது. பிறகு ஹைகை என்று திரிந்து ஹைக்கூ என்றாயிற்று. ஹைக்கூ என்றால் அணுத்தூசி போன்ற சிறிய கவிதை என்று பொருள் கூறுகின்றனர். தமிழில் ஹைக்கூ கவிதையானது துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக்கவிதை, வாமனக் கவிதை, அணில் வரிக் கவிதை என்று பலவாறாக அழைக்கப்படுகிறது.

தமிழக ஹைக்கூ கவிஞர் ஓவியர் அமுத பாரதி ஹைக்கூவிற்கு அருமையான விளக்கம் அளித்திருகிறார்.


ஐ + கூ = ஐக்கூ (ககர ஒற்று மிகுந்துள்ளது)

ஐ என்றால் கடுகு, கூ என்றால் பூமி, கடுகளவு உருவில் சிறியதாக இருந்தாலும் பூமியளவு பரந்த விடயத்தை உள்ளடக்கியது இந்த ஹைக்கூ கவிதை. பெண்கவி மித்ரா அவர்கள் ஹைக்கூவிற்கு நுண்மான் நுழைபுலம் என்று பொருள் தருகிறார்.

3. ஹைக்கூ கவிதையின் அளவு வரையறை

ஹைக்கூ கவிதை என்பது முதல் வரியில் 5 அசையையும், இரண்டாவது வரியில்7 அசையையும், மூன்றாவது வரியில் 5 அசையையும் தாங்கி நிற்கும் மூன்று வரிக்கவிதை. அசை என்னும் சொல் ஆங்கிலத்தில் சில்லபிள் என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியில் ஒஞ்சி என்றழைக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியில் ஒவ்வொரு எழுத்தும் ஓர் அசை என்ற கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது . தமிழ் யாப்பிலக்கணத்தில் அசையானது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.ஜப்பானிய மொழியின் ஒஞ்ஜி என்பது தமிழில் உள்ள நேரசைக்குச் சமம். ஒற்று எழுத்துக்கள் கணக்கில் அடங்கா. (இது ஜப்பானிய மொழிக்கும் தமிழுக்கும் பொருந்தி வரும் விதி!) .ஆரம்ப காலத்தில் இந்த 5,7,5 என்ற அசை அமைப்பு முறையாக கடை பிடிக்கப்பட்டது. காலப் போக்கில் இந்த 5,7,5 என்ற அளவு கோலைத் தூற எறிந்து விட்டார்கள்.

ஓவியக் கவிஞர் அமுதபாரதி அவர்கள் , தமிழ் அசை மரபின் 5,7,5 என்ற அசை (நேரசை, நிரையசை) வடிவில் அமைந்த ஹைக்கூ கவிதைகளை காற்றின் கைகள் என்ற ஹைக்கூ நூலில் படைத்திருக்கிறார்.

4. ஜென் பெயர்க்காரணம்

புத்த மதத்தின் கிளைப் பிரிவான ஜென் தத்துவத்தைப் பரப்புவதற்கு ஒரு நல்ல ஊடகமாக ஹைக்கூ கவிதையானது பயன்படுத்தப்பட்டது. "த்யான்" என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ஆழ் நிலை தியானம் என்று பொருள். இந்த "த்யான்" என்ற ஆன்மீக விதையை தமிழகத்தின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த போதிதர்மர் (Bodhi Daruma) என்பவர் சீனாவிற்கு எடுத்துச் சென்று பெளத்த மதத்தைப் பரப்பினார்.சீனாவில் இந்த தியான் என்ற பதம் சான் என்று மருவிற்று. சீனாவில் பெளத்த மதத்திற்கு ஆரம்பகாலத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் காலப்போக்கில் பெளத்த மதத்திற்கு சீனாவில் எதிர்ப்பலை கிளம்பியது . உடனே போதிதர்மர் இந்த சான் என்ற ஆன்மீக விதையை எடுத்துக் கொண்டு ஜப்பானுக்குச் சென்றார். ஜப்பானில் சான் என்ற பதம் ஜென் என்று மருவிற்று. ஜப்பானிய மக்களிடையே பெளத்த மத ஜென் தத்துவத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஜென் என்பது ஒரு சூட்சுமமான விடயம் . யாராவது ஒருவர் ஜென் என்றால் என்ன என்று விளக்கம் அளித்தால் அது பொய்யாகத் தான் இருக்கும் ."Zen Teaches Nothing" ஜென் சொல்லித் தருவது எதுவுமில்லை அப்படியென்றால் ஜென் என்பதை எப்படி உணர்வது ? இதற்கு ஒரு சிறிய கதை உண்டு.


ஒரு பெரிய கடலில் மீன்கள் உலவிக் கொண்டு இருந்தன . ஒரு சிறிய மீன் தனது தாய் மீனிடம் "அம்மா அம்மா கடல் என்று சொல்கிறார்களே அப்படியென்றால் என்ன? அது எங்கே இருக்கிறது ? " என்று கேட்டது.


உடனே தாய் மீன் "கடல் என்பது உனக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கிறது" என்று பதிலளித்தது .


அந்தக் குட்டி மீன் "என்னால் அதைக் காணமுடியவில்லையே அதை உணர முடியவில்லையே என்று கேட்டது .


உடனே தாய் மீன் , "நீ பிறந்தது இங்கே தான். ஒரு வேளை உன் இறப்பும் இங்கேயே நிச்சயிக்கப்பட்டிருக்கலாம் அதனால் தான் உன்னால் உணரமுடியவில்லை " என்று பதிலளித்தது.


இதைப் போல் தான் மனிதர்களாகிய நாமும் ஜென் என்ற தத்துவக் கடலுக்குள்தான் இருக்கிறோம். ஆனால் அதை உணர முடியாது.


5. ஹைக்கூ கவிதையின் வளர்ச்சி


ஜப்பானிய கவிஞர்கள் மோரிடேகே (1473-1549) மற்றும் சோகன் (1465-1553)ஆகியோர் ஹைக்கூ கவிதையின் முன்னோடி என்றழைக்கப்படுகிறார்கள்.

உதிர்ந்த மலர் / கிளைக்குத் திரும்புகிறதோ ? / வண்ணத்துப் பூச்சி (மோரிடேகே)

நிலவிற்கு ஒரு / கைப்பிடி வைத்தால் / எத்துனை அழகான கைவிசிறி (சோகன்)

ஹைக்கூ முன்னோடிகளை அடுத்து ஹைக்கூ நால்வர்கள் தோன்றினார்கள் .

1. மட்சுவோ பாஸோ (1644 - 1694)

2. யோசா பூசன் (1716-1784)

3. இஸ்ஸா (1763-1827)

4. ஷிகி (1867-1902)


1. மட்சுவோ பாஸோ (1644 - 1694)



ஹைக்கூவின் கம்பர் என்றழைக்கப் படும் இவர் அருமையான ரெங்கா கவிஞர் ஆவார்.பாஸோ என்றால் வாழை மரம் என்று பொருள் . இவர் தங்கியிருந்த குடிசை அருகே வாழைமரம் இருந்ததால் இவர் பாஸோ என்றழைக்கப் பட்டார் . பாஸோ தன் கவிதை சீடர்களுக்கு நிறைய அறிவுரைகள் கூறுவார்.
"எழுதும் பொழுது உனக்கும் கருப்பொருளுக்கும் ஒரு மயிரிழை கூட இடைவெளி இருக்கக் கூடாது , உன் உள்மனதை நேரடியாகப் பேசு , எண்ணங்களைக் கலையவிடாதே , நேரடியாகச் சொல் " இது தான் ஹைக்கூ சீடர்களுக்கு பாஸோ கூறும் அறிவுரை .

பாஸோ சாமுராய் என்ற போர் வீரன் இனத்தைச் சார்ந்தவர் . இந்த இனத்தவர்கள் தன் நாட்டு மன்னருக்காக உயிரைக் கூட இழப்பதற்குத் தயாராக இருப்பார்களாம் .ஒரு வேளை மட்டுமே உண்பார்களாம் . தனது சொந்த நாட்டிற்கே துரோகம் செய்ய நேர்ந்தாலோ , எதிரியிடம் சிக்கிக் கொண்டாலோ , தங்களது போர் வாளை எடுத்துத் தங்கள் வயிற்றைக் கிழித்து வீரமரணம் அடைவார்களாம் .இந்த வீர மரணத்திற்கு ஹராஹிரி (Harakiri) என்று பெயர் .

ஜப்பானியர்கள் தவளையைப் பாட்டுப் பறவை என்று செல்லமாக அழைக்கிறார்கள் .பாஸோவின் கவிதைகளில் தவளை தான் கதாநாயகன்.

பழைய குளம் / தவளை குதிக்கையில் / தண்ணீரில் சப்தம்
0
எந்தப் பூ மரத்திலிருந்தோ ? /எனக்குத் தெரியவில்லை /ஆனால் ஆஹா நறுமணம்
0
மேகம் சில நேரங்களில் / நிலவை ரசிப்பவனுக்கு /ஓய்வு தருகிறது


2. யோஸா பூசன் (1716-1784)



சீன ஓவியத்தை ஜப்பானுக்கு அறிமுகப் படுத்தியவர் இவரே. தனது தூரிகையால் பாஸோவின் கவிதைகளை மெருகூட்டினார் .



குழந்தையின் முகத்தில் / மகிழ்ச்சி / கொசு வலைக்குள் !
0
ஆலய மணியின் மீது / ஓய்ந்து உறங்குகிறது /வண்ணத்துப் பூச்சி !
0
பனி வீழ்ந்த முள் செடி / அற்புத அழகு / ஒவ்வொரு முள்ளிலும் துளி

3. இஸ்ஸா (1763-1827)


இவர் கிராமப் புறத்தில் பிறந்ததால் இவரை நாட்டுப் புறப் பூசணி என்று செல்லமாக அழைப்பார்கள் . இவரது வாழ்க்கை இன்னல்கள் நிறைந்தது. இளம் வயதிலேயே தாயாரை இழந்து , மாற்றாந்தாயின் கொடுமைக்கு உட்பட்டு வீட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டார் சிறு சிறு பூட்சிகளின் பால் மிகுந்த பரிவு காட்டினார்.




0
அரிசியைத் தூவினேன் / இதுவும் பாவச் செயலே / கோழிகளுக்குள் சண்டை
0
பெட்டிக்கு வந்த பின் / எல்லாக் காய்களும் சமம்தான் /சதுரங்கக் காய்கள்
0
பனியை உருக்கக் கூட /காசு தேவை / நகரத்து வாழ்க்கை

4. ஷிகி (1867 - 1902)


இவர் ஹைக்கூ நால்வரில் இறுதியாவனவர் . இவர் ஹைக்கூவின் புரட்சிக்குயில் என்றழைக்கப்படுகிறார். பாஸோவின் கவிதைகள் வீரியமற்ற மந்தமான (Prasoic) கவிதைகள் என்று சாடினார் இவர்.

சிதைந்த மாளிகை/தளிர் விடும் மரம்/போரின் முடிவில்

வெப்பக் காற்று/ப்ளம் மலர்கள் உதிரும்/கல்லின் மீது

தத்தித் தத்தி நடக்கும் சிட்டுக்குருவி /தாழ்வார ஓரங்கள் /ஈரப் பாதங்கள்


6) ஹைக்கூ அயல் நாடுகளில் பரவியது எப்படி . ?


மேற்கத்திய ஹைக்கூ கவிதையின் வளர்ச்சிக்குக் காரணமானவர்கள் என சேம்பர்லின், R.H பிளித், ஹெரால்ட் ஹெண்டெர்சன், கென்னத் யசூதா, எஸ்ட்ரா பவுண்ட் ஆகியோரைக் குறிப்ப்பிடலாம். பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !என்று சொன்ன நம் பாட்டுப் பாட்டன் பாரதி தான் ஹைக்கூ விதையை தமிழ் மண்ணில் தூவினார்.


ஜப்பானியக் கவிதை (பாரதியார் கட்டுரை) 16-10-1916 (சுதேசமித்திரன் பத்திரிக்கை)


சமீபத்தில் மார்டன் ரிவியூ என்ற கல்கத்தா பத்திரிக்கையில் உயானோ நோக்குச்சி என்ற ஜப்பானியப் புலவர் ஒரு லிகிதம் எழுதி இருந்தார். அவர் அதிலே சொல்வதென்னவென்றால் மேற்குக் கவிதையில் சொல் மிகுதி எண்ணத்தை அப்படியே வீண் சேர்க்கையில்லாமல் சொல்லும் வழக்கம் கவிதையிலே இல்லை. எதுகைச் சத்தம் முதலியவற்றைக் கருதியும் சோம்பற் குணத்தாலும், தெளிவில்லாமையாலும் பல சொற்களைச் சேர்த்து வெறுமனே பாட்டை அது போகிற வழியெல்லாம் வளர்த்துக் கொண்டு போகும் வழக்கம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிகம் இருக்கிறது. தம்முடைய மனதிலுள்ள கருத்தை வெளியிடுவதில் மேற்குப் புலவர்கள் கதைகள் எழுதுவோரைக் காட்டிலும் சக்தி குறைந்திருக்கிறார்கள். ஜப்பானில் அப்படியில்லை வேண்டாத சொல் ஒன்று கூடச் சேர்ப்பது கிடையாது." கூடை கூடையாய் பாட்டெழுதி அச்சிட வேண்டும் " என்று ஒரே ஆவலுடன் எப்பொழுதும் துடித்துக் கொண்டிருப்பவன் புலவனாக மாட்டான். கவிதையெழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையை கவிதையாகச் செய்தோன். அவனே கவி. புலவனுக்குப் பணம் ஒரு பொருளன்று. வானத்து மீன், தனிமை, மோனம் மலர்களின் பேச்சு - இவற்றிலே ஈடுபட்டுப் போய் இயற்கையுடன் ஒன்றாக வாழ்பவனே கவி.
கற்று முடிந்து வீட்டுக்குத் திரும்புகையிலே ஒரு சீடன் "பாஷோ மட்சுவோ என்னும் புலவரிடம் மூன்று ரியோ [அதாவது ஏற்க்குறைய முப்பது வராகன்] காணிக்கையாகக் கொடுத்தானாம் . இவர் ஒரு நாளுமில்லாத புதிதாக வந்த இந்தப் பணத்தை வைத்துக் காப்பது தொல்லையாதலால் "வேண்டியதில்லை" என்று திருப்பிக் கொடுத்துவிட்டாராம். இவருக்கு காகா [kaga] என்ற ஊரில் ஹொகுஷி என்றொரு மாணாக்கர் இருந்தார். இந்த ஹொகுசியின் வீடு தீப் பட்டெரிந்து போய்விட்டது . அந்தச் செய்தியை ஹொகுஷிப் புலவர் தமது குருவாகிய பாஸோ மட்சுவோ புலவருக்குப் பின்வரும் பாட்டில் எழுதி அனுப்பினார் .


"தீப்பட்டெரிந்தது , வீழு மலரின் அமைதியென்னே !"


மலர் தனக்கு வாழுங்காலம் மாறிக் கீழே விழும் பொழுது எத்தனை அமைதியுடன் இருக்கிறதோ அத்தனை அமைதியுடன் ஞானி தனக்கு வருந்துன்பங்களை நோக்குகிறான். வீடு தீப்பட்டெரிந்தது ஆனால் அது பற்றித் தன் மனம் அமைதியிழந்து போக வில்லையென்ற விஷயத்தை ஹொகுஷி இந்தப் பாடலின் வழியாகத் தெரிவித்தார். "சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்" ஜப்பானியக் கவிதையின் விஷேசத் தன்மையென்று நோக்குச்சிப் புலவர் சொல்வதுடன் ஆங்கிலேயரின் கவிதை இதற்கு நேர்மாறாக நிற்கிறதென்றும் சொல்லுகிறார். நமக்குள்ளே திருக்குறள் இருக்கிறது."கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்" . கிழக்குத் திசையின் கவிதையிலே இவ்விதமான ரசம் அதிகந்தான் . தமிழ் நாட்டில் முற்காலத்தில் இது மிகவும் மதிப்பெய்தி நின்றது .ஆனாலும் ஒரேயடியாகக் கவிதை சுருங்கியே போய் விட்டால் நல்லதன்று ஜப்பானிலே எல்லாப் பாடலும் "ஹொகுசி" பாட்டன்று. "நோக்குச்சி" சொல்வதிலே அருமையான உண்மையிருக்கிறது.

" எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப் பொருள் காண்பதறிவு "

000000000000000000000000000000000000000000000000000000000000000000000
இந்தக் கட்டுரைதான் ஹைக்கூ குறித்தான அறிமுகத்தை தமிழுக்கு முதன் முதலில் தந்தது.
ஆனால் இந்தக் கட்டுரையில் சில பிழைகள் இருக்கின்றன.


பிழை 1 : பாஷோவின் (Basho Matsuo) மாணாக்கர் ஹொகுசி என்று குறிப்பிட்டிருக்கிறார் பாரதி. பாஷோவின் வாழ்க்கை 1644 க்கும் 1694 க்கும் இடைப்பட்டது ஹொகுசியின் வாழ்க்கை 1760 க்கும் 1849 க்கும் இடைப்பட்டது . இப்படியிருக்க ஹொகுசி (Katsushika Hokusai) எப்படி பாஷோவின் மாணாக்கராக இருந்திருக்க சாத்தியம் ?


பிழை 2 : ஹொகுசியைப் புலவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில் ஹொகுசி ஒரு தலைசிறந்த ஓவியர் . ஆறுவயதிலேயே தூரிகை பிடிக்கத் தொடங்கியவர். "எனது ஒவ்வொரு புள்ளியும் இயற்கையின் ஒரு வீரியமுள்ள நுண்மையான கதிர் வீச்சு" என்று குரல் கொடுத்தவர் .


பிழை 3 : "தீப்பட்டெரிந்தது , வீழு மலரின் அமைதியென்னே !" it has burned down ! how serene the flowers in their falling இந்தப் பாடலைப் பாடியது ஹொகுஷி என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பாடலை உண்மையில் எழுதியது யார் என்று தெரியாது. இந்தக் கவிதையை யோனா நோக்குச்சி (Yone Noguchi) எழுதிய ஜப்பானியக் கவிதையின் உயிர் (The Sprit of Japanese Poems p.27) என்ற நூலில் மேற்க் கோள்காட்டி எழுதப் பட்டது. மொழி பெயர்ப்பில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருக்கலாம் , அல்லது நோக்குச்சி புலவர் தவறாக எழுதி இருக்கலாம்.

0

முண்டாசுக் கவிஞன் பாரதி ஹைக்கூ கவிதையை அறிமுகம் செய்த பின்பு பல ஆண்டுகளுக்குப் பிறகே தமிழ்க் கவிஞர்களுக்கு ஹைக்கூவை பற்றித் தெரிய வந்தது.

புதுக் கவிதையாளர்களே உஷார் ! வருகிறது ஹைக்கூ கவிதை என்ற எச்சரிக்கையுடன் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யப்பட்டது. ஒளவைப் பாட்டி எழுதிய ஒற்றை வரி ஆத்திச்சூடி இருக்கிறது திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் இருக்கிறது. இதில் இல்லாதது என்ன இருந்துவிடப் போகிறது என்ற ஒரு கேள்வியை புதுக்கவிதையாளர்கள் முன்வைத்தார்கள். இதற்கு ஹைக்கூ கவிஞர் அன்பாதவன் " திருக்குறளும், ஆத்திசூடியும் இதைச் செய், அதைச் செய்யாதே என்று சிக்னல் வாசங்களைப் போல் ஒரு அறிவுறுத்தும் பாங்கில் தான்இருக்கிறது. கவிதை நடையில் அவைகள் இல்லை.ஆனால் ஹைக்கூ கவிதை கவிதை நடையில் வாசகனை அறிவுறுத்துகிறது " என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

ஹைக்கூ கவிதையில் உணர்ச்சி இல்லை, தமிழில் இதுவரை ஒரு ஹைக்கூ கவிதை கூட எழுதப்படவில்லை ,ஹைக்கூ என்பது புதுக்கவிதையின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் ஒரு பெருச்சாளி ,ஜப்பானிய கவிதைகளில் இருக்கும் ஜென் தத்துவங்கள் தமிழ்க் கவிதைகளில் இல்லை , இப்படிப் பலவாறான குற்றச் சாட்டுகளை புதுக் கவிதையாளர்கள் முன்வைத்தார்கள். எனினும் ஒரு சிலர் ஹைக்கூ கவிதையை ஆதரித்தே வந்தார்கள்.


சுஜாதா



ஜனவரி 1966 இல் கணையாழி இதழில் சில ஹைக்கூ கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தொடர்ந்து ஜுனியர் விகடன் மற்றும் சில பத்திரிக்கைகளில் ஹைக்கூ குறித்து கட்டுரை வரைந்தார். ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் என்ற நுலை வெளியிட்டார். இந்த நூலில் ஹைக்கூ எழுதுவதற்கான சில வரைமுறைகளை மிகவும் எளிமையாக எடுத்துக் காட்டுடன் விளக்கியுள்ளார்.ஹைக்கூ கவிதையானது புரிதல் இல்லாமல் எழுதப்படுவதைக் கண்டு " ஹைக்கூ என்றொரு மூன்று வரி பாவச்செயல் " என்று சுஜாதா சமீபத்தில் ஆனந்தவிகடனில் எழுதியிருந்தார்.


கவிக்கோ அப்துல்ரகுமான்





பால்வீதி என்னும் கவிதைத் தொகுப்பில் சிந்தர் என்ற தலைப்பில் ஐந்து ஹைக்கூ கவிதைகளைத் தமிழில் எழுதினார். இதுவே தமிழில் எழுதப்பட்ட முதல் ஹைக்கூ கவிதைகள் ஆகும் எண்பதுகளின் துவக்கத்தில் பத்திரிக்கை மூலமாகவும் இலக்கிய கூட்டங்களிலும் ஹைக்கூ பிரச்சாரம் செய்தார். 1984 ஆம் அண்டு ஜூனியர் விகடனில் மின்மினிகள் என்ற தலைப்பில் ஹைக்கூவைப் பற்றி ஒரு சிறிய கட்டுரை வரைந்தார் . கவிக்கோ அப்துல் ரகுமான் உதவியுடன் டாகடர் லீலாவதி அவர்கள் சில ஆங்கில கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்துத் தந்தார். பிறகு இவரது உதவியுடன் டாகடர் லீலாவதி அவர்கள் இதுதான் ஹைக்கூ என்ற நூலை வெளியிட்டார். இது ஆங்கில கவிஞர் R.H. பிளித் அவர்கள் எழுதிய நூலின் தமிழாக்கம் ஆகும்.


தமிழ் ஹைக்கூ நூல்கள்





தமிழில் முதல் புத்தகத்தை அமுதபாரதி வெளியிட்டாரா ? இல்லை அறிவுமதி வெளியிட்டாரா ?என்பது இன்னமும் சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருக்கிறது . பரவலான மக்களின் கருத்துப் படி ஓவியக் கவிஞர் அமுத பாரதி அவர்களே புள்ளிப் பூக்கள் என்ற நூலை முதன் முதலில் வெளியிட்டார். (ஆகஸ்ட் - 1984) , பாடலாசிரியர் அறிவுமதி அவர்களை ஹைக்கூவின் சிறிய வடிவம் பெரிதும் கவர்ந்தது. அவர் 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புல்லின் நுனியில் பனித்துளி என்ற நூலை வெளியிட்டார்.இதைத் தொடர்ந்து சில நாவல் மற்றும் வாராந்திரி பத்திரிக்கைகள் ஹைக்கூ கவிதைகளை வெளியிடத் தொடங்கின. கவிஞர் தமிழ் நாடன் ஜப்பானியக் கவிதை என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். பெண்கவிஞர் நிர்மலா சுரேஷ் அவர்கள் ஹைக்கூவைப் பற்றி ஒரு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்திருக்கிறார். கவிஞர் இறையன்பு ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதன் மறைபொருளை அழகாய் விளக்கி "முகத்தில் தெளித்த சாரல்" என்னும் நூலை வெளியிட்டார். கவிஞர் செல்லம்மாள் கண்ணன் அவர்கள் தமிழ் ஹைக்கூவில் மொழி வீச்சு , ஹைக்கூ மனோபாவம் ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். இதுகாறும் தமிழில் சுமார் 150க்கும் மேற்பட்ட ஹைக்கூ புத்தகங்கள் வெளிவந்துள்ளன. சிறிது காலத்திற்கு முன்பு குமுதம் இதழில் ஹைக்கூ கவிதைகள் பிரசுரித்து வந்தார்கள். நான் அறிந்த வரையில் ( சிற்றிதழ்கள் தவிர்த்து ) பாக்யா வார இதழில் மட்டுமே தொடர்ந்து ஹைக்கூ கவிதைகளைப் பிரசுரித்து வருகிறார்கள் .

கடந்த வார பாக்யாவில் படித்த ஹைக்கூ ஒன்று


குளியல் அறை / ஆடை களையும் / புது சோப்பு !


0


குறிப்பு நூல்கள்


1) என்னுள் யார் யாரோ - சுப்ரபாரதிமணியன்

2) ஹைக்கூ கவிதைகள் - நிர்மலா சுரேஷ்

3) ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் - சுஜாதா

4) இதுதான் ஹைக்கூ - லீலாவதி

5) பாரதியார் கட்டுரைகள் தொகுப்பு

6) ஜப்பானியக்கவிதை - தமிழ்நாடன்

7) புல்லின் மேலே பனித்துளியாயிரு - ஓஷோ


மேலும் சில புத்தகங்கள் மற்றும் இணைய தளங்கள்

மதி
19-12-2005, 08:04 AM
பிரியன்,
ஹைகூக்கு மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட விளக்கம் கொடுத்து கலக்கிட்டீங்க...

மிக அருமை

ப்ரியன்
19-12-2005, 08:11 AM
நன்றி ராஜேஷ் ஆனால் அக்கட்டுரையை எழுதியது மரவண்டு என அழைக்கப்படும் ஹைக்கூ கணேஷ் அவர்கள் :)

மதி
19-12-2005, 08:23 AM
நன்றி ராஜேஷ் ஆனால் அக்கட்டுரையை எழுதியது மரவண்டு என அழைக்கப்படும் ஹைக்கூ கணேஷ் அவர்கள் :)
அவருக்கும் அதை இங்கு பதிப்பித்த உமக்கும் பாராட்டுக்களும் நன்றியும்..

பென்ஸ்
19-12-2005, 04:54 PM
ப்ரியன்... நன்பரையும் மன்றத்திர்க்கு அழைத்து வரலாமே.....

இது ஒரு அருமையான பதிவு....

உங்கள் பதிவுகள் குறைந்துவிட்டதே .. பணி பளுவோ?????

ilanthirayan
19-12-2005, 05:59 PM
ஹைக்கூ கணேஷை வானொலி நிகழ்ச்சி ஒன்றிற்காக பேட்டி கண்டிருக்கின்றேன். மரத்தடி குழுமத்திலும் அவர் ஆக்கங்களைப் படித்திருக்கின்றேன்.

-அன்புடன் இளந்திரையன்

ப்ரியன்
20-12-2005, 09:37 AM
சில காதல் கவிதைகள் - 5
***********************************

நேற்று பார்த்த
நீதானா நீ?
தினம் தினம்
அழகு கூடுதலில்
அடையாளமே
மாறிப் போகிறது!

*************************

உனை ரசித்து ரசித்து
அழகு ரசித்து சலிக்க
ஆயுள் பல ஆகும்!
பேசாமல் உண்டுவிடு என்னை;
இரத்ததோடு ரத்தமாய்
உள்சுற்றி
அழகு ரசிக்கிறேன்!

*************************

உன் கண்ணொளி
தீபத்தில்
சுடராக உயிர்வாழும்
என் உயிர்!

*************************

உன்னுள்
இறங்கிவிட்டப் பிறகு!
நான்,
சுவாசமானால் என்ன?
உயிரேதான் ஆனால் என்ன?

*************************

கடற்கரைப் பக்கம்
போய்விடாதே!
அலைகள் எல்லாம்
உன் கால் நனைக்கும்
ஆசையில் ஓடிவந்தால்
கடல் பொங்கி
மீண்டும் ஒரு
கடல்கோள் உண்டாகிவிடும்!

*************************

தினம் தினம்
தொலைக்காட்சியில்
வானிலை வாசிக்கும் பெண்,
எனக்கு மட்டும் சொல்கிறாள்
உனைக் காணும் நாட்களெல்லாம்
மழைநாட்களாம் எனக்கு!

*************************

தொட்டால்
தட்டிவிடுகிறாய்!
தள்ளிச் சென்றால்
கை கோர்க்காமைக்கு
கோபிக்கிறாய்!
கடினம்தான்
உனை காதலிப்பதும்!

*************************

பூ வாங்கி தர
அழகாய் இடம் தருகிறாய்
கொண்டையில்!
கொக்கரித்து ஆடுகிறது
என் காதல்
அதே கொண்டையில்!

*************************

கிளை தங்கிவரும்
தென்றல்
நான் உயிர் வளர்க்க!
உந்தன் கூந்தல்
கலைத்துவரும் காற்று
நான் உயிர் பிறக்க!

*************************

எந்தத் தேனீ
விட்டுச் சென்றது
உன் இதழ் முழுதும்
இத்தனை தேன் துளிகள்!

*************************

நம்மை மறந்து
நாம் நின்றிருந்த
அம்முதல் சந்திப்பில்
மனம் கொத்திப் பறந்த
அப்பறவையின்
பெயர் என்னவாயிருக்கும்!

*************************

மழைநாளில்
நனைந்து நீ நடந்தாய்!
இத்துணைநாள்
காளான் முளைத்த
தரையெங்கும்
தாழம்பூக்கள்!

*************************

நீ மையணிவது
கண்ணழகிற்கு மட்டுமல்ல!
என் பேனாவிற்கும்
சேர்த்துத்தான்!

*************************

இமை படப்படக்கும்
வேகத்தில்
அவ்விமை தூரிகை கொண்டு
வரையப்படுகின்றன
உன் உயிரோவியம்
என் நெஞ்சம் முழுவதும்!

- ப்ரியன்.

இளசு
22-12-2005, 06:27 AM
உன்னுதிரம் போலே நான்
பொன்னுடலில் ஓடுவேன்..

உன்னுடலில் தானோடி
உள்ளழகைத் தேடுவேன்..


----------------------------------------------


இரண்டறக்கலந்துவிடும் இச்சை
உலகக்காதலின்
குறைந்தபட்ச பொதுத்திட்டம் போலும்..

--------------------------------------

தாழம்பூ அடிமலரும் காட்சி..

நினைக்கவே மணக்கிறது மனமெல்லாம்..



----------------------------------------

அதுசரி ...அவளின்
கண்மை ஊற்றி எழுதிய
கவிதைகளல்லவா? மையலுக்குக்
கேட்பானேன்..

______________________________________________________

அன்பு ப்ரியன்,

காதல் பள்ளியில் 'அட்மிஷன்' கிடைக்கவில்லை என்று
பாவலா காட்டித்திரியும் பெஞ்சமின், பிரதீப் கோஷ்டிக்கு
'ஸ்பெஷல் கோச்சிங்' இக்கவிதைத் தொகுப்பு..

புரிஞ்சு, பிட் அடிச்சு பொழச்சுக்குங்க மக்கா..

pradeepkt
22-12-2005, 06:37 AM
இளசு அண்ணா,
அந்தளவுக்குத் துப்பு இருந்தா நான் ஏன் இப்படி இருக்கேன்...
என்னமோ நீங்க சொல்றீங்க, புரிஞ்சுக்கறேன் :)

இளசு
22-12-2005, 06:44 AM
இளசு அண்ணா,
அந்தளவுக்குத் துப்பு இருந்தா நான் ஏன் இப்படி இருக்கேன்...
என்னமோ நீங்க சொல்றீங்க, புரிஞ்சுக்கறேன் :)

பாவ்லா, அண்ணனிடமுமா?????!!!!!!!

pradeepkt
22-12-2005, 06:46 AM
என்னமோ போங்க அண்ணா, உங்ககிட்ட சொல்லாமலா...
இது கதையல்ல நிஜம்.
பென்ஸூ, அண்ணா உங்களை ஏதோ கேக்குறாரு...

பென்ஸ்
22-12-2005, 07:04 AM
எனக்கு எல்லாமே ஏதோ ஞாயிற்று கிழமை மதியம் செய்தி பார்ப்பது போல் இருக்குபா (உன் டயலாக் தான் பிரத்ப்) ... ஒன்னுமே புரியலை...

காதலித்தால் கவிதை வருமா???
முதலில் தாடி வர
அப்புறம் அவுங்க டாடி வர
என்னை டெட் பாடி ஆக்க...
ஒரு லேடிக்காகவா???

பென்ஸ்
22-12-2005, 03:51 PM
காதல் பள்ளியில் 'அட்மிஷன்' கிடைக்கவில்லை என்று
பாவலா காட்டித்திரியும் பெஞ்சமின், பிரதீப் கோஷ்டிக்கு
'ஸ்பெஷல் கோச்சிங்' இக்கவிதைத் தொகுப்பு..

புரிஞ்சு, பிட் அடிச்சு பொழச்சுக்குங்க மக்கா..

அட்மிஷனா.... ஹா ஹா ஹா....... "டிஸ்மிசல்" கடிதம் இருக்கு பாருங்க...:rolleyes: :rolleyes: :D :D
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=134132&postcount=25

ஒரு வேளை ரீ- அப்பிளை பன்னனுமோ????:confused: :confused: :p :p

ப்ரியன்
23-12-2005, 09:05 AM
நடு நிசி நாய்கள்
*********************

இரவில் அப்படி இப்படி
திரும்பி புரண்டுப்
படுக்கையில் தூக்கம்
கலைந்து போகும்
சில நாட்கள்!

பக்கத்து வீட்டு
மரம் அசைதலில்
பேய் கண்டுபிடித்து
மனம் கிலி கொள்ளும்
சில நேரம்!

மாலையெல்லாம்
அமைதியாய்
கம்பம் தேடிய
நாய்கள் குரைத்துத் தொலைக்கும்;
அவ்வப்போது
குலை நடுங்க வைக்கும்!

சின்னதொரு வயதில்
இருட்டியப் பின் கடைக்கு
செல்லும் நாட்களில்
தூரத்தில் வரும் அப்பனை
அடையாளம் காணாமல்
பேய் வருதென் பயந்து
பதுங்கியதும்;
டவுசரைப் பிடித்தப் படி
துணைக்கு சத்தமாய்
பாட்டை நடுங்கியபடி
கத்திச் சென்ற
நினைவுகளும்;
மனதில் நின்று ஊஞ்சலாடி
மெல்லியதாய் புன்னகை
பூக்கச் செய்யும்!

அது தொடர்ந்து
என்னைப் போல
எதைக் கண்டு
பயந்து கத்துகின்றனவோ
இந்நடு நிசி நாய்கள்! - என
எண்ணும் கணம்
இன்னும் பயங்கரமாக கத்தி
பயமுறுத்தி தொலையும்!

ஆனாலும்,
எந்த நாயும்
சொல்லியதில்லை என்னிடம்
இரவில் கத்தும் ரகசியத்தை;
ஏனோ நானும்
இதுநாள் வரை கேட்டதில்லை
அவ்ரகசியத்தை!

- ப்ரியன்.