PDA

View Full Version : பிரபஞ்சம் பற்றிய ஐந்தடுக்குக் கவிதை..



rambal
17-11-2005, 02:52 PM
பிரபஞ்சம் பற்றிய ஐந்தடுக்குக் கவிதை..

நீர்ப்பரப்பின் மேல் விழும்
மழைத்துளி ஏற்படுத்திய
வட்டங்களாய்
உணர்ந்திருக்கிறேன்
சமயங்களிலேனும்..

அணைக்காமல் எரிந்த
சிகரெட்டை வந்தணைக்கும்
மழைத்துளியின் பராபகாரியம்
செய்திருக்கிறேன்
எப்போதாவது..

சும்மாவேணும்
தன் இருப்பை நிலை நிறுத்த
திறந்த கதவை மூடுவதும்
திறப்பதுமாய் காற்றின் லீலை
நடத்திப்பார்த்திருக்கிறேன்
அவ்வப்பொழுது..

தீப்பொறியை தன்னுள்
பதுக்கி வைத்துக்கொண்டு
உரசும் பொழுது மட்டும்
வெளிப்படுத்தும் கல்லாய்
இருந்திருக்கிறேன்
சில வேளைகளில்..

மலை முகடுகள்
போர்த்தியிருக்கும்
பேரமைதியின் ஆழத்தில்
உறைந்திருக்கிறேன்
இப்போது..

இளசு
17-11-2005, 10:55 PM
பஞ்ச வடிவங்களில் சஞ்சாரிக்கும்
கவிமனதின் அனுபவங்களுக்கு
பஞ்சமில்லை..

ராமின் முத்திரை -- சட்டென அடையாளம் காட்டும் சொற்கட்டு.

ஐந்து நிலைகளிலும் மாறி மாறி உலவும் நிலையை
அழகாய்ச் சொன்ன கவிதை..

அனுபவித்து பலமுறை வாசித்தேன். பாராட்டுகள் ராம்..

பென்ஸ்
18-11-2005, 05:35 AM
ராம்...
அற்புதம்... பஞ்ச பூதங்களையும் வைத்து மனிதனின் உணர்வுகளை வரைந்திருப்பது அருமை...
நவரசத்தையும் என்னால் பஞ்ச பூதத்தில் புகுத்தி உங்கள் கவிதையை வாசிக்க முடிந்தது.....
அற்புதமான கவிதை...

அறிஞர்
19-11-2005, 12:41 PM
பஞ்சபூதங்களின் விளையாட்டு நம் வாழ்க்கையில்....

அழகான வரிகளில் தனித்தன்மையோடு கொடுத்த கவி அருமை

ப்ரியன்
26-11-2005, 05:18 AM
அருமை ராம்...நல்லதொரு கவிதை பாராட்டுக்கள்

RRaja
26-11-2005, 09:49 AM
வயிற்றுப்பசிக்கு உணவு
வயசுப்பசிக்கு அன்பு
அறிவுப்பசிக்கு இலக்கியம்
வாழ்க்கைப்பசிக்கு இலட்சியம்
பசியின்றித் தேடல் இல்லை
தேடலின்றித் தீர்வு இல்லை
தீரத்தீர பசிக்கும்
தீர்ந்துப் போனால் நீர்க்கும்.

அறிஞர்
28-11-2005, 11:30 AM
வயிற்றுப்பசிக்கு உணவு
வயசுப்பசிக்கு அன்பு
அறிவுப்பசிக்கு இலக்கியம்
வாழ்க்கைப்பசிக்கு இலட்சியம்
பசியின்றித் தேடல் இல்லை
தேடலின்றித் தீர்வு இல்லை
தீரத்தீர பசிக்கும்
தீர்ந்துப் போனால் நீர்க்கும்.
வாவ் அருமை ராஜா...
பசியில்லையேல்
தேடல் இல்லை
வாழ்வில் அர்த்தமில்லை...