PDA

View Full Version : ஜானு..poo
18-11-2005, 10:29 AM
தூரத்தில் அப்பாவைப் பார்த்தபோதே மனது பிசைய ஆரம்பித்துவிட்டது.

அப்பா எப்போதெல்லாம் வீட்டிற்கு வருவாரோ அப்போதெல்லாம் பிரச்சினையை ஆரம்பித்துவிடுவாள் ஜானகி. அவளை நான் கைப்பிடித்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. முதல் மூன்று வருடங்கள் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. பிறகுதான் பிரச்சினைகள் தொடங்கியது. பெண்கள் எதையும் எளிதாக எடுத்துக் கொள்வதில்லை., சிறிய பிரச்சினைகளைக்கூட தனக்கு இழுக்கு என மனதில் நினைத்துவிட்டால் அவ்வளவுதான்.., பழிவாங்கும் எண்ணம் மனதிற்குள்
வந்துவிட்டால் அதை கண்மூடித்தனமாக நிறைவேற்றுவார்கள் என சொல்லக்கேட்டிருக்கிறேன்.. ஆனால் ஜானகியிடம்தான் பார்க்கிறேன். என் வீட்டுப்பேச்சை எடுத்தாலே எரிந்துவிழ ஆரம்பித்துவிடுவாள். சில நாட்களில் வேலைவிட்டு வர தாமதமாகிவிட்டால், உங்க வீட்டுக்கு போயிருப்பீங்க... ,கொஞ்சம் பணம் கணக்கில்லாமல் செலவாகிவிட்டால் உங்க வீட்டுக்கு கொடுத்தீங்களா., நான் ஏதேனும் கோபமாக கேட்டால் இப்படி கேக்கனும்னு பாடமா..., பாசமாக பேசினால் இப்படித்தான் வேஷமா.. என தொட்டதிற்கெல்லாம் குற்றம்தான்.
என் ஜானுவா இப்படியென நான் வேதனைப்படாத நாளேயில்லை. இன்று அப்பாவைப் பார்த்ததும் ஜானகி எப்படி நடந்துகொள்வாள்.

வீட்டை நெருங்க நெருங்க.., அப்பா..நான்..ஜானு..ஜானகியென சிந்தனைகள் சுழன்றடிக்க ஆரம்பித்தன..

வேற ஜாதிப்பொண்ணாப்பா.. அப்பா கேட்டபோது நிமிர்ந்து முகத்தைப் பார்த்தேன்.. அதில் எந்தவித உணர்ச்சியும் இல்லை. ஆனாலும் நான் உண்மையை சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், ஆமாம்பா.. என்றேன். முன்னமே பதிவுத்திருமணம்கூட செஞ்சிக்கிட்டயாமே.., இம்முறை என்னால் அவரது முகத்தை நிமிர்ந்து பார்க்கமுடியவில்லை. குனிந்திருந்த என் தாடையைப் பிடித்து நிமிர்த்தி, தப்பு பண்ணிட்டோம்னு நினைக்கறயாப்பா... இப்படி அப்பா கேட்டதும் என்னையுமறியாமல் கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டது. என்ன இது சின்னப்பையன் மாதிரி... கண்களை நான்கு விரல்களால் ஒத்தடம் கொடுப்பதைப்போல துடைத்துவிட்டவர்., மனுஷ ஜாதியிலதானே கல்யாணம் பண்ணியிருக்க.. அதுக்கேன் இப்படி கலங்கற... தோள்பட்டையை தட்டிக்கொடுத்து, சீக்கிரமே வேலையில நிலை பண்ணிக்கோ. அப்பத்தான் வாழ்க்கை நிலையா இருக்கும்.. அதற்குமேல் அப்பா எதுவும் பேசவில்லை.


ஜாதிவிட்டு ஜாதி காதலிக்கிறானாம்மே உம்மவன்.. இந்த வார்த்தைகளை அப்பாவிற்கு தெரிந்தவர்கள் கிட்டத்தட்ட ஆயிரம் முறை கேட்டிருப்பார்கள். பதில் வருமென எதிர்ப்பார்த்து எய்தவர்களெல்லாம் அப்பாவின் ஆழ்ந்த மௌனத்தைக்கண்டு ஊமையாய் திரும்பியதை என்னிடம் சொல்வார்கள்.அந்த மௌனத்தின் அர்த்தமென்னவென அப்போதெல்லாம் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை... ஜானுவிடம் மட்டும் இதுபற்றி பயந்தபடி பேசுவேன். அவள் என்னைவிட சுத்தம்...வீடு, அப்பா எனப் பேசினாலே எழுந்து விடுவாள்.. இப்போதும்தான் அப்படித்தான் இருக்கிறாள் ஜானகி.


ஜானுவை சந்தித்தபின்னர்தான் வேலை பார்க்கவேண்டும் என்ற எண்ணமே எனக்குள் எழுந்தது. ஆரம்பத்தில் ஒரு மதுபானத் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. அப்பாவிடம் சொல்லவேண்டுமென்றுகூட தோன்றவில்லை. ஜானுவிடம் சொன்னபோது அவள் ஒப்புக் கொள்ளவில்லை. கடைசியில் அப்பாவின் நண்பர் ஒருவர் மூலமாக ஒரு கெமிக்கல் கம்பெனியில் வேலை கிடைத்தது. அப்போது ஜானுவிற்கு அப்பா தெய்வமாக தெரிந்தார்.


அப்பா அவங்க வீட்ல ரொம்ப தொல்லை பண்றாங்கப்பா.. தயக்கத்துடன் ஆரம்பித்தபோது, அவங்களுக்கும் தெரியுமா.. எப்போதும்போல அமைதியாகவே இருந்தார் அப்பா. ம்ம். தெரியும்பா.. ஆனா ரொம்ப முன்னாடியெல்லாம் இல்ல.. போனமாசம்தான்..., என்ன சொன்னாங்க என்பதைப்போல முகத்தைப் பார்த்தார். முதல்ல கத்தினாங்க...நான் வார்த்தைகளை விழுங்க, இப்போ என்னவாம்...புருவத்தை ஏற்றினார். கல்யாணம் முடிச்சிட்டு ஏன் தனியா இருக்கனும் கூட்டிக்கிட்டு போன்னு சொல்றாங்கப்பா. வாஸ்தவம்தான்... கூட்டிக்கிட்டு போய்டு... முடித்துக்கொண்டார். அப்பாவிடம் பேசுபவர்களுக்கு ஏன் இவர் இப்படி எடுத்தேன் கவிழ்த்தேனென பேசுகிறார் என நினைக்கத் தோன்றும். ஆனால் அந்த முடிவுக்கு முன்னால் நிலவும் அமைதியும் அவர் உள்ளுக்குள் இடும் கணக்கீடுகளும் எல்லோருக்கும் புரியுமா வென்பது சந்தேகம்தான்.


காதலிக்கும்போதே நண்பனிடம் சொல்லி வைத்தாற்போல அவனது வீட்டின் மேல் போர்ஷனில் ஜானுவோடு குடியேறியாகிவிட்டது. ஜானுவின் வீட்டில் அவளது திருமணத்தையோ, புதுக்குடித்தனத்தையோ கொண்டாடவில்லை. அதற்கு காரணம் அவளின் நான்கு அக்காக்கள் மணமாகாமல் இருந்ததாகத்தான் இருக்குமென நினைத்துக் கொண்டாலும் ஜானுவை இந்த விஷயத்தில் மனம் நோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென சபதமிட்டுக் கொண்டேன்.

உங்க அப்பா தனி ஆள்தானே.. அந்த மனுஷருக்கு ஒரு முழு வீடு எதுக்காம். ஒத்த அறை போதாதாம்மா., திருமணமான இரண்டாம் வருடம் விளையாட்டாய் கேட்டாள் ஜானு. அவள் எதைக் கேட்டாலும் விளையாட்டாக கேட்கிறாள் என்றுதான் என் மனம் நினைத்தது. சரி அப்படியே அவர் ஒரு அறையில தங்கிக்கிட்டு வீட்டை கொடுத்தாலும் நம்மாள அங்க போகவா முடியும். அந்த கிராமத்துல ஒரு வசதியும் இல்லைன்னு நீதானே அடிக்கடி கிண்டலடிப்பே... என்றேன்., ஆமாம் இப்போ யாரு அங்கபோகனும்னு சொன்னா.. அப்புறம் என் பிள்ளையை கார்ப்பரேஷன் ஸ்கூல்லதான் படிக்கவைக்கனும், அந்த வீட்டை இடிச்சி அதுல இருக்கற ஜன்னல், ரீப்பர் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வந்தா நல்ல விலைக்கு விக்கலாம்.... - சொன்ன ஜானுவை நான் கண்டிக்காமல் விட்டு விட்டேன். என் பலமென நான் நினைத்ததையெல்லாம் ஜானு என் பலவீனங்களென புரிந்து கொண்டதுதான் துரதிஷ்டம்.


கையால் தறி அடிக்கும் வேலைக்கு சென்று மெல்ல பவர் லூமுக்கு மாறி பத்து வருடங்கள் கழித்து பஞ்சாலையில் வேலைக்கு அமர்ந்த அப்பாவிற்கு எழுபதுகளில் மாதச்சம்பளம் சொற்பமாம். அம்மாவழி தாத்தா வீட்டையொட்டி ஒற்றைப் பக்கமாக கூரை இறக்கி அங்கேதான் நான் பிறக்கும் வரை வாசம். கார் ஷெட்டாகவும், வார நாட்களில் ஆட்டம்போடவும் இரண்டு அடுக்காய் சபாபதி கட்டியிருந்த மெத்தைவீடு விலைக்கு வந்தபோது நண்பர்கள் கொடுத்த தைரியத்தாலும் பண உதவியாலும் நான் வந்தவேளை நல்ல வேளையென துணிந்து வீட்டை வாங்கிய அப்பா.பின்னர் தொண்ணூறுகளில் மராமத்து வேலைகளை முடித்தபோது ரிட்டயர்டு ஆகிவிட்டிருந்தார் அப்பா. கிட்டத்தட்ட 25 வருட போராட்டம். வீட்டிற்கு வாங்கிய கடன்கள், என் படிப்புக்கான கடன்கள் எல்லாம் அடைத்ததுபோக அவரது கையில் எதுவும் மிஞ்சியதாக எனக்கு தெரியவில்லை. நல்லவேளையாக திருமணத்திற்கு அவருக்கு செலவு வைக்கவில்லையென என் விளையாட்டுப்புத்தி நினைத்தது.


திருமணமானவுடனே தனிக்குடித்தனம். ஆனால் குடும்பத்தை எப்படி நடத்துவதென்று புரியவில்லை. ஜானுவும் வேலைக்கு போக ஆரம்பித்திருந்தாள். காலையில் காபி, டிபன், மதியம் சாப்பாடு, இரவு டின்னர் என ஒரு குடும்பத்திற்கான முறைகள் எதுவுமே முறையாக நடக்காது. பல நேரங்களில் ஜானு காலையில் சாதம் மட்டும் வடித்து வைத்துவிட்டு மதியம் கடையில் தயிர் வாங்கிக் கொள்ளச் சொல்வாள். அவளுக்கு முன்னதாக நான் வேலைவிட்டு வந்துவிடுவேன். ஜானுவுக்காக பஸ் ஸ்டாப்பில் வெய்ட் பண்ணுவேன்.இருவரும் வீட்டிற்கு நடந்துவரும்போதே வழியில் நாடார் கடையில் அரை கிலோ ஈர இட்லி மாவும் மூன்று ரூபாய்க்கு தக்காளியும் வாங்கிவந்துவிடுவோம். அதை சமைத்து சாப்பிட்டுப் படுக்கவே மணி பதினொன்றைத் தாண்டிவிடும்.


அம்மா போனபின்பு பாட்டிதான் வீட்டு சமையல். பாட்டிக்கு மூன்று வேளையும் சாதம்தான் சமைக்கத் தெரியும். எனக்கு ஒருவேளயாச்சும் டிபன் இருக்கனும். இதனாலயே பாட்டிக்கும் எனக்கும் அடிக்கடி போராட்டம் நடக்கும். அப்பாதான் அடிக்கடி பிரச்சினையை தீர்த்துவைப்பார். சில நேரங்களில் காலையில் இட்லி சாப்பிட இரண்டு ரூபாய் கொடுத்துவிடுவார். ஆனாலும் எல்லா நேரத்திலும் அவரால் கொடுக்கமுடியாது. அதனால் ரேஷனில் கோதுமை வாங்கி பாட்டியைவிட்டு அரைத்து வரச்சொல்லி,.மாவு கரைப்பதில் தொடங்கி உப்பு சேர்த்து தோசை ஊற்றுவதுவரை சொல்லிக் கொடுத்து, அதற்கு தொட்டுக்கொள்ள மிளகாய்த் தூளில் பூண்டை நசுக்கி, தூள் உப்பு போட்டு நல்லெண்ணெய் ஊற்றி கலக்கி சட்னியை எல்லாம் தூக்கிச்சாப்பிடும்படி செய்து கொடுத்து சாப்பிட்டுப் பாருடா என்றார். அன்றிலிருந்து நான் பாட்டியிடம் சண்டை போடுவதேயில்லை. ஜானகிக்கு அந்த ஒரு ஐட்டம் மட்டும் பிடிக்காது. இதென்ன மாட்டுக்கு போடற தவிட்டுக் கலர்ல வறட்டிமாதிரி ச்ச்சே.. மனுஷங்க சாப்பிடறதா இதுவென உதாசீனப்படுத்தி விடுவாள். ஆனால் ஜானு ஒருமுறை சூப்பர் டேஸ்ட்டுப்பான்னு மிளகாய்த்தூள் ஒட்டிய விரலை சப்பி சப்பி சாப்பிட்டிருக்கிறாள்.


நானும் அவளும் சம்பாதித்துக் கொண்டிருந்ததால் பணத்திற்கு பிரச்சினையில்லை. அப்பா அவருக்கு மாதந்தோறும் வரும் முன்னூற்றி நாற்பத்தைந்து ரூபாய் பென்ஷன் பணத்திலேயே ஜீவனத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் ஜானுவுக்கு தெரிந்தே ஐம்பது , நூறு என செலவுக்கு தந்திருக்கிறேன். அவர் தனியேத்தானே இருக்கார்.. நம்மகூட வைச்சிக்கலாமேன்னு நிறையமுறை ஜானுவிடம் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் நோ-வென மறுத்துவிட்ட ஜானகி. பையன் வளர்ந்துவிட்டபின் ஸ்கூலுக்கு கொண்டுபோய் விட்டு திருப்பிக் கூட்டிக்கிட்டு வர உங்கப்பாவை இங்கயே தங்கிக்கச் சொல்லுங்கன்னு சொன்னாள். நல்ல வாய்ப்பு என அப்பாவை ஊரிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துவந்து தங்கவைத்தேன்.


அப்பா ஆரம்பகாலத்தில் எவ்வளவு இறுக்கமானவராக அமைதியானவராக இருந்தாரோ அதற்கு நேர் எதிராய் மாறிவிட்டிருந்தார்.. வயது ஏறினால் குழந்தை குணம் என்பார்கள் அவருக்கு அது முழுக்கப் பொருந்தியிருந்தது. செலவுக்கு பத்து ரூபாய் வேண்டுமென்றால்கூட என்னிடம் பத்து ரூபா கொடுடான்னு சாதாரணமாய் கேட்க மாட்டார்..எனக்கு பத்து ரூபாய் வேணும்.. என சற்றே உரத்தக் குரலில் மிடுக்காய் கேட்பார்.. அந்த மிடுக்கு குழந்தைகள் சிலசமயம் உரிமையாக கொஞ்சமும் இறங்காமல் எனக்கு அது வேணும்.. இது வேணுமென கேட்குமே அப்படிப்பட்ட மிடுக்கு. இதை நான் நன்கு புரிந்திருந்தேன்.. ஆனால் ஜானகிக்கு புரியவில்லை.
கேட்கறது பிச்சை அதுல என்ன எகத்தாளமென நக்கலடிப்பாள். அப்பாவிற்கு விஷயம் தெரிந்துவிடப் போகிறதென நானும் அதை பெரிதாக்குவதில்லை.


அப்பா கையால் தினமும் ஐம்பது காசாவது வாங்கிவிடவேண்டும் இல்லையென்றால்
ஸ்கூலுக்கு போகவே பிடிக்காது. அவர் இரவு ஷிப்ட் முடிந்து மறுநாள் காலை எட்டே முக்கால் மணிக்கு வெங்கடகிருஷ்ணா பஸ்ஸில்தான் வருவார். அந்த பஸ் வரும்வரை வீட்டில் இருந்தால் ஸ்கூலுக்கு நேரமாகிவிடும்.அதனால் கிளம்பிவிடுவேன்,. ஏரிக்கரை ஓரமான ரோட்டில் நடந்துபோகும்போது வழியில் பஸ் கிராஸ் ஆகும். அந்த நேரம் பஸ்ஸின் ஏதேனும் ஒரு ஜன்னல் ஓர சீட்டில் இருந்து
ஒரு முடிந்த ஜவ்வுத்தால் பை விழும். அதை ஓடிச்சென்று எடுத்து பிரித்தால் உள்ளே நாலனா புளிப்பு மிட்டாய் இரண்டும், ஐம்பது காசு வில்லை யொன்றும் இருக்கும். ஜானுவிடம் இந்தக்கதையை சொல்லிச் சொல்லி ஆனந்தப்படுவேன். ஆனால் ஜானகியிடம் இந்தக்கதை எடுபடுவதேயில்லை.


அடிக்கடி உங்க அப்பாவுக்கு விவஸ்தை இல்லை.. இப்படி நடந்துக்கறார்.,. அப்படி நடந்துக்கறார்.. என ஜானு இரவு படுக்கையில் தினமும் புகார் வாசிப்பாள். நான் இதெல்லாம் குடும்ப வாழ்வில் சகஜம்தானென நினைத்துக் கொள்வேன். ஒருநாள் அப்பா என் பையன் சாப்பிட்டுக் கொண்டிருந்த பிஸ்கட்டில் ஒன்றை உரிமையாய் எடுத்து கடித்துவிட பையன் கத்தி கூப்பாடு போட்டு வீட்டையே இரண்டாக்கிவிட்டான். கடைவீதியில் சந்தித்த தோழியோடு வீடு திரும்பிய ஜானு அழுதுகொண்டிருந்த பையனிடம் என்னடாவென கேட்டு..அப்பாவைப் பார்த்து, அறிவில்லை உங்களுக்கு.., இதென்ன அல்பத்தனமா..,அது இதுவென பொரிந்து தள்ளினாள். எனக்கு கோபம் அதிகமாகி ஜானுவை ஒரு அறைவிட்டு விட்டேன். அவ்வளவுதான். அன்றிலிருந்து அப்பா ஜானகிக்கு பரம விரோதியாகிவிட்டார். நான் அறைந்தது, அதுவும் அவளது தோழியின் முன் அடித்தது அவளது நெஞ்சில் பசுமரத்தாணிபோல பதிந்துவிட்டது போலும். இந்த நிகழ்ச்சிக்குப்பின் ஜானகி நேரிடையாகவே அப்பாவை முகத்திலடிக்க ஆரம்பித்துவிட்டாள். திடீரென ஒரு வேலைக்காரியை கொண்டுவந்து வீட்டில் தங்கவைத்தாள் ஜானகி.
"அப்பா நாளைக்கு தாத்தா எங்க ஸ்கூல் இண்டிபெண்டஸ் டே ·பங்கஷனுக்கு வரமாட்டாராமே.. ஏம்ப்பா..."பையன் கேட்டபோது என்னால் பதில் சொல்லமுடியவில்லை.


கடந்த காலங்களை மறந்து அடுத்தடுத்து வீட்டிற்கு வந்து வந்துதான் போய்க் கொண்டிருந்தார் அப்பா. ஆனால் ஒவ்வொருமுறையும் ஜானகியால் ஏதேனும் குற்றம் சுமத்தப்பட்டு.. வார்த்தைகளால் குத்தப்பட்டு வெளியேறிக் கொண்டிருந்தார். வீட்டிற்கு வராதீங்கப்பான்னு சொல்லிவிட பலமுறை யோசிப்பேன்.. அது வேறுமாதிரியான தாக்கத்தை அவர் மனதில் உண்டாக்கிவிடப் போகிறதென்றும், அவரது சந்தோஷத்தை கெடுத்துவிடக் கூடாதென்றும் சொல்லவேயில்லை கடைசிவரை.........


தூரத்தில் இருந்த அப்பாவின் அருகே வந்து விட்டோம்.
வீட்டின் முன் பந்தல் போடப்பட்டு அப்பா படுக்க வைக்கப்பட்டிருந்தார். நல்லாத்தான்யா இருந்தார்.. காலையில மவன் வீட்டுக்கு போறேன் அஞ்சு ரூபாய்க்கு எல்லாடை சுட்டுவை அப்பத்தான்னு சொல்லிட்டு படுக்கப் போனவன்..ஒரேடியா படுத்திட்டானே ராசா.., பக்கத்துவீட்டு எல்லாடைக்கார பாட்டி தலையில் அடித்து அழுதாள். என்னால் நிற்கமுடியவில்லை.. அப்படியே அப்பாவின் மடிமேல் தலையை சாய்த்துக் கொண்டேன்.அருகில் நின்ற ஜானகி என் தோளைப்பற்றி மண்டியிட்டு உட்கார்ந்தாள்.. என் முதுகைக்கட்டிய மகன் எட்டிப்பார்த்து "தாத்தா எழுந்திருங்க தாத்தா... அம்மா இனிமே உங்களைத் திட்டமாட்டாங்க தாத்தா...
எழுந்துவாங்க வீட்டுக்கு போலாம்.. " என அப்பாவை உலுக்க... அந்த பிஞ்சு செய்கையில் உடைந்துபோன ஜானகி. என்னைவிட்டு விலகி அப்பாவின் பாதங்களை இருகைகளாலும் இறுகப்பற்றி அவரது கால்களில் முகம் புதைத்து குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.. துக்கத்தில், இழப்பில் ஆண்களுக்கு ஆறுதல் அமைதி, பெண்களுக்கு அழுகை... அரைமணி நேரமாகியும் அவள் எழவில்லை. நானும் எழுப்பவில்லை..

ஜானகி அழவேண்டும்....., ஜானகி அழட்டும்.. அழுதுமுடித்து திரும்பட்டும் ஜானு!...


**************************************

பென்ஸ்
18-11-2005, 11:39 AM
என்ன சொல்லுறதுனு தெரியல பூ... ரெம்ப பெரிய ஒரு விசயத்தை அருமைய ஒரு சிறு கதையில் சொல்லி இருக்கிறிங்க..

ஒரு கதையை படிக்கும் பொது நாம் அந்த கதையின் பாத்திரங்களாய் மாறிவிடுவது ஒரு எழுத்தாளனின் கையில் தான் இருக்கிறது... நீங்கள் அப்படி ஒரு எழுத்தாளர்...

சாதாரன மனிதர்களின் உணர்வுகள் அப்படியே வேளிப்படுத்தி இருக்கிறிர்கள்..

தலைவனின் பாசம், இயலாமை, ஏக்கம், நினைவுகள், மேலும்....... கதைசொல்லுபவர் நாயகனாக இருப்பதல் தன்னை நியாயப்படுத்தி கொள்ளும் மன நிலை...
தலைவியின் பிரச்சினைக்கான காரணங்கள், சிறு சிறு குத்தல் பேச்சுக்கள்....

குழந்தையின் இன்னொசென்ஸ்....

ஒரு ஐடியல் அப்பாவாக (அட்லீஸ்ட் நாம் தமிழர்களவது..) ஒரு அப்பா அப்பா காதாபாத்திரம்.,..

எல்லாவற்றிர்க்கும் மேல் சொல்லவந்த கருத்து... தன்னலக்குதிரையின் மேல்லேறி பயணிக்கும் நம் ஒவ்வொருவரும் நம் இறந்த காலத்தையும் , எதிர்காலத்தையும் மறந்து போகிறோம் ... இறந்தகாலத்தை நினைக்காவிட்டால் உனக்கு மன்னிப்பில்லை.. எதிர்காலத்தை நினைகாவிட்டால் உன் மகனுக்கு மன்னிப்பில்லை...


.

இளசு
19-11-2005, 11:30 PM
ஒரு உயர்தரச் சிறுகதை இது.

வீடு, சமையல், சிறுவாட்டுக்காசு என ஊஞ்சலாட்ட கோர்வை.

ஆழ்ந்த மௌனம் காட்டும் அப்பா..

அதிகம் பேசாமல் மனதில் அமர்ந்துவிட்ட அப்பா..


பலரின் அருமை இருக்கும்போது புரியப்படுவதில்லை.

வெறுப்பை உமிழாமல் எல்லா உயிர்களும் உலவ ஆரம்பித்துவிட்டால்?


அன்பு பெஞ்சமின் சொன்னதுபோல் - ரசவாதம் செய்து வதை செய்த கதை.

ஆழ்ந்த பாராட்டுகள் பூ..


உன் படைப்புகளில் இது ஒரு மைல்கல்..

mukilan
20-11-2005, 02:42 AM
ஜானுவிடம் இந்தக்கதையை சொல்லிச் சொல்லி ஆனந்தப்படுவேன். ஆனால் ஜானகியிடம் இந்தக்கதை எடுபடுவதேயில்லை.
காதலிக்கும் போது ஜானுவாய் இருந்தவர் இப்பொழுது குணம் மாறி விட்டதை விளக்குவது அருமை. தந்தைக்கும் மகனுக்குமாய் ஆன அருமையான பாசப்பிணைப்பு ஏன் தான் இந்த ஜானகிக்களுக்குப் புரிவதில்லையோ? வாழ்த்துக்கள் பூ!

பாரதி
20-11-2005, 04:48 PM
காலம் கடந்து புரியும் நியாயங்களால் என்னதான் பயன்..? சிறுகதையின் வடிவம் பூவிற்கு நேர்த்தியாக வர ஆரம்பித்திருப்பது நன்றாகவே தெரிகிறது. பாராட்டுக்கள் பூ.

poo
21-11-2005, 05:53 AM
என்னால் எதுவும் சொல்லமுடியவில்லை.. பதில்களை படிக்க படிக்க உணர்ச்சிமயமாகிறேன். எங்கேயோ பறக்கும் உணர்வு.. நிச்சயமாக இது கர்வமல்ல.... ஆரம்பநிலையில் இருக்கும் எனக்கு உங்கள் பதில்கள் பலமடங்கு பலம் அளிக்கின்றன.. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்!!

நண்பர்கள் பெஞ்சமின்.. முகிலன்..
அன்பு அண்ணன்..., அண்ணனின் தம்பி.. தம்பியின் அண்ணன்.. பாரதி.. அனைவருக்கும் நன்றிகள்!!!

gragavan
21-11-2005, 12:04 PM
மனித மனங்களை காயப்படுத்துவதை இனிமேலும் அனைவரும் தவிர்க்க வேண்டும். ஆயிரம் வேறுபாடுகள் இருக்கலாம். அதற்காக ஒருவரைக் கேவலமானப் பேசி மனதைக் குத்துவது பெரும் பாவம். எந்தக் கடவுளும் மன்னிக்க மாட்டார். அப்படி சம்பத்தப்பட்ட நபர் மன்னித்தால் அவர் கடவுள்.

gragavan
21-11-2005, 12:47 PM
கதையைப் படைத்த பூவிற்கு படித்த ராகவன் பாராட்டுப் போட மறந்து விட்டானே. அதனால்தான் இப்பொழுது பூவுக்குப் பாராட்டுகள்.

மன்மதன்
21-11-2005, 06:52 PM
நன்றாக செல்கிறது கதை.. பக்குவப்பட்ட எழுத்தாளர் போல வார்த்தை பிரயோகங்கள்.. அடடா இது மாதிரி கதை படித்து ரொம்ப நாளாச்சிப்பா........ பூ, இதை ஒரு நகல் எடுத்து ஏதாவது வார இதழுக்கு அனுப்பி வைங்க.....

pradeepkt
22-11-2005, 08:15 AM
இதை எப்படி இத்தனை நாள் படிக்காமல் விட்டேன்... வெட்கப் படுகிறேன்!
அருமையான கதைக்களன், உணர்ச்சிபூர்வமான முடிவு.
வயது ஏற ஏற குழந்தையைப் போல் காக்க வேண்டிய பெரியவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்று நேரடித் தாக்குதல் நடத்துகிறது கதை.
வாழ்க பூ!

Shanmuhi
22-11-2005, 09:40 PM
அருமையான கருவினை எடுத்து கதையாக நகர்த்தி இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்
மேலும் தொடருங்கள். .

kavitha
23-11-2005, 11:01 AM
இக்கட்டான சூழல் வரும்போது "எப்படிச் சொல்வேன்?" என்றே மனம் அல்லலுறும். அதற்குமேல் பேச வார்த்தை இருக்காது. அத்தகையச் சூழலை மிக அழகாகக் கதையில் எடுத்தாண்டிருக்கிறீர்கள் பூ. வாழ்த்துகள்! :)

இது உங்கள் முதல் முயற்சியா? இதையே ஏன் நீங்கள் கவிதையாகத் தந்திருக்கக்கூடாது?சிறுகதையை நான் கவிதையின் நீட்சியாகக் காண்கிறேன். எனினும் கவிதைப் பக்கத்திலும் உங்களது புதுமைகள் இருக்கட்டுமே! ஏன் சொல்கிறேன் என்றால், சிறுகதைக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால் போதும். தேவையற்ற கற்பனை, உருவகங்களைச் செதுக்கி எறிந்து விட்டு உரை நடையில் மையக்கருவைப் பின்னிப்பிணைந்தால் சிறுகதை கிடைத்துவிடும். ஒவ்வொரு பத்திக்கும் கூட இதில் நீங்கள் காட்சியை மாற்றலாம்.
காட்சிகளை அப்படியே ஒப்புவிக்கலாம்.

ஆனால் கவிதையில் இதுவெல்லாம் சாத்தியம் கிடையாது. ஒவ்வொரு வரிக்கும் ஒரு முத்தாய்ப்பு வேண்டும். அந்த வரி அடுத்தவரியைத் தொடுக்கவேண்டும். இறுதியிலோ மையத்திலோ அல்லது தலைப்பிலோ அதன் சாரத்தை அது தாங்கி இருக்கவேண்டும். சொற்களைக் குறைக்கவேண்டும். கவிதை வடிவம் என்பது இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியம். அது உங்களுக்குக் குயவனின் மண்பாண்டம்போல இலகுவாகக் கை வரும்போது தடம் மாறவேண்டியதன் அவசியம் என்ன?

இனி கதையைப்பற்றி:-
ஜானு - இவளே கதையிலும் சரி, கதைக்கும் சரி - ஆளும் நாயகி. ஒன்றை இழந்து தான் மற்றதைப்பெறவேண்டும் என்பது தான் நியதியோ? தந்தையின் பாசத்தை ஒதுக்கி, ஜானுவின் பாசத்திற்காகத் தவிக்கும் கதாநாயகன். இவன் காட்டும் பாசமும், மன்னிப்புகளும் கூட புரியாதவளாய். அல்லது அதை மதிக்கத்தெரியாதவளாய்...


"பெண்கள் எதையும் எளிதாக எடுத்துக் கொள்வதில்லை., சிறிய பிரச்சினைகளைக்கூட தனக்கு இழுக்கு என மனதில் நினைத்துவிட்டால் அவ்வளவுதான்.., பழிவாங்கும் எண்ணம் மனதிற்குள் வந்துவிட்டால் அதை கண்மூடித்தனமாக நிறைவேற்றுவார்கள் என சொல்லக்கேட்டிருக்கிறேன்.. ஆனால் ஜானகியிடம்தான் பார்க்கிறேன். என் வீட்டுப்பேச்சை எடுத்தாலே எரிந்துவிழ ஆரம்பித்துவிடுவாள்"
- பழிவாங்கும் குணம் இருபாலருக்குமே பொதுவான ஒன்று தான். அது சந்தர்ப்ப சூழலையும் அவரவர் நற்குணங்களையும் பொறுத்து மட்டுமே மாறுபடும். ஆண்களுக்கு அதை அங்கேயே நிறைவேற்றிக்கொள்ளும் சுதந்திரம் உண்டு. இவர்களால் அது முடியாததால் வேறு வடிவமாக வெளிப்படுகிறது. அவ்வளவே!


" ஆனால் ஜானகிக்கு புரியவில்லை. கேட்கறது பிச்சை அதுல என்ன எகத்தாளமென நக்கலடிப்பாள். அப்பாவிற்கு விஷயம் தெரிந்துவிடப் போகிறதென நானும் அதை பெரிதாக்குவதில்லை."

அத்துமீறிய வார்த்தை. அங்கேயே அதைச் சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ளச் சொல்லியிருக்க வேண்டும். விட்டுக்கொடுப்பது என்பது நல்லவிசயங்களுக்காக இருந்தால் மட்டுமே இருவருக்கும் நன்மை பயக்கும். சுட்டிக்காட்டாதது மிகப்பெரிய கோழைத்தனம்.

நமக்குப்பிடித்தவர்கள்/ நம் அன்புக்குரியவர்கள் எது செய்தாலும் அதைச் சகித்துக்கொள்ளும் பக்குவம் நமக்கு தாமாகவே வந்துவிடுகிறது. அதே போல் எதிர்பாலரும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது அதுவும் தக்க புரிந்துக்கொள்ளூதலுக்கு முன்பு எதிர்பார்ப்பது மிகவும் தவறு.
இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். நமது பெற்றோர்கள், வழித்துணைக்கு முந்தையவர்கள். நம்மை உருவாக்கியவர்கள். இடையில் வந்த உறவுக்காக ஒருபோதும் அவர்களை ஒதுக்கிவிட முடியாது. நம்மை உருவாக்கியவர்களுக்காக நாம் செய்யும் எந்த செயலும் அவர்களது அன்பிற்கு ஈடாகிவிட முடியாது. இதனை இருபாலருமே புரிந்துக்கொண்டு மதிக்கத் தெரிந்திருக்கவேண்டும்.

பெண்களுக்கு அத்தகைய அங்கீகாரம் மறுக்கப்படுகிறது...அல்லது எதிர்பார்க்கப்படுவதில்லை. இந்த உள் ஆதங்கம் தான் ஆண்வழிச் சொந்தத்தை அன்னியப்படுத்துகிறது என்று நினைக்கிறேன்.


"இதென்ன அல்பத்தனமா..,அது இதுவென பொரிந்து தள்ளினாள். எனக்கு கோபம் அதிகமாகி ஜானுவை ஒரு அறைவிட்டு விட்டேன். அவ்வளவுதான். அன்றிலிருந்து அப்பா ஜானகிக்கு பரம விரோதியாகிவிட்டார். நான் அறைந்தது, அதுவும் அவளது தோழியின் முன் அடித்தது அவளது நெஞ்சில் பசுமரத்தாணிபோல பதிந்துவிட்டது போலும். இந்த நிகழ்ச்சிக்குப்பின் ஜானகி நேரிடையாகவே அப்பாவை முகத்திலடிக்க ஆரம்பித்துவிட்டாள்."

இதைத்தான் சொன்னேன். ஆண்கள் அங்கேயே நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.
எந்த வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு. உருவம் தான் மாறும்.
கையைக்கிழித்த கத்தியை விட, காலில் பதிந்த கண்ணாடி சில் மிக அபாயமானது. சொல்லுக்குச் சொல்லோ, செயலுக்குச் செயலோ தீர்வாகி விட முடியாது. மனம் விட்டு பேசுவதும், புரிந்துக்கொள்ளுதலும் தான் சிறந்த தீர்வாக அமையும்.


"தாத்தா எழுந்திருங்க தாத்தா... அம்மா இனிமே உங்களைத் திட்டமாட்டாங்க தாத்தா...
எழுந்துவாங்க வீட்டுக்கு போலாம்.. " என அப்பாவை உலுக்க... அந்த பிஞ்சு செய்கையில் உடைந்துபோன ஜானகி. என்னைவிட்டு விலகி அப்பாவின் பாதங்களை இருகைகளாலும் இறுகப்பற்றி அவரது கால்களில் முகம் புதைத்து குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.."

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.

எளியாரை நாம் வதைக்கும்போது வலியார் முன் நாம் நிற்கும் நிலையை எண்ணிப்பார்க்கவேண்டும் என்று வள்ளுவர் கூறுவார். இங்கே எளியார், வலியார் என்ற ஏற்றத்தாழ்வை உண்டாக்கியதே கதை நாயகனின் மிகப்பெரிய தவறென்பேன்.

உறவுகளுக்குள் ஏற்றத்தாழ்வு வரும் நிலை தான் பிரச்சனைகளுக்குக் காரணமாகி விடுகிறது.
மனிதர்களை மதிக்கத்தெரிந்தவர்கள் உறவுகளை நிச்சயம் போற்றுவார்கள்.

இளசு
24-11-2005, 12:23 AM
கவிதாவின் விமர்சனம் -

விமர்சனங்களுக்கு ஒரு முன் உதாரணம்....

வந்தனங்கள் கவீ..


(பெரும் ஊடகங்களில் எழுதும் பெரும் எழுத்தாளர்களுக்கும் கிடைக்காத பேறு -- நம்மை அறிந்த நண்பர்கள் இதுபோல் தரும்
அந்நியோன்ய விமர்சனங்கள்... மெய்சிலிர்க்கிறேன்..)

kavitha
29-11-2005, 10:55 AM
கவிதாவின் விமர்சனம் -

விமர்சனங்களுக்கு ஒரு முன் உதாரணம்....

வந்தனங்கள் கவீ..

நன்றி அண்ணா. விமர்சன குரு தாங்கள் தானே! :)
நான் எம்பாட்டுக்கு எழுதிட்டேன். பூ என்ன சொல்லப்போகிறாரோ?!

பென்ஸ்
30-11-2005, 09:23 AM
நன்றி அண்ணா. விமர்சன குரு தாங்கள் தானே! :)
நான் எம்பாட்டுக்கு எழுதிட்டேன். பூ என்ன சொல்லப்போகிறாரோ?!


என்ன கவிதா இப்படி சொல்லிவிட்டீர்கள்.... விமர்சனம் வாசிப்பவனுடையது, உங்கள் கருத்துகளை வன்மையாக புகுத்தாமல் அருமையாக வீசியிருக்கிறிர்கள்... அதிலும் இதுமாதிரி ஒரு விரிவான விமர்சனம் கிடைக்க ஒன்னும் எழுதாமலே அவன் அவன் அலையுறான் (என்னை தான் சொல்லுறேன்:D :D )....

மேலும்... "என்ன நினைப்பார்களோ???" ...நல்ல ஒரு சிந்தனையாளர் உங்களிடம் இருந்து நான் இந்த கேள்வியை எதிர்பாக்கவில்லை... "தயக்கம் -- தடை கல்"....

Narathar
12-12-2005, 01:02 AM
கலக்கிட்டீங்க பூ...............
கதையில் மட்டுமல்ல
என் கண்களையும் தான்!

aren
03-01-2006, 12:18 AM
நிஜ வாழ்க்கையில் நடக்கும் அவலங்களை அப்படியே நம் கண்முன் காட்டியிருக்கிறீர்கள்.

ஜானு - நல்ல வசதியான வீட்டிலிருந்து வந்தவள். எங்கே தன் கணவன் தன் அப்பாவிற்கு வாங்கும் சம்பளத்தை அப்படியே கொடுத்துவிடுவானோ என்ற பயம். அந்த பயம் அவளை தன் கணவனை அவன் அப்பாவிடம் ஒட்டவிடாமல் தடுத்தது.

கதாபாத்திரங்கள் அனைத்தும் அருமையாக சேர்த்திருக்கிறீர்கள். ஒரு உண்மை நிகழ்ச்சியைப் படித்ததுபோலிருக்கிறது.

நீங்கள் ஒரு முதல்தரமான எழுத்தாளர் என்று நிரூபித்திருக்கிறீர்கள். தொடருங்கள் உங்கள் பாதையை. வெற்றி நிச்சயம். அதற்கு என் வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

Iniyan
04-01-2006, 09:48 PM
மனிதர்கள் இல்லாமல் போகும் போது மட்டுமே மனிதத் தன்மையை வெளிப்படுத்தும் பல ஜானகிகள் இன்னும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

rajasi13
01-10-2006, 12:46 PM
எப்படியெல்லாம் மனைவி அமையக்கூடாது என்று ஒரு ஆண் நினைப்பானோ, அப்படியே அமைந்த கதாபாத்திரம். பெண்கள் ஏன் ஆண்களும் கூட படிக்க வேண்டிய கதை.

ஓவியா
23-11-2006, 07:47 PM
இன்னும் எத்தனை-எத்தனையோ குடுமபங்களில்
இது போல் பல ஜானகிகள் இருக்கதான் செய்கின்றனர்....

அதில் பல ஜானகிகள் மரணத்திலும் மாறுவதே இல்லை....
சிலர் கதைகளில் மட்டுமே அவதரிகின்றனர்

பூ

அருமையான கதை
அழகான நடை.....
சிறந்த கரு

நீங்களும் ஒரு சிறந்த கதையாசிரியர் தான்

பாராட்டுக்கள்

gayathri.jagannathan
21-12-2006, 07:25 AM
பூ அவர்களே கதை மிகவும் அருமை.... பாத்திரப்படைப்பில் கச்சிதம் மிளிர்கிறது...

மிடுக்கான நடை கொஞ்சம் கவிதைத்துவம்..."மற்றவர்கள் எப்படி இருந்தாலும்...நான் இப்படித்தான்" என்கிற மாதிரி ஒரு கதை வீச்சு...இயல்பு நிலை திரியாமல் கதை அதன் போக்கிலேயே செல்கிறது... மனிதர்களின் சுயநலம் கலந்த மாற்றங்களை ஜானகி கதாபாத்திரம் மூலமாக எடுத்துக்காட்டியிருப்பது... இது போலிருக்கும் பெண்களுக்கு ஒரு சாட்டையடி...

அருமையான கதை தந்ததற்கு மிக்க நன்றி...

:rolleyes:

poo
28-12-2006, 06:47 AM
இந்த கதையை இன்று மீண்டுமொருமுறை படித்து அழுதேன்...

கதையில் கற்பனை என்பது மிகச்சிலவே... ஆனாலும் அந்த கற்பனை மிகக்கொடிதே.., இயற்கையின் இயல்பே.., இதயம் நுழைந்தவரில் இயற்கையை ஏற்க மறுப்பதும் இயல்பே..

நிஜ வாழ்வில் சந்தித்த நிகழ்வுகள் இவைகள்... முடிவைமட்டும் வேறு மாதிரி அமைத்தேன். இந்த கதையை படித்து முடித்தபின், ஜானகி ஜானுவாக மாறிவிட மாட்டாளா? கற்பனை முடிவு நிஜமாகும்வரை காத்திருக்க வேண்டுமா?!!..

-தொடர்ந்து கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள்..
இக்கதையை பொறுத்தமட்டில் நான் எழுத்தாளன்போல தோற்றம் அளிக்கிறேன்.. அவ்வளவே!.. (உண்மையில் ஒரு இரயில் பயணியாய் என் நிஜம் சொல்லியிருக்கிறேன்...)

மனோஜ்
18-01-2007, 07:47 PM
கதை அறுமை
நிகழ்வு நிஜமாக இறைவனை பிராத்திக்கிறோன் பூ அவர்களே