PDA

View Full Version : பெங்களூரில் ஒரு பெர்ஷியாgragavan
22-11-2005, 08:18 AM
பெங்களூரில் ஒரு பெர்ஷியா

பெர்ஷியா என்ற பெயரை எல்லாரும் பாடத்தில் படித்திருப்போம். நானும்தான். ஆனால் எப்பொழுது என் மனதில் அழுத்தமாக பதிந்தது தெரியுமா? நான் அஜந்தா-எல்லோரா சுற்றுலா சென்றிருந்த பொழுதுதான். 2003ல் அஜந்தாவிற்கும் எல்லோராவிற்கும் நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தேன். அஜந்தாவின் குகை ஓவியங்களைப் பார்த்து மயங்கியிருந்த பொழுதுதான் பெர்ஷியா என்ற பெயர் அழுத்தமாக பதிந்தது.

எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட அந்த ஓவியங்கள், உலகின் இன்றைய வளமான பல பகுதிகளில் நாகரீகம் என்பது தொடங்கும் முன்பே வரையப்பட்ட அந்த ஓவியங்கள் பல நிறத்தில் இருந்தன. அதில் வண்ணமயமான அழகான பூக்குவியல் ஓவியமும் ஒன்று. கூரை மேல் வரையப்பட்டிருந்த அந்த ஓவியத்தில் பயன்படுத்தியிருந்த ஊதா நிறம் பெர்ஷியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒருவித பொருளிலிருந்து தயாரிக்கப்பட்டதாம். அவ்வளவு தொலைவிலிருந்து வந்ததாலோ என்னவோ, அந்த ஊதா நிறம் குறைவாகவே பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனாலும் சரியான இடத்தில் பூசப்பட்டு மற்ற நிறங்களை மங்கடிக்கச் செய்திருந்தது. அப்படிப் பயன்படுத்திய அந்த பழைய இந்தியத் துறவிகளின் அறிவை வியந்த பொழுதுதான் பெர்ஷியா என்ற பெயர் மனதில் பதிந்தது. பிற்பாடு அந்த ஊதா நிறத்தை பல பழைய தமிழக ஓவியங்களில் எக்கச்சக்கமாக பார்த்திருக்கிறேன் என்பதும் உண்மை. குறிப்பாக தஞ்சையில் பெரிய கோயில் நந்தியின் கூரையில் இருக்கும் ஓவியம்.

அதற்குப் பிறகு பெர்ஷியா மீண்டும் என் காதில் விழுந்தது அலெக்சாண்டர் படம் பார்க்கும் பொழுதுதான். கோலின் பேரல் நடித்த அந்தப் படத்தில் அலெக்சாண்டர் பெர்ஷியாவை வென்ற முறையைக் காட்டுவார்கள்.

அதற்குப் பிறகு கிட்டத்தட்ட ஓராண்டு கழித்துதான் மீண்டும் பெர்ஷியா என்னை அழைத்தது. அதுவும் பெங்களூரிலேயே. சுபி தத்துவங்கள் என்று நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அது குறித்து ஆழமாக எதுவும் தெரியாவிட்டாலும் பெயரளவில் கேட்டதுண்டு. ஆனால் பெங்களூரில் ஒரு சுபி உண்டு. இது ஆன்மீக சுபி அல்ல. சாப்பாட்டு சுபி.

ஏர்போர்ட் ரோடிற்கு அருகில் உள்ள முருகேஷ் பாளையாவில் உள்ள விண்ட் டனல் ரோடில் (wind tunnel road) உள்ளது. சுபி என்று பெரிய அளவில் வாயிலில் எழுதி வைத்திருப்பார்கள். உள்ளே போனால் பெர்ஷியாவை முடிந்த வரைக்கும் நமக்காக உருவாக்கியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கண்ணில் படும் இடங்களில் எல்லாம் பெர்ஷிய கலைப்பொருட்களையும் ஓவியங்களையும் வைத்துள்ளார்கள். உள்ளே நுழைந்ததுமே நான்கு பெரிய ஹக்காக்கள் நம்மை வரவேற்கின்றன. அவற்றைப் பயன்படுத்த விரும்புகிறவர்கள் பயன்படுத்தலாம். அதற்கு அங்குள்ளவர்களின் அனுமதியைப் பெற வேண்டும். நானும் சரி. என்னுடைய நண்பனும் சரி. இருவருவே புகைப்பிடிப்பதில்லை. ஆகையால் வந்த வேலையைப் பார்க்கப் போனோம்.

சாப்பாட்டு மேசையும் நாற்காலிகளும் பெர்ஷியப் பாரம்பரியப்படியே இருந்தன. உட்காருவதற்கு உயரமான மெத்தென்ற திண்டுகள். சரியாக உட்காராவிட்டால் கீழே விழுந்து விடுவோம். அதாவது மூட்டை மேலே உட்காருவது போல இருக்கும். ஆனால் இது கலையலங்கார மூட்டை. அந்த உட்காரும் மூட்டையை அங்கு விற்கிறார்கள். ஏழாயிரம் ரூயாய்க்கு. மறுபேச்சு பேசாமல் சாப்பிட உட்கார்ந்தோம்.

கையில் குடுக்கப்பட்ட பட்டியலைப் பார்த்தால் முதலில் ஒன்றும் புரியவில்லை. நல்லவேளையாக பெயருக்குக் கீழே குறிப்பும் கொடுத்திருந்தார்கள். வசதியாகப் போனது. வழக்கமாக சூப்பில்தான் தொடங்குவோம். ஆனால் இந்த முறை சூப்பைத் தவிர்த்தோம். ஏனென்றால் சூப் பார்லியில் செய்யப்பட்டிருந்தது. பிறகு ஒழுங்காக சாப்பிட முடியாது என்பதால் அப்படி.

கபாப் என்பது பெர்ஷியர்கள் விரும்பி உண்ணும் பக்குவம் என்று நினைக்கிறேன். எந்தப் பெயரைப் பார்த்தாலும் கபாப் என்றே முடிந்தது. கபாப் என்றாலே நெருப்பில் வாட்டுவதுதானே. ஆனால் வட இந்திய கபாப்களுக்கும் பெர்ஷிய கபாபிற்கும் வேறுபாடு உண்டு. மசாலா மிகக்குறைவு. கபாப் மெத்தென்று இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு முழம் நீளத்தில் இருக்கிறது கபாப்.

யோயே (Joojeh) கபாப் என்பது கோழியை வாட்டியது. யோயே என்பது ஒருவகையாக பிராய்லர் கோழி. இளங்கோழியின் கறித்துண்டுகளை நெருப்பிலேயே வாட்டி வேகவைத்துத் தருவார்கள். பொன்னிறமாக சுவையாக இருக்கும்.

அப்பொழுது பரிமாறுகிறவர் வந்து, "சார்! தூக் (doogh) என்ற பெர்ஷியன் பானம் இருக்கிறது. முயற்சி செய்கின்றீர்களா?" என்று கேட்டார். அது என்னவென்று கேட்டோம். கெட்டி மோரில் மிண்ட்டும் (புதினா பொடி) உப்பும் கலந்ததுதான் தூக். "அட! கடஞ்ச மோரு" என்று நாங்கள் கொண்டு வரச் சொன்னோம்.

அதோடு சொன்ன இன்னொரு கபாப் kabab-e-chenjeh. தமிழில் சொன்னால் சென்யே கபாப். சென்யே என்றால் எலும்பில்லாத கறி. அதாவது தனிக்கறி. தனிக்கறியை நெருப்பில் வாட்டி காய்கறிகளோடு தருவார்கள். இதுவும் முழ நீளம்தான். ஆட்டிறைச்சியை நெருப்பில் வாட்டும் பொழுது பெரிய தக்காளி ஒன்றையும் வாட்டுகிறார்கள். அந்த வாட்டப்பட்ட தக்காளியோடும் கொஞ்சம் காரட்டோடும் சென்யே கபாப் பரிமாறப்பட்டது. மிகவும் சுவையாக இருந்தது. சில சமயங்களில் அரக்க பறக்க அள்ளிப் போட்டுக் கொள்வோம். அப்படி இல்லாமல் ஆற அமர சாப்பிட வேண்டியது இந்தக் கபாப்.

அதே நேரத்தில் தூக் வந்தது. குடித்தால் ஒரே உப்பு. புதினாத்தூள் வேறு போடப்பட்டிருந்தது. கடைஞ்ச மோரு என்று எண்ணிய மனம் உடைஞ்சு போனது. அப்படி இப்படி பாதி குடித்தோம். ஆனால் முடியவில்லை. தூகை தூக்கி ஒரு ஓரமாக வைத்து விட்டுச் சுவையான சென்யே கபாபை இரண்டு கைகள் பார்த்தோம்.

மெயின் கோர்ஸ் என்று செலோ (chelo) கபாபைக் கேட்டோம். என்னடா மீண்டும் கபாபா என்று ஆச்சரியப்படாதீர்கள். அந்தப் பெயரின் விளக்கம் சொல்கிறேன் முதலில். செலோ என்றால் வேகவைக்கப்பட்ட அரிசியும் இறைச்சியும். பாசுமதி அரிசியை குங்குமப் பூவோடு சேர்த்து மெத்தென்று வேகைவைத்து அதை ஒரு சட்டியில் போட்டு கொண்டு வந்தார்கள். சிறிய எலுமிச்சை அளவு வெண்ணெய் அந்தச் சூடான சோற்றில் லேசாக இளகிக் கொண்டிருந்தது. சோறு சரி. கறி? இன்னொரு முழ நீள கபாப். ஆட்டிறைச்சிதான். ஆனால் மெத்தென்று. மெத்துமெத்தென்று. வெளியே சாப்பிட்டதால் ஸ்பூனும் போர்க்கும் வைத்துச் சாப்பிட்டோம். அந்தக் கபாபைச் சோற்றோடு பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். ஒரு கரண்டி கறியும் ஒரு கரண்டி சோறுமாக மெதுவாக சாப்பிட்டோம். குங்குமப்பூவும் உருகிய வெண்ணெய்யும் கலந்த நெய்ச்சோற்றைக் கறியோடு சாப்பிட கசக்குமா என்ன!

இந்த செலோ கபாப் என்பது பெர்ஷியாவின் தேசிய உணவு என்ற அளவிற்கு பிரபலம். தமிழர்களுக்கு சாம்பாரைப் போல. மலையாளிகளுக்கு புட்டைப் போல. ஆந்திரர்களுக்கு ஆவக்காயைப் போல. பஞ்சாபிகளுக்கு சர்சோங்கி சாக் போல. பெர்ஷியர்களுக்கு செலோ கபாப். பெர்ஷிய அடுக்களையில் கபாப்களின் அரசி என்று செலோ கபாப் அழைக்கப்படுகிறது.

பெர்ஷிய உணவுகள் பெரும்பாலும் வாட்டப்பட்ட இறைச்சியாக இருக்கின்றன. அத்தோடு அரிசி அல்லது கோதுமையைச் சாப்பிடுகிறார்கள். நாம் வைப்பது போல அவர்களும் ஒருவகையான கறிக்குழம்பு செய்கின்றார்கள். கொஞ்சம் புளிப்புச் சுவையோடு இருக்கிறது. அதற்கு அவர்கள் புளி பயன்படுத்துவதில்லை. வேறொரு காயைப் பொடி செய்து பயன்படுத்துகின்றார்கள். இன்னொரு புளிப்பூட்டி என்ன தெரியுமா? காய்ந்த முழு எலுமிச்சம்பழம். குழம்பில் முழு எலுமிச்சம்பழம் உருண்டையாக இருக்கும். அதை ஒதுக்கி வைத்து விட்டு சாப்பிடுவார்கள். இந்தியர்கள் கறிக்குழம்புகளில் பருப்பு பயன்படுத்துவதில்லை. ஆனால் பெர்ஷியர்கள் பயன்படுத்துகிறார்கள். கடலைப்பருப்பைப் போட்டு கறிக்குழம்பு வைக்கின்றார்கள்.

சுபி அங்காடியில் பெர்ஷிய நாட்டு பொருட்களையும் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். என்னதான் இருக்கிறது என்று எட்டிப்பார்த்தோம். உட்காரும் மூட்டையின் விலை ஏழாயிரம் ரூபாய் என்று பார்த்ததும் இங்குதான். அங்கு அழகான தரை விரிப்புகள் நிறைய இருந்தன. கிட்டத்தட்ட ஐயாயிரம் ரூபாயிலிருந்து இருக்கிறது. ஐம்பத்தைந்தாயிரத்திற்கும் ஒரு விரிப்பு. அப்படியென்ன அதிலென்று வாய்விட்டே கேட்டு விட்டேன். முழுக்க முழுக்க கையாலேயே நெய்யப்பட்ட அந்த விரிப்பின் வயது ஐம்பதாம். அட!

நிறைய பீங்கான் சாடிகள். பல நிறங்களில். பல சித்திரங்களுடன். பளபளப்புடன். மிகுந்த அழகுடன். விலையும் கொள்ளை அழகு. மது அருந்துகின்றவர்களுக்காகவே ஒரு கண்ணாடி சீசா. செக்கச் செவேலென்று. அழுத்தி மூடும் மூடியுடன். அதே சிவந்த நிறத்தில் சின்னச் சின்னதாய்க் கோப்பைகள். பார்களில் Irish Cream பரிமாறுவார்களே, அந்த அளவு சிறிய கோப்பைகள். பயன்படுத்தாவிட்டாலும் வீட்டில் அழகிற்கு வைக்கலாம். நமக்கெதுக்கு என்று வந்து விட்டேன்.

அதே போல கடிகாரங்களிலும் பலவிதங்கள். சுவர்கடிகாரத்தின் ஒரு இணுக்கு இடத்தைக் கூட சும்மா விடாமல் ஓவிய வேலைப்பாடு செய்திருந்தார்கள். அதனுடைய விளைவு விலையில் தெரிந்தது. இன்னும் நிறைய கலைப்பொருட்கள் விற்பனைக்கு இருந்தன. வெறும் கலைப் பொருட்களாக மட்டும் இல்லாமல் மிகுந்த விலைப் பொருட்களாகவும் இருந்ததால் கண்களுக்கு மட்டுமே அன்றைக்கு விருந்து.

மொத்தத்தில் வெளியே வருகையில் பெர்ஷியாவிற்குச் சுற்றுலா போய் வந்த உணர்வு. பாஸ்போர்ட் இல்லை. விசா இல்லை. ஆனாலும் பெர்ஷியா போய் வந்தோம். சுவையான விருந்துண்டு வந்தோம்.

அன்புடன்,
கோ.இராகவன்

pradeepkt
22-11-2005, 08:26 AM
ஐயையோ நினைவு படுத்தி விட்டீர்களே...
அதுவும் இந்த உணவகம் எங்கள் வீட்டிலிருந்து நடக்கும் தூரத்தில் இருப்பதால் பயங்கர அடிமைகளை எங்கள் குடியிருப்பில் உருவாக்கி வைத்திருக்கிறது என்பதை இம்முறை உணர்ந்தேன்...
அடுத்த தடவையும் போயிரணுமய்யா...

gragavan
22-11-2005, 09:32 AM
போயிருவோம். போயிருவோம்.

பாரதி
24-11-2005, 05:45 PM
ஹ¤ம்..பெருமூச்சுதான் விட வேண்டியிருக்கு. படிக்க நல்லா இருக்கு இராகவன்.
ஒரு சின்ன சந்தேகம்: பெர்ஷியா..ன்னா இப்ப ஈராக்..கா?

aren
25-11-2005, 03:41 AM
ஹம்..பெருமூச்சுதான் விட வேண்டியிருக்கு. படிக்க நல்லா இருக்கு இராகவன்.
ஒரு சின்ன சந்தேகம்: பெர்ஷியா..ன்னா இப்ப ஈராக்..கா?

இல்லை பாரதி. ஈரான்.

பெர்ஷியன் கல்ஃப் என்பதை இப்பொழுது அரேபிய கல்ஃப் என்று மாற்றிக்கொண்டுவிட்டார்கள் இவர்களே.

ஈரான் ஒரு காலத்தில் மத்திய ஆசியாவில் கோலோச்சிய நாடு. இப்பொழுது எப்படியெல்லாம் சீரழிகிறது என்பதத நினைத்தாலே மனதிற்கு வேதனையாக உள்ளது.

தாஜ்மகால் கட்டுவதற்காக பெர்ஷியாவிலிருந்துதான் ஆட்கள் வந்தார்கள். அதுவும் அங்கே விலை மதிப்பில்லாத மாணிக்க கற்களை பதிப்பதவர்களும் இவர்களே. கட்டிடக்கலலயில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு காலத்தில்.

gragavan
25-11-2005, 04:19 AM
ஈரானியர்கள் ஒருகாலத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாகவே நன்றாக வாழ்ந்தவர்கள். அவர்கள் கலைத்திறம் மிக்கவர்களும் கூட. அவர்கள் உணவு முறைகளும் சிறப்பானதே. சுட்டுத் தின்பதும் புழுக்கி உண்பதும் அவர்களுக்கு மிகவும் விருப்பமானவை. நம்மூரிலும் புழுக்கி உண்டிருக்கின்றார்கள். அது வயலில் ஆமை இருந்த கால கட்டங்களில். இப்பொழுது வயலில் என்ன இருக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும். சிறுவயதில் எங்கள் ஊர்க்கிணற்றில் கூட ஆமை இருந்தது.

இளசு
25-11-2005, 06:42 AM
அன்பு இராகவன்,

விரிப்பு மட்டுமே பெர்ஷியாவின் சிறப்பு என எண்ணி இருந்தேன்.

ஊதா நிறம்..
பருப்புடன் கறி
'குங்குமச்சோறு
உட்காரத் திண்டு
இன்றைய ஈரான்
புழுக்கும் பழக்கம்
கட்டடக்கலை

என எத்தனைத் தகவல்கள்..


பொறாமையும் ( நீங்கள் சாப்பிட்ட அயிட்டங்களால்)
பெருமையும் ( அதனால் விளைந்த அழகிய கட்டுரையால்)

கலந்து... பெருமூச்சுடன்.....

இளசு
25-11-2005, 06:51 AM
ஹம்..பெருமூச்சுதான் விட வேண்டியிருக்கு. படிக்க நல்லா இருக்கு இராகவன்.இளசு : என்னாத்த சொல்வேன் தம்பி.. வடுமாங்கா வேணும் தம்பி..

பாரதி : வடுமாங்கா தாரேன் அண்ணே.. தயிர் ஸாதம் ரெடி பண்ணுண்ணே...

பென்ஸ்
25-11-2005, 02:51 PM
போயிருவோம். போயிருவோம்.

ராகவன்.. என்னையும் சேர்த்து தானே கூப்பிடுகிறீர்கள்... :p :p
சரி சரி ரெம்ப கட்டாயபடுத்த எல்லாம் வேண்டாம்... வாறேன்.. :rolleyes: :rolleyes: :D :D :D :D

பாரதி
25-11-2005, 05:16 PM
என் சந்தேகத்தை நிவர்த்தி செய்ததற்கு மிகவும் நன்றி ஆரென்.

அண்ணா... இப்பவும் தயிர்சாதம்தானா..? ஆனா நீங்க மறுபடி பாட்டுப் பாட ஆரம்பிச்சிருவீங்கன்னு நினைக்கவேயில்லை..ம்ம்... மறுபடியும் ஆண்டுவிழா நினைவுகள்தான் வருகிறது..!

தாமரை
16-03-2006, 12:09 PM
ராகவன்.. என்னையும் சேர்த்து தானே கூப்பிடுகிறீர்கள்... :p :p
சரி சரி ரெம்ப கட்டாயபடுத்த எல்லாம் வேண்டாம்... வாறேன்.. :rolleyes: :rolleyes: :D :D :D :D
சரி சரி ஞாயிற்றுக்கிழமை நான் போயிட்டு வந்து ராகவன் சொன்னதெல்லாம் உண்மையா என்று சொல்கிறேன்,:D :D :D :D