PDA

View Full Version : மீளும் ரசனை.. நான் ரசித்த திரைப்படங்கள்..rambal
07-11-2005, 07:36 AM
மீளும் ரசனை.. நான் ரசித்த திரைப்படங்கள்..

மீளும் ரசனை. விளிம்பின் நுனியில் ஒரு புறம் செல்ல இன்னொருபுறம் நான் ரசித்த உலகத் திரைப்படங்களைப் பற்றிய எனது பார்வையை பதிய விரும்புகிறேன். நல்ல சினிமா எங்கிருந்தாலும் தேடித் தேடிப் பார்க்கும் வழக்கம் மிக சமீபத்தில்
வந்த மற்றுமொரு கெட்டபழக்கம். என்னுடைய கெட்டபழக்கங்கள் அதிரித்துக் கொண்டே இருக்கிறது. தேடல் இதுதான் முடிவும் இதுதான் என்று வரையறுத்து யாராலும் சொல்லமுடிவதில்லை.

தொடரும் பயணத்தில் என் பார்வைகளை மீட்டெடுத்துக் கொடுத்த நல்ல திரைப்பட இயக்குநர்களுக்கு என் நன்றி..

gragavan
07-11-2005, 07:53 AM
ஆகா. நல்லது ராம்பல். கண்டிப்பாகச் சொல்லுங்கள். காத்துக் கொண்டிருக்கிறோம். எனக்கும் நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கும் வழக்கம் உண்டு. உங்கள் பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்.

பரஞ்சோதி
07-11-2005, 08:17 AM
அருமையான பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

rambal
07-11-2005, 08:44 AM
சிட்டி ஆப் காட்..
Director: Fernando Meirelles
Written By: Bra'ulio Mantovani
Title: City of God
Year: 2002
Country: Brazil

ஒரு உண்மைக் கதையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலை படமாக்கியிருக்கிறார் படத்தின் இயக்குநர். பிரேசிலின் ரியோடிஜெனீராவில் இருக்கும் முக்கியமான சேரிப்பகுதியின் பெயர்தான் சிட்டி ஆப் காட். போலீஸ் எப்போதுதான் இங்கு நுழையும். அனைத்து வகை குற்ற நடவடிக்கைகளும் இங்கு நடக்கும். யாராலும் எதுவும் கேட்க முடியாத சூழல். இளைஞர்களுக்கு இருபது வயது வரை வாழ்வென்பது கொண்டாட்டத்திற்குரியது. அதற்குள் அவன் கொல்லப்படலாம்.
அல்லது காணாமல் போகவும் செய்யலாம். படம் ஒரு புகைப்பட நிருபர் ஆக வேண்டும் என்று ஆவலோடு வலம் வரும் நபரின் பார்வையில் சொல்லப்பட்டிருந்தாலும் ஒரு நாவலுக்குரிய பன்முனைப் பார்வைகள் கொண்டது. ஒவ்வொருவருடைய பார்வையின் மூலமும் படம் நகர்கிறது. ஆய்த எழுத்து எனும் தமிழ்ப் படம் மூன்று பேரின் பார்வையில் செல்வது இந்தப் படத்தை தழுவித்தான்.
மற்றபடி ஆய்த எழுத்திற்கும் இதற்கும் எந்த வித சம்பவமும் இல்லை. மாதவன் கதாபாத்திரத்தைத் தவிர்த்து.

கொலையும் கொலை சார்ந்த இடத்திற்கு சிட்டி ஆப் காட் என்று பெயர் வைக்கலாம். கத்தியைத் தீட்டுவதில் இருந்து ஆரம்பிக்கிறது படம். பின் புகைப்பட நிருபரின் பார்வையில் பின்னோக்கிச் சென்று பால்ய வயதை அடைகிறது. மூன்று பேர் கூட்டணியாக இயங்கும் ஒரு இளைஞர் பட்டாளம் செய்யும் கொள்ளைகள், கொலைகள் பற்றி விவரிக்கிறது. அப்போது அவர்களுடன் இருக்கும் அடுத்த கட்ட வயதை உடைய லில் சீ அம்மூவருக்கும் ஒரு மோட்டலை கொள்ளையடிக்க
திட்டம் கொடுக்கிறான். அம்மூவரும் இவனை புறக்கணித்துவிட்டு மோட்டலை கொள்ளை அடிக்க ஏமாந்து போகும் லில் சீ அம்மூவரையும் கொலை வழக்கில் சிக்க வைக்கிறான். பின் லில் சீ எப்படி படிப்படியாக சிட்டி ஆப் காடின்
தாதாவாகிறான் என்பது வரை செல்கிறது. இப்படி கதை சென்று கொண்டிருக்கும் போதே லில் சீ உடன் இருக்கும் நண்பனின் பார்வையின் மூலம் லில் சீயின் கதாபாத்திரம் விரிவு கொள்கிறது. எதிர்பாராத சண்டையில் நண்பனை பறிகொடுத்த லில்சீ தவறுதலாக வேறு ஒருவனை தாக்க (நாக் அவுட்) அவன் லில்சீக்கு எதிராக களம் இறங்குகிறான். இதன் பின் சிட்டி ஆப் காட் இரண்டு குழுவாகப் பிரிகிறது. சிறுவர்கள் கொலைத் தொழிலுக்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள். எல்லாம் அங்கு அரங்கேறுகிறது. லில் சியை எதிர்க்கும் நாக் அவுட் சிறுவன் ஒருவனால் கொல்லப்படுகிறான். அந்தச் சிறுவனின் பார்வைமூலம் நாக் அவுட் அவனுக்கிழைத்த கொடுமை வெளிப்படுகிறது. இறுதியில் லில் சீ போலீசால் கைது செய்யப்பட்டு சிறுவர்கள் முன் விடப்பட அடுத்த கட்ட வயதை உடைய அந்தச் சிறுவர்கள் லில் சீயை துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார்கள். சாகும் பொழுது லில் சீயின் வயது பத்தொன்பது. அடுத்த லில் சீ உற்பத்தி ஆகிவிட்டான். படம் நிறைவடைகிறது.

படம் முடிந்ததும் இவைகள் எல்லாம் என்ன? ஏன் இப்படி ஒரு வாழ்வு? இப்படியும் ஒரு வாழ்க்கை முறை இருக்கிறதா? சிறுவர்கள் கஞ்சா புகைக்கிறார்கள். துப்பாக்கி ஏந்தி சண்டை போடுகிறார்கள். மனிதாபிமானம் என்பது இல்லாத ஒரு சமூகத்தில் பிறக்கும் அத்தனை குழந்தைகளும் துர்பாக்கியசாலிகள்தான். நாம் வாழும் உலகின் ஒரு பகுதியில் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த நிகழ்வுகளுக்குப் பிண்ணனியில் இருப்பது ஹெராயின் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை அந்நாட்டு அரசு சட்ட ரீதியாக அனுமதித்துள்ளது. அந்த மார்க்கெட்டை கைப்பற்ற லில்சீக்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.

இந்தப் படம் ஒரு வித்யாசமான அனுபவத்தை அளிக்கும்.

பென்ஸ்
07-11-2005, 08:51 AM
நைட் பார்க்க ஒரு படம் கிடைச்சிது ராம்... தொடருங்கள்...

aren
07-11-2005, 09:13 AM
கதையில் எடுத்துக்கொண்டிருக்கும் "கரு" அதை கையாண்ட விதம் ஆகியவை அருமையாக நீங்கள் விவரித்திருக்கிறீர்கள். இதைப் படித்தவுடனேயே படத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டது.

தொடருங்கள் ராம். அருமை.

rambal
07-11-2005, 10:08 AM
Children Of Heaven
Director: Majid Majidi
Country: Iran

தணிக்கைகள் கடுமையாக அமுலில் இருக்கும் தேசம் ஈரான். கருத்துச் சுதந்திரம் எங்கெங்கு அளவிற்கதிகமாக பாதிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் தான் கலை தழைத்தோங்கி வாழ்வாங்கு வாழ்கிறது. அப்படி ஒரு உன்னதக் கலைப் படைப்புதான் சில்ரன் ஆப் ஹெவன்.

ஏழ்மை பீடித்திருக்கும் குடும்பத்தில் இருக்கும் அண்ணன் தங்கை இவர்களைப் பற்றிய கதைதான் சில்ரன் ஆப் ஹெவன். படம் ஒரு சிறுமியின் காலணியைத் தைப்பதில் டைட்டிலோடு துவங்குகிறது. தைத்து முடிந்ததும் அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பும் வழியில் தவறவிடுகிறான்.தங்கை அழுகிறாள். பின் சமாதானமாகி இருக்கும் ஒரே ஒரு காலணியை (அண்ணனுடையது)
இருவரும் மாற்றி மாற்றி போட்டுக் கொள்வதென்று தீர்மானிக்கிறார்கள். தங்கைக்கு காலையில் பள்ளி. அண்ணனுக்கு மதியம் பள்ளி. இந்த நிலையில் காணாமல் போன காலணியை தனது பள்ளியில் படிக்கும் தனக்குக் கீழ் நிலை மாணவி ஒருத்தி அணிந்திருப்பதை தங்கை பார்க்கிறாள். பள்ளி முடிந்ததும் அவள் பின்னால் சென்று அவள் வீட்டைக் கண்டுபிடிக்கிறாள். அங்கு அந்தப் பெண்ணின் நிலமை இவளை விட மிக மோசமாக இருப்பதைக் கண்டு திரும்பி விடுகிறாள். இந்த நிலையில் அண்ணனுடைய பள்ளியில் ஒரு செய்தி வெளியாகிறது. அது ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடத்தை பிடிப்பவருக்கு காலணி பரிசு. என்ன ஆகிறது என்பதுதான் மீதிக் கதை.

இல்லாத கொடுமை இளமையில் பார்த்தல் கூடாது. அதிலும் இருப்பவற்றை வைத்து சொர்க்கமாக்கி சந்தோசம் கொள்கின்றனர் அண்ணனும் தங்கையும். சோப்பு நுரைகளில் குமிழ்கள் செய்து ஊத விட்டு மகிழ்ச்சி கொள்ளும் காட்சி கவிதை போன்று படமாக்கப்பட்டுள்ளது. குமிழ்களின் ஆயுள் காற்று பட்டு உடையும் வரை மட்டுமே நீடிக்கும். இவர்களின் மகிழ்ச்சியும் அவ்வாறே. கை நிறைய பணம் கிடைக்கிறது ஒரு நாள். அந்த சந்தோசத்தில் அவர்கள் திளைப்பதற்குள் கை விட்டுப் போய் விடுகிறது. குமிழ்களின் ஆயுளுக்கும் அவர்கள் சம்பாதிக்கும் பணத்திற்கும் அதிக வித்யாசமில்லை.

இந்தப் படம் உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு நிறைய விருதுகளைக் குவித்தது.

மஜித் மஜ்டி இயக்கிய மற்ற திரைப்படங்கள்
Color of Paradise
Baran

இவைகளும் விருதுகள் வாங்கிய படங்கள்தான். பரான் (மழை) சமீபத்தில் வெளியான ஒரு உன்னத கலை படைப்பு.

aren
07-11-2005, 10:56 AM
மனதை ஏதோ நெருடுகிறது இந்த பதிவை படித்தபின்.

gragavan
07-11-2005, 11:23 AM
அடடா! ராம்பல் என்ன அழகான வருணனை. நான் ஒரு ஸ்பானிஷ் படம் பார்க்க நேரிட்டது. படத்தின் பெயர் மறந்து விட்டது. வேலைக்காக அமெரிக்காவிற்கு வேலி தாண்டி ஓடிப்போன காதலன். விபச்சாரியாகிப் போன காதலி. அவன் திரும்பி வருகையில் அவளை அடைய முயற்சி செய்கிறான். கடைசியில் தனது உயிரையும் கொடுத்து அவளை அங்கிருந்து வெளியே கொண்டு வருகின்றான். கதாநாயகியின் பெயர்தான் படத்தின் பெயரும் என்று நினைக்கிறேன்.

படத்தில் மேலும் பல சிறப்பும் கதாபாத்திரங்களும் உண்டு. வீட்டு ஓனர் ஒரு வயதான பெண்மணி. தன்னுடைய வாழ்க்கையில் ஒரு தேவன் வருவான் என்று காத்திருப்பவர். அவளையும் பணத்திற்காக மணந்து கொள்ளும் ஒரு இளைஞன். இன்னும் நிறைய. வழக்கமான சோகம்தான் என்றாலும் சொல்லியிருக்கும் விதம் கலைநயம் மிக்கது.

rambal
07-11-2005, 01:37 PM
Nowhere in Africa
Director : Caroline Link
Language : German
Year : 2002

2002 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதை சிறந்த அயல்மொழிப் பிரிவில் பெற்ற படம் இது.

இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்திய தாக்கங்களை எத்தனையோ இயக்குநர்கள் எத்தனையோ விதமாகப் படமாக்கி பார்வைக்கு வைத்திருக்கின்றனர். அத்தனையும் தனக்கே உரிய அவலச் சுவையுடன் பார்ப்பவரது நெஞ்சைப் பிசைந்த நிகழ்வுகள் தான். சென்ற நூற்றாண்டின் அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றம் மனிதத்தை கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்துக் கொண்டிருக்கும் வேளையில் இது மாதிரியான படைப்புகளே வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றுகின்றன.

அகதிகளாக வெளியேறும் ஒரு குடும்பத்தின் கதை இது. ஜெர்மனில் பிறந்து வளர்ந்தாலும், தன் சொந்த நாட்டினராலேயே அகதிகளாக ஆக்கப்பட்ட யூத குடும்பம் ஒன்றின் கதை. அந்தக் குடும்பம் ஆப்ரிக்காவின் நைரோபியில் அடைக்கலம் புகுகிறது. அந்தக் குடும்பத்தில் இருக்கும் மூன்று பேரின் தனித்தன்மையும் புதிய இடத்தில் வாழும் முனைப்பும் வேறுபடுகின்றன. வக்கீல் கணவனுக்கு அகதியாகி வந்தாலும் நாட்டுப்பற்று இருக்கிறது. இருந்தாலும், குடும்பத்திற்காக அத்துவான காட்டில் பண்ணை அமைத்து வேலை செய்கிறான். மனைவிக்கோ ஜெர்மனை விட்டு ஒரு வசதியும் இல்லாத இடத்தில் சாதாரணமாக இருப்பதென்பது முடியாத காரியம்.
மகள். அவள் சிறுமி. அவளின் பார்வையில் தான் கதை நகர்கிறது. குழந்தைமைகளுக்கே உரித்தான வகையில் புதிய சூழலை அவள் ஏற்றுக் கொள்கிறாள். அந்தப் பிராந்தியத்தை ரசிக்கிறாள். இந்த நிலையில் பிரிட்டிஷ் ராணுவம் ஜெர்மானியர்களைக் கைது செய்கிறது. யூதர்களாகிய இவர்களையும்தான். இதிலிருந்து மீண்டு இவர்கள் வேறு ஒரு ஆப்ரிக்க நாட்டில் முதலில் இருந்து வாழ்வை துவக்குகிறார்கள்.

இப்போது சிறுமி பள்ளிக்குச் செல்ல ஆரம்பிக்கிறாள். மனைவி புது இடத்தை ஏற்றுக் கொள்கிறாள். பாதுகாப்பானதாக நம்புகிறாள். பண்ணை ஆரம்பித்து வாழத்தொடங்குகிறார்கள். கணவன் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து போருக்குச் செல்கிறான். இரண்டாம் உலக யுத்தம் முடிவடைகிறது. கணவனுக்கு ஜெர்மன் பிராங்க்பர்ட்டில் நீதிபதியாக வேலை கிடைக்கிறது. அவன் கிளம்பத் தயாராகிறான். மனைவிக்கு இருக்கும் இடம் சொர்க்கம். வர மறுக்கிறாள். சிறுமிக்கு எங்கு வேண்டுமானாலும் வாழத் தயாராக இருக்கிறாள்.
இந்தக் குடும்பம் ஜெர்மன் திரும்புகிறதா என்பதே கதை.

வாழ்வு தீராத அலைக்கழிப்பில் மக்களை துரத்துகிறது. வாழ்விடப்பெயர்ச்சிகளில் சிக்கித் தவிக்கிறது. விலங்குகளுக்கு இல்லை இந்த அலைக்கழிப்பெல்லாம். விலங்கிலிருந்து விடுபட்ட மனிதனுக்கு மாத்திரமே
இந்தக் கொடுமையெல்லாம். தான் பிறந்த இடத்தை விட்டு நிர்பந்தத்தினால் புது இடம் நோக்கிக் கிளம்பும் மனிதன் அங்கு இருக்கும் பாதுகாப்புத் தன்மையில் தன்னை பறிகொடுத்துவிட்டு தன் இடத்திற்கு திரும்பிச்செல்ல
மறுக்கும் முரண் இப்படத்தில் பதியப்பட்டுள்ளது.

இளசு
07-11-2005, 06:40 PM
பாரதி, நண்பன்,.... இப்போது ராம்,
இலக்கியப்பக்கம் களை கட்ட காரணிகள் நீங்கள்..
பொறாமையாய் நன்றிகள்..

படிக்கவும் நேரமின்றி போனது...
படங்கள் பார்க்க ? இன்னும் சுத்தம்.

இதுபோன்ற நம் மன்றப்பதிவுகள்தான்
புதிய சாளரங்கள் எனக்கு..

படித்ததில் ஈரானியக் கதை முடிச்சில் நெகிழ்ந்தேன்.

பாராட்டுகள் ராம்.. தொடரட்டும் மீள்ரசனைகள்..
வளரட்டும் உயர்ரகப் பதிவுகள்...

பாரதி
07-11-2005, 08:30 PM
புத்தகங்களைத் தொடர்ந்து புதியபார்வையில் வரும் திரைப்படங்களா..?! தமிழகத்தில் இப்படங்களின் குறுவட்டு எங்கே கிடைக்கிறது என்ற தகவல் தெரியுமானால் அறியத்தாருங்கள் ராம்.

rambal
08-11-2005, 10:40 AM
சென்னையில் சினிமா பாரடைஸ், டிக் டாக் போன்ற இடங்களில் வாடகைக்குக் கிடைக்கும்.
லாண்ட்மார்க்கில் சொல்லி வைத்து விலைக்கு வாங்கலாம்.

rambal
08-11-2005, 10:42 AM
பல்ப் பிக்சன் (Pulp Fiction)
இயக்குநர்: குவான்டின் டொரான்டினோ
வருடம் : 1993
நாடு : அமெரிக்கா

இது ஒரு வித்யாசமான திரைப்படம். எவ்வாறெனில், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத
நான்கு சம்பவங்கள். இவற்றிற்கிடையே இருக்கும் ஒரே சம்பந்தம் குற்றம்.
வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நபர்கள் புரியும் வித விதமான குற்றங்கள். இவைகளை
ஒன்றுக்கொன்று கோர்க்காமல் தனித் தனியாக நிகழ்த்திவிட்டு கதையை ஒன்றாக்குகிறார்
இயக்குநர். ஜான் டிராவல்ட்டோ, சாமுவேல் ஜாக்சன், புரூஸ் வில்லிஸ் ஆகியோர்
நடித்திருக்கும் இந்தப் படம் இதன் வித்யாசமான கதை கூறலுக்காக ஆஸ்கார் விருதினைப் பெற்றது.

இந்தப் படத்தின் இயக்குநர் வீடியோ கடையில் வரும் கேசட்டுகளை பத்து நிமிடம் ஓடவிட்டு
பரிசோதிக்கும் வேலையில் இருந்தவர். அந்த முறையையே திரைக்கதையாக்கி எடுக்கப்பட்டதால்
இப்படம் எந்த வரம்பிற்குள்ளும் அடங்கவில்லை. சிறந்த பரிசோதனை முயற்சியாகக் கருதப்படுகிறது.
இவர் இப்போது இதே போன்று வேறு விதமான பரிசோதனை முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

பைத்தியக்காரத்தனம் என்பது மையப்படுத்தாத போது வெளிப்படும் பைத்தியக்காரத்தனமாக
இருக்கிறது படம். காப்பி அருந்திக் கொண்டிருக்கும் ஒரு இளம் ஜோடி
கொள்ளை அடிப்பதைப் பற்றி விவாதிக்கிறார்கள். விவாதத்தின் முடிவில் உணவு விடுதியை
கொள்ளை அடிப்பது பற்றி முடிவெடுக்கிறார்கள். உடனே செயலிலும் இறங்கி விடுகிறார்கள்.
அவர்கள் காப்பி குடித்துக் கொண்டிருக்கும் உணவு விடுதியையே கொள்ளை அடிக்க
துப்பாக்கியோடு எழுகிறார்கள். டைட்டில் ஆரம்பிக்கிறது. டைட்டிலின் முடிவில்
இரண்டு நபர்கள் கோட் சூட் அணிந்து கொண்டு வியாபாரத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பேச்சு காலால் மசாஜ் செய்வது பற்றி திசை மாறுகிறது. இருவருக்கிடையும் வாக்குவாதம் தொடர்கிறது.
இதற்குள் இருவரும் ஒரு வீட்டை அடைகின்றனர். கதவைத் தட்டு முன் மணி பார்க்கின்றனர்.
யாரையும் தொந்தரவு செய்யக் கூடாதென்று காரிடாருக்குச் செல்கின்றனர். விவாதத்தை
தொடர்கின்றனர். பின் சிறிது நேரம் கழித்து வந்து கதவைத் தட்டி அங்கிருக்கும் நபரை கொல்கின்றனர்.

ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் சம்பந்தம் கிடையாது. இருப்பினும் கதை சொல்லும் உத்தி
உலக சினிமாவிற்குப் புதிது. வித்யாசமான பார்வை அனுபவம் கிடைக்கும்.

gragavan
08-11-2005, 10:43 AM
இது போல பெங்களூரில் எங்கு கிடைக்குமென்று தெரியவில்லை. வெகுஜன ரசனைக்குரிய படங்கள் எங்கும் கிடைக்கின்றன. இது போன்ற படங்களைத் தேடித்தான் போக வேண்டியிருக்கிறது.

rambal
08-11-2005, 10:45 AM
பெங்களூரில் விசாரித்துச் சொல்கிறேன்.

gragavan
08-11-2005, 10:47 AM
நன்றி ராம்பல். இங்கும் லேண்ட் மார்க் இருக்கிறது. ஒருவேளை அவர்களிடம் கேட்டால் தெரியுமோ என்னவோ!

rambal
09-11-2005, 04:43 PM
மாடர்ன் டைம்ஸ் (Modern Times)

இயக்குநர் : சார்லி சாப்ளின்
வருடம் : 1936
நாடு : அமெரிக்கா

இயந்திரங்களின் பற்சக்கரங்களுக்கு இடையே வாழும் நவீனமனிதனின் மீதான விமர்சணமே இந்தத் திரைப்படம். வறுமை, வேலை நிறுத்தம், போராட்டங்கள், வேலையின்மை, அவமதிப்பு இவற்றால்தான் தன்னைச் சுற்றி இருக்கும் உலகம் சூழ்ந்திருக்கிறது என்பதை உணர்ந்த சாப்ளின் இயந்திரங்களின் வருகை மனிதர்களுக்கு உதவி செய்வதற்காகத்தானே தவிர அவர்களை வேலையிலிருந்து வெளியேற்றுவதற்காக அல்ல என்று ஒரு நேர்முகப் பேட்டியில் கூறுகிறார்.

ஆட்டுமந்தைகள் போல் மனிதர்கள் தொழிற்சாலைக்கு செல்வதை முதல் காட்சியில் காட்டுவதில் இருந்து படம் துவங்குகிறது. சதா வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தொழிலாளியின் அவல நிலையை சாப்ளின் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். ஒரு இயந்திரத்தை பரிசோதிக்க சாப்ளினை அமரவைத்து பரிசோதிக்கும் பொழுது ஒரு மனிதனை விட இயந்திரத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் மனிதன் மனநிலை பிறழ்ந்து போய்விடுகிறான். பின் அவன் எப்படி மீள்கிறான் என்பது மீதிக்கதை. இந்த உலகை வழிநடத்துவது எளிமையான அன்பும் பாசமும்தான் என்பதை இந்தப்படத்திலும் வலியுறுத்தியுள்ளார்.

நாம் சிறு வயதில் பார்த்து வந்த சாப்ளினை இப்போது திரும்பிப்பாருங்கள். அவருடைய நகைச்சுவையை விடுத்துப்பார்த்தால் ஒரு உன்னதமான நடிகரும், கதை சொல்லியும், இயக்குநரும் தெரிவார்கள்.

பாரதி
09-11-2005, 10:15 PM
உண்மைதான் ராம். உரையாடல் இன்றியே மனிதர்களின் அவலங்களையும், காதலையும், நகைச்சுவை கலந்து அத்தனை வருடங்களுக்கு முன்னரே தந்த சார்லி சாப்ளின் ஒரு பெரிய மேதை என்பதில் சந்தேகமே இல்லை. நான் பலமுறை பார்த்து ரசித்த படம் இது.

இளசு
09-11-2005, 10:19 PM
யோசித்துப்பார்த்தால் சாப்ளின் படங்கள் எதையும் நான் பார்த்ததில்லை ராம்..

(பாரதி - நற..நற்...... பலமுறையா????)

ஆனாலும் அவர் மிகப் பரிச்சயமாய் இருப்பதெப்படி?


வாய்ப்பு ஏற்படுத்தி, பார்க்கத்தூண்டும் பதிவு. நன்றி ராம்.

rambal
11-11-2005, 12:53 PM
ரஷோமென் (Roshoman)

இயக்குநர் : அகிரா குரோசோவா
நாடு : ஜப்பான்

உலகின் தலை சிறந்த இயக்குநர் என்று மதிக்கப்படும் இவர் இந்தத் திரைப்படத்திற்குப் பிறகுதான் புகழ்பெற்றார். தனது கதை சொல்லும் உத்தி, எடிட்டிங் ஆகியவற்றின் மூலம் உலகை ஜப்பான் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர் இவர். இவரது பிற படங்களில் மிகவும் புகழ் பெற்றது
செவன் சாமுராய்ஸ் (Seven Samurais).

காட்டு வழிப் பயணப்படும் ஒரு கணவன் மனைவி இரவு நெருங்க ஒரு இடத்தில் தங்குகின்றனர். இரவில் கணவனை அடித்து விட்டு மனைவியைக் கற்பழித்துக் கொன்று விடுகிறான் திருடன் ஒருவன். இது கதை. நடந்த நிகழ்வை தனது பார்வை மூலம் சொல்கிறான் கணவன். இதே நிகழ்விற்குக் காரணமாக இருந்த திருடனும் தனது பார்வையில் சொல்கிறான். இறுதியாக பாதிக்கப்பட்ட மனைவியின் ஆவி வந்து இதே கதையை தனது பார்வையில் சொல்கிறது. மூவரின் கதை கூறலுக்குப் பிறகு முடிவை ரசிகர்களிம் விட்டு விடுகிறார் இயக்குநர். இதில் எவர் கூறியது உண்மை, பொய் என்பது பற்றிய கவலைகள் ஏதுமின்றி ஒரு திறந்த முடிவிற்கு கதையை விட்டு விடுகிறார். (இதன் திரைக்கதை தழுவல்தான் விருமாண்டி)

இந்தப் படம் வெளி வந்த ஆண்டு 1950களின் ஆரம்பம்.

ஒரு படம் எழுத்தாளனது மேஜையிலும் எடிட்டிங் மேஜையிலும்தான் உருவாக்கப்படுகிறது என்று திட்டவட்டமாக நம்பும் உலகின் தலை சிறந்த இயக்குநர் இவர்.

பாரதி
11-11-2005, 04:17 PM
ம்ம்.. எத்தனையோ முறை அகிரா குரோசோவா பற்றி கேள்விப்பட்டும், படித்துமிருக்கிறேன். ஆனால் இதுவரைக்கும் ஒரு முறை கூட அவருடைய படம் பார்த்ததே இல்லை. அதிகம் கேள்விப்படாத கதை குறித்து உங்கள் விமர்சனத்திற்கு நன்றி ராம்.

இளசு
11-11-2005, 10:04 PM
குரோசோவாவின் செவன் சாமுராய் பார்த்திருக்கிறேன்.
(பாரதி -- கணக்கு சரியாகிவிட்டதா?)

அதெப்படி - சில இயக்குநர்கள் உலகமக்களின் ஒட்டுமொத்த
நாடித்துடிப்பை அறிந்து மயக்குகிறார்கள் ராம்?


அந்தநாள் படம் கூட ஒரு நிகழ்வை பலர் பார்வைக்கோணங்களில் சொல்வதுதானே ? ( அதுவும் அந்தநாளிலேயே ஜாவர் சீதாராமனைக் கவர்ந்த ஆங்கிலப்பட உத்தியாகத்தான் இருக்கும் என்பது என் கணிப்பு).


ஒப்பற்ற திரைப்படைப்புகளைத் தொகுக்கும் தொடர் இது.

பாராட்டும் நன்றியும் ராமுக்கு..

rambal
15-11-2005, 07:51 AM
நோ மேன்ஸ் லேண்ட் (No man's Land)
இயக்குநர்: டேனிஸ் டேனோவிக்
நாடு: செர்பிய - குரோசியன்
ஆண்டு: 2001

இந்திய பாகிஸ்தான், இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சினைகளுக்கு இணையானது செர்பிய போஸ்னிய பிரச்சினை. இந்த நாடுகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இன்னும் எல்லை தொடர்பான பிரச்சினைகளும் இதைத் தொடரும் வன்முறைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்தப் படத்தை ஒரு ஆவணத்தோடு
ஒப்பிடலாம். ஐ.நா. சபை இரு நாடுகளுக்கிடையில் இருக்கும் பிரச்சினையை எவ்வளவு தூரம் கையாள்கிறது? இரு நாடுகளுக்கிடையில் இருக்கும் பகைமையில் பாதிக்கப்படும் நபர்கள் யார் யார்? அவர்களின் முடிவு என்னாகிறது என்பதை ஒரு புதுக் கோணத்தில் சொல்கிறது. வழக்கம் போல் தீர்வை மட்டும் இயக்குநரால் சொல்ல முடியவில்லை. சொல்ல முடியாது. இதுதான் நிதர்சண உண்மை.

செர்பிய ராணுவர்கள் சிலர் தவறுதலாக போஸ்னிய எல்லைப் பகுதியின் அருகில் சென்றுவிடுகின்றனர். இது நடப்பது அதிகாலை நேரம். விடியும் தருவாயில் போஸ்னிய வீரர்கள் இவர்களை சராமாரியாகச் சுட இவர்கள் தங்களது எல்லைப் பகுதிக்கு ஓடுகின்றனர். உண்மையில் இவர்கள் இருப்பது இரு நாட்டுக்கும்
நடுவில் இருக்கும் ஐ.நாவின் இடத்தில். இது பொது இடம். இந்த இடத்திற்குப் பெயர்தான் நோ மேன்ஸ் லேண்ட். செர்பிய ராணுவ வீரர்கள் மரிக்கின்றனர். ஒரு வீரன் மட்டும் கையில் பட்ட குண்டுக் காயத்துடன் சேதமடைந்த நிலையில் இருக்கும் பங்கருக்குள் இருக்கிறான். இந்த நிலையில் போஸ்னிய எல்லைப் பகிதியில் இருந்து இவர்கள் இறந்து விட்டதை உறுதி செய்ய இரு போர் வீரர்கள் அனுப்பப்படுகின்றனர். அவர்களில் ஒரு வீரன் அன்றுதான் ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்தவன். போஸ்னிய வீரர்கள் இறந்ததாக நினைத்து ஒரு செர்பி வீரனுக்குக்கீழ் கன்னிவெடியை வைத்து அதன் மேல் அவன் உடலை வைத்து விடுகின்றனர். செர்பிய ராணுவம் இந்த உடலை எடுத்தால் அவர்கள் அழிய வேண்டும் எனும் நோக்கில் இந்தச் செயல் நடைபெறுகிறது. இதே நேரம் பங்கருக்குள் இருந்த செர்பிய வீரன் போஸ்னிய வீரர்களைச் சுடுகிறான். அதில் ஒருவன் இறக்கிறான். புதிய போஸ்னிய ராணுவ வீரன், அடிபட்ட செர்பிய ராணுவ வீரன், கன்னி வெடி மேல் படுத்திருக்கும் செர்பிய ராணுவ வீரன்.. இவர்கள் நிலைமை என்ன ஆகிறது? ஐ.நா.வின் அமைதிப்படை, பத்திரிக்கை உலகம் இதை எப்படி பார்க்கிறது? என்பதுதான் கதை.

ஒரே நாள் நிகழ்வாக நடைபெற்றிருக்கும் இப்படம் ராணுவ வீரர்களின் மனிதத்தன்மை பற்றி பேசுகிறது.
இறப்பிற்கும் வாழ்விற்கும் இடையில் ஊடாடித் தத்தளிக்கும் இடம்தான் நோ மேன்ஸ் லேண்ட்.

Iniyan
15-11-2005, 08:22 AM
என்னவொரு அருமையான திரி இது. இத்தனை நாளாக இதை எப்படி தவற விட்டேன். படங்களை பார்த்து ரசிப்பது ஒரு சுகம் என்றால் இப்படி படங்கள் பற்றி படித்து ரசிப்பதும் ஒரு சுகம் தான்

இளசு
18-11-2005, 06:06 AM
யாருக்கும் சொந்தமில்லாத நிலம்
சொந்த நிலம் சொந்தமில்லாத மனிதன்..

போர்கள் உருவாக்கும் சோகங்கள் எத்தனை எத்தனை..

கதைச்சுருக்கம் கசியவைக்கிறது ராம்..

rambal
18-11-2005, 02:21 PM
ஷஷ - த செண்ட் டௌன் கேர்ள் (Xiu Xiu - The Sent Down Girl)

இயக்குநர்: ஜொன் சென்
ஆண்டு : 1999
நாடு : சீனா

சீனாவில் தடைசெய்யப்பட்ட படம் இது. அரசியல் ரீதிக்காகவும் காமம் சார்ந்ததற்காகவும் இப்படம் சீனாவில் தடை செய்யப்படது. ஆனால், உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு நிறைய விருதகள் வாங்கியது. இந்தப்படம் சீனாவில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
1967 முதல் 1976 வரை சுமார் 80 இலட்சம் சிறுமிகள் (வயது சுமார் 14லிருந்து 18ற்குள்) சீனாவின் புறநகர்ப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். இவர்களில் சிலர் மட்டுமே தனது வீட்டிற்கு திரும்பி வந்தனர். மற்றவர்கள் ஆங்காங்கு தங்களுக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். நிறையப் பேர் காணாமல் போனார்கள் அல்லது இறந்தார்கள். ஏன் இப்படி செய்தது சீன அரசு? கம்யூனிசத்தில் பொதுவுடைமையாக்கப்பட்ட மக்களுக்கு அரசுதான்
எல்லாம் வழங்கியாக வேண்டும். உணவு, உடை... இது பற்றாக்குறை ஏற்பட்டதால் நகர்ப்புறங்களில் பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்த சிறுமிகளை மட்டும் செண்ட் டௌன் (Sent Down) எனும் ஆபரேஷன் மூலம் எல்லைப் பகுதிக்கும் புறநகர்ப்பகுதிக்கும் அனுப்பியது. இதில் சிறுமிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் என்னவென்று யோசித்துப் பார்த்ததில் இவர்கள்தான் வருங்காலத்தில் பிள்ளை பெற்று ஜனத்தொகையை அதிர்கரிக்கப் போகிறவர்கள். இதனாலேயே இவர்களை நகரம் கடத்தியது அரசாங்கம். அப்படி கடத்தப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் இது. இந்தப் படத்தை இயக்கிய்வரும் ஒரு பெண்தான். அவர் இந்தக் கொடுமையில் ஒரு சதவிகிதம் மட்டும் அனுபவித்துத் தப்பித்த அதிர்ஷ்டசாலிப் பெண்.

ஷஷ - கதையில் வரும் சிறுமியின் பெயர். இவள் சீன திபெத் எல்லைப் பகுதியில், (காட்டில்) லாஜீன் எனும் குதிரை பழக்குபவனிடம் பயிற்சி பெறுவதற்காகத் தந்திரமாக அனுப்பிவைக்கப்படுகிறாள். ஆறு மாத பயிற்சிக்குப் பிறகு அழைத்துக் கொள்வதாக சொன்ன தலைமைச் செயலகம் இவளை அழைக்கவில்லை. இவள் நம்பிக்கையோடு காத்திருக்கையில் பக்கத்து கிராமத்தில் இருக்கும் காம்ரேட் ஒருவன் அரசாங்கத்தின் நடத்தைகளை எடுத்துக் கூறுகிறான். அரசாங்கம் அவளுக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும் மற்ற பெண்கள் தலைமைச் செயலகத்தில் வேலை பார்க்கும் தன்னை மாதிரியான நபர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு வெளியேறிவிட்டதாகவும் நீயும் அப்படி வெளியேறலாம் என்றும் கூறுகிறான். இவன் கூற்றை நம்பும் ஷஷ அவனுடன் உடலுறவு கொள்கிறாள். கிராமத்திற்குத் திரும்பிச் செல்லும் அவன், தனது கம்யூனில் இருக்கும் நபர்களை அவளிடம் அனுப்புகிறான். ஒவ்வொருவரும் அவளோடு படுக்கையைப் பகிர்ந்துவிட்டு அவளை மீட்பதற்கு வழி சொல்லாது செல்கின்றனர். அவள் தனது ஊருக்குத் திரும்பிப் போகவேண்டுமெனில் குடியுரிம அட்டை, ரேசன் அட்டை அரசால் கொடுக்கப்படவேண்டும். இப்போது திரும்பிச் சென்றால் அவளை அரசியல் கைதியாக்கி நாடு கடத்திவிடுவார்கள். இந்த நிலையில் அவளை காசு கொடுக்காத விபச்சாரியாக்கிவிடுகின்றனர் கம்யூன் நபர்கள். சில நாட்கள் கழித்து கர்ப்பமுறுகிறாள். கர்ப்பத்தைக் கலைக்க மருத்துவமனைக்குச் சென்றால் அங்கு அவள் அன்றைய தினம் வந்த சிறுமிகளில் ஐந்தாவது நபர். அந்த மருத்துவமனையில் இருக்கும் காம்ரேடுகள் கருக்கலைப்பு சிகிச்சை முடிந்தவுடன் அவளை மிண்டும் கெடுக்கின்றனர். இறுதியில் வாழ்வை வெறுத்துப் போகும் ஷ ஷ லாஜினைச் சுடச் சொல்லி மன்றாடி அவன் சுட இறக்கிறாள். இது ஒரு கதைதான். மிச்சமிருக்கும் 80இலட்சம் சிறுமிகளின் கதை என்னவாக இருக்கும்?

ரஷ்யப் பேரரசில் அமுல்படுத்தப்பட்ட கம்யூனிச சித்தாந்தம் பற்றி ஒரு அளவிற்கு பயிற்சி பெற்றிருந்த எனக்கு சீனாவில் அமுலில் இருக்கும் கம்யூனிச சித்தாந்தம் நிறைய அதிர்ச்சி அளித்தது. கார்ல் மார்க்ஸின் உன்னதத் தத்துவம் செயல்முறைப்படுத்தப்படும் பொழுதே செத்துவிட்டது. எல்லா இடத்திலும் இந்த சித்தாந்தம் அழிந்துவிட்ட நிலையில் சீனாவில் இன்னும் இருப்பது கண்டு ஆச்சரியம்தான். மனிதம் என்பது வெறும் தலைக் கணக்கு என எண்ணும் வரை உணர்வுகளுக்கும், உயிருக்கும் மதிப்பில்லை போலும்..

(பின் குறிப்பு: மிக பலகீன இதயமுள்ளவர்கள் இந்தப் படத்தைப் பார்ப்பதை தவிர்ப்பீர். மனிதம் மீது தீராப் பற்றுடையவர்கள் இந்தப் படம் பார்க்கலாம். 80 இலட்சம் பெண்களுக்காக மனதளவில் அஞ்சலி செலுத்தலாம்)

பாரதி
18-11-2005, 09:18 PM
படிக்கவே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது ராம். ஆனால் என்ன... சீனாவை எதிர்த்து உலக அளவில் வரும் திரைப்படங்கள் பரிசுகளை குவிப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைதான். விரிவான விமர்சனத்திற்கு மிகவும் நன்றி.

இளசு
11-12-2005, 04:49 PM
உண்மைகள் கசக்கவே செய்யும் ராம்.. விமர்சனப்பார்வைகள் தொடரட்டும்.

(ஏன் இடைவெளி? பணிச்சுமையா?)

மயூ
17-03-2006, 06:59 AM
Children Of Heaven
Director: Majid Majidi
Country: Iran

தணிக்கைகள் கடுமையாக அமுலில் இருக்கும் தேசம் ஈரான். கருத்துச் சுதந்திரம் எங்கெங்கு அளவிற்கதிகமாக பாதிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் தான் கலை தழைத்தோங்கி வாழ்வாங்கு வாழ்கிறது. அப்படி ஒரு உன்னதக் கலைப் படைப்புதான் சில்ரன் ஆப் ஹெவன்.

ஏழ்மை பீடித்திருக்கும் குடும்பத்தில் இருக்கும் அண்ணன் தங்கை இவர்களைப் பற்றிய கதைதான் சில்ரன் ஆப் ஹெவன். படம் ஒரு சிறுமியின் காலணியைத் தைப்பதில் டைட்டிலோடு துவங்குகிறது. தைத்து முடிந்ததும் அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பும் வழியில் தவறவிடுகிறான்.தங்கை அழுகிறாள். பின் சமாதானமாகி இருக்கும் ஒரே ஒரு காலணியை (அண்ணனுடையது)
இருவரும் மாற்றி மாற்றி போட்டுக் கொள்வதென்று தீர்மானிக்கிறார்கள். தங்கைக்கு காலையில் பள்ளி. அண்ணனுக்கு மதியம் பள்ளி. இந்த நிலையில் காணாமல் போன காலணியை தனது பள்ளியில் படிக்கும் தனக்குக் கீழ் நிலை மாணவி ஒருத்தி அணிந்திருப்பதை தங்கை பார்க்கிறாள். பள்ளி முடிந்ததும் அவள் பின்னால் சென்று அவள் வீட்டைக் கண்டுபிடிக்கிறாள். அங்கு அந்தப் பெண்ணின் நிலமை இவளை விட மிக மோசமாக இருப்பதைக் கண்டு திரும்பி விடுகிறாள். இந்த நிலையில் அண்ணனுடைய பள்ளியில் ஒரு செய்தி வெளியாகிறது. அது ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடத்தை பிடிப்பவருக்கு காலணி பரிசு. என்ன ஆகிறது என்பதுதான் மீதிக் கதை.

இல்லாத கொடுமை இளமையில் பார்த்தல் கூடாது. அதிலும் இருப்பவற்றை வைத்து சொர்க்கமாக்கி சந்தோசம் கொள்கின்றனர் அண்ணனும் தங்கையும். சோப்பு நுரைகளில் குமிழ்கள் செய்து ஊத விட்டு மகிழ்ச்சி கொள்ளும் காட்சி கவிதை போன்று படமாக்கப்பட்டுள்ளது. குமிழ்களின் ஆயுள் காற்று பட்டு உடையும் வரை மட்டுமே நீடிக்கும். இவர்களின் மகிழ்ச்சியும் அவ்வாறே. கை நிறைய பணம் கிடைக்கிறது ஒரு நாள். அந்த சந்தோசத்தில் அவர்கள் திளைப்பதற்குள் கை விட்டுப் போய் விடுகிறது. குமிழ்களின் ஆயுளுக்கும் அவர்கள் சம்பாதிக்கும் பணத்திற்கும் அதிக வித்யாசமில்லை.

இந்தப் படம் உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு நிறைய விருதுகளைக் குவித்தது.

மஜித் மஜ்டி இயக்கிய மற்ற திரைப்படங்கள்
Color of Paradise
Baran

இவைகளும் விருதுகள் வாங்கிய படங்கள்தான். பரான் (மழை) சமீபத்தில் வெளியான ஒரு உன்னத கலை படைப்பு.
நான் இந்த திரைப்படத்தைப் பார்த்தேன். என்னை அறியாமலேயே எனது கண்ணில் இருந்து கண்ணீர் ஓடியது. தயவுசெய்து இப்படத்தைப்பார்த்து மனம் நிறைய கவலையை வாங்காதேங்கோ.

RRaja
23-03-2006, 10:08 AM
...இந்தப்படம் சீனாவில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. .....
மனிதம் என்பது வெறும் தலைக் கணக்கு என எண்ணும் வரை 2vவது பாரா படிக்கும்போது கோபம் தலைக்கேறுகிறது! என்ன உலகம்!
தேர்ந்தெடுத்து அதை அனைவரும் படிக்கத்தரும் பணிக்கு வரவேற்புகள் ராம்பால்.

jose007
30-05-2006, 05:13 PM
அடடா! ராம்பல் என்ன அழகான வருணனை. நான் ஒரு ஸ்பானிஷ் படம் பார்க்க நேரிட்டது. படத்தின் பெயர் மறந்து விட்டது. வேலைக்காக அமெரிக்காவிற்கு வேலி தாண்டி ஓடிப்போன காதலன். விபச்சாரியாகிப் போன காதலி. அவன் திரும்பி வருகையில் அவளை அடைய முயற்சி செய்கிறான். கடைசியில் தனது உயிரையும் கொடுத்து அவளை அங்கிருந்து வெளியே கொண்டு வருகின்றான். கதாநாயகியின் பெயர்தான் படத்தின் பெயரும் என்று நினைக்கிறேன்.

படத்தில் மேலும் பல சிறப்பும் கதாபாத்திரங்களும் உண்டு. வீட்டு ஓனர் ஒரு வயதான பெண்மணி. தன்னுடைய வாழ்க்கையில் ஒரு தேவன் வருவான் என்று காத்திருப்பவர். அவளையும் பணத்திற்காக மணந்து கொள்ளும் ஒரு இளைஞன். இன்னும் நிறைய. வழக்கமான சோகம்தான் என்றாலும் சொல்லியிருக்கும் விதம் கலைநயம் மிக்கது.

நானும் அப்படத்தை பார்த்திருக்கிரேன்... கதாநாயகி.. சல்மா ஹைக்... யாராவது படத்தின் பெயரை சொன்னால் நல்லது...

jose007
30-05-2006, 05:21 PM
நோ மேன்ஸ் லேண்ட் (No man's Land)
இயக்குநர்: டேனிஸ் டேனோவிக்
நாடு: செர்பிய - குரோசியன்
ஆண்டு: 2001

நான் இந்த படத்தை.. திருச்சியில் உள்ள.. ஒரு திரைப்பட ரசிக குழுவினருடன் பார்த்தேன்.... இந்த படம்.. அயல்நாட்டு திரைப்பட பிரிவில் ஆஸ்க்கர் விருது பெற்றது... இந்திய தயாரிப்பான லகான்.. இப்படத்தோடு போட்டியிட்டு..தோற்றது.....

pradeepkt
30-05-2006, 06:48 PM
சில்ரன் ஆஃப் ஹெவன் படத்தை இப்போதுதான் பார்த்தேன்.
இயல்புன்னா அப்படி ஒரு இயல்பு. நிஜ வாழ்க்கை கண் முன்னே விரிகிறது. படம் முடிஞ்சு ரொம்ப நேரம் விட்டத்தைப் பாத்துக்கிட்டே உட்கார்ந்திருந்தேன்னு எங்கம்மா சொன்னாங்க.

gragavan
01-06-2006, 03:50 AM
A Passage To India சென்ற வாரம் பார்த்தேன். மிகவும் அற்புதமான படம். பிரிட்டிஷ் ராஜில் நடக்கும் கதை. மிகவும் அழகாகவும் இயல்பாகவும் பின்னப்பட்டிருந்தது. நிச்சயமாக எல்லாரும் ஒருமுறையாவது இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.

pradeepkt
01-06-2006, 11:32 AM
ஐயா,
டிவிடி...

மயூ
04-06-2006, 07:27 AM
ஐயா,
டிவிடி...
டிவிடி கடைக்கு போயி வாங்கிறது. இது கூட சொல்லித்தர இந்த மயூரேசன் தான் வரோணுமா? :D

இளசு
07-08-2007, 10:36 PM
ராம் இன்று மன்றம் வந்ததைச் சொல்கிறது வருகைப்பட்டியல்..

நலமா ராம்?

இங்கே உன்னை அடிக்கடி மேற்கோள் காட்டி எத்தனை பதிவுகள்..

அதில் அண்மையில் மன்றம் சேர்ந்து, உன்னை உன் பதிவுகள் மூலம் மட்டுமே அறிந்தவர் அநேகம்..

பணிச்சூழல் சரியாக இருப்பின், அடிக்கடி மன்றம் வரவும்..

அப்படி நிகழ்ந்தால், இங்கே தோன்றும் மகிழ்ச்சியை அளக்க முடியாது ராம்..

தளபதி
08-08-2007, 04:17 AM
நண்பரே!! ராம். உங்கள் எழுத்தின் வடிவில் இந்த படங்களைப் பார்த்த உணர்வு.
மிக தெளிவான விவரங்கள். அழகான ஆரம்பம், தடையில்லாத வடிவாக்கம். உங்கள் உள்ளும் ஒரு கதை சொல்லும் கதை ஆசிரியர் உண்டு என்பதுபோல் அலுங்காமல் கதை சொல்லும் பாணி.
ராம்!! உங்கள் பதிவுகள் மிகவும் ரசிக்கத்தக்கது.
நன்றி. வாழ்த்துக்கள்.

இதயம்
08-08-2007, 04:54 AM
ரஷோமென் (Roshoman)

இயக்குநர் : அகிரா குரோசோவா
நாடு : ஜப்பான்

உலகின் தலை சிறந்த இயக்குநர் என்று மதிக்கப்படும் இவர் இந்தத் திரைப்படத்திற்குப் பிறகுதான் புகழ்பெற்றார். தனது கதை சொல்லும் உத்தி, எடிட்டிங் ஆகியவற்றின் மூலம் உலகை ஜப்பான் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர் இவர். இவரது பிற படங்களில் மிகவும் புகழ் பெற்றது
செவன் சாமுராய்ஸ் (Seven Samurais).

காட்டு வழிப் பயணப்படும் ஒரு கணவன் மனைவி இரவு நெருங்க ஒரு இடத்தில் தங்குகின்றனர். இரவில் கணவனை அடித்து விட்டு மனைவியைக் கற்பழித்துக் கொன்று விடுகிறான் திருடன் ஒருவன். இது கதை. நடந்த நிகழ்வை தனது பார்வை மூலம் சொல்கிறான் கணவன். இதே நிகழ்விற்குக் காரணமாக இருந்த திருடனும் தனது பார்வையில் சொல்கிறான். இறுதியாக பாதிக்கப்பட்ட மனைவியின் ஆவி வந்து இதே கதையை தனது பார்வையில் சொல்கிறது. மூவரின் கதை கூறலுக்குப் பிறகு முடிவை ரசிகர்களிம் விட்டு விடுகிறார் இயக்குநர். இதில் எவர் கூறியது உண்மை, பொய் என்பது பற்றிய கவலைகள் ஏதுமின்றி ஒரு திறந்த முடிவிற்கு கதையை விட்டு விடுகிறார். (இதன் திரைக்கதை தழுவல்தான் விருமாண்டி)

இந்தப் படம் வெளி வந்த ஆண்டு 1950களின் ஆரம்பம்.

ஒரு படம் எழுத்தாளனது மேஜையிலும் எடிட்டிங் மேஜையிலும்தான் உருவாக்கப்படுகிறது என்று திட்டவட்டமாக நம்பும் உலகின் தலை சிறந்த இயக்குநர் இவர்.

அகிரா குரோசோவா (AKIRA KUROSAWA)... சினிமாவைப்பற்றி பேசும் போது இந்த பெயரை உச்சரிப்பதை தவிர்க்க முடியாது. ஜப்பானியரான இவர் ஜப்பானின் தலை சிறந்த திரைப்பட இயக்குனர் மட்டுமல்ல, உலக திரைப்பட இயக்குநர்களில் மிக சிறந்தவர். மிகச்சிறந்த படைப்பாளி, சிந்தனாவாதி. இவர் கையாண்ட அல்லது கண்டு பிடித்த யுக்திகளை தான் நம்முடைய கோடம்பாக்கம் முதற்கொண்டு அனைத்து திரைப்பட உலகமும் பயன்படுத்தி காலம் தள்ளுகிறது. இன்றைய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத விஷயமாகி போன ஃப்ளாஷ்பேக் எனப்படும் கதை உத்தியை திரைப்பட உலகிற்கு கண்டுபிடித்தவர் இவரே..!

அதே போல் ஒரே சம்பவத்தை வேறு சில பாத்திரங்களின் பார்வையில் சொல்லும் வித்தியாச உத்தியும் இவரால் கண்டுபிடிக்கப்பட்டதே..! இந்த உத்தியை தான் தமிழ் சினிமாவில் முதல் முதலில் கமல் விருமாண்டி படத்தில் உபயோகப்படுத்தினார். விருமாண்டியான கமலும், வில்லனான பசுபதியும் ஜெயிலில் இருந்து கொண்டு நடந்த நிகழ்வை அவர்கள் பார்வையில் சொல்வார்கள். அதே கதை நிகழ்வு, காட்சிகளும் இருவரின் பார்வையிலும் வரும். ஆனால், யார் சொல்கிறாரோ அவர் பக்கம் தான் நியாயம் உள்ளது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும். மிகச்சிறப்பான திரைப்பட உத்தி இது. இது போன்ற காட்சிகள் அமைப்பது எளிதானதல்ல. ஆனால், இரசிகர்களை மிகவும் கவரும் விஷயம் இது.

இப்படிப்பட்ட தலை சிறந்த இயக்குநர் அகிரா குரோசாவாவின் வாழ்க்கை வரலாறு சமீபத்தில் வெளியாகி விற்பனையில் சக்கை போடு போட்டது. அந்த புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறார் படைப்பாளி இளையபாரதி. அந்த புத்தகத்தில் அகிராவை பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் சுவையான குறிப்புகள் சில:

1. இவர் சிறிய வயதில் மனநோயாளியாக இருந்திருக்கிறார்.
2. அவர் ஒரு ஓவியரும் கூட.
3. இவர் திருமணம் செய்தது ஒரு நடிகையை.
4. இவருடைய seven samurai படம் உலகப்புகழ் பெற்றது.
5. அவருடைய சினிமா சித்தாந்தங்கள் மிக வித்தியாசமானவை. அதில் ஒன்று..
"நீ எவ்வளவு சிரமப்பட்டு ஒரு காட்சியை எடுத்திருந்தாலும், அது பார்ப்பவருக்கு மகிழ்ச்சியை தராதென்றால், அதை கண்டிப்பாக வெட்டி விடு. படத்தொகுப்பு அறையில் நீ ஒரு கொலைகாரனாய் இரு."
6. இவரின் மானசீக குரு யசாமோன்.

rambal
09-08-2007, 04:47 PM
பருத்தி வீரன்
- பாலை நில மரபின் நீட்சி


இந்தியக் கலாச்சாரத்திற்கென்று பொதுவான கூறுகள் இருந்தாலும், பல்வேறு மொழிகளின் கலாச்சாரங்களை உள்ளடக்கியத் தொகுப்பாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பட்ட அடையாளமும் அவற்றிற்கென்ற தனிப்பட்ட பிராந்தியக் கலாச்சாரமும் இதில் சிறப்பம்சமாகும். இன்னும் பார்த்தால் ஒவ்வொரு பிராந்தியத்திலும், அங்கு வாழும் இனத்து மக்களிடையிலான கலாச்சாரம் என்பது வேறு வேறாக இருக்கும். இப்படி உப கலாச்சாரம், பிராந்தியக் கலாச்சாரம், மொழி வழியிலான மரபு இவைகளின் ஒட்டு மொத்தத் தொகுப்பாகத்தான் இந்தியாவின் கலாச்சாரம் என்பது அடையாளப்படுத்தப்படுகிறது.

தமிழ் மொழிக்கென்று ஒரு நீண்ட மரபும், பல கூறுகள் கொண்ட கலாச்சாரமும் தொடர்ந்து இருந்து வருகிறது. தமிழ் மரபில் காணக்கிடைக்கும் ஐவகை நிலங்கள், ஒவ்வொரு நிலத்திற்குமான வரைமுறைகள், பாடு பொருள்கள், வாழ்நிலை வடிவங்கள், மனித வாழ்வின் வாழ்வியல் முறைகள்.. இப்படி தொகுத்துக் கொண்டே போகலாம். இத்தனை வரைமுறைகளோடு தமிழ் மரபென்பது செழிப்பான செவ்வியல் மரபாக இருக்கிறது.

செவ்வியல் மரபாக மட்டுமல்லாது இன்றைய காலகட்டத்தில் நாட்டார் மரபாக நீட்சி அடைந்த சில நிலங்கள் உண்டு. அதில் மிக மிக முக்கியமானது பாலை. குறிஞ்சியும், முல்லையும் அருகி வரும் சூழலில் இங்கு இருக்கும் நிலங்களனைத்தும் பாலையாக மாறிக் கொண்டிருக்கும் கால கட்டம் இது. பாலை என்பது உண்மையில் பாலைவனமல்ல. எங்கெல்லாம் மழைக்காக வான் பார்த்து மனிதன் நிற்கிறானோ அதெல்லாம் பாலைதான். தமிழ்நாட்டின் வரைவியலில் விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, இராமநாதபுரம், அருப்புக்கோட்டை, சிவகாசி முதலான பகுதிகள் பாலை நில வரைமுறைகளுக்குள் அடங்கும் இடங்கள். பாலைக்கென்று சில சிறப்பியல்புகள் உண்டு. மற்ற நில மாந்தரெல்லாம் இன்றைய காலகட்டத்தின் சட்டதிட்டங்களுக்கும் அடங்கிப் போகும் வாழ்க்கை முறை வாய்க்கப் பெற்றவர்கள். ஆனால், பாலை நில மனிதர்களுக்கு அது இல்லை. கொலையும், கொள்ளையும் அவர்களின் தொழிலாக வாய்க்கப்பெற்றது அவர்கள் விரும்பித் தெரிவு செய்ததில்லை. மரபின் தொடர்ச்சியாய் அவர்களை வந்தடைந்தது. எந்தக் காலகட்டத்திலும் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத வாழ்வியல் அவர்களுடையது. அவர்களின் திருமண முறை என்பது களவு அல்லது உடன்போதல். இந்தத் தொன்மையும் தமிழ் மரபில் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத மரபாயினும் சமீப காலங்களில் இத்தகைய மணங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்தப் பாலை நில மரபு இன்று தமிழகமெங்கும் பரவிக் கொண்டு இருக்கிறது. நீண்ட கலாச்சாரத்தின் நீட்சியாய் பாலை மரபு மட்டும் எஞ்சி நிற்க மற்ற மரபுகளெல்லாம் அருகி வருகின்றன. இந்தப் பிண்ணனியில் பருத்தி வீரனைப் பார்த்தால் மட்டுமே அதன் அழுத்தம் புரியும்.

இருத்தலுக்கும் இறத்தலுக்கும் இடையில் அல்லாடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை முறை என்பது தமிழ்த் திரைக்குப் பழையதென்றாலும், மற்ற திரைப்படங்கள் மிகு கற்பனைகளாலும் அல்லது நாயக வழிபாட்டில் நியாயமானவையாகவும் நிலைநாட்டப்பட்டு நீர்த்துப் போய் ஒரு வித சலிப்பை ஏற்படுத்திவிட்ட காலகட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் எதார்த்தம் கெடாதிருக்கும் பருத்திவீரன் தமிழ் மரபின் நீட்சியாய் இருக்கிறது. குற்றம் புரிவதை (இன்றைய அரசியலமைப்பின் அதிகாரம் மூலம் நிலைநாட்டப்பட்ட சட்டத்தின் முன்) வாழ்க்கையாகவும், மிகப் பெரிய குற்றம் செய்து அதன் மூலம் தன் புகழ் பரவ வேண்டும் என்பதை வாழ்வின் இலக்காகவும் கொண்டு இயங்கி வரும் நாயகன் தமிழ்த் திரைக்குப் புதிது. அவன் செய்யும் குற்றங்கள் என்பது அவனுடைய மரபார்ந்த வாழ்வின் வழி அவனுக்குக் கிடைக்கப் பெற்றது. ஒரு வேளை அவன் குற்றம் ஏதும் செய்யாதிருந்தால்தான் இயல்பிற்கு மாறான நடவடிக்கையாக இருந்திருக்கும். எந்த வேலைக்கும் போகாமல் பருத்தி வீரனின் சித்தப்பாவாக வரும் செவ்வாழை மாதிரியான மனிதர்கள் பாலை நிலமெங்கும் காணக்கிடைப்பார்கள். பருத்தி வீரனும் இருபதாண்டுகள் கழித்து செவ்வாழையாக மாறுவதற்குண்டான சாத்தியக்கூறுகள் அதிகம். செவ்வாழையுடனும், பருத்தி வீரனுடனும் கூடவே திரிந்து கொண்டிருக்கும் சிறுவனும் அநேகமாக அவர்களைப் போல் வரக்கூடும். ஏனெனில், பருத்திவீரன் என்பது அந்தப் பிராந்திய மக்களின் ஒரு வாழ்வியல் முறை.

சிறுவயதில் தன் உயிரைக் காப்பாற்றியதற்காக பருத்தி வீரனைக் காதலிக்கும் முத்தழகுதான் படத்தின் முக்கிய பாத்திரம். அந்தக் காதல் என்பது உயிரைக் காத்ததற்காக செய்யும் நன்றிக் கடன் என்பதையும்
மீறியது. மனதளவில், பருத்தி வீரனின் மனையாளாகவே அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். பாலை நிலம் களவு நெறியைக் கடைப்பிடித்தாலும் அதற்கென்ற கற்பு நெறியை தன்னகத்தேக் கொண்டுள்ளது.
கட்டாந்தரையாகக் கிடக்கும் பருத்தி வீரனின் மனதிற்குள் மெள்ள மெள்ளக் காதலைத் தளிர்க்கச் செய்கிறாள். களை அகற்றுகிறாள். பண்பட்ட நிலமாக்குகிறாள். தன்னுடைய எளிமையான அன்பின் மூலம் அவனை மனிதனாக்குகிறாள். ஒரு வகையில் சொல்வதென்றால், எல்லா மதங்களும் வலியுறுத்துவது எளிமையான அன்பையும் சக உயிரை நேசித்தலை மட்டும்தான். முத்தழகு மாதிரியான பெண்களால்தான் இந்த உலகம் இன்னும் சீர்கெடாமல் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தன் இருப்பைப் பற்றி மட்டுமே கவனம் கொள்ளும் பாலை நில மனிதனாக முத்தழகுவின் அப்பா. இறுகிப்போன கட்டாந்தரை மனிதனாக வலம் வருகிறார். தன் மகள் தன் முன் சாவதற்கு முயற்சித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கையில் மட்டுமே தான் முன் செய்த தவறுகள் மனதின் அடியாழத்திலிருந்து மேலெழும்புகின்றன. நீருக்கு நெகிழ்ந்து கொடுக்கும் கட்டாந்தரை அவர். செய்த தப்பிலிருந்து தற்காலிக விடுதலை வாங்கி வரும் நாயகனிடம் முத்தழகுக் குமிறிக் குமிறி அழும் இடத்தில் கட்டாந்தரைக்கு நடுவில் சேற்று நீர் இருப்பது அழகான படிமம். இதன் தொடர்ச்சியாய் செவ்வாழையிடம் அவள் கேட்கும் கேள்விகளுக்குப் பின் பருத்திவீரனோடு சண்டையாகிறது. அதன் பின் செவ்வாழை தனித்து நடந்து வரும் இடம் ஒரு கவிதை. கட்டாந்தரைகள் நெகிழ்ந்து கொடுக்கின்றன கண்ணீருக்கு.
எல்லோர் எதிர்ப்பையும் மீறி தான் விரும்பிய பருத்திவீரனோடு வாழ்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி அவன் கைப்பிடித்து ஊர் விட்டும் வெளியேறும் இடம், பாலை நில களவு (அல்லது ) உடன் போதல்.

பாலை நிலத்தின் மீட்சியாய் படம் முழுக்கக் காட்சிகள் அமைந்திருந்தாலும் இதில் கவனிக்கப்படவேண்டிய முக்கிய அம்சம் நாட்டார் கலைகள். படம் நையாண்டி மேளப் பாட்டோடுதான் ஆரம்பிக்கிறது.
படம் நெடுகிலும் ஆங்காங்கு உருமி மேளமும் கொட்டும் பரவிக் கிடக்கின்றன. பருத்திவீரன் தற்காலிக விடுதலயினால் மிகுந்த சந்தோசமாக இருக்கிறான். எந்த அளவு இருக்கிறான் என்றால் நையாண்டி மேளக்காரர்களுடன் ஆட்டம் போடுமளவு. கோவில் திருவிழாவில் படம் ஆரம்பிக்கிறது. மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். நையாண்டி மேளம் முழங்க மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள்.
நையாண்டி மேளம் என்பது அந்தப் பிராந்திய மக்களின் சந்தோசத்தின் அளவுகோலாக ஆகி இருப்பது அழகான படிமம்.

உலகமயமாக்கலைத் தொடர்ந்து ஒவ்வொரு தேசமும் தனது கலாச்சார அடையாளங்களை இழந்து வரும் நிலையில், தன் பிராந்தியக் கலாச்சாரத்தின் மீது தீராத பற்று கொண்டு அதை படமாக்கியதற்காக இயக்குநருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

ஆதவா
09-08-2007, 05:41 PM
பருத்திவீரன்... பாலை நிலக் கலாச்சாரம்..

படிப்பதற்கு வியப்பு... எப்படி யோசித்தீர்கள்.... வியப்பாக இருக்கிறது.

பருத்திவீரனை படமாக கண்டவர்களுக்கு மத்தியில் அதை இலக்கியத்திற்கு உட்படுத்தி ஆராய்ந்த உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.. உங்கள் வரிகள் தேர்ந்த எழுத்தாளனை சுட்டுகிறது....(இப்போது புரிகிறது,. மன்றம் ஏன் உங்களை இன்னும் மறக்காமல் அடிக்கடி நினைவுபடுத்தியது என்று...)

இலக்கியப் பதிவு..... பிரமாதம்..

இளசு
09-08-2007, 06:40 PM
வருக ராம்...

இந்த மீள்வருகை எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது..

வாழ்க்கை நதி அடிப்படைத்தேவை வறட்சித்தேடல்களால்
அற்றற்று ஓடினாலும் நதி நதிதான்!

அணை திறந்த காலத்து வைகையாகவே இப்போது உன்னைக்காண்கிறேன்..


கரையோரம் நிற்கும் சிறுவன் மனம்போல் என் மனமெங்கும் மகிழ்ச்சி..

இந்தப்படத்தை இப்படி ஒரு கண்ணோட்டத்தில் அலசிய இக்கட்டுரை
இயக்குநர் அமீருக்கு ஒரு மிகப்பரிய பாராட்டுப்பத்திரம்..

ஆதவா சொன்னது போல் இந்தக்கோணத்தில் பார்க்கும் பார்வை
உனக்கே உரியது..


செம்மண்ணும் பனையும் மட்டும் இருக்கும் வறண்ட பூமியில்
புலம் பெயர்ந்து படிப்பு, தொழில் கற்று முன்னேறலாம்..

இல்லை ஈன்ற மண்ணிலேயே ஊறி..
செவ்வாழை,பருத்திவீரன்களாய் வாழலாம்!
மரபும் மண்ணும் ஊட்டிய மனிதக்குணங்களை அணுகிய பார்வைக்கு பாராட்டுகள்!

இளசு
30-08-2007, 05:32 AM
நண்பர்களுக்கு ஒரு கூடுதல் செய்தி −

ராமின் இந்த பருத்திவீரன் பற்றிய கட்டுரை
கேன்ஸ் திரைப்படவிழாவில் இப்படத்துக்கு முன்னுரையாக வழங்க
படக்குழு கேட்டுக்கொண்டதற்கிணங்கி நம் ராம்பால் எழுதித்தந்தது!

சிவா.ஜி
30-08-2007, 07:35 AM
படம் பார்த்து நெகிழ்ந்தது அன்றென்றால் ராம்பால் அவர்களின் கட்டுரைப் படித்து நல்லதொரு படத்துக்குத்தான் ந*ம் மனம் நெகிழ்ந்திருக்கிறது என்று பெருமிதம் தோன்றுகிறது இன்று.ஒரு திரைப்படத்தை இலக்கியமாக்கவும் முடியுமென இந்த எழுத்து நிரூபனமாக்குகிறது.கேன்ஸ் திரைப்பட விழாவில் வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது கூடுதல் மகிழ்வைத்தருகிறது. நம் மன்றத்தின் உறவின் வரிகளெனும்போது இரட்டிப்பு மகிழ்ச்சி.

தங்கவேல்
31-08-2007, 03:24 AM
படம் ஒரு வாழ்க்கைமுறையினை மனம் நெகிழும்படி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு பழைய நினைவாக இருக்க வேண்டும். மாறிவரும் சூழ்னிலைக்கு ஏற்ப மக்கள் மாறித்தான் ஆகவேண்டும். இல்லையெனில் தனித்து விடப்படுவர்...

இளசு
15-09-2007, 09:11 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=272232#post272232

லதா அவர்களின் மேற்கண்ட பதிவில்
ராமின் பாலைநில வாழ்க்கை பற்றிய அதே கருத்தைக் காணலாம்..

jpl
16-09-2007, 12:25 AM
உண்மைதான் இளசு மரபு சார்ந்த வாழ்வியல் நெறியினையே கடைபிடிக்கின்றோம்.
தமிழர்தம் புறத்தில் வீரம் என்று போரியல் தனித்து இலக்கியமாகப் படைக்கப் பட்டாலும்,பாலையின் வழிப்பறி,கொள்ளை,சூறையாடல் என்பன
வீரமாக கொள்ளபடவில்லை எனினும்,வரட்சியால் வாழ்க்கை நெறியாக கொள்ளப்பட்டது.
பருத்தி வீரனின் திறாய்வு திறம் வளம் வாய்ந்தது.

காணக் கொடுத்தமைக்கு நன்றி உரைக்கின்றேன் இளசு.

கூத்தரசன்
07-08-2010, 10:54 AM
வணக்கம்,

ராம்பால் -தாங்கள் படங்களை அறிமுகப்படுத்தும் பாங்கு அருமை. மேலும் பல்வேறு படங்களை இங்கே அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்.

கூத்தன்