PDA

View Full Version : அறுவடை



பாரதி
12-11-2005, 05:23 PM
தேதியில்லாக்குறிப்புகள்


அறுவடை

எங்க ஊர்ல எப்படின்னா, மேக்குலயும் வடக்கயும் தோட்ட வெவசாயம். அந்தப்பக்கமா வடக்காறு ஓடுறதால,கெணத்துல தண்ணி வத்தாம இருக்கும். ஊருக்கு கெழக்க *முத்தேம்பட்டியிலிருந்து, வடக்காறும், முல்லயாறும் சேருற எடம் வரைக்கும் ஆத்துப்பாசனந்தான். ஆத்துல குறுக்கா அணை கட்டி, தண்ணிய வாய்க்கால்ல திருப்பி பாசனத்துக்கு வசதியா செஞ்சு வச்சிருப்பாங்க. சுருக்கமா சொன்னா, வாய்க்காலும் முல்லயாறும் வயலுகளுக்கு ரெண்டு பக்கமும் இருக்கும். நெல்லு நட்டு இருக்குறப்ப, எங்கனப் பாத்தாலும் கண்ணுல ஒத்திக்கிற மாதிரி பச்சப்பசேல்னு கண்ணுல ஒத்திக்கிற மாதிரி இருக்கும்.

நான் சின்னப்பையனா இருக்குறப்ப எல்லாம், சுருளியருவித்தண்ணியும், பெரியாரு டேமுல இருந்தும் வர்ற தண்ணியும் சேந்து வர்றதால, வருசத்துல முந்நூத்து அறுவத்தஞ்சு நாளும் ஆத்துல தண்ணி ஓடிகிட்டுத்தான் இருக்கும். வருசம் பூராவும் வெவசாயம் நடக்குறதுக்கு ஏதுவா தண்ணிப்பஞ்சமேயில்லாத நெல்லும், கரும்பும் பொன்னா வெளயிற பூமியில்ல அது!

எங்களுக்கு சொந்தமா வயலு கெடயாது. அப்பா அப்பப்ப வயல 'ஒத்தி'க்கு எடுத்து வெவசாயம் பண்ணுவாரு. 'ஒத்தி'ன்னா வயலு சொந்தக்காரங்களுக்கு ஏதாச்சும் பணமுடைன்னா தேவையான பணத்த வாங்கிகிட்டு, வயல வெவசாயத்துக்கு கொடுத்துருவாங்க. பணத்த திருப்பிக் கொடுத்துட்டு வயல திருப்பி எடுத்துக்குவாங்க.
வயலுப்பக்கம் எல்லாம் களிமண்ணுதான். வரப்புக மாத்திரம் கொஞ்சம் கெட்டியா, புல்லு பதிச்ச ஒத்தயடிப்பாத மாதிரி இருக்கும். அதத் தவிர எங்கன கால வச்சாலும் 'சதக்கு' 'புதக்கு'ன்னு காலடி, அரயடிக்கு காலு பொதயும்.

வரப்போரத்துல, படர்தாமர, தொட்டாச்சிணுங்கி செடிக, வெட்டிவேரு, *சேம்ப எல, கோரப்புல்லு எல்லாம் வளந்திருக்கும். இன்னும் பேரு தெரியாத ஒரு புல்லு மாதிரி வலந்திருக்கும். அதப்புடுங்கி அந்த வேர மோந்து பாத்தா கோபால் பல்பொடி வாசம் அப்படியே அடிக்கும். வரப்பு அகலமா இருக்குற எடத்துல தென்ன மரங்க ஒண்ணு ரெண்டு வளந்திருக்கும்.

வயலுக்கு பாயுற தண்ணியில தவள, தண்ணிப்பாம்பு, குட்டி மீனுங்க, கறுப்பும் வெளுப்புமா நண்டுக எல்லாமிருக்கும்.

அப்படி அப்பா 'ஒத்தி'க்கு வயலெடுத்துப் பாக்குறப்ப வீட்ட விட்டு வெள்ளனவே கெளம்பிருவாரு. வர்றப்ப வாய்க்கால்ல குளிச்சிட்டு, துண்டப் போட்டு எங்களுக்காக கெளுத்தி மீனுங்க பிடிச்சிட்டு வருவாரு. எங்களுன்னா சாப்புடுறதுக்கு இல்ல. வீட்டுல இருக்குற கல்லுத்தொட்டியில தண்ணிய நெரப்பி அதுல மீன வளக்குறதுக்கு. அவரு மீன பிடிச்சு, கோரப்புல்லால அதோட செதில்ல கோத்து எடுத்துட்டு வருவாரு. பாக்குறப்ப கோரப்புல்லுல மீனுக வெளஞ்ச மாதிரி இருக்கும்! அப்படிக்கொண்டு வர்ற மீனுங்கள ஆச ஆசயா தண்ணித் தொட்டியில விட்டு சோத்துப் பருக்க எல்லாம் போடுவோம். ஆனா என்ன காரணமோ தெரியல, அப்படி விடுற மீனுங்க எதுவும் அடுத்த நாளு உசுரோட இருந்ததேயில்ல.

வயலுக்கு போயிட்டு வர்றப்ப வீட்டுல இருக்குற பசுமாடுகளுக்கு புல்லும் அறுத்துட்டு வருவாரு. எல்லாம் வரப்புல வெளயற புல்லுதான்.
நெல்லு அறுவடைக்குப்பின்னாடி அடுத்த 'நடவு'க்கு எடயில, உரத்துக்குன்னு அகத்திக்கீரையோ இல்லாட்டி வேற ஒரு செடி - எனக்குப்பேரு தெரியல - நடுவாங்க. ரெண்டுமே எப்படின்னா , சும்மா சடசடன்னு தன்னப்போல ஆளுசரத்துக்கு வளந்திரும். நடவு சமயத்துக்கு முன்னாடி டிராக்டர வச்சு, எல்லாச்செடிகளையும் வயல்ல நல்லாப் புதஞ்சு போயி உரமா மாறுற மாதிரி செஞ்சுருவாங்க. அங்கங்க தலய காட்டுற செடிகள எல்லாம் கால்ல மிதிச்சி களிமண்ல அமுக்கிருவாங்க.

இங்ஙன எல்லாம் எப்படின்னா ஒரே மாதிரி வெள்ளாமதான். இன்ன மாதிரி நெல்லு போடுவோம் - இல்லாட்டி கரும்பு போடுவோம்னு முடிவு பண்ணி ஒரே மாதிரி வெவசாயம் பண்ணுவாங்க. யாராச்சும் எப்பவாச்சும் மாத்தி வெள்ளாம செய்யுறதும் உண்டுதான். ஒரே மாதிரி செஞ்சா பூச்சி,பொட்டுனால வர்ற சேதம் கொறச்சலாம். வந்தாலும் போனாலும் ஊருக்கு வந்தது நமக்கும் ஆச்சுன்னு மனச தேத்திக்க வசதியாக இருக்குமோ என்னவோ..?

பொதுவா சம்சாரிங்க வீட்டுல எல்லாம், *வெத நெல்ல கருதறுக்குறதல இருந்தே எடுத்து வச்சுகிட்டு வருவாங்க. காலப்போக்குல கடைல வெத நெல்ல வாங்கி வெவசாயம் பண்றது மாதிரி ஆகிப்போச்சு.
நெல்லு நடவுக்கு மொதல்ல *நாத்தங்கால சரியா ஏற்பாடு பண்ணனும். வயல்ல ஒரு எடத்த மாத்திரம் தண்ணி விட்டு பதப்படுத்தி, நல்லா 'பரம்பு' அடிப்பாங்க. பரம்பு அடிக்கிறதுன்னா - சுமாரா பத்து, பன்னெண்டு அடி நீளம் இருக்குற வைரம் பாஞ்ச மரத்த, "ட" மாதிரி செஞ்சு நடுவுல இரும்பு வளையம் எல்லாம் அடிச்சிருப்பாங்க. காளமாட்ட பூட்டி, நடுப் பரம்பு மேலே ஆளு நின்னுகிட்டு நாத்தாங்கால எல்லாம் சுத்தி வர்றப்ப வயலு ஒரே மட்டமா ஆகிரும்.

வயலுக்கு தண்ணி பாச்ச, காவல் காக்க இருக்குறவங்கள நீராணிக்கம்னு அப்பா சொல்லுவாரு. அக்கம்பக்கம் இருக்குற வயல எல்லாம் ஒருத்தரே பாத்துக்குவாரு. எங்க வயலுக்கு அப்படி இருந்தவரு பேரு 'மண்டவாடன்".

அப்படி ஒரு தடவ 'ஒத்தி'க்கு வயலு வெள்ளாம செய்றப்ப - ஒரு நாளு கெழம பாத்து, குடும்பத்தோட சாணி, சந்தனம், மஞ்சத்தூளு, சப்பட்டையா கருங்கல்லுக, குங்குமம், எலுமிச்சம்பழம், வாழப்பழம், தேங்கா, ஊதுவத்தி, சூடம், *மரக்காலு, வெத நெல்லு எல்லாம் எடுத்துகிட்டு வயலுக்குப் போனோம். கூட காவக்காரரும் வந்தாரு.

கருங்கல்ல எல்லாம் நல்லா கழுவி, சந்தனம் பூசி அலங்காரம் பண்ணாங்க. அப்புறம் சாணிய கோபுரம் மாதிரி செஞ்சு புள்ளையார் புடிச்சாங்க. தேங்கா ஒடச்சு சாமி கும்பிட்டு, வயலோட நாலு மூலைலயும் எலுமிச்சம்பழத்த வெட்டிப்போட்டாங்க. அப்புறம் அப்பா மரக்கால்ல வெத நெல்ல போட்டு கைய வீசி நாத்தங்கால்ல எறிஞ்சார். அதுக்கப்புறமா நாத்தங்கால்ல எறங்குன காவக்காரரு லாவகமா எடது கக்கத்துல மரக்கால வச்சுகிட்டு, வலது கை முழுக்க வெத நெல்ல அள்ளி, தனக்கு எடப்பக்கமும் வலப்பக்கமும் சரியா வர்ற மாதிரி விசிறி தெளிக்கிறது பாக்குறதுக்கு ரொம்ப நல்லா இருக்கும். நடையும், கைவீச்சும் தப்பாம இருக்கும்.

சொன்ன மாதிரி ஒரே அளவுல நெல்லு எல்லாம் நாத்தங்கால்ல வெளஞ்சு நிக்கிற அழகே தனி. நடவுக்கும் கருதறுப்புக்கும் வழக்கமா காக்கிவாடம்பட்டியில இருந்து கங்காணிக ஆம்பளகளயும் பொம்பளகளயும் கூப்பிட்டு வந்திருவாங்க. எசப்பாட்டோட வேல நடக்குற வேகத்த பாத்தா நாமல்லாம் அசந்துருவோம். சின்ன வெவசாயிக எல்லாம் முடிஞ்ச வரைக்கும் சொந்த ஆளுங்கள வச்சே நடவு, அறுவட எல்லாம் பண்ணிக்குவாங்க.

வழக்கம் போல களயெடுக்குறது, பூச்சி மருத்தடிக்கிறது, ஒரம் போடுறது எல்லாம் காலாகாலத்துல நடக்கும். கருதறுக்குற நேரம்னா ஊர்ல எல்லார் மூஞ்சியிலேயும் களைக்கு கொறவிருக்காது.

நெல்லுக்கருத அறுத்து, நெல்லுக்கட்டா கட்டி, வரப்பு வழியா வந்து, வாய்க்கால தாண்டி இருக்குற களத்துமேடுக்கு கொண்டு வந்து சேக்குறது பெரும்பாடுதான். ஒருதடவ சின்ன வயல ஒத்திக்கு எடுத்து செய்யுறப்ப, வயல்ல இருந்து களத்துமேட்டுக்கு நெல்லுக்கட்ட தூக்கிட்டு வந்தேன். எவ்வளவு தூரம்னு நெனக்கிறீங்க? கிட்டத்தட்ட ரெண்டு கிலோமீட்டர் இருக்கும் - ஒரு தடவ கொண்டு வந்து சேக்குறதுக்குள்ளேயே தல கழுத்துக்குள்ள பொதஞ்சுகிட்ட மாதிரி ஆகிப்போச்சு. வரப்புல வழுக்கி விழாம நடந்து வர்றதே ஒரு பெரிய விசயம்.

ம்ம்... அறுவடைக்காலத்துல பாத்தா வயல்ல எல்லாம் ஒரே கூட்டமாத்தான் இருக்கும். எலிபிடிக்க வர்றவங்க, அந்த எலிக தங்கி இருந்த வலயில இருக்குற நெல்ல எடுக்குறவங்க, நண்டு பிடிக்கிறவங்க, பாதையில விழுற *கருத எல்லாம் பொருக்குறவங்க, வேல பாக்குறவங்க, வேடிக்க பாக்குறவங்கன்னு சும்மா ஜேஜேன்னு இருக்கும்.

பள்ளிக்கூடத்துக்கு கெழக்க இருந்த வயல்ல வெள்ளாம செஞ்சப்ப, அறுத்த கருத எல்லாம் களத்துமேட்டுக்கு கொண்டு வந்து சேத்தாங்க. பெரிய சைசு கல்லுல *வாகா போட்டு கையில *வக்கல்ல செஞ்ச *உரிய வச்சுகிட்டு, நெல்லத் தட்டுனாங்க. ஆளுங்க நெல்லுக்கட்ட பிரிச்சு லாவகமா அடிக்கிறவங்க கையில போட, அத வாகா ரெண்டு தட்டு தட்டி பின்னாடி சுழட்டி எறியிறத பாக்கணுமே.. அட.. அட... அப்படி சேருற வக்கல ஒருத்தரு சமமா பரவுற மாதிரி கையில வச்சிருக்குற கம்பால - *கவக்கோல் - தள்ளி விட்டுகிட்டே இருந்தாரு.

அடிச்ச நெல்ல எல்லாம் 'அம்பாரம்' போல செஞ்சு, ஒரு ஓட்ட மண்ணுப் பானையில சாணித்தண்ணி கரச்சு, அம்பாரத்துல வட்ட வட்டமா போட்டாங்க. ஏதாச்சும் களவு போனா கண்டுபிடிக்கிறதுக்காம்! அதாவது அப்படி வட்டம் போட்ட அம்பாரத்துல எங்காச்சும் நெல்ல கொஞ்சம் எடுத்தாலும் போதும், நெல்லு சரியிறதுல வட்டம் கலஞ்சிரும்ல - அதுக்குத்தான்.

அன்னைக்கு ராத்திரி முழுக்க அரிக்கேன் லைட்ட எரிய வச்சுகிட்டு ஆளு மாத்தி ஆளு காவல் இருந்தோம். அன்னைக்கி பாத்து மழ வேற வர்ற மாதிரியிருந்ததால பாலிதீன் பையால செஞ்ச தார்ப்பாய வச்சு அம்பாரத்த எல்லாம் மூடிட்டு, ஒரு சின்ன கூடாரம் மாதிரி தார்ப்பாய போட்டுகிட்டு, கொட்டுற மழைல காவலுக்கு இருந்தோம்.

அடுத்த நாளு வைக்கப்போருல இருக்குறத எல்லாம் வட்டமா விசிறிப்போட்டு, மாட்டக்கட்டி "போர'டிச்சாங்க. மாடுகளுக்கு எல்லாம் வாய்க்கூண்டு - கருத சாப்ட்றக்கூடாதுல்ல - போட்ருந்தாங்க.

இப்படி எல்லா வேலயும் முடிச்சி, நெல்லும் வக்கலும் தனித்தனியா ஆச்சு. கருதறுக்க வந்தவங்க, கங்காணிக, நீராணிக்கம் இப்படி எல்லாருக்கும் கூலியா நெல்லு கொடுக்குறதுதான் வழக்கம். அம்பாரத்துல இருந்து மரக்கால வச்சுகிட்டு ஆம்புளகளா இவ்வளவு, பொம்பளகளா இவ்வளவுன்னு கங்காணி மளமளன்னு அளந்து கொடுத்தாரு. அவரு கூலியயும் எடுத்துகிட்டாரு. நீராணிக்கத்துக்கும், களத்துமேட்டுல கூடமாட ஒத்தாச செஞ்சவங்களுக்கும் கூலி கொடுத்தாச்சு. எல்லாரோட சந்தோசத்தையும் அவங்க மூஞ்சியில பாக்க முடியுது.

வக்கலு மாடுகளுக்கு தீவனத்துக்கு ஆகும்கிறதால அத விக்கல. மீதி இருக்குற நெல்ல வீட்டுல கொண்டு வந்து சேக்குறதுக்கு நாங்க கொஞ்சம் கூட கஷ்டமே படல. மூணு மாசமா - வெத நெல்லு வாங்கி, பரம்படிச்சு, நாத்து நட்டு, கள பறிச்சு, மருந்தடிச்சு, உரம் போட்டு, காவல்காத்து - *கடசீல வீட்டுக்கு வந்து சேந்த நெல்லு எவ்வளவு தெரியுமா..? அர மூடை!

* முத்தேம்பட்டி - முத்துத்தேவன்பட்டி.
* சேம்ப எல - சேம்பல் இலை, தண்ணீர் ஒட்டாத பெரிய இலைகள்
* நாத்தங்கால் - நாற்றங்கால்
* வெத - விதை
* மரக்காலு - மரக்கால் - இரும்புத்தகடால் செய்யப்பட்ட பெரிய அளவுப்பாத்திரம்.
* கருத - கதிர் - நெற்கதிர்
* உரி - பச்சை வைக்கோலால் பின்னப்பட்டு, இரண்டு பக்கங்களிலும் வளையங்களைக் கொண்ட, நெற்கதிரை கல்லில் அடிப்பதற்காக செய்யப்பட்ட உரி.
* வாகா - வகையாக
* கவக்கோல் - கவைக்கோல் - சிலம்பு போன்று, நுனியில் கூராகவும், வளைந்தும் இருக்கக்கூடிய இரும்புத்துண்டுகளை பொருத்திய கருவி.
* வக்கல் - வைக்கோல்
* கடசீல -கடைசியில்

பரஞ்சோதி
13-11-2005, 03:40 AM
அண்ணா, சேமித்து வைத்துக் கொண்டேன், படித்து விட்டு கருத்து கூறுகிறேன்.

வட்டார வழக்கும் மொழியில் கலக்கியிருக்கீங்க என்று நினைக்கிறேன்.

இளசு
13-11-2005, 10:46 PM
பாரதி,

இப்பதிவை இரண்டு வகையில் பார்க்(ராட்டு)கிறேன்.


சொன்ன விதம் -
அழகு, அருமை, நேர்மை.
பேன் பார்ப்பது, உடல்வலிக்கு உடம்பு பிடித்துவிடுவது எனக் கருவாச்சிக் காவியத்தில் வாழ்வியல் நுண்ணியப் பதிவுகள் ஏராளம்.

கேட்டது, படித்தது இவற்றை எழுதுவது ஒரு கலை.
ஆர்தர் ஹெய்லி என்னும் நாவலாசிரியர் தம் படைப்பாற்றலையும் , சம்பந்தப்பட்ட துறை வல்லுநரின் அறிவாற்றலையும் இணைத்து படைத்த நூல்கள்
அவ்வகை - ஹோட்டல், ஏர்போர்ட் இப்படி.

ஆனால் படைப்பாளி தான் அனுபவித்ததை நேர்த்தியாய் சொல்லும்போது
அது தனி சுவை..சுகம். இப்படைப்பு அவ்வகை.

நம் உறவுகள், முன்னோர்கள் இவற்றை வாழ்ந்தவர்கள். ஆனால் கணினி வரை வந்து எழுத இயலாதவர்கள்.

நம் நண்பர்கள் சிலர் கணினியோடு வாழ்பவர்கள். ஆனால் இவ்வகை அனுபவம் இல்லாதவர்கள்.

உன்னைப்போல் சிலர் இவ்விரு நிலைகளிலும் அங்கே ஒரு கால் , இங்கே ஒரு கால் எனப் பயணிக்கச்சொல்லி வாழ்வு வரம் அளித்திருக்கிறது.

அந்த வரம் வழங்கிய இப்பதிவுகளைப்பெற மன்றம் தவம் செய்திருக்கிறது.

ஒரு வகையில் சொல்லவந்தால் -

நீ மழலையாய்ப் பதித்த காலத்திலிருந்து படித்து வந்தவன் என்ற வகையில் சொன்னால்..

உன் எழுத்து பருவம் அடைந்துவிட்டது.

பூரிக்கிறேன் பாரதி.

(உன் எழுதுக்களின் களம் நிச்சயம் இன்னும் விரியும்.
அப்படி ஒரு வீரியம் வந்துவிட்டது.
.)


வளர்க உன் எழுத்துப்பணி..


சொன்ன கருத்துகள் பற்றி என் விமர்சனம் -- பிறகு!

gragavan
14-11-2005, 05:42 AM
நம்ம மன்றத்தில் கி.ரா பாரதியண்ணா என்றால் மிகையாகாது. ஒரு பட்டிக்காட்டை அப்படியே தூக்கிக் கொண்டு வந்து மன்றத்தில் காட்டியிருக்கிறார். இதெல்லாம் எழுத்து வன்மைதானே. இயல்பாய் எழுதுவதே கடினம். அதிலும் வட்டார வழக்கு. பிரமாதம்.

பாரதி
15-11-2005, 12:24 AM
நன்றி பரஞ்சோதி.

அண்ணா... வழமை போல உங்கள் பதிவு. கிட்டத்தட 25 வருடங்களுக்கு முந்தைய நிகழ்வுகள் - எல்லாம் எப்பொழுதோ வந்த கனவுகள் போல தோன்றுகின்றன. வழக்கத்தில் இல்லாமல் போனதாலோ என்னவோ பல தாவரங்கள், கருவிகள் ஏன் மனிதர்களின் பெயர் கூட நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது. இயன்ற வரை நினைவு கூற விரும்பியதால் வந்த பதிவுகள்தான் இவை. மிக்க நன்றி அண்ணா.

மிக்க நன்றி இராகவன். கி.ரா - ஒப்பீடு சரியில்லை. அவரது மலை போன்ற எழுத்துக்களை அண்ணாந்து பார்க்கும் மிகச்சிறிய மண் துகள்தான் நான்.

gragavan
15-11-2005, 05:02 AM
மிக்க நன்றி இராகவன். கி.ரா - ஒப்பீடு சரியில்லை. அவரது மலை போன்ற எழுத்துக்களை அண்ணாந்து பார்க்கும் மிகச்சிறிய மண் துகள்தான் நான்.தவறு இல்லை அண்ணா. கூடி நிற்கும் மண்துகள்களுக்குத்தான் மலை என்று பெயர். கூடி நிற்கும் நீர்துளிகளுக்குத்தான் கடல் என்று பெயர். நீங்கள் அந்த பாட்டையில் நடக்கின்றீர்கள். அதே மிடுக்குடன். ஆகையால் அப்படிச் சொல்வதில் தவறில்லை. கி.ராவிற்குப் பிறகு அதை முயல யாருக்கும் துணிவில்லை. ஆனால் அந்தத் துணிவும் திண்மையும் உங்களிடம் இருக்கிறதே. ஆகையால் இன்னும் மெருகேற மெருகேற நீங்களும் சிறப்பீர்கள்.

இளசு
15-11-2005, 06:44 AM
பாரதியின் இப்படைப்புக்கு - என் அர்ப்பணம்..

முன்பு படித்த ஒரு கவிதை.

(இதே சாயலில் வைரமுத்து கவிதையும் படித்ததாய் நினைவு)..



__________________________________________________

பயிரும் செலவும்

கவிஞர் - கணபதி பிரபாகரன்

பச்சை மரங்களின் முகத்தில்
செந்துகள் தூவி
அழகு பார்த்து ஓய்ந்தது
மேலைக்காற்று.

தென்மேற்கு பருவக்காற்றுத்தேரில்
யவ்வன பொக்கிஷங்களை சுமந்து வரும்
மஞ்சுப்பொதிகள் மலையாள நாட்டை
மூழ்கடித்து இங்கே
தாவணிச் சிதறல்களை சாரலாக்கும்.

குடகில் குடம் சுமக்க
சோழமண்ணில் சோறூறும்.

என்றைக்கு நிறையும் மேட்டூர்
மதகுப்பலைகைகள் என்றைக்கு
மனதுவைக்கும்
ஏக்க மனதுடன் ஏடுபுரட்டும்
இந்த மண் - நல்லேரு பூட்ட.

பிரசவ வைராக்யந்தான்
இந்த வருடமாவது
விதை நெல்லை விற்கக்கூடாது
நினைவு தெரிந்த நாளாய்
இந்த வைராக்யந்தான்.

பரம்படித்து பக்குவம் செய்து
விதைத்த நெல்லில்
ஆறுக்கு மூன்று பழுதில்லை.
சேறுக்கு மருந்திட்டு கழனிச்
செப்பனிடக் கூலி வேண்டும்.

கூட்டுறவில் களைகள் மண்டி
கூளமாய்க் கிடக்கிறது.
மனிதரைத் தவிர
மற்றதெல்லாம் அடகுக் கடையில்.

தண்ணீர் வந்து தளதளப்பாய்
இருக்கையிலே
புகையான் அடிச்சு பூவெல்லாம்'
கருகல் வாசனை.

மிச்சத்தில் கதிரு வந்து
தொண்டையில் நிற்கையில்
முறை போட்டான் கால்வாயில்.

கடைவாயில் பீடி ஒதுக்கி
அண்ணாந்து அண்ணாந்து பார்க்க
நாய் நக்கின பாத்திரமாய்
பளபளப்பாய் வானம்.

நண்டு நடந்து நாற்புள்ளி
கோலம் போட - பாளமாய்
விண்டு கிடந்தது நிலம்
காய்ச்சலில் கதிரும் முற்றிற்று.

வானம் வெளுத்திருக்க உடன்கூலி
தான்கொடுத்து அறுத்துப்போட்டு
களத்து மேடு சீர்செய்து
கதிரடிக்கப் போகையிலே

சம்பள நாளில் வந்து நிற்கும்
கந்துவட்டிக் காரனைப்போல்
கறுத்து திரண்ட வானத்தில்
காற்றும் மழையும்.

'காய்ஞ்சும் கெடுத்தது - இப்போழுது
பேய்ஞ்சும் கெடுத்தது' என்றாள் மனைவி
அசலையும் வட்டியையும் நினைத்தவேளை
'அப்பா சைக்கிள் வேணும்' என்றான் மகன்
இருக்கவே இருக்கிறது அடுத்த குறுவை
நமக்கெதற்கு கவலை என்றான்
அதை உள்ளடக்கி.

பாரதி
18-11-2005, 09:43 PM
மிகவும் அருமையான கவிதை.

படைத்தவருக்கும் இங்கே எங்களுக்கு படைத்தவருக்கும் நன்றிகள்.

விவசாயம் மட்டுமே தெரிந்திருந்த எங்கள் ஊரில் இன்றைக்கு ... விவசாயிகள் மட்டுமே இருக்கிறார்கள்.

விளைநிலங்கள் எல்லாம் வீடுகளை விளைவித்துக்கொண்டிருக்கின்றன.

உடனடியாக எந்தப்பிரச்சினையும் இல்லை என்றாலும் தொலைநோக்குப் பார்வையில் அரசு கவனிக்கவில்லை என்றால் சிக்கல்தான்.

poo
21-11-2005, 06:25 AM
எனக்கு விவரம் தெரிந்தபோது எங்கள் வீட்டில் விவசாயத்தை விட்டிருந்தார்கள்.. உங்கள் அறுவடையை படிக்கும்போது மனம் ஏங்குகிறது..

பருத்திச்செடிகளுக்கு களை வெட்டும்போது என் அண்ணன் தெரியாமல் என் முதுகில் (அப்போல்லாம் அல்லா கும்பிடறாப்போல புல்லுல கவுந்து படுக்கிறதுல அவ்வளவு ஆனந்தம் எனக்கு!) ஒரு போடு போட்டுவிட்டதுமட்டும் இன்னமும் நினைவிருக்கிறது!


"உரத்துக்குன்னு அகத்திக்கீரையோ இல்லாட்டி வேற ஒரு செடி - எனக்குப்பேரு தெரியல - நடுவாங்க. "

"செனப்பை"ன்னு சொல்வாங்க.. (எங்க பக்கம்!)

- உங்கள் வழக்கில் எழுதுவதால் படிக்க கொஞ்சம் திணறலாக இருக்கிறது.. (பாண்டிப்பக்கம் பேசறது படு கொச்சையா இருக்குங்கிறது என் நினைப்பு.. ஏனுங்க அப்டீத்தானே?!!)

gragavan
22-11-2005, 08:42 AM
எனக்கு விவரம் தெரிந்தபோது எங்கள் வீட்டில் விவசாயத்தை விட்டிருந்தார்கள்.. உங்கள் அறுவடையை படிக்கும்போது மனம் ஏங்குகிறது..

பருத்திச்செடிகளுக்கு களை வெட்டும்போது என் அண்ணன் தெரியாமல் என் முதுகில் (அப்போல்லாம் அல்லா கும்பிடறாப்போல புல்லுல கவுந்து படுக்கிறதுல அவ்வளவு ஆனந்தம் எனக்கு!) ஒரு போடு போட்டுவிட்டதுமட்டும் இன்னமும் நினைவிருக்கிறது!


"உரத்துக்குன்னு அகத்திக்கீரையோ இல்லாட்டி வேற ஒரு செடி - எனக்குப்பேரு தெரியல - நடுவாங்க. "

"செனப்பை"ன்னு சொல்வாங்க.. (எங்க பக்கம்!)

- உங்கள் வழக்கில் எழுதுவதால் படிக்க கொஞ்சம் திணறலாக இருக்கிறது.. (பாண்டிப்பக்கம் பேசறது படு கொச்சையா இருக்குங்கிறது என் நினைப்பு.. ஏனுங்க அப்டீத்தானே?!!)செனப்பைங்குற பேர நானும் கேள்விப் பட்டிருக்கேன்.

பாண்டிச்சேரி என்ன, சென்னையிலும் கொச்சைதான். விழுப்புரத்திலும் கூட. இதுல கொடுமை கலிங்கத்துப்பரணி எழுதிய ஜெயங்கொண்டார் விழுப்புரந்தான்.

pradeepkt
22-11-2005, 11:20 AM
அண்ணா அருஞ்சொற்பொருள் எல்லாம் தரத் தேவையில்லாத பதிவு இது... வட்டார வழக்குகளை என்னமாக் கையாளுறீங்க...
அற்புதம் அற்புதம்

பாரதி
30-11-2005, 01:22 PM
"உரத்துக்குன்னு அகத்திக்கீரையோ இல்லாட்டி வேற ஒரு செடி - எனக்குப்பேரு தெரியல - நடுவாங்க. "

"செனப்பை"ன்னு சொல்வாங்க.. (எங்க பக்கம்!)

- உங்கள் வழக்கில் எழுதுவதால் படிக்க கொஞ்சம் திணறலாக இருக்கிறது.. (பாண்டிப்பக்கம் பேசறது படு கொச்சையா இருக்குங்கிறது என் நினைப்பு.. ஏனுங்க அப்டீத்தானே?!!)

உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி பூ...

உரமாக பயன்படும் தாவரத்தின் பெயரை உங்கள் மூலம் அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

ஒவ்வொரு பகுதியிலும் தமிழை வழக்கத்தில் உபயோகப்படுத்தும் முறை வெவ்வேறாக இருக்கிறது. அந்தந்த வட்டார வழக்கில் கடந்த காலங்களை நினைத்துப்பார்த்து சொல்வது எளிதாக இருக்கும். மேலும் அதை படிப்பவர்களும் அதனுடன் பயணிக்க வசதியாக இருக்கும். நீங்கள் படிப்பதற்கு கடினமாக இருக்கும் வகையில் எழுதியதற்கு வருந்துகிறேன். ஆனால் சொல்ல வரும் விபரங்களைப் பொறுத்தே நடை இருக்கும். அதை மாற்றவும் இயலாது.

கொச்சை - என்பது சரியானதா என்று அறுதியிட்டு சொல்ல இயலவில்லை.

தமிழை எந்த வழக்கு மொழியில் கேட்டாலும், படித்தாலும் ... நெல்லைத்தமிழ், கொங்குதமிழ், இலங்கைத்தமிழ், சிங்கை/மலேசியத் தமிழ், சீனத்தமிழ் ... இன்னும் இது போல.... மிகவும் இனிமையாக, மனதுக்கு நெருக்கமாக இருப்பதாகத் தோன்றுகிறது. இதிலும் அந்த வழக்குமொழி சற்று அறிமுகமாகி இருந்தால் மனம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.

உங்களுக்கு வாய்ப்பும் சமயமும் கிடைத்தால் கி.ராஜநாராயணனை சந்தித்துப் பேசுங்கள். அவர் உங்கள் ஊரில்தான் வசிக்கிறார்.

உங்களின் அன்பான ஊக்கத்திற்கு மிக்க நன்றி பிரதீப்.

poo
12-12-2005, 05:02 AM
உங்களுக்கு வாய்ப்பும் சமயமும் கிடைத்தால் கி.ராஜநாராயணனை சந்தித்துப் பேசுங்கள். அவர் உங்கள் ஊரில்தான் வசிக்கிறார்.

.

நிச்சயமாக...

உங்களுக்கு அறிமுகமானவரா?! (எப்படி அவரை நெருங்குவது??!)