PDA

View Full Version : விளிம்பின் நுனியில்.. கி.ராவின் கோபல்லகிரrambal
07-11-2005, 03:14 PM
விளிம்பின் நுனியில்.. கி.ராவின் கோபல்லகிராமம் (வரலாற்றில் படிந்த பிம்பம்)

கி.ராஜநாராயாணன் அவர்களது கோபல்ல கிராமம், இதன் தொடர்ச்சியாக வெளிவந்த கோபல்லபுரத்து மக்கள் இவை இரண்டும் தமிழ் இலக்கிய மரபில் மறுக்கப்பட முடியாத நாவல்கள். கரிசல் மண்ணை முதன் முதலில் தமிழுக்கு அறிமுகப்படுத்திய எழுத்தாளர் இவர். இந்த இரண்டு நாவல்களில் கோபல்லகிராமம் பாகம் 1. இதை முதலில் படித்த பின்பே கோபல்லகிராமத்து மக்களை(பாகம் 2) படிக்க வேண்டும். கோபல்ல கிராமத்து மக்கள் 1991ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றது.

தலைமுறை தலைமுறைகளாக ஒரு குடி இனம் தனக்கான கதைகளை தன்னகத்தே தக்கவைத்துக் கொள்கிறது. வாய்ச்சொல் மூலம் அவை தலைமுறைகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப்படி பாதுகாக்கப்பட்டு வரும் கதைகள் சொல்பவரது சொல்வன்மையில் ஆங்காங்கே சில மாற்றங்களுக்குட்பட்டு இறுதியில் ஒரு தொன்மமாக மாறி விடுகிறது. அப்படியாக சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கு தேசத்தில் இருந்து தமிழகத்தில் கரிசல் பகுதியில் குடியேறிய கம்மவார் எனும் ஜாதி மக்களின் கதை இது. அந்த மக்கள் எப்படி நவாப்களாலும், மற்றவர்களாலும் துன்புறுத்தப்பட்டனர், அவர்கள் கிளம்பி வந்த காரணங்கள் என்ன, என்று 97 வயது மூதாட்டி ஒருத்தியின் வாயிலாகக் கதை சொல்லப்படுகிறது. கதை நடந்த பொழுது மூதாட்டியின் வயது 7. அவர்களை தெய்வம் எப்படிக் காத்தது? என்பது கொஞ்சம் மிகு கற்பனையாக இருந்தாலும் தொன்மத்தில் இதெல்லாம் சகஜம் என்று எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தக் கதை இடைச் செருகலாக ஆங்காங்கே வந்தாலும், கதை நடப்பது வேறு ஒரு கால கட்டத்தில். அப்போது அந்தப் பிராந்தியத்தில் நிலவிய கொள்ளை, கொலை முதலியவற்றில் இருந்து எப்படி தங்களை இந்த மக்கள் காத்துக் கொண்டார்கள் என்பது விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கிளைக் கதையாக வரும் புலம் பெயர்ந்த கதையில் இந்த மக்கள் எப்படி இந்த இடத்தை அடைந்து கோபல்ல கிராமத்தை உருவாக்கினார்கள் என்று விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. விக்டோரியா மகாராணி கம்பெனி ஆட்சியை எடுத்துக் கொள்வதோடு கதையின் முதல் பாகம் முடிவடைகிறது.

மனிதர்களின் தியாகமும், விட்டுக் கொடுத்தலுமே காடாக இருந்த இடத்தை குடிநிலமாக மாற்றியது. பாலை இனமக்களாக திரிந்த ஒரு கூட்டம் முல்லை இன மக்களாகப் படிப்படியாக மாறுவதை அற்புதமாக எழுதியுள்ளார் கி.ரா. கரிசல் மண் வாசம் வீசும் மொழியில் நாட்டார் செவ்வியல் இலக்கியம் என்பது தமிழுக்குப் புதுமைதான். கதைக்குள் கதைக்குள் கதை என பின் நவீனத்துவத்தின் ஒரு பகுதியை தொட்டுச் செல்கிறார்.

pradeepkt
07-11-2005, 03:22 PM
நான் இரண்டாம் பாகத்தைத்தான் படித்திருக்கிறேன்.
முதல் பாகம் தேடிக் கிடைக்கவில்லை. கம்பெனியினர் ஆட்சியை எடுத்துக் கொள்வதிலிருந்து சுதந்திரம் கிடைப்பது வரை உள்ளது இரண்டாம் பாகம்.
கி. ரா. வின் சொல்லாக்கமும் காட்சியமைப்புகளும் சிறந்த கதை சொல்லியாக அவரை நினைக்க வைத்தன.
மிக்க நன்றி ராம்.

இளசு
07-11-2005, 06:30 PM
நன்றி ராம்

பிளஸ் டூ வயதில் என்னில் பெரும் பாதிப்பு ஏற்படுத்திய கதைகள் இவை.
கதைசொல்லி என்ற சொல்லே இவரை வைத்துத்தான் வந்திருக்கும்போல..

மின்சாரம், காப்பி வந்த கதை, காளை அடக்குதல் என பல விசயங்கள் அவர் எழுத்தில் படித்து 'நிம்மாந்து' நின்ற நினைவுகள்..

பின்னாளில் ஒரு சிறு அறுவை சிகிச்சைக்குப்பின் உடல்நலம் தேறி வந்த அவரை சென்னையில் வைத்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. ஆனால், என் தொழில் ரீதியாய்த்தான் கொஞ்சம் பேசினேனே தவிர..
அவரின் எழுத்தை, படைப்புகளைப் பற்றி அன்று பேசவில்லை..
என் கூச்சமோ என்னவோ --- என் நாக்கைக் கட்டிப்போட்டுவிட்டது..

இழந்த நல்வாய்ப்பு அது.


ராமின் விளிம்புப்பார்வைகள் தொடர்க. பாராட்டுகள்..

பாரதி
07-11-2005, 08:58 PM
தமிழின் இனிமையை எடுத்துக்காட்டிய, செயற்கைத்தனமற்ற, நடைமுறையில் உள்ள வார்த்தைகள் மூலம், கதை மாந்தர்கள் அனைவரும் நம்மெதிரே உரையாடுவது போன்ற ஒரு உணர்வைத் தரும் வகையில் எழுத்துக்களில் ஒருவித வசியத்தன்மையைக் கொண்டவர் கி.ரா. சிலமுறை தொடர்ந்து படித்தோம் என்றால் மனதில் அப்படியே நின்று கொள்ளும் வலிமை படைத்த கதைகள் அவை. நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி ராம்.

gragavan
08-11-2005, 05:41 AM
கி.ராவின் எழுத்துகள் மிகவும் எளிமையானவை. அதே நேரத்தில் வலிமையானவை. நான் சிறுவயதில் பயன்படுத்திய (இப்பொழுது என்னிடம் வழக்கொழிந்த) தெக்கத்திச் சொற்களை அவருடைய கதைகளைப் படித்து நினைவு கொள்வேன். தமிழில் உள்ள மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பது தமிழுக்குப் பெருமையே.

பரஞ்சோதி
08-11-2005, 05:52 AM
நன்றி ராம்.

நான் இப்போ தான் கி.ராவின் கதைகள் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். இணையத்தில் கிடைக்கும் அவரது கதைகள் சேமிக்கத் தொடங்கியிருக்கிறேன்.