PDA

View Full Version : இலக்கியத்தில் இறை.........வா!gragavan
02-11-2005, 03:59 AM
பைந்தமிழ் இலக்கியங்கள் படிக்கத் திகட்டாதவை. அந்தத் தீஞ்சுவைத் தமிழ் மாலைகளில் தேன் துளியாக இறைவணக்கப் பாடல்கள் நிறைந்து சிறந்துள்ளன. இறைவனைத் தமிழால் அழகு மிகும் சொற்களால் அன்பால் புனைந்த அந்த இறைவணக்கப் பாக்களைப் பூக்களைத் தேடும் வண்டாய்த் தேடித் தேடி செந்தமிழ்த்தேன் துளிகளைச் சேகரித்துப் படைப்பதில் உவப்படைகிறேன். என்னால் முடிந்த அளவிற்கு இறைவன் அருளால் அப்பாக்களுக்குத் தப்பாத வகையில் பொருளுரைக்கிறேன்.

இந்தத் திரியை ஒவ்வொரு புதன் தோறும் புதுப் பதிக்கலாம் என்று இருக்கிறேன். இறையருளால் அனைத்தும் கை கூடட்டும். இந்தத் திரிக்கு நல்லதொரு தலைப்பு வழங்கிய நமது மன்றத்து அன்பர் மன்மதனையும் இவ்வேளை நினைவு கூற கடமைப் பட்டுள்ளேன்.

குறுந்தொகை

குறுந்தொகை என்னும் நூல் அகப்பாடல்களின் தொகுப்பு. பல புலவர்கள் படைத்த தனிப்பாடல்களின் தொகுப்பு. இந்தத் தொகுப்பிற்கு இறைவணக்கம் பாடியவர் பெருந்தேவனார். இவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்றும் அழைக்கப்படுகிறார்.

தாமரை புரையும் காமர் சேவடிப்
பவழத்தன்ன மேனித் திகழொளிக்
குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சு பக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்
சேவலங் கொடியன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே

தமிழ்க் கடவுள் முருகனைப் பாடிய இறைவணக்கப் பாடல் இது. மூத்தகுடியாம் தமிழ்க் குடியில் மூத்த தெய்வம் முருகனைப் பாடாதார் யார்? தன் பங்கிற்குப் பெருந்தேவனார் இந்தப் பாடலில் முருகன் அருளால் உலகின் காக்கப்படுவதைச் சொல்கின்றார்.

தொடக்கத்திலேயே திருவடியைப் பற்றிச் சொல்கின்றார். "பிறவிப் பெருங்கடல் நீத்துவர் நீத்தார் இறைவனடி சேராதவர்" என்பது வள்ளுவன் வாக்கு. இறைவனடியைச் சேர வேண்டும். ஆகையால் முருகப் பெருமானின் திருவடியைப் புகழ்ந்து செய்யுளைத் துவக்குகிறார் பெருந்தேவனார். "தாமரை புரையும் காமர் சேவடி" என்று கந்தனடிகளைச் சொல்கின்றார். தாமரை மலர்களை ஒத்த அழகனுடைய திருவடிகள் என்று பொருள். திருப்புகழில் அருணகிரிநாதரும் "தண்டையணி வெண்டயம்" என்று முருகன் திருவடிகளைப் புகழ்கிறார். தண்டை அணிகின்ற வெண்தாமரை மலர்கள் என்று அழகாக உருவகிக்கிறார் அருணகிரி.

பவழத்தன்ன மேனி. பவழம் செக்கச் சிவந்தது. முருகப் பெருமானி திருமேனியும் சிவந்தது. இங்கே சிவப்பு என்பது செம்மை என்னும் பண்பைக் குறிக்கும். முருகனுடைய மேனி மட்டுமா செம்மை. உடுக்கையும் செம்மைதான். முருகனுக்கு ஏதடா உடுக்கை! அது சிவனுக்கு உரியதாயிற்றே என்று எண்ணாதீர்கள். உடுக்கை என்பது உடுத்தும் துணியைக் குறிக்கும். "உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" என்ற குறளையும் நினைவிற் கொள்க.

குன்றின் நெஞ்சு பக எறிந்த அஞ்சுடர் நெடுவேல் என்று முருகனுடைய திருக்கை வேலின் சிறப்பைச் சொல்கிறார். மாயை என்பது இருள். ஞானம் என்பது ஒளி. இருள் அனைத்தையும் மறைக்கும். ஆனால் ஒளி வந்ததுமே இருள் விலகும். மாயையின் வடிவாக எழுந்து அனைத்தையும் மறைத்தது கிரவுஞ்ச மலை. வேல் ஞானத்தின் வடிவம். வேலெறிந்து கிரவுஞ்ச மலையைத் தூளாக்கினார் முருகன். ஞானம் அல்லது அறிவு சுடர் விட்டு ஒளிர வேண்டும். ஆகையால்தான் "அஞ்சுடர் நெடுவேல்" என்று பெருமதிப்போடு கூறுகின்றார். "கிரியும் தொளைபட்டுருவத் தொடு வேலவனே" என்று இதே கருத்தை கந்தரநுபூதியும் பகர்கிறது.

ஏமவைகல் என்றால் பாதுகாப்பான நிலை என்று பொருள். இது பழந்தமிழ்ச் சொல். பாதுகாப்பான நிலையை உலகம் எய்தியதாம். எதனால்? சேவலங் கொடியன் காப்ப. தாமரைத் திருவருடிகளையுடைய அழகனும், செம்மைப் பண்புடைய செவ்வேளும், மாயையைச் சாடும் சுடர்வேலைப் படித்தவனும், சேவற்கொடியைக் கொண்டவனுமாகிய முருகன் காப்பதால் உலகம் பாதுகாப்பான நிலையில் உள்ளது என்பது பெருந்தேவனார் கருத்து.

அன்புடன்,
கோ.இராகவன்

பிரியன்
02-11-2005, 04:14 AM
நல்ல தொடக்கம் ராகவன். எளிமையான விளக்கங்களுடன் ஆரம்பித்து இருக்கிறீர்கள். வாசித்துவிட்டு பின்பு கருத்து கூறுகிறேன்...

mania
02-11-2005, 04:30 AM
நல்ல துவக்கம் ராகவன்.:) எளிதாக புரியும் வகையில் விளக்கம். :) நிறுத்தாமல் (இடைவெளி அதிகம் விடாமல் )தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...:)
அன்புடன்
மணியா..:)

gragavan
02-11-2005, 04:44 AM
பாராட்டுகளுக்கு நன்றி பிரியன்.

தலை, ஒவ்வொரு புதனும் ஒவ்வொரு செய்யுள் என்று வைத்திருக்கிறேன். நிறைய இலக்கியங்கள் இருக்கின்றன. எதைத் தொட்டாலும் ஏதேனும் புதுமை இருக்கிறது. சொல்வதற்கும் நிறைய இருக்கிறது. கண்டிப்பாக தொடர்ந்து வரும் என்று நம்புகிறேன்.

இளசு
02-11-2005, 08:35 PM
அன்பு இராகவன்
எனக்குப் பிடித்த நாள் புதன்.
எனக்குப் பிடித்த நாயகன் குமரன்.
நமக்குப் பிடித்த தமிழில்
நல்ல பாடுபொருள் இறையை
மங்கலமாய்த் தொடங்கி இருக்கிறீர்கள்..

பெருந்தேவனாரில் தொடங்கிய இந்த
பெருமைக்குரிய தொடர்
வேண்டியபடி இறையருளால்
நிறைவாய் அமையும்..
வாழ்த்தும், நன்றியும், பாராட்டும்.

gragavan
03-11-2005, 05:25 AM
நன்றி இளசு. இந்தத் தொடர் உங்கள் மனம் கவரும் என்று நம்புகிறேன்.

பென்ஸ்
03-11-2005, 07:15 AM
ராகவன் உஙளுக்கு ஒரு சபாஷ்.... இதை இதைதான் தேடிக்கிட்டு இருந்தேன்...

gragavan
03-11-2005, 11:31 AM
நன்றி பெஞ்சமின்.

gragavan
09-11-2005, 05:05 AM
நளவெண்பா

ஆதித் தனிக்கோலம் ஆனான் அடியவற்காச்
சோதித் திருத்தூணில் தோன்றினான் - வேதத்தின்
முன்னின்றான் வேழம் முதலே என அழைப்ப
என்னென்றான் எங்கட்கு இறை

நளவெண்பாவை இயற்றியவர் புகழேந்திப் புலவர். இவர் பாண்டி நாட்டுப் புலவர். கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் சமகாலத்தவர். பாண்டியன் மகளைச் சோழன் மணந்ததால் அவளோடு அறிவுருத்தும் ஆசானாய்ச் சோழநாடு புகுந்தவர். நளவெண்பா என்னும் பெயரிலிருந்தே இந்நூல் முழுக்க முழுக்க வெண்பாக்களால் ஆனது என்று விளங்கும். மேலும் நளவெண்பா உவமை அழகும் மிகுந்த நூல்.

மகாபாரதத்தின் கிளைக்கதையாக வரும் நளதமயந்திக் கதையை நூலில் வடிக்கும் பொழுது திருமாலைத் தொழுது துவக்குகிறார் புகழேந்தி. திருமாலைத் தொழுகின்றவர்கள் அவரே ஆதியென்று தொழுவார்கள். ஆகையினாலே நூலின் ஆதியிலேயே ஆதித் தனிக்கோலம் ஆனான் என்று திருமாலைப் புகழ்கிறார். தனிக் கோலம் என்பது தனியாக அமர்ந்திருப்பது அல்ல. தனக்கு இணையாக எவரும் இல்லாதிருப்பது. "தனியானை சகோதரனே" என்று கந்தரநுபூதியில் அருணகிரி சொல்வதும் இதே தனிமைதான்.

அடியவற்காச் சோதித் திருத்தூணில் தோன்றினான் என்று ஒரு கதையைச் சொல்கிறார் புகழேந்தி. இறைவன் அனைத்தையும் கடந்து அனைத்திற்கும் உள்ளே இருப்பவன் என்பதை அறியாதவன் இரண்யன். அவனுக்குப் பாடம் சொன்னன் ஒருவன். அதுவும் அவன் பெற்ற மகன். இறைவன் எங்கும் நிறைந்தவன் என்ற தனது மகனின் கூற்றை ஏற்க முடியாமல் திணறினான். தூணிலும் இருப்பானவன் தும்பிலும் இருப்பான் என்று மகன் கூறவும் ஆணவம் கொண்டு தூணைத் தகர்த்தான் இரண்யன். அந்தத் தூணிலிருந்து மனித ஏறாக வந்தார் இறைவன். அந்த நிகழ்ச்சியைத்தான் தூணில் தோன்றினான் என்று நினைவு கூறுகிறார்.


அனைத்து வேதத்திற்கும் முன்னின்ற அவனை ஒரு வேழம் அழைத்தது. இறையறிவு மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் செடிகொடிகளுக்கும் மற்றும் எல்லா உயிர்களுக்கும் உண்டு. அப்படி இறையறிவுள்ள ஆனை ஒன்று தாமரை மலரைக் கொய்ய ஆற்றில் இறங்கியது. அங்கிருந்த முதலையானது பசி கொண்டு ஆனையின் காலைக் கவ்வியது. அப்பொழுது ஆதிமூலமே என்று ஆனை நம்பி அழைத்ததால் என்னென்று கேட்டு ஓடி வந்து காத்தார் திருமால்.

ஆதித்தனிக்கோலம் ஆனானவனும், அடியவன் சிறுவனுக்காகத் தூணில் மனித ஏறாகத் தோன்றியவனும், வேதத்திற்கெல்லாம் முன்னிற்பவனும், ஆதிமூலமே என்று அழைத்த மாத்திரத்தில் என்னவென்று கேட்டவனுமாகிய திருமாலே எங்களுக்கு இறைவன்.

அன்புடன்,
கோ.இராகவன்

பரஞ்சோதி
09-11-2005, 05:35 AM
இராகவன் அண்ணா,

இதை கணினியில் சேமித்து படித்தேன், ஆனால் பதில் சொல்லவில்லை. மன்னிக்கவும்.

அருமையாக செல்கிறது, சொல்ல சொல்ல இனிக்குதடா மாதிரி பெரிய வெற்றியை இப்பதிவு பெறும். வாழ்த்துகள்.

gragavan
09-11-2005, 06:00 AM
இருக்கட்டும் பரஞ்சோதி. நேரம் கிடைக்கில் உன்னுடைய கருத்துகளைச் சொல்.

mania
09-11-2005, 06:11 AM
நன்றி ராகவன்.....இதுபோன்று இன்னும் எத்தனை பாடல்கள் தப்பாக புரிந்து கொண்டிருக்கோமோ......???
அன்புடன்
மணியா...

இளசு
09-11-2005, 06:40 AM
ஆசிரியர் பற்றிய சிறுகுறிப்பும் , அழகான அளவான விளக்கங்களுமாய்
மிக அருமை இராகவன்.

முதலே என முதலில் படிப்பதற்கும்,
ஆதி முதலான உங்கள் விளக்கத்திற்குப் பின்
வெண்பாவை மீண்டும் படிப்பதற்கும் --

தடவித் தடவி நடப்பதற்கும்
தீபஒளி ஏற்றி நடப்பதற்கும் சமம்.


ஒளி ஏற்றும் பணி செய்யும் உங்களுக்கு வந்தனம்..

பரஞ்சோதி
09-11-2005, 07:51 AM
இராகவன் அண்ணா,
புகழேந்து புலவர் வைணவப்புலவரா?

gragavan
09-11-2005, 09:39 AM
புகழேந்தி வைணவர் என்று சொல்ல முடியாது. பிறப்பால் அவர் சைவரே. ஆனால் உண்மையான நடுநிலைவாதி. எல்லா மதங்களையும் மதித்து நடந்தவர். பொதுவாகவே பாண்டி நாட்டார்கள் அனைவரையும் மதித்து நடந்தார்கள். புகழேந்தி கம்பரை விட ஒருபடி மேல் என்றுதான் நான் சொல்வேன். அந்தப் புகழை அடையாமைக்குக் காரணம் அவரது இளவயது இறப்பு. பொதுவாக காப்பியங்கள் எழுதும் பொழுது ஆசிரியப்பா, கலிப்பா என்று பயன்படுத்துவார்கள். இவர் முழுக்க முழுக்க வெண்பாவைப் பயன்படுத்திக் காப்பியம் படைத்திருக்கிறார். உவமைக்கு ஒருவன் புகழேந்தி என்று புகழ்வார்கள்.

பகழிக்கூத்தர் என்று ஒரு வைணவப் புலவர் இருந்தார். உடம்பெல்லாம் திருமண். ஆனாலும் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடினார்.

gragavan
16-11-2005, 03:29 AM
திருவிளையாடல்

அண்டங்கள் எல்லாம் அணுவாக அணுக்களெல்லாம்
அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்
அண்டங்கள் உள்ளும் புறம்பும் கரியாயினானும்
அண்டங்கள் ஈன்றாள் துணையென்பர் அறிந்த நல்லோர்

திருவிளையாடற் புராணத்தை அருளியவர் பரஞ்சோதி முனிவர். இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர். ஆகையால் நூலின் தொடக்கத்தில் விரிசடைக் கடவுளையும் பராசக்தியையும் முருகக் கடவுளையும் சமயக்குரவர்களையும் வணங்கித் துவக்குகிறார். நாம் இப்பொழுது பார்ப்பது பராசக்தி துதி.

இறைவன் பண்பு நலன்களை எப்படிச் சொல்லிக் கொண்டு போனாலும் சொற்கள் பத்தாது. ஆகையால் ஒரு பண்பை மட்டும் இங்கே சொல்கிறார். அண்டங்கள் எல்லாம் அணுவாக பெரிதாயினான். அண்டம் என்பது மிகப் பெரியது. அந்த மிகப் பெரிய அண்டங்கள் எல்லாம் அணுவளவுக்கும் சிறியது என்று எண்ணும்படியாக பெரிய உருவெடுத்து நின்றார் சிவபெருமான்.

அணுக்கள் மிகச்சிறியவை. வெற்றுக் கண்கொண்டு காண முடியாதவை. அந்த அணுக்களெல்லாம் அண்டங்கள் என்று பெரிதாகத் தோன்றும் படிக்குச் சிறியதாகவும் தோன்ற வல்லார் விரிசடைக்கடவுள். அதாவது இறைவன் பெரியவைகளுக்கெல்லாம் பெரியவன் சின்னவைகளுக்கெல்லாம் சின்னவன் என்று சொல்கின்றார்.

ஏனிப்படிச் சொல்ல வேண்டும்? அந்த விடையை அடுத்த வரியில் சொல்கிறார் பரஞ்சோதிமுனிகள். அண்டங்கள் உள்ளும் புறமும் கரியாயினான். அதாவது அண்டங்களுக்குள் அடங்கியும் அண்டங்களுக்கு வெளியிலும் விரிந்தவன் இறைவன் என்கிறார். அண்டங்கள் அணுக்களால் ஆனவை. ஆகையால் இறைவன் அணுக்களுக்குள் அடங்க வேண்டுமானால் அணுவை விடச் சிறியவனாக இருக்க வேண்டும். அம்மாதிரியே அண்டங்கள் எல்லாம் அவனுக்குள் அடக்கமென்றால் அவன் அண்டங்களையெல்லாம் பெரிதாக இருக்க வேண்டும். இப்படி அனைத்தையும் கடந்தும் அனைத்திற்கும் உள்ளும் இருப்பதால்தான் இறைவனைக் கடவுள் என்று தமிழ் போற்றுகிறது.

இத்தகைய பண்பு நலன்களைக் கொண்ட ஈசனுக்குத் துணை யார் தெரியுமா? அண்டங்களை எல்லாம் ஈன்ற பராசக்தி. "அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னியென மறை பேசும் ஆனந்த ரூப மயிலே" என்கிறார் அருணகிரி. உலகங்களையெல்லாம் படைத்தவளே பராசக்தி! இருந்தாலும் உன்னைக் கன்னியென்றே மறைநூல்கள் புகழும் ஆனந்த வடிவாகிய மயிலே!

அன்புடன்,
கோ.இராகவன்

pradeepkt
16-11-2005, 03:58 AM
அடடா...
என்ன சுவை என்ன சுவை...
இறைவா! இலக்கியத்தில் நீ கண்ட இடத்தைக் கண்டு சொல்லும் ராகவனுக்குத் துணை நில்.

இளசு
16-11-2005, 05:40 AM
அன்பு இராகவன்..

புதன் ஆனால் எதிர்பார்த்து வரவைத்துவிட்டீர்கள்..


மகாவெடி என்னும் இயற்பியல் தத்துவத்தை அன்றே பரஞ்சோதி சொல்லிவைத்தாற்போல் மனம் இக்கருத்தில் மயங்குகிறது..

நீங்கள் சொல்லும் இரத்தின(ச் சுருக்க) நடையிலும்தான்..


இறையை இணையம் வரவைக்கும் தொடர் தொடரட்டும்...

மன்மதன்
16-11-2005, 05:11 PM
ஆரம்பமே அசத்தல் ராகவன்.. தொடர்ந்து எழுது..............♦

பாரதி
16-11-2005, 11:59 PM
முழுமையாக படிக்கும் வாய்ப்பு இன்றைக்குத்தான் அமைந்தது. அங்கங்கே தொட்டு செல்லும் போதே இவ்வளவு நன்றாக இருக்கிறதே.. ஒவ்வொரு பாடலாக உங்கள் பார்வையில் படித்தால் எப்படி இருக்கும்? வாழ்த்துக்கள் இராகவன்.

gragavan
17-11-2005, 06:03 AM
படித்து மகிழ்ந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

பாரதியண்ணா, இந்தச் செய்யுட்களைப் பொறுக்கும் பொழுதே எனக்கு தலைவலி தொடங்கி விடும். எதை எடுப்பது எதை விடுப்பது என்று முடிவெடுக்க முடியாமல் திணறுவேன். வைரம் இருந்தால் எடுக்கலாம். வைரக் காட்டில் அள்ளத்தான் முடியும். அதுவும் கைகொள்ளும் மட்டுந்தான். அதைத்தான் நான் செய்கிறேன். அது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றால் அதைவிட மகிழ்ச்சி எனக்கு வேறில்லை.

gragavan
23-11-2005, 03:22 AM
நல்வழி

பாலும் தெளி தேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா

நல்வழி என்பது வாழ்க்கை நலம் சிறந்த நல்ல வழிமுறைகளைச் சொல்லும் நூல். இந்த நூலை இயற்றியவர் பிற்கால ஔவைகளில் ஒருவர். இந்த ஔவையார் பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் பரவியபின் வந்த ஔவை. ஆகையால் பிள்ளையாரை வணங்கி இந்த நூலைத் தொடங்கியிருக்கின்றார்.

முத்தமிழிலும் சிறப்புற்று இருந்தால்தான் அருந்தமிழ் நூல்களைப் படைக்க முடியும். அப்படிப்பட்ட நூல்களே காலத்தை வென்று நிலைக்கும். அப்படிப்பட்ட நூலாக நல்வழி இருக்க விரும்பிய ஔவை விநாயகப் பெருமானிடம் தமிழ் மொழியில் திறமை பெருக வேண்டும் பாடலே கடவுள் வாழ்த்து.

வணிகத்தில் வெற்றி என்பது குறைவாகக் கொடுத்து நிறைய பெற்றுக் கொள்வது. அப்பொழுதுதான் லாபம் கிடைக்கும். சும்மா கேட்டால் யாரும் எதையும் தருவார்களா! ஒன்றைக் கொடுத்து இன்னொன்றை வாங்க வேண்டும். அதுதான் பண்டமாற்று.

இங்கேயும் ஒரு பண்டமாற்று. நான்கைக் கொடுத்து விட்டு மூன்றைக் கேட்கிறார் ஔவை. பார்த்தால் ஔவைக்கு நட்டம் போலவும் பிள்ளையாருக்கு லாபம் போலவும் தோன்றும். ஆனால் உண்மையில் லாபம் ஔவைக்குதான்.

பால், தேன், பாகு மற்றும் பருப்பு ஆகிய நான்கையும் தருகிறேன். அதற்கு ஈடாக மூன்றே மூன்று தமிழ்களைத் தந்தால் போதும் என்று பெரிய மனது செய்கிறார் ஔவை. என்ன கிண்டல் பாருங்கள்! பக்தியோடு கலந்த கிண்டல் என்பதால் இதுவும் சிறப்பே.

பாலும் இனிமை. அதோடு கலந்த தேனும் இனிமை. உடன் சேர்ந்த பாகும் பருப்பும் இனிமை. இந்த இனிமைகளையெல்லாம் தருகின்றேன் இறைவா! இவைகள் அனைத்தையும் விட இனிமையான இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழை நீ எனக்கு அருள்வாயாக!

அன்புடன்,
கோ.இராகவன்

பென்ஸ்
23-11-2005, 03:29 AM
ராகவன்.. புதன் கிழமையானதும் உங்கள் இந்த படைப்புகாக கத்திருக்கிறேன் என்பது உண்மை... அருமை...

pradeepkt
23-11-2005, 06:19 AM
நல்ல பாடல்.... அருமையான விளக்கம்.
இந்தப் பாடல் நல்வழியில் இருந்தது என்பது நான் அறிந்து கொண்ட தகவல்... தொடருங்க ஐயா.

இளசு
23-11-2005, 11:35 PM
என் அப்பா அடிக்கடி பாடும் பாடல்..
மனதில் பதிந்துவிட்ட வரிகள்..கருத்து..

மீண்டும் அன்பு இராகவன் தரப்படிக்கும்போது
நாலும் உண்ட தித்திப்பு.. உள்நாக்கு வரைக்கும்..


நன்றி இராகவன்..


வேண்டுமென்றே மிகச் சுருக்கமான பதிவுகள் தருகிறீர்கள்...
வேகமான உலகத்துக்கு ஏற்ற பரிமாறலா?

mania
24-11-2005, 02:51 AM
நான்தான் ராகவனை கேட்டுக்கொண்டிருந்தேன் (மிகவும் நீளமான பதிவுகள் வேண்டாமே என்று )......:) என்னால் பொறுமையாக அதிக நீளம் படிக்கமுடிவதில்லை. :rolleyes: ஆனாலும் .....கடுகு சிறுத்தாலும்......!!!!???:D :D
அன்புடன்
மணியா...:D

gragavan
24-11-2005, 03:57 AM
பாராட்டிய நண்பர்களுக்கு மிக்க நன்றி.

இளசு அண்ணா, மிகவும் பெரிதாக விளக்கிக் கொண்டு போகலாம். ஒவ்வொரு பாடலிலும் அவ்வளவு இருக்கிறது. ஆனாலும் படிக்கின்றவரின் ஆர்வத்திற்குத் தடை போடாமல் சுருங்கச் சொல்லி விளங்கச் சொல்ல முயல்கிறேன்.

தலை சொல்வது போல சிறுத்த கடுகிலும் காரம் இருக்குமானால் பெரு மகிழ்ச்சி. சொல்ல வந்தது எல்லாரையும் சென்றால் போதும்.

மன்மதன்
24-11-2005, 04:16 PM
இராகவா..........எளிமையான, இனிமையான சொல்லாலடால் என்னையும் படிக்க வைக்கிறாய்.. இப்படியே தொடர்ந்து கொடு..பாராட்டுகள்........♦

பாரதி
24-11-2005, 04:39 PM
ஆலயச்சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் செய்யுளின் விளக்கத்தை தந்த இராகவனுக்கு மிக்க நன்றி.

gragavan
30-11-2005, 03:21 AM
பாராட்டிய மன்மதனுக்கும் பாரதி அண்ணாவிற்கும் நன்றி.

gragavan
30-11-2005, 03:23 AM
தண்டியலங்காரம்

சொல்லின் கிழத்தி மெல்லியல் இணையடி
சிந்தை வைத்து இயம்புவல் செய்யுட் கணியே

தண்டியலங்காரத்தை இயற்றியவர் தண்டி என்ற பெயரில் வழங்கப்படுகிறார். இவர் தண்டியாசிரியர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் காளிதாசரின் காலத்தை ஒத்தவர் என்று கூறுகின்றவர்களும் உண்டு.

தண்டியலங்காரம் என்பது இலக்கண நூல். இது செய்யுட்களின் இலக்கணத்தைப் பற்றி விளக்குகிறது. ஒரு காப்பியம் படைக்க வேண்டுமானால் அதற்குரிய இலக்கணம் என்ன? அந்தக் காப்பியத்தில் பயன்படுத்த வேண்டிய செய்யுட்களின் வகைகள் என்னென்ன என்பது பற்றியெல்லாம் விளக்கும் நூல் தண்டியலங்காரம்.

இப்படிப்பட்ட நூலை யாரை வணங்கித் துவக்கியிருப்பார் தண்டியாசிரியர்? சொல்லின் கிழத்தியைப் புகழ்ந்து தனது இலக்கண நூலைத் துவக்குகிறார். சொல்லின் கிழத்தி என்றால்? கிழவன் என்றால் தலைவன் என்று பொருள். கிழத்தி என்றால் தலைவி. இல்லக் கிழத்தி என்று இல்லத்தலைவியைச் சொல்கின்றோம் அல்லவா. திருமுருகாற்றுப்படையில் முருகனைக் "குறிஞ்சி மலைக் கிழவோனே" என்று நக்கீரரும் பாடியிருக்கிறார்.

சரி. விஷயத்திற்கு வருவோம். சொல்லின் கிழத்தி யார்? சொற்களுக்கெல்லாம் தலைவிதான் சொல்லின் கிழத்தி. கலைமகளைத் தொழுது தனது இலக்கண நூலைத் துவக்குகிறார்.

சொற்களின் நயத்தைப் பாருங்கள். சொல்லின் கிழத்தி மெல்லியல் இணையடியாம். சொற்களின் தலைவியாகிய கலைமகளின் மெல்லிய திருவடிகள் என்று பொருள். அந்தத் திருவடியில் சிந்தை வைத்து இயம்புகிறார் தண்டி. எதை இயம்புகிறார்? செய்யுட் கணியை!

செய்யுட் கணியா? அப்படியென்றால்! கணி என்றால் கணக்கு. ஒரு செய்யுளைச் செய்யும் கணக்கை இயம்புகின்றாராம். அதாவது இலக்கணம். ஒரு நூலைப் படைக்க வேண்டிய செய்யுட்களைச் செய்யும் இலக்கணங்களை சொல்லின் கிழத்தியின் மெல்லியல் இணையடியில் சிந்தை வைத்துத் துவக்குகிறார்.

அன்புடன்,
கோ.இராகவன்

kavitha
30-11-2005, 09:18 AM
இலக்கியத்தில் இறை..வா
--------------------------------
தலைப்பே பெயர்சொல்கிறது. பொருத்தமான தலைப்பில், எல்லோருக்கும் புரியக்கூடிய எளிமையான விளக்கத்தில், உங்களுக்கே உரிய பாணியில், அனைவரும் படித்து பயனுறவும், தமிழ் இலக்கியத்தின் செழுமையை அனுபவிக்கவும் கிடைத்த ஒரு நல்லவாய்ப்பாக இத்தொடர் அமைந்துள்ளது. பாராட்டுகள் சகோதரரே... இறை அருள் யாவர்க்கும் கிடைக்கச்செய்ய முயற்சிக்கும் தங்களுக்கு இறைவன் எல்லா அருளும் ஆசியும் வழங்கட்டும்! தொடர்ந்து பதியுங்கள். நன்றி.

தண்டியலங்காரம் - செய்யுள் எழுதுவதற்குரிய இலக்கண நூல்.
அணிவித்தல், அலங்கரித்தல் என்னும் பொருளில் செய்யுளின் அணிகளைப் பற்றிய விளக்க நூல்.


சொல்லின் கிழத்தி மெல்லியல் இணையடி
சிந்தை வைத்து இயம்புவல் செய்யுட் கணியே

'இயம்புவல் செய்யுட்கு அணியே' என்றும் பொருள் கொள்ளலாம் தானே அண்ணா?

gragavan
01-12-2005, 03:36 AM
இலக்கியத்தில் இறை..வா
--------------------------------
தலைப்பே பெயர்சொல்கிறது. பொருத்தமான தலைப்பில், எல்லோருக்கும் புரியக்கூடிய எளிமையான விளக்கத்தில், உங்களுக்கே உரிய பாணியில், அனைவரும் படித்து பயனுறவும், தமிழ் இலக்கியத்தின் செழுமையை அனுபவிக்கவும் கிடைத்த ஒரு நல்லவாய்ப்பாக இத்தொடர் அமைந்துள்ளது. பாராட்டுகள் சகோதரரே... இறை அருள் யாவர்க்கும் கிடைக்கச்செய்ய முயற்சிக்கும் தங்களுக்கு இறைவன் எல்லா அருளும் ஆசியும் வழங்கட்டும்! தொடர்ந்து பதியுங்கள். நன்றி.

தண்டியலங்காரம் - செய்யுள் எழுதுவதற்குரிய இலக்கண நூல்.
அணிவித்தல், அலங்கரித்தல் என்னும் பொருளில் செய்யுளின் அணிகளைப் பற்றிய விளக்க நூல்.


'இயம்புவல் செய்யுட்கு அணியே' என்றும் பொருள் கொள்ளலாம் தானே அண்ணா?படித்துப் பாராட்டியமைக்கு நன்றி சகோதரி. இயம்புவல் செய்யுட்கு அணியே என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் தண்டியலங்காரம் அணிகளைப் பற்றி மட்டுமே பேசவில்லை என்று நினைக்கிறேன். அதை நான் மறுபடியும் உறுதி செய்து விட்டுச் சொல்கிறேன். ஒருவேளை தண்டியலங்காரம் அணிகளைப் பற்றியே சொல்லும் நூல் என்றால் செய்யுட்கு அணியே என்று பொருள் காண்பதே பொருந்தும். சரி பார்த்துச் சொல்கின்றேன் சகோதரி.

kavitha
01-12-2005, 09:50 AM
இயம்புவல் செய்யுட்கு அணியே என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் தண்டியலங்காரம் அணிகளைப் பற்றி மட்டுமே பேசவில்லை என்று நினைக்கிறேன். அதை நான் மறுபடியும் உறுதி செய்து விட்டுச் சொல்கிறேன். ஒருவேளை தண்டியலங்காரம் அணிகளைப் பற்றியே சொல்லும் நூல் என்றால் செய்யுட்கு அணியே என்று பொருள் காண்பதே பொருந்தும். சரி பார்த்துச் சொல்கின்றேன் சகோதரி. சரி அண்ணா. நூலகத்திலிருந்து எடுத்து இந்நூலைப்படித்திருக்கிறேன். மீண்டும் ஒப்படைக்க வேண்டி இருந்ததால் என்னால் முழுதும் படிக்க இயலவில்லை. உங்கள் வசம் இந்நூல் இருந்தால் சரி பார்த்துச் சொல்லுங்கள். நன்றி.

gragavan
02-12-2005, 03:57 AM
சரி அண்ணா. நூலகத்திலிருந்து எடுத்து இந்நூலைப்படித்திருக்கிறேன். மீண்டும் ஒப்படைக்க வேண்டி இருந்ததால் என்னால் முழுதும் படிக்க இயலவில்லை. உங்கள் வசம் இந்நூல் இருந்தால் சரி பார்த்துச் சொல்லுங்கள். நன்றி.சகோதரி. நான் நூலை நேற்றிரவு ஆய்ந்து பார்த்தேன். கடவுள் வாழ்த்திற்குப் பிறகு செய்யுளின் இலக்கணமும் தொடந்து காப்பியம் பெருங்காப்பியம் ஆகியவைகளுக்கு இலக்கணமும் செய்முறையும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து பல்வேறு அணிகள் அழகுற விளக்கப்பட்டுள்ளன. அதற்குப் பிறகு சித்திர வித்தார மதுர இலக்கணங்களும் விதிகளும் கூறப்பட்டுள்ளன.

இவைகளை வைத்துப் பார்க்கும் பொழுது "செய்யுட்கு அணியே" மற்றும் "செய்யுட் கணியே" ஆகிய இரண்டுமே பொருத்தமாகத் தெரிகிறது. எனக்கென்னவோ "செய்யுட் கணி" என்பது மிகப் பொருத்தமாகத் தெரிகிறது. இது தொடர்பாக மற்ற தமிழறிஞர்களின் உரை எதுவும் இருந்தால் படித்துச் சொல்லுங்கள் கவிதா.

kavitha
02-12-2005, 09:42 AM
சகோதரி. நான் நூலை நேற்றிரவு ஆய்ந்து பார்த்தேன். கடவுள் வாழ்த்திற்குப் பிறகு செய்யுளின் இலக்கணமும் தொடந்து காப்பியம் பெருங்காப்பியம் ஆகியவைகளுக்கு இலக்கணமும் செய்முறையும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து பல்வேறு அணிகள் அழகுற விளக்கப்பட்டுள்ளன. அதற்குப் பிறகு சித்திர வித்தார மதுர இலக்கணங்களும் விதிகளும் கூறப்பட்டுள்ளன.

இவைகளை வைத்துப் பார்க்கும் பொழுது "செய்யுட்கு அணியே" மற்றும் "செய்யுட் கணியே" ஆகிய இரண்டுமே பொருத்தமாகத் தெரிகிறது. எனக்கென்னவோ "செய்யுட் கணி" என்பது மிகப் பொருத்தமாகத் தெரிகிறது. இது தொடர்பாக மற்ற தமிழறிஞர்களின் உரை எதுவும் இருந்தால் படித்துச் சொல்லுங்கள் கவிதா.
ஆம் அண்ணா. சித்திர வித்தார மதுர இலக்கணங்கள் இதைப்படித்தப் பிறகு தான் நன்கு புரிந்தது. அணியாயினும், கணியாயினும் இது மரபு இலக்கணம் ஆதலால் பொருத்தமே. (புதுக்கவிதைகள் இவை இரண்டினையும் பொருட்படுத்தா) தமிழறிஞர்களின் உரை கிடைத்தால் நிச்சயம் பகர்கிறேன். :)

ilanthirayan
04-12-2005, 03:21 PM
அட அடா அருமை... அங்கு இங்கு என்று செல்லாமல்.. சங்க காலம் சங்கமருவிய காலம் பிந்தைய காலம் என்று வரிசையாக ... நீங்கள் படித்துச் சுவைத்த புலவர் பெருமக்களின் ஆக்கங்களை வரிசைப் படுத்தினால் பிற்காலத்தில் ஒரு தொகுப்பாகவும் போடலாம் அல்லவா?

அன்புடன் இளந்திரையன்

gragavan
05-12-2005, 06:05 AM
இளந்திரையன் என்னிடம் எல்லா நூல்களும் இல்லை. அங்கங்கு தேடித் தேடித்தான் தரவேண்டியிருக்கிறது. ஆகையால்தான் நீங்கள் சொன்னது போல வரிசையாகத் தரமுடியவில்லை. மன்னியுங்கள்.

இளசு
06-12-2005, 06:30 AM
பணிந்து தொடங்கினால் வெற்றி வரும், மமதை வராது.

யாரிடம் பணிவது?

படைப்பதற்கு முன் கலைமகள் பாதக்கமலங்களை...


படைப்பை, கணக்காய் அலங்கரிக்க அந்தப் பணிவே முதல் படி..

சுளைகளத் தேர்ந்து சுவைக்கக் கொடுக்கும் ராகவா - உனக்கு நன்றி..

gragavan
07-12-2005, 04:55 AM
சிலப்பதிகாரம்

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார் சென்னி குளிர் வெண்குடைபோன்றிவ்
வங்க ணுலகளித்தலான்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரி போல் பொற்கோட்டு
மேரு வலந்திரிதலான்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற் கவனளி போல்
மேனின்று தான் சுரத்தலான்

சிலப்பதிகாரம் தமிழ்க் காப்பியங்களுள் தலை சிறந்தது. சொற்சுவையும் பொருட்சுவையும் இணைந்து இயைந்து எழுந்த முத்தமிழ்க் காப்பியம். அக்காப்பியத்தை நமக்குத் தந்தவர் இளங்கோவடிகள்.

இளங்கோவடிகளின் சமயம் உறுதியாக அறியப்பட முடியவில்லை. இவர் பிறப்பால் சைவ மரபில் வந்தவர். அதாவது விரிசடைக் கடவுளையும் கொற்றவையையும் முருகனையும் வழிபடும் மரபில் பிறந்தவர். இவர் துறவு பூண்டவர். சைவத் துறவி என்றும் சொல்வர். சமணத் துறவி என்றும் சொல்வர். இரண்டிற்கும் ஆதாரமில்லை. சிலப்பதிகாரத்தில் சில இடங்களில் சமணம் பேசியதால் இவர் சமணர் என்று சொல்வதும் உண்டு. ஆனால் சிலப்பதிகாரத்தில் இவர் முருகனையும் கொற்றவையையும் விரிசடை கடவுளையும் கண்ணனையும் புகழ்ந்து பலபாடல்களும் வைத்துள்ளார். இவர் உண்மையிலேயே சமய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவராக இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.

இப்படிப் பட்டவர் யாரைப் போற்றி காப்பியத்தைத் துவக்கியிருப்பார்! அங்கும் தனது சிறப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆம். இயற்கையைப் போற்றியே தனது காப்பியத்தைத் துவக்கியிருக்கிறார்.

முதலில் திங்களைப் போற்றுகிறார். திங்களைப் போற்றுதும். திங்களைப் போற்றுதும். ஏனாம்? கொங்கு அலர்தான் சென்னி வெண்குடைபோன்று இவ்வங்கணுலகு அளித்தலான். ஒரு அரசனுடைய ஆட்சி என்பது நாட்டிற்கு மிகத் தேவை. ஒரு நல்ல அரசனது வெண்கொற்றக் குடைகீழ் மக்கள் இன்பமாக வாழ்வார்கள். அதுபோல நிலவின் அடியிலும் மக்கள் இன்புறத்தான் செய்வார்கள். நிலா யாருடைய மேனியையாவது தீய்த்துண்டா! அரசு என்பது அப்படி இருக்க வேண்டும் என்பது இவ்வரிகளின் மறைபொருள்.

அடுத்தது ஞாயிறைப் போற்றுகிறார். ஞாயிறு போற்றுதும். ஞாயிறு போற்றுதும். ஏனாம்? காவிரி நாடன் திகிரி போல் பொற்கோட்டு மேரு வலந் திரிதலான். திகிரி என்றால் சக்கரம். காவிரி நாடன் திகிரி என்றால் சோழனது ஆணைச் சக்கரம். அந்த ஆணைச் சக்கரமானது எல்லா இடங்களுக்கும் சென்று நலன் பயப்பது போல ஞாயிறும் உலகெலாம் திரிந்து நன்மை பயப்பதால். என்னதாய் சுட்டாலும் சூரியன் இல்லாமல் இருக்க முடியுமா!

மூன்றாவதாக மழையைப் போற்றுகிறார். மாமழை போற்றுதும். மாமழை போற்றுதும். ஏனாம்? நாமநீர் வேலி உலகிற்கு அவனளி போல் மேல் நின்று தான் சுரத்தலால். இந்தப் பாடலை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

நாமநீர் வேலி உலகிற்கு - அச்சந்தருமளவிற்குப் பெருகியிருக்கும் நீர்ப்பரப்பை எல்லையாகக் கொண்ட உலகிற்கு
அவன் அளி போல் - சோழனுடைய கொடையைப் போல்
மேனின்று தான் சுரத்தலான் - மேலே நின்று தான் சுரத்தலால்.

மழை பொழிகையில் எல்லாருக்கும் பெய்யும். இரண்டு பேர் மழையில் இருந்தால் இருவருக்கும் ஒரே மழைதான். அதுபோல அரசனுடைய கொடையும் (ஆட்சிமையும் நீதி நியாயங்களும்) அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது மறைபொருள். அப்பொழுதுதான் நாடு துலங்கும். இல்லையேல் சீரில்லாத மழையால் உலகம் வாடுவது போல சீரில்லாத ஆட்சியில் மக்கள் வாடுவார்கள்.

இப்படி திங்களையும் ஞாயிறையும் மழையையும் போற்றித் துவக்கிய சிலப்பதிகாரம் திங்களும் ஞாயிறும் மழையும் உள்ளவரைக்கும் நிலைக்கும் என்பதில் ஐயமில்லை.

அன்புடன்,
கோ.இராகவன்

mukilan
07-12-2005, 05:02 AM
இளங்கோவடிகள் அரச குடும்பத்தில் பிறந்தும், தமயனுக்காக இளவரசுப் பட்டம் துறந்தது மட்டுமல்லாமல் சோழனைப் பாராட்டிப் பாடும் அவரது பெருந்தன்மையை என்ன வென்று சொல்வது. அறவழி போதிக்கும் இவரல்லவா துறவி!

இளசு
07-12-2005, 06:26 AM
அன்பு ராகவன்,

இலக்கிய (ஹீரோ) உச்சநட்சத்திரப் போட்டி ஒன்று பள்ளிக்க்காலத்தில் அடிக்கடி என் மன அரங்கில் நடக்கும்.

கம்பர், வள்ளுவர், இளங்கோ, பாரதி, அவர் தாசன் என அவ்வப்போது அந்த இடம் மாறி மாறி அலங்கரிக்கப்படும்.
(அன்று படித்துச் சுவைத்த பாடத்தைப் பொருத்து..)

படைப்பு மட்டுமல்லாமல், சொந்த வாழ்வின் பின்னணியாலும் இவர்கள் நம்மைக்கவர்ந்தவர்கள். அதில் இளங்கோவின் வாழ்வில் நடந்தவை மிக உணர்ச்சிகரமானவை.

உண்மையான கலைஞர்கள் சமய அரசியல் எல்லைகளைத் தாண்டியவர்கள்.

ஐயப்பனைப்பாடிய ஜேசுதாஸ்
யேசுகாவியம் பாடிய கண்ணதாசன்...

அன்றே இளங்கோவடிகள்..


பள்ளியில் படித்துச்சுவைத்ததை
மன்றத்தில் நீங்கள் பரிமாற
நினைவாமிர்தம் இது...


நன்றி...

gragavan
07-12-2005, 08:49 AM
நன்றி இளசு அண்ணா. இளங்கோவடிகள் மிகச்சிறந்த மனிதர். அதனாலேயே அவர் புனிதராகின்றார். அவர் சமணர் என்பவரும் உளர். சைவர் என்பவரும் உளர். எனக்குத் தெரிந்து சிலப்பதிகாரம் படித்த வகையில் அவர் சைவர் எனப் பொருள் கொள்ளவே வாய்ப்புகள் அதிகமுள்ளது. அடியார்க்கு நல்லாரும் நச்சினார்க்கு இனியாரும் தமிழ்த்தாத்தாவும் அப்படித்தான் சொல்கின்றார்கள். ஆனாலும் அவர் சமணர் என்ற வாதம் பலரை அடைந்திருக்கிறது என்பதே உண்மை. சமயப் பொது நோக்குடன் ஒரு நூலைப் படைத்துள்ளார். அதைப் பற்றி நமது மன்றத்தில் படைப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே.

பென்ஸ்
07-12-2005, 12:34 PM
ராகவன்.. உம்மகிட்டயிருந்து நிறைய தெரிந்து கொள்ள வேண்டி இருக்குயா... சனி கிழமைகளில் எனக்கு டியூசன் வைக்கிறிரா??? உன்மையில்தான்...

gragavan
08-12-2005, 04:47 AM
ராகவன்.. உம்மகிட்டயிருந்து நிறைய தெரிந்து கொள்ள வேண்டி இருக்குயா... சனி கிழமைகளில் எனக்கு டியூசன் வைக்கிறிரா??? உன்மையில்தான்...டியூசனா? அதுக்கேதய்யா நேரம்? நானே நேரமில்லாமத் தவிக்கேன். ஒம்ம நேரத்துல ஒரு அஞ்சு மணி நேரந் தர்ரீகளா?

gragavan
14-12-2005, 04:22 AM
சிலப்பதிகாரம்

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார் சென்னி குளிர் வெண்குடைபோன்றிவ்
வங்க ணுலகளித்தலான்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரி போல் பொற்கோட்டு
மேரு வலந்திரிதலான்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற் கவனளி போல்
மேனின்று தான் சுரத்தலான்

சிலப்பதிகாரம் தமிழ்க் காப்பியங்களுள் தலை சிறந்தது. சொற்சுவையும் பொருட்சுவையும் இணைந்து இயைந்து எழுந்த முத்தமிழ்க் காப்பியம். அக்காப்பியத்தை நமக்குத் தந்தவர் இளங்கோவடிகள்.

இளங்கோவடிகளின் சமயம் உறுதியாக அறியப்பட முடியவில்லை. இவர் பிறப்பால் சைவ மரபில் வந்தவர். அதாவது விரிசடைக் கடவுளையும் கொற்றவையையும் முருகனையும் வழிபடும் மரபில் பிறந்தவர். இவர் துறவு பூண்டவர். சைவத் துறவி என்றும் சொல்வர். சமணத் துறவி என்றும் சொல்வர். இரண்டிற்கும் ஆதாரமில்லை. சிலப்பதிகாரத்தில் சில இடங்களில் சமணம் பேசியதால் இவர் சமணர் என்று சொல்வதும் உண்டு. ஆனால் சிலப்பதிகாரத்தில் இவர் முருகனையும் கொற்றவையையும் விரிசடை கடவுளையும் கண்ணனையும் புகழ்ந்து பலபாடல்களும் வைத்துள்ளார். இவர் உண்மையிலேயே சமய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவராக இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.

இப்படிப் பட்டவர் யாரைப் போற்றி காப்பியத்தைத் துவக்கியிருப்பார்! அங்கும் தனது சிறப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆம். இயற்கையைப் போற்றியே தனது காப்பியத்தைத் துவக்கியிருக்கிறார்.

முதலில் திங்களைப் போற்றுகிறார். திங்களைப் போற்றுதும். திங்களைப் போற்றுதும். ஏனாம்? கொங்கு அலர்தான் சென்னி வெண்குடைபோன்று இவ்வங்கணுலகு அளித்தலான். ஒரு அரசனுடைய ஆட்சி என்பது நாட்டிற்கு மிகத் தேவை. ஒரு நல்ல அரசனது வெண்கொற்றக் குடைகீழ் மக்கள் இன்பமாக வாழ்வார்கள். அதுபோல நிலவின் அடியிலும் மக்கள் இன்புறத்தான் செய்வார்கள். நிலா யாருடைய மேனியையாவது தீய்த்துண்டா! அரசு என்பது அப்படி இருக்க வேண்டும் என்பது இவ்வரிகளின் மறைபொருள்.

அடுத்தது ஞாயிறைப் போற்றுகிறார். ஞாயிறு போற்றுதும். ஞாயிறு போற்றுதும். ஏனாம்? காவிரி நாடன் திகிரி போல் பொற்கோட்டு மேரு வலந் திரிதலான். திகிரி என்றால் சக்கரம். காவிரி நாடன் திகிரி என்றால் சோழனது ஆணைச் சக்கரம். அந்த ஆணைச் சக்கரமானது எல்லா இடங்களுக்கும் சென்று நலன் பயப்பது போல ஞாயிறும் உலகெலாம் திரிந்து நன்மை பயப்பதால். என்னதாய் சுட்டாலும் சூரியன் இல்லாமல் இருக்க முடியுமா!

மூன்றாவதாக மழையைப் போற்றுகிறார். மாமழை போற்றுதும். மாமழை போற்றுதும். ஏனாம்? நாமநீர் வேலி உலகிற்கு அவனளி போல் மேல் நின்று தான் சுரத்தலால். இந்தப் பாடலை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

நாமநீர் வேலி உலகிற்கு - அச்சந்தருமளவிற்குப் பெருகியிருக்கும் நீர்ப்பரப்பை எல்லையாகக் கொண்ட உலகிற்கு
அவன் அளி போல் - சோழனுடைய கொடையைப் போல்
மேனின்று தான் சுரத்தலான் - மேலே நின்று தான் சுரத்தலால்.

மழை பொழிகையில் எல்லாருக்கும் பெய்யும். இரண்டு பேர் மழையில் இருந்தால் இருவருக்கும் ஒரே மழைதான். அதுபோல அரசனுடைய கொடையும் (ஆட்சிமையும் நீதி நியாயங்களும்) அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது மறைபொருள். அப்பொழுதுதான் நாடு துலங்கும். இல்லையேல் சீரில்லாத மழையால் உலகம் வாடுவது போல சீரில்லாத ஆட்சியில் மக்கள் வாடுவார்கள்.

இப்படி திங்களையும் ஞாயிறையும் மழையையும் போற்றித் துவக்கிய சிலப்பதிகாரம் திங்களும் ஞாயிறும் மழையும் உள்ளவரைக்கும் நிலைக்கும் என்பதில் ஐயமில்லை.

அன்புடன்,
கோ.இராகவன்

இளசு
14-12-2005, 06:07 AM
அன்பு ராகவன்,
மீண்டும் மனதுக்கு நெருக்கமானவரின் மனதுக்கு இனிமை சேர்க்கும் கவிதையைத் தந்து மகிழ வைத்துவிட்டீர்கள்..

இன்ன மதக்கடவுள் என பிரிக்காவண்ணம் எழுதிய வள்ளுவன்..
இயற்கையை வணங்கித் துவங்கிய இளங்கோ..

Tolerance - என்ற கொள்கைக்கு வாழும் எடுத்துக்காட்டுகள் இந்நாயகர்கள்.. மெய்சிலிர்க்கிறேன்..

நாமநீர் வேலி - சுனாமி தரக்கூடிய வேலி.என்ன பொருத்தம்..

மாமழை -- இதுவும் சாலப்பொருத்தம்.

சாகாக்கவியின் வரிகளல்லவா!

mania
14-12-2005, 09:23 AM
குறித்த காலத்தில் தவறாமல் பதிக்கும் ராகவனுக்கு என் பாராட்டுகள்....:D (ப்ரதீப் கொஞ்சம் கவனிக்கவும் ):rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

gragavan
14-12-2005, 09:33 AM
என்னாங்க இது...நான் போன வாரம் போட்டதையே திரும்பப் போட்டிருக்கேன். அடக் கடவுளே..இப்பவே புதுசு போடுறேன்.

gragavan
14-12-2005, 09:35 AM
புதிய ஆத்திச்சூடி

ஆத்திச்சூடி இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியன்
கருநிறங் கொண்டு பாற்கடல்மிசைக் கிடப்போன்
முகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப் பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்து உணராது
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்
அதனிலே கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமரவாழ் வெய்துவாம்

புதிய ஆத்திச்சூடியை எழுதியவர் மகாகவி பாரதியார். அவரைப் பற்றிய அறிமுகம் எந்தத் தமிழனுக்கும் தேவையில்லை. தமிழ் தழைக்கப் பிறந்த தவப்பயன். நல்லவர். வல்லவர். நடுநிலையானவர்.

ஒருவர் நடுநிலையானவரா என்று எங்ஙனம் அறிவது? அவரது கொள்கைகளைப் பார்க்க வேண்டும். அனைவரையும் சமமாக நினைக்க வேண்டும். எண்ணத்தில் மட்டுமில்லாது எழுத்திலும் செயலிலும் இருக்க வேண்டும். பாரதி இருந்தார். இதோ புதிய ஆத்திச்சூடியின் கடவுள் வாழ்த்தைப் படித்தீர்கள் அல்லவா. இதுதான் உண்மையான மதநல்லிணக்கம்.

புதிய ஆத்திச்சூடியை எப்பொழுது எழுதினார்? இந்திய நாடு ஒரு விடுதலைப் போராட்டத்தில் இருந்த காலகட்டம். அப்பொழுது ஒவ்வொருவரும் தங்கள் நெஞ்சில் நிறைந்து விரம் சிறந்து போராடும் வகைக்குக் கருத்துச் சொல்ல வேண்டும். மதம், மொழி, இனங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்று கூடச் செய்ய வேண்டும். அப்படிப் பட்டக் கருத்துகளைச் சொல்லும் ஒரு நூலை எந்த இறைவனைப் புகழ்ந்து துவக்குவது!

பாரதி சுடர்மிகும் அறிவுடையோன். அதை அவனே அறிந்தவன். ஆகையால்தான் இத்தனை சிறப்பான கடவுள் வாழ்த்தைப் பாட முடிந்திருக்கிறது.

முதலில் விரிசடைக் கடவுளில் துவக்குகிறார். "சிவபெருமான் என்றும் கரியமால் என்றும் முகமது நபியவர்களுக்கு மறை தந்தவன் என்றும் ஏசுவைத் தந்தவன் என்றும் பலவிதங்களில் கொண்டாடுகின்ற பரம்பொருளின் இயல்பு என்ன தெரியுமா? அது நல்லறிவாகும். அந்த நல்லறிவின் வழி சென்றார்க்கு அல்லல்கள் தீரும்."

என்ன அருமையான கடவுள் வாழ்த்து. மதநல்லிணக்கமில்லாதவரால் இப்படிப் பாட முடியுமா! ஆகையால்தான் பாரதியை வரகவி என்று நாம் கொண்டாடுகின்றோம்.

ஆத்திச்சூடி அணிந்து இளம்பிறை சூடி மோனத்து இருக்கும் முழுவெண் மேனியன் - ஆத்தி மலரைச் சூடியவர் என்று கொண்டாடப் படுகிறவர் சிவபெருமான். தமிழகத்திற்கே உரிய சைவ சித்தாந்தம் சொல்கிறது. இளம்பிறையைச் சூடிக்கொண்டு மோனத்திருக்கும் முழுவெண் மேனியன். இறைவன் அனைத்தையும் இயங்கியும் ஒன்றும் இயங்காமலும் இருப்பார். அதுதான் மோனத்திருப்பது. சுழல்கின்ற மின்விசிறியைப் பார்த்தால் சுழலாமல் இருப்பது போல இருக்கும். அப்படித்தான் இருக்கும் சிவபெருமானின் மோனத் திருக்கோலம்.

கருநிறங் கொண்டு பாற்கடல்மிசை கிடப்போன் - "கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே!" என்பார் இளங்கோவடிகள். மாலின் நிறம் கரியது. அவன் அருளோ அனைவருக்கும் உரியது. அவன் அன்போ அனைத்திலும் பெரியது. அந்த மாலும் கடலில் கிடக்கிறார். அந்தக் கடலும் பாற்கடல். ஓயாத தூக்கம். நெடுஞ்சாண்கிடையாகப் படுத்து ஆழ்ந்த தூக்கம். இதுவும் சிவபெருமானின் மோனத்தைப் போலத்தான்.

முகமது நபிக்கு மறையருள் புரிந்தோன் - இஸ்லாமியக் கோட்பாட்டில் குரானைச் சொல்லியவர் முகமது நபி. ஆனால் குரானைப் படைத்தவர் இறைவன். ஆம். இறைவனுடைய திருத்தூதனாக இஸ்லாமியர்கள் நபிகளைக் கொண்டாடுகின்றார்கள். இஸ்லாமியக் கொள்கைகளை அப்படியே கடைப்பிடிப்பவர்கள் நபிகளைப் புனிதராகக் கருதினாலும் கூட, அல்லாவைத்தான் வணங்குவார்கள். இஸ்லாமிய நம்பிக்கையில் இறைவன் உருவமும் பெயரும் அற்றவன். அல்லா என்பது கூட இறைவனின் பெயர் என்று. இறைவன் என்பதற்கு இணையான அராபியச் சொல்.

ஏசுவின் தந்தை - மரியாளுக்குப் பிறந்தவராயினும் ஏசுபிரான் தேவ மைந்தன் என்றே புகழப்படுகிறார். திருக்குரானும் ஏசுவை ஈசா என்ற பெயரில் குறிப்பிடுகிறது.

இப்படி உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான இறைவழிபாடுகளைக் கொண்டுள்ளனர். இவற்றில் உயர்ந்தது தாழ்ந்தது என்று வேற்றுமை பாராட்டுவது மடமை. அப்படி வேற்றுமை பாராட்டமல் இருக்க என்ன வேண்டும்? நல்லறிவு வேண்டும். நல்லறிவு படைத்தவன் எவன் ஒருவனோ, அவனே எந்த மதத்தையும் இழிவாக எண்ணக்கூட மாட்டான். ஆகையால்தான் பலவிதங்களில் வழங்கினாலும் "பரம்பொருள் ஒன்றே" என்னும் பாரதியார் அந்தப் பரம்பொருளின் இயல்பை "ஒளியுறும் அறிவு" என்கிறார்.

ஒளியுறும் அறிவு என்றால் சுடர் மிகு அறிவு என்று பொருள். அந்த நல்லறிவு கொண்டவர் தமது வாழ்வில் அல்லல் படார். மற்றவர்களுக்கும் அல்லலாக இரார். அந்தச் சுடர் மிகும் நல்லறிவைப் பெற்று நல்வாழ்வு எய்துவோம் என்று புதிய ஆத்திச்சூடியைத் துவக்குகிறார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

அன்புடன்,
கோ.இராகவன்

mania
14-12-2005, 09:43 AM
என்னாங்க இது...நான் போன வாரம் போட்டதையே திரும்பப் போட்டிருக்கேன். அடக் கடவுளே..இப்பவே புதுசு போடுறேன்.

எப்பிடி உன்னை காலம் தவறாமல் இருக்க நான் உதவினேன் பாத்தியா......:rolleyes: :D :D பாடல் மறுபடியும் பதிந்தாலௌம் இளசுவின் கமேண்ட்ஸ் புதுசு தானே.....:D :D (எனக்கு மீசை கிடையாது......):D :D
அன்புடன்
மணியா...:D

gragavan
14-12-2005, 09:45 AM
எப்பிடி உன்னை காலம் தவறாமல் இருக்க நான் உதவினேன் பாத்தியா......:rolleyes: :D :D பாடல் மறுபடியும் பதிந்தாலௌம் இளசுவின் கமேண்ட்ஸ் புதுசு தானே.....:D :D (எனக்கு மீசை கிடையாது......):D :D
அன்புடன்
மணியா...:Dஆமாமா! எல்லாம் தலையின் செயல். :)

pradeepkt
14-12-2005, 09:55 AM
குறித்த காலத்தில் தவறாமல் பதிக்கும் ராகவனுக்கு என் பாராட்டுகள்....:D (ப்ரதீப் கொஞ்சம் கவனிக்கவும் ):rolleyes: :D
அன்புடன்
மணியா...:D
கவனிச்சிட்டேன்...
அடுத்த தடவை ஒழுங்காச் சொல்லீட்டே பதிக்கிறேன் :D

pradeepkt
14-12-2005, 09:58 AM
பாரதியார் என்றாலே பகுத்தறிவும் தேசப்பற்றும் சமூக சிந்தனனயும் ஆன்மீகமும் கலந்த ஒரு மீசைக்காரக் கோபக்காரர் நினைவுக்கு வருவார். அவரது இறைவணக்கம் எத்தகைய சமத்துவத்தைக் கொண்டிருக்கிறது என்று கண்டுகொண்டேன்.
நன்று ஐயா.

mukilan
14-12-2005, 07:03 PM
குறித்த காலத்தில் தவறாமல் பதிக்கும் ராகவனுக்கு என் பாராட்டுகள்....:D (ப்ரதீப் கொஞ்சம் கவனிக்கவும் ):rolleyes: :D
அன்புடன்
மணியா...:D
இது வக்ஷ்சப் புகழ்ச்சியா?? போட்டு வாங்கறதா, பிரதீப்புக்கு அறிவுரையா?? தலை மணியா! நீங்க தனியாஆஆஆ!