PDA

View Full Version : நினைவலைகள் - குழந்தைகள் தினம்பரஞ்சோதி
14-11-2005, 12:02 PM
எனக்கு சின்ன வயதிலிருந்தே குழந்தைகள் என்றால் உயிர். சின்னக் குழந்தைகளோடு விளையாடுவது, பேசுவது, அவர்கள் செய்யும் குறும்புகளை ரசிப்பது எனக்கு மிக மிக பிடித்த விசயங்கள்.

எங்க தெருவில் இருக்கும் அனைத்து குழந்தைகளும் தினமும் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். இரவில் அவர்களுக்கு என் அம்மா கதை சொல்வதை வழக்கமாக வைத்திருந்தாங்க. எங்க உறவினரது குழந்தைகள் எங்க வீட்டிற்கு வந்தால் என்னை விட்டு போக மாட்டாங்க, அந்த அளவுக்கு குழந்தைகளோடு ஒன்றிப் போய் விடுவேன்.

பள்ளியில் 4வது படிக்கும் போது என் சித்தப்பாவின் மகள் மலர்விழி எனக்கு மிகவும் பிடிக்கும், பெரிய கண்கள் அவருக்கு, அவர் பேசும் அழகே தனி. தினமும் நான் அவரோடு போய் விளையாடுவேன், தெருவில் கொண்டு வந்து அனைத்தும் சுட்டிக் காட்டுவேன். பள்ளி விட்டு வரும் வழியிலேயே அவர் என்னைப் பார்த்து விளையாட அழைப்பார். என் வாழ்வில் முதன் முதலில் சிறு குழந்தைக்கு அடிமையானது என் தங்கை மலர்விழிக்கு தான்.

அதன் பின்னர் எங்க தூத்துக்குடியில் அருகில் இருக்கும் மாப்பிள்ளையூரணியில் எங்க மாமாவின் மகன் பழனி, ஆகா, என்ன அழகான குழந்தை தெரியுமா? அதுவும், என் மாமா, அத்தை திருமணம் ஆகி 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்த குழந்தை. பழனியை யாரும் தரையில் விட மாட்டார்கள், என் பெரியமாமா, சின்னமாமா ஆகியோரின் பிள்ளைகளுக்கு பழனி என்றால் உயிர், அவர்கள் எல்லோரும் 15, 20 வயதை தாண்டியவர்கள். வாரம் ஒரு முறையாவது புகைப்படம் எடுப்பார்கள், அப்படி 500க்கும் மேல் புகைப்படம் எடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நான் விடுமுறைக்கு சென்றால் பழனியுடன் தான் விளையாடுவேன். அவரது சின்ன வயது உருவம் இன்னமும் நினைவில் இருக்குது. இப்போ ஊருக்கு சென்ற போது அவர் கல்லூரியில் படிப்பதாக சொன்னார். சின்ன வயது சிரிப்பை நான் மீண்டும் பழனியிடம் கண்டேன். பெரிய மனிதனாக எனக்கு பஸ் டிக்கெட் எடுக்க போனதை நினைத்து சிரித்தேன், மகிழ்ந்தேன்.

அடுத்து என் மற்றோரு சித்தப்பாவின் மகள் திவ்யா, திவ்யா சின்ன வயதில் கொழு கொழு என்று குண்டாக இருப்பார், விரல் பட்டாலே சிவந்து அளவிற்கு அழகான குழந்தை, அவரை தூக்கி வைத்திருப்பது மிகவும் கடினம் என்பதால் அதிக நேரம் யாரும் அவரை தூக்கி வைத்திருக்க மாட்டாங்க. அதுவே எனக்கு நல்ல வாய்ப்பு, அடிக்கடி திவ்யாவை தூக்கிக் கொண்டு வெளியே வந்து விடுவேன், என்னைப் பார்த்தாலே அவருக்கு குஷியாகி விடும், அப்படியே தூக்கியவுடன் என்னைப் பார்த்து, வீட்டை விட்டு வெளியே கொண்டு போகச் சைகையால் காட்டுவார். நல்லா ஊர் சுத்திக் காட்டுவேன். ஆடு, மாடு, கோழி எல்லாம் காட்டினால் ரொம்பவும் மகிழ்வார். அவர் கொஞ்ச நாளில் குவைத் வந்து விட்டார்.

அடுத்தது என் அண்ணன் மகள் திவ்யா, இரண்டு திவ்யாவிற்கும் ஒரு மாத காலமே வித்தியாசம். நான் என் உயர்நிலை பள்ளிப் படிப்பு முடித்து, சென்னையில் அண்ணன் வீட்டில் தங்கியிருந்து கணினி பாடம் படித்தேன், அப்போ திவ்யாவிற்கு 2 வயது இருக்கும். இரண்டு திவ்யாவும் பார்க்க ஒரே மாதிரி அழகான பொம்மைகள் மாதிரி இருப்பாங்க. காலையில் திவ்யா எழுந்தது முதல் சாப்பிடுவது, தூங்குவது, விளையாடுவது, அழுவது, சிரிப்பது எல்லாமே என்னுடன் தான். நாங்க இருவரும் சண்டையும் போடுவோம். திவ்யாவுக்கு விளையாட, பேச, எல்லாமே நான் கற்றுக் கொடுத்தேன். பள்ளியில் படிக்கும் அவர் என்னமும் எனக்கு அவர் சின்னக்குழந்தைப் போல் தான் தெரிகிறார்.

அடுத்தது கீர்த்தனா, திவ்யாவின் தங்கை, அவர் பிறந்த சில மாதங்களில் குவைத் வந்து விட்டேன். கீர்த்தனா 3 மாதக்குழந்தையாக இருக்கும் போது மிகவும் அழகாக கெக் கெக் என்று சிரிப்பார். எனக்கு இன்னமும் அந்த சிரிப்பு நினைவில் இருக்குது. மனக்கஷ்டம் உண்டாகும் போது எல்லாம் கீர்த்தனாவின் சிரிப்பை மனதில் கொண்டு வந்து நிறுத்தி, என் மனநிலையை மாற்றிக் கொள்வேன்.

குவைத் வந்தப் பின்னர் தங்கை திவ்யா, தம்பி கௌதம், மற்றொரு சித்தப்பாவின் மகள் அகல்யா, சித்தப்பாவின் நண்பர்களின் குழந்தைகள் எல்லாம் சேர்ந்து ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். வாரந்தோறும் அவர்கள் வீட்டிற்கு நான் கண்டிப்பாக போக வேண்டும் என்று அன்புக்கட்டளை. நல்ல வெயில் காலத்தில் இரவில் கடற்கரைக்கு சென்று விளையாடுவோம், விடுமுறை நாட்களில் பூங்கா, மற்றும் பல இடங்களுக்கு சென்று விளையாடுவோம். அவர்கள் எங்கே சென்றாலும் முதலில் நான் வருவேனா என்பதை கேட்டு வைத்துக் கொள்வார்கள். அவர்களுக்காக என் கிரிக்கெட் போட்டிகளை விட்டுக் கொடுத்ததுண்டு.

சில ஆண்டுகளில் திவ்யா முதற்கொண்டு குழந்தைகள் பெரிய குழந்தைகளாக, கையில் வைத்து கொஞ்சும் அளவுக்கு சின்னஞ்சிறு குழந்தைகள் எனக்கு கிடைக்கவில்லை, அப்போ என் நண்பரின் குழந்தை ஜனனி குவைத் வந்தார். அப்புறம் தமிழ்மன்றத்தின் நண்பர்களின் குழந்தைகளை நான் கடிதங்களில், நான் சொல்லும் கதைகளில் கொஞ்சி மகிழ்ந்திருக்கிறேன். நிறைய நண்பர்கள் வீட்டில் கணினி பிரச்சனை, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பிரச்சனை என்றால் என்னிடம் ஆலோசனை கேட்பார்கள், வீட்டிற்கு வரச் சொல்லுவார்கள், அங்கே குழந்தைகள் இருந்தால் கண்டிப்பாக போவேன், இல்லை என்றால் நல்ல சாப்பாடு கிடைக்கும் என்றால் மட்டுமே போவேன்.

கடந்த சில ஆண்டுகளாக கைக்குழந்தையாக யாருமே கிடைக்காத காரணத்தால் திருமணமே வேண்டாம் என்றிருந்த நான், என் அம்மாவிடம் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தேன் ))).

திருமணம் ஆகி என் மனைவியிடம் என்ன வேண்டும் என்று கேட்டால், அவர் கேட்டது ஒன்றே ஒன்று தான். நமக்கு பெண் குழந்தை பிறந்தால் பெயர் சக்தி என்றே வைக்க வேண்டும். நான் உடனே சரி என்று சொல்லிவிட்டேன். எனக்கு கொஞ்சி விளையாட குழந்தை கிடைத்தால் போதும், பெயர் முக்கியமில்லை என்ற எண்ணம்.

திருமணம் ஆகி குவைத்திற்கு என் மனைவியை அழைத்து வந்த போது எங்க அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர் ராஜேஷ் அவர்களின் குழந்தை அரவிந்த் அறிமுகம் ஆனார். ஒரு நாள் என் மனைவி சொன்னார் முதல் தளத்தில் இரண்டு தமிழ் குடும்பங்கள் இருக்கின்றன, அவர்களை போய் சந்தித்தேன். ஒரு வீட்டில் மிக அழகான ஆண் குழந்தை இருக்கிறது, பெயர் அரவிந்த், 4 மாதக்குழந்தை, கண்கள் பெரிய கண்கள். குட்டி கிருஷ்ணன் மாதிரி இருக்கிறான் என்றார். நான் உடனே போய் அந்த குழந்தையை எப்படியாவது நம்ம வீட்டிற்கு கொண்டு வா, என்று அனுப்பி வைத்தேன். சிறிது நேரத்தில் என் மனைவி அரவிந்தோடு வந்தார். ஆகா என்ன அழகான குழந்தை, நிறைய முடிகள், குட்டி கிருஷ்ணன் மாதிரி ஒரு சடை, பெரிய கண்கள், காலில் கொலுசுகள், அழகான சிரிப்பு. நான் மயங்கியே போய் விட்டேன். நான் அரவிந்தை தூக்கி, முத்தமிட்டு மகிழ்ந்தேன். அன்று முதல் நான் அலுவலகம் போய் திரும்பியதும் அரவிந்த் எங்க வீட்டிற்கு வந்து விடுவார். அரவிந்திற்கு அழவே தெரியாது, எப்போவும் சிரிப்பு தான். கிள்ளி விட்டாலும் அழமாட்டார்.

கடந்த ஒரு ஆண்டாக எங்க வீட்டு பிள்ளையாக இருந்த அரவிந்த் தற்போது இந்தியாவில் இருக்கிறார். அவரது அப்பாவுக்கு ஓமனில் வேலை கிடைத்து மாற்றம் ஆகி போயிட்டார். ஆனாலும் அரவிந்த் இன்னமும் என் மனதில் அதே புன்னகையோடு இருக்கிறார்.

குவைத்தில் எனக்கு மேலும் குழந்தைகள் அறிமுகம் ஆனார்கள், என் நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மாதம் இருமுறை குழந்தைகளுக்கு கதைகள் சொல்வது, விளையாட்டு, நல்ல பழக்கவழக்கங்கள் சொல்லிக் கொடுப்பது என்று தீர்மானித்தோம், அதையும் செய்து வந்தோம்.

இப்போ கூட தெருவில், பிரயாணம், ஷாப்பிங்க் செண்டரில் என் முன்னால் இருக்கும் குழந்தைகளை வேடிக்கை விளையாட்டு காட்டி, என்னைப் பார்த்து சிரிக்க வைப்பேன். சில குழந்தைகள் அப்பா, அம்மா பேச்சை கேட்காமல் அடம்பிடித்தால் பெற்றோருக்கு தெரியாமல் பயமும் காட்டுவேன். அவர்கள் பயந்து போய் பெற்றோர் சொல்படி கேட்பார்கள்.

என் மனைவியிடம் எனக்கு பெண் குழந்தை தான் வேண்டும் என்றேன், அவருக்கும் பெண் குழந்தை தான் இஷ்டம், எங்க இருவரின் விருப்பம் போல் என் மகள் சக்தி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13ந்தேதி பிறந்தார்.

சக்தி என்று சொல்லும் போது மனதில் உற்சாகம் ஒட்டிக் கொள்ளும், தொடர்ந்து இரண்டு மூன்று முறை அழுத்தமாக சொல்லிப் பாருங்க, உங்களுக்குள் புத்துணர்ச்சி உண்டாகும். அது தான் இந்த பெயரில் இருக்கும் மகத்தான சக்தி.

ஆகா என் மகள் சக்தியைப் பற்றி சொல்ல ஒரு வலைத்தளம் போதாது, அத்தனை தகவல்கள் இருக்கின்றன.

ஏற்கனவே குழந்தைகளுக்காக சிறுவர் பூங்கா வலைப்பூ தொடங்கி, அதில் நிறைய கதைகள் சொல்லியிருக்கிறேன். சக்தி புராணம், இது என் மகள் சக்திக்காக தொடங்க இருக்கும் வலைப்பூ. என் மகள் பற்றிய அனைத்து தகவல்களையும் இங்கே சேமிக்க இருக்கிறேன். அவர் தமிழிலில் எழுத, படிக்க தொடங்கும் காலத்தில் அவரே தகவல்கள் கொடுப்பார்.

தற்போது குழந்தைகள் சந்தோஷ், ஸ்மையா, அருண் பாலாஜி, சக்தி ஆகியோர் எங்க வீட்டில் கொட்டம் அடிக்கிறார்கள். கிரிக்கெட் விளையாட செல்லுமிடத்தில் இலங்கை நண்பர்களின் குழந்தைகள் வருவார்கள், அவர்களுக்கென்று சாக்லெட் எடுத்து செல்வது வழக்கமாக வைத்திருக்கிறேன்.

நான் பொதுவாக புதிய நண்பர்கள் வீட்டிற்கு சென்றால் அவர்கள் குழந்தைகளை உடனே தூக்க மாட்டேன், ஏன் என்றால் அவர்கள் அழத் தொடங்கி விடுவார்கள், பின்னர் என்ன செய்தாலும் நம்மிடம் ஒட்ட மாட்டார்கள். குழந்தைகளை முதலில் கண்டுக்கொள்ளவே கூடாது. நாம் அமைதியாக இருக்க வேண்டும், அல்லது குழந்தைகளின் பெற்றோரிடம் சிரித்து பேச வேண்டும். அவ்வாறு செய்வதால் குழந்தைகளை கொஞ்சம் கவர முடியும், சிறிது நேரம் சென்றப்பின்னர் குழந்தைகளைப் பார்த்து சமிக்கை செய்து, சிரிப்புண்டாக்க வேண்டும், பின்னர் நம் கையில் இருக்கும் தொலைபேசி, பென் போன்றவற்றை அவர்களிடம் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் அவர்கள் நம்மை நெருங்கி வருவார்கள். இவ்வளவு செய்தும் வரவில்லை என்றால் இன்னமும் பொறுமை காக்க வேண்டும்.

அப்புறமாக கொடுத்து வாங்குவது போல் விளையாட வேண்டும், பின்னர் கழுத்து பக்கத்தில் கிச்சு முச்சு காட்ட வேண்டும், அதன் பின்னர் தான் கையில் தூக்க வேண்டும், தூக்கியது முத்தம் கொடுக்கக்கூடாது, மீசை உள்ளவர்கள், சிகரெடி பிடிப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தூக்கி விசிறி, போட்டோகள், அல்லது வேற பொருட்களை தொட அவர்களை தூக்கி காட்டவேண்டும். அல்லது வீட்டின் உள்ளேயே அங்கே இங்கே நடக்க வேண்டும், அப்போ தான் குழந்தைகள் நம்மை கட்டி பிடித்துக் கொள்வார்கள். அவ்வளவு தான், அதன் பின்னர் நீங்க குழந்தைகளை கீழே விட்டாலும் இறங்க அடம் பிடிப்பார்கள். வீட்டிற்கு கிளம்பினால் அழத் தொடங்குவார்கள். அதுவே நீங்க குழந்தையின் மனதை கொள்ளை அடித்ததற்கு அடையாளம்.

மேலும் குழந்தைகளோடு இருக்கும் போது குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்ப நாமும் நடக்க வேண்டும், தரையில் குழந்தைகள் உருண்டால், நாமும் உருள வேண்டும். ஓடி விளையாடினால், நாமும் ஓட வேண்டும்.

அடுத்த முறை நீங்களும் இதையே செய்து, குழந்தைகளின் மனதை கொள்ளை கொள்க.

அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.

கடைசி செய்தி: எங்க திருமண நாள், அது குழந்தைகள் தினமான இன்று தான். மேலும் எங்க திருமணம் நடந்த திருமண மண்டபத்தின் பெயர் சக்தி திருமண மஹால்.

pradeepkt
14-11-2005, 12:10 PM
ஆகா... அண்ணாத்தை கலக்கிட்டீங்க...
நானும் சின்ன வயதில் தாத்தா வீட்டில் குழந்தைகளுக்கு நடுவில் வளர்ந்தவன்... என் நினைவலைகளை உங்கள் அலைகள் கலக்கிவிட்டன.

முக்கியமான விஷயத்தைக் கடைசியாச் சொல்லீருக்கீங்களே.

நீங்களும் அண்ணியும் நீண்ட நெடுங்காலம் அனைத்து நலங்களும் வளங்களும் பெற்றுப் பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்... என் வாழ்த்துகளை மறக்காமல் அண்ணிக்கும் சொல்லுங்க. :) :) :)

gragavan
14-11-2005, 12:28 PM
வாழ்த்துகள் பரஞ்சோதி. நீயும் சகோதரியும் குழந்தைகளோடு அன்போடும் பண்போடும் செழிப்பாகவும் நிம்மதியாகவும் வாழ எல்லாம் வல்ல முருகப் பெருமானை வணங்குகிறேன். உங்களை வாழ்த்துகிறேன். நீடு வாழ்க.

பாரதி
15-11-2005, 01:03 AM
குழந்தைகளின் மனங்களைக் கவர்வது எப்படி? என்ற தலைப்பு வைத்திருக்கலாம் என்பது போல தோன்றுகிறது. வாடாத பூக்களான குழந்தைகள் குறித்து இவ்வளவு சிறப்பான பதிவு தந்தமைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் பரஞ்சோதி. குழந்தை மனம் கொண்டவருக்கு குழந்தைகள் தினத்தில்தான் திருமணம்!! எல்லாவளமும் பெற்று எந்நாளும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கள்.

அறிஞர்
15-11-2005, 05:11 AM
வாழ்த்துக்கள் பரம்ஸ்...

குழந்தைகளுடன் நாட்களை கழிப்பதில் உள்ள இன்பமே தனி....

இளசு
15-11-2005, 07:39 AM
என் அன்பு பரம்ஸ்..

உன்னிடம் என்னைக்கவர்ந்தவை பல.
அதில் முதன்மையானது இந்த குழந்தைகள் நேசம்.
இதில் எனக்கு அண்ணன் நீ...

குழந்தைகள் இலக்கியம் தமிழில் இன்னும் ஒரு பெரிய வளர்ச்சிக்குக் காத்திருக்கிறது - உன் பங்கு அதில் இருக்கும்.


குழந்தைகளைக் கவர்வதில் உன் அறிவுரை கைதேர்ந்த குழந்தைநல மருத்துவர் சொல்வதுபோல் இருக்கிறது.


நான் முதலில் என் விரலைக் குழந்தை பிடித்து விளையாடக் கொடுப்பேன்.


சக்திக்கு என் அன்பு. (அ.மை. தொகுப்பு பரிசாய் -பின்பு)

பரஞ்சோதி
16-11-2005, 04:34 AM
ஆகா... அண்ணாத்தை கலக்கிட்டீங்க...
நானும் சின்ன வயதில் தாத்தா வீட்டில் குழந்தைகளுக்கு நடுவில் வளர்ந்தவன்... என் நினைவலைகளை உங்கள் அலைகள் கலக்கிவிட்டன.

முக்கியமான விஷயத்தைக் கடைசியாச் சொல்லீருக்கீங்களே.

நீங்களும் அண்ணியும் நீண்ட நெடுங்காலம் அனைத்து நலங்களும் வளங்களும் பெற்றுப் பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்... என் வாழ்த்துகளை மறக்காமல் அண்ணிக்கும் சொல்லுங்க. :) :) :)


நன்றி தம்பி,

உங்க பதிவுகளில் இருந்து பார்த்தாலே நன்றாக புரியுமே, நீங்க குழந்தை உள்ளம் படைத்தவர், குழந்தைகளோடு ஒன்றி இருப்பவர்.

உங்க வாழ்த்திற்கு மிக்க நன்றி, அண்ணியிடம் சொல்லியாச்சு, அங்கே வந்தால் உங்களுக்கு சேமியா பாயாசம் கண்டிப்பாக உண்டு.

பரஞ்சோதி
16-11-2005, 04:36 AM
வாழ்த்துகள் பரஞ்சோதி. நீயும் சகோதரியும் குழந்தைகளோடு அன்போடும் பண்போடும் செழிப்பாகவும் நிம்மதியாகவும் வாழ எல்லாம் வல்ல முருகப் பெருமானை வணங்குகிறேன். உங்களை வாழ்த்துகிறேன். நீடு வாழ்க.

நன்றி அண்ணா.

பரஞ்சோதி
16-11-2005, 04:39 AM
குழந்தைகளின் மனங்களைக் கவர்வது எப்படி? என்ற தலைப்பு வைத்திருக்கலாம் என்பது போல தோன்றுகிறது. வாடாத பூக்களான குழந்தைகள் குறித்து இவ்வளவு சிறப்பான பதிவு தந்தமைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் பரஞ்சோதி. குழந்தை மனம் கொண்டவருக்கு குழந்தைகள் தினத்தில்தான் திருமணம்!! எல்லாவளமும் பெற்று எந்நாளும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கள்.

பாரதி அண்ணா, உங்க வாழ்த்து எங்களை மிக்க மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது.

திருமணம் குழந்தைகள் தினத்தில் என்பது எனகே தெரியாது, பெரியவங்களாக நல்ல நாள் பார்த்து முடிவு செய்தது, அப்புறம் தான் எனக்கு தெரியும், அதே மாதிரி என் மனைவியிடம் முதன் முதலில் பேசிய நாள் ஆசிரியர் தினம், ஆசிரியை அவருக்கு வாழ்த்து சொன்னது இன்னமும் நினைவில் இருக்குது.

பரஞ்சோதி
16-11-2005, 04:44 AM
வாழ்த்துக்கள் பரம்ஸ்...

குழந்தைகளுடன் நாட்களை கழிப்பதில் உள்ள இன்பமே தனி....

நன்றி அறிஞரே!

நம்ம மருமகன்கள் மெல்கியும், குட்டி இளவரசரும் எப்படி இருக்காங்க?

பரஞ்சோதி
16-11-2005, 04:55 AM
என் அன்பு பரம்ஸ்..

உன்னிடம் என்னைக்கவர்ந்தவை பல.
அதில் முதன்மையானது இந்த குழந்தைகள் நேசம்.
இதில் எனக்கு அண்ணன் நீ...

குழந்தைகள் இலக்கியம் தமிழில் இன்னும் ஒரு பெரிய வளர்ச்சிக்குக் காத்திருக்கிறது - உன் பங்கு அதில் இருக்கும்.


குழந்தைகளைக் கவர்வதில் உன் அறிவுரை கைதேர்ந்த குழந்தைநல மருத்துவர் சொல்வதுபோல் இருக்கிறது.


நான் முதலில் என் விரலைக் குழந்தை பிடித்து விளையாடக் கொடுப்பேன்.


சக்திக்கு என் அன்பு. (அ.மை. தொகுப்பு பரிசாய் -பின்பு)

அண்ணனுக்கு ஆயிரம் நன்றிகள்.

கண்டிப்பாக வாண்டுமாமா மாதிரி பரஞ்சோதி மாமா என்ற பெயரை குழந்தைகள் இலக்கியத்தில் சொல்ல வைக்க வேண்டும் என்பது என் ஆசை.

அதற்கான நண்பர்கள் வட்டம் பெரிதாக்கி வருகிறேன், உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து சிறுவர் இலக்கியங்களையும் தமிழிலில் மொழி பெயர்க்க வேண்டும், அதை சேமித்து, இலவசமாக இணையத்தில் வழியாக கொடுக்க வேண்டும். அதற்காக உங்க உதவியையும் நாடுவேன்.

குழந்தைகளிடம் விரல் கொடுப்பது, வெளியே போகும் போது நம் விரலை அவர்கள் கையில் கொடுத்து நம்மை அவர்கள் அழைத்துச் செல்வது போல் போவது தனிச்சுகம்.

சக்தியின் பரிசுக்காக காத்திருக்கிறோம்.

pradeepkt
16-11-2005, 05:00 AM
அது சரி அண்ணா,
இப்ப என்ன திடீருன்னு நீங்க பேரை மாத்தி இருக்கீங்க...
நான் நேத்துத் தனிமடல் அனுப்பினாப் போகவேயில்லை.
இனியனும் சுடர்னு புதுப்பேரு வச்சிருக்காரு!
இதெல்லாம் எங்ககிட்டச் சொல்றதில்லையா?

இளசு
16-11-2005, 06:58 AM
.

கண்டிப்பாக வாண்டுமாமா மாதிரி பரஞ்சோதி மாமா என்ற பெயரை குழந்தைகள் இலக்கியத்தில் சொல்ல வைக்க வேண்டும் என்பது என் ஆசை.

அதற்கான நண்பர்கள் வட்டம் பெரிதாக்கி வருகிறேன், உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து சிறுவர் இலக்கியங்களையும் தமிழிலில் மொழி பெயர்க்க வேண்டும், அதை சேமித்து, இலவசமாக இணையத்தில் வழியாக கொடுக்க வேண்டும். அதற்காக உங்க உதவியையும் நாடுவேன்.

..

இதுதான் கலாம் அவர்கள் காணச்சொன்ன வகைக் கனவு.
பலிக்கும். நிச்சயம் என்னால் ஆன உதவி இருக்கும்.
ஆசியும் வாழ்த்தும் பரம்ஸ்...
.
சக்தியின் பரிசுக்காக காத்திருக்கிறோம்.

கொடுக்க எனக்கல்லவா கொடுத்து வச்சிருக்கு!

kavitha
21-11-2005, 06:55 AM
கலக்கிட்டீங்க அண்ணா. தாமத பதிலுக்கு தயவுசெய்து மன்னியுங்கள்.

குழந்தைகளை நம் பக்கம் ஈர்ப்பது அத்தனை சுலபமான காரியம் அல்ல. அதேபோல் தான் அவர்கள் நம் வசம் வந்துவிட்டால் பிறகு பிரிவதும்.

குழந்தைகள் தினத்தில் உங்களது நினைவலைகளைப் பகிர்ந்துக்கொண்டதோடு டிப்ஸ் -ம் தந்திருக்கிறீர்கள். தொடர்ந்து சிறுவர்களுக்கான சேவை செய்ய வாழ்த்துகள். :)

poo
21-11-2005, 07:18 AM
குழந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம் பரம்ஸ் நினைவு தன்னாலே வந்துபோகிறது..

நேருமாமா - பரம்ஸ்மாமா..

சக்தி- பூவிதா சந்திப்பதெப்போது நண்பா?!!

இளசு
21-11-2005, 07:49 AM
கலக்கிட்டீங்க அண்ணா. தாமத பதிலுக்கு தயவுசெய்து மன்னியுங்கள்.

குழந்தைகளை நம் பக்கம் ஈர்ப்பது அத்தனை சுலபமான காரியம் அல்ல. அதேபோல் தான் அவர்கள் நம் வசம் வந்துவிட்டால் பிறகு பிரிவதும்.

குழந்தைகள் தினத்தில் உங்களது நினைவலைகளைப் பகிர்ந்துக்கொண்டதோடு டிப்ஸ் -ம் தந்திருக்கிறீர்கள். தொடர்ந்து சிறுவர்களுக்கான சேவை செய்ய வாழ்த்துகள். :)

அதானே.. பலநாள் பலபேர் தேடிட்டிருந்தோம் கவீ..

இன்றாவது வந்து ஆஜர் சொன்னதில் மகிழ்ழ்ழ்ழ்ழ்ச்சியோ மகிழ்ச்சி!

பரஞ்சோதி
21-11-2005, 07:22 PM
கலக்கிட்டீங்க அண்ணா. தாமத பதிலுக்கு தயவுசெய்து மன்னியுங்கள்.

குழந்தைகளை நம் பக்கம் ஈர்ப்பது அத்தனை சுலபமான காரியம் அல்ல. அதேபோல் தான் அவர்கள் நம் வசம் வந்துவிட்டால் பிறகு பிரிவதும்.

குழந்தைகள் தினத்தில் உங்களது நினைவலைகளைப் பகிர்ந்துக்கொண்டதோடு டிப்ஸ் -ம் தந்திருக்கிறீர்கள். தொடர்ந்து சிறுவர்களுக்கான சேவை செய்ய வாழ்த்துகள். :)

வாங்க வாங்க சகோதரி.

சக்தி அடிக்கடி கவிதா(தை) அத்தா(தை) என்று கேட்கிறார்.

பரஞ்சோதி
21-11-2005, 07:28 PM
குழந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம் பரம்ஸ் நினைவு தன்னாலே வந்துபோகிறது..

நேருமாமா - பரம்ஸ்மாமா..

சக்தி- பூவிதா சந்திப்பதெப்போது நண்பா?!!

நன்றி பூ. பூக்கள் நலம் தானே.

பூக்களின் மணத்தை உணர சக்தி ஆகஸ்ட், செப்டம்பரில் வருவார்.

kay
21-11-2005, 07:43 PM
ரோஜாவின் ராஜா நேருஜி, குழந்தை இலக்கியக் கவிஞர் அழ. வள்ளியப்பா, கதை எழுத்தாளர் வாண்டுமாமா, நம் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குழந்தைகளை ஓயாது கனவு காணத் தூண்டுபவர் ஆகிய அனைவரையும் நன்றியுடன் நினைப்போம்!:) :) :)

ஓவியன்
14-11-2007, 08:04 AM
தன்னைக் கவர்ந்த குழந்தைகளைப் பற்றி என்னே ஒரு அழகான பார்வை...

பரம்ஸ் அண்ணா என்றாலே குழந்தைகள் தான் ஞாபகத்துக்கு வருவார்கள், இன்று மலர் குழந்தைகள் தின வாழ்த்து திரி தொடங்கியதும் என் கண் முன்னே வந்து நின்றவர் "பரம்ஸ் அண்ணா" உடனே இந்த திரி கண்ணில் அகப்பட்டது..!! :)

பரம்ஸ் அண்ணா மீண்டும் உங்களுடன் ஒரு குழந்தையாகி அளவளாவ ஆசை மீள வருவீர்களா...??

மலர்
14-11-2007, 08:56 AM
இன்று காலையில் குழந்தைகள் தினத்திற்காக கூகுளில் தேடியபோது பரம்ஸ் அண்ணாவின் வலைபூவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது..... அதை படிக்கும் போதே நினைத்தேன்... நம் மன்ற உறவின் வலைபூ என்று....
அதற்குள் அருமையான குழந்தைகள் தினம் நினைவலைகளை ஓவியன் அண்ணா மீள எடுத்து கொடுத்துள்ளார்.....

நன்றி ஓவியன் அண்ணா....

உண்மையில் குழந்தைகளோடு இருக்கும் போது நாமும் குழந்தையாகியே போவோம்...
அவர்கள் மழலைபேச்சை கேட்கும் போது எல்லா கவலையும் பறந்தே போகும்...

மதி
14-11-2007, 09:15 AM
மன்றத்தில் குழந்தைகள் என்றாலே...பரம்ஸ் அண்ணாவும் அவரின் கதைகளுமே.. இன்று தான் இதனை பார்க்க நேரிட்டது.. அண்ணா அவரின் அனுபவங்களை அழகாக விவரித்துள்ளார்...

இந்த நன்னாளில் இத்திரியை மேலெழுப்பிய ஓவியனுக்கு நன்றி

lolluvathiyar
14-11-2007, 11:20 AM
அருமையான அனுபவம், அதுவும் 2 ஆண்டுகளுக்கு முன் பதித்தது. பரம்ஸ் க்கு திருமன நாள் வாழ்த்துகள். எனக்கு குழந்தைகளை மிகவும் பிடிக்கும். (யாருக்குதான் பிடிக்காது).
சில குழந்தைகளை கையில் வைத்திருக்கவே முடியாது. துள்ளி கொண்டே இருக்கும்.