PDA

View Full Version : நெருஞ்சி முள்.. சிறுகதை..rambal
21-04-2003, 05:31 PM
நெருஞ்சி முள்.. சிறுகதை..

ஒரு மழை நாள் மதியத்தில் மதுரைக்கு அலுவல் நிமித்தமாக 10வருடங்கள் கழித்துச் செல்கிறேன். ஆட்டோவில் நான். வெளியில் மழை. இது வேறு ஒரு சமயமாயிருந்தால் இறங்கி நனைந்திருப்பேன். சாலையெங்கும் தற்காலிக குறு ஓடைகள் ஓடிக்கொண்டிருந்தன. எனக்குள்ளோ சுனாமி அடித்துக் கொண்டிருந்தது. அதற்குக் காரணம் இருக்கிறது, அது அவள். இந்த மழையை ரசிக்கக் கற்றுக் கொடுத்தவள். நனையக் கற்றுக் கொடுத்தவள். மொத்தத்தில் என் ஆசான். ஆட்டோ இப்போது கொஞ்சம் எல்லாவித வாசனைகளும் எல்லா மொழிகளும் கலந்து காற்றில் திரியும் எக்மோருக்கு வந்து சேர்ந்திருந்தது. பணத்தைக் கொடுத்துவிட்டு வைகையைப் பிடிக்க கிளம்பினேன். நல்ல வேளையாக முன்பதிவு செய்திருந்ததால் தப்பித்தேன். இல்லையென்றால் நீண்ட வரிசையில் நிற்கவேண்டும். எதற்கெடுத்தாலும் நீண்ட வரிசை. இந்த அவல நிலை என்று ஒழியுமோ? இந்த எண்ணங்கள் கூட அவள் விதைத்ததுதான். ஒருவழியாய் எனது பெட்டியைத் தேடிக் கண்டுபிடித்து எனது இருக்கையில் அமர்ந்தேன். எனது ஜன்னலோர இருக்கை. ஆகவே, எந்தக் கவலையுமில்லாமல் தீர்க்கமின்றி வேடிக்கை பார்க்கலாம். பையை மேலே வைத்துவிட்டு உட்கார்ந்தேன். அடுத்த ஐந்து நிமிடத்தில் வண்டி கிளம்பியது. எனது எண்ணங்களும்தான்.

"ஏண்டா உனக்கும் அவங்களுக்கும் ஒரு இதாமே?" நண்பன் சிவா கேட்டான்.

"அப்படியெல்லாம் ஒன்றும் இல்லைடா. வீணாக் கற்பனை பண்ணிக்காதே"

"கற்பனை பண்ணுவது நானா? இல்லை நீயா? எல்லோரும் தப்பா பேசுறாங்கடா"

"யார் தப்பா பேசினாலும் எனக்குக் கவலையில்லை. நீ தப்பா நினைக்கிறியா?"

"இல்லைடா. ஆரம்பத்தில நான் ஒன்னும் நினக்கலை. ஆனால், வரவர உன் நடவடிக்கைகள் அதுக்கு இடம் கொடுத்திடுச்சு."

"so, நீயும் தப்பா நினைக்கிற. அப்படித்தானே."

"ஆமாண்டா."

"சரி.. உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை. ஊர்ல சொல்றதுலதான் நம்பிக்கை. அப்படித்தானே?"

"அப்படி இல்லை."

"பின்ன எப்படியாம்?"

"நீயே கொஞ்சம் யோசிச்சுப் பாரு? எத்தனையோ பேர் இருக்க இவங்களைப் போயி. வேற ஆளே கிடைக்கலையா உனக்கு? அந்த வித்யாவிற்கு என்ன குறைச்சல். அவ உன்னைய எவ்வளவு காதலிக்கிறா தெரியுமா? இதெல்லாம் உனக்கேத் தெரியும். நீ இவங்களோட சுத்துறதுனால அவள் எவ்வளவு feel பண்ணாத் தெரியுமா?"

" ஓஹோ அவள் சொல்லித்தான் இந்த டாபிக்கையே எடுத்தியா நீ? அவளுக்கு என் மேல இருக்கிறது ஒரு விதமான opposite site attraction. இவங்க மேல இருக்கிறது வேற. அதெல்லாம் உனக்குப் புரியாது."

"எது புரியாது? நாய்க்குட்டி மாதிரி அவங்க பின்னாலே போறதும் அவங்க வீட்டுல ராத்திரி படிக்கிறேன்னு சொல்லி அடிக்கிற கூத்துமா?"

இந்த வாசகம் சொல்லி முடிப்பதற்குள் என் கைகள் அவன் கன்னத்தை முத்தமிட்டிருந்தன. அந்த சம்பவத்திற்குப் பிறகு அவனோடு பேசவில்லை.

செங்கல்பட்டு சந்திப்பு என்ற பலகை கண்ணில் தென்பட்டதும்தான் கிளம்பி 1 மணி நேரம் ஆகிறது என்ற உணர்வுக்கு வந்தேன். வயிற்றில் கொஞ்சம் பசி எடுத்தது. கேண்ட்டீன் வரை போய் பார்க்கலாம் என்று கிளம்பினேன். அது இங்கிருந்து 4 பெட்டிகள் தள்ளி இருந்தது. வழியில் ஒரு கூட்டம் சீட்டு ஆடிக் கொண்டிருந்தது. சிலர் மும்முரமாக ராஜேஸ் குமாரும் இன்னும் சிலர் அன்றைய ஹிண்டுவிலும் லயித்து இருந்தார்கள். இன்னும் வெளியில் தூவானம்தான். அது என்னவோ மனதிற்குள் ஒரு பரவசத்தை விரவியிருந்தது. ஒரு தயிர் சாதம் வாங்கி சாப்பிட்டேன். பின் என் பெட்டி அடைந்து கதவருகே நின்று கொண்டு வண்டியின் புகைக்கு ஈடாக இல்லாவிட்டாலும் ஏதோ என்னால் முடிந்த அளவு புகைத்தேன்.

"நேற்று சிவா கூட என்ன சண்டை?"

அதெல்லாம் எப்படி சொல்லி புரிய வைப்பது. அந்த சண்டைக்குக் காரணமே நீதான்.

"என்னடா நான் பாட்டுக்கு கேட்டுகிட்டிருக்கிறேன். நீ ஏதோ மௌன விரதம் இருக்கிறவன் மாதிரி இருந்தா எப்படி?"

"அதெல்லாம் ஒன்னும் இல்லை"

"இப்படி மழுப்பலா சொன்னா என்னவோ இருக்குன்னுதான் அர்த்தம். ம்ம் சொல்லு"

"அதான் தகராறுனு தெரியுதுல. பின்ன ஏன் அதையே நோண்டிகிட்டு. விட்டுடுங்க."

"உனக்கு இருந்த ஒரு நல்ல பிரெண்டு அவன். அவன்கிட்டப் போயி. அதான் கேட்டேன். உனக்கு இஷ்டம் இல்லைன்னா சொல்ல வேண்டாம்."

மௌனங்களின் பேரிரைச்சலில் இருக்கப் பிடிக்காமல் அங்கிருந்து கிளம்பினேன்.

ஏதோ நெருப்புப் பரவும் உணர்வு வர சிகரெட்டைத் தூக்கி எறிந்தேன்.
என் இருக்கையில் வந்து அமர்ந்தேன். இப்போது இன்னும் மழை அதிகமாயிருந்தது. எனக்குள்ளும் மனசு அதைவிட அதிகமாய் அலைபாய்ந்தது. ஜன்னல் வழியே திரியும் எந்தக் காட்சியையும் காணச்சகியாமல் விழி திறந்த தூக்கம் போன்ற நிலை எய்தினேன்.

"ஆமாம், அந்த வித்யாவை கண்டுக்கிடறதே இல்லையாமே? ஏன்? என்னாச்சு?"

"எப்படி கண்டுக்கிடனும்னு சொல்ல வற்றீங்க?"

"அவள் உன்னைக் காதலிக்கிறதா சொல்லி இருக்கிறாள். ஒன்னு அவளைக் காதலிக்கிறேன்னு சொல்லு, இல்லை இல்லைன்னு சொல்லு. அது என்ன ஒன்னும் சொல்லம விட்டேத்தியா ஒரு பெண்ணை அலைய விட்டுப் பார்க்கிறதுல ஒரு ஆனந்தம்?"

"அவளுக்கு என் மேல இருக்கிறது ஒரு விதமான அட்ராக்சன். லவ்வெல்லாம் இல்லை. அதைக் கொச்சைப் படுத்த வேண்டாம்."

"சரி அட்ராக்சன். அதுக்காக இப்படி ஒன்னுமே சொல்லாம அலையவிடுறது நல்லா இல்லை."

"அதுக்கு நான் என்ன பண்ண?"

"நீதான் பண்ணனும். முதல்ல அவள்கிட்டப் போய் பேசு. புரிய வை."

"என்னன்னு?"

"உனக்கு வந்திருக்கிறது லவ்வு இல்லை. ஒருவிதமான ஈர்ப்பு அப்படின்னு"

"அது எனக்கு அவசியமில்லாத வேலை"

"அப்ப எதுதான் உனக்கு அவசியம்? உன் மீது அன்பு செலுத்த ஒரு ஆத்மா அலையும் போது அதை உதாசீணப்படுத்தக் கூடாது. தெரியுதா?"

"ம்ம்ம்"

"அதை சிரிச்சுகிட்டே சொன்னால் என்ன?"

"ஹிஹி போதுமா?"

"போதும்"

இப்படியாக அந்த சம்பாசணை ஒரு முடிவிற்கு வந்தது.

வண்டி உளுந்தூர் பேட்டையில் எதிரே வரும் வண்டிக்கு வழி கொடுப்பதற்காக நின்றது. இறங்கி போய் கடையில் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டும் வாழைப்பழமும் வாங்கிக் கொண்டேன். அடுத்த ஐந்து நிமிடத்தில் ஒரு வண்டி எதிர் திசையில் பயணித்துக் கடந்தது. என் வண்டியும் புறப்பட. வண்டி புறப்பட்டுப் போனவுடன் இந்தப் பிளாட்பரங்கள் அனாதையாக அடுத்த ஆதரவிற்காக காத்திருக்கும். இப்படி காத்திருத்தல்களிலேயே ஒரு சுகம் இருக்கிறது, எனது 10 வருட காத்திருத்தல் இன்று சுகமளிக்கவில்லையா? அதுபோல.

"உன் மனசுல என்ன பெரிய இவன்னு நினைப்பா?"

"ஏன் வந்ததும் வராததுமா கத்துறீங்க?"

"பின்ன என்ன? அந்த வித்யாகிட்டப் போய் ஆதரவா பேசுடான்னு சொன்னால் பெரிய அட்வைசாமே. ஒழுங்காப் படிக்கிற வழியைப் பாரு. இது படிக்கிற வயசு. அப்படி இப்படின்னு ஏகத்துக்கு."

"அவள் உங்ககிட்டையும் சொல்லிட்டாளா?"

"பின்ன வேறு யார் யார்கிட்டேல்லாம் சொன்னாள்?"

"எல்லார்கிட்டையும்தான்."

"எல்லார்கிட்டையும்னா?"

"என் தம்பி வரைக்கும். அவன் வந்து எனக்கு அட்வைஸ் பண்ணிட்டுப் போறான்"

"அவ பெரிய ஆளுதான். இருந்தாலும் பாவம்டா. உனக்காக உருகுறா தெரியுமா?"

"உருகுறதுக்கு அவ ஒண்ணும் வெண்ணை இல்லை. நான் ஒன்னும் நெருப்பும் இல்லை."

"உடனே தத்துவம் பேச ஆரம்பிச்சிடுவியே. வழக்கம் போல் உனக்கு இஷ்டம் இல்லைன்னா இந்த டாபிக்கை விட்டுடுறேன்."

இந்தப் பக்குவம் தான் உன்னிடம் எனக்குப் பிடித்தது. என் மனது புண்படக்கூடாதென்கின்ற கவனம் தான் உன் மீது என்னை மையம் கொள்ளவைத்தது.

வண்டி விழுப்புரம் வந்து சேர்ந்திருந்தது. இங்கு ஒரு இருபது நிமிடங்கள். என் இதயம் இன்னும் வேகமாக அடிக்க ஆரம்பித்தது. மதுரை என்பது 30 லட்சம் மக்களின் நம்பிக்கை மண். அழகர் இறங்கும் அன்று மழை பெய்யும். அது அந்தக் கடவுளாலா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், அன்று அந்த முப்பது லட்சம் மக்களின் எண்ணங்களும் அழகர் இறங்கும் அன்று மழை பெய்யும் என்பதாகத்தானிருக்கும். அந்த நம்பிக்கைதான் மழை பெய்யக்காரணம். இப்படி பல எண்ண ஓட்டங்களுக்கிடையில் 20 நிமிடங்கள் கரைந்தது. வண்டி நகரத் தொடங்கியது.

"நான் 1085/1200க்கு. கொஞ்சம் கம்மியாயிடுச்சு. வழக்கம் போல் வேதியியலில் 200க்கு 195. எல்லாம் நீங்கள் கற்றுக்கொடுத்தது"

"சரி. அடுத்து என்ன?"

"இங்கேயே தியாகராஜாவில சேர்ந்திட வேண்டியதுதான். இல்ல என்றால் கவுன்சிலிங்கில எங்கே கிடைக்குதோ அங்கே போயிட வேண்டியதுதான்."

"அப்படின்னா என்னை பிரிஞ்சு போறதைப் பத்தி உனக்குக் கவலையே இல்லை. அப்படித்தானே."

அந்தக் கேள்வியில் இருந்த பிரிவு எனும் வார்த்தை என் மேல் பல அக்னித் துண்டுகளை அள்ளி எறிந்தது போல் இருந்தது. இருந்தாலும் அதுதான் நிஜம். நிஜம் எப்போதுமே சுடும். வலி நிறைந்தது. அவசர உலகில் வேறு பல நிலைகளை அடைய பிரியத்தான் வேண்டும். ஆனால், இது என்னவோ ஒரு தவிப்பு. வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு உணர்வு. இது காதலா? குரு மீது கொள்வது காதலாகாது. குருவிற்கு தட்சணையாக மாங்கல்யம் கொடுப்பது தவறல்லவா? அப்படி என்றால் இனக்கவர்ச்சியா? அப்படி இருந்தால் வித்யாவிற்கு அவ்வளவு வியாக்யானம் செய்திருப்பேனா? இது வேறு எதுவோ. அதுக்கு பேர் எல்லாம் வேண்டாம். ஆனால் ஒரு வகை புனிதம். இப்படியாக என்னென்னவோ எண்ணங்கள் ஓடின.

"இந்தாக் குடி" என்று காபி கப்பை நீட்டியிருந்தாள்.

குடித்துவிட்டு

"சரி நான் கிளம்புறேன்".

வண்டி திருச்சிராப்பள்ளியை நெருங்கிக் கொண்டிருந்தது. வானம் கொஞ்சம் இருட்டியிருந்தது என் மனதைப் போலவே. மதுரைக்குப் போய் அவளைப் பார்க்க முடியுமா? வேறு எங்காவது மாற்றலாகி போயிருந்தால்? இந்த எண்ணமே என்னை அணு அணுவாக அறுத்தது.

"என்ன யோசனை?"

"இல்லை சென்னையிலதான் சீட் கிடைச்சிருக்கு. இங்கே கிடைக்கலை. அதான்"

"அதுக்கென்ன?"

"உங்களைப் பிரிஞ்சு போறதைப் பத்தித்தான்."

"இதுக்கா? இவ்வளவு யோசனை. வாழ்க்கைங்கிறது ரயில் பயணம் போல். உன்னோட ஊர் போறதுக்கு நீ அடுத்த ரெயிலைப் பிடிச்சாகணும். அதனால் இந்த ஸ்டேசன்ல இறங்கப் போற பேசஞ்சர் நீ. என்னோட ஊர் என்பது இன்னும் வரவில்லை. உனக்காக நான் இறங்கினாலோ இல்லை எனக்காக நீ இறங்காமல் விட்டாலோ நாம இரண்டு பேரில் ஒருவர் அவர் ஊர் போய் சேர முடியாது. அதனால கலங்காமல் இரு."

இதுதான் உன்னிடம் எனக்குப் பிடித்தது. இந்தத்தெளிவான அணுகுமுறை. இதற்காகத்தான் உன் மேல் ஓர் இனம் புரியா ஒரு உணர்வு. இதை எப்படி சொல்லி உனக்கு விளங்கவைப்பேன் பெண்ணே. பதினேழில் இருக்கும் நான் 26ல் இருக்கும் உன்மேல் வைப்பது பாசமா? காதலா? அன்பா? எனக்கு விளங்கவில்லை. குழப்பத்துடன் அவளிடம் ஒன்றும் சொல்லாமல் சென்னைக்கு படிக்கக் கிளம்பினேன். அதன்பிறகு இன்றுதான் திரும்புகிறேன். அதுவும் கூட பணி நிமித்தமாக.

வண்டி மதுரைக்கு வந்து சேர்ந்தது. என் பழைய நினைவுகளும் ஒரு வழியாய் அமைதியடைந்திருந்தன.மழை மட்டும் ஓய்வதாயில்லை. மழைத்தூறல்களுக்கிடையே அடுத்த நாள் காலை அலுவல்களை முடித்துக் கொண்டு அவள் இருந்த வீட்டிற்கு சென்றேன். அங்கு அவள் இல்லை என்பதற்கு பல அடையாளங்கள் இருந்தன. விசாரித்ததில் அவள் வேறு ஒரு பள்ளிக்கு மாற்றலாகி ஆரப்பாளையம் மாறி போய் விட்டிருந்தது தெரிய வந்தது. நான் விடுவதாய் இல்லை. எப்படியும் பார்த்துவிட வேண்டுமென்ற ஓர் உணர்வு என்னை அரித்துக் கொண்டிருந்தது. ஆரப்பாளையம் சென்று தேடினேன். கடைசியில் கொலம்பஸ் மனனிலைக்கு வந்தேன். அந்த வீட்டை நெருங்கும் போதே ஒரு படபடப்பு. அந்த வீட்டுக் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றேன். ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஆள் ஒருவர் வந்து விசாரித்தார். விபரம் கேட்டவுடன் என்னை வராந்தாவில் சேர் போட்டு அமரவைத்தார். அங்கிருந்து ஹாலில் தெரிந்த புகைப்படம் பார்த்ததில் என்னை வரவேற்றவர்தான் அவளின் கணவர் என்று தெரிந்து கொண்டேன். அவளுக்கு மணமாகியிருந்தது தெரிந்ததும் அந்த இடத்தை விட்டு சத்தமில்லாமல் வெளியேறி மெயின் ரோட்டிற்கு வந்துவிட்டேன்.

இப்போது வானம் தெளிவாகி இருந்தது.

poo
21-04-2003, 05:45 PM
ராம்... அனுபவித்து எழுதியதா?!... அடிமனதை தொடுகிறது.. பாலச்சந்தரிடம் கிடைத்தால் ஒரு படம் பண்ணிவிடுவார்..

rambal
21-04-2003, 05:50 PM
நெருஞ்சி முள் என்பது எல்லாமே உண்மை. ஒரு அடிமனது உணர்வு. என்னைப் பாதித்தது. எல்லோரிடமும் இப்படி ஒரு நெருஞ்சி முள் உண்டு.

நிலா
21-04-2003, 09:21 PM
நெருஞ்சிமுள்....அது நெஞ்சத்துமுள்............அருமை!
தொடரட்டும் உமது பணி!

இளசு
22-04-2003, 11:37 AM
நெருஞ்சி முள் - விமர்சனக் கடிதம்.

மன்றத்தின் முதல் கதை.
முத்திரைச் சிறுகதை.
நூல் விமர்சனம் போலவே இதையும் தொடர்ந்து வரப்போகும் பெருமழையின்
முதல் சிலிர்ப்புத் துளியாகவே எண்ணிப் பூரிக்கிறேன்.

நிகழ்காலம் சென்னை முதல் மதுரை வரை ....
கடந்தகாலம் சிவாவுடன் "உரசல்".. விசாரிப்பு.. வித்யா... தேர்வு...சென்னை வரை.
அழகான நேர்த்தியான சங்கிலிக் கோர்ப்பு.

பதினேழு வயதில், சமவயதுள்ள பெண் காட்டும் ஆர்வத்தை "வெறும் கவர்ச்சி"
என்று தீர்க்கமாய் அலசும் நாயகனின் அறிவு பற்றி மதிப்பு வருகிறது.

நாயகியை நேரிடயாய் நீங்க என்றும்
மனசுக்குள் நீ என்றும் இரு தளங்களில் இயங்கும் அவன் "மயக்கம்" பலரும்
உணர்ந்த ஓர் உணர்வாக இருக்கவேண்டும்.

வயதுக்கு மீறிய கூர் அறிவு, சிந்தனை, வாசிப்பு, சிநேகம் தரும் பேச்சு முதலியவை
சிலருக்கு வயதுக்கு மீறிய ரசனை, அபிமானம், பிடிப்பு, ஈர்ப்பு தந்துவிடுவதை
உளவியல் ரீதியாக அணுகினால்.....?மன்ற மருத்துவர்கள், உளவியல் வல்லுநர்கள்
ஆலோசனைக்கு இதை வைக்கிறேன்.

வாழ்வியல் ரீதியில் அணுகினால்:
இந்த " நெருஞ்சி முள்" அந்த குரு ஆணாய் இருக்கும்பட்சத்தில்
தைத்து இருக்க முடியாது. எனவே " இனம்" முக்கியம்.
இடம், பொருள், ஏவலில்தான் சிக்கல். நாயகன் அறிவுக்கே இது எட்டுவதால்
அவன் மனதிலேயே இந்தப் பூ ஒரு முள்ளாய்......தங்கி அப்பப்பா!

மரியாதை எப்போது நட்பாய் மாறுகிறது?
நட்பு எப்போது காதலாய் கனிகிறது?
காதலில் காமம் எப்போது கலக்கிறது?
காமம் வெறும் குரோதமாய் எப்போது கொதிக்கிறது?
குரோதம், வெறுப்பாய் மாறி எப்போது தகிக்கிறது?
தகிப்பு தாங்காமல் உள்ளங்கள் எப்போது பிரிகிறது?

பிரிவில் உலர்ந்த மனம் புது உறவு தேடுகிறது.....
கவர்ந்தவர் பார்த்து மரியாதை செய்கிறது.....
மரியாதை.............................(மீண்டும், மீண்டும்)
ஏன் இது ஒரு உறவிலேயே கூட பலமுறை வரும் வட்டம்!

அதிக பக்தி....அபிராமி மேல் வைத்த பட்டரின் நிலை?
அபிராமியும் காளியும் ஒன்றே என்னும் எங்கும் இரு-நிலை.

நெருஞ்சி எடுக்க வானம் தெளிய
அவள் இனி கிடைக்க வாய்ப்பே இல்லை என்ற செய்தி தேவை!

அழகான முடிவு.நல்ல நடை, ஆற்றல் உள்ள எழுத்தாளரைக் காணமுடிகிறது
கதை முழுவதும். ஒரு சிறு நெருடல் கேள்வி ராம்....
சென்னைக்குப் படிக்க போனால் மதுரை வர 10 ஆண்டுகளா ஆகும்???

மனமார்ந்த பாராட்டுகளுடன்
அண்ணன்

lavanya
22-04-2003, 01:32 PM
அன்புள்ள ராம்பால்ஜிக்கு.......

உங்களின் நெருஞ்சி முள் சிறுகதை படித்தேன்...... நண்பர் இளசு சொன்னது போல் முதல் முத்தான முத்திரை சிறுகதை .......
சம்பவங்களும் தற்போதைய நினைவும் ஒன்றொடன்று பின்னி பிணைந்திருந்தாலும் குழப்பமின்றி கதையை நகர்த்திய விதம் அருமை....
ஒரு சிறுகதைக்கு தேவையான எல்லா விஷயங்களும் உங்கள் கதையில் இழையோடியிருக்கின்றன...

தேவையற்ற சம்பவங்களோ வர்ணனைகளோ இல்லாமல் ஒரு சின்ன சம்பவத்தை அழகாக கதையாயிருக்கும் விதம் அழகு....
எல்லோர்க்குள்ளும் இது போன்ற சம்பவங்கள் உண்டு.... சிலருக்கு வேறு மாதிரி வேறு வடிவில் வேறு நபர்கள்.... என்ற
பரிணாமம். இது நிச்சயமாக உங்கள் வாழ்வில் நடந்த சம்பவம் என்று எண்ண தோன்றுகிறது... சரியான தருணத்தில் அமையக் கூடிய
நட்புகள் சரியில்லையேல் நம் வாழ்க்கை வேறு விதமாக திரும்பியிருக்கும்... உங்களை பொறுத்தவரை அது உங்களுக்கு மிக சரியானதாகவே இருக்கிறது . அழகி பட சம்பவங்கள் போல் இதெல்லாம் மனதில் அழியாத கல்வெட்டுகள்... உங்கள் வாழ்க்கையில்
கடந்து போன அந்த பயணங்களை ஒரு ரயில் பயணத்தில் அசை போட்ட விதம் வெகு அருமை. பயணம் வேறு வாழ்க்கை வேறா....?


கடவுளை காதலிக்கலாம். ஆனால் கல்யாணம் செய்து கொள்ள முடியுமா? உங்கள் சூழல் நீங்கள் மீண்ட விதம் கடவுள் செயல்...

உங்களின் அந்த மூத்த தோழிக்கு என் வந்தனங்கள்... அந்தப் பெண் வித்யா என்ன ஆனார் ?

உங்களது நெருஞ்சி முள் நேசிக்க/ பூஜிக்க தகுந்த புனித மலர் என்பது என்பது என் எண்ணம்

rambal
23-04-2003, 05:54 AM
பத்து ஆண்டுகள் என்பது படிப்பிற்கு மட்டுமல்ல.
படித்து முடித்து மேல்படிப்பிற்கு வேறு இடம் போய் மீண்டும் சென்னையில் வேலை கிடைத்து இப்படி அந்தத் தொடர்பே அறுந்துவிட்ட நிலை. அதற்கு ஒரு 10 ஆண்டுகள்.. உண்மையில் இப்படி ஒரு சம்பவம் என் வாழ்வில் நடந்ததுதான். ஆனால், கதைக்காக நிறைய மாற்றங்கள் செய்துள்ளேன். இது ஒரு பரீட்சார்த்தமான் முயற்சி. இந்த முயற்சி தொடரும் என்றே நினைக்கிறேன்..

அந்த வித்யா இப்போது அமெரிக்கா என்று நினைக்கிறேன். அந்த வயது மூத்ததோழி இப்போது அங்கேதான் என்று நினைக்கிறேன்.

karikaalan
23-04-2003, 12:41 PM
ராம்பால்ஜி!

அருமையான கதை. அனுபவம் சிறிது கூடி இருந்தால் கதைக்கு சிகரம் வைத்தாற்போல் ஆகிவிடுகிறது.

இளவல், வார்த்தைக்கு வார்த்தை அலசியுள்ளார். அதுவே பிரமிக்கவைக்கிறது.
வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

இராசகுமாரன்
24-04-2003, 04:41 AM
ராம்பால்,
கவிதை கோட்டையை பிடித்தாகிவிட்டது என்று இப்போது கதை ராஜ்ஜியத்துக்கு படையெடுப்பா? தொடருங்கள்... செல்லுமிடமெல்லாம் வெற்றியை என்ன reservation செய்துவிட்டுச் செல்கிறீர்களா??பாராட்டுக்கள்,

anushajasmin
24-04-2003, 08:37 AM
அனுபவத்தை எல்லோரும் ரசிக்கும் சிறுகதை ஆக்குவது என்பது எல்லோராலும்
இயலாத காரியம்... அதை சாதித்த உங்களுக்கு எம் பாராட்டுகள்....

prabha_friend
24-04-2003, 11:38 AM
இப்போதைக்கு நேரம் இல்லை . Copyபண்ணிட்டு போய் offline centerல படிச்சிட்டு நாளை கருத்து தெரிவிக்கிறேன் .

rambal
26-04-2003, 03:41 PM
தலைவரே.. நீங்கள் சொல்வ்து போல் இல்லை. இது ஒரு முயற்சி..
எம்பரரும் எவ்வளவுதான் சுஜாதாவை கொடுப்பார்..
ஒரு மாறுதலுக்கு இருக்கட்டும் என்றுதான்.. அதுவும் தவிர இன்று நிறைய பேர் கவிதை எழுதுகிறார்கள். அந்தப் பகுதிக்கு ஒரு விடிவு.. (எத்தனை நாளைக்குத்தான் என் எழுத்தையே படித்துக் கொண்டிருப்பார்கள்)

மற்றபடி இந்தக் கதையை பாராட்டியமைக்கு நன்றி..
இந்தக் கதையை பாராட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.. இது மன்ரத்தின் முதல் கதை மட்டுமல்ல. என்னுடைய முதல் கதையும் இதுதான்..

மனிதன்
29-04-2003, 08:56 AM
முதல் கதையிலேயே முத்திரை பதித்து விட்டீர்கள் நண்பரே... இளசு அவர்கள் வரிக்கு வரி அலசி விமர்சித்த பின்னே.. மீண்டும் கதையைப் படிக்கையில் ராமின் கதையின் தரம் தெளிவாகத் தெரிகிறது...

kathukutti
30-04-2003, 03:24 PM
ராம்பால் அருமையான் சிறுகதை தந்துள்ளீர். விடலை வயதில் வரும் infactuation ரொம்ப நாள் மனதை நெருடுவது உண்மை.

Dinesh
30-05-2003, 08:32 AM
மழை பெய்தாலும் தெளிவான நீரோடையைபோன்ற கதையமைப்பு..
அனுஷா அவர்கள் கூறுவதைபோன்று அனுபவங்கள் அனைவருக்கும்
இருந்தாலும் அதை வெளிக்கொணரும் திறன் வேண்டுமே!
உங்களின் முதல் முத்தான சிறுகதைக்கு பாராட்டுக்கள் ராம்பால் அவர்களே!

தினேஷ்.

indian_usa
31-05-2003, 02:30 AM
இதை படித்ததும்...எதோ ஒன்றை இழந்தது போல் இருந்தது...மனம் பாராமகிவிட்டது...பழையா நாபகம்.

சகுனி
07-06-2003, 12:07 PM
மிக நேர்த்தியான கதை. மனதைச்சுடும் உண்மைச்சம்பவம். உருகவைக்கிறது உங்கள் படைப்பு. நன்றி.

இளசு
31-12-2003, 06:26 PM
பல "முதல்"கள் ராமின் கைவண்ணம்

புத்தாண்டு வாழ்த்துகள்.

rambal
11-01-2004, 03:24 PM
இளசு அண்ணாவிர்கு என் வந்தனங்கள்..
என்னுடைய முதல் கதையை நினைவில் வைத்து புத்தாண்டு அன்று
பாராட்டியமைக்கு நன்றிகள் பல..

சேரன்கயல்
12-01-2004, 07:36 AM
வாங்க ராம்...
நலம்தானே நீங்கள்...
பணிகள், படிப்பு எப்படியிருக்கிறது...
புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்...

samuthira
17-01-2004, 11:45 AM
ராம்பால் ,அருமையான கதை ,. வாழ்த்துக்கள்.

பதினேழுக்கு 26 ந் மீது வருவது தான் opposite sex attraction என்பது என் கருத்து..

ஆயினும் இது உங்கள் மனதில் என்றும் அழியாத கோலங்கள்....

rambal
13-04-2004, 04:53 PM
இது என்னுடைய முதல் கதை. சில உண்மைச் சம்பவங்களை உள்ளடக்கிய இந்தக் கதையை எந்த தருணத்தில் படித்தாலும் நெருஞ்சிமுள் நிரடிக் கொண்டுதான் இருக்கிறது..