PDA

View Full Version : கூதல் காலம்



இளசு
28-10-2005, 10:46 PM
கூதல் காலம்


ஊதக் காற்றில் சோம்பல் முறிக்கும்
வேப்ப மரக் கிளையின் ..ர்ர்ரர்ரரக்க்...
விழித்தும் விழிக்காத மனம்..
வாழ்ந்த பாதையை நினைத்தபடி நான்...

வயலை ஒட்டிய அடர்காடு..
வளைந்து மறைந்த பாதைகளில்
துள்ளித் திரிந்ததொரு காலம்.
இதோ இந்த வாதா மரம் ஓர் அடையாளம்..
அதோ அந்த தேன் கூடு ஒரு வழிக்குறி..
திரும்பித் திரும்பி
வயல் மேட்டை பார்த்துக்கொண்டே....
ஒத்தையடிப்பாதை பிரிய
இன்று இடப் பக்கம்
நாளை வலப் பக்கம்
படபடப்பாய் தேடியபடி
பயணித்ததொரு காலம்....

ஆட்டுமடியில் பால் குடித்து
கொடுக்காபுளி அடித்து கடித்து
ஈச்சம்பழம் பறித்து சுவைத்து..
விளக்கு வைக்கும் நேரமாக
வீடு வந்து கைகால் கழுவி...
காடு தேடலில் கோடை எல்லாம்
கரைந்து போன பள்ளிக்காலம்..

அடுத்து கடல் வழி பயணம்..
அழகிய படகுகளை கொள்ளயடிக்க பிரயத்தனம்..
கோயிலில் கண்ட குங்கும முகம்..
சாலையில் சந்தித்த சந்தன நிறம்..
எத்தனை புன்னகைகள் கொள்ளயடிக்க முடிகிறதோ
அத்தனை கெட்டிக்காரன் என்று
கணக்கு போட்டு அலைந்த கல்லூரிக்காலம்..

படகு தேடிப் போன
பாதையெல்லாம் கானலாக
திடீரென ஒரு நாளில்
திருமணக் கப்பல் ஏறியது பிறிதொரு காலம்..

கான்கிரீட் கல்லூரிப் பாதைகள்..
முன்னே போவோரைப் பின் தொடர்ந்து
அப்பாடி எத்தனை தூரம் என மலைத்து நின்று
அறிவூர் போய்ச் சேருவோமா என அயர்ந்து
கற்பது தொடர் பயணம்
கல்லூரி வெறும் முதல் பயணம் எனத் தெளிந்து
கற்றலைக் கற்ற கல்விக்காலம்..


மலைப்பாதைப் பயணம்..
பணிச்சரிவு சிகரம் மாறி மாறி வர
அலுவல் மலை ஏறி
இல்லக்கூடாரத்தில் தூங்கி
உயரம் கண்டு பார்வை விரிந்து
உலகம் அளந்ததொரு பணிக்காலம்..


பிரசவ அறை அலறல்
நர்சரி பள்ளி நீள்வரிசை
ஆண்டு விழா பேச்சுப்போட்டி
என்னின் ஒரு பாகமாய் என் மகள்..
அவள் பயணங்களின் பார்வையாளனாய்
அவளின் துணை வரும் வரை தோழனாய்
பூச்சுமந்து பூரித்ததொரு தந்தைக்கோலம்..

இதோ ..
பழைய பாதைகளின் மறுதரிசனம்
பேரக்குழந்தைகளின் கருவிழிகள் வழியே..
காட்டு வேட்டை, கடல் வேட்டை
கான்கிரீட் பயணம், மலைப்பாதை..
பழைய பாதைகளின் மறுதரிசனம்
விரிந்த அந்த விழிகளின் வழியே...

தோசை இல்லை - பீட்ஸா
மோர் இல்லை - கோக்
கோப்பு இல்லை - லேப் டாப்..
பயணச் சுமைகள் மாறினாலும்
பாதைகள் அப்படியே..

அன்று கூழ்ப்பானை
இன்று ஜாம் பாட்டில்..
பார்க்க ஆளில்லை என்றால்
பாத்திரத்தில் விரலை விட்டு சூப்பும்
குழந்தைத்தனமும் அப்படியே

சிரித்தபடி ஆமோதிக்கும்
செல்லத் தாத்தா நான் --
மதியமானால் தூங்கி விடும் தாத்தா
மார்பில் தோளணைக்கும் தாத்தா
குத்தும் மீசையுடன் கொஞ்சும் தாத்தா

அவர்கள் பார்வையில் நான் யார்?

அடிபட்டு, வெற்றி கண்டு
பாதைகளின் கரடுமுரடு கடந்து
பக்குவப்பட்டு, புடம் ஆகி
பாயில் ஓய்ந்திருக்கும் நானா?..

கொஞ்சம் என் கை பிடித்து
பிறகு என் கை மீறி
துள்ளி முன்னோடும் அவர்கள்...
தன்னால் பாதை அறிய
தாவி ஓடும்
அவர்கள் பார்வையில் நான் யார்?...

இந்த வயோதிகனில்
வாலிபனும் உள்ளுண்டு..
இன்னும் தோண்டினால்
விடலையும் உண்டு; மழலையும் உண்டு..

மங்கிய வெளிச்சத்தில்
மன ஆல்பங்களில்
வெற்றிகளின் வாசனையை..
தோல்விகளின் தழும்புகளை
தேடித் தடவி.. நுகர்ந்து..
இக்கணம் எனக்கே நான் யார்?..

காடு, கடல், கற்பாதை, மலை
கடந்து வந்து நிற்பது - நினைவுக்குகை...
பயணம் மெதுவாய் தொடர்கிறது...
குகை முடியும் நாள் வரை
குடைந்துகொண்டிருக்கும் கேள்வி..
நிஜத்தில் நான் யார்?

பாரதி
29-10-2005, 01:24 AM
நீங்கள் முன்பு எழுதிய கவிதையின் தொடர்ச்சியா..?? எனது கருத்து கூடிய விரைவில்... ரொம்ப அருமையாக இருக்கிறது அண்ணா.

பென்ஸ்
29-10-2005, 11:26 AM
இளசு ஐயா.... எல்லாம் அருமையன வரிகள், இன்னும் எத்தனையோ படிகள் ஏற இருப்பினும் ஒரு நிமிடம் என் வாழ்கையை திரும்பவும் வேகமாக ஒரு முறை கடந்து வந்த ஒரு நிலை...
தன் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து, பின் பாதுகாப்பு, குடும்பம், வேலை, அந்தஸ்து என்று எல்ல தேவைகளையும் பூர்த்தி செய்த ஒரு மனிதனின் கடைசி தேவை தானே இது... நான் யார்???மஸ்லோவின் தேவை பிரமிடிட்டின் உச்சி........ இதற்கு விடை கிடைத்தவன் தானே முழு மனிதன் ஆகிறான்....

இந்த கவிதையின் பாதிப்பு... ஒவ்வொரு வரியும் என் மனதில் அச்சடிக்கபட்டுள்ளது...:)

பாரதி
29-10-2005, 03:34 PM
கூதல் காலம் - எத்தனை இனிமையானது...!?
எலும்பைத்துளைக்கும் குளிரிலும் போர்த்திக்கொண்டு, வைக்கோல் போரில் கூதல் காயும் சுகம்தான் என்ன..?

எத்தனை வித்தியாசமான வார்த்தைகள்-நடைமுறை வாழ்க்கையை ஒப்பிட..! காலச்சக்கர சுழலில் ஒரு முழுமையான சுற்று!

தேடல் பயணத்தில்
தேங்கிய நீராய்...
திகட்டாத பிம்பங்களை
தேடிப் பார்த்து
திருப்தி..?

திரும்பிப் போகமுடியாத
தித்திக்கும் பருவங்களை
திரும்பத் திரும்ப
நினைத்துப் பார்த்தால்
திரும்பிய உணர்வு!

படுக்கையில் தொடங்கி
பாடை வரைக்கும்
எல்லோருக்கும்
ஒருவழிப்பாதைதான்..

குகைப்பாதை
முடிவடையாது
குழப்பமான பயணம்தான்
முடிவடையும்.

[ உங்களின் கேள்விக்கு மட்டும் எனக்கு பதில் தெரியும்!
நிஜத்தில் நீங்கள் எங்கள் அண்ணன்..! ]

இளசு
29-10-2005, 06:59 PM
இளசு ... எல்லாம் அருமையன வரிகள், இன்னும் எத்தனையோ படிகள் ஏற இருப்பினும் ஒரு நிமிடம் என் வாழ்கையை திரும்பவும் வேகமாக ஒரு முறை கடந்து வந்த ஒரு நிலை...
தன் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து, பின் பாதுகாப்பு, குடும்பம், வேலை, அந்தஸ்து என்று எல்ல தேவைகளையும் பூர்த்தி செய்த ஒரு மனிதனின் கடைசி தேவை தானே இது... நான் யார்???மஸ்லோவின் தேவை பிரமிடிட்டின் உச்சி........ இதற்கு விடை கிடைத்தவன் தானே முழு மனிதன் ஆகிறான்....

இந்த கவிதையின் பாதிப்பு... ஒவ்வொரு வரியும் என் மனதில் அச்சடிக்கபட்டுள்ளது...:)

அன்பு பெஞ்சமின்
அடைமொழி இல்லாமல் பெயர் சொல்லி என்னை அழைத்தாலே போதும்.
(ஆர்க்கிமெடிஸ் , வள்ளுவர் போன்றவர்களுக்கு மட்டுமே @ஐயா' பொருந்தும் என்பது என் தனிப்பட்ட கருத்து.)
கதைபோல் கொஞ்சம் நீளமாய் எழுதி வைத்துக்கொண்டு தயக்கத்துடன் பதித்த எனக்கு உங்கள் விமர்சனம் அளித்த தெம்பு மகத்தானது.
நானும் பல படிகள் கடக்க வேண்டியவன்.
என் மகளின் வயது இரண்டரை.
நான் தாத்தா ஆக இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.!!!
இது வயதில் அக்கரை அடைந்துவிட்டவர்களின் பார்வையில் இருந்து எழுந்த கேள்வி.
இதற்கு உந்து நம் திருகனகா அவர்களின் இக்கவிதை -

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5773


உங்கள் மனதில் பதிந்த படைப்பு என்பதில் மிகவும் மகிழ்ந்து நன்றி சொல்கிறேன் - நன்றி பெஞ்சமின்.
உங்கள் பிரமிட் உச்சி மேற்கோள் பற்றி இன்னும் விளக்குங்கள். தெரிந்துகொள்ள ஆசை.

இளசு
29-10-2005, 07:07 PM
தேடல் பயணத்தில்
தேங்கிய நீராய்...
திகட்டாத பிம்பங்களை
தேடிப் பார்த்து
திருப்தி..?

திரும்பிப் போகமுடியாத
தித்திக்கும் பருவங்களை
திரும்பத் திரும்ப
நினைத்துப் பார்த்தால்
திரும்பிய உணர்வு!

படுக்கையில் தொடங்கி
பாடை வரைக்கும்
எல்லோருக்கும்
ஒருவழிப்பாதைதான்..

குகைப்பாதை
முடிவடையாது
குழப்பமான பயணம்தான்
முடிவடையும்.


என்ன ஒரு முத்தாய்ப்பு.
முதல் கவிதையை விட இந்த முத்தாய்ப்பு மிக அருமை.
சேலைக்கு முந்தானை- சரிகை போல்.
அழகு செய்து, அன்பு காட்டும் தம்பிக்கு நன்றியும் பாராட்டும்.

.
குகைப்பாதை
முடிவடையாது
குழப்பமான பயணம்தான்
முடிவடையும்

ஆத்மாவின் பயணம்?
ஜீன், கார்பன்களின் தொடர் சுழற்சி?

உனக்கு பேரிதயம் மட்டுமல்ல - பெரிய மூளையும் கூட பாரதி.


ஜெமினியில் கல்லாபவன் மணி விக்ரமைப் பார்த்து சொல்வது போல் - நீ மூளைக்காரன்(டா).. ( மிக்க மகிழ்ச்சியுடன் சொல்லும் டா இது.. சரியா பாரதி?)

பென்ஸ்
31-10-2005, 06:59 AM
இளசு.... உங்களை ஐயா என்று கூறியதில் தவறு இருப்பதாக தெரியவில்லை... ஒருவரிடம் இருக்கும் மரியாதை நிமித்தம் நாம் கூறும் ஒரு அடைமொழி... உங்கள் பதிப்புகளை மன்றத்தில் படித்துள்ளேன்... அதனால் வந்த ஒரு மரியாதை என்று கொள்ளுங்களேன்... இங்கு பலருடைய பதிப்புகளை முழுமையாக படித்துள்ளேன், பிரியன், கவிதா, நண்பன்... இன்னும் பல, நம்மை அறியாமலே இவர்கள் எண்ணங்கள் மேல் , எழுத்துக்கள் மேல் ஒரு மரியாதை...மனிதனின் எண்ணங்களை எழுதும் எல்லா எழுத்தாளனையும் நான் ஒரு சிக்மென்ட் பிரெட்டாக கருதுகிறேன்... அவ்வகையில் நீங்கள் எல்லோரும் ஒரு மேதை ஆல்லவா????


மாஸ்லோவின் தேவை பிரமிட் குறித்து அனைவரும் அறிவர் என்று குறிப்பு மட்டும் விட்டேன், கண்டிப்பாக அது குறித்து நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்....

சுவேதா
31-10-2005, 10:28 AM
மிகவும் அருமையான கவிதை அண்ணா வாழ்த்துக்கள்!

இளசு
02-11-2005, 08:42 PM
அன்பு பெஞ்சமின்

அவையடக்கத்துக்காக கூறவில்லை.
உண்மையிலேயே என்னைப் பற்றிய உங்கள் கருத்துகள் அதீதம்.
நான் -
எங்கோ படித்ததை
இன்பத்தமிழில்
எழுதி மகிழும்
ஆர்வக் குழந்தை மட்டுமே..
உங்கள் ஊக்கம் எனது நோக்கம்.
அதீத பாராட்டுக்கு அருகதை அற்றவன்.

இன்னும் எழுது
என ஒருவரி எழுதித்
தூண்டினாலே போதும்..
இந்த தமிழ் வண்டி
இன்னும் காத தூரம் போகும்.

நன்றி பெஞ்சமின்..

இளசு
02-11-2005, 08:44 PM
மிகவும் அருமையான கவிதை அண்ணா வாழ்த்துக்கள்!

நன்றி சுவேதா..மிக்க நன்றி.

அறிஞர்
03-11-2005, 09:31 AM
மனித வாழ்வின் ஒவ்வொரு நிலையும் சிறப்பாக விவரிக்கும் வரிகள்....
அருமை.. நன்றி நண்பரே

பிரசவ அறை அலறல்
நர்சரி பள்ளி நீள்வரிசை
ஆண்டு விழா பேச்சுப்போட்டி
என்னின் ஒரு பாகமாய் என் மகள்..
அவள் பயணங்களின் பார்வையாளனாய்
அவளின் துணை வரும் வரை தோழனாய்
பூச்சுமந்து பூரித்ததொரு தந்தைக்கோலம்..

தந்தையாய் உயர்வு பெற்று..
பிள்ளைகளின் வளர்ச்சியை ரசித்து...
குழந்தை பருவத்தில்
அவர்களுடன் நாமும்
குழந்தையாய் விளையாடி...
தோளுக்கு வளர்ந்தவுடன்
தோழனாய் பழகி
பூரிக்கும் காலங்கள்
வாழ்வில் இன்பமான
காலங்கள்.


தோசை இல்லை - பீட்ஸா
மோர் இல்லை - கோக்
கோப்பு இல்லை - லேப் டாப்..
பயணச் சுமைகள் மாறினாலும்
பாதைகள் அப்படியே..

தெள்ளத்தெளிவான வரிகள்....
வாழ்க்கையின் சுமைகளுக்குதான்
என்று மாற்றமில்லையே..


அன்று கூழ்ப்பானை
இன்று ஜாம் பாட்டில்..
பார்க்க ஆளில்லை என்றால்
பாத்திரத்தில் விரலை விட்டு சூப்பும்
குழந்தைத்தனமும் அப்படியே
ஒவ்வொருவருக்குள்ளும்
இருக்கும் குழந்தைத்தனம்
எத்தனை இன்பமானது

காடு, கடல், கற்பாதை, மலை
கடந்து வந்து நிற்பது - நினைவுக்குகை...
பயணம் மெதுவாய் தொடர்கிறது...
குகை முடியும் நாள் வரை
குடைந்துகொண்டிருக்கும் கேள்வி..
நிஜத்தில் நான் யார்?
இந்த கேள்வி....
சிந்திக்கவைக்கிறது

இளசு
03-11-2005, 09:38 PM
அன்பு அறிஞர்

இந்த நீண்ட படைப்பை
அழகாய் அலசி
விமர்சனக் கவிதை தந்த
உங்களுக்கு என் பற்பல நன்றிகள்..

இன்னும் இன்னும் எழுதத்தூண்டும்
ஆக்கபூர்வ விமர்சனம் இது..
மீண்டும் நன்றி நண்பரே..

gans5001
24-01-2006, 10:05 AM
படகு தேடிப் போன
பாதையெல்லாம் கானலாக

கற்றலைக் கற்ற கல்விக்காலம்..

என்னின் ஒரு பாகமாய் என் மகள்..

இதோ ..
பழைய பாதைகளின் மறுதரிசனம்

மேலே சுட்டிய வரிகள் அழகாய் கண்ணெதிரே களனைப் படம் பிடித்துக் காட்டின்.

சுய தேடல் ஆரம்பத்த கணத்திலேயே மனிதமும் முழுமையாகி விடுகிறது நண்பரே.
நான் யாராய் இருந்தால் என்ன.. எல்லார்க்கும் எல்லாமாய் இருக்க முடிந்தது பெரும் சாதனை அல்லவா?

pradeepkt
24-01-2006, 10:15 AM
கன்ஸ் எல்லாப் பதிவுகளும் கட்டம் கட்டமாத் தெரியுது
கொஞ்சம் பாருங்க சாமி.

ப்ரியன்
25-01-2006, 11:24 AM
இளசு அருமையான கவிதை தந்தீர்...பெரியதாய் இருந்ததால் படிக்கமாட்டேன் பல சமயம்...ஆனாலும் படிக்க தூண்டியது தலைப்பு...தலைப்பு வைத்தல் ஒரு கலை...படிக்க ஆரம்பித்ததும் கட்டிப்போட்டுவிட்டது உங்கள் கவிதை...சின்னவயது நான் கண்ணுள் வந்து வந்து சென்றேன்...நன்றி...

எனக்கென்னவோ பெஞ்சமின் சொல்லியது மிகுதியில்லையென்றே தோன்றுகிறது

இளசு
27-01-2006, 10:33 PM
விமர்சனத்திலகம் என் ஆருயிர் நண்பன் கண்ஸூம்

மனம் கவர் கவி ப்ரியனும்


பின்னூட்டம் இட்டதில் இப்படைப்பு பெருமை அடைகிறது.


நன்றிகள்..

பூமகள்
03-02-2008, 06:05 PM
அப்பப்பா...!!

கவிதையில் வாழ்க்கை..!
கரைந்திடும் கண்கள்..!

ஒவ்வொரு வரியும்
உயிர்க்கும் நிஜம்..!

வாழ்வின் கட்டங்கள்
கட்டியது கவிக்கோபுரம்..!


பயணத்தின் பாதியின் எந்த
உயரத்தில் நான்..!!

கேட்க பல கேள்விகள்..!
கூடவே சென்றன நினைவுகள்..!

நினனவுக்குகையின் ஏதோ முடுக்கில்
என் தாத்தாவின் கோதுமை தோசை
இனித்தது வேரில்..!!


பாராட்ட எனக்கு வயதில்லை..!!


கவி கண்டு தலை தாழ்ந்து நிற்கிறேன்..!!


பாராட்டுகள் என் அன்பு பெரியண்ணா..!!

இளசு
03-02-2008, 06:37 PM
என்ன இன்று? அண்ணன் சென்ற பாதைகளில்
எனதன்புத்தங்கை பாமகளின் பவனியா என்ன?

உனதன்புக்கு நெகிழ்ந்து சொல்கிறேன் - நன்றிடா!

பூமகள்
03-02-2008, 06:50 PM
அதே அதே அண்ணலே!! :)
ஆயினும் நன்றி என்ற ஒற்றை வார்த்தை நம்மை பிரிக்கும் இடைவெளியாக நான் விரும்பவில்லையே பெரியண்ணா..!

அண்ணன் தங்கைக்கு நன்றி சொல்லலாமா??

இன்று உங்கள் கவிதைகளின் மொத்தமும் சுவைத்த திருப்தி.. இரவுணவு மறந்த இரைப்பை.. வலி மறந்து ரசித்த கணம் இன்று..!

அடுத்த கட்டப் பயணம்.. விரைவில்..!

அன்புமிகு அண்ணலின் வழியில் கை பிடித்து பூவும் காம்பு தத்தி நடக்க பழகுகிறேன்..!!

ஆசிர்வதித்து அழைத்து செல்லுங்கள் என் பாசமிகு பெரியண்ணா. :)

இளசு
03-02-2008, 07:03 PM
என் ஆசியும் அன்பும் என்றும் உண்டு தங்கைக்கு..

அண்ணன் என்பதால் முன்னால் நடக்க மாட்டேன்..

இணைந்தே நடப்போம் கவியிலக்கியச் சோலையில்..

பூக்கள் மட்டுமல்ல.. புன்னகைகளும் இனி உன்னை நினைவூட்டும்!

பூமகள்
03-02-2008, 07:10 PM
இணைந்து நடக்கும் பேறு கிடைக்க என்ன செய்தேன் தெரியவில்லை..!

உங்கள் உடன் வந்தாலும் பாதமடி தொடர்வேன் என் பாசமிகு பேரண்ணலே..! :)

புன்னகை என்றும் உங்களைச் சூழ்ந்து பூக்கள் சோலையில் தாங்கள் இருக்க என்றென்றும் விரும்புகிறேன்..! :)

சிவா.ஜி
04-02-2008, 04:11 AM
ஒரு வெற்றியாளரின் பயணத்தில் உடன் சென்ற பரவசம்.கொடுக்காப்புளி பறித்து சுவைத்த அரைக்கால் சட்டை பருவம் தொடங்கி,இரண்டாவது தலைமுறையை மாரில் சுமக்கும் அனைத்திலும் முற்றிய பருவம் வரை,வாசித்தாலே வரிகளின் செய்தி இதயத்துக்குள் நுழைந்து அமர்ந்துவிடும் வகையில் விருந்து படைத்த கவிதை இது.காலங்கள் கடந்தாலும்,ஆழ்கடலில் முக்குளிப்போரின் கைகளுக்கு சிக்கும் நித்திலமாக தங்கை மேலெழுப்பிய இந்த கவிதையை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது.
மனம் நிறைந்த வாழ்த்துகள் இளசு.கூடவே தங்கை பூவுக்கும் என் நன்றிகள்.

இதயம்
04-02-2008, 04:34 AM
நிஜத்தில் நான் யார்? விடை தெரியா விநோதக்கேள்வி இது..! ஒவ்வொரு பருவத்திலும், காலகட்டங்களிலும் நம் பாத்திரம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதே போல் ஒரே நேரத்தில் பல பாத்திரங்களின் அபிநயிப்பும் நமக்கு அவசியப்படுகிறது. உலகின் அதிபதி என்று ஒருவன் சொல்லிக்கொண்டிருக்கும் அடுத்த நொடியில் சாம்ராஜ்யம் சரிந்து அவன் தெருவிற்கு வர வேண்டியிருக்கிறது. தெருவில் நிற்பவன் சாம்ராஜ்யத்தை ஆளும் வழி அடுத்த வேளை கிடைக்கிறது. ஆக, உண்மையில் நான் யார் என்று நமக்கே நம்மை தெரிவதில்லை. பிறப்பு, இறப்பு என்ற இரு ஊர்களுக்கிடையான இந்த பயணத்தில் தான் எத்தனை எத்தனை மாறுபட்ட அனுபவங்கள்..?!! அப்படி ஒரு கோணத்தில் மனிதனின் பல பரிணாமத்தால் விளைந்த பரிமாணங்கள் தான் இளசு அண்ணாவின் இந்தக்கவிதை. வாழ்க்கையின் தத்துவம், எதார்த்தத்தை, உண்மையை சொல்லி மனிதனை மனிதனாகவே அறிய வைக்கும் முயற்சியாக இந்த கவிதை அமைந்தாலே இதற்கு பெரும் வெற்றி கிடைத்து விடுகிறது.

நல்லதொரு கவிதைக்கு நன்றிகள் பல இளசு அண்ணா.!!

இளசு
04-02-2008, 08:37 PM
அன்பு சிவா, அன்பு இதயம்..

உங்கள் இருவரின் பாராட்டும் ஊக்கமும் என்னை மிகவும் உற்சாகமூட்டுகின்றன..

இப்படி தொடர்ந்து நீங்கள் ஊக்கினால்
நான் மீண்டும் கவிதை எழுத நேரிடலாம்..!!!!!????!!!!

அனுராகவன்
05-02-2008, 02:21 AM
இளசு மிக்க நன்றி..!!
ம்ம் நல்லதொரு பிராம்மாண்டமான கவிதை..!
தங்கள் கவி இன்னும் வர காத்திருக்கிறோம் பலர்..!
ம்ம் விரைவாக வாங்க..!!