PDA

View Full Version : மருந்தியல் அகரம் (அ.மை. -9)



இளசு
29-10-2005, 06:39 PM
மருந்தியல் அகரம் - மருந்தாவரம்.

டயோஸ்கோரைட்ஸ் கி.பி.20 -90.



அறிவியல் மைல்கற்கள் - 9


எட்டாம் பாகம் - விண்ணைத்தேடி இங்கே -


http://www.tamilmantram.com/vb/showthread.php?p=133120#post133120

இப்போது கி.பி. காலத்துக்கு வந்துவிட்டோம் நண்பர்களே.


-----------------------------------------------------


மருந்துகள் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுவது
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் தொடங்கியது.
அதுவரை கைவைத்தியம், பச்சிலை வைத்தியம் - இவையே கைகண்ட சிகிச்சை!


கண்டுகொண்டால் பலிக்காது என தூதுவளை, ஆடுதொடா இலைகளையும்
கண்ணுக்கு மறைவாய் நசுக்கி, அரைத்து, காய்ச்சி
மறைத்து மறைத்து வைத்தியம் பார்த்தவர்கள் நம்மூரில் அநேகம் தலைமுறை.

அகத்தியர், தன்வந்திரி என பல பாரத மேதைகள் இவற்றைத் தொகுத்து
பலருக்கு பயிற்றுவித்து குருக்களாய் விளங்கினார்கள் .

உலக அளவில் மருந்தியலுக்கு அகரம் ஆரம்பித்தது யார்?
ஒரு அறிவாளி தொகுத்து, பகுத்துச் சொன்னால்
அந்நாடும், அந்நியரும் சேர்ந்து அதை ஏற்று
பல்வேறு மொழிகளில் பெயர்த்து, பின்பற்றி
சொன்னவரை மறக்காமல் குறிப்பிட்டுப் போற்றிவந்தால்
அன்னாருக்கு அப்பெருமை போய்ச்சேரும்.

வடக்கத்தியன் சொல்வது தெற்கே சேராத மொழிபேதம்.
தென்னவன் என்ன -சின்னவன் என தெனாவட்டான உதாசீனம்.
எல்லாம் எழுதிவைத்தால் எல்லாரும் அதைப் படித்து பெரியாளாகிவிட்டால்?
எவரையும் உயர்ந்தவராய் உள்ளுக்குள் ஏற்க மறுக்கும் அகங்காரம்..
இப்படி சிலவும், எழுதிய ஏடுகள் இயற்கையின் செயலால் பழுதுபட்டு அழியவும் என
பல காரணங்கள் இருக்கலாம் - நம்மூர் மேதைமை குடத்துக்குள் குன்றியதற்கு.

இன்று நாம் காணும் மைல்கல்லை நட்ட பெருமையை
வரலாறு ரோமானிய ராணுவ மருத்துவர் பெடானியஸ் டயோஸ்கோரைட்ஸ் அவர்களுக்கு
உரித்தாகிவிட்டது.

அக்காலகட்டங்களில் மருத்துவ மாணவர்கள் தோட்டங்களிலும் பயின்றார்கள்.
நோய்தணிக்கும் வாய்நாடியவர்களுக்கு 90 சதத்துக்கும் மேலாய்
செடிகொடிகளே அடையாளங்காட்டப்பட்டன.
இப்பாடங்களுக்கு வேதமாய் அடுத்த 1600 ஆண்டுகளுக்கு
டயோஸ்கோரைட்ஸின் மெட்டீரீயா மெடிக்கா ( மருந்துப் பொருட்கள்)
என்ற மகாநூலே விளங்கியது.

ரோமானிய ராணுவத்தின் சர்ஜன் அவர். போர்வீரனைப்போலவே களங்களுக்குச் சென்று
வந்தவர் என்று ஒரு சில குறிப்புகள் இவரைப் பற்றி கிடைத்துள்ளன.
சென்ற இடங்களில் சேகரித்த தாவர மருந்து முறைகள், சொந்த அறிவனுபவம் எல்லாம்
சேர்த்து அவர் அளித்த கொடை இந்நூல்.
என்ன நோய்க்கு என்ன செடி, கொடி மருந்தாகும்?
தாவரத்தை எங்கே காணலாம்? எப்படி வளர்க்கலாம்?
தாவரத்தின் பெயர், பார்க்க எப்படி இருக்கும்?
எப்படி பக்குவப்படுத்த? செடியின் எந்த பாகம், எந்த அளவு பயன்படுத்த?

வாதாம் எண்ணெய், இஞ்சி,இலவங்கம், ஊமத்தை என இவர் தொகுத்த
மருந்தாவரங்களின் பட்டியல் அக்காலகட்டத்தின் முழுமையான சாதனை.
கண்டதைத் தொகுத்து, வரும் சங்கதிக்குப் பயன்பட
பொதுச்சொத்தாய் வழங்கிய அவருக்கு மொத்த மனித இனமே கடன்பட்டிருக்கிறது.
மருத்துவத் தந்தை ஹிப்போகிரேட்ஸம் இவருக்கு மானசீக சிஷ்யர்தாம்.
உலகெங்கும் இவரின் பெயரை அங்கீகரித்து, தாவரப்படங்களுடன்
உலாவந்த இவரின் நூலால்-
மறைந்தும் வாழும் மகத்தான மனிதராகிவிட்டவர்
இந்த மைல்கல்லின் நாயகர் டயோஸ்கோரைட்ஸ்.

பரஞ்சோதி
30-10-2005, 04:58 AM
நன்றி இளசு அண்ணா.

தெரியாத வரலாறு உங்கள் பதிவால் தெரிந்துக் கொள்ள முடிகிறது?

ஆமாம், உங்களுக்கு சுஸ்ருதர் பற்றி தெரியுமா? இவர் கி.மு காலத்தில் மருத்துவ உலகில் பெரிய சாதனை படைத்தவர் என்று படித்த நினைவு.

இளசு
30-10-2005, 08:20 PM
உங்களுக்கு சுஸ்ருதர் பற்றி தெரியுமா? இவர் கி.மு காலத்தில் மருத்துவ உலகில் பெரிய சாதனை படைத்தவர் என்று படித்த நினைவு.

நன்றி பரம்ஸ்.

சுஸ்ருதா பற்றி நானும் கொஞ்சமே அறிந்திருக்கிறேன்.
இரண்டு சுஸ்ருதாக்கள் இருந்ததாகவும்,
முதலாமவர் தன்வந்திரி மாணவர், கி.மு. காலத்தவர் என்றும் சொல்லப்படுகிறது.
அதே பெயரில் இன்னொருவர் கி.பி காலத்தில் முன்னவரின் படைப்புகளை தொகுத்தார் என்றும் சொல்கிறார்கள்.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, மது கொடுத்து மயங்க வைத்து சிகிச்சை தருதல், கேடராக்ட் அறுவை என
பலவற்றிற்கு முன்னோடி சுஸ்ருதா எனக் குறிப்புகள் கிடைக்கின்றன.

http://www.vidyapatha.com/scientists/susrutha.php

பாரதி
05-11-2005, 04:39 PM
அன்புள்ள அண்ணா... நீங்கள் குறிப்பிட்டது போல பல தென்னிந்திய வைத்திய முறைகள் சரியான முறையில் தொகுக்கப்படவில்லை என்கிற ஆதங்கமும் வருத்தமும் பலருக்கும் உண்டு. இதுவரை கேள்வியே பட்டிருக்காத பல மேதைகளைப் பற்றி ஓரளவுக்கு தெரிந்து கொள்ளவாவது இப்பதிவு தொடர்ந்து உதவி வருகிறது. நன்றி அண்ணா.

அ-மை = அறிவியல் மைந்தர்கள்..!

இளசு
11-11-2005, 10:46 PM
நன்றி பாரதி.

இத்தொடரை தொடர்ந்து ஊக்கும் உன் போன்றோருக்கு என்றும் என் நன்றிகள்..

aren
27-12-2005, 12:26 AM
நம் மக்கள் மற்றவர்களுக்கு நம்முடைய வைத்திய முறை தெரிந்துவிடக்கூடாது என்று நினைத்தே நமது கண்டுபிடிப்புகளை மண்ணோடு மண்ணாக புதைத்துவிட்டார்கள். ரோமானியர்களும், கிரேக்கர்களும் நம் சந்த்ததிகளுக்கு ஏதாவது கொடுக்கவேண்டும் என்று நினைத்து குறிப்புகளை குறித்து வைத்தது எவ்வளவு பயன்பட்டது என்று நம் முன்னோற்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை.

நம் மக்களும் குறித்து வைத்திருந்தால், நாம் மருத்துவ உலகில் பல சாதனைகளை செய்திருக்கலாம்.