PDA

View Full Version : விளிம்பின் நுனியில்.. ஷோபாசக்தியின் "ம்".. (rambal
09-11-2005, 04:29 PM
விளிம்பின் நுனியில்.. ஷோபாசக்தியின் "ம்".. (போராட்டகளம்)

கொரில்லா எனும் நாவலுக்கடுத்தபடியாக "ம்" நாவல் வந்திருக்கிறது. இந்த நாவலின் கட்டமைப்பும் புரிதலும் பின் நவீனத்துவத்தின் சாரம்சத்தில் இருந்தாலும் இது சொல்ல வரும் கருத்து எளிதில் புரியும் வண்ணம் இருந்தது. கருத்து எளிதில் புரியும் வண்ணம்
இருந்தாலும் கருத்தாக்கத்தின் வெளியில் இருக்கிறேன் நான். கருத்தின் பிரச்சினைப்பாடுகளை நம் மன்ற நண்பர்களில் யாரேனும்
சந்தித்திருக்கக்கூடும். அவர்களால் இந்த நாவலை எளிதில் உள்வாங்கிக் கொள்ளவும், மேலும் இந்த நாவலோடு கைகோர்த்து
உலவி வரவும் முடியும். (எந்தத் தவறான நோக்கோடும் எழுதவில்லை. நாவலின் கருவில் பாதிக்கப்பட்டவர்கள் தனது பழைய வாழ்வை ஒரு கணம் திரும்பிப்பார்க்க வைத்துவிடும் என்பதைத்தான் அப்படிச் சொல்கிறேன்.)

இது என்ன நாவல்? "ம்"..

ஒரு தேசத்தில் சில பயங்கர செயல்கள் நடைபெறுகின்றன. பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் பலியாகிறார்கள். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இன்னும் ஏதேதோ நிகழ்வுகள் நடைபெறுகின்றன. எல்லாவற்றையும் ஒரு கதையாய் பாவித்து கேட்டுக் கொண்டு 'ம்" கொட்டிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு. இப்படியாகத்தான் நாவல் ஆரம்பிக்கிறது. ம்.

கொள்கை ரீதியில் சில போராட்ட இயக்கங்கள், தங்களுக்குள் சண்டை இட்டுக்கொண்டு தங்களை மாய்த்துக் கொண்டிருக்கின்றன. மற்றொருபுறம் ஒரு போராட்ட இயக்கம் சர்வ வல்லமை பொருந்திய நாட்டின் உதவியுடன் பெரும் இயக்கமாக உருப்பெற்று நாட்டின் அரசாங்கத்திற்கெதிராக போராடுகிறது. ஜனநாயகப் பக்கம் சிலர். போராட்ட இயக்கங்களை ஆதரித்து சிலர். இயக்கங்களின் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிலர். பெரும்பாலும் பாதிக்கப்படுவது அப்பாவிமக்கள் தான். சிறைக்கு ஒருவன் செல்வது அரசாங்கக் குற்றம். அப்படி திரும்பி வருதல் இயக்கங்களைப் பொருத்தவரை குற்றம். அப்பாவிகள் சிறைக்குச் சென்று தன்னை குற்றமற்றவன் என்று நிரூபித்துவிட்டு வெளியில் வந்தால் இயக்கங்களை அவனை கைது செய்யும். கொடுமை என்னவென்றால் தான் எதற்காகக் கைது செய்யப்பட்டோம் என்பது கடைசி வரை அவனுக்குத் தெரியாது என்பதே. ம்.

வாழ்வின் அவலங்களில் கொடூரமான அவலம் என்னவெனில் சொந்த நாட்டிற்குள்ளேயே அகதியாகி விடுவதுதான். நாவல் மட்டக்களப்பு சிறை உடைப்பைப் பற்றி விரிவாகப் பேசினாலும் அங்கு நிலவும் மனிதர்களின் அவல நிலையை கொஞ்சமும் பாரபட்சமின்றி முன் வைக்கிறது. சிலருடைய வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை விவரிக்கையில் மனது கனத்து பாரமாகி விட்டது. இப்படியும் நடைபெறுமா என்று நிறைய நேரம் யோசிக்க வைத்தது?

இவற்றிற்கெல்லாம் பொருள் என்னவாக இருக்கும்?

அதிகாரக் கட்டமைப்பை கைப்பற்ற நினைக்கும் இயக்கங்கள்.
விட்டுக்கொடுக்கமுடியாத அரசு.
இவைகளுக்கு நடுவில் ஆயுத சந்தையை உருவாக்கி தன் விற்பனையை அதிகரித்துக்கொள்ளும் வல்லரசுகள்.

பொருளாதாரக் காரணங்கள் ஆயிரம் சொன்னாலும் பாதிக்கப்படுவதும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதும் அப்பாவிகள்தான்.
ம்.

ஆசிரியர்: ஷோபாசக்தி
பதிப்பகம்: கறுப்புப்பிரதிகள்
விலை: 80

இளசு
09-11-2005, 10:13 PM
விளிம்பின் நுனியில்.. ஷோபாசக்தியின் "ம்".. (போராட்டகளம்)

அதிகாரக் கட்டமைப்பை கைப்பற்ற நினைக்கும் இயக்கங்கள்.
விட்டுக்கொடுக்கமுடியாத அரசு.
இவைகளுக்கு நடுவில் ஆயுத சந்தையை உருவாக்கி தன் விற்பனையை அதிகரித்துக்கொள்ளும் வல்லரசுகள்.
100 சதம் உடன்படுகிறேன் ராம்.

நடுவில் சிக்கி அவதியுறும் மக்களுக்கு என்றுமே நம் புரிதல்கள், ஆறுதல், தோழமை உண்டு..


நல்ல படைப்புகளை அடையாளம் காட்டும் உன்னத பணி தொடரட்டும். நன்றி ராம்..

பரஞ்சோதி
10-11-2005, 03:25 AM
நன்றி ராம்,

அப்படியே பதிப்பக்கத்தின் விபரம், தொடர்பு எண் கொடுத்தால் உதவியாக இருக்கும்.