PDA

View Full Version : இரு மேதைகள் (அ.மை. -10)



இளசு
02-11-2005, 09:10 PM
இரு மேதைகள்





அறிவியல் மைல்கற்கள் - 10

ஹிப்போக்ரேட்ஸ்
கி.மு.460 - 380

கேலன்.
கி.பி. 130 -201.


ஒன்பதாம் பாகம் - மருந்தியல் அகரம் இங்கே -

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5846

----------------------------------------------------------------

ஹிப்போக்ரேட்ஸ்
கி.மு.460 - 380
கிரேக்கம் தந்த மருத்துவத்தந்தை ஹிப்போக்ரேட்ஸ்.

தொழுநோயா - பாவத்தின் சம்பளம்.
காசமா - அரசன் தொட்டால் தீரும்.
வலிப்பா - பேயின் பிடி.

இப்படி மூடநம்பிக்கைகள் ஆழ ஊன்றியிருந்த காலத்தில்
நோய்கள் வர பகுத்தறிவுக்குட்பட்டக் காரணங்கள் இருக்கிறது
என தைரியமாய்ச் சொன்ன மருத்துவ முதல்வர்.

மருத்துவர்கள் நோய்க்குறிப்புகளையும், நிவாரணங்களையும்
எழுதி வைத்து, வரும் சந்ததிக்கு அர்ப்பணிக்க வேண்டும்
என்ற உயரிய கொள்கையை வகுத்தவர்.

நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையே உள்ள உறவு
புனிதமானது, நோயாளி சொல்லும் அனைத்தும் ரகசியமானவை
என்ற உறுதிமொழியை எல்லா மருத்துவர்களும் கடைப்பிடிக்கச் சொன்ன
கர்ம வீரர். (இன்றும் மருத்துவ மாணவர்கள் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி இது.)

ஹிப்போகிரேட்ஸ் அருளிய வாக்குகளில் இரண்டு -
முதலில் ஊறு செய்யாதிரு. (First Do No Harm)
கலை பெரியது, வாழ்க்கை சிறியது.

இதை அடுத்து சில நூற்றாண்டுகளுக்கு - அதாவது கிபி 200 வரை
ஹிப்போகிரேட்ஸ் என்னும் ஆலமரத்தின் நிழலில் வளர்ந்த
அனைத்து மருத்துவக் கன்றுகளும் --
அவர்களின் மருத்துவக்குறிப்புகள் எல்லாவற்றையும்
ஹிப்போகிரேட்ஸ் எழுதிய நூலிலேயே சேர்த்துவந்தார்கள்.
அந்த ஆலமரத்தின் நிழலையும் மீறி,
ஆனால் குருபக்தியோடு ஒரு வேலமரம்
தன் வீச்சால் விண்ணை நோக்கி நிமிர்ந்தது.

அவர்தான் கேலன்.

கேலனும் கிரேக்கம் வழங்கிய சொத்துதான்.
காலம் - கி.பி. 130 -201.
பித்தம், குளிர்ச்சி, சூடு என உடல் வளத்தை பிரித்துச் சொல்லும்
முறை இவர் சொன்னது.
இது நம்மூர் சிகிச்சை முறைகளில் இன்றும் உண்டு.
(இதை முதலில் சொன்னது இந்தியாவாக இருக்கலாம் என்பது என் உள்ளுணர்வு.
விவரம் தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடுங்கள்.)


துருக்கியில் பிறந்த கேலன் மருத்துவத்தந்தை ஹிப்போகிரேட்ஸின் கோட்பாடுகளால்
கவரப்பட்டார்; அந்த அறிவுச்சுடரையும், பின்னால் வந்த மருத்துவத்திலகங்கள் தந்த
கூடுதல் ஒளியையும் உள்வாங்கி, இன்னும் சிந்தித்தார்.
சொந்தமாக மருத்துவ நூல்கள், கண்டுபிடிப்புகள், கற்பித்தல்,
இறந்த மனித உடல்களில் ஆராய்ச்சி, அது மறுக்கப்பட்டால்
விலங்குகளின் உடல்களில் சோதனைகள் என பல படிமன்கள் கண்டார்.

உடலியல் , தாவரவியல் உள்ளிட்ட அறிவுப்பாதையில் நடைபோடும் மருத்துவர்கள்
பரி சோதனைகளில் ஏன் , எதற்கு, எப்படி என
தர்க்க பூர்வ வினா எழுப்பி , பகுத்தறிவு கொண்டு செயல்பட வலியுறுத்தினார்.
இன்றைய அத்தனை மருத்துவ முன்னேற்றக்கோபுரங்களுக்கும்
இரட்டை அடிப்படை - இந்த இரு மேதைகள் நாட்டியது.

எட்டு எட்டாய் மனித வாழ்வைப் பிரிக்கச் சொன்னார் வைரமுத்து.
கேலன் நாலு நாலாய் மனிதனைப் பிரித்தார்.
மனிதனை ஊற்றுவும் திரவங்கள் நான்கு - மஞ்சள் பித்தம், இரத்தம், சீதம் (சளி), கருப்புப்பித்தம்.
அவனை பாதிக்கும் 'பூதங்கள்' நான்கு - நெருப்பு, நீர், காற்று, மண்.
உண்டாகும் நிலைகள் நான்கு - வெம்மை, ஈரம், குளிர்ச்சி, உலர்தல்.
வாழ்வின் பருவங்கள் நான்கு - சிறுவர், வாலிபர், பெரியோர், முதியோர்.
இவற்றை உரசும் காலங்கள் நான்கு - கோடை, வசந்தம்,கூதல், மழை.
இவற்றின் மாறும் உறவுகளால் மாறும் அவயங்கள் நான்கு - கல்லீரல், இதயம், மூளை, சுவாசப்பை.

வெறும் உத்தேசங்கள், வெற்று வியாக்கியானங்களால் கேலனுக்கு இந்த பெருமை சேரவில்லை.
அயராது சோதனைகள், தொடர்கவனிப்புகள்- அதன் விளைவுகளை அறிவார்த்தமாய் ஆராய்தல்
இவற்றால் அவர் வழங்கிய அறிவுதானம்... அடடா!

சீரணம், நரம்புகளின் உணர்வுக்கடத்தும் நுட்பம், தண்டுவடத்தின் உள்ரகசியம்,
குருதி உருவாகும் சூட்சுமம், சுவாசம், இதயத்துடிப்பு, தமனியின் நாடித்துடிப்பு..

இவை இப்படித்தான் என எல்லா ' மருத்துவர்களும் ' வாளாவிருக்க
இவை எப்படி இப்படி உருவாகின என கண்டுசொன்ன கேலனுக்கு
ஹிப்போகிரேட்ஸ் என்னும் தந்தைக்கு நிகரான இடம் தந்து --
இருவரையும் காலப்பாலம், அறிவூற்று ஆகியவை இணைக்க-
இந்த மைல்கல்லின் நாயகர்களாய் நினைவு கூர்வோம்.

aren
03-11-2005, 01:00 AM
கிரேக்கர்கள் நிறைய மருத்துவத்திற்கு செய்திருக்கிறார்கள் என்பது உங்களுடைய பதிகளிலிருந்து தெளிவாகிறது.

அதுபோல் இந்தியாவிலிருந்தும் பல மருத்துவ கண்டுபிடிப்புகள் வந்திருக்கலாமே. அதையும் கொஞ்சம் தொகுத்துகொடுங்களேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

gragavan
03-11-2005, 05:36 AM
அடேங்கப்பா! என்ன உழைப்பு! ஆகையால்தான் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். இவர்களைத்தான் "வையத்துள் வாழ்வாங்கு வாழ்கின்றவன்" என்று சொல்கின்றார்கள் போல.

பென்ஸ்
03-11-2005, 08:34 AM
மருத்துவர்கள் நோய்க்குறிப்புகளையும், நிவாரணங்களையும்
எழுதி வைத்து, வரும் சந்ததிக்கு அர்ப்பணிக்க வேண்டும்
என்ற உயரிய கொள்கையை வகுத்தவர்.


இதைத்தானே நாம் மறந்து போனோம்... படு வர்மம், தொடு வர்மம், நோக்கு வர்மம்... என்று பல வர்ம கலைகள் இருந்தும் அது என்ன என்பதே அறியாமல் அக்கலைகள் அழிந்து போனது இவ்வாறு தானே...பனை ஓலையில் எழுதி வைத்தவற்றையெல்லாம் கண்காட்சியில் வைத்திருக்கிறோம்... உடனடி நிவாரணம் என்று ஆங்கில மருந்தை தேடிய நாம், வெறும் சுளுக்கிற்காக, காலில் துணியை பத்து நாள் கட்டி அலைகிறோம்...

aren கூறியது போல நாங்கள் இந்திய மேதைகளையும் எதிர் பார்க்கலாமா????

பென்ஸ்
03-11-2005, 09:38 AM
கேலனும் கிரேக்கம் வழங்கிய சொத்துதான்.
காலம் - கி.பி. 130 -201.
பித்தம், குளிர்ச்சி, சூடு என உடல் வளத்தை பிரித்துச் சொல்லும்
முறை இவர் சொன்னது.
இது நம்மூர் சிகிச்சை முறைகளில் இன்றும் உண்டு.
(இதை முதலில் சொன்னது இந்தியாவாக இருக்கலாம் என்பது என் உள்ளுணர்வு.
விவரம் தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடுங்கள்.)


ஒரு வைத்தியரின் பேரபிள்ளையான எனக்கு தெரிந்த சில விவரங்கள்... நாடி பிடித்து இந்த பித்தம், குளிர், சூடு என்ன பிரிப்பார்கள்... நோயின் வலிமை, அதன் காரணம் எல்லம் நடித்துடிப்பு, மூச்சு விடும் விதம், கண், நாக்கின் நிறம் போன்றவற்றை வைத்து தீர்மானிப்பர்...
பாட்டியிடம் இதை உறுதிசெய்ய கேட்ட பொது நீங்கள் சொன்ன 4 விதமாக பிரிக்கும் கதையை அவரும் கூறியது இன்னும் ஒரு என்னை சிந்னையில் இட்டுள்ளது... இது இன்றும் தென் கேரளம், குமரி மாவட்டம் பகுதியில் உள்ள வைத்தியர்களிடம் நடைமுறையில் உள்ளது...

இது கிரேகத்தில் இருந்து இங்கு வந்ததா, இல்லை இங்கிருந்து கிரேக்கம் சென்றதா என்பது தெரிய வில்லை, ஆனால் தமிழர்கள் கிரேக்கத்துடன் வணிகம் வைத்திருந்தது மட்டும் தெரியும்... :) :)

பாரதி
05-11-2005, 04:46 PM
விஞ்ஞானம் படிப்படியாய் முன்னேறித்தான் வருகிறது. என்றாலும் முதலில் அதைப்பற்றி தெளிவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் முயற்சி செய்து, பாதை அமைத்துத்தந்த அந்த மேதைகளுக்கும், அவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தும் உங்களுக்கும் நன்றி.

இளசு
06-11-2005, 10:14 PM
அன்பின் ஆரென், இராகவன், பாரதி -- ஊக்கத்துக்கு நன்றி.

பெஞ்சமின் - உங்கள் பின்னூட்டம் அருமை. பல பாட்டிகளிடம் இந்த அனுபவக்கல்வி இருந்தது. மெல்ல மெல்ல மறைந்தும் வருகிறது.

kavitha
21-11-2005, 06:04 AM
ஹிப்போகிரேட்ஸ் அருளிய வாக்குகளில் இரண்டு -
முதலில் ஊறு செய்யாதிரு. (First Do No Harm)
கலை பெரியது, வாழ்க்கை சிறியது.

ஹிப்போகிரேட்ஸ் ரியல்லி எ க்ரேட்ஸ் - தான். :-)

அண்ணா.. மருத்துவச்செல்வங்களைப்பற்றிச் சொல்வதில் மருத்துவரும் உரைநடை வைத்தியருமான தங்களைவிட யாரால் இத்தனை எளிமையாயும் அழகாயும் தரக்கூடும்?

தொடர்ந்து பதியுங்கள். சேமித்துக்கொள்ள காத்திருக்கிறேன். நன்றி.