PDA

View Full Version : வானவில்லை வகுத்தெடுத்து (அ.மை. -11)



இளசு
06-11-2005, 10:27 PM
வானவில்லை வகுத்தெடுத்து

(லென்ஸ் - ஒளிவிலகல் - நிறப்பிரிகை)


அல் -ஹய்தம்
(காலம்: கி.பி -965 - 1039 ஆண்டுகள்)

அறிவியல் மைல்கற்கள் - 11

பத்தாம் பாகம் - இருமேதைகள் இங்கே -

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=133444#post133444

______________________________________________________________________



மழையில் துவைத்த புடவை
மடித்து வைக்க காத்திருக்கிறது
வானவில்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5651&page=2

-------------------------------------------------------------


ஆப்டிகல் என்னும் லென்ஸ் பற்றிய நம் புரிதல் -
நம் எல்லாருக்கும் கவிதையாய் பிடித்துப்போன வானவில்லோடு
நெருங்கிய தொடர்புடையது.
ஆரம்பத்தில் அரிஸ்ட்டாடில் சொன்னார் -

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5815

மேகம் என்பது ஒரு பெரிய லென்ஸ்.
அது 'பிரதிபலிக்கும்' சூரிய ஒளியே வானவில்.

வெறும் 'பிரதிபலிப்பு' - Reflection- எப்படி வெண்ணொளியை
ஏழுவண்ண ஜாலமாக காட்டுகிறது என அந்த பேரறிஞரால்
விளக்கமுடியவில்லை.
( சூரியதேவனுக்கு ஏழு குதிரைகள் ரதத்தில் பூட்டிய
நம் இதிகாச எழுத்தாளர்கள் - ஒளிவிலகல் பற்றி
அறிந்தவர்களா எனத் தெரியவில்லை.)

அடுத்து வந்தவர் டாலமி (கிபி.90-168).
ஓர் ஊடகத்தில் இருந்து இன்னோர் ஊடகத்துக்குள் பாயும்போது
ஒளிக்கற்றை ' வளைகிறது' -என நீர், வாயுக்கள் வைத்து
நிரூபித்தார். ஆனால் தத்துவ விஞ்ஞானியான டாலமி
வானவில்லை ஒட்டி இந்தச் சிந்தனையைப் பாய்ச்சவில்லை.

தன் அழகைப்பற்றிய புதிர் அறியாமல் ரசிகர்கள் விழிப்பதை எண்ணி
அவ்வப்போது வானவில் ரசித்துச் சிரித்தது-
அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு.

கி.பி. 1025-ல் அரபு இயற்பியலாளர் அல்-ஹய்தம் 'Treasury of Optics'
என்னும் ஒப்பற்ற நூலை எழுதினார்.
லென்ஸ்கள், மனிதனின் விழிகள் - இவற்றின் கட்டமைப்பு, செயல்பாடுகள்,
டெலஸ்கோப்( தொலைநோக்கி)களில் பயன்படும் சிறப்பு ஆடிகள் (parabolic mirrors)
ஒளிவிலகல் ( Refraction) -
இவற்றை அழகாய்த் தெளிவாக்கிய அறிவாளர் அல்-ஹய்தம்.
ஒளி திண்மையை ஊடும்போது ( காற்றிலிருந்து நீருக்கு, நீரிலிருந்து பனிக்கட்டிக்கு)
அதன் வேகம் குறையும் என்ற உண்மையைக் கண்டுசொன்னவரும் இவரே.
ஒளி விலகலை விளக்கியவர் இவர் .ஆனால் அல்-ஹய்தமும் வானவில்லை ஒளியின்
' பிரதிபலிப்பு' என்ற அரிஸ்டாட்டில் சொன்ன அதே கருத்தையே சொன்னார்.

அதன் பின் வந்த ஜெர்மன் பேராசிரியர் தியோடரிக் என்பவர்தாம், 1304ம் ஆண்டில்
வானவில்லின் பிறப்பு ரகசியத்தை உடைத்தவர்.
உருண்டையான குடுவையில் நீர் நிரப்பினார் - அது மேகத்துளிகளுக்கு ஈடு.
ஒளியைப் பாய்ச்சினார். ஜெயோமெட்ரி விதிகள் கொண்டு கணக்கு போட்டார்.
1) முதலில் நீர்த்துளியில் ஒளிவிலகல் நிகழ்கிறது.
2) விலகிய ஒளிக்கற்றை துளிக்கு உள்ளேயே பிரதிபலித்துக்கொள்கிறது.
3) பிரதிபலிக்கப்பட்ட ஒளி மீண்டும் ஒளிவிலகல் நிகழ்ந்து துளியைவிட்டு வெளிவருகிறது.
4) வானவில்லின் மையத்துக்கும் வர்ணவட்டத்துக்கும் 42 டிகிரி கோணம் உள்ளது.
5) ஒளி விலகல்களே நிறப்பிரிகைக்குக் காரணம்.

இத்தனைத் துல்லியமாய் வானவில்லின் வர்ணப் பிறப்பை விவரித்த
தியோடரிக் - சில சமயம் குட்டியாய் தோன்றும் இரண்டாம் வானவில்லின்
காரணம் என்ன என்று சொல்லவில்லை.

அதைச் சொல்ல இன்னும் நூறாண்டு ஆனது.
சொன்னவர் - பிரான்ஸின் ரெனே டெஸ்கார்டஸ்.
விளக்கம் - நீர்த்துளிக்குள் ஒளி இருமுறை பிரதிபலித்துக்கொள்வது.

அறிவியலில் இதுபோன்ற நிகழ்வுகள் சகஜம்.
ஒருவர் கோடு போடுவார். எதோ ஒரு தேசத்தில் இன்னொருவர் அதை வைத்து ரோடு போடுவார்.
வானவில்லை முதலில் ஆராய்ந்தவர் - அரிஸ்ட்டாடில்.
ஒளிவிலகலை முதலில் சொன்னவர் - டாலமி.
லென்ஸ்கள், விழிகளின் சூட்சுமம் சொன்னவர் - அல்-ஹய்தம்.
முழு ரகசியம் உடைத்தவர் - தியோடரிக்.
பின்னூட்டம் இட்டவர் - டெஸ்கார்டஸ்.

ஐவரில் யாரிந்த மைல்கல் நாயகர்?
என் தேர்வு - அல்-ஹய்தம்.
ஆடிகள் கண்டு சொன்ன அல்-ஹய்தம்மையே
இந்த மைல்கல்லின் நாயகராய்க் கொண்டாடுவோம்.

பரஞ்சோதி
07-11-2005, 03:45 AM
ஆகா, தெரியாத மேதைகள் எத்தனையோ பேர் இருக்கிறார்களே!.

அண்ணா, எங்க அறிவுக்கு நல்லா தீனி போடுறீங்க.

அல்-ஹய்தம் மீது எனக்கு பற்று ஏற்ப்பட்டிருக்கிறது. அரபு நாடுகளிலும் கூட மிகச்சிறந்த அறிஞர்கள் இருந்ததை படிக்க இனிமையாக இருக்கிறது.

gragavan
07-11-2005, 07:20 AM
ஆகா இதென்ன தகவல் களஞ்சியமா! ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு நாட்டில் ஏற்பட்ட நல்ல வளர்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் தெரிந்து கொள்வது நன்றாக உள்ளது. இன்னும் தொடருங்கள்.

பிறகு ஒரு சின்ன கருத்து. வாரம் இரண்டு நாட்கள் என்று முறை வைத்துக் கொடுத்தால் அன்றன்றைக்கு வந்து பார்க்கலாம். இல்லையென்றால் சமயத்தில் சிலவற்றை காணாமல் விட்டு விடுகிறோம். கொஞ்சம் ஆவண செய்யுங்கள்.

பாரதி
07-11-2005, 08:32 PM
மிக்க நன்றி அண்ணா. தொடரட்டும் உங்களின் உன்னத பணி.

இளசு
21-11-2005, 06:57 AM
நன்றி - பரம்ஸ், இராகவன், பாரதி..



பிறகு ஒரு சின்ன கருத்து. வாரம் இரண்டு நாட்கள் என்று முறை வைத்துக் கொடுத்தால் அன்றன்றைக்கு வந்து பார்க்கலாம். இல்லையென்றால் சமயத்தில் சிலவற்றை காணாமல் விட்டு விடுகிறோம். கொஞ்சம் ஆவன செய்யுங்கள்.


நன்றி இராகவன்.
இப்படி செய்ய முடியுமா என்று யோசித்தேன்.
திங்கள் தோறும் தரலாம் என்று ஒரு முடிவு.
ஆனால்.....-
சனி, ஞாயிறு -பணியில் மூழ்கிட
இன்று திங்கள்!

என்ன செய்வது இராகவன்? கிடைக்கும் ஓய்வில் மட்டுமே தட்டச்ச இயலும். அதனால் பதிவுகள் ஓர் ஒழுங்கின்றி உதிரும். பொறுத்தருள்க!

gragavan
21-11-2005, 09:15 AM
ஆகா...அப்படிச் சொல்லாதீர்கள் இளசு. உங்களுக்கு முடிந்த பொழுது போடுங்கள். ஒரு வழமையில் வந்தால் எங்களுக்குப் படிக்க வசதியாக இருக்கும் என்று எண்ணி மட்டுமே சொன்னேன். திங்கள் வந்தால் இளசு அண்ணனின் பதிவு என்று தேடி வருவதற்காகச் சொன்னேன். உங்களுக்கு முடிந்த பொழுது பதிவிடுங்கள்.

aren
29-12-2005, 01:43 PM
அழகான பதிவு. அரேபியர்களும் ஒரு காலத்தில் அறிவியலில் ஜொலித்தார்கள் என்று நினைக்கும்பொழுது மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது.

இப்பொழுது இருக்கும் மேற்கத்தியர்களின் வளர்ச்சி அவர்களிடம் இருக்கும் பணபலத்தால் வருகிறது என்றே தோன்றுகிறது. நம்மிடமும் பணம் நிறைய இருந்தால், நாமும் அறிவியல் வளர்ச்சிக்குச் செலவிடலாம், அப்படிச் செய்தால் நிறைய கண்டுபிடிப்புகள் மூன்றாவது உலகத்திலிருந்தும் வரும் என்பது நிச்சயம்.

நன்றி வணக்கம்
ஆரென்