PDA

View Full Version : விளிம்பின் நுனியில்.. பாவண்ணனின் கடலோர வீrambal
03-11-2005, 05:44 PM
விளிம்பின் நுனியில்.. பாவண்ணனின் கடலோர வீடு.. அன்பின் நிறம் சிகப்பு..
ஒரு பறவை காற்றில் தனது சிறகுகளை விரித்துப் பறக்கிறது. பறப்பதைப் பற்றி என்ன சொல்ல முடியும்? ஏன் எழுதுகிறாய் என்பது பற்றி மட்டும் ஆயிரம் கேள்விகள். சுவாசிப்பதைப் பற்றிச் சிலாகிக்க என்ன இருக்கிறது? ஒரு எழுத்தாளன் தன் பேனா கொண்டு உலகின் நீள, அகலங்களை அளந்து விட முயற்சி செய்கிறான். அதன் கன, பரிமாணங்களில் சிக்கித் திணறுகிறான். இறுதியில், ஏதோ ஒரு முகட்டின் விளிம்பில் தொக்கி நிற்கிறான். ஒரு கதை எழுதி முடிக்கப்பட்டு விட்டது. ஆம், ஒரு புதிய கதை, உலகுக்குக் கிடைத்து விட்டது. இப்படியாக எழுதி முடிக்கப்பட்ட கதைகள் காட்டாறாய் ஓடுகின்றன. அதன் மாயச் சுழலுக்குள் வாசகனை ஈர்க்கின்றன. கரைகள் இல்லாத காட்டாறு, அனைத்தையும் தனக்குள் சுவீகரித்து
ஓடிக் கொண்டிருக்கிறது. சிக்கிய மாயச் சுழலில் இருந்து வெளியேறுதல் சிரமம். கடலோர வீடு கொஞ்சம் அதிகமாகவே
சிரமம் கொடுத்துவிட்டது.

மரணத்திற்கெதிராக விதிக்கப்பட்ட வாழ்வின் இன்ப துன்பங்களுக்கூடாக அலைபாய்கிறது மனம். கணத்திற்கு கணம்
அருவியாய், தேங்கிய குட்டையாய், ஆர்ப்பரிக்கும் அலையாய், சாசுவதமாய் உறங்கும் ஆழ்கடலாய் எனப் பலவாயும் திரிந்து
கிடக்கிறது. கணங்களில் ஏற்படும் நிகழ்வுகளின் தன்மைவுகளுக்கேற்ப தன்னைச் சடுதியில் மாற்றிக் கொண்டு முடிவெடுக்கிறது. மனம் என்பது கட்டிவைக்கப்பட்ட பாசத்திற்குரிய பிராணி என மமதை கொள்ளும் பொழுதெல்லாம் தான் ஒரு மிருகம் என நினைவுறுத்துகிறது. வாழ்வின் கணக்குகளை எத்தனை முறைக் கூட்டினாலும் கழித்தாலும் விடைகள் மட்டும் கிட்டுவதில்லை. முடிவிலியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முயற்சிப்பவர் அதன் ஏதாவது ஒரு பின்னத்திற்குள் அடைக்கலம் புகலாம். இன்னும் இன்னும் எனத் தேடுதல் கொண்டவர்கள் மட்டுமே விடை கிட்டாது தொடர்ந்து பயணிக்கமுடியும். பாவண்ணன் ஒரு சலிப்பில்லாத பயணியாகவே எனக்குத் தோற்றமளிக்கிறார். ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு கோணத்தில் செலுத்தி முடிவிலியை வேறொரு கோணத்தில் தொடர்ந்திருக்கிறார்.

வாழ்க்கை ஏன் இத்தனை சிக்கல் நிறைந்ததாய் இருக்கிறது என்று தவிக்கும் மாந்தர்கள் ஒரு புறமும் வாழ்க்கையை எளிதில் நூல்க்கண்டுச் சிக்கலாக்கிக் கொள்ளும் மாந்தர்கள் மறுபுறமும் என இரு வகை மனிதர்கள் இந்தத் தொகுப்பெங்கும் காணக்கிடைக்கிறார்கள். சாவதற்கு நேரம் குறித்துக் காத்திருப்பவள், ஒரு குடும்பம் கொலை செய்யப்படுவதை பார்த்தவர், மூதாதையர் ஒருவர் செய்த செயலுக்கு விசனப்படுபவர், சொல்லின் வலி சொல்லில் சொல்ல இயலாததாய் துக்கித்திருப்பவர், மனம் ஒரு காடென்று தெரிந்தும் அதில் வீழ்ந்தவள், இவர்களுக்கெல்லாம் ஒரு படி மேலே போய் வள்ளாலாரின் 'வாடிய புல்லைக் காணும்போதெலாம்' எனும் பாடலுக்கேற்ப பறவைக்காக மனம் வாடியவர்.. கதை மாந்தர்கள் அத்தனை பேரும் வாழ்வின் மீதான, சகமனித இருப்பின் மீதான நம்பிக்கையை எடுத்தியம்பிக் கொண்டே இருக்கிறார்கள். இவர்களின் இச்செய்கைகளுக்கு காரணமான மாந்தர்களை அனுப்பிவைத்து வாழ்க்கை தனது புதிரைத் தொடர்ந்து சலிப்பில்லாமல் விளையாடிக் கொண்டே இருக்கிறது. முகட்டின் விளிம்பில் மனிதர்களை நிற்க வைத்து அவர்களது ஊசலாட்டத்தைக் கண்டு ரசிக்கிறது.

காரைக்குடிப் பகுதியில் நிறைய வீடுகள் உண்டு. தெருவை அடைத்துக் கட்டுதல் என்று சொல்வார்கள். வீட்டின் தலை வாசல் ஒரு தெருவில் ஆரம்பித்து புறவாசல் அடுத்த தெருவை அடையுமாறுக் கட்டி இருப்பார்கள். 1000 ஜன்னல்கள் வைத்த வீடு,
500 கதவுகள் கொண்ட வீடு.. இப்படி ஏகத்திற்கு நிறைய உண்டு. ஒவ்வொரு வீட்டையும் பார்க்கும் போது அது சாதாரண மனிதர்கள் வாழ்ந்த வீடு போல் தோன்றாது. என்றோ ஒரு காலத்தில் வாழ்ந்த சிலருடைய கனவுகள் விசுவரூபமெடுத்தது போல் இருக்கும். இன்று அவ்வீடுகளின் நிலை? ஒரு வயதான தாத்தாவும் பாட்டியும் இருப்பார்கள். அங்கிருக்கும் தேக்கு ஊஞ்சலில் காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பார்கள். வீடு, பாரம்பரியம்.. எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லாத நிலை. தங்கத்தில் செய்தாலும் கூண்டு கூண்டுதான். காலத்தின் விளிம்பில் வரும் வயதான பெண்மணியும் அப்படி ஒருவரே. துரித உணவு வாழ்க்கை முறையில் தாய்மை, அன்பு, பாசம் என்பதின் பொருட்கள் மிகவும் மலிந்துவிட்டன. இன்னும்
சில வருடம் கழித்து இந்த வார்த்தைகளை அகராதியில் தேட வேண்டி இருக்கும் என்று நினைக்கிறேன். நிறைய யோசிக்க வைத்த கதை. மொட்டை மாடியில் நின்று கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் வரைப் புலப்படும் கட்டிடங்களைக் காண்கையில் ஒவ்வொன்றும் தனித்தனித் தீவாகத்தான் தெரிகிறது. என்ன வகையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

வாழ்க்கை ஏன் மரணத்தை விட பயங்கரமானதாய் தோற்றமளிக்கிறது? கடிக்க வரும் நாயாய் துரத்திக் கொண்டே
இருக்கிறது? எதிர் கொள்ள முடியாத மனம் பேதலிக்கிறது. மரணம் ஒரு தீர்வென அனுமானிக்கிறது. அதன் அடுத்த கட்ட நிகழ்வைப் பற்றி யோசிக்காது செயலாற்றுகிறது. மரணத்தின் அடுத்த கட்ட நிகழ்வுகளை மரணத்தின் முந்திய கட்டத்தில் நின்று கொண்டிருப்பவள் காண நேரும் காத்திருப்பவள் கதை சமூகத்தின் சம்பாசணையின் மூலம் ஒரு அவலத்தை கண் முன் நிறுத்துகிறது. மரணத்தை ஒத்திப் போடுகிறது. வாழ்வை எதிர் கொள்ள வைக்கும் நல்ல சிந்தனை.

வன்முறை தலை எடுக்கும்போதெல்லாம் அங்கு பலியாவது எந்த விதத்திலும் வன்முறைக்குத் தொடர்பே இல்லாத அப்பாவி மக்கள்தான். வன்முறையின் உச்சகட்டம் என்னவாக இருக்கும்? தூக்கு தண்டனை என்ற பெயரில் அரசாங்கம் செய்யும் படுகொலைதான். வேலிக்குத் தப்பி முள்ளில் விழுந்த கதை ஊருக்கு வந்தவன். ஆனால், அவனின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியாது புலம்பும் பத்திரிக்கையாளன் இருக்கிறானே? அவன் இன்னும் பாவம். சக உயிரை நேசிக்கும் அவன்தான் இந்த உலகில் அன்பிருப்பதற்கான சாட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறான். ஓடுவதற்கு வழி ஏதுமற்ற நிலையில் பூனையால் வளைக்கப்பட்டிருக்கும் எலியானது இறுதி கட்ட முயற்சியாக ஒரு சீறு சீறும். அதன் வெளிப்பாடை அருமையாய் பதிந்திருக்கிறார்.

வெட்டப்பட்ட மரத்தின் வேர்கள் இன்னும் பூமியோடு பந்தம் கொண்டிருக்க மரம் மேலும் மேலும் வெட்டப்படுகிறது. மரத்திற்குண்டான உயிர்வலி கோடலிக்குத் தெரிவதில்லை போலும். மேலும், மேலும் காயப்படுத்திக் கொண்டே இருக்கிறது. வெட்டு வாங்கப்பட்ட மரமோ பறவைகளுக்காய் கண்ணீர் சொரிகிறது. மெட்வின் மாதிரி மெல்லிய மனதும், மனம் தளும்பத் தளும்ப அன்பும் கொண்ட மனிதர்களாய் உலகம் முழுதும் இருந்துவிட்டால்.. நினைக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. அன்பால் ஆன உலகம் எனும் வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மெட்வின் மாதிரியான மனிதர்களுக்கு இந்த உலகம் என்ன செய்யப் போகிறது?

மனிதர்கள்.. அத்தனையும் மனிதர்கள்.. உலகில் எனக்கு மிகவும் பிடித்த விசயம் சக மனித இருப்பைச் சலிப்பில்லாமல் பார்த்துக் கொண்டிருப்பது. ஒவ்வொரு மனிதனும் அவனுக்குண்டான ஏதோ ஒரு விசேசத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். என் நண்பனின் தந்தை கீழே விழுந்து காலில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்வதற்கு B நெகட்டிவ் ரத்தம் 8 யூனிட் தேவைப்பட்டது. அந்த சமயத்தில் அவரைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பில் நான் இருந்தேன். என் நண்பன் வீட்டிற்கு சென்றிருந்தான். என் நண்பர்கள் அனைவரையும்
தொடர்பு கொண்டு தகவலைச் சொல்ல அடுத்து அடுத்து வந்த தொலைபேசி அழைப்புகள் அனைத்தும் நண்பர்களின் நண்பர்களின் மூலம் தெரியப்பட்ட நபர்களாக இருந்தார்கள். மூன்றாம் நான்காம் கட்ட நண்பர்கள். முகம் தெரியாத நபர்கள். அவர்கள் தாமாக வந்து ரத்தம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள். இந்த நிகழ்வில் நான் அங்கிருந்தேன் என்பதைத் தவிர வேறு எந்தப் பெரிய உதவியும் செய்யவில்லை. ரத்தம் கொடுத்துவிட்டுப் போன முன்பின் தெரியாத நபர்கள் இருக்கிறார்களே.. அவர்களால் தான் இன்னும் மழை பெய்கிறது போலும். அன்று முழுக்க நான் மிகவும் உணர்ச்சி வயப்பட்ட நிலையிலேயே இருந்தேன். என் நண்பன் வந்ததும் விபரங்களைச் சொல்லிவிட்டு இறுதியாக ஒரு வாக்கியம் சொன்னேன். அது, அன்பின் நிறம் சிகப்பு. பாவண்ணனின் கதைகளைப் படித்து விட்டு, கதைகளைப் பற்றியும் அதன் கட்டமைப்புகள் பற்றியும் பேசாமல் முழுக்க முழுக்க மனிதர்கள் பற்றி மட்டுமே பேசியதற்கு இதுதான் காரணம். அன்பின் நிறம் சிகப்பு எனும் கொள்கையில் பாவண்ணனும் இருக்கிறார் என்பதை அவருடைய கதைகள் சொல்கின்றன.

ஆசிரியர்: பாவண்ணன்
வெளியீடு: காவ்யா
விலை : ரூ. 90

இளசு
03-11-2005, 07:46 PM
இளக வைக்கிறது ராம்.

சகமனிதர்கள் இருப்பை... சலிப்பில்லாமல் சொல்வது பாவண்ணன் மட்டுமல்ல - நீயும்தான்.

வாழ்வு, மரணம், மனம் என்னும் விலங்கு, அன்பு, இயலாமையின் கடைசி சீறல் என என் மனக்கண் கண்ட காட்சிகள் ஏராளம்.

இந்த பாணியில் ஒரு படைப்பாளி அலச்ப்படுவது -
படிக்க புத்துணர்ச்சி தருவதாய் உள்ளது.

பாவண்ணன் பற்றி ஏதும் இதுவரை அறிந்திராவதான் நான்.
இன்று இப்பதிவால் அவரின் மேல் அன்பு, மரியாதை உண்டாகிவிட்டது.

தொகுப்பை தேடி வாங்குவேன் - அடுத்த வாய்ப்பில்.

தொடர்க ராம். பாராட்டுகள்.

இளசு
03-11-2005, 10:26 PM
அன்பு ராம்
என்ன ஆச்சர்யம்.

இந்தப்பதிவைக் கண்டபின் அறையில் ஏதோ தேடிய போது
அண்மை விடுப்பில் நண்பர் தந்த நூல்கட்டு ( இன்னும் பிரிக்காமல்) கண்ணில் பட்டது.

பிரித்தால்......

பாவண்ணனின் - ஆழத்தை அறியும் பயணம்.
அவர் படித்து கரைந்துபோன கதைகளைப் பற்றிய
விமர்சனத் தொகுப்பு...

பாவண்ணன் - மற்றவர் படைப்புகளில் கரைய
நீ இங்கே அவர் படைப்புகளில் கரைய...

ஒரு விநோதமான சிலிர்ப்பு எனக்குள்...

நம் மன்றத்தில் இத்தகைய இலக்கியத்தரம் வாய்ந்த
தொடர் உன்னால் வருவதில் ----
மிகவும் மகிழ்ந்துவிட்டேன்..

rambal
04-11-2005, 04:10 PM
மட்டற்ற மகிழ்ச்சி.
பாவண்ணனின் அறிமுக நூல்களில் முதலாவது நூல்
எனக்குப் பிடித்த கதைகள். இது திண்ணை இணைய இதழில் தொடராக வந்து
பின் புத்தக வடிவமானது. இதைத் தொடர்ந்து வந்த நூல்தான் ஆழத்தை அறியும் பயணம்.
இந்த இரண்டு நூல்களிலும் கதைகளை அறிமுகப்படுத்தி விட்டு இதற்கு அடுத்த நூலான
தீராத பசிகொண்ட விலங்குவில் தான் சந்தித்த நபர்கள், இடங்கள் பற்றிய தனது பார்வையைப்
பதிந்துள்ளார். இந்த நூல் பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன். இதற்கு அடுத்த படியாக
எழுத்தென்னும் நிழலடியில். இந்த நூல் பல சிறந்த எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துகிறது.
கடந்த ஆண்டு பர்வா எனும் கன்னட நாவலை தமிழில் மொழி பெயர்த்ததற்காக சாகித்ய அகாதமியின்
விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

aren
05-11-2005, 12:50 AM
அருமையான பதிவு ராம்பால் அவர்களே.

பாவண்ணன் அவர்களின் திறமை எவ்வளவு என்பது உங்களுடைய பதிவு வாயிலாக நன்றாகவே தெரிகிறது.

பல நல்ல இலக்கியங்கள் இன்றும் வருகிறது என்பது பாவண்ணனின் இந்த நூல் வெளிப்படுத்துகிறது.

இந்த புத்தகங்கள் எங்கே கிடைக்கும். அடுத்த முறை சென்னை செல்லும்பொழுது வாங்கவேண்டும்.

இங்கே பதிவு செய்ததற்கு நன்றி ராம்.

நன்றி வணக்கம்
ஆரென்

பாரதி
05-11-2005, 12:53 AM
நீங்கள் முன்பே சொல்லி இருந்த பாவண்ணனின் நூலை இன்னும் நான் பார்க்கவே இல்லை. இப்போது மேலும் அவருடைய நூல்கள். நிச்சயம் இம்முறையாவது வாங்கி வாசிக்க வேண்டும் என்கிற ஒரு உணர்வு மேலோங்கியிருக்கிறது.
மனம் தளும்ப தளும்ப அன்பு கொண்டவர்களாக மனிதர்கள் இருந்தால்.... உலகம் எவ்வளவு இனிமையானதாக இருக்கும்? ஒரு சில ஹிந்தித் திரைப்படங்களில் (ராஜ்ஸ்ரீ புரடக்சன்ஸ்?) வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் மனிதநேயம் மிக்கவர்களாகவே இருப்பார்கள். படத்தைப் பார்க்கும் போது நமக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் வரும். இப்புத்தகங்களை வாசித்தால் அந்த உணர்வு கிட்டும் போலத் தெரிகிறது.
நன்றியும் பாராட்டுக்களும் ராம்.