PDA

View Full Version : விளிம்பின் நுனியில்.. எஸ். ராமகிருஷ்ணன் கத



rambal
12-11-2005, 04:33 AM
விளிம்பின் நுனியில்.. எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் (மனிதர்களின் கதை) பாகம் 1

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்.
பதிப்பகம்: கிழக்குப் பதிப்பகம்
விலை : 350

இது வரை இவர் எழுதி வந்த அனைத்து சிறுகதைகளும் ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளது. தொகுப்பில் மொத்தம் 90 கதைகள் உள்ளன. இதில் எனக்குப் பிடித்த என்னை பாதித்த கதைகளை இங்குப் பதிகிறேன். இது எத்தனை பாகங்கள் வரும் என்று தெரியாது. ஏனெனில் இப்புத்தகம் மிகப் பெரிய தொகுப்பு.

உலகில் எத்தனை மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை கதைகளும் இருக்கின்றன. அத்தனை மனிதர்களின் கதைகளையும் பிரதியெடுக்க முயன்று கொண்டிருக்கின்றனர் எழுத்தாளர்கள். ஒரு கதையை முடித்து காற்றில் சிறகாய் பறக்க விட்டு அமைதியின் ஆழத்தில் சாசுவதமாய் அடுத்த கதையை பிரதியெடுக்க ஆரம்பிக்கின்றனர். யாரும் சொல்லாத கதை, அல்லது சொல்லும் தொனியில் வேறுபாடு, தனக்கே உரித்த மொழிவளம் இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் ஒரு கதை எழுதப்படும் பொழுது அது சிறப்பான ஒரு படைப்பாக அமைகிறது. மற்றபடி பின் நவீனத்துவம், நவீனத்துவம், சர்ரியல், அப்ஸ்ட்ராக்ட், நியோ ரியலிசம், மேஜிகல் ரியலிசம்.. என்பதெல்லாம் ஒரு வகை வாய்ப்பாட்டுக் கணக்குதான். அந்த வகையில் இந்தப் புத்தகமெங்கும் கதைகள்.. சொல்லாத கதைகள்.. சொல்லப்பட்ட கதைகள் மாற்றி சொல்லப்பட்டிருத்தல்.. வகை தொகை வாய்ப்பாடுகளில் அடங்கும் அனைத்து இசங்களிலும் கதைகள்.. இவரது பரிசோதனை முயற்சிகள்.. எல்லாவற்றிற்கும் சாட்சியாய் இந்தப் புத்தகம் இருக்கிறது.

இவரின் வாழ்வனுபங்களின் எல்லை மிகவும் விரிவடைந்த நிலையில் இருக்கிறது. புத்த மத கதைகள்.. கரிசல் கதைகள்.. பழங்குடியினர் பற்றிய கதைகள். புனைவுக் கதைகள்.. பேண்டசி கதைகள்.. பின் நவீனத்துவ கதைகள்.. சரித்திர கதைகள்.. பைபிள் கதைகள்.. விரிவு கொள்ளும் எல்லையை கதைகளால்
நிரப்பியுள்ளார்.

இப்படி ஒரு வாழ்க்கையை இப்படி ஒருவன் இந்தக் கால கட்டத்தில் வாழ்ந்தான். அதற்கான பதிவு இல்லை. அதை பதியும் முனைப்பில் சற்றும் தளராமல் போராடி அவனது கதையை உருவாக்குகிறார்.

இப்படியாக வாழ்ந்த ஒருவனின் கதைதான் "ஒளியை வாசிக்கின்றவன்".

இந்தக் கதையின் கதாபாத்திரம் பேசும் படங்களுக்கு முந்திய காலகட்டத்தில் வாழ்ந்தவன். தொழில் டாக்கி. ஊமைப்படங்கள் திரையில் ஓட திரைக்குப் பக்கவாட்டில் நின்று கொண்டு கையில் மைக்கைப் பிடித்துக் கொண்டு கதை கூறுபவன். இந்தத் தொழிலுக்குப் பெயர் டாக்கி. பேசும் படங்கள் வர ஆரம்பித்து எல்லாத் திரையரங்குகளிலும் அதற்கான சாதனங்களை நிறுவி திரையரங்கம் நவீனமயமாக்கப்படும் வேளை அது. டாக்கிகளுக்கு வேலை போகப் போகும் காலம். டாக்கிகள் ஆபரேட்டராக வேறு வேறு திரையரங்கம் சம்பந்தப்பட்ட வேலைக்கு தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். இவனால் அப்படி மாற முடியவில்லை. திரைப்படங்கள் பேசும் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. அதற்கான காரண காரியங்களை கதை தொட்டுச் செல்கிறது. முன்பின் தெரியாத பார்வையாளர்கள் கூட்டம். மௌனக்காட்சிகள் திரையில் அரங்கேறுகின்றன. பார்வையாளர்களுக்கு அறிமுகம் இல்லாத இவன் ஓடும் சலனக் காட்சிகளுக்குக் கதை சொல்கிறான். அவன் குரலை மக்கள் நம்புகிறார்கள். அவன் கடற்கொள்ளைக்காரனாக,
பிரின்ஸ் ஆப் ராஜ்புத்தாக மாறி கதை சொல்கிறான்.

இவன் சர்க்கஸின் கோமாளி, ஸ்ரீகிருஷ்ணன், ஹம்சன், கௌசிக ரிஷி எல்லாம் இவனேதான்.. சாயைகளின் உருவங்களில் வாழும் வாழ்க்கையை வரமாக வாங்கி வந்தவன். நவீனமயமாக்கலுக்குப் பலிகடா ஆக்கப்பட்ட கனவுத் தொழிற்சாலையின் முதல் உதிரி. படங்கள் பேசுவதால் சலனத்திரையின் கதாபாத்திரமாக வாழ்ந்து வந்த இவனது பாவனை சீர்குலைகிறது. இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறான். இது இவனுடைய தற்காலிக முடிவல்ல. ஒட்டு மொத்த திரைப்படங்களும் பேச ஆரம்பித்ததுதான் அபத்தங்களின் ஆரம்பம்.

ஒரு உணர்வை பேசாமல் முக பாவனையில் வெளிப்படுத்தும் போதுதான் சினிமா சிறந்ததாக இருக்கிறது. சார்லி சாப்ளின்..
கதாபாத்திரங்களின் உணர்வை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பேசும் சினிமா என்பது ரசிகனுடைய ரசனையை ஒரு வட்டத்திற்குள் அடைப்பதாகும். இவ்வாறு பலவாறாக பேசும் சினிமா பற்றிய பல்வேறு அபிப்ராயங்கள் நிலவி வந்த காலகட்டத்தில் கதை நடப்பதாக நாம் நினைத்துப் பார்த்தால் இந்தக் கதை பல படிமங்களை விளக்கிச் சொல்லும்..

மனிதர்களின் கதை தொடரும்...

rambal
12-11-2005, 09:35 AM
எஸ். ராமகிருஷ்ணன் கதைகள்.. பால்ய நதி (பாகம் 2)

இந்தக் கதைக்கும் நான் எழுதிய அகலிகை வம்சம் கதைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தது கண்டு ஆச்சரியம் கொண்டேன். அதன் பிறகு இதன் சாராம்சங்கள் ஒன்றெனினும் என் பார்வையின் புரிதல்கள் வேறு வகையில் அமைந்திருந்தது. ஒரு கேள்வியை கேட்காமல் விட்டுவிட்டேன். இதில் அந்தக் கேள்வி வேறு ஒரு கோணத்தில் கேட்கப்பட்டு தொக்கி நிற்கிறது.

புத்த பிக்கு இளைஞன் ஒருவனைப் பற்றிய கதை இது. 21 நாட்கள் வெள்ளம் வடிய ஆற்றங்கரையோரம் காத்திருக்கும் பிக்குவிற்கு அந்த நதி ஒரு நண்பன். பால்யத்திலிருந்தே மிகவும் பரிச்சயமான நண்பன். நதிக்குப் பெயரும் உண்டு. வாலீசன். வாலீசனுக்குக் கதையும் உண்டு. அழகிய பெண் ஒருத்தி மீது மையல் கொண்ட ராட்சசன் அவன். அவளை ஏமாற்றிக் காக்க வைத்து நதியாக மாற்றி விடுகிறாள் ஒரு பெண். இது கிளைக் கதை. புத்தபிக்குவாவதற்கு முன் இளைஞன் திரிதரர் எனும் சாமியாரோடு காடு மேடெல்லாம் அலைகிறான். இறுதியில் உயிரை தக்க வைக்க திரிதரர் இறந்து கிடக்கும் ஓநாயின் உடலுக்குள் புகுந்து கொள்கிறார். அதன் பின் இளைஞன் புத்த பிக்குவாகிறான். இது ஒரு கதை. இளைஞன் வாலிபத்தின் முறுக்கில் இருக்கும் பொழுது காமக் களியாட்டங்களில் ஈடுபட்டு ஒரு நாள் சலித்துப் போய் வீட்டை விட்டு கிளம்புகிறான். திரிதரரோடு சேர்கிறான்.

வாழ்வில் வரும் மூப்பை தவிர்க்க வேண்டும் எனும் வேட்கையோடு திரிதரர். காமம் பொங்கி வழிய பெண்ணால் ஏமாற்றப்பட்டு நதியாகப் பிரவாகம் எடுத்து ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் வாலீசன். புத்தபிக்குவாகியும் ஞானம் கிட்டாத யசன். (இளைஞன்) பால்யம் என்பது சந்தோசத்தின் நதியா? துக்கத்தின் நதியா? எனும் கேள்விகளுக்கு விடைகாணும் பொருட்டு நதியின் சுழலில் தன்னை இழக்கிறான் யசன்.

வாழ்வென்பது மிகப்பெரும் கனவின் முன்பின் தெரியாத ஊசலாட்டத்தின் ஒரு நிலைப்பாடுதான். இந்த நிலைப்பாட்டில் காமம் என்பதும் இளமை என்பதும் வாழ்வென்பதும் சாவென்பதும் ஒருசில கணங்களில் கண் முன் நிகழ்ந்துவிடும் காட்சிகள்தான். காட்சிகளின் மாயாஜாலத்தில் மனதை இழக்கும் யசன் பால்யநதியைத் தேடி சுழிக்குள் அடைக்கலம் புகுகிறான்.
மனிதர்களின் கதை தொடரும்...

இளசு
14-11-2005, 06:28 AM
இரு கதைக்கருக்களுமே மனதைக் கனமாக்குகின்றன ராம்.

முழுதாய்ப் படித்த உன் மனபாரம் புரிகிறது.

அகலிகை வம்சம் கதையை மீண்டும் வாசிக்க வேண்டும்.


இம்மன்றப் பதிவுகளின் தரம் உன்னால் உன்னத உயரம் நோக்கி ---

பாராட்டுகள் இனிய ராம்!

pradeepkt
14-11-2005, 06:55 AM
எஸ் ராமகிருஷ்ணனின் இந்த நாவல் எனக்குப் புதிது.
அவரது விகடன் தொடர்கள் மற்றும் கதாவிலாசம் படித்திருக்கிறேன். ஆழமாக எழுதுவார்.
அத்துடன் அவரது உபபாண்டவம் மிகச்சிறந்த நூல் என்று கேள்விப்பட்டுத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி ராம்.

பாரதி
15-11-2005, 12:08 AM
பிரதீப் சொன்னது போல இராமகிருஷ்ணனின் தொடரை அவ்வப்போது ஆனந்தவிகடனில் வாசித்திருக்கிறேன். சக மனிதர்கல்ள் குறித்து அவருடைய பார்வையின் வீச்சே தனி!

rambal
16-11-2005, 05:03 PM
மேற்கு வீடு (உதிர்ந்த கனவுகள்)

மேற்குத் திசையில் இருக்கும் வீடுகளுக்கு மாலையில்தான் வெளிச்சம் அதிகமாக இருக்கும் எனும் வாசகங்களோடுத் தொடங்குகிறது கதை. மாலை என்பது பகலின் முடிவு. முடிவில் தெரியும் வெளிச்சம். அணையும் விளக்கின் பிரகாசத்திற்கு ஒப்பானது. ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு நூல் பிடித்தாற்போல் அது சொல்ல வரும் இடத்திற்கும் அதைத் தாண்டியும் போய் விடும் சாத்தியங்கள் உண்டு. இந்தச் சாத்தியங்களை ஏற்படுத்திக் கொடுப்பதில்தான் ஒரு கதையாளன் வெற்றி பெறுகிறான்.

மேற்குவீட்டின் அந்திமகாலம்தான் கதை. நிகழ்வுகள் முன்னும்பின்னும் அலைக்கழிக்கின்றன மேற்கு வீட்டிற்குள் வந்தலையும் காற்றினைப் போல். ஒவ்வொரு வீட்டிற்குக் கீழும் ஒரு தேவதை உண்டு. அந்த தேவதை அந்த வீட்டைத் தாங்கிப் பிடிப்பாள். அவள் அந்தவீட்டை விட்டு வெளியேறும் போது அந்த வீடும் தன் அழகை இழந்துவிட்டு வெறும் செங்கல் சிமெண்ட்டால் ஆனதொரு கட்டிடமாகிவிடும். அப்படிக் கட்டிடமாக மாறுகிறது மேற்கு வீடு.

வீடு என்பது கனவின் எழுச்சி. வீடு யாருடையதாக இருந்தாலும் அது ஒரு கனவின் எழுச்சிதான். அப்படி ஒரு கனவு மெல்ல உதிர்கிறது.
அந்த வீட்டில் வாசம் செய்பவர்கள் பல்வேறு காரண காரியங்களில் அந்த வீட்டை விட்டு வெவ்வேறு காலகட்டத்தில் வெளியேறுகின்றனர். இறுதியில் இரு பெண்கள் மட்டும் ஒருத்தருக்கொருவர் ஒத்தாசையுடன் இருக்கையில் அவர்களில் ஒருவர் மீண்டும் தனது கணவனோடு செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் விடிந்தால் ஒரு பெண் அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழலில் இருவரும் இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். வீடு பூட்டப்படுகிறது. காலம் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டை சிதைக்கிறது.

பாதுகாப்பாய் வாழ்வதற்கு வீடு எனும் நிலை போய் பாதுகாப்பில்லாமல் வீடு எனும் நிலை மிகவும் அற்புதமாக வெளிப்பட்டுள்ளது இந்தக் கதையில்.
இது யோசிக்க வேண்டிய விஷயம்...

மனிதர்களின் கதை தொடரும்..

பாரதி
17-11-2005, 12:04 AM
ஒவ்வொரு கதையும் சொல்லும் முடிவு, கண்டிப்பாக அவரது படைப்புகளை படிக்கத்தூண்டுகிறது. மிக்க நன்றி ராம்.

gragavan
17-11-2005, 05:57 AM
மேற்கு வீடு அறிமுகமே இவ்வளவு அருமையாக இருக்கிறதே...கண்டிப்பாக படிக்க வேண்டும்.

இளசு
17-11-2005, 06:54 AM
மேற்கு வீடு (உதிர்ந்த கனவுகள்)


பாதுகாப்பாய் வாழ்வதற்கு வீடு எனும் நிலை போய் பாதுகாப்பில்லாமல் வீடு எனும் நிலை மிகவும் அற்புதமாக வெளிப்பட்டுள்ளது இந்தக் கதையில்.
இது யோசிக்க வேண்டிய விஷயம்...

..

யோசிக்கிறேன் ராம்..

பாதுகாப்பாய் இருக்க வேண்டிய கணவன்
பாதுகாப்பாய் இருக்கவேண்டிய ராணுவம், அரசு, நீதித்துறை, காவல்துறை
பாதுக்காப்பாய் இருக்கவேண்டிய சமூகக்கட்டமைப்பு

--சிதைந்து, பாதகம் விளைவித்த நிகழ்வுகளையும் யோசிக்கிறேன்.

--தாண்டி யோசிக்கவைப்பது என்பது இதுதானா???

மனங்களைக்கீறிச் செதுக்க்கும் உளி எழுதுகள் தொடரட்டும்..

பூமகள்
31-05-2008, 02:46 PM
மிக நல்ல பதிவு....:icon_b::icon_b: படித்துச் சுவைக்க நேரம் கொடு இறைவா என வேண்டிக் கொண்டிருக்கிறேன்...:icon_rollout::icon_rollout:

நேற்று இவரது உரையாடலை எதேட்சையாக வானொலியில் கேட்க நேர்ந்தது.. இங்கு வந்து பார்த்தால் அண்ணாவின் பதிவு... அவற்றை நினைவு கூர்ந்து கூடிய மட்டும் எழுத்தாளர் ராமகிருஷ்ணரின் பார்வையில் எழுத்தாக்கங்கள்..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=354003#post354003) இந்தத் திரியில் பதிவாக்கியிருக்கிறேன்..

பகிர்ந்தமைக்கு நன்றிகள் ராம்பால் அண்ணா...

இன்னும் விசாலமாக இலக்கியம்.. சிறுகதைகள் மற்றும் எழுத்தாளர்கள் சார்ந்த தமிழறிவை வளர்க்கும் முயற்சியில் நான் பயணிக்கிறேன்..!!