PDA

View Full Version : விளிம்பின் நுனியில்.. எஸ். ராமகிருஷ்ணனின் &#rambal
04-11-2005, 04:15 PM
விளிம்பின் நுனியில்.. எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி.. பொருளற்ற வாழ்வும் மரணமும்...

" கடவுள் விடுகின்ற மூச்சைப் போல காற்று வீசும்
கரிசல் வெளி.. "
தேவதச்சன்.

கரிசல் பூமி வெயில் காலங்களில் பாளம் பாளமாய் வெடித்திருக்கும். அதே சமயம் மழை பெய்யும் காலங்களில் குழைந்து சகதியாயும் இருக்கும். இந்த மண்ணின் வாகைப் போலவே அங்கு வாழும் மனிதர்களின் சுபாவமும் அமைந்திருக்கிறதோ என எண்ணியதுண்டு. இந்த எண்ணத்திற்கு மூன்று காரணங்கள்.
1. என் பால்யம் கழிந்தது கரிசல் பூமியில்.
2. கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமமும், மக்களும் ஆகிய இரண்டு நாவல்களில் வரும் கரிசல் காடு. (இது பற்றி விரைவில்)
3. எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி..

குருதியின் ஓட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் வரைதான் மனிதனின் ஆசாபாசமெல்லாம். அது ஓட்டத்தை நிறுத்திவிட்டால்.. நெடுங்குருதி என்பது ஒரு படிமம். வேம்பலையின் மீது படர்ந்திருப்பது யாராலும் தீர்க்க முடியாத சாபத்தின் துர்க்கனவு. தலைமுறைகளாக இக்கனவைக் கடந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாதைகளும் ஏக்கங்களும் நிலை கொள்ள முடியாத
தத்தளிப்புகளும் ஆசாபாசங்களின் இருளும் வெளிச்சமும் இந்நாவலில் முடிவற்ற குருதிப்பெருக்காகின்றன. பொருளற்ற வாழ்வும் மரணமும் தன் வசியக்குரலால் வேம்பலையை நோக்கி மனிதர்களை அழைத்துக் கொண்டே இருக்கிறது. ஒரு பிரம்மாண்டமான கனவின் மீது அறியப்படாத எதார்த்தம் ஒன்றை எழுதுகிறது எஸ். ராமகிருஷ்ணனின் இந்நாவல்.

நெடுங்குருதி முழுதும் எனது பால்யத்தை மீட்டெழுப்பியதாக இருக்கிறது. வெயில்தான் கதையின் நாயகனோ என எண்ணும் அளவு வெயில் அற்புதமான குறியீடாக வெளிப்பட்டிருக்கிறது.
என்பிலதனை வெயில் போலக்காயுமே என வள்ளுவரின் குறளோடு துவங்குகையிலேயே கதையின் களம் விரிவு கொள்ள ஆரம்பிக்கிறது.

காற்றில் சிக்கி எங்கெங்கோ அலைக்கழிக்கப்பட்டு பின் தட்டுத் தடுமாறி கிளம்பிய இடத்திற்கே வந்தடையும் தோணியாய்
நாவலில் வேம்பலை கிராமம் தன்னை நோக்கி மாந்தர்களை இழுத்துக் கொண்டே இருக்கிறது. அதன் ஈர்ப்பு மையம் நாவல் நெடுக விரிந்திருக்கிறது.

ஏன் இந்த வாழ்வு இவர்களுக்கு வாய்த்தது?
அப்படி என்ன நெடுங்குருதி?

தீராத ஓட்டத்திலும் சூடு ஆறவில்லையா நெடுங்குருதிக்கு... குருதியின் சூடு ஆறுமா?
கேள்விகளும் எழுகின்றன.. பதில்களும் முளைக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டில் இருந்து தூக்கில் தொங்குவது வரை வித விதமான மரணங்கள்.. நாவல் எங்கும் வெயிலின் உக்கிரத்தைப் போலவே குருதியின் மணமும் வீசுகிறது. பசிக்கு புறாவை சாப்பிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்ட பிராமண வீட்டுப் பெண்கள் முதல் லாட்ஜில் தூக்கு மாட்டி செத்துப் போன பெண் வரை கேள்விகளின் எல்லை விரிவடைந்து கொண்டே இருக்கிறது குருதியின் ஓயாத பயணம் போலும்..

இறுதியில் தொக்கி நிற்கும் ஒரே ஒரு கேள்வி..
வாழ்வென்பது என்ன?
வாழ்வென்பதே மாயம்தான்.. (தீராநதியில் வெளியான எஸ். ராமகிருஷ்ணனின் பேட்டியின் தலைபுப்பு)

அப்படி என்ன வாழ்வு மீது வெறுப்பு.. அதே சமயம் பிடிப்பு..
இவைகளுக்கூடாக அல்லாடிக் கொண்டிருக்கிறது நெடுங்குருதி..
ஆனால், இவைகள் மட்டுமா நெடுங்குருதி?

இவருடைய தேடல் பெரியது என்று நினைக்கிறேன்.. தேடலின் விளைவால் நெடுங்குருதியை எழுதி மனதில் இருக்கும்
பாரத்தை இறக்கி வைத்துவிட்டார்.. நாவலைப் படிப்பவருக்கோ பாரம் தாங்க முடியாது. நாவலைப் படித்து முடித்த இரண்டு நாட்கள் இது
என்ன? ஏன் இப்படி? எனும் கேள்விகள் ஓடிக் கொண்டே இருந்தன. விடைதான் காண இயலவில்லை.

நெடுங்குருதி முடிந்தவரை தேடலை விரிவுபடுத்தியிருக்கிறது.. சுருக்கியும் இருக்கிறது...

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
வெளியீடு: உயிர்மை
விலை : ரூ. 250

பாரதி
05-11-2005, 12:29 AM
மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் ராம். எனக்கு அந்தப்புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆவல் வந்திருக்கிறது. கி.ரா.வின் மண்ணிலிருந்து வந்திருப்பதால் நிச்சயம் இந்தப்புத்தகமும் மணக்கத்தான் செய்யும்.

தேடல்கள் எப்போதும் முடியாது..
நல்ல புத்தகங்களைத் தேடி..
நல்ல படங்களைத் தேடி..
நல்ல நண்பர்களைத் தேடி..
வாழ்க்கையின் பொருளைத் தேடி...!
இன்னமும் எத்தனை எத்தனையோ தேடி... ஓடி... தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது...

நண்பனும் அவர் படித்த புத்தகங்கள் குறித்து விமர்சனப்பார்வைகளைப் பதித்து வந்தார். நீங்கள் தொடர்ந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

மேலாண்மை பொன்னுச்சாமி, தனுஷ்கோடி இராமசாமி கதைகளை படித்திருக்கிறீர்களா ராம்?

இளசு
05-11-2005, 06:39 AM
அன்பு ராம்
விகடனில் அவ்வப்போது இவரது எழுத்துகளை வாசித்திருகிறேன். நல்ல அறிவாளி - சிந்தனை எழுப்பும் எழுத்துக்கு சொந்தக்காரர் என்ற அளவில் எண்ணம் உண்டு.
இக்கதை பற்றிய பாரவை - அவரின் படைப்புகளை இன்னும் ஆழ்ந்து படிக்கவேண்டும் என தூண்டுகிறது.

இத்தொடர் ஓர் அரிய பணி ராம்.
பாதிக்கப்பட்டதை - அடுத்தவர் பாதிக்கும் வண்ணம் சொல்லும் விதம் - எல்லாருக்கும் வாய்த்துவிடாது.

நல்ல படிப்பாளி -- நல்ல பகிர்ந்தாளி - நல்ல படைப்பாளி...
என உன் முப்பரிமாணங்கள்..

தொடர்ந்து கண்டு ரசித்தவன் என்ற வகையில்..
பாராட்டும் நன்றியும்.

பரஞ்சோதி
06-11-2005, 05:46 AM
ராம் அவர்களில் வரவால் இலக்கியப்பகுதி மீண்டும் துளிர் விட தொடங்கியிருக்கிறது.